 |
கவிதை
அடையாளச் சுவடுகள் தர்மினி
அடிவளவில் மாமரப் பொந்தொன்றைக் காட்டி
மாமா நீ பிரசுரங்களும் கைத்துப்பாக்கியும்
மறைத்து வைத்த இடமென்பர்.
நீ காணாமற் போன நாளில்
சுருட்டிய கடிதம் கண்டெடுத்த
சீனிப் போத்தலென்று அடையாளஞ் சொல்வர்.
இந்திய இராணுவம் சுற்றிவளைக்கையில்
நீ இறங்கிப் பதுங்கிய கிணறு பற்றியும்
பக்கத்து வீட்டார் கதை சொல்வர்.
அகதியாகப் புகுந்த நாடொன்றிலிருந்து
அனுப்பிய புகைப்படத்தில் அடையாளங்காட்டி
மகிழ்ந்தாள் என் அம்மா.
பிடுங்கிய கச்சான் கன்றுகளின் குவியலிற்
பயந்து ஒழிந்த அக்காவை
இறாஞ்சிப் பறக்கும் பருந்துகளாகக் கொத்திச்சென்றனர்.
விம்மியழுது தேய்ந்த குரலொலி
பின்னொரு அணிவகுப்பில்
இறுகிப் போயிருக்கக் கண்டேன்.
காற்றில் கலந்தாள் காவியமானாளெனக்
கதை சொல்லி இழவு வந்தது.
இன்று
சிதறிடும் குண்டுகளினின்று தப்பிக்கச்
செவிடாய்ப் போகாத காதுகளை நொந்தபடி
ஓடிப்பதுங்க
அதிலொன்று வீழ்ந்திடும் என்மீது
சிந்திச் சிதறி இரத்தமும் சதையுமாகி
வயலிலும் வரப்பிலும் கரைந்திடுவேன்.
என்றோ ஓர் நாள் நீ வருகையில்
அடையாளமற்ற வெளிகளாயிருப்போம்
மீண்டுமொரு விமானமேறி விரைந்திடுவாய்.
- தர்மினி([email protected])
படைப்பாளிகளின் கவனத்திற்கு...
கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.
|
|
|
 |
|