Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

'தீராத் தாகம் கொண்டவர்'
வள்ளியப்பன்

சூழலியல் ஆர்வலரும், மனித உரிமைப் போராளியுமான அசுரன் கடந்த மாதம் 21ம் தேதி காலமானார். கூடங்குளம் அணுமின் நிலையம், கங்கைகொண்டான் கோககோலா ஆலை, டாடா நிறுவனத்தின் தேரிக்காடு டைட்டானியம் தொழிற்சாலைத் திட்டம், கொடைக்கானல் இந்துஸ்தான் லீவர் நிறுவன பாதரச கழிவு பிரச்சினை என்று மக்களின் வாழ்வை பாதிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக அயராது குரல் கொடுத்து வந்தவர்.

தமிழகத்தின் தென்கோடியில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள ஆதளவிளைதான் அசுரனது சொந்த ஊர். வர்ம மருத்துவத்தில் பெயர்பெற்ற சிறீ. திருப்பதி ஆசானின் மகன். கணினி அறிவியலில் பட்டயம் பெற்றிருந்தார். சுற்றுச்சூழலும் மனித உரிமையும் அவரது தீவிர அக்கறைகளாக இருந்தன. இடையில் சிறிதுகாலம் மதுரையில் தங்கி பாரம்பரிய மருத்துவம் படித்தார்.

தமிழில் சுற்றுச்சூழல் அக்கறைகளை உரக்கச் சொல்லி கவனப்படுத்தி வந்தவர்களில் முதல் வரிசைக்காரர். எழுத்தை மட்டும் தனது ஆயுதமாகக் கொள்ளாமல், களத்தில் போராடுவதை முக்கியமாகக் கருதினார். பூவுலகின் நண்பர்கள் இயக்கச் செயல்பாடுகள், கூடங்குளத்துக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாக களம் கண்டவர். சேது சமுத்திரத் திட்டம் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல், பொருளாதார இழப்புகளை கவனப்படுத்தி, தமிழ் அமைப்புகள் அறிவியல் பூர்வமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியவர்.

படுக்கையில் இருந்தபோதும் தேரிக்காடு பிரச்சினை பற்றி சரியான புரிதலை உருவாக்க நண்பர்கள் வழியே கட்டுரை, சிறு பிரசுரம், இணையப்பதிவு போன்றவை வெளிவரத் தூண்டினார். சுற்றுச்சூழல் சார்ந்த அக்கறையில் தீவிர கவனம் செலுத்தி வந்தபோதும், சமூகத்தைப் பற்றி ஒட்டுமொத்த புரிதல் அவரிடம் இருந்தது. அதை விரிவுபடுத்திக் கொள்ள தொடர்ந்து முயற்சித்து வந்தார்.

அவர் நடத்திய 'தீவெட்டி', 'அனலி’' உள்ளிட்ட சிற்றிதழ்களை இன்று வரை பலரும் நினைவு கூர்கிறார்கள். சிற்றிதழ்கள் பெருகாத காலத்தில் வெளிவந்து கவனிப்பைப் பெற்ற இதழ்கள் அவை. சுற்றுச்சூழல் சிந்தனைகளை பரவலாக எடுத்துச் சென்ற சில இதழ்களுள் குறிப்பிடத்தக்கது

'புதிய கல்வி'. அந்த இதழ் பரவலான அங்கீகாரம் பெற்றதற்கு அசுரனின் உழைப்பே காரணம். அந்தக் காலம் முதலே இணைய இதழான திண்ணை.காம்-மில் கருத்துகளைப் பதிவு செய்து வந்தார். அசுரனிடம் இருந்த பல நல்ல திறன்களில் ஒன்று இதழ் தயாரிப்பு தொடங்கி புத்தகம், துண்டறிக்கை, இணைய இதழ் வரை எழுத்து தொடர்பான ஊடகங்களில் அனைத்து வேலைகளையும் விரைவாக கற்றுக் கொண்டு, தானே ஒரே ஆளாகச் செய்து விடுவார்.

அவரது நெருங்கிய நண்பரான சுற்றுச்சூழல் எழுத்தாளர் மரு. ரமேஷின் கூடங்குளம் பற்றி புத்தகம், நியாய வணிகம் பற்றிய புத்தகம், மிரட்டும் குளிர்பானங்கள், தேரிக்காடும் டைட்டானியமும் ஆகிய புத்தகங்கள் அவரது முயற்சியில் உருவானவை. 'தலித்முரசு', 'விழிப்புணர்வு' உள்ளிட்ட இதழ்களுடன் பல்வேறு வகைகளில் இணைந்து செயலாற்றினார். புதிய பார்வை, தினமணி, தமிழ்ஓசை உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் அவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

எந்த பெரிய நிறுவனங்களிலும் வேலை பார்க்காமல் சிற்றிதழ்கள், எழுத்துப் பணி என்று இயங்கி வந்த அசுரனின் உடல்நிலையை சிறுநீரக பாதிப்பு முடக்கியது. உடல் நலிவடைந்த நிலையிலும் அவரது போராட்ட குணமோ, எழுத்துத் தாகமோ சற்றும் குறையவில்லை. அவரது பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது. ஒரு பக்கம் உடலை சீராக இயங்க வைக்கப் போராடிய அசுரன், மற்றொருபுறம் எழுத்து மூலம் சமூகப் போராட்டத்தை தொடர்ந்தார்.

'புதிய தென்றல்' இதழ் ஆரம்பிக்கப்பட அவரது ஆர்வம் மிகப்பெரிய மூலதனமாக அமைந்தது. அவரது எழுத்துகளை படித்து மருத்துவமனைக்கு பார்க்கச் சென்றிருந்தபோது, தன்னுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில், மற்றொரு பக்கம் இதழ் தயாரிப்பில் அசுரன் ஈடுபட்டிருந்ததாக, நண்பர் ஒருவர் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் குறுஞ்சேதிகள் மூலமாக அனைத்து நண்பர்களுடனும் முக்கிய கருத்துகள், தகவல்களை நாள் தவறாமல் பரிமாறி வந்தார். இந்தச் செயல்பாடுகள் அவரது தாகத்துக்கு ஒரு சில எடுத்துக்காட்டுகள்.

அனைத்து துறைகளிலும் நண்பர்களைப் பெற்றிருந்த அசுரன், அவர்களிடையே நட்பு மலர முக்கிய காரணமாக இருந்தார். புதியவர்களை எழுத ஊக்குவித்தார், சமூக அக்கறை கொண்டவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி எழுத வைத்துக் கொண்டிருந்தார். நண்பர்களிடையே பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் நடப்பதற்குக் காரணமாக அமைந்தார்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவர், திருவனந்தபுரத்தில் டிசம்பர் 21ம் தேதி காலமானார். அசுரனது இயற்பெயர் தி. ஆனந்த ராம்குமார். அவரது மனைவி கவிதா, மூன்றரை வயது மகள் இலக்கியா, பெற்றோர், சகோதர, சகோதரி உள்ளனர்.

சமூகம் மேம்பட தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டு, அதற்காக 'அயராது உழைத்தவர்' அசுரன். அந்த உதாரண உழைப்பே நமக்கு அவர் விட்டுச் சென்றுள்ள சொத்து.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com