Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
பாஞ்சால நாட்டிற்கொரு நீதி, பைந்தமிழ் நாட்டிற்கொரு நீதியா?
சுபவீ

பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா நகரம், விழாக்கோலம் பூண்டிருந்தது. 02-12-2004 அன்று, அங்கு நடைபெற்ற "உலகப் பஞ்சாபி மாநாடு'' தான், அம் மக்களின் மகிழ்ச்சிக்குக் காரணம்.

"பஞ்சாப், பஞ்சாபி, பஞ்சாபித்துவ மறுமலர்ச்சி மாநாடாக'' பஞ்சாப் அரசினாலேயே அறிவிக்கப்பட்டு, கொண்டாட்டத்தில் குலுங்கியிருக்கிறது பாட்டியாலா. பஞ்சாபியர்களின் நிலம், மொழி, பண்பாடு ஆகிய உணர்வுகளுக்குப் புத்துணர்ச்சி ஏற்றும் வகையில், மாநாட்டின் நிகழ்வுகளும், உரைகளும் அமைந்திருந்தமையைச் செய்தித்தாள்கள் விளக்கியுள்ளன.

அம்மாநாட்டில் யாரெல்லாம் கலந்துகொண்டுள்ளனர் என்பது நம் கவனத்தை ஈர்க்கும் செய்தியாகும். பாகிஸ்தானில் உள்ள மேற்குப் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் பெர்வேஸ் இலாஹி, பாகிஸ்தானின் முன்னாள் கலை, பண்பாட்டுத் துறை அமைச்சரும், எழுத்தாளருமான பக்கர் சமான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்குத் தில்லி விமான நிலையத்தில் மிகச் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கான தனிநாடு ‘காலிஸ்தான்' வேண்டும் எனக் கோரும், அரசினால் தீவிரவாத அமைப்பு என அழைக்கப்படும் சில அமைப்புகளின் தலைவர்களும் அம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். உலகெங்கும் உள்ள பஞ்சாபியர்கள் பலர் அம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். பஞ்சாப் அரசும், அதன் முதல் அமைச்சர் அம்ரிந்தர் சிங்கும் விழா ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்துள்ளனர்.

நாடுகளின் எல்லைக் கோடுகளைக் கடந்து, "நாம் பஞ்சாபியர்கள், நமது மொழி பஞ்சாபி, நமது நாடு பஞ்சாப்'' என்னும் முழக்கங்களோடு அவர்கள் கை கோத்துள்ளனர். இவ்வாறே, இதற்கு முன்பும், "அனைத்து நாடுகளின் மராத்தி மாநாடு'' மும்பையிலும், "உலகத் தெலுங்கு மாநாடு'' ஹைதராபாத்திலும் உலகக் கன்னட மாநாடு பெங்களூரிலும் நடந்துள்ளன. உலகெங்கும் உள்ள மராத்தியர்களும், தெலுங்கர்களும், கன்னடர்களும் அவற்றில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இச்செய்திகளை எல்லாம் படிக்கும் போதும், இவை குறித்துப் பாராட்டி எழுதும்போதும், நம்மையறியாமலேயே நமக்குள் ஒருவிதமான ஏக்கமும், வேதனையும் குடியேறுகின்றன. தங்கள் மொழி, இனத்தின் மீது பற்றுடையவர்கள், அவற்றைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் ஒருங்கிணைந்து ஆற்றும் பணிகள் போற்றத்தக்கவை. இந்தியாவில் இருந்தாலும், பாகிஸ்தானில் இருந்தாலும், அடிப்படையில் தான் ஒரு பஞ்சாபி என்ற எண்ணம் பாராட்டத்தக்கது. இதில் வருத்தப்படவும், வேதனைப்படவும் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்.

வருத்தமும், வேதனையும் அவர்கள் மாநாடு பற்றியவை அல்ல. அவர்களைப் போல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து மாநாடுகள் நடத்தும்போது மட்டும், அரசுகள் குறுக்கே வந்து தடுப்பதை எண்ணித்தான் வேதனையடைகின்றோம். ஒரு முறை, இருமுறை அல்ல, பலமுறை அவ்வாறு நடந்து விட்டது. அவற்றுள் சிலவற்றையேனும் இப்போது எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது.

1995ஆம் ஆண்டு சனவரியில் எட்டாவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. அரசே முன்னின்று நடத்திய உலகத் தமிழ் மாநாட்டுடன் தொடர்புடையது அது. அதில் கலந்து கொள்ள உலகெங்கும் உள்ள தமிழ் ஆய்வாளர்களும், அறிஞர்களும் ஆவலோடு முன்வந்தனர். இலங்கையிலிருந்து மட்டும் 145 பேர், ஆளுக்கு ரூ. 2000/ செலுத்தித் தங்களைப் பேராளர்களாகப் பதிவு செய்து கொண்டனர். ஆனால் அவர்கள் அனைவருக்கும் அனுமதி (விசா) மறுக்கப்பட்டது. அவர்களுள் சைவர்கள், கிறித்துவர்கள், இசுலாமியர்கள் எனப் பல்வேறு மதத்தினர் கலந்திருந்தனர் என்பதுடன், சிங்களவர்கள் சிலரும் சேர்ந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

ஆனால் இந்திய அரசு எது குறித்தும் கவலை கொள்ளாமல், இலங்கையிலிருந்து வந்தாலே அவர்கள் தீவிரவாதிகள்தாம் என்று முடிவு செய்து அனுமதி மறுத்துவிட்டனர். சுற்றுலாப் பயணிகளாக இந்தியா வந்து, ஆய்வரங்கத்திற்கு வந்து சேர்ந்த, அறிஞர்கள் கா. சிவத்தம்பி, முனைவர் சண்முகதாஸ், முனைவர் மனோண்மணி சண்முகதாஸ் ஆகியோரை விமானத்தில் ஏற்றி வலுக்கட்டாயமாக நாடு கடத்தினர். தமிழ்நாட்டிலேயே உள்ள ஈழத்தமிழர் மறவன்புலவு சச்சிதானந்தத்தையும், தமிழ்நாடு காவலர்கள் ‘குண்டுக்கட்டாகத்' தூக்கி மாநாட்டிற்கு வெளியே கொண்டு வந்துவிட்டனர்.

அன்று ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. அரசு, தனக்கு எதுவும் தெரியாதென்று கைவிரித்து விட்டது. பின்னால் வந்த தி.மு.க. அரசும் 1997, 2000 ஆண்டுகளில் அதையேதான் செய்தது. "வெளிநாட்டினருக்கான சட்ட'' விதிகளின் படி மய்ய அரசு செயல்படுவதாகவும், அதனைத் தாங்கள் மட்டுமின்றி, நீதிமன்றம் கூடத் தலையிட்டுக் கேட்க முடியாது என்றும் இரு அரசுகளும் கூறித் தப்பித்துக் கொண்டன.

1997ஆம் ஆண்டு, தரமணியில் உள்ள ‘ஆசியப் படிப்பாய்வு' நிறுவனம் "முதலாவது அனைத்துலக முருகன் மாநாடு'' ஒன்றை நடத்தியது. அது முழுக்க ஆன்மீகம் மற்றும் சமூக இலக்கியத் துறைகள் சார்ந்தது. அம்மாநாட்டிலும், ஈழத்தமிழர் என்னும் ஒரே காரணத்திற்காக, சச்சிதானந்தனும், அவர் மகனும் காவல்துறையினரால் மிரட்டப்பட்டு, அவ்விடத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

பிறகு, 1999 சனவரியில், தஞ்சையில் கூட்டப்பெற்ற "ஆறாவது உலக சைவ மாநாடும்'' அதுபோன்ற நிகழ்வுகளையே கண்டது. அம்மாநாட்டில் கலந்துகொள்ள, தென் ஆப்பிரிகாவிலிருந்து, பெரும் பணம் செலவழித்து, 75 தமிழர்கள் வந்திருந்தனர். அவர்களுள் முன்னணியினரான வீரபத்திரன் என்னும் அறிஞரை, மாநாட்டிற்குள் அமர அரசு அனுமதி மறுத்துவிட்டது. அதனைக் கண்டித்து, உடன் வந்த அனைவரும் உண்ணாவிரதம் இருந்தனர். எந்தப் பயனும் இல்லை. இறுதியில் அனைவரும், மாநாட்டில் கலந்து கொள்ளாமலேயே நாடு திரும்பினர்.

2002ஆம் ஆண்டு சூலையில் உலகத்தமிழர் பேரமைப்பின் தொடக்கவிழா மாநாட்டிற்குத் தமிழக அரசு தடை விதித்தது. உயர்நீதிமன்றம் வரை சென்று போராடி அனுமதி பெற்றுதான் அந்த மாநாட்டினை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மிக அண்மையில், கடந்த சூலை மாதம், பெங்களூரில் நடைபெற்ற, உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன், சென்னை விமான நிலையத்திலேயே பல மணி நேரம் ‘சிறை வைக்கப்பட்டு' இலங்கைக்கே பிறகு திருப்பி அனுப்பப்பட்டார்.

பகைநாடு என்று கருத்துப் பரப்பப்படும் பாகிஸ்தான் அமைச்சர்களுக்கும், பிறருக்கும் அனுமதி அளிக்கும் இந்திய அரசு, நேச நாடு என்று அறிவித்துக்கொள்ளும் இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கிறது?

பஞ்சாபியருக்கும், மற்றவர்களுக்கும் ஒரு நீதி, தமிழர்களுக்கு ஒரு நீதியா? இந்திய அரசு தமிழர்களை அந்நியமாகவே பார்க்குமானால், தமிழர்களும் இந்திய அரசை அந்நியமாகத்தானே பார்க்க முடியும்?

"இருப்பாய் தமிழா நெருப்பாய் - நீ இருந்தது போதும் இதுவரை செருப்பாய்'' என்னும் உணர்ச்சிக் கவிஞரின் வரிகளைத்தான் நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளது.

- டிசம்பர் 16, 2004

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com