Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
காஞ்சியில் மடம் - வேலூரில் சிறை
புனிதம் உடைபட்டது

சுபவீ

இந்த ஆண்டு தீபாவளியில், நரகாசுரன் இடம் மாறிப் போனான். ஆத்திகர்கள் மட்டுமின்றி, நாத்திகர்களும் கொண்டாடிய தீபாவளி இதுவாகத்தான் இருக்கும். கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி, காஞ்சிபுரம், வரதராசப் பெருமாள் கோயிலின் மேலாளர் சங்கர்ராமனை, கோயில் வளாகத்திலேயே, பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்த கொடூரம் நடைபெற்றது.

அக்கொலை வழக்கில், கொலை செய்யச் சதி, கொலையைத் தூண்டுதல், கொலைக் குற்றம் என மூன்று அடிப்படையில் முதல் குற்றவாளியாக (ஏ1), காஞ்சி சங்கராச்சாரி, தீபாவளியன்று கைது செய்யப்பட்டார். கூலிப்படையினருக்குப் பணம் கொடுத்து, மேலாளர் சங்கர்ராமனைக் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளன என்று தமிழ்நாடு காவல்துறை கூறியது. மறுநாளே, அவரைப் பிணையில் விடுதலை செய்யவேண்டும் என்றும், அதுவரை ஒரு தனி பங்களாவில் ‘குடியமர்த்த' வேண்டும் என்றும் அவரது சார்பில் உயர்நீதி மன்றத்தில் மனு செய்யப்பட்டது.

அப்போது அரசு தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட சில செய்திகள் நம்மை அதிர வைத்தன. சங்கர்ராமன் கொலை செய்யப்பட்ட மறுநாள், ஐசிஐசிஐ வங்கியில் உள்ள சங்கரமடக் கணக்கிலிருந்து 10 இலட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுக் கொலையாளிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அத்தொகை உட்பட 48 இலட்சம் ரூபாய் கைமாறி உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது.

அது மட்டுமின்றி, கொலை செய்தவர்கள் சங்கராச்சாரியுடன் நேரடியாக அவரது கைத்தொலைபேசியில் பலமுறை பேசியிருப்பதற்கான ஆதாரங்களையும் அரசு வழக்குரைஞர் எடுத்துக் காட்டியுள்ளார். அடிப்படை ஆதாரங்கள் வலிமையாக இருக்கின்றன என்பதையே இது காட்டுகின்றது. இந்நிலையில்தான், பிணை மனு உயர்நீதி மன்றத்திற்கு வந்தது.

இந்நிலையில், பிணை மனுவை மறுநாளைக்கு (நவம்பர் 13) நீதிபதி ஒத்தி வைத்தார். பிரேமானந்தாவுக்காக வாதாடிய ராம் ஜேத்மலானி, அடுத்த நாள் சங்கராச்சாரிக்காக வாதாடினார். அவர் வாதத்தை மறுத்த அரசு வழக்குரைஞர், "நேபாளத்திற்குத் தப்பி ஓடத் திட்டமிட்டிருந்த போதுதான் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டார்'' என்னும் அதிர்ச்சிச் செய்தியை அறிவித்தார். இறுதியில் வீட்டுக்காவல் கோரிக்கை மறுக்கப்பட்டு, பிணை மனு நவம்பர் 17ஆம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

நீதிமன்றத்திலிருந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருக்கையில், அரசு வழக்குரைஞர் மற்றும் சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதை ஆதரித்த வழக்குரைஞர்கள் மீது, சங்பரிவாரங்கள் காட்டுத்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். காவிக் கொடியைக் கட்டியிருந்த கம்பைத் திருப்பிப் பிடித்து வழக்குரைஞர்களைத் தாக்கியுள்ளனர்.

அரசு வழக்குரைஞரைக் காவல்துறை காப்பற்றி விட, மற்றவர்களில் மூவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. "எட்டினால் தலையைப் பிடி, இல்லையேல் காலைப்பிடி என்பதுதான் பார்ப்பனீயம்'' என்பார் பாவாணர். அந்தத் தொடரை, மறுபடியும் மறுபடியும் காலம் மெய்ப்பிக்கிறது,

2.11.2004 இரவு 10.30 மணிக்கு ‘சன் நியூஸ்' தொலைக்காட்சியில், சங்கராச்சாரி கைது குறித்த விவாதம் நடைபெற்றது. தோழர் தா. பாண்டியன், வழக்குரைஞர் அருள்மொழி, சங்பரிவாரத்தைச் சேர்ந்த விநாயகர் முரளி ஆகியோர் அதில் பங்கேற்றனர்.

சங்கராச்சாரி கைது செய்யப்பட்டதில், சர்வதேசச் சதி இருப்பதாக ஒரு ‘அணுகுண்டு வெடி'யை விநாயக முரளி வெடித்தார். அது மட்டுமின்றி, "இந்துக்கள் யாராவது, வெள்ளிக்கிழமை அன்னிக்கு அதுவும் கோயிலுக்குள்ளயே, கொலை செய்யத் தூண்டுவாளோ?'' என்ற ‘ஆன்மீகக்' கேள்வியையும் முன்வைத்தார். வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாள்களில் மட்டும்தான் கொலை செய்வார்கள் போலிருக்கிறது. ஆனால் இப்போது, சங்கர்ராமன் கொலை வழக்கைப் பார்த்தால், அந்த வெள்ளிக்கிழமை விரதமும் காற்றில் கலந்து விட்டதைப் போலல்லவா தெரிகிறது!

கி.பி. 8 ஆம் நூற்றாண்டு, கேரளாவில் உள்ள காலடியில் பிறந்த ஆதிசங்கரர், திசைக் கொன்றாய் நான்கு மடங்களை இந்தியாவில் நிறுவினார். வடக்கே பத்ரிநாத், கிழக்கே பூரி, மேற்கே துவாரகநாத், தெற்கே சிருங்கேரி என்ற நான்கு ஊர்களில் மட்டுமே அவரால் மடங்கள் நிறுவப்பட்டன. பிறகு சிருங்கேரி மடத்தின் கிளை குடந்தையில் உருவாக்கப்பட்டது. நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சமூக, அரசியல் அமைதியின்மையால், குடந்தையிலிருந்து காஞ்சிக்கு இடம் பெயர்ந்தனர். காஞ்சியில், பொற்கொல்லர் சமூகத்திற்குச் சொந்தமான இடத்தில் முதலில் வந்து ‘ஒண்டிக்கொண்ட' இவர்கள், பிறகு, ‘இடம் கொடுத்தால் மடம் பிடித்துக் கொள்வார்கள்' என்ற கதையாய், அனைத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.

எனவே, காஞ்சி மடம், ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதன்று. மேலும், ஸ்மார்த்தப் பார்ப்பனர்களாகிய சங்கராச்சாரிகள், கடவுளை வணங்குகின்றவர்கள் அல்லர். வேதங்களை மட்டுமே வணங்குகின்றவர்கள். ‘வேதங்களை மறுப்பவர்களே நாத்திகர்கள்' (நாஸ்திக வேத நிந்திக) என்பதுதான் அவர்கள் கொள்கை. ‘அத்வைதம்' என்றழைக்கப்படும் ‘மாயாவாதமே' அவர்களின் சமயத் தத்துவம்.

மனுநீதி என்பது சாதிக்கொரு நீதி என்பது நாம் அறிந்ததே. அந்நீதிப்படி, பார்ப்பனர்கள் வேறு யாரையும் கொலை செய்தால், கொலைகாரரின் தலையை மொட்டையடித்தால் போதும். தண்டனை அவ்வளவுதான். கொலை செய்தவர் வேறு வருணமாக இருந்தால் ‘சிரச்சேதம்' தான். அதனால்தான் தந்தை பெரியார், "கொலைக்குற்றம் செய்தால் நமக்கு உயிர்போகும், பார்ப்பனர்களுக்கு மயிர்தான் போகும்'' என்பார். ஆனால் திருவிளையாடற் புராணத்தில் உள்ள ‘மாபாதகம் தீர்த்த படலம்' இன்னொரு செய்தியைக் கூறுகின்றது. அப்படலத்தில், ஒரு பார்ப்பன இளைஞன், தன் தந்தையைக் கொன்றுவிட்டுத் தாயைப் பெண்டாள முயற்சிப்பான். அந்த ஆபாசக் கதையில், ஒரு நீதி சொல்லப்படும். கொன்றது ஒரு பார்ப்பனராகவே இருந்தாலும், கொல்லப்பட்டதும் ஒரு பார்ப்பனராக இருக்கும் வேளையில் அவருக்குப் ‘பிரம்மஹத்தி தோஷம்' பிடித்து விட்டது என்றும், அதற்குக் கடுமையான தண்டனை உண்டு என்றும் அந்நூல் கூறும்.

அடடே, இப்போது சங்கராச்சாரியையும் ‘பிரம்மஹத்தி தோஷம்' அல்லவா பிடித்துக்கொண்டுள்ளது. காஞ்சி சங்கரருக்கு உடனடியாகப் பிணை வழங்கவில்லை என்று அவருடைய ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே திருவாவடுதுறை இளைய ஆதினம் எட்டு மாதங்கள் பிணை கிடைக்காமல் சிறையில் இருந்தார். இவ்வளவுக்கும், அவர் மீது கொலை முயற்சி (இ.த.ச. 307) வழக்குதான் தொடுக்கப்பட்டிருந்தது. அதற்கே எட்டு மாதச் சிறை. சங்கரர் மீது தொடுக்கப்பட்டிருப்பதோ நேரடியான கொலை வழக்கு (இ.த.ச. 302)

பொடா சட்டத்தில் கைதாகித் தமிழகச் சிறையில் இருக்கும் 5 பெண்கள் உள்ளிட்ட 24 தோழர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஆகியும் பிணை கிடைக்கவில்லை. உண்மைகள் இவ்வாறு இருக்க, சங்கரர் அவசரப்படுவதில் என்ன நியாயம்? ஓரிரு ஆண்டுகளில் அவருக்கும் பிணை கிடைக்காமலா போய்விடும்?

- நவம்பர் 16, 2004

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com