Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
பங்காரு லட்சுமணன், கிருபாநிதி, உமாபாரதி - பலி பீடத்து ஆடுகள்

சுபவீ

பாரதீய சனதாக் கட்சி, மிகவும் கட்டுப்பாடான கட்சி என்றும், அதன் தலைவர்கள் தன்னலமோ, பதவி ஆசையோ இல்லாதவர்கள் என்றும் சில கருத்துகள் இங்கே திட்டமிட்டுப் பரப்பப்பட்டுள்ளன. அண்மை நிகழ்வுகள், அந்த மாயைகளைத் தகர்த்து நொறுக்கியுள்ளன. அவர்களின் போலி முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன. தங்களுக்குள் ‘அதிகாரத் தரகர் யார்' என்றும் தகராறு நடந்து கொண்டுள்ளது.

உமாபாரதிக்கும், பிரமோத் மகாஜனுக்கும் சண்டை, வி.எச்.பி.க்கும், ஆர்.எஸ்.எஸ்.ஸிற்கும் மோதல், அத்வானிக்கே அறைகூவல், செயற்குழுக் கூட்டத்தில் குழப்பம் - என்று செய்திகள் வந்த வண்ணமாக உள்ளன. ஆர்.எஸ்.எஸ். கூட்டம் எப்போதும் ஓர் உத்தியைக் கையாளூம். திட்டமிடும் இடத்திலும், தலைமைப் பொறுப்பிலும், பதவிகளிலும் பார்ப்பனர்களை அமர்த்திக் கொள்ளும். அடுத்தவர்கள் மீது கடுமையாகப் பாய்வதற்கும், வன்முறைகளில் இறங்குவதற்கும் பார்ப்பனர் அல்லாதவரை இறக்கிவிடும். பஜ்ரங்தள் தலைவர் வினய் கட்டியார், பா.ஜ.க.வின் உமாபாரதி ஆகிய பார்ப்பனரல்லாதோர் அவ்வாறு இறக்கிவிடப்பட்டவர்களே.

வேடம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகச் சில வேளைகளில் பார்ப்பனரல்லாத ஓரிருவரைத் தலைமைப் பொறுப்புகளுக்கும் கொண்டு வருவார்கள். பிறகு, மிகக் குறுகிய காலத்தில் பலி கொடுத்து விடுவார்கள். அவ்வாறு பலி கொடுக்கப்பட்ட ஆடுகள்தாம் இந்திய அளவில் பங்காரு லட்சுமணன், தமிழக அளவில் கிருபாநிதி போன்றவர்கள். இப்போது அந்த வரிசையில் உமாபாரதி.

குற்றஞ்சாற்றப் பெற்றவர்கள் பதவியில் இருக்கக்கூடாது என்ற ஓர் ஆயுதத்தைப் பா.ச.க. கையில் எடுக்க, அது அவர்களுக்கு எதிராகவே பாய்ந்துவிட்டது, உமாபாரதி, முதல்வர் பொறுப்பிலிருந்து விலகிக், கருநாடக நீதிமன்றத்திற்கு வர நேர்ந்தது. வழக்கு ஒன்றுமில்லாமல் முடிந்துபோனது. ஆனால் அவருக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்கப் பா.ச.க.வினர் மறுத்து விட்டனர்.

‘மத்தியப் பிரதேசத்தில் பா.ச.க. வெற்றி பெற்றது, என்னுடைய சொந்தச் செல்வாக்கினால்தானே தவிர, கட்சியினாலோ, இந்துத்வாவினாலோ அன்று' என்று கூறிய உமாபாரதி, ‘அதனால் தனக்கு முதல்வர் பதவி மீண்டும் வழங்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தினார். அவர் கோரிக்கை பயனற்றுப் போனது. சினம் கொண்ட உமாபாரதி ரதயாத்திரை போனார், ரிஷிகேஷ் போனார். அவரைச் சமாதானப்படுத்த அவருக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அப்பதவி வழங்கிச் சில நாள்களிலேயே, அவரின் அடிப்படை உறுப்பினர் பதவி கூடப் பறிக்கப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் பிறரைப் பார்த்துத் ‘துக்ளக்'குகள் என்று கேலி பேசுகின்றனர்.

தன் பரிவாரம் முழுவதையும் தன் கைக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்பது எப்போதும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் எண்ணம். இன்று நேற்றன்று, பல காலமாய் இச்செயல் நடைபெறுகின்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பும் இதே போன்று ஒரு நிகழ்வு நடந்துள்ளதைச், சில நாள்களுக்கு முன்பு, ‘இந்து' ஏடு வெளிப்படுத்தியுள்ளது.

1954 நவம்பர் 3ஆம் நாள், பண்டிட் மவுலி சந்தர் சர்மா என்பவர், பாரதீய சன சங்கத்தின் தலைமைப் பதவியையும், உறுப்பினர் பதவியையும் துறந்திருக்கின்றார். சன சங்கத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் மிகுதியாகிக் கொண்டே இருப்பதால்தான் பதவி விலக நேர்ந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது தொடங்கியிருக்கும் இந்தக் குடுமிபிடிச் சண்டைகளில், இன்னும் சில பரபரப்பான காட்சிகள் அரங்கேற வாய்ப்புள்ளது.

உமாபாரதியைத் தலைவியாகக் கொண்ட ஒரு புதிய அரசியல் கட்சியை ஆர்.எஸ்.எஸ். தொடங்க முயற்சிகள் நடப்பதாகக் கூறப்படுகிறது. ஆடுகளுக்குக் கழுத்தில் மாலை போட்டுத்தானே பலியிடுவார்கள்.

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com