Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
காடுகள் கலங்குகின்றன

சுபவீ

வீரப்பன் ஆண்டுகள் பலவாய்க் காட்டிற்குள் வாழ்ந்தவர். காட்டின் ஒவ்வொரு அசைவும் அறிந்தவர். "காக்கை குருவி எங்கள் சாதி' என்று மட்டுமல்லாமல், கரியும் புலியும் எங்கள் கூட்டம் என்று வாழ்ந்தவர் அவர். "அடுத்தடுத்து வந்த அரசுகளால் புறக்கணிக்கப்பட்ட மலைவாழ் மக்களின் வாழ்க்கைத் துணைவராக, அவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பவராக வீரப்பன் வாழ்ந்தார்' என்றும், "பெண்களை இழிவுபடுத்துவது ஆண்களின் - குறிப்பாகக் காவல்துறையினரின் உரிமை என்று ஓப்புக்கொள்ளப்பட்ட அந்த வனச்சூழலில், பெண்களின் கண்ணியத்தை மதிப்பவராக அவர் வாழ்ந்தார்' என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் (24.10.2004) நாளேடு எழுதுகின்றது.

அவருடைய ஆளுகைக்கு உட்பட்டிருந்த, மூன்று மாநிலங்களுக்கு உரிய வனப்குதியில், 8 முதல் 10 விழுக்காடு வரை காடுகள் விரிந்திருக்கின்றன என்னும் செய்தி நமக்கு வியப்பைத் தருகிறது. அதே காலகட்டத்தில், மற்ற பல வனப்பகுதிகளில் காடுகள் குறைந்திருக்கின்றன. இச்செய்தி, வீரப்பன் உண்மையான வனப்பாதுகாவலராக இருந்திருக்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றது. கேரளாவிலிருந்து உட்புகுந்து நம் காட்டு மரங்களை வெட்டிச் செல்வோரையும், அருமருந்தான மூலிகைகளைக் கவர்ந்து செல்வோரையும் இனி யார் தடுப்பார்கள்? காடுகள் கலங்குகின்றன.

வீரப்பன் வாழ்க்கை முடிந்துபோனாலும், முடிவற்ற பல ஐயங்கள் உருவாகியுள்ளன. வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுண்டர், சேதுமணி ஆகிய நால்வரையும் ஒரு மோதலில் கொன்று விட்டதாகக் காவல்துறை கூறுகின்றது. காவல்துறைத் தரப்பிலிருந்து வெளிவந்திருக்கும் சில செய்திகளும், அவற்றையொட்டிய நம் ஐயங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

1. வெள்ளைத்துரை என்னும் உதவி ஆய்வாளர், உளவாளி ஒருவருடன் வீரப்பனைப் பார்க்கக் காட்டுக்குள் சென்றபோது, எறிகுண்டு, துப்பாக்கி ஆகியனவற்றை எடுத்துச் சென்றதாகவும், வீரப்பனின் ஆட்கள் அவரைச் சோதனை செய்யவில்லை என்றும் கூறுகின்றனர். எப்படி நம்புவது?

2. வீரப்பனின் ஆட்கள் பயன்படுத்தியதாகக் காவல்துறை கூறும் ரெமிங்டன் துப்பாக்கியால் ஏற்பட்டிருக்கக்கூடிய அடையாளம் எதுவும், அந்த ஊர்தியில் (ஆம்புலன்ஸ் வாகனம்) காணப்படவில்லையே, ஏன்?

3. ‘ஆம்புலன்ஸ்' ஊர்தியை இதுபோன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவது, தவறான முன்மாதிரி ஆகிவிடாதா?

4. ஊர்தியின் அமைப்பையே மாற்றியதோடு அல்லாமல், தங்கள் ஆளையே ஓட்டுநராகவும் அமர்த்தியுள்ள அதிரடிப்படையினர், அந்த வண்டிக்குள் மயக்கவாயுவை வீசும் கருவியைப் பொருத்தி, வீரப்பனை உயிரோடு பிடிக்க ஏன் முயற்சி செய்யவில்லை என்று, கருநாடக மாநில முன்னாள் அதிரடிப்படை அதிகாரி (டி.ஜி.பி.) சங்கிலியானா வினா எழுப்பியுள்ளாரே, அதற்கு விடை என்ன?

5. மக்கள் கண்காணிப்பகம் தன் அறிக்கையொன்றில், "காவல்துறையின் நடவடிக்கையால் மரணம் விளைகின்ற அனைத்து நிகழ்வுகளிலும், நீதித்துறை நடுவரைக் கொண்டு கட்டாயம் ஆய்வு நடத்த வேண்டும் என்னும் தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வீரப்பன் கொலை பற்றிய விசாரணைக்கு ஏன் இன்னும் ஆணையிடவில்லை?” என்று கேட்டுள்ளது, ஏன் அவ்வாறு செய்யவில்லை?

6. அயோத்திக்குப்பம் வீரமணி, வெங்டேசப்பண்ணையார், இராசாராம் முதலான பலரும் மோதல் நிகழ்வுகளில் காவல்துறையினரால் கொல்லப்பட்டுள்ளர். அனைத்து மோதல்களிலும், நெற்றியிலேயே காயம்படுவதும், வெள்ளைத்துரை என்பவரே மோதல்களில் ஈடுபட்டிருப்பதும், காவல்துறையினருக்குச் சின்ன சின்னச் சிராய்ப்புகள் மட்டுமே எப்போதும் ஏற்படுவதும் எப்படி?

7. வீரப்பன் கொலை செய்யப்பட்ட செய்தி வெளியானவுடன் அதிரடிப்படையினர் இருப்பிடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டனவே, எப்படி? காட்டிலிருந்த அவர்கள் முன்கூட்டியே பட்டாசுகளை வாங்கி வைத்திருந்தனர் என்பதுதானே உண்மை. திட்டமிட்ட கொலையாக அது இருக்குமோ என்ற ஐயத்தை இது வலுப்படுத்துகின்றதல்லவா?

8. வீரப்பன் கண் அறுவைக்காக மருத்துவமனைக்குச் சென்று வருவதாய்க் கூறப்படுகின்றது. கண் அறுவைக்கு முன்னும் பின்னும் முகச்சவரம் செய்யக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுவர். ஆனால், வீரப்பன் முகச்சவரம் செய்யப்பட்டு இருக்கிறாரே, எப்படி?

9. அதே ஆம்புலன்ஸ் ஊர்தியை பலவிடங்களில், பல நேரங்களில் ஏற்கனவே பார்த்துள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அந்த ஊர்தி அப்போதுதான் தயாரிக்கப்பட்டது என்று அதிரடிப் படையினர் கூறுகின்றனர். எது உண்மை?

10. வீரப்பனின் நெற்றிப்பொட்டில் உள்ள காயம், மிக அருகில் நின்று சுடப்பட்டதைப் போல அல்லது தானே சுட்டுக் கொண்டது போல அல்லவா உள்ளது?

11. தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? காவல்துறையினரின் ஆட்சியா? குற்றஞ்சாட்டப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு நிறுத்தாமல், மோதல் என்ற பெயரில் சுட்டுத் தள்ளுவதன் மூலம், பின்புலத்தில் இருக்கக்கூடிய பல குற்றவாளிகள் தப்புவதற்கு வழிசமைத்துக் கொடுப்பதாக ஆகிவிடாதா?

விசயகுமாரின் துப்பாக்கி ஓசைகளுக்கிடையே, இந்த வினாக்களும் மக்களின் செவிகளில் விழாமலா போகும்?.

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com