Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
வீரப்பன் நினைவு நாளில் படிக்க வேண்டிய ஒரு புத்தகம்
சுபவீ

கடந்த பல ஆண்டுகளாக மனித உரிமைச் செயல்பாடுகளில் தொடர்புடையவரான வழக்குரைஞர் ச.பாலமுருகன் எழுதியுள்ள நாவலே சோளகர் தொட்டி. இதனை நாவல் என்றும் சொல்லலாம். ஒரு பழங்குடி மக்களின் வாழ்க்கை தொடர்பான வரலாற்றுப் பதிவு என்றும் சொல்லலாம்.

சோளகர் என்னும் நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடி குடும்பத்தினரின் வசிப்பிடமாகிய தொட்டியைப் பற்றிய கதை இரண்டு பாகங்களாக இந்நூலுள் எழுதப்பட்டுள்ளது. அப்பழங்குடியினரின் வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியன முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. சந்தன வீரப்பனைப் பிடிக்கப்போன அதிரடிப்படையினரின் அட்டூழியங்களால் அம்மக்கள் படும் துன்பங்களும், அவர்களுக்குக் கருநாடக, தமிழ்நாடு காவல், வனத்துறையினரால் நேர்ந்த சித்ரவதைகளும் இரண்டாம் பாகத்தில் கூறப்பட்டுள்ளன.

முதல் பாகத்தைப் படித்து முடிக்கும்போது, சோளகர்களான அப்பழங்குடி மக்களுடன் வாழ்ந்து திரும்பிய அனுபவம் நமக்குக் கிடைக்கிறது. தொட்டியின் தலைவனான கொத்தல்லி, வழிபாட்டுச் சடங்குகளைச் செய்யக்கூடிய கோல்காரன், அத்தொட்டியின் துணிச்சல் மிக்க இளைஞனான சிவண்ணா, அவனுடைய இரண்டாவது மனைவி மாதி அனைவரும் நம் நெஞ்சை விட்டுப் பிரிய மறுக்கின்றனர்.

‘மற்றவர்களுக்கு வேணுமின்னா இந்த வனம் வெறும் காடு, நமக்குத் தாயும் தெய்வமும் இந்த வனம்தான்' என்று கருதும் அந்தக் கள்ளமில்லாச் சோளகர்கள், வனத்தையும் இழந்து, வாழ்வையும் இழந்து போகும் சோகம், நூலைப்படிக்கும் ஒவ்வொருவரையும் ஒட்டிக் கொள்கிறது. ஜடையம்மன் தங்களைப் பாதுகாப்பான் என்றும், மணிராசன் தங்களுக்கு நீதியளிப்பான் என்றும் நம்பும் அம்மக்கள், அச்சிறு தெய்வங்களின் முன் நடத்தும் வழிபாட்டு நிகழ்வுகளை மிக இயல்பாக நூலாசிரியர் விளக்கி உள்ளார். காரையன் என்னும் சிறுதெய்வத்தின் வம்சாவழியினரே தாங்கள் என்று சோளகர்கள் நம்புகின்றனர். காரையனின் சகோதரனான மாதேஸ்வரனின் வம்சா வழியினரே லிங்கம் அணியும் லிங்காயத்துகள் என்பதும் அவர்கள் நம்பிக்கை.

அவர்கள் வீரப்பனைப் பார்த்தறியாதவர்கள். தங்களுக்குள் பேசிக்கொள்ளும் போது கூட, ‘தந்தத்தை வைத்து என்ன செய்வாங்க' என்று ஒரு பெண் கேட்க, ‘யானை பொம்மை தாயி' என்று இன்னொருவர் விடை சொல்கிறார். வீரப்பன்னு யாரோ ஒருத்தர் காட்டுக்குள்ள இருக்காராமே என்றுதான் அவர்களுக்குள் உரையாடல் நடக்கிறது. அப்படிப்பட்ட மக்களிடம்தான் வீரப்பன் இருக்கும் இடத்தைக் காட்டச் சொல்லி காவல்துறையினரும், வனத்துறையினரும் பல கொடூரங்களை அரங்கேற்றுகின்றனர். அதுவே நூலின் இரண்டாம் பாகம்.

கடின நெஞ்சுள்ளவர்களால் மட்டுமே இரண்டாம் பாகத்தை முழுமையாகப் படிக்க முடியும். அந்தப் பழங்குடி மக்களின் மீது நிகழ்த்தப்பட்டுள்ள வன்முறைகள் சொல்லும் தரமுடையன அல்ல. ஆனால், முழுச் செய்திகளையும் அறிந்தவர்கள், அந்நூலில் சொல்லப்பட்டிருப்பதே குறைவானதுதான் என்கின்றனர். நூலின் செம்பாகமான பின்பகுதியில் விளக்கப்பட்டிருக்கும் அந்தச் சித்தரவதைகள் விதவிதமானவையாக உள்ளன. பாசம் மிகுந்த தந்தையையும், மகனையும் எதிரெதிராக முன்னிறுத்தி, ஒருவரை மற்றவர் தன் கால் செருப்பால் அடிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தும் காவல் துறையினரின் கொடுமையை, கணவன் கண்முன்பாகவே அவன் மனைவியுடன் பாலியல் வல்லுறவு கொள்ளும் காட்டுவிலங்காண்டித்தனத்தை படிக்கும் போதே நம் நெஞ்சு பதறுகிறது.

அதிலும் குறிப்பாக, தலைமலை காவல் நிலையத்தில், பழங்குடியினருக்குக் காவல்துறை அதிகாரி ஒருவன் விருந்து வைக்கும் விதம் படிப்பவர் நெஞ்சைப் பிளப்பதாய் உள்ளது. வரிசையாய் அனைவரையும் அமரவைத்து, இலைகளில் கறியும் சோறும் பரிமாறிவிட்டு, அவர்கள் உண்ணத் தொடங்கும் நேரத்தில், உள்ளேயிருந்து அவர்களின் தொட்டியைச் சார்ந்த இருவரை இழுத்துவந்து, அவர்கள் கண்முன்னாலேயே கதறக்கதற அடிப்பதும், குருதிச் சிந்தச்சிந்த கொலைவெறித் தாண்டவம் ஆடுவதும் எண்ணச் சகிக்காத இன்னல்கள் என்றால், அக்கொடுமையைப் பார்த்துக்கொண்டே அவர்கள் வயிறு நிறைய விருந்தும் உண்ண வேண்டும் என்று கட்டளையிடுவது அதனைக் காட்டிலும் கொடூரமாக உள்ளது.

எல்லாவற்றிற்கும் உச்சமாக, சிவண்ணாவின் மனைவி மாதியையும், அவள் மகளான இளம்பெண் சித்தியையும் ‘ஒர்க் ஷாப்' என்னும் சித்ரவதைக் கூடத்தில் நடத்தும் விதம் தாளமுடியாததாக உள்ளது. இருவரையும் நிர்வாணமாக்கி, காதுகளிலும், மார்பகங்களிலும், பிறப்புறுப்புகளிலும் மின்சாரம் செலுத்திச் சித்ரவதை செய்யும் காட்சி, அந்தக் காவல்துறைக் காட்டு விலங்குகளைக் கண்டதுண்டமாக வெட்டிப்போட வேண்டும் என்னும் வெறுப்பையும் கோபத்தையும் படிப்பவர்களிடம் உருவாக்குகிறது.

மாதேஸ்வரன் மலைக்கருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் அம்மக்கள் கொடுமைப்படுத்தப்படும்பொழுது, அவர்களில் ஒருவர், ‘மாதேஸ்வரா, நான் இனி மனுசி இல்ல, வெறும் பொணம்' என்று சொல்லிவிட்டு, சிறிய இடைவெளிக்குப்பின், ‘நீயுந்தான்' என்று சொல்லுமிடம், அவர்களின் நம்பிக்கைகளெல்லாம் எப்படிச் சிதறி வெடித்துச் சீரழிந்துவிட்டன என்பதைக் காட்டுகிறது.

இந்நாவல் வெளிவந்து ஓராண்டிற்கும் மேல் ஆகிவிட்ட போதிலும், வீரப்பனின் முதல் ஆண்டு நினைவு நாள் நெருங்கும் இவ்வேளையில் இதற்கான முக்கியத்துவத்தை நாம் உணர்கிறோம். வீரப்பனை வீழ்த்திவிட்டார்கள் என்று கொக்கரிப்போர் இன்றும் நம்மிடையே உண்டு. அவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், நாவல் எனப்படும் இந்த உண்மைக் கதையை ஒருமுறை படித்துப் பாருங்கள். வீரப்பனுக்கு முன்பாகவே, மனிதநேயம், நாகரிகம், பண்பாடு, ஈரநெஞ்சம் எல்லாவற்றையும் அவர்கள் ஒருசேர வீழ்த்திவிட்டார்கள் என்பது புரியும்.

ஆசிரியர் - ச.பாலமுருகன், வனம் வெளியீடு, 17, பாவடித் தெரு, பவானி - 638301. விலை ரூபாய் 100.

- அக்டோபர் 16, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com