Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
பொடா முழுமையாகப் போய்விட்டதா?

சுப.வீ.

பொடா சட்டம் நீக்கப்பட்டு விட்டது என்னும் மகிழ்ச்சியான செய்தி நம்மை வந்தடைந்த அதே நேரத்தில், இன்னொரு சட்டம் (சட்டப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த அவசரச் சட்டம், 1967, புதிதாகப் புறப்பட்டிருக்கும் வேதனையான செய்தியும் சேர்ந்தே வந்துள்ளது.

இரண்டும் வெவ்வேறு அவசரச் சட்டங்கள் என்றாலும், ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்டுள்ள, ஒன்றோடொன்று பிரிக்கமுடியாதபடி தொடர்புபடுத்தப்பட்டுள்ள சட்டங்கள் அவை. நடைமுறையில் இருந்த ஒரு கொடூரச் சட்டம் விலக்கிக் கொள்ளப்படுகிறது, இன்னொரு சட்டம் கொடூரமாகத் திருத்தப் படுகின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால், விலக்கிக் கொள்ளப்பட்ட சட்டத்தில் இருந்த பல பிரிவுகள், மிகச் சிறு திருத்தங்களுடன், புதிய சட்டத்தின் திருத்தப்பட்ட வடிவில் சேர்க்கப்பட்டுள்ளன. ‘அதே ஆள், வேறு ஒப்பனையோடு வருகிறாரோ’ என்று எண்ணத் தோன்றுகிறது.

சில நாள்களுக்கு முந்தைய ஒரு பேட்டியில், பொடா சட்டம் நீக்கம் குறித்து நிருபர்கள் கேட்ட வினாவிற்க்கு, அந்த அவசரச் சட்டம் முதலில் வெளியாகட்டும். பிறகு சொல்கிறேன். பெருமாளைப் பெத்த பெருமாள் ஆக்கி விட மாட்டார்கள் என்று நினைக்கிறேன் என விடையிறுத்துள்ளார் கலைஞர். அவருக்கே பெத்த பெருமாள் ஆகிவிடுமோ என்ற கவலை இருந்திருப்பது தெளிவாகின்றது. இப்போது நமக்கும் அந்த எண்ணம் வருகின்றது. எனவே இரண்டு சட்டங்களுக்குமிடையிலான ஒற்றுமை, வேற்றுமைகளை ஒப்பிட்டுப் பார்த்தால்தான், பொடாவின் இன்றைய நிலை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். (சட்டப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புத் திருத்த அவசரச் சட்டம், 1967& இனிச் சுருக்கமாக திருத்தச் சட்டம் என்று குறிப்பிடப்படும்)

53 பிரிவுகளைக் கொண்டுள்ள திருத்தச் சட்டத்தில், பல பிரிவுகள், பழைய பொடாச் சட்டத்தில் இருந்தவை. குறிப்பாக, பொடா சட்டத்தின் 21ஆவது பிரிவு, ஜனநாயகத்திற்கும், மனித உரிமைக்கும் எதிரானது என்று அன்றைய எதிர்க்கட்சிகளாலும், அனைத்து மனித உரிமை அமைப்புகளாலும் விமர்சனம் செய்யப்பட்டது. அந்தப் பிரிவின் கீழ்தான் பழ. நெடுமாறன், வைகோ உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.

இப்போது, திருத்தச் சட்டத்தின் 39ஆவது பிரிவு, ஏறத்தாழ அதே உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது. பொடா சட்டத்தில் ஆதரித்துக் கூட்டத்தில் பேசினால் என்று இருந்தது இன்று வந்துள்ள திருத்தச் சட்டத்தில் ஆதரித்தால் என்று உள்ளது. அவ்வளவுதான் வேறுபாடு. அதற்கான தண்டனைக் காலமும் பொடாவில் இருந்ததைப் போன்றே 10 ஆண்டுகளுக்கு மிகாமல் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

பொடாச் சட்டத்தின் கீழ்த் தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து இயக்கங்களும், இப்போது இந்தப் புதிய திருத்தச் சட்டத்தின் கீழ்த் தடைசெய்யப்பட்டுள்ளன - வரிசை எண்கள் கூட மாறாமல். பொடாவைப் போலவே, பல இஸ்லாமிய அமைப்புகளுக்கு இச்சட்டமும் தடை விதிக்கிறது. ஆனால் வி. எச். பி., பஜ்ரங்தள் போன்ற ஒரு இந்துவெறி இயக்கம் கூட பொடாவிலும் தடை செய்யப்படவில்லை. இந்த அவசரச் சட்டத்திலும் தடை செய்யப்படவில்லை.

பொடாவின் 32ஆவது பிரிவு, காவல் நிலையத்தில், குற்றஞ்சாற்றப்பட்டவர் கொடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் போதுமானது என்று கூறியது. இது மிகக் கொடூரமானதும், காவல் துறையின் காட்டாட்சிக்கு வழி வகுக்கக் கூடியதும் ஆகும். இதுபோன்ற பிரிவு எதுவும் திருத்தச் சட்டத்தில் இடம் பெறவில்லை.

அடுத்ததாக, பிணை (ஜாமீன்) பெறுவதில், பல்வேறு சிக்கல்களை, பொடாவின் 49ஆவது பிரிவு முன்வைத்தது. மிகக் குழப்பமான பல்வேறு விளக்கங்களுக்கு அது வழிவகுத்தது. அதனால்தான், ஓராண்டிற்கு முன்பு, பொடா சிறையாளிகளுக்குப் பிணை தரலாமா?, கூடாதா? என்பதில் பெருங்குழப்பம் நிலவியது. உயர்நீதிமன்றம் சென்று, அப்பிரிவுக்கு விளக்கம் கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும், குற்றஞ்சாற்றப்பட்டவர் மீது குற்றத்திற்கான அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றம் கருதினால், ஓராண்டுக்கு முன்பே பிணையில் விடலாம் என்று கூறிய பின்னரும், நடைமுறையில் தெளிவு ஏற்படவில்லை. நக்கீரன் கோபாலைத் தவிர அனைவரும், ஓராண்டிற்குப் பின்பே பிணையில் வெளிவந்தனர். நக்கீரன் கோபால் வழக்கிலும், வழக்குப் பதிவு முறையில் ஏற்பட்ட சட்டப் பிரச்சினையே அவருக்குக் கைகொடுத்தது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இப்போது வந்துள்ள திருத்தச் சட்டத்தில், அந்தக் குழப்பம் நீங்கிவிட்டது. மற்ற குற்றங்களுக்கான இயல்பான சட்டமே இதற்கும் பொருந்தும் என்றாகி விட்டது. எனவே திருத்தச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்படுபவர்கள், பொடாவில் கைதானவர்களைப் போல், பிணை பெறுவதற்குப் பெருந்துன்பப்பட வேண்டியதில்லை. 180 நாள்கள் வரை, குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யாமலேயே, பொடாவில் கைதான ஒருவரைச் சிறையில் வைத்திருக்க முடியும். இதற்கும், திருத்தச்சட்டத்தில் இடமில்லை. ஆதலால், மற்ற எல்லா வழக்குகளிலும் உள்ளதைப் போன்று, 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவேண்டும் என்பது உறுதியாகின்றது.

தடா சட்டத்தில் மதவெறியைத் தூண்டுவோரையும் அச்சட்டத்தின் கீழ்க் கைது செய்யலாம் என்றிருந்தது. பா.ஜ.க.வினர் மிகக் கவனமாய், பொடாவில் அதனை எடுத்துவிட்டனர். ஆனால் இப்போது திருத்தச் சட்டத்தில் மீண்டும் அப்பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இப்போது சங்பரிவாரங்களைச் சேர்ந்தவர்களும், கைது செய்யப்பட வாய்ப்புள்ளது. இவ்வாறு பொடாச் சட்டத்தின் கொடூரங்கள் சில, திருத்தச் சட்டத்தில் இடம்பெறவில்லை என்பது உண்மையானாலும், பொடாவை விஞ்சி நிற்கும் சில விடயங்களும் இருக்கவே செய்கின்றன.

உளவுத்துறையினர், தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து, அவற்றை ஓர் ஆவணமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்திட, பொடா சட்டம் வழிவகை செய்தது. எனினும், அதனை அவ்வளவு எளிதில் செய்துவிட முடியாதபடி, சில பாதுகாப்புகளும் பொடாவில் இருந்தன. அந்தப் பாதுகாப்புகள் இப்போது அகற்றப்பட்டு விட்டன.

ஒருவரின் தொலைபேசி உரையாடல்களை, அவருக்குத் தெரியாமல் பதிவு செய்ய வேண்டுமானால், உள்துறை இணைச் செயலாளரின் ஒப்புதலை முன் கூட்டியே பெற வேண்டும் என்பது பொடாவின் விதி. அது மட்டும் போதுமானதன்று. நடுவண் அல்லது மாநில மறு ஆய்வுக் குழுவினால், அப்பதிவு ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். பிறகுதான் அது நீதிமன்றத்தில் ஒரு சாட்சியாகப் பதிவாகும். இம்முறையில், குற்றஞ்சாற்றப் பட்டவர்களுக்கு ஒரு பாதுகாப்பு இருந்தது. காவல் துறையினருக்குக் கூடுதல் வேலையும், பொறுப்பும் இருந்தன.

ஆனால், திருத்தச் சட்டத்தில், அந்த முன் நடவடிக்கைகள் கோரப்படவில்லை. உளவுத் துறையினரே, தொலைபேசி உரையாடல்களைப் பதிவு செய்து, நேரடியாக நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்து விடலாம். அது ஒரு சான்றாகவும் அனுமதிக்கப்படும். இவ்வாறே இயக்கங்களைத் தடை செய்வதில், சட்டப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967இல் இருந்த சில பாதுகாப்புகள், திருத்தச் சட்டத்தில் அகற்றப்பட்டு விட்டன.

பழைய சட்டத்தில், தடை ஆணையை நடுவர் தீர்ப்பாயம் 4 மாதங்களுக்குள் ஏற்க வேண்டும். இல்லையேல் அந்தத் தடையை நீட்டிக்க முடியாது. ஆனால் இப்போது அமைப்புகளைத் தடை செய்வதற்குத் திருத்தச் சட்டத்தின்படி ஒரு அறிவிக்கையே போதுமானது. எனவே எதிர்க்கட்சிகளையோ, அரசுக்குப் பிடிக்காத மக்கள் அமைப்புகளையோ எளிதில் தடை செய்து விடலாம்.

தடா, பொடா சட்டங்கள் எல்லாம், குறிப்பிட்ட ஆண்டிற்கொருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால், திருத்தச் சட்டத்தில் அப்படி எதுவும் குறிக்கப்படவில்லை. எனவே அது ஒரு நிரந்தரச் சட்டமாகவே ஆக்கப்பட்டுள்ளது. ஆதலால் பொடாவை எதிர்த்த அனைவரும், திருத்தச் சட்டம் போன்ற ஒடுக்குமுறைச் சட்டங்களையும் எதிர்த்தே ஆக வேண்டும்.

பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும், தமிழகத்திலும் பொடாவைப் போன்றே இன்னொரு சட்டம் வரப்போவதான அறிவிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றை எதிர்ப்பதற்கும் இப்போதே நாம் அணியமாக வேண்டும்.

நிலுவையில் உள்ள பொடா வழக்குகள் என்ன ஆகும்?

பொடா நீக்க அவசரச் சட்டம் முன்மேவு பலனுடன் அறிவிக்கப்படவில்லை. எனவே, பொடா சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் என்ன ஆகும் என்ற வினா எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் நிலுவையில் உள்ள அனைத்துப் பொடா வழக்குகளையும், நடுவண் அரசினால் நியமிக்கப்பட்டுள்ள பொடா மறுஆய்வுக்குழு, வழக்கிற்கான அடிப்படைஆதாரம் உள்ளதா என்று ஆராய்ந்து 2005 செப்டம்பர் 20ஆம் நாளுக்குள் அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவிக்கும் வரை, வழக்குகளின் மீதான மேல் புலனாய்வுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். 1908 ஆம் ஆண்டு குடிமைச் சட்ட விதிகளின்படி மறு ஆய்வுக் குழுவிற்குக் குடிமை நீதிமன்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, மறு ஆய்வுக் குழு கோரும் அனைத்து ஆவணங்களையும், மத்திய, மாநில அரசுகள் உடன் அனுப்பித் தீர வேண்டும். தேவைக்கேற்பக் கூடுதல் மறு ஆய்வுக் குழுக்களை, மத்திய அரசு நியமித்துக் கொள்ளலாம்.

இவைதான், பொடா நீக்கச் சட்டம் தரும் செய்திகள். இதன் அடிப்படையில், தமிழகத்தில், நிலுவையில் உள்ள பொடா வழக்குகள் என்ன ஆகும் என்று நாம் ஊகம் செய்ய இடமுண்டு. வைகோ மற்றும் எண்மர் மீதான வழக்குகளில் அடிப்படை ஆதாரம் ஏதுமில்லை என்று ஏற்கனவே மறு ஆய்வுக்குழு தெரிவித்து விட்டது. ஆனால் பொடா நீதிமன்றம் அதை ஏற்க மறுத்துத் தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக அவர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் நல்ல தீர்ப்பு விரைவில் வரக்கூடும்.

பழ. நெடுமாறன், நக்கீரன் கோபால், மக்கள் போர் இயக்கத் தோழர்கள் உள்ளிட்ட 33 பேர் மீதான வழக்குகள் குறித்து, மறுஆய்வுக் குழுவின் அறிக்கை, வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியதுதான். அதுவரை, பொடா நீதிமன்ற நடைமுறைகளுக்குத் தடைகோரி, குற்றஞ்சாற்றப்பட்டவர்கள் வழக்குத் தொடர வாய்ப்புள்ளது.

(அக்டோபர் 1 – 2004)

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com