Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
ஒகேனக்கல் மண்ணை ஒருநாளும் இழக்க மாட்டோம்
சுபவீ

காவிரி ஆற்றில் தமிழர்களுக்கு உள்ள உரிமையை எப்போதும் மறுத்துவரும் கர்நாடகம், இந்த ஆண்டு பெருமளவு தண்ணீரை அனுப்பி வைத்தற்குக் காரணம் அதன் பெருந்தன்மையோ, ஞாயத்தைப் புரிந்துகொண்ட நிலைப்பாடோ அல்ல. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் இவ்வாண்டு ஏராளமான மழை பெய்துவிட்ட காரணத்தால் தண்ணீரைத் தேக்கிக் கொள்ள வழியில்லாமல் இங்கே அனுப்பி உள்ளது. அதன் மூலம் அங்கே வெள்ளம் வராமல் தடுத்துக்கொள்வதே கர்நாடகத்தின் திட்டம்.

கிருஷ்ணசாகர் அணை என்பது மிகப்பெரிய அணை. எளிதில் அந்த அணை நிறைந்துவிடாது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைந்துள்ளது. இந்த நிலையைக் கூட அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றி, அதற்குச் சற்று முன்பு மேகதாது அணை ஒன்றைக் கட்டி விட்டால், ஒட்டுமொத்தமாகத் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வருவதைத் தடுத்துவிடலாம். இந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான் ஒகேனக்கல் சிக்கலைப் புதிதாகக் கர்நாடகம் கையில் எடுக்கிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பே ஒருமுறை இப்படியொரு முயற்சியில் கர்நாடகம் இறங்கியது. அப்போது அங்கு குண்டுராவ் முதலமைச்சராக இருந்தார். ஒகேனக்கலிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேகதாதுத் திட்டம் அமையும் என்றும், அதனை உடனடியாகத் தொடங்க இருப்பதாகவும் அவர் அறிவித்தார். அப்போதிருந்த தமிழக அமைச்சரவையும், சட்டமன்றமும் அதற்குக் கடும்எதிர்ப்பைத் தெரிவித்தன. அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று அதனை எதிர்த்தன. தமிழக மக்களிடமும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக அத்திட்டத்தை அன்று குண்டுராவ் கைவிட்டார். மீண்டும் இன்று கர்நாடகம் அதைக் கையில் எடுக்கிறது.

எந்த ஆவணங்களும் சான்றுகளும் இல்லாமல், ஒகேனக்கல் எங்களுக்கே சொந்தம் என்று கர்நாடகம் சொல்லுவது எவ்வளவு பெரிய மோசடி! பொய்யை மெய்யாக்குவதற்கு கன்னட வெறியர்களின் இயக்கங்களும், கர்நாடக அரசும் மிக விரைவாக வேலை செய்கின்றன. தங்கள் கொடியை நாட்டுவதற்கு செங்கற்களோடும், சிமெண்டோதோடும் ஒகேனக்கல் பகுதியில் அவர்கள் குவிந்திருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக மக்களும் அதுபற்றிக் கவலை ஏதுமின்றி ஆழ்ந்த நித்திரையில் மூழ்கி உள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழகத்தின் ஊடகங்களுக்குத் திரைப்பட நடிகையைப் பற்றிய செய்திதான் பெரிதாய் இருக்கிறதே தவிர, இருக்கும் மண்ணையும் இழக்கப்போகும் அவலம் பெரிதாய்ப்படவில்லை.

கர்நாடகம் ஒகேனக்கல் பகுதியைக் குறிவைப்பதற்கு வேறு சில பொருளியல் காரணங்களும் உள்ளன. ஏறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன்னால் ஒகேனக்கல் மின் உற்பத்தித் திட்டம் என ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. 25-8-1961 அன்று மத்திய நீர் மற்றும் மின்சக்திக் குழுவிற்கு, கர்நாடகத்தில் உள்ள சிம்சா மின்நிலையத்திற்குக் கீழே ஒகேனக்கல் மின் உற்பத்தி நிலையம் ஒன்றைத் தொடங்குவதற்கான திட்டத்தைத் தமிழக அரசு அனுப்பி வைத்தது.

அத்திட்டத்தின்படி காவிரியில் இரண்டு அணைகள் கட்டப்படும் முதலாவது அணை சுந்தர்பெட்டா மலையில் அமையும். அந்த அணையின் உயரம் ஆற்றுப் படுகையில் இருந்து 449 அடி ஆகும். அந்த அணையின் அடிவாரத்தில் ஒவ்வொன்றும் 100 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் 6 மின்நிலையங்கள் அமைக்கப்படும்.

இரண்டாவது அணை ஒகேனக்கலுக்கு அருகில் அமையும். இந்த அணையின் அடி வாரத்தில் ஒவ்வொன்றும் 50 மெகாவாட் உற்பத்தி செய்யும் திறன்படைத்த 4 மின்நிலையங்கள் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்பதோடு, இதனால் ஏற்படும் பயன் இரண்டு மாநிலங்களுக்கும் உரியதாக இருக்கும். நீரிலிருந்து இம்மின்சார உற்பத்தி அமைவதால், நிலக்கரி பெருமளவில் மிச்சமாகும்.

அத்திட்டத்தின்படி கட்டப்படும் இரண்டு அணைகளில் தேங்கும் நீரும், மின்சார உற்பத்திக்கு மட்டுமே அன்றி வேறு பாசன நோக்கம் எதற்கும் பயன்படக்கூடாது என்பதும் திட்டத்தின் ஒர் அங்கமாகும். இந்த அணைகள் கட்டப்படுவதால் வெள்ள அபாயமும் தடுக்கப்படுகிறது. அதனைச் சுற்றுலாப் பகுதியாக ஆக்குவதன் மூலம் அரசுக்கு வருமானமும் கிடைக்கிறது. இத்தனை நன்மைகள் கொண்ட இத்திட்டம் இன்னும் நிறைவேற்றப் படாமலேயே உள்ளது. அத்திட்டத்தை இப்போதாவது நாம் வலியுறுத்திப் பெற வேண்டும். நம்முடைய அலட்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஒகேனக்கல் பகுதியைக் கைப்பற்றுவதன் மூலம் அரசியல் பொருளியல் லாபங்களை ஈட்டுவதற்கு கர்நாடகம் முயற்சி செய்கிறது.

இது பகற் கொள்ளையைக் காட்டிலும் கொடுமையானது. தமிழகமே திரண்டெழுந்து கன்னடச் சதியை முறியடிக்க வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் அனைத்தும் இத்தருணத்தில் ஓரணியில் திரண்டு நின்று போர்க்குரல் எழுப்ப வேண்டும். ஏற்கனவே தமிழகத்தின் வளமான நிலப்பகுதி பலவற்றை நாம் இழந்து நிற்கிறோம். இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை. எல்லோர் கவனமும் இதிலே திரும்பட்டும். இயக்கங்கள் எல்லாம் ஒருங்கிணைந்து கிளம்பட்டும்.

ஒகேனக்கல் என்பது தமிழக மண். ஒருநாளும் அதை இழக்கச் சம்மதியோம்.

- அக்டோபர் 1, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com