Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
நீதிமன்றத்தை மக்கள் அவமதிக்கக் கூடாது
நீதிமன்றம் மக்களை அவமதிக்கலாமா?
சுபவீ

இந்தியாவையே நிலைகுலைய வைக்கும் அதிரடித் தீர்ப்பு ஒன்றினை அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. சுயநிதிக் கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களை நிர்வாகமும், 50 விழுக்காடு இடங்களை அரசும் நிரப்பிக் கொள்ளலாம் என்றிருந்த மரபை உச்சநீதிமன்றம் அடித்துத் தகர்த்துள்ளது. சுயநிதிக் கல்லூரி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடற்ற உரிமை அளித்துள்ள உச்ச நீதிமன்றம், இனிமேல் அனைத்து இடங்களையும் அரசின் குறுக்கீடின்றி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இத்தீர்ப்பின் மூலம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்து வகுப்பினரும் தங்களின் இடஒதுக்கீட்டு உரிமையை இழந்து நிற்கின்றனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு, நாடு முழுவதும் ஒரு பெரும் விவாதத்தை உருவாக்கி உள்ளது. அதன் எதிரொலி நாடாளுமன்றத்திலும் கேட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டை ஆள்பவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களா அல்லது உச்சநீதி மன்ற நீதிபதிகளா என்பதே இன்று எங்கும் கேட்கும் குரலாக உள்ளது.

அரசியல் சட்டத்தை, வழிகாட்டும் நெறிமுறைகளை ஆக்குவதற்கும், திருத்துவதற்கும் முழு உரிமை பெற்ற அவை நாடாளுமன்றமே ஆகும். நடைமுறையில் உள்ள சட்டத்திற்கும், நெறிமுறைகளுக்கும் ஏற்ப அரசும், மக்களும் நடக்கின்றனரா என்று நடுநிலையோடு ஆராய்ந்து தீர்ப்பளிக்கும் உரிமையே நீதிமன்றங்களிடம் உள்ளது. சுருங்கச் சொன்னால், சட்டத்தை ஆக்குவது நாடாளுமன்றமாகவும், அதனை விளக்குவதும், சரிபார்ப்பதும் நீதிமன்றமாகவும் இருக்க வேண்டும் என்பதே நடைமுறை.

நீதிமன்றங்கள் சட்டத்தை உருவாக்கும் அவைகளாகத் தங்களை அடிக்கடி நினைத்துக் கொள்கின்றன. அதனால்தான் இப்படிப்பட்ட மோதல்கள் எழுகின்றன. ஏழு நீதிபதிளைக் கொண்ட உச்சநீதிமன்றம் இப்போது இப்படி ஒரு தீர்ப்பு வழங்கியிருப்பதோடு நிற்காமல், தங்கள் தீர்ப்பை நாடாளுமன்றம் விமர்ச்சிக்குமானால், நீதிமன்றங்களை மூடிவிட்டுப் போய்விடுங்கள் என்றும் கூறியுள்ளது. நினைத்தால் திறப்பதற்கும், கோபம் வந்தால் மூடிவிட்டுப் போவதற்கும், நீதிமன்றங்கள் எவருடைய சொந்தக் கடைகளும் அல்ல.

நீதிமன்றங்களை மக்கள் அவமதிக்கக் கூடாது என்பது சரிதான். நீதிமன்றங்களும் மக்களை அவமதிக்கக்கூடாது. நூற்றுக்கு எண்பது பேருக்கு மேலாக இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று கூறும் உச்சநீதிமன்றம், வெளிநாட்டில் வாழும் இந்தியரின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று கூறுகிறது. இந்த நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்துப் பட்டம் பெற்று, வெளிநாடுகளுக்குச் சென்று வசதி வாய்ப்போடு வாழ்பவர்களின் பிள்ளைகளுக்கு இங்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதும், இந்த மண்ணிலேயே உழைத்து உழைத்து ஓடாய்ப் போய், சாதிய அடிப்படையிலும், பொருளியல் அடிப்படையிலும் நொறுக்கப்பட்டுக் கிடக்கும் மக்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்பதும் மிகப் பெரிய சமூக அநீதி இல்லையா? இந்த அநீதியை, நீதிமன்றம் பரிந்துரைக்கலாமா?

அரை நூற்றாண்டுக்கு முன்பாகவும் இப்படியொரு அநீதி அரங்கேறியது. 1950 ஆம் ஆண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், இரண்டு பார்ப்பனர்கள் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். சண்பகம் துரைசாமி, சி.ஆர்.சீனிவாசன் என்னும் இரு பார்ப்பனர்கள், முறையே மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் இட ஒதுக்கீட்டு முறை காரணமாகத் தாங்கள் வாய்ப்பை இழந்துவிட்டதாக உயர்நீதி மன்றம் சென்றனர். அவர்களுக்காக அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், வி.வி.சீனிவாச அய்யங்கார் என்னும் இரு பார்ப்பன வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடினர்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவர் என்பதை நாடறியும். வி.வி.சீனிவாச அய்யங்காரோ, அப்போது ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி. எந்தப் பதவியிலிருந்தாலும் தங்கள் சாதிக்கு ஒரு தீங்கென்றால் கீழிறங்கிவர அவர்கள் தயங்குவதில்லை. அந்த வழக்கை, நீதிபதிகள் இராசமன்னார், விசுவநாத சாஸ்திரி, சோமசுந்தரம் ஆகியோரைக் கொண்ட நீதிமன்றம் விசாரணை செய்து, 1950 சூலையில் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் இடஒதுக்கீட்டு முறை செல்லாது என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.

குறிப்பாக, நீதிபதி விஸ்வநாத சாஸ்திரி தன் தீர்ப்பில், இட ஒதுக்கீட்டு முறையால் பார்ப்பன மாணவர்கள் எவ்வளவு இழப்பீட்டுக்கு உள்ளாகக்கூடும் என்பதைப் பல புள்ளி விவரங்களோடு விளக்கியிருந்தார். காலகாலமாகச் சமூக அடுக்கின் மேல்தளத்தில் அமர்ந்திருந்தவர்களால், அதில் ஒரு சறுக்கல் ஏற்படுவதைக் கூடச் சகித்துக் கொள்ள முடியவில்லை. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இனி ஏழை எளிய மக்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லையென்று எல்லோரும் மனம் நொந்திருந்த நேரத்தில்தான், சிங்கமெனச் சீறியெழுந்தார் தந்தை பெரியார்.

சட்டத்தில் இடம் இல்லையென்றால் என்ன செய்வது என்று பலரும் கேட்டபோது, சட்டத்திற்காக மக்கள் இல்லை, மக்களுக்காகத்தான் சட்டம் என்று கூறி, சட்டத்தைத் திருத்து என்னும் முழக்கத்தை முன்னெடுத்தார் பெரியார். அவர் பற்றவைத்த நெருப்பு பற்றிக்கொண்டது. ஒடுக்கப்பட்ட மக்கள், மாணவர்கள் கொதித்தெழுந்து களம் கண்டனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராசர் தில்லி சென்று தலைமை அமைச்சர் நேருவைச் சந்தித்துச் சட்டத்தைத் திருத்தியே ஆகவேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை எடுத்துரைத்தார். அதன் பின்பே அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் அன்று ஏற்பட்டது.

அரசியல் சட்டத்தின் 15ஆவது பிரிவில், 4ஆவது உட்பிரிவு புதிதாகச் சேர்க்கப்பட்டது. தமிழகத்தில் மூண்டெழுந்த போராட்டக் கனலின் விளைவாகவே, இத்திருத்தம் கொண்டுவரப்படுவதாக நாடாளுமன்றத்திலேயே நேரு அறிவித்தார். இவ்வாறு தந்தை பெரியாரும், காமராசரும், தமிழக மக்களும் போராடிப் பெற்ற இடஒதுக்கீட்டு உரிமையை, இப்போது மட்டுமல்ல, நாம் எப்போதும் இழக்க முடியாது. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இன்று அனைத்துக் கட்சிகளும் தங்கள் குரலை உயர்த்தி உள்ளன. நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் கட்சிகளும், இயக்கங்களும் ஆர்ப்பாட்டம், மறியல் என்று களம் கண்டுள்ளன. கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து, தெருவிற்கு வந்துள்ளனர். தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டுமென்று, தமிழக, கேரள, ஆந்திர அரசுகள் மேல்முறையீடு செய்ய முடிவெடுத்துள்ளன.

சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தொண்டு நிறுவனங்கள் அல்ல. அவற்றுள் பல கல்விக் கொள்ளை புரிந்துகொண்டிருப்பதை இயல்பான மக்கள் கூட அறிவர். இப்போது மேலும் மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் கட்டற்ற உரிமைகள், கல்வி இனிமேல் மேட்டுக்குடியினருக்குத்தான் என்று ஆக்கிவிடும்.

தந்தை பெரியாரும், பெருந்தலைவர் காமராசரும், கல்வி அதிகாரியாக இருந்த சுந்தரவடிவேலனாரும் காலமெல்லாம் சிந்தித்துக் கொண்டு வந்த இடஒதுக்கீட்டு முறையை நம் சமூகம் இழந்துவிடக் கூடாது. இன்னல்கள் ஏற்போம், எந்த விலையும் கொடுப்போம், இடஒதுக்கீட்டு உரிமையை எந்நாளும் இழக்க மாட்டோம் என்ற உறுதியை நாடு ஏற்கட்டும்.

- செப்டம்பர் 1, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com