Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கலிலியோ கலிலி
சுபவீ

கலகக்காரர் தோழர் பெரியார் நாடகத்தை அடுத்து பேராசிரியர் மு.இராமசாமியின் நெறியாள்கையில் உருவாகியுள்ள நாடகம்தான் ‘கலிலியோ கலிலி'.

அறிவியலுக்கும் மதத்திற்கும் இடையே 17ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற போராட்டமே இந்நாடகத்தின் கரு. அரசியல் ஆதிக்கத்தின் இடையீடும் மிக நுட்பமாக நாடகத்துள் இழையோடுகிறது. பூமியை மையமாய்க் கொண்டே கதிரவன் உட்பட அனைத்தும் சுழல்கின்றன என்னும் பூமி மையக் கொள்கையே 16ஆம் நூற்றாண்டு வரையில் உலகின் அறிவியல் கொள்கையாக இருந்தது. முதன்முதலாக அதற்கு மாற்று அறிவியல் கொள்கையான கதிர் மையக் கொள்கையை அறிவித்தவர் கோப்பர்நிக்கஸ் என்னும் இயற்பியல் அறிஞர். அவர் கொள்கையை வழிமொழிந்தவர் புருனோ. மதக் கொள்கைக்கு எதிராக கருத்து தெரிவிக்கின்றனர் என்று கூறி இருவரையும் அன்றைய மதமும் ஆட்சியும் கொன்றுவிட்டன. முதலாமவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டார். இரண்டாமவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

இருவரையும் தொடர்ந்து, அந்தக் கொள்கையை மேலும் சான்றுகளுடன் மெய்ப்பிக்க முற்பட்ட அறிவியல் அறிஞர்தான் கலிலியோ. அவர் பாதை எவ்வளவு துயரம் நிறைந்தது என்பதை உணர்ந்த அவரது சீடர்கள் கொண்ட மனஉளைச்சல் நாடகத்தில் மிகநன்றாய் உருப்பெற்றுள்ளது. "நாங்கள் அறிவியல் உண்மையை நேசிக்கிறோம், ஆனாலும் அதைக்காட்டிலும் கூடுதலாக உன்னை நேசிக்கிறோம் கலிலியோ'' என்று கூறி அவர் சீடர் ஒருவர் கண்கலங்கும் காட்சி நம்மையும் கண்கலங்க வைக்கிறது.

காட்சிகளோடும், பாத்திரங்களோடும் பார்வையாளர்களை ஒன்றிவிடச் செய்தல் வேண்டும் என்னும் கருத்தை ஏற்காமல், நாடகத்தின் கருவோடு மட்டுமே அவர்களை ஒன்ற வைக்கும் உத்திகளை நாடகத்தில் காண முடிகிறது. கலிலியோ பாத்திரத்தையே ஒவ்வொரு காட்சியிலும் ஒவ்வொரு நடிகர்கள் ஏற்று நடிக்கின்றனர். எனவே எந்த ஒரு நடிகருக்குப் பின்னும் நாம் செல்லாமல் கலிலியோவுக்குப் பின்னால் மட்டுமே சென்று கொண்டு இருப்பதை உணர முடிகிறது. ஆனாலும் ஆந்திரேயாவாக நடிக்கும் அந்த சிறுவனையும், அவனுடைய மிக இயல்பான நடிப்பையும் நம்மால் மறக்க முடியவில்லை. அவனுடைய தாயாராக நடிக்கும் ஒரு ஆணும், அசல் பெண்ணாகவே நமக்குக் காட்சியளிக்கிறார்.

கலிலியோவின் கண்டுபிடிப்புகள் இத்தாலி நாட்டின் எல்லையைத் தாண்டும் இறுதிக் காட்சியில், ஒரு மெழுகுவர்த்தியிலிருந்து பல மெழுகுவர்த்திகளுக்கு வெளிச்சம் பரவுவதும், நாடக நடிகர்கள் மட்டுமின்றிப் பார்வையாளர்களும் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தி நிற்பதும் இறுக்கமாக உள்ளது, நெகிழ்வாகவும் உள்ளது.

பெரியாரைத் தொடர்ந்து கலிலியோவைக் களத்திற்குக் கொண்டு வந்திருக்கும் நாடகப் பேராசிரியர் மு.இராமசாமிக்கு அறிவுலகம் நன்றிக் கடன்பட்டுள்ளது.

நீலம்

பிரான்சு நாட்டில் நடைபெற்ற உலகத் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்ட குறும்படம் ‘நீலம்'. 10 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படத்தை இயக்கியுள்ளவர் பாவலர் அறிவுமதி. படத்தின் நடிகர்கள் இரண்டே பேர்தான். ஒருவர் ஒளி ஓவியர் தங்கர் பச்சானின் மகன் அரவிந்தப் பச்சான். இன்னொருவர் கடல்.

ஆழிப்பேரலையால் கடல் கொண்ட பகுதிகளில் மக்களின் சோகம் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்பதை இப்படம் உணர்த்துகிறது. "ஒரு நிமிடம் அலை எழுந்து மறு நிமிடம் வடிந்தது, எங்கள் ஊர் அழகும், உறவழகும் ஒரு நொடியில் முடிந்தது'' என்று அறிவுமதியே எழுதியுள்ளது போல அழகிழந்த கடற்கரையை அழகாகக் காட்டியுள்ளது இக்குறும்படம்.

அரைக்கால் சட்டை மட்டும் அணிந்த ஒரு சிறுவன் கடல் நோக்கி நடந்து வருகிறான். கடலுக்கு அருகில் வந்து அந்தக் கடலையே வெறித்து வெறித்துப் பார்க்கிறான். அப்போது கடலுக்குள்ளிருந்து வெளியே ஓடிவரும் சில நண்டுகளில் ஒன்றைத் தன் கைகளில் பிடித்து அதனிடம் பேசுகிறான். அவன் பேச்சு முடிந்து கீழே மயங்கி விழும்போது படம் நிறைவு பெறுகிறது.

கையிலேந்திய நண்டிடம் அவன் என்ன பேசினான் என்பதே கதை. அவன் பேசும் அந்த வரிகள் படம் பார்ப்பவர்களின் கண்களையும் நெஞ்சையும் கலங்க வைக்கிறது. கடலையே தம் தாயாய், கடலையே தம் வாழ்வாய்க் கருதி வாழும் ஒரு சமூகம் கடலினாலேயே காவு வாங்கப்பட்ட கடும் துயரம் அந்தப் படத்தில் அப்படியே பதிவாகியிருக்கிறது.

இயக்குநர் அறிவுமதியும், ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சானும் உயிரோவியமாக அப்படத்தை வடித்துத் தந்திருக்கின்றனர். அந்தச் சிறுவன் அரவிந்தனின் முகத்தில் அப்பிக் கிடக்கும் சோகம் நம்மை அப்படியே ஆட்கொள்கிறது.

நீலம் வெறும் நிறமன்று. நீலநிறக் கடலோர மக்களின் வாழ்வையும், சிதைவையும் தன்னுள் அடக்கிக் கொண்ட ஒரு பதிவு.

- சூன் 16, 2005

(இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்)



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com