Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழ்நாட்டில் புளுகிய சிங்கள அமைச்சர்கள்

மறவன்புலவு க.சச்சிதானந்தன்

சனவரி 21ஆம் தேதி மாலை 4 மணிக்கு, சென்னையில் செய்தியாளர்களை இலங்கை அமைச்சர்களான தியு. குணசேகரா திசா விதாரணர் ஆகியோர் சந்தித்தனர். இந்தக் கூட்டத்தில் தென்செய்தியின் சார்பில் கலந்து கொண்ட மறவன்புலவு க.சச்சிதானந்தன் அளித்துள்ள செய்திக் கருத்துரையைக் கீழேத் தந்துள்ளோம்.
இலங்கையில் நடப்பவைத் தொடர்பாக இந்தியாவில் வெளிவரும் தவறான செய்திகள் தங்களுக்கு மிக வருத்தம் அளிப்பதாகவும், இலங்கை அரசின் நிலைப்பாட்டை எடுத்துக் கூறத் தாங்கள் வந்திருப்பதாகவும் அவர்கள் கூறினர். இவர்களில் திசாவிதாரணர் இலங்கை சமசமாசக் கட்சியைச் சேர்ந்தவர். தியு. குணசேகரா இலங்கை கம்யூனிச கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.

இருவருமே முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சிங்களமும் தமிழும் ஆட்சி மொழிகளாக வேண்டும் என்று இலங்கை சமசமாசக் கட்சி 70 ஆண்டு காலமாகப் போராடி வந்திருப்பதாக திசாவிதாரணர் அப்பட்டமான பொய்யைக் கூறினார்.

உண்மை என்னவென்றால் இலங்கை சமசமாசக் கட்சியின் தலைவர்களான என்.எம்.பெரைரா கொல்வின் ஆர்.த. சில்வா ஆகியோர் சிறிமாவோ பிரதமராக இருந்த போது 1972ஆம் ஆண்டு அரசியலமைப்பை வரைந்து கொடுத்தவர்கள். புத்த மதத்திற்கு முதலிடம், சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி, ஒற்றை ஆட்சி அரசமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தமிழர்களை அன்னியப்படுத்திய கட்சி சமசமாசக் கட்சி என்ற உண்மையை தமிழகப் பத்திரிகையாளர்கள் அறிய மாட்டார்கள் என்ற காரணத்தினால் மேற்கண்டவாறு கூறினார்.

அடுத்து திசாவிதாரணர் மற்றும் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டார். இலங்கையின் வடகிழக்கு மாநிலத்தின் மக்கள் தொகையில் 53% தமிழ் மக்கள் இன்று சிங்கள மக்களிடையே வாழ்கின்றனர். இலங்கையின் மொத்தத் தமிழருள் 61% தமிழ் மக்கள் சிங்களரிடையே வாழ்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறையேனும் சிங்களர்கள் அவர்களைத் தாக்கவில்லை. கொழும்பில் நடைபெறும் தேடுதல் வேட்டைகள் புதிதல்ல. எல்லாஅரசுகளும் செய்ததையே நாமும் செய்கிறோம்’’.

1981ஆம் ஆண்டிற்குப் பிறகு எவ்விதக் கணக்கெடுப்பும் வடகிழக்கு மாநிலத்தில் எடுக்கப்படவில்லை. 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக வெளியேறி இந்தியா உள்பட உலக நாடுகளுக்குக் குடிபெயர்ந்தார்கள். இந்த நிலைமையில் 53% தமிழர்கள் என்ற மதிப்பீட்டை இவர் எப்படிக் கூறினார் என்ற கேள்வி எழுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஓருமுறையேனும் தமிழர்களை சிங்களர் தாக்கவில்லை என கூசாமல் கூறியுள்ளார். 1999ஆம் ஆண்டு மலையகத்தில் ஒரு சிறையில் அடைபட்டிருந்த தமிழர்களில் 45 பேரை புலிகளென பொய்யான குற்றம் சாட்டி சிங்கள வெறியர்கள் வெட்டிக் கொன்றார்கள். இதைப் போன்ற பல நிகழ்வுகளை அடியோடு மறைத்து, பத்திரிகையாளர்களை ஏமாற்றுவதற்கு அவர் முயன்றார்.

2002ஆம் பிப்ரவரியில் பிரதமர் ரணில் கையெழுத்திட்ட போர் உடன்பாடு, அதிபர் சந்திரிகாவிற்கு தெரியாமலும் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களுக்குத் தெரியாமலும் செய்துகொள்ளப்பட்ட உடன்பாடு எனவே அந்த உடன்பாட்டில் மன நிறைவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவர் சொல்வது உண்மையானால் அதிபரான சந்திரிகா அந்த உடன்பாட்டை ஏற்க மறுத்திருக்க வேண்டும். மூன்று ஆண்டுகாலமாக சந்திரிகாவோ வேறு யாருமோ இவ்வாறு குற்றம் சாட்டியதில்லை. சந்திரிகா பதவி விலகியப் பிறகு, இவ்வாறு கூறுவது நிகைப்பிற்கிடமானது.

யாழ்ப்பாணத்தில் 17.12.2005 அன்று, தர்சினி என்ற இளம்பெண் சிங்களக் கடற்படையினரால் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட நிகழ்ச்சியை அமைச்சர் திசாவிதாரணர் முற்றிலுமாக மறுத்து, திசை திருப்பும் வகையில் பொய்யுரைக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடந்த பாலியல் வன்முறைத் தொடர்பாக தவறானச் செய்திகள் வந்துள்ளன. அந்தப் பெண் வழமையான பாலியல் தொழிலாளி, படைவீரர்களுக்குச் சேவை செய்தவர், இந்தக் கொலைக்கும் படைகளுக்கும் தொடர்பே இல்லை.

தமிழ்க் குடும்பப் பெண்ணான தர்சினியை பாலியல் தொழிலாளி என திசாவிதாரணர் கொச்சைப் படுத்தியுள்ளார். சிங்கள அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மனித உரிமைக்கான யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குடும்பப் பெண்ணை சிங்களப்படையினர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கிக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டியுள்ளது. கொஞ்சமும் நாக்கூசாமல் பெரும் பொய்யை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஒருவர் கூறுவது, மிக இழிவானதாகும்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மாணவர் பேரணிக்குத் தலைமை தாங்குமாறு துணைவேந்தரைக் கட்டாயப்படுத்தினர் தாமாக விரும்பி துணைவேந்தரோ பேராசிரியர்களோ போகவில்லை. படை முகாமில் இருந்த வீரர் ஒருவர் கழுத்தில் மாணவர் கயிறு கட்டி இழுத்தனர். படைவீரரிடம் தோட்டாக்களே இல்லை. வெறும் துப்பாக்கிகளே உள்ளன. இது மகிந்தாவின் ஆணை யாரும் சுடவில்லை’’. என்று திசாவிதாரணர் கூறியுள்ளார்.

ஆனால் பல்கலைக்கழக விரிவுரையாளர் பாக்கிய நாதன் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றும் பலருக்கும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. துணைவேந்தர் உள்பட பல பேராசிரியர்களையும், மாணவர்களையும் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து சிங்கள வீரர்கள் தாக்கினார்கள். இந்தச் செய்தி அனைத்தையும் சிங்களப் பத்திரிகைகளும் சர்வதேச பத்திரிகைகளும் வெளியிட்டுள்ளன. தமிழ்நாட்டு பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வெளிவந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கே வந்து பொய்யான செய்திகளை பரப்பும் துணிவு சிங்கள அமைச்சருக்கு இருக்கிறது.
தேவாலயத்தில் கிறித்துமா நாளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசிங்கத்தை சுட்டால் உலக கிறித்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் விடுதலைப்புலிகளே இக்கொலையை செய்தனர் என கோயபல்உபாணியில் திசாவிதாரணர் புளுகி உள்ளார். இக்கொலைக்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதையும் எதற்காக இந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதையும் தமிழீழ மக்கள் நன்கறிவார்கள். அங்கே புளுக முடியாததை தமிழ்நாட்டிற்கு வந்து புளுகும் துணிவு அவருக்கு இருக்கிறது என்பதுதான் அம்பலமாகியிருக்கிறது.

நாடாளுமன்றத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் நடந்து கொள்ளும் முறை மிகக் கேவலமானது. கையைக் காட்டி மிரட்டுகிறார்கள். நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தடை செய்கிறார்கள். சபாநாயகரை உள்ளே வரவிடாமல் தடுத்தார்கள் என்று அடுக்கடுக்கான பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் கூறியுள்ளார். இலங்கையின் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினரான ஈழவேந்தன் பேசிய போது அவரைத் தாக்குவதற்கு சிங்கள உறுப்பினர்கள் செய்த முயற்சியை அவர் அடியோடு மறைத்தார். அதுமட்டுமல்ல புத்த பிக்கு ஒருவரின் உடையைக் கிழித்துத் தாக்கி அவமானப்படுத்தியவர்கள் சிங்களர்கள்தான் என்பதை மறைத்தார். இன்னமும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்விதப் பாதுகாப்பும் இல்லை என்கிற நிலையில்தான் அவர்கள் உள்ளார்கள். இப்படி இருக்கும்போது அவர்கள் நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று சொல்வது நம்பக்கூடிய பொய்யாக இல்லை.

தமிழ்நாட்டு உள்ள அரசியல் கட்சிகள் இலங்கை அதிபர் மகிந்த இராசபக்சேயின் சென்னைப் பயணத்தை எதிர்வரும் தேர்தலை மனதில் கொண்டு தடுத்துவிட்டனர். ஈழத்தமிழர்களின் சிக்கலை தமது தேர்தல் களத்தில் பயன்படுத்தி வாக்கு கேட்பது தமிழக அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாகிவிட்டது. மகிந்தாவிற்கு தமிழ்நாட்டுக்கு வர பெரும் விருப்பம் இருந்தது, தமிழகத்தில் தேர்தல் வருவதால், அவரைத் தமிழகம் வரவேற்கவில்லை. என்று விதாரணர் விளக்கியுள்ளார்.

சென்னைக்கு வந்து தமிழக முதலமைச்சர் செல்வி செயலலிதாவைச் சந்திப்பதன் மூலம் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான உணர்வை வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையுடன்தான் மகிந்த ராசபக்சே தமிழ்நாட்டுப் பயணத்திட்டத்தை வகுத்தார். ஆனால் இராசபக்சேவிற்கு எதிராக தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பின் விளைவாக தமிழக முதலமைச்சர் அவரைச் சந்திக்க மறுத்து விட்டார். ஒரு நாட்டின் அதிபரை ஒரு மாநில முதலமைச்சர் சந்திக்க மறுத்ததால் ஏற்பட்ட அவமானத்தை மூடிமறைக்க விதாரணர் இவ்வாறு கூறியுள்ளார்.

நார்வேயை அழைக்குமாறு சிங்களக்கட்சிகள் கருத்தொருமித்து கூறின, அதன் விளைவாகத்தான் நார்வே சமரசத் தூதை மேற்கொண்டது என்று அவர் உண்மையை அடியோடு மறைத்து கூறியுள்ளார்.
மூன்றாம் நாட்டின் முன்னிலையில்தான் சிங்கள அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவோம் என புலிகள் திட்டவட்டமான நிபந்தனை விதித்தார்கள் ஆனால் எந்த வெளிநாட்டின் தலையீடையும் அனுமதிக்க முடியாது என அதிபராக இருந்த சந்திரிகா கூறினார். சர்வதேச நாடுகளில் நிர்பந்தத்தின் பேரில் நார்வேயை சமரசத் தூதராக ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது சிங்கள தீவிரவாத கட்சிகள் நார்வே தூதர் அலுவலகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்பாட்டம் செய்தன. நார்வே கொடியைக் கொளுத்தினார்கள். இப்போதைய அதிபரான மகிந்த ராசபக்சே இனி நார்வே சமரசம் தேவையில்லை எனக்கூறி இந்தியாவை சமரசம் செய்யும்படி அழைத்தார். இதெல்லாம் ஊடகங்களில் அவ்வப்போது வெளியான உண்மையான செய்திகள். ஆனால் தமிழ்நாட்டு பத்திரிகையாளர்களை ஏதும் அறியாதவர்கள் என நினைத்து இரண்டு அமைச்சர்களும் மாறி மாறி புளுகியதைப் பார்த்து வெறுத்துப் போன பத்திரிகையாளர்கள் கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com