Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

காங்கிரஸ் சூரர்களும் வீசப்படாத செருப்புகளும்
பொன்னிலா

யார் சொல்லியும் கேட்காத ராஜபட்சே தமிழக முதல்வர் கருணாநிதி இருந்த ஆறு மணி நேர உண்ணாவிரத்தைப் பார்த்து பயந்து போய் போரை நிறுத்திவிட்டார். பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை அதிபரிடம் பேசி போரை நிறுத்திவிட்டார். அங்கு பூரண அமைதி நிலவுகிறது. அல்லது பெரு மழைக்குப் பிந்தைய தூறல்தான் அங்கே என்று தொடர்ந்து பேசி வருகிறார்கள் திமுகவினரும் காங்கிரஸ்காரர்களும். மழை என்றால் மரணத்தின் எண்ணிக்கை எவ்வளவு, தூறல் என்றால் இனப்படுகொலையின் எண்ணிக்கை எவ்வளவு என்று நாம்தான் தினம்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அன்றாடம் விழுகிற பிணங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

Sonia and Karunanidhi கொல்லப்படுபவர்கள் எல்லாம் புலிகள் பொது மக்கள் அல்ல என்றுதான் காங்கிரஸ்காரன் சொல்கிறான். ஆனால் இந்தியாவின் துணையோடு ஈழத்து மக்களை மட்டுமல்ல புலிகளைக் கொன்றாலும் அது இனப்படுகொலையே என்பதுதான் தமிழக மக்களின் உணர்வு. நாம் அதைத்தான் பேசுகிறோம். மக்களின் கொலைகளுக்காக புலிகளை அழித்தொழிப்பதற்காக, இன்றைக்கு தமிழகத்தில் போர் நடக்கிறது. அங்கே ராஜபட்சே தமிழ் மக்களைக் கொல்கிறான் என்று சொன்னாலே அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது. அப்படித்தான் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பேசுகிறார்கள். அதனால் அவர்கள் மீது இத்தனை ஒடுக்குமுறை. நள்ளிரவில் புகுந்து பெண்களை ஆபாச வசவுகளால் திட்டி அடித்து உதைத்து இழுத்துச் சென்று சிறையில் தள்ளியிருக்கிறார் கருணாநிதி. இந்தியாவின் வேறு எந்த மாநில முதல்வரும் செய்யாத ஒரே சாதனை தள்ளுவண்டியில் வந்ததுதான். இவர் தன் உடல் பலவீனத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார். தனக்கு வாக்களித்த மக்களை செயல்படா முதல்வராக இருந்து மோசடி செய்கிறார். ஆனால் கொடிய அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டு தங்களின் அரசியல் எதிர்ப்பாளர்களை ஈவிரக்கமற்ற முறையில் சட்டத்திற்குப் புறம்பாக தண்டித்து வரும் கருணாநிதியின் மீது சிறிதளவேனும் கருணை காட்ட இடமில்லாமல் போய் விட்டது.

ஒட்டு மொத்தமாக காங்கிரஸ் திமுக மீது தோன்றியுள்ள வெறுப்பை தேர்தலில் அறுவடை செய்யப் போகும் அதிமுகவோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையோ இந்தக் கைதுகளுக்காகவும் வழக்கம் போல் குரல் கொடுக்கவில்லை. சீமான் கைது செய்யப்பட்டபோது இவர்கள் என்ன விதமான மௌனம் காத்தார்களோ அதே மௌனத்தை இப்போதும் காக்கிறார்கள். பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் இன்றைய போராட்டத்தில் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஈழத்துக்காக நாங்கள் போராட மாட்டோம். ஆனால் ஓட்டு மட்டும் பொறுக்கி பதவி அரசியலுக்கு வருவோம் என்று நினைக்கிற ஜெயலலிதாவையும் கண்டு நாளை ஏமாறப் போவது தமிழினம். அதுதான் கருணாநியின் பலம்.

இன்றைக்கு சில நண்பர்கள் இலங்கைப் போரில் இந்திய காங்கிரஸ் கட்சிதான் ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது. அதில் மாநில திமுகவிற்கு ஒரு பங்கும் இல்லை என்பது போல பேசி வருகிறார்கள். இலங்கை இனப்படுகொலையில் மத்திய அரசின் பங்கையும் மாநில அரசின் செயல்படா தன்மையின் துரோகத்தையும் தோலுரிக்கும் பெரியார் திக தோழர்களுக்கு மட்டும் கடும் தண்டனை. விளைவு கொதிப்பு உயர்ந்து இன்று தமிழகம் முழுக்க காங்கிரஸ் திமுக வேட்பாளர்களுக்கு மக்களிடமே கடும் எதிர்ப்பு இருக்கிறது. பல இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஊருக்குள் நுழைய விடாமல் மக்கள் தடுக்க அவர்களுக்காக வக்காலத்து வாங்கச் சென்றது விடுதலைச் சிறுத்தைகள். திமுக கூட்டணியில் இன்று இருக்கும் ஒரே ஆறுதல் திருமாவளவன் மட்டும்தான். ஆனால் இயல்பான மக்கள் எதிர்ப்பு ஒரு பக்கம் என்றால் தங்களுக்கு எதிராக யாரும் தேர்தல் வேலை பார்க்கக் கூடாது யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது என்கிற அடக்குமுறையின் உச்ச வடிவமாக இந்த தேர்தல் மாறியிருக்கிறது.

சிவகங்கையில் ப. சிதம்பரத்தை எதிர்த்து ஈழ ஆதரவாளர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். சிதம்பரமும் அவரது வாரிசு கார்த்திக் சிதம்பரமும் அவரது அல்லக்கை அடியாட்களும் வேட்பாளர் ராஜீவ்காந்தியையும் அவருக்கு ஆதரவாக பணியாற்றும் நண்பர்களையும் அன்றாடம் துரத்தித் துரத்தி தாக்குகிறார்கள். தேர்தல் முடியும் வரை அவர்களை சிறையிலடைக்க முயற்ச்சிக்கிறார்கள். அதாவது எவனும் தங்களுக்கு எதிராக வேலை செய்யக் கூடாது பேசக் கூடாது என்றால் எதற்குத்தான் ஓட்டுப் பொறுக்க வேண்டும்? பேசாமல் காங்கிரஸ் வேட்பாளரெல்லாம் வெற்றி என்று அறிவித்து விட்டுப் போக வேண்டியதுதானே!

உண்மையில் இன்று தமிழர்களைப் பார்த்து ஒவ்வொரு காங்கிரஸ்காரனும் அஞ்சி நடுங்கும் சூழலுக்கு வந்திருக்கிறான். எப்படி என்றால் சோனியாகாந்தியின் வருகைக்காக சென்னை தீவுத் திடலில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டதல்லவா? அதில் சோனியா நிற்கும் மேடைக்கும் பார்வையாளர்கள் அமரும் தூரத்தையும் எப்படி அளவிட்டார்கள் தெரியுமா? பந்தல் அமைக்கும் தொழிலாளர்கள் சிலரை அழைத்து ஒவ்வொருவரையும் பல கோணங்களில் நிறுத்தி செருப்பை சோனியாகாந்தி, கருணாநிதி நிற்கும் இடத்தை நோக்கி வீச வைத்து அந்த தூரத்தை அளந்து அதன்படியே மேடை அமைக்கப்பட்டதாம்.

தங்கள் மீது செருப்பு வீசப்படும் என்று பயப்படுகிறவர்கள் அதற்கு தங்களை தகுதியுள்ளவர்களாக ஆக்கிக் கொள்ளாமல் இருந்து தொலைக்க வேண்டியதுதானே? ஆனால் அப்படி அல்ல. வயலார் ரவியும், குலாம் நபி ஆசாத்தும், வீரப்ப மொய்லியும் தமிழ் மக்களை கேணப்பயல்களாக நினைக்கிறார்கள். ஆனால் செருப்பை வீசி அளவை எடுத்தது மட்டும்தான் தமிழர்களுக்கு கிடைத்துள்ள தக்க மரியாதை. இதைத் தொடர்ந்து பேணுவதன் மூலமே தமிழகம் இந்தியாவின் ஏனைய சமூகங்களை விட தலை நிமிர்ந்து வாழ முடியும். காங்கிரஸ் கட்சிக்கு முடிவு கட்டுவோம். தோழர்கள் மீதான ஒடுக்குமுறைக்காக குரல் கொடுப்போம்.

- பொன்னிலா ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com