Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

அமெரிக்கப் பசி
முத்துக்கிருஷ்ணன்


கஞ்சித் தொட்டிகளின் முன்னால் கூட்டம் கூட்டமாக மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். கூட்டம் அதிகமாக அவர்களை சமாளிப்பது எப்படி என்று அந்த மையத்தின் நிர்வாகிகள் தலையைச் சொறிந்தபடி புகைத்துக் கொண்டிருக்கிறார்கள். புகையின் சாம்பல் நிறம் அந்த வெளி எங்கும் பரவுகிறது. சாம்பல் நிறத்தின் சோகம் கவிய அந்த முகங்கள் பசியின் கோர ரேகைகளை சுமந்து நிற்கிறது. பசிதான் உலகின் பெரும்பகுதி ஜனத் திரளை வதைக்குள்ளாக்கும் சீற்றம்.

America people in hungry கால் கடுக்க நிற்பவர்களில் பல முதியவர்கள் மயங்கி விழுகிறார்கள். அவர்கள் முகத்தில் தண்ணீரைத் தெளித்து சட்டைப் பைகளை துளாவி முகவரியைத் தேடுகிறார்கள். இவர் இந்தத் தெருவில் வசிப்பவர், அந்தத் தெருவில் வசிப்பவர் என யூகங்கள் குறுக்கும் நெடுக்குமாக அந்த நகரத்தை வலம் வருகிறது. அதற்குள் அந்த முதியவர்க்கு நினைவு திரும்பி விடுகிறது. தனக்கு யாரும் இல்லை தனியாகத்தான் வாழ்வதாக அவர் கூறுகிறார். மேலும் நகைத்தபடி இதுபோல் என்றாவது ஒருநாள் தான் விழுந்து மரித்தால் சுற்றி இருப்பவர்களை அடக்கம் செய்திடும்படி கேட்டுக் கொண்டார். ராணுவத்தில் பணியாற்றிய அவரின் சேமிப்புகள் எல்லாம் என்னவாயிற்று. காலமெல்லாம் உழைத்த அவரை வாழ்க்கை இந்த கஞ்சித் தொட்டி முன்னால் வீசி எறிந்து விட்டது. வாழ்க்கைதான் வீசியதா? இல்லை, அந்த நாட்டை ஆளும் அரசாங்கத்தின் தொடர் கொள்கைகள் தான் இந்த முதியவர் மட்டுமின்றி பசியால் வாடும் இந்த ஜனத்திரளின் நிலைக்குப் பொறுப்பு.

நீண்டு செல்லும் இந்த வரிசையில் நான்கில் ஒருவர் சிறுவர். இரண்டரைக் கோடி பேர்கள் உணவு மையங்களை நம்பி அந்த நாட்டில் வாழ்கிறார்கள். இவர்களில் 39% வெள்ளையர்கள், 38% கறுப்பர்கள், 17% ஹிஸ்பானிக் இனத்தவர். 90 லட்சம் குழந்தைகள் 30 லட்சம் முதியவர்கள் உணவின்றி தங்கள் வீடுகளில் சுருண்டு கிடக்கிறார்கள். கடந்த ஆண்டில் மட்டும் 40 லட்சம் இளைஞர்கள் பல சமயங்களில் தலைகுனிந்து இந்த வரிசையில் நின்றவர்கள். 2001 முதல் இந்த உணவு மையங்களை நம்பி வாழ்கிறவர்களின் எண்ணிக்கை மிகவும் சீராக 8 சதவிகித வளர்ச்சிப் பாதையில் உள்ளது.

உலகின் எந்தப் பரப்பில் நீண்ட முடிவில்லாத வரிசையில் மக்கள் இப்படி உணவுக்காக கால் கடுக்க நிற்க்கிறார்கள். எந்தப் பரப்பில் அவர்கள் இப்படி நின்றாலும் அது நம் காலத்து அவமானமே. இந்த வரிசையில் உள்ள வெள்ளையர்களை நீக்கிவிட்டால், இது சோமாலியா, ருவாண்டா, எத்தியோப்பியா என ஏதாவது ஆப்பிரிக்கக் கண்டத்து சித்திரம் தான் நம் மனதில் தோன்றுகிறது. பற்றாக்குறையில் அரவணைப்பில் வாழும் இந்தச் சமூகம் எங்கு உள்ளது.

உலகை ஒற்றை குவிமையத்தின் கீழ் கொணரத்துடிக்கும், உலகின் வளங்களை எல்லாம் அபகரிக்க தன் பேராசை பிடித்த கரங்களுடன் அலையும், உலகின் எந்த நாட்டையும் நினைத்த மாத்திரத்தில் தாக்குதல் தொடுக்க துடிக்கும் அமெரிக்காதான் அந்த நாடு. உலகம் பார்க்க முடியாத அமெரிக்காவின் மறுபுறம் இப்படி சீரழிந்து கந்தல் கந்தலாய் உள்ளது. அந்த நாட்டின் அரசாங்கப் புள்ளி விபரங்களை புரட்டிப் பார்த்தால் வறுமை கோட்டிற்குக் கீழ் உணவின்றி தவிப்பவர்களின் வாழ்க்கை நரகத்திற்கு ஒப்பானதாக உள்ளது.

உலகின் எல்லா மனிதர்களின் பசியைப் போக்கவும், உபரியாக விளைவிக்கும் நாடு என அதன் செயலர்களும், ஜனாதிபதியும் ஊடகங்களில் மார்தட்டிக் கொள்வதை பார்த்து உலக மக்களும், அரசாங்கங்களும் வாய்பிளந்து கிடக்கிறார்கள். அமெரிக்கா ஒரு சொர்க்க பூமியாக தொடர்ந்து ஊடகங்களால் சித்தரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் பிறக்கவில்லையே என தினம் தினம் ஏங்கித் தவிக்கும் அடிமை மனோபாவம் கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எப்படியாவது வேலை கிடைத்தவுடன் அமெரிக்காவிற்குப் பறந்திட வேண்டும், அது வரையிலும் இந்த அசிங்கங்களை சகித்துக் கொள்வோம் என்ற மனோபாவத்துடன் இந்தியாவில் தவித்துக் கொண்டிருக்கிறது மென் பொருள் துறையின் பெரும்பகுதிக் கூட்டம். கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச ஊடகங்கள் மற்றும் அமெரிக்க அரசாங்கம் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சொற் புழக்கத்தில் அமெரிக்காவை நாடு என்பதிலிருந்து சாம்ராஜ்யம் என அழைக்கத் துவங்கியுள்ளனர். தன்னைத் தானே சாம்ராஜ்யமாக அறிவித்துக் கொள்ளும் பித்து நிலை.

American poor family பசியில் வாடுபவர்களுக்கு தேவை வேலை. வேலை கிடைத்தால் தன்மானத்துடனான வாழ்வு துவங்கும். அதற்கு மாறாக இலவச உணவு வில்லைகளை (Food Stamp Program) கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்றியது அமெரிக்க அரசு. 1930 முதல் இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் அரசாங்கத்திடம் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். பின்பு நேர்முகத் தேர்வு நிகழும். அந்த உரையாடலுக்குப் பின் தகவல்களை அரசாங்கம் நேரடியாக வீடுகளுக்குச் சென்று சரிபார்க்கும். இவைகளையெல்லாம் கடந்து உங்கள் வறுமை நிரூபணப்பட்டால் உணவு வில்லைகளைப் பெற தகுதி உடையவராவீர்கள். உணவு வில்லைகளை நீங்கள் உரிய மையங்களில் கொடுத்து மூன்று நேரமும் பசியைப் போக்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டங்களுக்குக் கூட ஜார்ஜ் புஷ் அரசாங்கம் போதிய நிதியை ஒதுக்காமல் திட்டத்தின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. உலகமய பொருளாதார சீர்திருத்தங்களால் விளிம்பு நிலை மக்கள் உலகெங்கிளும் வதைக்கப்பட்டுள்ளார்கள்.

நாம் மீடியாக்களில் காண்பதெல்லாம் ஜொலிக்கும் நகரங்கள் மட்டுமே. அதை ஒரு கொண்டாட்டம் போல் காட்டி மக்களை ஏங்க வைக்கிறார்கள். இந்த ஏக்கம் கொஞ்சம் கொஞ்சமாக கிராமப்புறம் மற்றும் சிறு நகரங்களில் வாழ்பவர்களை நகரங்கள் நோக்கி காந்தம் போல் இழுக்கிறது. பெரு நகரங்கள் தான் நுகர்வு கலாச்சாரத்தின் தொட்டில். வியாபார பெருக்கமும், குவிமையமாக தங்கள் வணிகத்தை குறிப்பிட்ட பரப்புக்குள் முடித்துக் கொள்ளவே விரும்புகின்றன நிறுவனங்கள். நகரங்களின் வரைபடங்கள் தினந்தோறும் உருமாறி வருகிறது. நகரங்களில் மட்டுமே நாடுகள் வாழ்கிறது.

சூழலின் இறுக்கத்திலிருந்து, காலத்தின் தேவையாக அமெரிக்கர்கள் பலர் முன்வந்து மக்களின் பசியைப் போக்க காத்திரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள். நடவடிக்கைகள் அமைப்பாக உருப்பெற்றது. அதை அவர்கள் அமெரிக்க இரண்டாம் அறுவடை இணையம் (America Second Harvest Network) என அழைக்கிறார்கள். அமெரிக்காவின் 50 மாகாணங்களில் ஆயிரக்கணக்கான மையங்களைத் துவக்கி அரிய பணியைச் செய்து வருகிறார்கள். கோடிக்கணக்கான அமெரிக்கர்கள் பசியாறி வருகிறார்கள். இந்த அமைப்பு உருவாகவில்லை என்றால் சோமாலியாவிற்கு நிகரான காட்சிகள் அமெரிக்காவில் நிகழ்வதை நம் தொலைக்காட்சிகளில் பார்த்திருக்கலாம்.

நுகர்வு கலாச்சாரத்தின் போதை உச்சந்தலைக்கு ஏறிய நாடு அமெரிக்கா. அங்கு எந்த மனித விழுமியங்களுக்கும் மதிப்புக் கிடையாது. எல்லாம் பணம் சார்ந்தது, சந்தை சார்ந்தது. வாழ்வின் சகல அம்சங்களும் சந்தைத் தொடர்புடையவை. அவர்களை முன் மாதிரியாக பாவித்து உலகமே படுபாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இந்த மையங்களில் உணவுக்காக காத்துக் கிடப்போரின் எண்ணிக்கை இரண்டரைக் கோடி. இதில் 30% குடும்பங்கள் உணவு மற்றும் மருத்துவச் செலவுகளுக்கே பற்றாக்குறையான வருமானம் உடையவை. 15% கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள். 40% குடும்பங்களில் ஒரு நபருக்கு மட்டுமே வேலை உள்ளது. 7% குடும்பங்களில் அடுத்த வேளை உணவு கேள்விக்குறியாக உள்ளது. அடுத்த வேளை உணவுக்கு எங்கு செல்லலாம் என்ற குழப்பத்தில் உறைந்து கிடக்கிறார்கள். வேலை பறிபோய், நோய் வாய்ப்பட்டது, மருத்துவப் காப்பு தகர்ந்து போனது என பல காரணங்களால் அந்த மக்கள் பிச்சைக்காரர்களாக மாறியுள்ளார்கள். 33% பேர் பசியின் கோரப் பிடிக்கு ஆளானவர்கள். கொலம்பிய மாகாணத்தில் இரண்டு இந்தியப் பழங்குடிப் பகுதிகள் இந்த உணவுத் திட்டங்களை நம்பி ஜீவித்து வருகிறார்கள்.

Feeding group இரண்டாம் அறுவடை இணையத்துக்கு பக்க பலமாக அமெரிக்காவில் உள்ள பல மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் நம்பிக்கை சார்ந்து இயங்கும் பல அமைப்புகள் உதவி வருகின்றன. இரண்டாம் அறுவடை இணையத்தில் பணி புரிபவர்களில் 80% ஊதியமின்றி தன்னலமற்று சேவை மனப்பான்மையுடன் உழைப்பவர்கள். ஏறக்குறைய இரண்டரைக்கோடி மக்களுக்கு உணவளிக்க 10 லட்சம் தன்னலமற்ற சேவகர்களின் படை அணிவகுத்து நிற்கிறது.

நடமாடும் உணவு ஊர்திகள், சூப் சமையற்கட்டுகள் (Soup Kitchens), அவசர தங்குமிடங்கள், குழந்தைகள் கபே (Kids Cafe) பள்ளி நேரத்திற்கு பின் செயல்படும் மையங்கள் (After School Program) என்று பல வடிவங்களில் அவர்கள் பசித்த வயிறுகளைச் சென்றடைகிறார்கள். பல நிறுவனங்கள், குழுமங்கள் தாராள மனதுடன் உதவி வருகிறார்கள். அல்ட்ரியா குடும்ப நிறுவனங்கள் (Altria Family) மட்டும் 1990 முதல் 450 மில்லியன் அமெரிக்க டாலர்களை ரொக்கமாக இத்திட்டங்களுக்கு அளித்துள்ளார்கள்.

குளிர் காலம் வந்து விட்டால் அங்குள்ள விளிம்பு நிலை மக்களின் பாடு திண்டாட்டம்தான். உணவுக்கும், எரிபொருளுக்குமே அவர்களது வருவாய் காணாது. குளிர்காலத்தில் வீடுகளை சூடேற்ற பெரும் எரிபொருள் செலவாகும். எரிபொருள் நிறுவனங்களின் விலையேற்ற சூழ்ச்சியை இவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. சூதாட்டத்தைப் போல் அமெரிக்காவில் மருத்துவத்துறை செயல்படும். இந்த சந்தை குளறுபடிகளை புரிந்து கொள்ள இயலாது. அங்குள்ள மத்தியத்தர வர்க்கமே இந்த சூழ்ச்சிகளை தாக்குப்பிடிக்க இயலாது திணறுகிறது. பல குடும்பங்கள் நல்ல உணவுடன் மாதத்தை துவக்கி மாதக் கடைசியில் உணவு வரிசைகளுக்கு சென்றுவிடுகிறார்கள். தன் நாட்டின் பஞ்சத்தைப் போக்க கதியற்ற அமெரிக்க அதிபர் புஷ் உலகின் பிரச்சனைகளை எல்லாம் தீர்க்க வலம் வருகிறார்.

அமெரிக்க இரண்டாம் அறுவடை இணையத்தின் ஆண்டறிக்கை சமீபத்தில் அமெரிக்காவிலிருந்து வந்த ஓர் நண்பரின் மூலம் பெற்றேன். 313 பக்கங்கள் கொண்ட முழு அறிக்கையை வேண்டியவர்கள் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

- முத்துக்கிருஷ்ணன் ([email protected])


இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com