Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
ஈழத்தமிழர்களும் இலக்கியப் புடுங்கிகளும்
மணி.செந்தில்


புடுங்கி என்ற சொல் நமது சாதாரண வாழ்வில் கோபத்தின் தொனியாய் வெளிப்படும் ஒரு சொல்லாய், கோபத்தின் வெளிப்பாடாக தொனிக்கும் சொல்லாய் இருக்கிறது. அந்த சொல் அலட்சியத்தினையும், கர்வத்தினையும் பிரபதிலிக்கும் நபர்கள் மீது பிரயோகிக்க உதவும் ஒரு சொல்லாய்.. சமூகத்தின் சக்கரவர்த்திகளாக தன்னைத் தானே கிரீடம் சூட்டிக் கொள்பவர்களை அடையாளப்படுத்தும் குறியீடாய் இருக்கிறது. கீழ் வரும் ஆசாமிகளைப் பற்றி எழுத நினைக்கும்போது இந்த சொல்தான் சாலப் பொருத்தமாய் நின்றது. தன்னைத் தானே சிம்மாசனத்தின் மீது அமர வைத்துக் கொண்டு, அரங்க கூட்ட அரசியல் செய்து கொண்டு, இவர்களாகவே இசக் குழுக்கள் அமைத்துக் கொண்டு, எந்த அவலத்தின் மீதும் துயரத்தின் மீதும் கரிசனப் பார்வை கூட செலுத்தாமல் சுயநல இலக்கியம் படைப்பதாக சொல்லும் சில புடுங்கிகளைப் பற்றி நாம் இந்த நேரத்தில் யோசிப்போம். பிடுங்கி என்றுதான் எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் புடுங்கி என்ற சொல்லில் தொனிக்கும் கோபமும், அசல் தன்மையும் தான் என்னளவில் இப்போதைக்கு சரியாகப் பட்டது.

Prabakaran and Anton ஈழம் நமக்குள் ரணமாய், வலியாய், துயரயாய் இருக்கும் இந்த சூழலில் ‘இனி என்ன செய்வது’ என வலியின் ஊடே தொக்கி நிற்கும் வினாக்களுக்கு விடை தெரியாமல் நாம் விக்கித்து நிற்கும் போது, வழக்கம் போல எதிர்வினை என்ற பெயரில் எகத்தாளம் செய்ய இலக்கிய அறங்காவலர்கள் சிலர் முளைத்து இருக்கின்றனர்.

ஈழ மக்கள் மீது திணிக்கப்பட்ட யுத்தம், வல்லாதிக்க நாடுகளின் உதவியால் இன அழிவாய் நம் கண் முன்னால் விரிந்து, நம் இன மக்களை நம்மால் காப்பாற்ற இயலவில்லையே என்ற குற்ற உணர்ச்சியாய் நமக்குள் உறுத்திக் கொண்டிருக்கிறது. இது வரை மக்களின் அழிவைப் பற்றியோ, துயரைப் பற்றியோ, வாய் திறக்காத இந்த இலக்கியப் புடுங்கிகள் யுத்தம் மக்களின் அழிவாய், ஒரு இனத்தின் வலியாய், ஒரு வலுக்கட்டாய முடிவிற்கு வந்திருக்கும் போது, வழமை போலவே பிணத்தை அறுக்கும் வேலை பார்க்க வந்து விட்டனர். இந்த இலக்கிய இமயங்கள் இப்போது எழுதத் துவங்குவதற்குப் பின்னால் உள்ள அரசியல் மிகவும் கவனிக்கத்தக்கது. இவர்கள் அங்கே மிஞ்சியிருக்கும் மக்களுக்காகவோ, உரிமைகளுக்காகவோ, நாளைய தீர்வுகளுக்காவோ எழுதத் தலைப்படவில்லை. மாறாக இங்கே இனப்பற்றின் விளைவாய், உள்ளூணர்வின் உந்துதலால் வீதிக்கு வந்து மிகச் சில சக எழுத்தாளர்கள் போராடும் போது, அந்த போராட்டம் பொய்த்து விட்டது எனவும், தான் தான் தீர்க்கதரிசி எனவும் முரசுக் கொட்டவே இப்போது இறுமாப்புடன் எழுதத் துவங்கி உள்ளனர் இவர்கள்.

இலக்கியம் இலக்கியத்திற்காகவே, தமக்காகவே, பிழைப்பிற்காகவே, சோத்திற்காகவே, சாதிக்காகவே என்றெல்லாம் கொள்கை (?) இவர்களாகவே கட்டிக் கொண்டு, ஊருக்கு நான்கு பேர் மட்டுமே வாசிக்கும் இதழில் பக்கம் பக்கமாய் சக எழுத்தாளனை வைது தீர்க்கும் பணியை, தன் வாழ்நாளின் ப(பி)ணியாய் செய்து வரும் இந்த இலக்கிய சிங்கங்கள், புத்தக விழாக்களுக்காகவும், நூலக ஆணைகளுக்காகவும் யாரும் படித்து விடக் கூடாது என்ற காரணத்திற்காக 400, 500 பக்கங்களில் புத்தகம் போட்டு ஒருவரை ஒருவர் மாற்றி திட்டிக் கொண்டிருக்கின்றனர். பின் நவீனத்துவ, முன் நவீனத்துவ, பக்க நவீனத்துவ, துக்க நவீனத்துவ என நான்கு திசைத்துவ எழுத்தாளர்களாய், நாட்டில் நடக்கும் எது பற்றியும் அக்கறை காட்டாது, மூடப்பட்ட சுவர்களுக்குள் நடக்கும் கூட்டத்தில், அடித்த போதையில், அகப்பட்டவனை அடித்து துவைக்கும் இவர்களுக்கு எது பற்றியும் கவலை இல்லை. ஆனால் அனைத்தும் முடிந்த பின்னர், தவித்த வாய்களுக்கு தண்ணீர் அளிக்க கூட சிந்திக்காத இவர்கள், தாகத்தினால் இறந்த ஒரு தலைமுறையின் பிணங்களை சவக்குழியில் இருந்து தோண்டி எடுத்து சவத்தின் மீது நெளியும் புழுக்களின் ஊடே அலையும் புழுவாய் ‘ஏன்,எதற்கு,எப்படி’ என ஆராய்ச்சி செய்வது போல பாசாங்கு கட்டுரை எழுத வந்து விட்டனர்.

இனம் அழிந்து போகும் தருணங்களில் இறுக வாய் மூடி மெளனத்திருந்த இவர்களது நா...ரத்த சுவையின் ஊடே ஊறும் ஊடக வெளிச்சத்தினை நக்கிப் பார்க்க அலைகின்றது. மலை முகடுகளில் ஒளிந்துக் கொண்டு, எங்கேயாவது மாமிசம் விழுமா, பறந்து திரிந்து பறிக்கலாம் என அலையும் பிணக் கழுகுகள் மலை மலையாய் செத்துக் கிடக்கும் மனித சவங்களின் மீது அலையத் துவங்கி இருக்கின்றன. இனி இவர்கள் பக்கம் பக்கமாய் எழுதவும், வழுக்கவும், இவர்களுக்கு ஈழம் ஒரு பிழைப்புக் காரணியாய் நின்று போகும். போர் புரிந்து இறந்த மாவீரர்களின் தடங்களை இவர்கள் ஆராய்ச்சி என்ற பெயரில் காசு கொடுக்கும் இன அழிப்பு எஜமானிடம் ஊதியம் வாங்கிக் கொண்டு காட்டிக் கொடுக்கும் கள்ள கட்டுரைகள் எழுதுவார்கள், இது வரை இல்லாத அளவிற்கு போட்டிக் குழு,போர்ப் பரப்பில் நின்ற சாதீய பார்வை என்றெல்லாம் பேனா மை இருக்கும் வரை, கத்தை கத்தையாக காகிதங்களில் கசக்கிப் பிழிவார்கள். அலாவுதீனின் அற்புத பூதம் போல, இது வரை எங்கிருந்தார்களோ,தெரியவில்லை. ஜீபூம்பா என்ற அழைப்பில்லாமலேயே பாய்ந்து வந்து பதறுகின்றனர் இந்த பாசாங்குக்காரார்கள்.

உலகமெல்லாம் பரந்து வாழும் எம் இன மக்களின் வியர்வைத் துளிகளினால் விளைந்த பணத்தை நோக்கி புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளும் இந்த கொள்ளைக்கார கும்பல், அவர்களின் துயர் துடைக்க, தோள் கொடுக்காமல், சவக் காட்டிலும் அரசியல் சதிராட்டம் நடத்தி, பிழைப்பு நடத்த வந்திருக்கிறார்கள்.

இனம் அழியும்போது எந்த இலக்கிய சங்கமும் வாய் திறக்கவில்லை. மாறாக இலக்கிய அபத்தங்களுக்கு ஆங்காங்கே கூட்டம் நடத்தி, குழு சண்டை, குழாயடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன. முற்போக்காளர்களுக்கும் ஒரு பிரச்சனை... அமெரிக்க பொருளாதார சிக்கல், கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் எதிர்வரும் உணவுப் பஞ்சம் என்றெல்லாம் உலக வரைபட நாடுகளின் சிக்கல்களுக்கு கொள்கை வடிவ சித்தாந்த நடைமுறைகள் வரையறுத்து கருத்தரங்குகள் நடத்தி வரும் இவர்களுக்கு, பக்கத்து நாட்டில் கேட்பாரும், மீட்பாரும் இல்லாமல் இனம் அழிகிறதே என்ற இனப்பற்றின் விளைவாய், ஏதாவது செய்யத் தோன்றியதா என்றால் இல்லை. இவர்களுக்கு முதலில் இதில் வாய் திறக்கலாமா, வாய் திறந்தால் மூடிய வாய்க்குள் இருக்கு கட்சியின் ஈ வெளியே பறந்து விடுமே... கட்சி கட்டுப்பாடு நாற்றம் அடித்து தொலைத்து விடுமே என்ற பயம். இனத்தை விட, சக மனிதனின் அழிவை விட கட்சி வந்து கிழிப்பதுதான் இவர்களுக்கு முக்கியம்.

இன்னும் சிலருக்கு இனம், மொழி என்ற ஒன்று இருந்தால்தானே, நம்மால் எழுதி கிழிக்க முடியும் என்ற உண்மை உறுத்தினாலும் தீர்க்கதரிசி பட்டம் பெற வேண்டும் என்ற ஆவலில் ஏதாவது உளற வேண்டும் என்பதற்காக கக்க வேண்டியதை காலம் கடந்தாலும் கக்கி விட வேண்டும்...

ஒரு பிரச்சனை உச்சத்தில் இருக்கும்போது உளறிக் கொட்டுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால், உளறி கொட்டியதற்கு மாற்றாக ஏதாவது நடந்து விட்டால் தீர்க்கதரிசி பட்டம் போய் விடுமே என்ற பயம். அது தான் இட்லி ஆறிய பிறகென்ன, ஊசிப் போன பிறகு என்ன, எதையும் இவர்கள் சாப்பிட துணிவது.. பிரச்சனை மையம் கொண்டிருக்கும் போது ஏதாவது பேசுவது இவர்களை பிரச்சனையில் சிக்க வைக்கவிடும் என்ற பயம் இவர்களின் இதயத்தினை கூட இறுக வைத்துவிடுகிறது. எல்லாம் முடிந்த பிறகு யாரும் கேட்க வர மாட்டார்கள் என்ற துணிவில், தேனீக்கள் அற்ற வறண்ட தேன் கூட்டில், நக்கிப் பார்க்கும் திட்டத்தோடு இவர்கள் எழுதத் துவங்கி உள்ளார்கள், இனிமேலும் எழுதுவார்கள்.

வெகு ஜனப் பத்திரிக்கைகளில் ஏதாவது ஒன்றில் பக்கங்கள் கிடைத்து விட்டது என்பதற்காக வருடக் கணக்கில் பொதுத் தளத்தில் விஷத்தை மட்டும் தொடர்ந்து கக்கி வருகிறார் ஞாநி என்று தன்னை தானே அழைத்து கொள்கிற ஜிப்பா ஆசாமி. இவருக்கு என்ன வேலை என்னவென்றால், ஊர் முழுக்க தந்தி அனுப்பவும், மனு போடவும் கற்றுக் கொடுக்கிற அதாரிட்டியாக அலப்பரையை கொடுப்பது, ஏதாவது சொல்லும் போது அன்றே சொன்னேனே பார்த்தாயா என்று தீர்க்கதரிசி கிரீடத்தை தானே சூட்டிக் கொள்வது. இந்த வாரத்து குமுதம் இதழில் தமிழின தேசியத் தலைவர் பிரபாகரனை ஈழ மாநில முதலமைச்சராய் ஆக்க இவர் ஆசைப்படுகிறார். உணர்வும், உண்மையும், கொள்கையும், இனப்பற்றும் நிரம்பிய தலைவர் அவர்களை இவர் பதவிக்காக அலையும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல நினைத்து விட்டார் போலும். பிரபாகரன் இருக்கிறாரோ, இல்லையோ என்று ஆங்காங்கு விருப்பங்களின் இடைச் செருகல்கள் வேறு.

சிங்கத்தினை சீண்டி பார்க்கும் சிறு நரிக் கூட்டமே, உங்களுக்காகவது எம் தலைவர் வருவார், வந்தே தீருவார்.

அடுத்ததாக ஜெயமோகன் என்ற இன்னொருவர். இவரின் வேலையே காவி கட்சியின் ஏஜெண்டாக பணிபுரிவதுதான். அவ்வப்போது கெட்டி, கெட்டியாக புத்தகம் போடுவார். இணையத் தளத்தில் வேதாந்த வியாக்ன விசாரணைகளையும், கீதா சுலோக ஆராய்ச்சிக்களையும் சலிக்காமல் செய்து வரும் இலக்கிய கடலின் மலையாள மாந்தீரீக ஆசாமி. இவருக்கு என்ன வெறுப்போ, ஏது வெறுப்போ தெரியவில்லை. வெறுப்புடன் உரையாடி தனக்கான ஈழப் பங்கை செவ்வனே செய்துள்ளார். இந்திய இறையாண்மைக்கு இப்போது இவர்தான் ஏஜண்ட் என்பது போல யாரோ ஒருவர் கேட்டதாக பக்கம் பக்கமாக வழக்கம் போல எழுதித்தள்ளியுள்ளார். ஆயுதப் போராட்டத்தை மனக் கிளர்ச்சி என ஒற்றை பதத்திற்கு அலட்சியப் படுத்த துணியும் இவருக்கு ஆயுதம் ஏந்திப் போராடிய சுபாஷ் சந்திர போஷ், பகத்சிங், சேகுவேரா போன்றோரும் மனக் கிளர்ச்சியினால் மட்டுமே ஆயுதம் தூக்கியவர்கள் ஆகிறார்கள். தென் ஆப்பிரிக்க நெல்சன் மண்டேலாவினையும், காந்தி அடிகளையும் ஒப்பிட்டு ஈழப் போராட்டத்தின் தோல்விகளை குறிப்பிடுகிறார். இதில் ஈழத்தில் மட்டுமா போராட்டம், அழிவு இதெல்லாம், உலகில் பல நாடுகளிலும் தான் மக்கள் அழிந்துக் கொண்டிருக்கிறார்கள் என சாவு சமாதானம் பாடுகிறார். மக்களின் சுயநிர்ணய வாழ்விற்கான போராட்டத்தினை அடித்துக் கொண்டு சாகும் சண்டையாக உருவகப்படுத்துகிறார் இந்த உள்ளொளியாளர். இவரும் ஈழ அவலத்தின் காரணங்களையும், போராளிக் குழுக்களின் அரசியலையும் மக்கள் அலை அலையாய் அழியும்போது போட்டிருந்த மெளன வேடத்தை கலைத்து விட்டு, திருட்டுப் போன வீட்டில் யாராவது இருக்கிறார்களா என எட்டி பார்த்து விட்டு இந்த இலக்கிய நாட்டாண்மை தீர்ப்பு சொல்ல வந்திருக்கிறது.

மூன்றாம் நபர் சாருநிவேதிதா ஞாயிற்றுக்கிழமை வாரமலர் கிசுகிசு ஆசாமி. எதை எதையோ எழுதி விட்டு பின் நவீனத்துவப் படைப்பு என்று இவராகவே சொல்லிக் கொள்பவர். இன்றளவும் எதன் பொருட்டும் கூச்சமில்லாமல் பெண்களை சதையுமாகவும், காமமாகவும் மட்டுமே பார்த்து விட்டு, சிறந்த ஒயின்ஸ் பார்களை அறிமுகப்படுத்தும் அறிவாளி. இவரும் தன் பங்குக்கு வன்முறையின் தோல்வியாக ஈழத்துப் போரை முடித்து வைத்து அக்மார்க் ராஜபக்சே முத்திரை வாங்கி உள்ளார். இவரும் காந்தி அடிகளை தன் துணைக்கு அழைத்து உள்ளார். இது போன்ற காலரா கிருமிகளுக்கு திடீரென்று காந்திப்பாசம் ஏன் பொத்துக் கொண்டு ஊத்துகிறது என்பதனை நாம் தனியே ஆராய வேண்டும், சுதந்திரத்திற்காக நாடு நாடாக பறந்து ராணுவம் கட்டி போர்புரிய வந்த சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இந்த ஒயின் ஷாப் உல்லாசி பாஸிஸ்ட்டுகளின் பங்காளி என பாட்டு பாடி இருக்கிறார். கியூபா நாட்டினரை சுதந்திரமாக விட்டால் மக்கள் நாட்டினை விட்டு வெளியேறி விடுவார்கள் என்றும், நேதாஜியும் பகத்சிங்கும் ஒட்டுமொத்த மனித குல பிரதிநிதிகள் இல்லை என்றும் அன்று அடித்த போதை அகலாமல் அள்ளிக் கொட்டி இருக்கிறார் சாரு.

மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவர்கள் மனித குல பிரதிநிதிகள் இல்லை என்றால், பிராந்தி, பீர் அடிப்பவர்கள் தான் மானுட நேசம் போற்ற வந்த மகா தலைவர்கள் என்று சாரு தன்னளவில் முடிவு செய்திருக்கிறார். புலித் தலைவர் எதார்த்தத்தை புரிந்துக் கொள்ளவில்லை என இப்போது சொல்கிறார் சாரு. 6 மாதங்களுக்கு முன்னால் இந்த கருத்தை ஏன் சொல்ல வில்லை அய்யா? இலங்கை பேச அழைத்தும் போகவில்லையாம் புலிகள் என ‘அம்ச’மான கருத்தை உதிர்த்துள்ள இவர் போல இன்னும் பலர் இருக்கிறார்கள், எழுதவும் செய்வார்கள்.

ஒரு இனத்தின் அழிவினை வன்முறையின் தோல்வியாகவும், வெறுப்பின் உரையாடலாகவும் பார்க்கின்ற இவர்கள், மலையாளப் பாசம் உடைய மேன்மக்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக அழியும் போது எங்கே சென்றிருந்தார்கள்? எம் இனம் அழியும்போது பிரியாத இவர்களின் உதடுகள், இனம் அழிந்து விட்டது, தலைவர் மறைந்து விட்டார், இனி கேட்பதற்கு நாதியில்லை என உறுதி செய்து கொண்டு உற்சாகமாய் எழுத்து விசில் அடிக்க துவங்கிறதே, இது ஈழத்திலும், கொழும்பிலும் தமிழ் மக்களை சூறையாடும் சிங்கள காடையர்களை விட கேவலமானவை இல்லையா?

தீர்ப்பு சொல்லவும், விமர்சிக்கமாகவும் இருக்கும் இவர்கள் யார் என்ற கேள்வி இப்போது மிக முக்கியமானது. இழவு வீட்டில் அழுவது போல அழுது எதைப் பறிக்க வந்துள்ளீர்கள்?

இவர்களின் சமகாலத்து எழுத்தாளுமைகள் அறிவுமதியும், இன்குலாப்பும் தமிழக அரசின் பதவி, பட்டங்களை துறந்தார்கள். பா.செயப்பிரகாசம், லீனா மணிமேகலை போன்றவர்கள் தலைநகர் வரை சென்றும், ஒப்பாரி கவியரங்கம் நடத்தியும் தன் உள்ளுணர்வினை வெளிப்படுத்தினர். இன்னும் நான் பெயர் குறிக்கத் தவறிய எழுத்தாளர்கள் ஆங்காங்கே தன் உணர்வினை வெளிப்படுத்தினார்கள். ஆனால் உச்சாணிக் கொம்பில் அமர்ந்துக் கொண்டு இலக்கிய அரசாங்கம் நடத்துகிற இவர்களைப் போன்றவர்கள் ஒன்றுமே செய்யாமல், இப்போது கட்டுரை எழுதி, கதை சொல்ல வந்திருக்கிறார்கள். கசையடியாய் வலிக்கிறது.

சகமனிதன் மீது காட்டும் அக்கறைதான் உலக அளவில் இலக்கியமாகவும், புனைவாகவும் மதிக்கப்பட்டு வருகிறது. உலக வரலாற்றில் எழுத்தாளர்களின் மனமும்,எழுத்தும் சாதித்தவை மிக அதிகம். எப்போது எல்லாம் மக்கள் இன்னலுற்று, அவதியுற்று நிர்க்கதியாய் நிற்கிறார்களோ அப்போதெல்லாம் படைப்பு மனம்தான் போர் முரசு கொட்டி நிற்கும். என் கண்ணால் மக்ஸீம் கார்க்கி, பாப்லோ நெரூதா, வால்டர் ரூசோ, நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிய்(வீரம் விளைந்தது), ஜான் ரீடு, பாரதி, பாரதிதாசன், காசி ஆனந்தன், என பட்டியல் நீள்கிறது. ஆனால் நம் படைப்புவாதிகளோ எதற்கும் உதவாமல், அறைக் கூட்டம் நடத்தி அடித்துக் கொள்ள மட்டுமே எழுதுகிறார்கள். சாதாரண மனிதனுக்கு உள்ள சமூக பொறுப்புணர்ச்சி கூட இவர்களுக்கு ஏன் இல்லாமல் போனது? கேட்டால் படைப்பு மனம் சிதைந்து விடுமாம். பாவிகளே! சமூகம் என்ற ஒன்றும், உரிமை என்ற ஒன்றும் இருந்தால் தான் படைப்பு, வெங்காயம் இதெல்லாம்.

எங்கேயோ இருக்கும் பிஜீத் தீவில் சமூகம் படும் அவலம் கண்டு கண்கலங்கி, எழுதினானே பாரதி, அவனும் படைப்பாளிதானே, குடிப்பதையும் பற்றியும், இல்லாத இதிகாசங்கள் பற்றியும் புனைவு மொழியில் வரிந்துக் கட்டிய இவர்கள் ஏன் ஈழம் என்று வரும் போது கைகளை இறுக்க மூடிக்கொண்டு விடுகிறார்கள்? தமிழ்ச் சமூக வரலாற்றில் இதுவரை நடைபெற்றிராத இந்த இனஅழிவின் போது சிறு சலனத்தைக் கூட காட்டாத இவர்கள், இனி எதற்கு யாருக்கு எழுதப் போகிறார்கள் ?

அய்யா... இலக்கிய இசங்களை கரைத்து குடித்து, வேதாந்த ஆராய்ச்சியில் முழ்கி திளைத்து... இதிகாச, வரலாற்று, மீள் புனைவில் மீண்டெழுந்து, குடிப்பதையும், குடிச்சாலைகளையும்... ஊற்றெடுக்கும் காமத்தினையும்... வரிசை கட்டி எழுதி வரும் கணவான்களே... ஈழத்தினையும், மக்களையும் விட்டு விடுங்கள்... அவர்களுக்கான விதியை அவர்களே சமைப்பார்கள். காரண காரிய ஆதி மூல ஆராய்ச்சிகளை கடலுக்கு இந்த பக்கம் மட்டுமே, வைத்துக்கொண்டு... ஏற்கனவே பணத்திற்காகவும், சாராயத்திற்காகவும்... தங்களை தாமே விற்றுக் கொண்டு விட்ட இந்த கூட்டத்திடம் உங்கள் பம்மாத்து வேலைகளைத் தொடருங்கள்.

எவனும் இங்கே எதற்கும் கேட்கப் போவதில்லை. தின்னது செரிக்கவும், பட்டங்களை பறிக்கவும் எழுதுங்கள். கலகம் என்ற பெயரில் அடித்துக் கொள்ளவும், இலக்கியம் என்ற பெயரில் குடித்துக் கொள்ளவும் எழுதுங்கள்... உங்களுக்குப் பிறகான சமூகத்தினை பற்றி உங்களுக்கு கவலை இல்லை. நீங்கள் வாந்தி எடுப்பதை எல்லாம் எழுத்தாக எண்ணி பதிப்பிக்க ISDN பதிப்பகங்களும் அவற்றின் பத்திரிக்கைகளும் உள்ளன. மேலும் விளம்பரம் கொடுத்து போஷிக்க ஜவுளிக் கடையும், அல்வா கடையும் இருக்கவே இருக்கின்றன. இது போதாதா, ஏகாந்த எழுத்து எழுதவும்.... கூட்டம் நடத்தவும், கும்மி அடிக்கவும்...?

உள் மன இருட்டுதான் உங்களுக்கு வசதியாக இருக்கிறது. ஆனால் எதற்கும் உண்டு விடியல். விடியலின் கதிர்களில் எரிந்து போக இருப்பது நீங்களும்,உங்களும் எழுத்துக்களும் தான்.

வணக்கம் . இலக்கியப் புடுங்கிகளே,சீக்கிரம் கடந்து போங்கள். இல்லையேல் கடத்தப்படுவீர்கள்.

- மணி.செந்தில், கும்பகோணம் ([email protected])


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com