Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

தமிழ் வணிகர் திருமா
மதிவாணன்


மதுரையிலிருந்து திண்டுக்கல் வரும்போது வீடியோ பஸ்களைத் தவிர்க்கமுடியாது. அவ்வாறான ஒரு சமயத்தில் வடிவேலு நகைச்சுவை ஒன்று ஓடியது, வடிவேலு ஒரு தியேட்டர் முதலாளி. அவரின் தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது அருவாளுடன் ஒருவன் வருகிறான். அவனது மனைவி மற்றொரு ஆணுடன் படம் பார்க்கவந்திருப்பதாகக் கூறுகிறான். படத்தை நிறுத்தி இருட்டாக்கிவிட்டு அந்தப் பெண்ணை மட்டும் வெளியே போகச்சொல்கிறார் வடிவேலு. வெளிச்சம் வந்தபிறகு பார்த்தால் இரண்டு ஜோடியைத் தவிர தியேட்டரே காலியாகிவிடுகிறது. மகிழ்ந்துபோன வடிவேலு கற்பு மிக்க அந்த ஜோடிகளுக்குப் பரிசு அறிவிக்கிறார். அந்தப்பெண்ணோ மற்றொரு ஜோடியிலிருந்த ஆணுக்குப் பரிசை அளிக்கச் சொல்கிறார். அவன்தான் இந்தப் பெண்ணின் கணவனாம். அதிர்ந்துபோகிறார் வடிவேலு என்று அந்த காமெடி போகிறது.

கற்புக் காவலர்கள் திருமாவளவனும் இராமதாசும் இந்தப் படத்தை பார்க்கவில்லையோ என்று ஆச்சரியப்பட்டேன். ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கற்பையே அந்த நகைச்சுவைக் காட்சி கேள்விக்குள்ளாக்குகிறது. வைகைத் தமிழன் வடிவேலுவை எதிர்ப்பதா என்று தமிழர்கள் தலைவர்களாகிய அந்த இருவரும் யோசித்திருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். கற்பு என்பது தமிழர்களின் உன்னதமான கற்பனைகளில் ஒன்று.

நீதிபோதனைகள் நிறைந்ததாக ஒரு சமூகம் இருக்கிறது என்று சொன்னால் நீதிபோதனைக்கு அங்கே அவசியம் இருப்பதாக அர்த்தம். கற்பு பற்றி நிறைய பேசினார்கள் என்றால் அங்கு கற்பு பற்றாக்குறை இருக்கிறது என்று அர்த்தம். தமிழகத்தின் பண்பாடே கற்புதான் என்று யார் அதட்டினாலும் கற்பு நெறி அமுலாவதில் பிரச்சனையிருக்கிறது என்றே அர்த்தம்.

Tirumavalavan_Ramdoss இதன் மறுதலையும் உண்மைதான். எங்கெல்லாம் கட்டிய கணவனுடன் அல்லது மனைவியுடன் கடைசி வரை வாழ்ந்து தொலைத்தே தீர வேண்டும் என்ன ஆனாலும் சரி என்ற நிர்ப்பந்தம் இருக்கிறதோ அங்கெல்லாம் அதனை மீறுவது திருட்டுத்தனமாக நடந்துகொண்டே இருக்கும். மனமொத்த துணையுடன் வாழ்வதே மனித இயல்பு. மனித இயல்புக்கு எதிரான மிரட்டல்கள், அவை சமூக ரீதியாக, குடும்ப ரீதியாக, ஒழுக்க ரீதியாக, சொத்து ரீதியாக இருக்கும்போது, கள்ளத்தனம் தவிர்க்க முடியாததாக மாறிவிடுகிறது. செய்திப் பத்திரிகைகள் பாருங்கள். நான் சொல்வது உண்மை என்று விளங்கும். ஆணும் பெண்ணும் மனம் ஒத்து வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும், அது சாத்தியமில்லை என்றானபோது எந்த பிரச்சனையும் இன்றி பிரிந்து தனக்கான துணையைத் தேடிக்கொள்வதும்தான் மனித இயல்பு. உடலின் நிமித்தம் இணை சேர்வதை மிருகங்கள் செய்யும். மனம் சேர முடியாத போது மனிதர்களின் உடலும் சேரமுடியாது போகும் என்ற உண்மையைச் சமூகம் ஒப்புக்கொள்ளாதபோது கள்ளத்தனம் ஒன்றே காதல் வாழ்க்கைக்கான வழியாகிப்போகிறது. அது தமிழ்ச் சமூகத்தில் மலிந்து கிடக்கிறது என்பதைத்தான் பத்திரிகையில் அடுக்கப்படும் கள்ளக்காதல் செய்திகள் சொல்கின்றன. இந்த அவமானகரமான நிலையிலிருந்து மீள வேண்டுமானால், சுதந்திரமாகத் தனது துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை மனிதர்களுக்கு வேண்டும். அதனை நோக்கித் தமிழ்ச் சமூகம் முன்னேறிக்கொண்டிருக்கும்போது திருமணமான ஆணும் பெண்ணும் கட்டாயமாகச் சேர்ந்து வாழ வேண்டும் என்ற கற்பு நெறியை நிர்ப்பந்திக்கிற திருமாவும் இ.தாசும் தமிழ்ச் சமூகத்தைப் பின்னுக்கு இழுக்கிறார்கள். பிற்போக்குத் தமிழர்களாகிய இவர்களை தமிழ்ச் சமூகம் எதிர்த்தே ஆகவேண்டும்.

கற்பு நெறி என்பது பெண்ணுக்குப் போடப்பட்ட விலங்கு. ஏனென்றால், தமிழ் கற்பு பெண்ணுக்கு மட்டுமே. ஆணுக்கு பொது மகளிர் என்ற அங்கீகரிக்கப்பட்ட முறையை தமிழ்ச்சமூகம் வெகுநாட்களாக வைத்திருக்கிறது. இதன் பொருள் கற்பு நெறி பெண்ணுக்கு மட்டுமே என்பதன்றி வேறென்ன? பொருந்தாத மண வாழ்வில் பெண் மாட்டிச் சாக வேண்டும். ஆண் பொருத்தமான அல்லது தற்காலிகமான துணையைத் தேடிக்கொள்ளலாம் வைத்துக்கொள்ளலாம் என்பது தமிழ் கலாச்சாரமாக இருக்கிறது. நிரூபிக்க வேண்டுமா? வைப்பாட்டி, தேவடியாள், வேசி, சின்னவீடு சக்களத்தி போன்ற வார்த்தைகளுக்குப் பொருத்தமான ஆண் பால் வார்த்தைகளைச் சொல்லுங்கள் பார்ப்போம்.

எனவே பெண்ணின் சுயநிர்ணய உரிமையை கற்பு நெறி மறுக்கிறது. அதனை பெண்கள் எதிர்த்தே ஆகவேண்டும். பெண்களை பழமை இருட்டுக்குள் தள்ளத் துடிக்கும் திருமா, இ.தாசு கூட்டணியை பெண்கள் எதிர்த்தே ஆக வேண்டும்.

அப்படியானால் பெண்கள் தறிகெட்டுப் போவார்களா? கவலையே படாதீர்கள். மாட்டார்கள். கட்டற்ற பாலுறவு என்ற காட்டுமிராண்டி நிலையிலிருந்து ஜோடி முறையைக் கொண்டுவந்தவர்கள் பெண்கள் தான் என்பதை மனித சமூகத்தின் வரலாறு காட்டுகிறது. உடலுக்காக அல்லது மனதுக்காக வாழ்வது என்ற முறையை அமுல்படுத்தியவர்கள் பெண்கள்தான். அவர்களின் உடல்கூறு கட்டற்ற பாலுறவை அனுமதிப்பதில்ல. ஆனால், ஆண்கள் அனுபவித்து விட்டு ஓடும் உடல் வேட்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் பொது மகளிர் முறையைக் கொண்டுவந்தார்கள். இன்றும் இதுபோன்ற சட்டபூர்வ உடல் விற்பனையைச் செய்துகொண்டு இருக்கிறார்கள். எனவே, ஆணாகப் பிறந்த எவனும் பெண்ணுக்கு ஒழுக்க நெறிகளைப் போதிக்கும் அவசியம் இல்லை.

ஆனால், முதலாளித்துவ சமூகம் பெண்ணை உடலாக விற்பனை செய்வதை விரைவுபடுத்தியுள்ளது. அதேசமயம் நிலப்பிரபுத்துவ பண்பாடு பெண்ணை அடிமையாக கட்டுக்குள் வைப்பதை ஆதரிக்கிறது. இந்த இரண்டு கூறுகளும் விரவிக் கிடக்கும் நமது சமூகம் ஒரு பக்கம் பெண் உடல் விற்பனையையும் (நட்சத்திர விடுதிகள், சினிமா, தொலைக்காட்சி, பத்திரிகைகள், அரசியல் கட்சிகளின் மேடை வர) நடத்திக்கொண்டே, மறுபக்கம் கற்பின் புனிதம் பற்றியும் பேசுகிறது. சில பத்திரிகைகள் மிகவும் விவரமாக கற்பு நெறி காக்க செய்தி வெளியிட்டுக்கொண்டே பெண் உடல் விற்பனையை நடத்திக் கொண்டிருக்கின்றன. (உதாரணமாக, குஷ்பு பிரச்சனையை ஊதிப் பெரிசாக்கிய தமிழ் முரசு பத்திரிகை தன் தொலைக்காட்சி விளம்பரத்தில் 'சும்மா நச்சுன்னு இருக்கு தமிழ்முரசு' என்ற விளம்பரத்தில் 'நச்' என்ற வார்த்தை வரும்போது ஒரு பெண்ணின் (நடிகையின்) குறுக்குவெட்டு மார்புத்தோற்றப் படம் 'நச்'சென்று தெரியும்படி பார்த்துக்கொள்கிறது). இந்த வெளிவேசத்தை நாம் ஒப்புக்கொள்ளவோ ஆதரிக்கவோ கூடாது.

திருமா தன்னை தலித் இனக் காவலனாகக் காட்டிக்கொண்டார். தலித் இன அரசியலை ஒருவர் ஆதரிக்கவில்லை என்றால், அவர் தலித் விரோதி என்றார். அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்ப்பதற்கு பதிலாக தலித் ஒடுக்குமுறை மட்டுமே பிரதானம் என்ற அவரின் குறுகிய தலித் அரசியல் அதன் எல்லையைத் தொட்டுவிட்டதால் அரசியல் வணிகத்தின் நிமித்தம் அவருக்கு தமிழர் என்ற அடையாளம் தேவைப்படுகிறது. அதே நிலைமைதான் இ,தாசுக்கும். இந்த இரண்டுபேரும் தமிழர் அரசியலை சில்லறையாக வணிகப்படுத்தி வருகிறார்கள். (மொத்த வியாபாரி கருணாநிதி).

ஆனால் தமிழர்கள் எதிர்கொள்ளும் விவசாய அழிவு, விவசாயக் கூலி குறைவு, சூறையாடப்படும் தலித்/வன்னியப் பெண்கள் கற்பு, ஆலைகளில் திருமணத் திட்டத்தின் கீழ் சுரண்டப்படும் பெண்கள், அங்கே பறிபோகும் தமிழ் கற்பு பற்றியெல்லாம் கவலையில்லை. அதுமாதிரி சிரமமான காரியங்களை எடுத்து அரசியல் செய்தால் ஓட்டு கிடைக்குமா? பணம் கிடைக்குமா? குவாலீஸ் கார் கிடைக்குமா? மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? நமது சுகமான வாழ்க்கைக்கு என்ன வழி என்பது இந்த இரண்டு அரசியல் தலைவலிகளின் கவலை. எளிதான தமிழர் உணர்வைத் தூண்டிவிட்டு வரும் சட்டமன்றத் தேர்தலில் சில சீட்டுகளைக் கருணாநிதியிடமோ, ஜெயலலிதாவிடமோ வாங்கிவிட தங்கள் பலத்தைக் காட்டப் பார்க்கிறார்கள். அவ்வளவுதான். அதனால்தான் இவர்கள் வடிவேலுவைக் கண்டுகொள்ளவில்லை. குஷ்பு சுகாசினியை விடுவதாகவும் இல்லை. மட்டரகமான அரசியல் செய்யும் இந்த இரண்டு பேர்வழிகளையும் தமிழக அரசியலில் இருந்து விரட்டியடிப்பது பெண்களின் தேவையாக உள்ளது. அதைவிட முக்கியமாக தமிழர்களின் தேவையாக உள்ளது.

திருமாவின் பேச்சு வரம்பு மீறுகிறது. பெண்விடுதலை பேசுபவர்கள் கையில் ஆணுறை வைத்துக்கொண்டு அலைகிறார்கள் என்றார் அவர். திருமா போன்றவர்கள் அரசியலில் தலையெடுப்பதற்கு முன்பிருந்தும், தலித் விற்பனையை திருமா நிகழ்த்திக் கொண்டிருந்தபோதும், இன்று தமிழ் விற்பனை செய்து கொண்டிருக்கும்போதும் தலித் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களின் பாதுகாப்பு முன்னேற்றம் என்ற சமூகச் செயல்பாட்டில் இருப்பவர்கள் இந்தப் பெண்ணியவாதிகள். இன்றைக்குப் பெண்கள் எட்டியிருக்கும் முன்னேற்றம் அனைத்துக்கும் முதல் காரணம் அவர்கள். அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தில் பேசிய திருமா நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வேண்டும்.

அப்படியானால் குஷ்பு பேசியது சரியா? சரிதான். முதலாளித்துவ பண்டம், நிலப்பிரபுத்துவ புனிதம் என்ற இரட்டை மதிப்பீட்டு நிலையில் எழும் பெண்ணின் குரல் அது. அது நியாயமானது முற்போக்கானது.
அப்படியானால் அவர் என்ன முற்போக்குவாதியா? பெரியாரின் வாரிசா? எதுவும் இல்லை. ஒரு பெண். மேற்கண்ட இரட்டை மதிப்பீட்டில் பலியான அல்லது தன்னையே அதற்கு அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பெண். தனது வாழ்க்கையின் அவலத்திலிருந்து அவர் பேசினால் அந்தக் கருத்து தவறாகிவிடுமா என்ன? சிகரெட்டை ஊதித் தள்ளி உடல் உபாதைகளை அனுபவிக்கும் நான் சிகரெட் குடிப்பது நல்லதல்ல என்று சொன்னால் அது தவறாகிவிடுமா என்ன?

இந்த மொத்த விவகாரத்தில் வெளியே தெரியாத இரண்டு ‘உத்தமர்கள்’ இருக்கிறார்கள். முதலாமவர் ஊடக வணிகத் துறையில் இருக்கும் கருணாநிதி. ஜெ தொலைக்காட்சி வணிகத்தின் பிரதானமாக இன்று இருக்கும் குஷ்புவை வீழ்த்த தனது ஊடகப் பலத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் அவர்.
மற்றொரு உத்தமர் ஜெ. பெண் என்பதால் அளப்பறிய சிரமங்களுக்கு ஆளான அந்தப் பெண்மணி அவர் வெளியிட்டிருக்க வேண்டிய தனது சொந்தக் கருத்துகளுக்கு எதிராக குஷ்புவைக் கண்டித்துள்ளார். என்ன செய்வது? ஊடக வணிகத்தைப் பார்ப்பாரா? அரசியல் சிக்கல்களைப் பார்ப்பாரா? அல்லது பெண்களின் மீது பரிவு காட்டுவாரா? ஜெவைக் காட்டிலும் குஷ்பு எத்தனையோ மடங்கு மேல். அதற்காக குஷ்புவை முன்னிறுத்தி பெண்ணியவாதிகள் யாரேனும் இயக்கம் கட்ட நினைத்தால் அவர்களுக்கு ஒரு அய்யோ பாவத்தை இப்போதே சொல்லிவிடுகிறேன். குஷ்பு திறமையான வணிகர் என்ற செய்தி அவர்களுக்குத் தெரியாது.

கண்ணுக்குத் தெரியும் எதிரிகள் திருமா, இ.தாசையும், கண்ணுக்குத் தெரியாத உத்தமர்கள் கருணாநிதி மற்றும் ஜெவையும் சேர்த்து எதிர்க்க வேண்டியது தமிழகப் பெண்களின் வேலையாக இருக்கிறது. பெண்களுக்கு எதிரியான இந்த நபர்களின் கட்சிகளுக்கு வாக்களிப்பதில்லை என்று பெண்கள் அமைப்புகள் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். அனைத்துக்கும் முன்னதாக திருமா காண்டம் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்கும் வரை பெண்கள் அமைப்புகள் ஓயக்கூடாது.

- மதிவாணன் ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com