Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஈழத்தமிழ் இலக்கிய ஆளுமைகள் பற்றி பேராசிரியர் சு. வித்தியானந்தன்
லெனின் மதிவானம்

ஈழத்து தமிழ் இலக்கிய வளர்ச்சியில் தனித்துவமான ஆளுமை சுவடுகளைப் பதித்து சென்றவர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்களர். பேராசிரியர் பிறந்து என்பதைந்து ஆண்டுகளாகின்றன. இறந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. கடந்த இரு தசாப்தங்களாக பேராசியரைப் பற்றி பல்வேறு மதீப்பீடுகளும் ஆய்வுகளும் நூல்களும் வெளிவந்திருக்கின்றன. நாளுக்கு நாள் அவை பெருகிவருதலும் கண்கூடு. அவரது எண்பதைந்தாவது பிறந்த தினத்தையொட்டி பேராசிரியர் வித்தியானந்தன் நினைவுகுழுவின் முன் முயற்சியினால் சேமமடு பதிப்பகம் “ வித்தியின் பார்வையும் பதிவும்” என்ற நூலை வெளியிட்டுள்ளது. பேராசிரியரின் கட்டுரைகளையும் நூல்களையும் ஒப்பு நோக்குகின்ற போது “ தமிழர் சால்பு” என்ற நூலை தவிர ஏனைய நூல்களும் கட்டுரைகளும் ஈழத்து இலக்கியம் பற்றியே அமைந்துள்ளன. அந்தவகையில் ஈழத்துத் தமிழ் அறிஞர்கள் பற்றி அவர் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை தொகுத்து கலாநிதி. தி. கமலநாதன் தெ. மதுசூதனன் ஆகியோர் நூலாக வெளிக் கொணர்ந்துள்ளமை வரவேற்கத்தக்கதோர் முயற்சியாகும். இவை ஈழத்து இலக்கிய முன்னோடிகள் குறித்து அறிவதற்கும், கலை இலக்கியம் குறித்து பேராசிரியரின் பார்வையை தரநிர்ணயம் செய்வதற்கும் யாவற்றுக்கும் மேலாக பேராசிரியர் குறித்து எழுந்துள்ள விமர்சன - விவாத கருத்தோட்டங்களை மறுமதிப்பீடு செய்வதற்கும் ஏதுவாக அமைந்துள்ளன.

தற்காலத்தில் உலகலாவிய ரீதியில் உருப்பெற்று வரும் தமிழ் இலக்கிய ஆய்வு விருத்தியின் பிரிக்க முடியாத அம்சமாக ஈழத்து தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகள் இடம்பெற்று வருகின்றன. அவ்வகையில் பேராசிரியரின் கலை இலக்கிய பங்களிப்பு குறித்து நோக்குகின்ற போது அம் முயற்சி ஈழத்து தமிழ் இலக்கியத்தின் பிரிக்க முடியாதொரு கூறாக அமைந்துக் காணப்படுகின்றது. எனினும் அவர் பொறுத்து வெளிவந்துள்ள விவரண - விமர்சன இரசனை அடிப்படையிலான ஆய்வுகளை நோக்குpமடத்து, பேராசிரியர் சம்பந்தமான சர்ச்சைகளிலும் விசாரங்களிலும் பலருக்கு ஈடுபாடு அதிகரித்திருப்பது வெளிப்படையேயாயினும் பெரும்பாலான ஆர்வலர்களுக்கு இலக்கியக் கொள்கை, வரலாற்றுணர்வு, சமூகவியல் அறிவு என்பவற்றில் பயிற்சியும் பரிச்சயமும் போதியளவுக்கு இல்லாமையால், அரங்கின்றி வட்டாடுவதாகவே அவர்களின் எத்தனங்கள் அமைந்து விடுகின்றன.

காலத்தின் தேவைகளும் போக்குகளும் இலக்கிய விசாரத்தைப் பெருமளவுக்குப் பாதிப்பது இயல்பே. அந்தவகையில், கடந்த காலத்தில் பேராசிரியர் பற்றிய நோக்குகளும் மதீப்பீடுகளும் இருபெரும் பிரிவுகளில் அடங்குவனவாய்க் இடம்பெற்று வந்துள்ளன. பேராசிரியர் ஆதரவளித்த தமிழரசுக் கட்சியை ஆதாரமாக கொண்டு குறுகிய தமிழ் தேசியத்தின் சகலவிதமான பலவீனங்களையும் அவர்மீது அவர் மீது சுமர்த்தி அவரை குறுகிய தமிழ் தேசியவாதியாக காட்ட முனைகின்ற முயற்ச ஓருபுறமானது. தமிழ் தேசியம், சுயநிர்ணய உரிமைக் குறித்து கம்யூனிஸ்ட்டுகள் சுயவிமர்சனம் செய்துக் கொண்ட பின்னரும் சில அதித்தீவிர புரட்சியாளர்கள் இப்பார்வையினைய நிலை நிறுத்தி வருகின்றனர்.

இன்னொரு கோணத்தில் பேராசிரியரின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காகவும் தமது குறுகிய நோக்கங்களுக்குப் பயன்படுத்த முற்பட்ட சிலர் அவரை தவறுகளுக்கு அப்பாற்பட்ட மானூடராகவும அதற்கும் மேலான் கடவுளாகவும் காட்ட முனைவதை அவதானிக்கலாம். இவர்களின் பார்வையில் குறுகிய தமிழ் தேசிய நோக்கு, கம்யூனிய எதிர்ப்பு ஆகிய இரண்டுமே முனைப்பாகச் செயற்பட்டு வந்துள்ளன. நான்கு குருடர்கள் யானையை செயற்பட்டு வந்துள்ளன. நான்கு குருடர்கள் யானையை பார்த்த கதையை போல ஒவ்வொரு குருடரும் யானையின் ஒரு பகுதியை மட்டும் தடவி, அப்பகுதியை முழு யாணையாக கூறிய கதையாக பேராசிரியர் குறித்த ஆய்வுகள் இடம்பெற்று வந்தள்ளதை அறியக் கூடியதாக உள்ளன. அவர்களது நடைமுறையின் போதாமையும் அனுபவத்தை அறிவாக விருத்தி செய்யும் முறையின் குறைபாடுகளும் அவர்களின் சிந்தனை அவ்வாறு குருட்டுத் திசையில் இட்டுச் சென்றுள்ளன.

இதற்கு மாறாக பேராசிரியர் பொறுத்த கட்டுரைகளும், நினைவு குறிப்புகளும் அஙகாங்கே திட்டுக்களாகவும் தீவுகளாகவும் வெளிவந்துள்ளன. இவை முற்போக்கு, மார்க்ஸிய முகாமை சார்ந்த அறிஞர்களாளேயே எழுதப்பட்டுள்ளன என்பதும் மனங்கொள்ளத் தக்கதாகும். பேராசிரியர் பற்றிய ஆய்வுகள் ஆரோக்கியமான கதியில் செல்லத் துவங்கியிருப்பதை இக்கட்டுரைகளும் நினைவு குறிப்புகளும் எடுத்துக் காட்டுகின்றன.

இன்னொரு கோணத்தில் மார்க்ஸிய சமூகவியல் அடிப்படையில் பேராசிரியர் குறித்த ஆய்வுகள் மேலும் மேலும் ஆராயப்பட வேண்டும். வர்க்க ஆய்வை எவ்வாறு மேற்கொள்வது? மார்க்ஸிய அணுகுமுறையில் பேராசிரியரை மதீப்பீடு செய்வது எப்படி? இன்று இவை பலரிடையே வாத பிரதிவாதங்களை எழுப்பியுள்ளன. அவர் ஈழத்து நாட்டாரியல், நாட்டுக் கூத்து நாடகம் போன்ற துறைகளை வளம்படுத்தினார் என்பதற்காக பேராசிரியர் சமூகமாற்றத்திற்காக வழங்கிய பங்களிப்பினை நிராகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவ்வாறே, பேராசிரியர் பற்றிய முரண்பாடுகளை தீர்ப்பது எப்படி? நவீன வரலாற்று சூழலில் பேராசிரியரை நுட்பமாக எடைப்போடுகிறது எப்படி? இவை முக்கியமான கேள்விகள். இத்தகைய கேள்விகளின் பின்னணியில் பேராசிரியரின் சமூக பங்களிப்பு குறித்து ஆழமான - நுட்பமான - மாக்ஸிய பார்வையின் அடிப்படையில் நோக்க முற்பட்ட ஆரம்ப கட்ட முயற்சியாக அண்மையில் தினக்குரல் (ஞாயிறு)பத்திரிக்கையில் கலாநிதி ந . இரவீந்திரன் அவர்கள் எழுதிய பேராசிரியர் வித்தியானந்தன் மறு மதீப்பீட்டுக்கான சிறுகுறிப்பு என்ற கட்டுரையும் புன்னகை நிகழ்வில் (08-05-2009) இடம்பெற்ற நேர்காணலும் பயனுள்ள முயற்சிகளாக அமைந்துக் காணப்படுகின்றன. பேராசிரியர் பற்றிய ஆய்வுகளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு இயக்கவியல் அடிப்படையில் விளக்கம் கூற முயன்றுள்ளார். இத்தகைய ஆய்வுகள் விரிவடைதல் வேண்டப்படுவதாகும்.

இவ்வாறானதோர் சூழலில் பேராசிரியர் அவ்வப்போது ஈழத்து இலக்கிய முன்னோடிகள் குறித்து எழுதிய கட்டுரைகள் யாவற்றினையும் தொகுத்து இந்நூல் வெளிவந்தமை காலத்தின் தேவையை நிறைவு செய்வதாக அமைந்துள்ளது. இத்தொகுப்பில் ஆறுமுக நாவலர், சுவாமி விபுலானந்தர், பாவலர் துரையப்பாபிள்ளை, பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, தவத்திரு தனிநாய அடிகள், பேராசிரியர் பேரம்பலம் கனகசபாபதி, பேராசிரியர் க. கைலாசபதி, பண்டிதமணி
சி . கணபதிப்பிள்ளை, பேராசிரியர் அ. சின்னத்தம்பிப்புலவர்; சிவங் . கருணாலய பாண்டியனார் முதலிய அறிஞர்கள் பற்றிய கட்டுரைகளே அடங்கியுள்ளன. இவ்வறிஞர்கள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்து தமிழ் இலக்கிய பங்களிப்பு செய்தவர்கள் ஆவர். ஈழத்தில் இவர்கள் குறித்த ஆய்வுக்கான தேவை எழுந்ததற்கான சமூதாய வரலாற்றுப் பின்னனிக் குறித்த தெளிவு இங்கு அவசியமானதொன்றாகின்றது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் உலகெங்கும் விழிப்புணர்ச்சி தோன்றிய காலக்கட்டமாகும். ஐரோப்பியாவிலே தோன்றிய பொதுமக்கள் சார்பான உலக கண்ணோட்டமானது ஆசிய நாடுகளையும் பாதிக்க கூடியதாக இருந்து. இக்காலத்தே எழுந்த தத்துவங்களும் கோட்பாடுகளும் மக்களை சார்ந்தே தோற்றம் பெற்று வளரலாயிற்று 19 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தில் நிலவிய “உலகம் என்பது உயர்ந்தார மேற்றே” எனும் அடிபடையில் இவ்வுலகும் அதனடியாக தோன்றிய கலை இலக்கியங்களும் சமூதாயத்தில் வாய்ப்பும் வசதியும் பெற்றவர்களின் ஆபரணமாகவே அமைந்துக் காணப்பட்டது. ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தோன்றிய சமூதாய சார்பான பார்வையும் மக்கள் எழுச்சியும் பொது மக்கள் சார்பான கோட்பாடுகளையும் தத்துவங்களையும் தோற்றுவித்திருந்தது. இதனடியாகவே “ பொதுமக்கள்” “ சனங்கள்” என்ற பதங்கள் புலக்கத்திற்கு வந்தன. ஆரம்பத்தில் மத்திய தர வர்க்கத்தினரை பிரதிநிதித்துவம் படுத்திய இப்பதங்கள் காலப்போக்கில் பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் அது குறிப்பாயிற்று. இக்கால பகுதியில் ஈழத்தில் தமிழுக்கும் சைவத்திற்கும் தொண்டாற்றிய ஆறுமுகநாவலர் அவர்கள் பத்திரிக்கையின் வாசகர் பரப்பு பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“ பத்திரிகையினது கடமை யாது? சனங்களுக்குப் பொது நன்மை செய்வது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், மகமதியர்கள் என்கின்ற சனங்கள் இப்பொழுது இரண்டு மூன்று வருஷகாலம் என்ன நிலையில் இருக்கிறார்கள்? துவையினந் துரையுடைய சிநேகிதர்களாகிய சில உத்தியோகத்தர்கள் ஒழிந்த மற்றச் சனங்களளெல்லாம் துவையினர் துரையினாலும் அவர் கீழுத்தியோகத்தர்களாலுந் துன்பமே அனுபவிக்கின்றார்கள்; சனங்களுடைய பணங்கொண்டு நடத்தப்படுகின்ற ‘உதய தாரகை’ இதிலே தன் கடமைச் செய்கின்றதா? இல்லை பின் யாது செய்கின்றது. துவையினர் துரைக்குச் சார்பாகச் சனங்களுக்கு மாறாகப் பொய் வார்த்தையே பேசுகின்றது.”

நாவலரின் மேற்குறித் வரிகளின் மூலமாக சனங்கள் என்ற சொல் எந்தளவு பரந்த அர்த்ததில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறியலாம். இக்காலத்தில் ஜனநாயகத் தன்மை வளர அதன் ஜனரஞ்சகப்படும் வளர்ச்சி அடையத் தொடங்கியதும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக் கொள்ள வேண்டும் என்ற இச்சிந்தனை பாரதியில் இவ்வாறு பிரவாகம் கொண்டிருந்தது.

‘எளிய பதங்கள், எளிய நடை, எளிதில் அறிந்துக் கொள்ளக் கூடிய சந்தம், பொதுசனங்கள் விரும்பும் மெட்டு இவற்றினையுடைய காவியமொன்று தற்காலத்திலே செய்து தருவோன் நமது தாய்மொழிக்கு புதிய உயிர் தருவோனாகின்றான்; ஓரிரண்டு வருஷத்து நூற்பழக்கமுள்ள தமிழ் மக்களெல்லோருக்கம் நன்கு விளங்கும்படி எழுதுவதுடன் காவியத்திற்குள்ள நயங்கள் குறைப்படாமலும் நடத்துதல் வேண்டும்.”

இக்காலப்பகுதியில் இலக்கியத்தில் பொது மக்கள் சார்பு என்ற பண்பு இலக்கியத்தில் முனைப்பு பெற்று வந்துள்ளதை அவதானிக்கலாம். இவ்வகையில் ஈழத்தில் எழுந்த தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து நோக்குகின்ற போது “.... இலங்கைப் பாரம்பரியத்திலே தமிழ் இலக்கியம் எனும் பொருள் பற்றிச் சிந்திக்கும் பொழுது ஓர் எண்ணம் முதலிலே தலைத்தூக்குகின்றது. இந்நாட்டில் தமிழ் மக்கள் வாழத் தொடங்கிய காலமுதல் வாழ்க்கைக்குத் தேவையான தத்துவம், சமயம், சட்டம், நுண்கலைகளை உருவாக்கி வளர்த்து வந்துள்ளனர். இத்துறைகள் அனைத்திலும் பற்பல சாதனைகளைத் தமிழ் மக்கள் கண்டுள்ளனர். எனினும் இவை யாவற்றுள்ளும் இலக்கிய துறையிலேயே நீண்டகாலமாகச் சாதனைகளை ஈட்டியுள்ளனர். சங்க செய்யுள்கள் சிலவற்றை பாடியவராகக் கருதப்படும் ஈழத்து பூதந் தேவனாரிலிருந்து இன்று கவிதை எழுதும் இ. முருகையன் ஈறாக இலக்கிய மரபு ஒன்று சங்கிலிப்பின்னல் போல வாழையடி வாழையென வந்திருப்பதை இலகுவில் மறுக்கவியராது”. ( க. கைலாசபதி : ஈழத்து இலக்கிய முன்னோடிகள், பக் 07)

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவானது மிக தொன்மைக்காலம் தொட்டே இருந்து வந்துள்ளதை நாம் அறிவோம். புவியல் அமைப்பும் இதற்கு பிரதானமான காரணமாக அமைந்துள்ளது என்பதை விவரித்து விளக்க வேண்டிய அவசியமில்லை. அந்தவகையில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான இலக்கிய தொடர்பானது தவிர்க்க இயலாதவகையில் பொதுத் தன்மையினை கொண்டதாக அமைந்திருந்தது. ஈழத்து இலக்கிய அறிஞர்கள் பலர் இந்தியாவிற்கும் இந்திய இலக்கிய அறிஞர்கள் இலங்கைக்கும் சென்று வந்தனர். இவ்விருவழித் தொடர்பின் காரணமாக ஒரு மாணவ பரம்பரையும் தோன்றியதை நாம் வரலாற்றினூடாக அறியக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக இவ்விரு நாடுகளிடையிலுமான இலக்கியத்தில் பொதுத் தன்மையே முனைப்புப் பெற்றிருந்து.

1950 க்கு முன்னர் இந்தியாவை தாய் நாடகவும் இலங்கையை சேய் நாடாகவும் கருதியமையினால் ஈழத்தவரும் இந்திய நூல்களையும் சஞ்சிகைகளையுமே விரும்பி படித்தனர். பொதுவாக இந்திய ஆக்கங்களுக்கான ஒரு சந்தையாகவே இலங்கை இருந்ததேயன்றித் தமிழ் எழுத்தாளர்களும் புத்தகங்களும் போன்ற வாய்ப்பான நாடாக இலங்கை இருக்கவில்லை.

இலங்கையில் சுதந்திரமடைவதற்கு முற்பட்ட காலத்தில் இந்திய தேசியவாதத்தின் செல்வாக்கே முனைப்புற்று காணப்பட்டது என்ற போதிலும் சென்ற நூற்றாண்டின் தொடராக்கத்திலிருந்தே இலங்கையில் தேசியவாத சிந்தனை முகிழ்ந்து வளரத் தொடங்கியது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் எழுதிக் காட்டியுள்ளனர். ஆரம்பத்தில் அது சமய கலாசார பண்பாட்டு துறைலும் பின்னர் பொருளாதர துரையிலும் அதன் விளைவுச் செறிந்த தாக்கத்தை இனங்காண முடியும்.

1953 இல் இலங்கையில் இடம்பெற்ற தேசம் தழுவிய ஹர்த்தால் போராட்டமானது இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அப்போராட்டம் தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளை தன்னகத்தே கொண்டிருந்தமை அதன் பலமான அம்சமாகும். இதன் வீறுகொண்ட எழுச்சியினை அறுபதுகளில் இலங்கையின் வடக்கில் தோன்றிய சாதி எதிர்ப்பு போராட்டத்தில் காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறானதோர் சூழலில் நமது நாடு, நமது மக்கள், நமது கலாசார பண்பாட்டு பாரம்பரியம், நமது அரசியல்; நமது பொருளாதாரம் என்ற உணர்வு ஏற்பட்டது. இந்த பின்னனியில் தான் இலங்கையில் தேசிய இலக்கியக் கோட்பாடு இயக்க வடிவம் பெற்று மக்கள் மத்தியில் முன்னெடுத்து செல்லப்பட்டன. இத்தகைய வரலாற்று தேவையே இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்றதொரு அமைப்பு உருவாவதற்கு ஏதுவாக அமைந்தது. இத்தகைய பின்னணியில் எழுந்த இலக்கியமானது குறுகிய தேசிய எல்லைகளை கடந்து சர்வதேச கண்ணோட்டத்தில் நோக்கப்பட்டது. அதன் செல்நெறி குறித்து பேராசியர் க. கைலாசபதி pபன்வருமாறு குறிப்பிடுகின்றார்
“..... ஒரு நாட்டின் பூலோகம், சீதோஷ்ணம், பண்பாடு, பொருளாதாரம், அரசியல் அமைப்பு முதலியன எல்லாம் வெவ்வேறு அளவிலும், வடிவிலும், முட்டிமோதியே மனித வாழ்க்கையை நிர்ணயப்படுத்துகின்றன. இவற்றை சமுதாய சக்திகள் என்றும் பொருளாதார சக்திகள் என்றும் அழைக்கின்றோம். இந்த சக்திகளுக்கு கட்டுப்பட்டும், விடுபட முயன்றும் வாழும் மனித வாழ்க்கையையே தேசிய இலக்கியம் காட்ட வேண்டும்@ காட்டுகிறது. அவ்வாறு காட்டும் பொழுது தேசியமும் இலக்கியமும் குறுகிய வரம்புக்குள் அடங்கியது போலத் தோன்றும். அதுவும் ஓரளவிற்கு உண்மையே@.”

இவ்வாறான பின்னணியில் ஈழத்து எழுத்தாளர் மத்தியில் ஈழத்து படைப்பிலக்கியம் சம்பந்தமான விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் தோன்றியது. அந்த வகையில் இலங்கை இலக்கியம் என்ற சொற்றொடரானது தமிழ் இலக்கியம் என்ற பரப்பிற்குள் அடங்கிய அதே வேளையில் ஈழத்திற்கே உரித்தான தனித்துவங்களுடன் தோன்றி வளரத் தொடங்கின. அத்தனித்துவத்தை நிலைநிறுத்தும் பொருட்டே ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் குறித்த தேடல், ஆய்வு, மதீப்பீடுகள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

இத்தகைய பின்னனியில் பேராசிரியர் அவர்களின் ஈழத்து இலக்கிய முன்னோடிகள் பற்றிய தேடல் எத்தகைய தளத்தினை பிரதிப்பலித்து நிற்கின்றது என்பது பற்றி சிந்தித்தல் காலத்தின் தேவையாகவுள்ளது.

ஈழத்தில் அந்நியரின் ஆட்சி மேலோங்கியிருந்த காலத்தில் நமது கலாசார பண்பாட்டு, பாரம்பரியமனது கடும் சோதனைக்குட்பட்டதாக காணப்பட்டது. அதனை மீட்டெடுப்பதில் ஆறுமுக நாவலரின் பங்கு முக்கியமானதாகும். இது குறித்து கலாநிதி ந. இரவீந்திரன் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“ நாவலர் மதவாதிக்குரிய, சாதியவாதிக்குரிய பங்குபாத்திரத்தை வகித்தவரல்ல. ஏகாதிபத்தியத்தின் பண்பாட்டு; திணிப்பிற்கும் அழிப்பிற்கும் எதிராக எமது பண்பாட்டை பாதுக்காக்கின்ற கடமையை மேற்கொண்ட மதப்பற்றாளர். இதன் அடுத்த கட்ட வளர்ச்சியே தேசிய குரலாகப் பரிணாமிப்பது. அவர் காலத்தில் தேசிய விழிப்புணர்வு எனும் அரசியல் நிலைப்பாடு இருக்கவில்லையேனினும் அதன் முன்னோடிக்கான குணாம்சங்களே அவரில் வெளிப்பட்டன. ராம் மோகன்ராய், தயானந்தர், போல சாதி எதிர்ப்பு, பெண் விடுதலை குரல் ஆகிய இவரிடம் இருக்கவில்லை. கிறிஸ்தவ பாதிரிகளுடன் நிகழ்த்திய ஒரு கடவுள் கோட்பாடு, மதத்தூய்மை சார்ந்த விடயங்களில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டார்.”

நாவலரின் மதவழிப்பட்ட போராட்டமானது ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை கொண்டிருந்த துடன் பொதுமக்கள் சார்பான பார்வையை முன்னிலைப்படுத்தி தமது செயற்பாடுகளை முன்னெடுத்தார். அவ்வகையில் நாவலர் பொதுமக்கள் சார்ப்பில் மேற்கொண்ட கல்விப்பணி, பதிப்பு முயற்சிகள் குறித்து அவரது ஆளுமை சிதையாதவகையில் பேராசிரியவர்கள் “தமிழகத்தை ஈழநாட்டுக்கு கடமைப்படுத்திய பேருபகாரி” என்று கட்டுரை மூலமாக வெளிக் கொணர்கின்றார்.

அவ்வாறே இந்நூலில் இடம்பெறுகின்ற “ தமிழ்த்துறை முதற் பேராசிரியர” என்ற கட்டுரை சுவாமி விபுலானந்தரின் ஆசிரியர் பணி குறித்து எழுதுகின்றார். தொடர்ந்து இந்நூலில் உள்ள கட்டுரைகளை வாசித்து செல்கின்ற போது சுவாமி விபுலானந்தர் ஊடாக வெளிப்பட்டு நிற்கின்ற சமுதாய உணர்வு பேராசிரியர் க. கணபதிபிள்ளை ஊடாக பரவி பின்னர் க. கைலாசபதி

என்ற விருட்சத்தை எவ்வாறு உருவாக்கியது என்பதனை இந்நூலின் ஊடாக தரிசிக்க முடிகின்றது. ஆய்வு குறித்தும் அதன் பரந்த தளம் குறித்தும் பேராசிரியர் எத்தகைய பரந்துப்பட்ட பார்வையினை கொண்டிருந்தார் என்பதனை அவரது பின்வரும் வரிகள் எடுத்துக் காட்டுகின்றன.

“தமிழராய்ச்சி என்பது, இலக்கியங்களையும் இலக்கணங்களையும் பதிப்பிப்பது, கற்று சுவைப்பது, மரபை பேணுவது என்ற அளவோடு அமையாமல் தமிழர் சமூகத்தின் பண்பாட்டு வரலாற்றை அறிவியல் பூர்வமாக அணுகியறிதல் என்ற நோக்கில் விரிவடையத் தொடங்கிய காலப்பகுதியது. இப்பணிக்கு காய்த்தல் உவத்தல் அற்ற நடுநிலையான ஆராய்ச்சி நோக்கும் சமூகத்தையும் மொழி இலக்கியம் என்பவற்றையும் அணுகி நோக்கிச் சர்வதேசத்தரத்தில் கருத்துக்களை வெளியிடத்தக்க அற்றலும் தேவைப்பட்டன. தமிழகத்தில் பேராசிரியர் எஸ். வையாப்புரிப்பிள்ளை இவ்வகை ஆராய்ச்சிக்கு வித்திட்டிருந்தார். ஈழத்திலே பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை இத்தகைய முயற்சிகளுக்குக் களம் அமைத்திருந்தனர். தமிழகத்தை விட ஈழத்தில் இத்தகைய ஆய்வுக்கு வாய்ப்பு அதிகமாக காணப்பட்டது. தமிழகத்திலே அரசியல் பண்பாட்டுக் காரணிகளையே தமிழ் மரபு பேணுவதில் காணப்பட்ட தீவிர ஆராய்ச்சித்துறைகளைப் பாதித்தன என்பதனையும், ஈழத்திலே அத்தகைய பாதிப்புகளற்ற சுதந்திரமான ஆராய்ச்சிக்கு வாய்ப்பு இருந்தென்பதையும் நாம் உணர வேண்டும்.”

இவ்வகையில் வாளையடி வாளையென வந்த ஆய்வு போக்குகளும் சிந்தனைகளும் பேராசிரியர் க. கைலாசபதியில் எவ்வாறு முனைப்பு பெற்றிருந்தது என்பதனை பேராசிரியர் அதே கட்டுரையில் சிறப்பாகவே அடையாளம் காட்டியுள்ளார்.

இத்தொகுப்பில் இடம்பெறுகின்ற பிறிதொரு முக்கியமான கட்டுரை “ பேராசிரியர் அ. சின்னத்தம்பி அவர்கள் பற்றிய நினைவுப் பேருரையாகும். இது வரை கால தமிழ் இலக்கிய ஆய்வில் சிருஷ்டி இலக்கியமே பெரும்பாலும் கருத்திற் கொள்ளப்பட்டு வந்திருக்கின்றது. சமயம், தத்துவம், சட்டம், மெய்யியல், சாத்திரம் முதலிய துறைகளை கருத்திற் கொண்டனர் அல்லர். வைத்திய துறையிலே குறிப்பிடத்தக்க சாதனைகளையும் சமூக பங்களிப்பினையும் வழங்கிய பேராசிரியர் சின்னத்தம்பி அவர்கள் வைத்திய துறையில் சில விலைமதிப்பற்ற நூல்களையும் எழுதியுள்ளனர். அம் முயற்சியின் பயனாக தமிழில் நவீன வைத்திய துறைச் சார்ந்த அறிவு விருத்தி செய்யப்பட்டதுடன் தமிழ் மொழியை வளம்படுத்துவதற்கு ஏதுவாகவும் அமைந்துள்ளன. அதாவது மொழியின் ஏற்புடமை விருத்தி செய்யப்பட்டன. இம்முயற்சி புதிய சிந்தனைகளும் கலைச் சொற்களும் தோற்றம் பெற்று தமிழ் மொழியை வளப்படுத்துவதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. இது குறித்த பேராசிரியரின் பார்வை விசாலமானது.

இவ்வாறே பாரதியின் சமகாலத்தவரும் அதேசமயம் அவரது இலக்கிய போக்கினை ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் பிரதிபலித்து நின்ற ஈழத்து இலக்கிய முன்னோடியான பாவலர் துரையப்பாப் பிள்ளை குறித்த இவரது கட்டுரை முக்கியமானதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈழத்தில் தோன்றிய சமூக சீர்த்திருத்த கருத்துக்களை எவ்வாறு இவரது படைப்புக்கள் பிரதிபலித்து நிற்கின்றன, அவை அக்கால சமூக உருவாக்கத்தில் எத்தகைய தாக்கத்தினை செலுத்தியுள்ளன என்பது குறித்து இக்கட்டுரை அலசுகின்றது.

இத்தொகுப்பில் அடங்கியுள்ள புலவர் சிவங் - கருணாலய பாண்டியனார் பற்றிய கட்டுரை முக்கியமாதொனறாகும். இலங்கையில் மூன்று விதமான இலக்கிய போக்குகள் ஊற்றெடுத்து வளர்ச்சி பெற்றதாக பேராசிரியர் அடையாளம் காட்டியுள்ளார். இலங்கையின் வடபகுதியை மையமாகக் கொண்டெழுந்த ஆறுமுகநாவலரின் தாக்கம எவ்வாறு ஒரு ஞானப்பரம்பரையை உருவாக்கியதோ அவ்வாறே கிழக்கிழங்கையை மையமாக கொண்டு எழுந்த சுவாமி விலானந்தரின் சிந்தனையை ஆதர்சனமாக கொண்டு ஓர் அறிவுப் பகுதியினர் தோற்றினர். இதற்கு மாறாக கொழும்பை மையமாகக் கொண்டதாக புலவர் - சிவங்கருணாலய பாண்டியனாரின் இலக்கிய மரபொன்று உருவானதை தமது கட்டுரையின் மூலமாக எடுத்துக் காட்டுகின்றார். புலவரில் தனித்தமிழ் இயக்கத்தின் தாக்கத்தினை காணக் கூடியதாக உள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற உண்மை ஆதாரமாகக் கொண்டு அதில் முதலாவது தோன்றிய குரங்கு எனது அப்பா என்று கூறுவதற்கு ஒப்பானதாக இவர்களது தமிழ் தேசிய வாத சிந்தனைகள் அமைந்துக் காணப்படுகின்றன. புலவரின் தமிழ் பற்றுக் குறித்து பேராசிரியர் அவர்கள் பின்வருமாறு எடுத்துக் கூறுகின்றார்.

“தனித்தமிழ்” என்ற சிந்தனை தமிழ்மொழி பிற மொழிகள் எவற்றினதும் துணையின்றித் தனித்தியங்க வல்லது என்ற உயர்வு நிலையின் அடியாக உருவானதாகும். வடமொழியும் வேறுபல மொழிகளும் காலத்துக்கு காலம் தமிழில் நிகழ்த்தியுள்ள ஊடுருவல்களிலிருந்து அதனை மீட்டெடுத்துப் பேணிக் கொள்ள முயலும் தற்காப்பு முயற்சியாக இச்சிந்தனை உருவெடுதத்து. கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் கால்டூவெல் முன்வைத்த திராவிடமொழி ஆய்வுப் பேறுகளிற் கருக்கொண்ட இச்சிந்தனை, இந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மறைமலையடிகளின் பெரு முயற்சியால் இயக்க வடிவம் பெற்றது. மறைமலையடிகள் ஈழத்திற்குப் பன்முறை (1914ஆம், 17ஆம்,21ஆம் ஆண்டுகளில்) வருகை தந்ததை ஒட்டி, ஈழத்திலும் தமிழறிஞர் மத்தியில் இச்சிந்தனை பரவியது. தா. அழகசுந்தரதேசிகன், சுவாமி ஞானப்பிரகாசர், க. நவநீதகிருஷ்ண பாரதியார், சுவாமி விபுலானந்தர், பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை , இளமுருகனார், வேந்தனார் முதலிய பலர் வெவ்வேறு நிலைகளில் இத்தனித்தமிழ் சிந்தனையால் ஈர்க்கப்பட்டனர். இவர்களுக்கு சமகாலத்தில் வாழந்தவராகிய புலவர் பாண்டியனார் அவர்கள், வடமொழியிலே ஆழ்ந்த அறிவு பெற்றிருந்த போதும், பிடிவாதமான தனித்தமிழ்ப் பற்றுக் கொண்டிருந்தார். அதனாற்போலும் மறைகளையும், மந்திரங்களையும் கூடத் தனித்தமிழிற் பெயர்த்துகூறும் விருப்பும் வல்லமையும் பெற்றிருந்தார். அந்த வல்லமையை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். மந்திரவடிவிலனதாக வடமொழியிலெழுந்த நூல்களைத் தமிழ்ப்படுத்தல் தகாது என்று எண்ணுவோருக்கு மாறாக தமிழில் எதனையும் பெயர்த்தமைக்கலாம் என்னும் உறுதி பாண்டியனாரிடம் இருந்தது. இன்னும் ஒருபடி மேலே போய் வடமொழி செய்யுளிற் சொல்வதைவிடச் சுருக்கமாகவும் திட்பமாகவும் தமிழ் செய்யுளில் அமைத்து விடலாம் என்னும் எண்ணமும் அவருக்கு உண்டு.”

அவ்வாறு பிறமொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிப் பெயர்க்கின்ற போதும் அவர் தூய தமிழ் சொற்களையே பயன்படுத்தினார். அத்துடன் பேச்சு மொழிகயையும் புறக்கணிக்கின்ற சிந்தனை புலவரிடம் ஆழமாக வேருன்றியிpருந்தது. தமது எழுத்தில் மட்டுமன்று அவரது நடைமுறை வாழ்கைலும் கூட இத்தகைய பண்டித மரபை எவ்வாறு கடைப்பிடித்திருந்தார் என்பதை பேராசிரியர் அவர்கள் சிறப்பாகவே அடையாளம் காட்டி நிற்கின்றார். பேராசிரியரின் பார்வை விசாலமானது, நுண்ணுனர்வு மிக்க அவரது பரந்த இதயத்தை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. உதாரணம் தேடி வெகுதூரம் செல்ல வேண்டிய அவசியமில்லை இத்தொகுப்பில் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையிலன பந்தியொன்றினை இங்கொரு முறை குறித்துக் காட்டுவது அவசியமானதாகும்.

“எமது கிராமியக் கலைகளில் நிலை இவ்வாறிருப்பினும், நாட்டுப்புற மக்களுடைய வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மக்கள் இலக்கியமாக வாய்மொழி இலக்கியம் உலகம் எங்ஙணும் பரந்துள்ளது. மக்கள் வாழ்க்கையின் பண்பாட்டு அளவுகோலாகிய இவ்வகை இலக்கியங்கள் பற்றிய ஆய்வுகள், உலக நாடுகள் பலவற்றிலும் விரிவாக மேற்கொள்ளப்பட்டு வருவது எமது கவனத்திற்குரியது. கற்றோரிடையே செல்வாக்குப் பெற்றுள்ள உயரியலட்சியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளைத் தமிழ் மொழியிலே மேற்கொண்டமை போல எல்லாவகை மக்களிடையேயும் பரவியுள்ள வாய்மொழி இலக்கியங்களைப் பற்றிய ஆய்வுகள் முழுமையாகத் தமிழிலே மேற்கொள்ளப்பட வில்லை. அண்மைக் காலங்களில் வளர்முக நாடுகளிலே நாட்டார் பண்பாட்டியல் பற்றிய ஆராய்ச்சிகள் துரித கதியிலே நடைபெறுவது போலத் தமிழ்சாட்டுப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராகவும் உலகத் தமிழாராச்சி நிறுவனத்தினராலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பேராசிரியரின் மொழிச் சிந்தனையானது புலவர் பாண்டியனாரிருந்து வேறுபட்டு நின்றதுடன் அது மக்களை தழுவியதாக கிளைப்பரப்புவதை அறியக் கூடியதாக உள்ளது . மொழி உணர்ச்சி, மொழிப்பற்றுக்குரித்து சுபைர் இளங்கீரன் அவர்களின் பின்வரும் எமது கவனத்திற்குரியது.

“ மொழிப்பற்று இருக்க வேண்டியது அவசியம். அம்மொழிப்பற்று யதார்த்த பூர்வமான - விஞ்ஞான ரீதியான உண்மையைத் தழுவி தொளிவான கருத்தோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அதனால் மேற் கூறிய புகழுரைகள் தமிழ் மொழியை புனிதமான அந்தஸ்தில் பூஜைக்குரிய நிலையில் - கடவுளின் ஸ்தானத்தில் கொண்டு போய் நிறுத்தியுள்ளது. எனவேதான், தமிழ் மக்கள் மொழியை தவிர வேறு எதையும் முதன்மைப்படுத்தி சிந்திக்க மறுக்கிறார்கள். இந்த நிலையும், இந்தக் கருத்தோட்டங்களும் விஞ்ஞான ரீதியில் சிந்திப்பதிலிருந்து திசைதிருப்பி விட்டிருக்கின்றது. எனவே தான் மொழிப்பற்று குருட்டுப் பக்தியாக உருவெடுத்து நிற்கின்றது.

தேசிய இலக்கியம், கோட்பாடு என்பன இயக்க ரீதியாக முன்னெடுக்கப்பட்ட காலச் சூழலில் அதன் கோட்பாட்டு ரீதியான தெளிவோ புரிந்துணர்வோ பேராசிரியரவர்களிடம் காணப்படவில்லையெனினும் தேசிய இலக்கிய பண்பகள் அவது எழுத்துக்களில் விரவிக் கிடப்பதை காணலாம். ஓர் ஒப்புமை வசதிக்காக பேராசிரியரவரின் பார்வையை பேராசிரியர் க. கைலாசபதியுடன் ஒப்பு நோக்குவது காலத்தின் தேவையாக உள்ளது. இலக்கியத்தில் முற்போக்குவாதம், மார்க்ஸியம்வாதம் தொடர்பில் சி. பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“முற்போக்குவாதம் பற்றிய ஆய்வு, அது சிந்தனை தெளிவு நிலை (மாத்திரமே) என்பதனை நிலைநிறுத்துகின்றது. மார்க்ஸியத்தை விபரிக்கும் அறிஞர்கள் அதனை அரசியல் நடவடிக்கைக்கான வழிகாட்டி அன்றேல் அரசியல் நடவடிக்கைக்கான ஆற்றுப்படை என்பர். மார்க்ஸியத்தை திரிகரன சுக்தியாக ஏற்றுக் கொள்ளும் போது, அவ்வாதத்தினை அடிப்படையாகக் கொண்டு உலகை மாற்றி மனித சமுதாயத்தின் முற்போக்கு பாதையினை உறுதிப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளுதல் இயல்பாகின்றது. ஆனால் முற்போக்குவாதம் பற்றிய எண்ணத்தொய்வு நிலை அத்தகைய நேரடி நடவடிக்கை நிலையினைச் சுட்டி நிற்ப்பதில்லை. மார்க்ஸியவாதிகள் முற்போக்கு வாதிகளே. ஆனால் முற்போக்குவாதிகளோ மார்க்ஸியம் வற்புறுத்தும் உலக மாற்றத்தக்கான அரசியல் மாற்றத்தினை, நேரடி இயக்க முறைகள் மூலம் நிலைநிறுத்தும் இயக்க வாதியாகவோ தொழிற்படுவதில்லை. முற்போக்கு வாதம் பற்றிய எண்ணத்துய்ப்பும் செயற்படும் ஒருவரை அதனைப் பூரணமாக நடைமுறைப்படுத்தம் அரசியல் நடவடிக்கையாளராக மாற்றலாம். ஆனால் முற்போக்குவாத நிலை அந்த நிலையினைக் குறிக்காது”.

இத்தகைய கருத்தின் பின்னணியில் நின்று நோக்குகின்ற போது பேராசிரியர் சு. வித்தியானந்தன் அவர்கள் தமிழ் தேசியத்தின் கண்மண் தெரியாத குறுகிய வாதங்களை கடந்து தமிழ் தேசியத்தின் முற்போக்குவாதியாக காணப்படுகின்றார். சமூகம் குறித்த தீட்சண்யம் மிக்கதும், யதார்த்த பூர்வமான தத்துவார்த்த பார்வையினை கொண்டிராமை காரணமாக இச் சமூக அமைப்பில் நிலவிய உற்பத்தி முறைகள் உற்பத்தி உறவுகள், மற்றும் சமூக அரசியல் கலாசாரம் தெளிந்த தெளிவற்ற பார்வையை இவரது ஆய்வுகளில் இழையோடிள்ளது. இதற்கு மாறாக பேராசிரியர் க. கைலாசபதியின் ஆய்வுகள் காணப்படுகின்றன. இத்தகைய பின்னனியில் ஈழத்து இலக்கிய பெரும் அறிஞர்கள் குறித்த ஆய்வு நூலொன்றினை “ ஈழத்து இலக்கிய முன்னோடிகள் | என்ற தலைப்பில் தந்துள்ளார். இவ்விரு ஆய்வு முயற்சிகளையும் ஒப்பு நோக்குகின்ற போது இவ் வேறுபாட்டினை நன்கு உணர முடியும்.

பேராசிரியர் கைலாசபதி பேராசிரியர் க. வித்தியானந்தன் அவர்களின் மாணவராக இருந்ததுடன் அவரை விட கைலாசபதி எட்டு வயது இளையவராக காணப்பட்டார். அவர் இறப்பதற்கு ஐந்து வருடங்களுக்கு முன்னரே கைலாசபதி இறந்து விட்டார் என்ற போதிலும் இவ்விரு பேராசிரியர்கள் ஒரே காலத்தவர்களே. இவ்விரு பேராசிரியர்கள் பற்றி காணவந்த முரண்பாடுகள் தனிமனித மற்றும் பதவி போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டாக சுட்டிக் காட்டுகிறது. ஆனால் அவை வெறுமனே தனிமனித முரண்பாடுகளாகவன்றி இவ்விரு ஆளுமைகளுக்கும் இடையில் காணப்பட்ட கோட்பாடு ரீதியான முரண்பாடேயென்பதை என்பதை இதுவரை பாரத்த விடயங்களை கொண்டு நாம் அறியலாம்.

இன்றைய சூழலில் இவ்விரு பேராசிரியர்களும் ஒப்பியல் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்கள் அத்தகைய ஆய்வுகள் பயனுள்ள தாய் அமைவதோடு சுவைப்பதாயும் அமையும் என்பதில் ஜயத்திற்கிடமில்லை. ஆயினும் அத்தகைய முயற்சி இங்கு மேற்கொள்ளப்படவில்லை. பேராசிரியர் வித்தியானந்தனின் பார்வையை தர்நிர்ணயம் செய்வதற்காகவே இத்தகைய ஒப்பியல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை இங்கு நினைவுறுத்துகின்றோம்.

தொகுத்து நோக்குகின்ற போது தமிழ் தேசியம் என்ற இருப்புக் குண்டு காலில் கிடந்து எவ்வளவு இழந்தாலும் செயற்பாட்டாளர், மக்களை நேசித்தவர் என்றவகையில் அதிலிருந்து ஒதுங்கி செல்ல முனைந்ததையே அவரது எழுத்துக்களில் காண முடியும். கொடமைகளை கண்டு கொதிக்கின்ற மனிதாபியின் உள்ளம் தெரிகின்றது. ஆனால் அதற்கான தீர்வு அவரது எழுத்துக்களில் இல்லை என்பதும் தெரிகின்றது. நோக்கம் சிறந்தது பயனுள்ளது என்பது முக்கியமானது. அந்தவகையில் பேராசிரியர் குறித்த சமூகவியல் ஆய்வுகள் வெளிவரவேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. ஆழமான நுட்பமான மார்க்ஸிய ஆய்வுகளின் மூலமாகவே இதனை சாதிக்க முடியும்.

இறுதியாக இந்நூலின் பதிப்பு முயற்சி குறித்து சில விடயங்களை கூற வேண்டியுள்ளது. மறைந்த அறிஞர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விழாக்கள், நினைவுப்பேருரை, அஞ்சலி உரைகள் ஆகியன நிறைவுப்பெற்ற பின்னர் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகள் ஏதும் நடைபெறுவதில்லை. ஆனால் பேராசிரியர் நினைவுக் குழுவினர் குறிப்பாக கலாநிதி தி. கமலநாதன், தெ.மதுசூதன் ஆகியோர் இந்நூலை வெளியிடுவதன் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு பயனுள்ள பங்களிப்பினை வழங்கியுள்ளனர்.

- லெனின் மதிவானம்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com