Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
அனுபவக் கட்டுரை

அனுபவம்
ஜெயபாஸ்கரன்

tribe ஒவ்வொரு மனிதனும் பல்வேறு அனுபவங்களின் களஞ்சியமாக வாழ்கிறான். வாழ்வில் அனுபவங்கள் மிகுந்திருப்பதும் குறைந்திருப்பதும் ஒரு மனிதரின் வயதைப் பொறுத்தல்ல. அவரது செயல்பாடுகளைப் பொறுத்தது. சில மனிதர்களுக்கு அவ்வளவாக அனுபவங்கள் நேர்வதில்லை. அவர்கள் பிற மனிதர்களது அனுபவங்களையே பார்வையாளர்களாக இருந்து பார்த்துவிட்டுப் போவார்கள். ஏதுமற்ற நூறு வயது கிழவரையும், எத்தனையோ கண்ட முப்பது வயது இளைஞனையும் நாம் அவ்வப்போது பார்க்க முடியும். எதை யாவது செய்ய முனைபவர்களுக்கே அனுபவங்கள் நேரும். யாராவது நிர்மானித்து வைத்ததை நிர்வாகம் செய்து கொண்டிப்பவர்களுக்குக் குறிப்பிடத்தக்க எந்த அனுபவமும் நேர்ந்து விடாது. ஆனால் அதை நிர்மானித்தவரிடம் கேட்டுப் பாருங்கள். அவர் தனக்கு நேர்ந்த அனுபவங்களைக் குவியல் குவிய லாகச் சொல்வார். எனவே அனுபவம் என்பது பராமரிப்பவர் களைக் காட்டிலும் படைப்பவர்களுக்கே அதிகம் நேருகிறது. நூறு படத்தில் நடித்தவர்கள் அந்தப் பணியில் தனக்கு நேர்ந்த எத்தனையோ அனுபவங்களைச் சொல்வார்கள். அந்த நூறு படங்களைப் பார்த்தவர்கள் என்ன சொல்லமுடியும்?

தான் நேர்ந்து கொண்ட துறையில் குறிப்பிடத்தக்க உயரத்தை எட்டியவர்கள் எழுத்தாகவும் மேடைப் பேச்சாகவும் தமது அனுபவத்தைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது இயல்பான ஒன்று. ஒரே அறையில் பல ஆண்டுகள் அடைந்து, ஒரே நாற்காலியில் பல ஆண்டுகள் அமர்ந்து கொண்டிருப்பவர்களால் தனக்கு நேர்ந்த அனுபவங்கள் என்று எதையும் பெரிதாகச் சொல்ல முடியாது. “நான் இங்கேயேதான் கிடக்கிறேன். எனக்கு என்ன தெரியும்? நீங்கதான் நாலு இடங்களுக்குப் போய் வருகிறீர்கள் என்ன செய்தி சொல்லுங்கள்?” என்று கேட்பவர்களின் குரலில் ஒருவித இயலாமை தொனிப்பதை நம்மில் பலர் கேட்டிருக்கக் கூடும்.
16 வயதுக்கு மேல் எந்த இளைஞனும் வீட்டில் இருக்கக்கூடாது. வாழ்வைத் தேடி அவன் வெளியிடங்களுக்கு பயணப்பட்டு வெவ்வேறு வகையான மனிதர்களைச் சந்திக்கவும் எதையாவது சுயமாகச் சாதிக்கவும் முனையவேண்டும். அப்போதுதான் அவன் அடுத்த கட்டத்திற்கு உயர்வதற்கான அனுபவங்களைப் பெறலாம் என்கிறார் ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்கிற நூலில் பேராசிரியர் ராகுல சாங்கிருத்தியாயன்.

தமிழக மலைவாழ் மக்களைப் பற்றிய செய்திகளைச் சேகரிக்கும் பணியின் நிமித்தம் கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள கல்கொத்திமலை என்கிற அடர்ந்த வனப் பகுதியில் முடுகர் இனத்தைச் சேர்ந்த மலைவாழ்ப் பழங்குடி ஒருவரிடம் அவரது பயண அனுபவங்களைக் கேட்டபோது, “இந்தப் பக்கம் தொண்டாமுத்தூரிலிருந்து அந்தப்பக்கம் கோயமுத்தூர் வரை நான் போகாத ஊரில்லை; பார்க்காத இடமில்லை” என்று சொல்லி விட்டுப் பெரிதாகச் சிரித்தார். அவரது பயண அனுபவத்தைக் கேட்டு நான் பிரமிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். சுமார் இருபது கிலோமீட்டர் பயண அனுபவமே அவருக்கு மிகப் பெரிய அனுபவமாக அமைந்து விட்டது.

எந்தத் துறையிலும் முனைப்போடு செய்யக் களமிறங்கி அதை வெற்றிகரமாக செய்து முடித்துவிட்டவர்களுக்கு நேர்ந்து சேர்ந்திருக்கும் அனுபவங்கள் அவருக்கு மட்டுமல்ல அவர் சொல்லக் கேட்பவர்களுக்கும் பயன் தருகிறது. அதனால்தான் கடந்தகாலத் தலைமுறையின் தோள்மீது நின்று கொண்டு நிகழ்காலத் தலைமுறை இன்னும் நீண்டதூரம் பார்க்க முடிகிறது. பிறரது அனுபவங்களைப் பார்த்துக் கொண்டிருப்பதாலும் வெறுமனே கேட்டுக் கொண்டிருப்பதாலும் எந்த பயனும் நேராது. அவற்றில் இருந்து என்னென்ன பாடம் கற்கிறோம் என்பதே முக்கியம். எனவேதான் மற்றவர்களுடைய தோல்விகளில் இருந்து வெற்றிக்கான பாடத்தைக் கற்க வேண்டும் எனப் பல அறிஞர்கள் வலியுறுத்துகிறார்கள்.

மற்றவர்கள் சொன்னதைச் செய்பவர்களைக் காட்டிலும். தானாக முன்வந்து எதையாவது சுயமாகச் செய்பவர்கள் நிறையவே சொல்வார்கள். சிலருக்கு நேரும் அனுபவங்கள் பலருக்கு வழிகாட்டுகின்றன; எச்சரிக்கை செய்கின்றன. சதுப்பு நிலத்தில் விழுந்து உயிர் பிழைத்து வருவார்கள் அதைக்குறித்து எச்சரிக்கை செய்யும் தகுதியைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில் நம்மை எச்சரிக்கிற அனுபவங்களை நம்மை நாமே முடக்கிக் கொள்வதற் கான ஆயுதமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தேவையில்லை. ஒருவர் ஒரு துறைக்கு வந்துவிடக்கூடாது என்பதையே நோக்கமாகக் கொண்டு பீதியூட்டி மிரட்டும் வகையில் அத்துறையைச் சார்ந்த இன்னொருவர் தமது அனுபவங்களைச் சொல்வதுண்டு. ஒரு திரைப்படப் பாடலாசிரியரிடம் இன்னொரு கவிஞர் தானும் திரைப்படங்களுக்கு பாடல் எழுத முயற்சி செய்யப் போவதாகச் சொன்னார். வெகுண்டெழுந்த அந்தப் பாடலாசிரியர்,

விட்டிலுக்கு
விளக்கு தொட்டிலா என்ன?
வந்து விழுந்து பார் தெரியும்!

என்று புதுக்கவிதையில் படபடத்தார். ஒவ்வொரு துறையிலும் பிறரை இவ்வகையில் பீதியூட்டுவோர் இருக்கவே செய்கிறார்கள். கேட்பவரைக் குழப்பவும் மிரட்டவும் முடக்கவும் செய்கின்ற அனுபவங்களை மிகவும் சரியாக இனம் காணவேண்டும். ஏனெனில் அனுபவங்களில் இருந்து பெற வேண்டியது குழப்பமல்ல தெளிவு. ரைட் சகோதரர்கள் கண்டுபிடித்துக் கட்டமைத்த விமானம் 200 அடிகூடப் பறக்காமல் விழுந்து நொறுங்கிவிட்டது. ஆயினும் அதையே காரணமாக வைத்து விமான அறிவியல் ஆய்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிடவில்லை. 5 ஆண்டு களுக்கு முன்பு மெல்லிய இரும்புத் தகரங்களைக் கொண்டு தனது கைகளாலேயே மண்ணெண்ணெய் விளக்குகளைச் செய்து கடை கடையாக ஏரி விற்பனை செய்த ஒருவர், பிற்காலத்தில் மிகப் பெரிய நவீன இயந்திரங்களைக் கொண்டு பல்வேறு வகையான கண்டெயினர்கள் செய்யும் தொழிலில் மிகப் பெரிய வெற்றிக்கண்டார். தமது வெற்றிக்கு,

போட்ட இடத்திலேயே தேடணும்
தெரிஞ்ச தொழிலிலேயே தேறணும்
என்ற ஒரு பழமொழியிலேயே பதில் சொன்னார் அவர்.

ஒரு குறிப்பிட்ட துறையில் போராடி உழைத்து வெற்றி கண்டவர்கள் எவ்வளவு போராடியும் வெற்றி காண இயலாமற் போனவர்கள், பிறர் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எப்போதும் தமது அனுபவங்களைச் சுவை சொட்டச் சொட்ட சொல்லிக்கொண்டு இருப்பவர்கள், பிறர் செய்ய முயலும் எதையும் தடுக்கும் வகையில் தமது அனுபவங்களையும் பிறரது அனுபவங்களையும் எடுத்து அடுக்குபவர்கள் என்று பல்வேறு வகையான அனுபவசாலிகள் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்களது அனுபவங்களில் இருந்து எதைக் கற்றுக் கொள்கிறோம் என்பதில்தான் நமது வெற்றி அடங்கியிருக்கிறது.

- ஜெயபாஸ்கரன் ( [email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.



Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com