Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

ஒரு சாண் வயிற்றுக்காக...

இளவேனில்

சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது போலீஸ். நாட்டின் இறையாண்மை, எல்லையைக் காப்பது ராணுவம் - என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், உண்மையில், போலீஸ் என்பது உள்நாட்டுக் கொள்ளை. ராணுவம் என்பது வெளிநாட்டுக் கொள்ளை - என்பது போலத்தான் இந்த முரட்டு நிறுவனங்கள் நடந்து கொள்கின்றன.

Police நாட்டை ஆள்வதற்கும், பரிபாலனம் செய்வதற்கும் ஆயுதம் தாங்கிய இந்தக் காவலர்களும், சிப்பாய்களும் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது. இது ஆள்வோர் தரப்பு நியாயம். ‘இந்த அரசாங்க ரௌடிகள் தொலைந்து போக மாட்டார்களா?’ - இது ஆளப்படுவோர் தரப்பு நியாயம். இதுவும் ஒரு தொழிலா? ‘அட்டேன்...ஷன்’ என்று ஒரு குரல் அல்லது விசில் சத்தம் கேட்டதும் மரக்கட்டை போல் விரைத்து நிற்பதும், சுடு என்றால் சுடுவதும் பாய்ந்து குதறுவதும் - கேவலம்! பயிற்சியளித்துப் பழக்கப்பட்ட மிருகமா நான்? மூளையும் இதயமும் தேவையில்லையா எனக்கு?

எனக்கு எந்த விதத்திலும் சம்பந்தமில்லாத மக்களை நான் ஏன் வதைக்கணும்? அவர்கள் சாபம் என்னைச் சும்மா விடுமா?... இது எப்போதாவது இதயம் உறுத்தும்போது அரசாங்க ரௌடி நடத்திக் கொள்ளும் சுய விசாரணை. எத்தனை பேரைக் கொடுமைப்படுத்தினான், எத்தனை பேரைக் கொன்றான் என்று கணக்குப் பார்த்து அரசாங்கம் கௌரவிக்கும்போது இவன் சிறந்த சேவகனாகவும், தேச பக்தனாகவும் கருதப்படுகிறான்.

பக்தி என்பது - அதாவது ஓர் அடிமையின் குருட்டு நம்பிக்கை என்பது - இவனுக்கு இருக்கிறதுதான். ஆனால், இவனுக்கு ஏது தேசம்? தேசம் என்பது சொத்துடைமையாளர்களின் - அதாவது, தனித்தனியாகப் பட்டா வைத்திருப்பவர்களின் - கூட்டு நிலப்பரப்பு. தாய் நாட்டைக் காப்பாற்றுங்கள் என்கிற முழக்கத்துக்குப் பின்னே ‘எங்கள் சொத்தைக் காப்பாற்றுங்கள்’ என்கிற சொத்துடைமையின் அச்சமே ஒளிந்திருக்கிறது.

ஒரு கவிஞன் சொல்வதுபோல்

“உள்நாட்டுத் திருடனுக்கு
உறக்கம் கலைக்கின்ற
பக்கத்துத் திருடனைப்
பழிவாங்க வேண்டும் என்றால்
தேச பக்தி என்பார்கள்;
திரளுங்கள் என்பார்கள்.
மோதலிலே மண்ணை
நனைப்பதுவோ மனித இரத்தம்?’’

இராமாயணக் கதைப்படி, சீதையை மீட்பதற்காக நடந்த போரில் பல ஆயிரம் வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். ஆனால், எத்தனையோ பெண்களுக்கு நாட்டில் கொடுமை இழைக்கப்படுகிறது. அவர்களுக்காக யார் போர் தொடுத்தார்?

பாண்டவர்களின் மனைவி துகிலுரியப்பட்டதற்காகப் `பாரதப் போர்’ நடந்ததாம். நாட்டில் எத்தனை பெண்கள் ஒவ்வொரு நிமிடமும் துகிலுரியப்படுகிறார்கள்? எந்தப் போர் நடக்கிறது? விஷயம் என்னவென்றால், சீதையும், திரௌபதியும் ராஜ வம்சத்துப் பெண்கள். அவர்கள் ஏழைப் பெண்களாக, சேரிப் பெண்களாக இருந்திருந்தால் ஒரு நாயும் குரைத்திருக்காது.

‘எதற்குமே முகராசி வேணும்’ என்பார்கள். முக ராசி என்பது வேறு ஒன்றும் இல்லை `செல்வச் செழிப்பு’ தான். அது இருந்ததால் மும்தாஜுக்குக் `காதல் மாளிகை’ எழுப்பப்பட்டது. டயானாவின் மரணத்துக்காக ‘உலகம்’ அழுதது. மும்தாஜும், டயானாவும் குடிசைவாசிகளாக இருந்திருந்தால் இந்த மரியாதை தரப்பட்டிருக்குமா? கல்யாணமாகி, கணவனைப் பிரிந்து வேறொருவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாளாம் அயோத்திக் குப்பத்தைச் சேர்ந்த டயானா.

Police இந்த அழகி அந்தப் பகுதியைச் சேர்ந்த பல வாலிபர்களுடன் உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஒருநாள் தன் கள்ளக் காதலனுடன் குடித்துக் கும்மாளமிட்டபடி ஒரு காரில் சென்று கொண்டிருந்தாள். அந்தக் கள்ளக் காதலனைத் தீர்த்துக் கட்டினால் தான் டயானா தனக்குக் கிடைப்பாள் என்று திட்டமிட்ட அவளுடைய மற்ற வாடிக்கையாளர்களின் ஏற்பாட்டின்படி ஒரு காரில் வந்த கும்பல் டயானா சென்ற கார் மீது மோதியது. அதில் அவளும் அவளுடைய கள்ளக் காதலனும் பலியானார்கள். இப்படித் தான் குப்பத்து டயானாவின் உண்மையான காதல்கூடக் கொச்சைப்படுத்தப்படும்.

காதலிலிருந்து தேச பக்தி வரை சொத்துதான் அளவுகோலாக இருக்கிறது. நீங்கள் கொஞ்சம் சொத்து வைத்திருந்தால், உங்களுக்குக் கொஞ்சம் தேச பக்தியும் இருக்கும். அதிகமாகச் சொத்து வைத்திருந்தால் இந்தத் தேசத்தை நீங்கள் அதிகமாக நேசிப்பீர்கள். வளர்ப்பதற்கும், இழப்பதற்கும் தாடி, மீசை தவிர எதுவும் இல்லாதவனுக்கு தேச பக்தி என்பது ஒரு முடியளவுகூட இருக்காது தான். சொத்து ஒருவனைத் ‘தேச பக்த’னாக்கியது போலவே, சொத்து இல்லாதவனைக் குற்றவாளியாகவும் மாற்றி விடுகிறது. அவனுடைய தோற்றமே ‘சந்தேகப்படும்’படியாக இருக்கிறது.

வீடு வாசல் இல்லாமல் நடைபாதையில் படுத்துக் கிடப்பவனைப் போலீஸ்காரன் பிடித்துக் கொண்டு போகிறான். ஏன்? ஏனென்றால், அவன் சந்தேகத்துக்குரியவன். இன்று திருடவில்லை என்றாலும் நாளைத் திருடக் கூடும் என்று ‘சட்டம்’ அறிவுறுத்துகிறது. சொத்து இருக்கிறவனின் தூக்கம் சொத்து இல்லாதவனால் கெட்டு விடுகிறது. சொத்து இருக்கிறவர்கள் நிம்மதியாக இருக்க வேண்டாமா? அதற்காகத்தான் போலீஸ், ராணுவம், சட்டம் எல்லாம்.

கொஞ்சமும், அல்லது போதிய அளவு சொத்து இல்லாதவர்களின் பிள்ளைகள் ‘நல்ல பேர்’ வாங்குவதற்கு ஒரே வழி போலீஸ், ராணுவத்தில் சேர்ந்து விடுவதுதான். ‘சந்தேகத்துக்குரிய’வனாய் வீதியில் திரிந்தவன் அரசாங்க ரௌடியாக மாறி விடும்போது, மாவீரனாக மதிக்கப்படுகிறான். செங்கிஸ்கானின் குதிரைப் படையில் விரைந்தோடியவன் இவன்தான். அலெக்சாந்தர், சீசர், நெப்போலியன், இட்லர் போன்றோரின் ‘வீரசாகசங்களை’ சாத்தியமாக்கியவன் இவன்.

குதிரைகளாலும், பீரங்கி வண்டிகளாலும் நசுக்கப்பட்டு இறக்கும்போதும் கொடியைக் கீழே விடாமல் தாங்கியவனும் இவன்தான். போரிலே வென்று கைப்பற்றிய நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்டவன் இவனல்ல. போர்க் கருவிகள்கூட இவனுக்குச் சொந்தமானதில்லை. ஆனாலும், உத்தரவுக்குக் கட்டுப்பட்டு உயிரைப் பணயம் வைத்துப் போரிடுகிறான் இவன். ஒரு போர் வீரனின் வீரப் பதக்கம் எத்தனை விதமான கதைகளைச் சொல்கிறது!

(நன்றி: தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்)

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com