Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

கச்சா எண்ணெய் உயர்வும் - தமிழினத்தை விற்கும் கங்காணிக் கட்சிகளும்
க.அருணபாரதி


'கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தொடர்ந்து, விலைவாசி உயர்வு. அதனைத் தொடர்ந்து பணவீக்கம் அதிகரிப்பு' என இந்தியாவின் பொருளாதாரம் தகிடுதத்தோம் ஆகிவருகிறது. ஒன்றுமே நடக்காத மாதிரி நிதியமைச்சர் ப.சிதம்பரம் "இதெல்லாம் சரியாகிவிடும் மக்களுக்கு இது கசப்பு மருந்து தான்" என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். மறுபுறம் பணக்கார முதலாளிக்கு ‘இனிப்பு’ வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அமெரிக்க சார்பு உலகமயப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திற்கு நன்றிக் கடனாக அமெரிக்க நாட்டிற்கு அணுசக்தி ஒப்பந்தத்தின் பெயரால் அடிமை சாசனத்தை வேறு, இந்த அரசும் அமெரிக்க அடிவருடிகளும் இணைந்து தயாரித்துவிட்டு தற்பொழுது அதனை கையெழுத்திடவும் போனாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அச்சிடப்பட்ட காகிதத்தில் கையெழுத்திட தான் பேனாவை எடுத்துள்ளனரே தவிர அதில் புதிதாக எதனையும் எழுதுவதற்ககோ திருத்துவதற்கோ அல்ல. இது தெரிந்தும் பேனாவை புடுங்கிக் கொண்டு எதிர்க்கிறோம் என சவடால் விட்டுக் கொண்டு ‘மார்க்சிஸ்ட்’ மாவீரர்கள் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.

கச்சா எண்ணெயின் விலையை பெருமுதலாளிகள் தலைமயிலான நாடுகள் திட்டமிட்டு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு உயர்த்தியுள்ளன. இதனால் அதனைத் தயாரிக்கும் நாடுகளைத் தவிர மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை கணிசமாக உயர்ந்தது. இந்த விலை உயர்வு மட்டுமின்றி இந்திய அரசு விதிக்கும் வரிகளின் சுமையால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. இதற்கிடையே இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரம் உயர்த்தப்பட்ட டீசல் என்ற பெயரில் லாபம் சம்பாதிக்க டீசல் மற்றும் பெட்ரோல் விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளன. இதனைக் கண்டித்து லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் அனைத்திந்திய அளவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தினால் உணவுப் போக்குவரத்து பாதிக்கப்படும். ஏற்கெனவே பலமடங்கு அளவிற்கு உயர்ந்துள்ள விலைவாசி இன்னும் அதிகரிக்கும். இதற்கிடையே ஊசலாடிக் கொண்டிருக்கும் பணவீக்கத்தைப் பற்றி சிந்திப்பதா அல்லது விலைவாசி உயர்வைப் பற்றி சிந்திப்பதா எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது இந்திய அரசு.

மக்கள் தொகையில் வெறும் 1 விழுக்காட்டிற்கும் குறைவான ‘ஏழைகள்’ ஈடுபட்டிருக்கும் பங்குச்சந்தை சூதாட்டத்தில் யாருக்கும் நஷ்டம் வந்துவிடக்கூடாது என அவர்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கவும் அதற்குத் பணத்தை திட்டமிடவும் நேரமிருக்கிறது இந்திய அரசுக்கு. ஆனால் விவசாயிகள் தற்கொலைக்கு நிவாரணம் ஒதுக்கக்கூட காசில்லை என் கபட நாடகமும் ஆடுகிறது.

’மிகச்சிறந்த பொருளாதார நிபுணராம்’ மன்மோகன் சிங், ‘புள்ளிவிவரப் புலி’யாம் ஏழைகளின் பசி அறியாத ப.சி(சிதம்பரம்), ‘சிறந்த நிர்வாகி’யாம் மான்டேக் சிங் அலுவாலியா... இவர்கள் தாம் இந்நாட்டை முன்னேற்றப் போகின்றனர் என ஊடகங்களால் ஊளையிடப்பட்டு அறிவிக்கப்பட்ட ‘அமெரிக்க’ அறிவு ஜீவிகள். இப்பொழுது அதே ஊடகங்களுக்குப் பயந்து நெளிந்து கொண்டு அங்குமிங்கும் இவர்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களை ஆட்டுவிக்கும் அமெரிக்காவே ஆடிப்போயிருப்பதால் இவர்கள் என்ன செய்வார்கள் பாவம்.

அமெரிக்கா சொன்னதை தான் அப்படியேச் செய்தார்கள். சட்டம் போட்டார்கள். சலுகைக் கொடுக்கப்பட வேண்டிய ரிலையன்ஸ் அம்பானி, விஜய் மல்லையா, ரத்தன் டாட்டா உள்ளிட்ட ‘மாபெரும் ஏழைகளுக்கு’ சலுகைகள் அளித்தார்கள். கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் சுமையை சுமக்கத் தான் ‘மக்கள்’ இருக்கிறார்களே என்ற தைரியத்தில் அச்சுமையை மக்கள் தலையில் இறக்கி வைத்துவிட்டு, அதே எண்ணெயை அதிக விலைக்கு சுத்திகரித்து வெளிநாடுகளுக்கு தாராளமாக ஏற்றுமதி செய்து கொழுத்து சம்பாதிக்க ரிலைன்ஸ் - எஸ்ஸார் போன்ற ‘ஏழை’ நிறுவனங்களுக்கு சலுகை வழங்கி அவர்கள் லாபம் சம்பாதிக்க அரசை நடத்தினார்கள்.

'நாங்கள் தான் ‘புரட்சிகரப் போராளிகள்’, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்க்கிறோம் பாருங்கள்’ என மார்க்சிஸ்ட் நடிகர்கள் ஒருபுறம் நடித்துக் கொண்டே மேற்கு வங்கத்தில், ‘தொழிலில் மிகவும் பின்தங்கிய எழையான’ ரத்தன் டாட்டாவிற்கு சோஷலிச சமுதாயம் மலர்ந்திட தொழிற்பரட்சியில் ஈடுபடவேண்டுமெனக் கூறி ரூ 300 கோடியை கடன் உதவி செய்தார்கள். பாவம் ரத்தன் டாட்டா. எவ்வளவு மிகச்சிறிய ஏழை? எப்படி அவரால் இந்தத் தொகையை கொடுக்க இயலும்? பரவாயில்லை. கடந்த ஆண்டில் 800க்கும் குறைந்த பணக்கார ஏழைகள் வாங்கிய சுமார் 44,000 கோடி ரூபாயை வாராக் கடனாக அறிவித்து அந்த பணக்கார கடங்கார ஏழைகளை சுதந்திரமாக திரியவிட்டதைப் போல ரத்தன் டாட்டாவையும் விட்டுவிடலாம். இந்த கடனையெல்லாம் சுமக்கத் தான் எப்பொழுதும் ‘விவசாயிகள் + நடுத்தரவர்க்கத்தினர் + வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள்’ என்ற கூட்டணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறதே... அவர்கள் தலைமையில் இறக்கி வைப்போம் என இறக்கி வைத்தார்கள். இறக்கி வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

"இவற்றையெல்லாம் நாங்கள் எதிர்க்கிறோம்" என்று சொல்லிக் கொண்டே காவிக் கூட்டம் இரத்த வெறியுடன் சத்தமிட்டுக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறது. இவற்றுக்கெல்லாம் ஆரம்பப் புள்ளி வைத்த அவர்களே இவ்வாறு சொல்கிறார்கள் என்றால் விரைவில் தேர்தல் வருகிறது என்று அர்த்தம். அவர்கள் அலைவதைப் பார்த்தால் விரைவில் அயோத்திக்குச் சென்று இராமரையும் தேர்தலுக்காக அழைத்துக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு பிரச்சனை பெட்ரோல் விலை உயர்வைத் தடுப்பதோ - பணக்கார ஏழைகளுக்கு சலுகை அளிக்கக் கூடாது என்பதோ அல்ல. தனக்கு தரவேண்டிய தேர்தல் நிதியை அந்த பணக்கார ஏழைகளிடமிருந்து மற்றவர்களை விட அதிகம் பெற்றிடவே இந்த காவி கோஷ்டியினர் அங்கலாய்க்கின்றனர்.

அமெரிக்க ஆண்டை சொல்வதைத் தான் இந்த இந்தியத் தேசிய அடிமை அரசியல்வாதிகள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. அதனை வெட்கமற்று நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அசாமில் பெட்ரோல் எடுக்க அந்த அரசிற்கு உரிமைத் தொகை கொடுத்து வரும் இந்திய அரசு, தமிழகத்தின் காவிரிப்படுகையிலிருந்தும், நரிமணித்திலிருந்தும் திருடிச் செல்லும் பெட்ரோலுக்கு நம்மிடையேயே இறக்குமதி வரியை விதித்துக் கொள்ளையடிக்கும். இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய தமிழகத்து தேர்தல் அரசியல் கட்சிகள் கச்சா எண்ணெயைப் பற்றி கதையளந்து கொண்டிருக்கின்றன. தேர்தல் அரசியல் கட்சிகள் ஆளாளுக்கு ஆர்ப்பாட்டம் வைத்துக் கொண்டு கண்ணேதிரேக் கொள்ளையடிக்கும் தில்லி அரசைத் தட்டிக் கேட்க நாதியற்று கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளைக் கண்டித்து உள்ளுர் கேபிள் டீவியில் அறிக்கை விடுகிறார்கள்.

தில்லி ஏகாதிபத்தியத்திற்கு மட்டுமின்றி பன்னாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்நிலத்தை விற்கும் ‘முத்தமிழ் விற்றவர்’ முதல்வர் கலைஞர் கருணாநிதி ஒருபுறம். பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஊதாரி்த்தனமாக 100 கார்களில் பெட்ரோல் போட்டுக் கொண்டு போக்குவரத்தை அடைத்துக் கொண்டு விளம்பரம் தேடிச் செல்லும் நடிகர் (கம்) அரசியல் பிழைப்புவாதி விசயகாந்த் ஒருபுறம். வெப்பமயமாதலால் மக்கள் வெயிலில் வெந்து சாவதைப் பற்றி ‘மிகவும் கவலையுற்று’ ஊட்டியில் குலுகுலுவென ஏசி அறையில் மக்களின் கஷ்டத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டு, ஒரே அறையில் இருந்து கொண்டு நாட்டுநடப்புகளைப் பற்றியெல்லாம் துல்லியமாகக் கண்டிறிந்து ‘அறிக்கை’ மட்டுமே விடும் அரசியல்வாதியாக செயலலிதா ஒருபுறம். "நாங்களும் இருக்கோம்ல" என்றபடி பதவி தந்த இந்திய அரசைப் பற்றி வாய்கூட திறக்காமல் தமிழக அரசை மட்டுமே கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திக் கட்சி வளர்க்கும் இராமதாஸ் ஒருபுறம்.

இவர்கள் மட்டுமா? தமிழகத்தின் தலைச்சிறந்த அரசியல் நகைச்சுவையாளர் வைகோ, "அடங்க மறு" என்று அறிமுகமாகி ‘சீட் கொடுத்தால் அடங்கிப் போ’ என்று புதியத் தத்துவம் படைத்த திருமா, அகில இந்திய சமத்துவக் கட்சி என்கிற தனியார் பொது நிறுவனத்தின் உரிமையாளர் நாட்டாமை சரத்குமார், 2011-ல் தமிழக முதல்வராகப்போகும் லட்சிய தி.மு.க. டி.ஆர். இராசேந்தர், திடீர் கட்சியான அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றைத் தான் சொல்ல வருகிறார்கள்.

அமெரிக்க அடிவருடியாகவும், உலகமயத்தின் ஊதுகுழலாகவும் இந்தியா தொடர்ந்து இப்படித்தான் செயல்படும். அந்த இந்தியாவிற்கு தமிழ் இனத்தை அதிக விலைக்கு விற்பதில் தான் இவர்களுக்குள் போட்டி, அறிக்கை சண்டை, அதிகாரச் சண்டை எல்லாம். மற்றபடி இவர்கள் கொள்கைகளற்ற கொள்ளைக் கூட்டணி என்ற வகையில் தெளிவாக அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.

பெட்ரோல் விலை உயர்வும் விலைவாசி உயர்வும் தற்பொழுதுள்ள அரசியல் கட்சியினர் யாருக்கானவர்கள் என்பதை நமக்கு சொல்லித் தருகின்றன. பணக்காரர்களுக்கான அரசைப் பாதுகாக்கவும் அதில் பங்குபெறவுமே இங்குள்ள ஒட்டுமொத்த அரசியல் கட்சியினரும் செயல்படுகின்றனர். தமிழ் இனத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் தமிழகத்தின் அனைத்துத் தேர்தல் அரசியல் கட்சிகளும் உலகமயத்தின் பாதந்தாங்கிகள் தான் எனவும், தில்லி ஏகாதிபத்தியத்தின் கூட்டுக் கொள்ளையர்கள் தான் எனவும் தற்போதைய சமூக நிகழ்வுகள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. என்ன தான் இதற்குத் தீர்வு?

கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணமான பெரு முதலாளிகளின் லாபவெறிக்கு முதலில் முடிவு கட்ட வேண்டும். ஆன்லைன் பங்குச்சந்தை வாத்தகச் சூதாட்டத்தை தடைவிதிக்க வேண்டும். முதலாளிகளின் லாபவெறிக்கு எதிராக தடைவிதிக்க இங்குள்ள இந்திய அரசோ தமிழக அரசோ நிச்சயம் முன்வராது. ஏனெனில் இங்குள்ள அரசுகளே அவர்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்போடு இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். இந்தியா முழுமைக்கும் புரட்சி நடத்தி இவ்வரசை மாற்ற முடியுமா என்றால் முடியாது.

இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பல்வேறு தனித்த தேசிய இனங்களும் உலகமயத்திடமிருந்து தற்காத்துக் கொள்ள தனது சொந்த தேசிய இனத்தின் அடையாளத்தை மீட்டுக் கொள்ள போராட்டம் நடத்தத் தொடங்கி அந்த போராட்டம் ஒருவேளை ஒருங்கிணைக்கப்பட்டால் தான் இந்தியப் புரட்சி என்பது சாத்தியமாகும். இது நடக்கும் செயலா? ஒரே இந்தியா என்று பேச்சில் இருக்கிறதே தவிர செயலில் எங்காவது இருக்கிறதா? கர்நாடகம், கேரளா, ஆந்திரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் தமிழகத்தை வேறு நாடாகத் தானே பார்க்கின்றன? தமிழகத்துக்குரிய உரிமைகளை மறுக்கின்றன. இப்படி இருக்கையில் அவர்களை இணைத்துக் கொண்டு புரட்சி நடத்துவது சாத்தியமா..? அண்டை தேசிய இனங்கள் நம்மிடம் சண்டையிட்டு வந்தபோது அதனைத் தடுக்க வேண்டிய இந்திய அரசு வேடிக்கை பார்ப்பது தானே வாடிக்கை. இந்நிலையில் இந்தியா என்பது வேறு எங்கு இருக்கிறது? நிஜத்தில் செய்லபடுவது ‘இந்தி’யா தானே..?

இதற்கு மாற்றாக தமிழக மக்களின் அரசியல் நிலை எதுவாக இருக்க வேண்டும்..? தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பாதுகாப்பதாகவும், தமிழ் இனத்தை உலகமயப் பணக்காரனுக்கு மட்டுமின்றி தில்லிக்காரனுக்கும் விற்கும் இந்தியனுக்கு எதிரானதாக புரட்சிகரத் தமிழ்த் தேசிய அரசியல் நிலையைத் தான் நாம் முன்னெடுக்க வேண்டும். மார்வாடி, குசராத்தி சேட்டுகள் தமிழகத்தின் பெரு வணிகங்களை கைப்பற்றத் தொடங்கியுள்ளனர். பீகாரிகள் ரயில்வே வேலை, ரோடு வேலை என தமிழகத்திற்குள் நுழைந்து விட்டனர். தமிழத்திலேயே தமிழன் அகதியாக அலையும் நாள் வெகு தொலைவில் இல்லை எனத் தெரிகிறது. அயலவன் வந்து சுரண்ட நமது தமிழ் மண் வேட்டைக்காடு அல்ல. நமது எதிரி உலகமய முதலாளிகள் மட்டுமல்ல தில்லி ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளாக இங்கு செயல்படும் இந்தியத் தேசியத்தை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் தான் என உணர வேண்டும்.

உலகமயத்தை எதிர்க்க நாம் முன்னிறுத்த வேண்டியது தமிழ்த் தேசியத்தைத் தானே தவிர பெருமுதலாளிகள் தலைமையிலான இந்தியத் தேசியத்தை அல்ல. தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்னெடுக்கும் தமிழ்த் தேசியப் புரட்சி பற்றிய விழிப்புணர்வே இவர்களை மிரள வைக்கும் சக்தியாகும். அந்த புரட்சிகான முன்னேற்பாடுகளை வரலாறு நமக்கு செய்து தரும். அதனை வேகப்படுத்த வேண்டியதே நமது கடமை என செயல்பட வேண்டும்.

- க.அருணபாரதி ([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com