Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruLiteratureArticle
கட்டுரை

மரணத்தை வென்ற மாவீரன்...
அறிவழகன் கைவல்யம்


இதோ தற்கொலை செய்து கொண்டார், அதோ சுனாமியில் இறந்தார், இதோ சுடப்பட்டார், அதோ உடல் கிடைத்தது, இதோ தப்பிக்க முயன்றார், அதோ கடலில் வாய்க்காலில் கிடந்தார், இதோ என் கனவில் வந்தார், அதோ என் வீட்டருகே வந்து விட்டார், ஐயகோ, உண்மையில் வந்து விடுவாரோ, வந்தால் என்ன செய்வது??????

Prabakaran இது தான் நண்பர்களே ஒரு மனிதனின், ஒரு மாவீரனின், ஒரு விடுதலைப் போராளியின் பொய்யான மரணம் உலகிற்கு உணர்த்திய பாடம், எதிரிக்குத் தருகின்ற அச்சம். உலகின் மிகப் பெருமை வாய்ந்த தமிழ் அறம் சார்ந்த வழியில் தன் மக்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றை ஒரு இனத்தின் சித்தாந்தமாக மாற்றிக் காண்பித்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற கட்டுக் கதையோ அல்லது உண்மையோ எனக்குள் ஒரு போதும் வருத்தத்தை விளைவிக்கவில்லை. அதற்கு அவர் செயற்கையாக மரணித்தது மட்டும் காரணம் இல்லை, அதைத் தாண்டி ஒரு தெளிவான பார்வையும் இருக்கிறது, உங்களுக்கும் அது இருக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரை எழுதுவதற்கான ஒரு தேவை உருவானது.

பிரபாகரன் என்கிற தனி மனித அடையாளம் என்றாவது ஒரு நாள் அழிந்து போகும் என்பதும், எந்த ஒரு தனி மனிதனும் உடலால் இறப்பைத் தழுவியே தீர வேண்டும் என்பதும் இயற்கையின் நியதி. இந்த நியதிக்கு பிரபாகரனும் விலக்குப் பெற்றவர் அல்ல, அவர் பதினேழாவது முறையாகப் போலியாக இறந்தாலும் என்றாவது ஒரு நாள் அவர் உண்மையில் இறக்கத் தான் வேண்டும். அதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மரணத்தை வென்று ஒரு இனத்தின் அடையாளமாக, ஒரு இனத்தின் கலாச்சார வெளிப்பாடாக, ஒரு இனத்தின் மொழி சார்ந்த ஊடகமாக, ஒரு இனத்தின் விடுதலை உணர்வின் வடிகாலாக உலகெங்கும் வாழுகிற தமிழ் மக்களின் நெஞ்சங்களில் உறைந்து போன பண்பாட்டை மரணம் ஒரு போதும் கொள்ளை கொள்ள இயலாது நண்பர்களே. மரணம் வெறும் உடலின் அடக்கம், மரணம் வெறும் உடல் இயங்கியலின் முடிவே அன்றி அது ஒரு போதும் இயக்கத்தின் நிறுத்தம் அல்ல, அது ஒரு போதும் இன, மொழி அடையாளங்களை வென்றெடுத்த ஒரு முத்திரையின் அழிவு அல்ல.

கடந்த நூற்றாண்டின் மையப் பகுதியில் இருந்தே சிதைக்கப்பட்டு வந்த ஒரு இனத்தின் அழிவை, தொன்மையை, கலை, கலாச்சார வெளிப்பாடுகளை, மொழியின் நுண்ணிய வடிவங்களை ஒரு தனி மனிதனின் விடுதலைப் போராட்டம் மீட்டெடுத்து எங்கள் இளைஞர்களின் கைகளில் கொடுத்திருக்கிறது, அந்தத் தனி மனிதன் உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்தாலும், புவியெங்கும் பரந்து விரிந்த எம் தமிழ்ச் சகோதரர்களின் உளமெங்கும் நிறைந்து இருக்கிறான், திரைப்பட மாயைகளில், ஆன்மீக அழிவுகளில், திராவிடக் கட்சிகளின் நீர்த்துப் புரையோடிப் போன கொள்கைகளில் கரைந்து போய் அழிவின் விளிம்பில் நின்று ஊசலாடிக் கொண்டிருந்த எமது இனத்தின் இளைஞர்களை தமிழ் என்கிற ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைத்த ஒரு மாபெரும் அடையாளத்தை அழிப்பதற்கு இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் முயன்றால் கூட முடியாது வீணர்களே......

உலகின் மூத்த குடிகளில் ஒன்றான எங்கள் இனம் தனது அடையாளங்களை உலகெங்கும் பொருளாதார ஓட்டங்களில் தொலைத்துக் கரைந்து கொண்டிருந்த போது இயற்கை எமக்கு வகுத்தக் கொடுத்த ஒரு கலங்கரை விளக்கம் தான் பிரபாகரன் என்கிற மனிதனின் விடுதலை வேட்கை. அந்த விடுதலை வேட்கையின் பின்னால் எண்ணற்ற தமிழ் இனத்தின் பண்பாட்டு வெளிப்பாடுகள் அணிவகுத்து நின்றன. தமிழ் இளைஞன் தமிழில் உரையாடுவதை பெருமையாக எண்ணத் துவங்கியதே இந்த மாவீரனின் வரவுக்குப் பின்னால் தானாய் நிகழ்ந்தது.

எங்கோ கிடக்கும் இன, மொழி அடையாள உறவுகளை எல்லாம் தனது உறவாய், தனது குருதியாய் தமிழன் சிந்தனை செய்யத் துவங்கியதே பிரபாகரன் என்கிற விடிவெள்ளி செய்த விடுதலை வேள்வி. காலம் எங்கள் இனத்திற்கு ஒரு பன்னாட்டு அடையாளம் தருவதற்கு விளைவித்த அருந்தவம் தான் பிரபாகரன் என்கிற ஒரு அடையாளம். களப் போராட்டமாய் இருந்தாலும் அது அறவழிப் போராட்டமாய், பண்பாட்டு வெளியாய் நிகழ்ந்த ஒரு அற்புதம் தான் மாவீரன் பிரபாகரன் என்கிற அடையாளம்.

சாதிகள், மதங்கள், வர்க்க பேதங்கள், பாலின ஆளுமைகள் இவற்றை எல்லாம் கடந்த ஒரு அரசை, அறம் சார்ந்த தமிழ் கலாசார வலிமையை உலகின் எந்த ஒரு வல்லாதிக்க சக்திகளின் உதவியும் இன்றி தனி ஒருவனாய் நடத்தி வரலாற்றின் ஏடுகளில் பதிவு செய்த தமிழர்களின் நெறி தான் பிரபாகரன். உலகின் பல்வேறு சக்திகள் கண்டு நடுங்கின அந்த மாவீரனைக் கண்டு. உலகின் அடுத்த வல்லரசு என்று தன்னைத் தானே பறைசாற்றிக் கொள்ளும் இந்திய ஊழல் பெருச்சாளிகளுக்கு தங்கள் அருகாமையில் ஒரு அறநெறி ஆட்சி அமைந்து தங்கள் கொள்ளைகளுக்கு கொல்லி வைக்கப் போகிறதோ என்கிற அச்சம் நிறைந்து அதனை அழிக்கும் செயல்களில் ஆவலாய் இருந்தது.

இவற்றை எல்லாம் கடந்து 33 ஆண்டுகள் தொடர்ந்து தான் கொண்ட இலட்சியத்தில் தமிழின விடுதலை என்கிற நெருப்பை ஒரு அணையாத விளக்காய்க் கொண்டு வந்து நமது கைகளில் தவழ விட்டிருக்கிற அந்த மாவீரன் மரணம் அடைந்தான் என்கிற செய்தி வேண்டுமானால் அந்த மாவீரனைக் கொன்று வண்ணக் கலவைகள் பூசிக் கனவுகளில் திளைக்கும் தமிழின விரோதிகளுக்கு தித்திக்கும் செய்தியாய் சில காலங்கள் இருக்கலாம், ஒரு போதும் உண்மையாய் தமிழ் உணர்வுகளின் இதய சிம்மாசனங்களில் இருக்கப் போவதில்லை.

உலகம் முழுதும் எதிர்த்து நின்று எங்கள் இன விடுதலையைக் கேலி பேசியபோதெல்லாம், தொன்மையான எங்கள் இனப் பெருமையைக் காத்த அந்த குல விளக்கு ஒரு போதும் எங்கள் இதயங்களில் இருந்து மரணிக்க இயலாது. மரணத்தை என்றோ வென்று பேரண்டத்தின் வெளிகளில் தமிழ் மொழிக்கான நிலையான இருக்கையை அமைத்த அந்த சித்தாந்தம் ஒரு தனி மனிதனின் புகழ் வெளிச்சம் அல்ல. மாறாக அது எங்கள் தமிழினத் தொன்மையின் வெளிச்சம், எங்கள் இன மொழி அடையாளங்களின் வீச்சு. அந்த வீச்சை நீண்ட நெடுங்காலமாக தனி ஒரு மனிதனாகச் சுமந்த அந்த மாவீரன் இன்று உலகெங்கும் நிரவிக் கிடக்கும் தமிழ் இளைஞர்களின் கைகளில் தன் விடுதலைப் போராட்டத்தை கையளித்திருக்கிறான்.

மரணம் தாண்டி வாழும் விடுதலையின் முகவரியை அழிக்க நினைக்கும் மூடர்களுக்குத் தெரியாது!!! விடுதலையின், வெற்றி முத்திரையை உலகெங்கும் தமிழரின் இதயத்தில் இருத்திக் காட்டிய மாவீரனுக்கு அழிவென்பது உடலால் இல்லையென்று!!! எம் இனம் முழுக்க நிறைந்து கிடக்கும் உணர்வுகளின் எதிரொலியை, எதிரிகளே, அழிக்க முடியாதென்ற உண்மை ஒரு போதும் புரியாது உங்களுக்கு. மரணம் எம்மைக் கொஞ்ச நேரம் நிறுத்தி வைக்கலாம், ஒரு போதும் எங்கள் விடுதலை வேட்கையை அல்ல.

எங்கள் விடுதலையின் பெயரைச் சொல்லி எச்சில் பொறுக்கும் ஏளன அரசியல் வீணர்களே! எங்கள் தலைவனின் துப்பாக்கித் தோட்டாக்களில் இல்லாத எந்த விடுதலையின் சுவடுகளும் உங்கள் மக்கள் மன்றங்களில் இல்லை. எங்கள் போராளிகளின் உடைந்த கால்களின் வலிமையும் இல்லாத உங்கள் இறையாண்மையின் பெயரில் எங்கள் விடுதலையை இனி சிறுமைப்படுத்த வேண்டாம். சிதறடிக்கப்படும் எங்கள் குருதியின் வெம்மையில் ஒரு நாள் சுதந்திர ஈழம் மலர்ந்தே தீரும்.

மரணம் தாண்டி ஒரு தமிழ் மறையாகிப் போன பிரபாகரன் என்கிற அடையாளத்தை இன்னும் எத்தனை வல்லாதிக்கப் பேரினவாதிகள் வந்தாலும் துடைத்தழிக்க முடியாது நண்பர்களே! உண்மையில் மரணம் என்கிற இயற்கையின் மடியில் அவர் விழுந்திருந்தாலும் அந்த மாவீரனுக்குச் செய்யும் மரியாதையும், வீரவணக்கமும், அழுகையும் புலம்பலும் அல்ல. அந்த மாமனிதன் உலகெங்கும் தமிழ் மக்களின் உயிரில் பற்ற வைத்த விடுதலைப் பெருந்தீயின் வெம்மையை சிதறாமல் அவன் காலடிகளில் கொண்டு சேர்ப்பதே சிறந்த வீர வணக்கம்.

மரணத்தை வென்று எம் இன விடுதலை வரலாற்றில் நிரந்தரத் தலைவனாய் வாழும் பிரபாகரன் என்னும் பெயரில் உறுதி ஏற்போம்! ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனும் உணர்வால் ஒன்று பட்டு எதிர்காலத் தமிழினத்தை சமூகப் பொருளாதார நிலைகளில் வெற்றி பெற்ற இனமாக, சாதி மத வேறுபாடுகளைக் கடந்த பேரினமாக மாற்றிக் காட்டுவோம்! தமிழ் ஈழம் என்னும் தணியாத தாகத்தை வென்று காட்டுவோம்.

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

- அறிவழகன் கைவல்யம்([email protected])

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com