Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
மார்ச் 2009


தொல்காப்பியம்: ஐந்திரத்தின் அத்துமீறல்கள்
கவிதாசரண்

தொல்காப்பியத்தை நான் முதன்முதலில் 'படித்த” கதையைக் கொஞ்சம் சொல்லியாகவேண்டும். எனக்கான அரசியல் இழை அந்தக் கதையினூடாகத்தான் தட்டுப்பட்டிருக்கவேண்டும்.

எனக்கப்போது பள்ளிப்பருவம். நான் எழுத்துக் கூட்டிப் படிக்கக் கற்றுக்கொண்ட காலத்திலிருந்தே எங்கள் வீட்டு மரப் பேழைக்குள் வெட்டிவேர் மணக்க மணக்க அடுக்கி வைக்கப்பட்டிருந்த பழந்தமிழ் நூல்கள் எனக்கான நட்புக் கரங்களாயிருந்தன. அவை என் தந்தையார் சேமித்து வைத்துச் சென்றவை. நான் அவற்றால் ஈர்க்கப்பட்டமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, என் தாயார் அவற்றைப் படிக்க அனுமதிக்கவில்லை. எனது தந்தையார் இலங்கைக்குச் சென்று, காணாமல் போய், சாமியாராக இந்த நூல்களோடு திரும்பி வந்தவர். நானும் சாமியாராகிவிடக் கூடாதென்பதற்காக அனுமதி மறுக்கப் பட்டது. இரண்டு, எங்கள் வளவில் பள்ளிக்குச் செல்லும் ஒற்றைப் பிள்ளையாய், தோழமையற்று, அப்போது நான் தனித்து விடப்பட்டிருந்தேன். ஆகவே ஒரு வேட்கையோடு அவற்றை நாடிச் செல்லும்படியாயிற்று. கூடுதலாக, எங்கள் வீட்டிலிருந்த 'சூடாமணி நிகண்டு” என்னிடம் ஓர் ஆவலை வளர்த்துவிட்டது. தமிழின் செழுமைமிக்க சொல்திரட்சியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் ஆவல் அது.

பொருள் தெரிந்தோ தெரியாமலோ, கூட்டுச் சொற்றொடர்களைச் சந்தம் மாறாமல் படித்துக்கொண்டு போவேன். எனக்குப் பாட வந்ததும் கவிதை எழுத வந்ததும், அப்படியொரு விடாப்பிடியான முயற்சியின் வடிகாலாகத்தான் படுகிறது. (இன்று இரண்டையும் ஏறக்குறைய ஏறக்கட்டியாயிற்று.) நான் அவ்வாறு படித்துக்கொண்டு போகும்போது ஒவ்வொரு நூலும் அல்லது பாடலும்கூட சில காட்சிப் படிமங்களை என்னுள் ஈனும். அது ஒருவகையில் நூலை ஊடுருவிச் செல்லும் அர்த்தமும் அனுபவமுமாகத் திரளும். அது ஒரு வினோதமான அனுபவம். நூல்களும் நானுமாகச் சேர்ந்தாடிய மாய விளையாட்டு. புற உலகத் தாக்கங்களைப் பச்சைப் புண்ணாக உணர்ந்து உள்வாங்கிக் கொள்ள அவகாசமில்லாத காலவெளிப் பயணம் அது. இப்போது நினைத்தால் அது ஓர் இழப்பாகப் பட்டாலும், அன்று பேசப்படாமலும் பிரிக்கப்படாமலுமே என்னுள் படிந்தூறிய புற உலகத் தாக்கம்தான் இன்று என் அழுத்தமான எழுத்தரசியலாகப் பெருக்கெடுக்கிறது என்று தோன்றுகிறது.

புல் முற்றினால் பொடித்துச் சிதறும். மரம் முற்றினால் வைரமாய்த் திரளும், இல்லையா? நான் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த சிறிது காலத்தில் பள்ளி நூலகமே என் கைவசத்தில் வந்தது. நூலகப் பொறுப்பாளராயிருந்த ஓவிய ஆசிரியர் என் படிப்பார்வத்தைப் பார்த்து, என்னைத் தன் உதவியாளனாக ஏற்று, நூலகச் சாவியையே என்னிடம் தந்துவிட்டார். என்னைத் தனது நம்பகமான பிள்ளையாகவே ஏற்றுக்கொண்டிருந்தார். படிப்பு முடிந்து நான் பள்ளியை விட்டு வெளியேறியபோது என்னைக் கட்டித் தழுவிக் கண்ணீரோடு வாழ்த்தியனுப்பியவர் அவர். பள்ளி நூலகத்தில்தான் என் தந்தையாரின் சேமிப்பையும் கடந்து மேலும் பல பழந்தமிழ் நூல்களோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. கூடவே காண்டேகர், சரத்சந்திரர், தாகூர், மு.வ. போன்றவர்கள் சொட்டச் சொட்ட நனைத்தெடுக்கும் அடர்மழையைப் போல் அப்போதுதான் எனக்கு அறிமுகமானார்கள்.

அதே காலகட்டத்தில், திராவிட இயக்கப் படைவீரர்களாய் வெளிப்பட்டுப் பின்னர் திராவிடக் கட்சிக்காரர்களாய் நங்கூரம் பாய்ச்சியவர்களின் தொடக்ககால ஏடுகளோடும் தொடர்பு ஏற்பட்டது. குறிப்பாக, 'போர்வாள்”, 'திராவிடநாடு” என்னும் இரு இதழ்களோடும் அவையொத்த சிறுவெளியீடுகள், கதைகள், பாலு சகோதரர்களின் அட்டைப்படம் தாங்கிய பொங்கல் மலர்கள் ஆகியவற்றோடும் எனக்கு உள்ளார்ந்த வாசிப்புத் தொடர்பு வளர்ந்தது. 'திராவிடம், திராவிடர்” என்னும் பெயரில் அவர்கள் மீட்டெழுதிய பழந்தமிழ்ப் பெருமைகளும், பார்ப்பன எதிர்ப்பும் இளந்தமிழ் மனங்களில் புதிய அலைகளாய் ஆர்ப்பரித்த காலம் அது.

அப்படியொரு சந்தர்ப்பத்தில்தான் பள்ளி நூலகத்திலிருந்த தொல்காப்பியத்தை நான் படிக்க எடுத்துக்கொண்டேன். வெகுகாலமாகத் தமிழாசிரியரிடமே பிரிக்கப்படாமல் தேங்கிக் கிடந்த நூல் அது. '"உனக்காகத்தான் இதைச் சண்டை போட்டுத் திருப்பி வாங்கினேன். எடுத்துப்போ,” என்றார் ஓவிய ஆசிரியர்.

பழந்தமிழ் நூல்களை அறிமுகம் செய்துகொண்டதில் எனக்கு யாருடைய வழிகாட்டலும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் தோன்றாத் துணையாயிருந்து என் தந்தையார்தான் வழி நடத்தினார் என்பது பொருத்தமாயிருக்கும். தொல்காப்பியத்தை அந்த வயதில் ஒரு விடலைத்தனமான படிப்பார்வத்தில் நான் வாசித்தது ஒரு கற்றுக்குட்டித் தனமான முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். பழம்பெரும் நூல்களை வாசிப்பதற்குக்கூட ஒரு மரபுவழிப் பின்புலம், புலமைத்தனம், சமூக அங்கீகாரம், தொழில்முறை செக்குமாட்டுத்தனம் யாவும் தேவைப்பட்டன. என் தந்தையார் இருந்திருந்தால் எனக்கும் சிலபலத் தகுதிகள் வாய்த்திருக்கும். நானாக முயன்ற ஒவ்வொன்றும் தான்தோன்றித் தனமாகவே வகைப்படுத்தப்பட வேண்டும். தொல்காப்பியத்தைத் தவிர வேறொன்றைத் "தீண்டியறியேன், தெளிந்தறியேன்” என்று சொல்லு மளவுக்கு அதில் தோய்ந்து தோய்ந்து அதுவாகவே வாழ்ந்திருந்த- அண்மையில் மறைந்த பாவலர் பாலசுந்தரம் போன்றவர்கள் விரல்விட்டெண்ணும் படியாகவேனும் இருக்கவே செய்கிறார்கள். எனக்கு அந்த நூலோடு உள்ள தொடர்பு அது என் பாட்டன் விட்டுச்சென்ற சொத்து என்னும் அளவில்தான். அதற்குமேலும் ஒன்றைச் சொல்லவேண்டும்.

தொல்காப்பியமாகவே வாழ்ந்த, வாழும் புலமையாளர்களின் தரிசனப் பார்வையைவிட மறுகட்டு மானத்தைக் கோரும் கருத்தியல் சார்ந்த என்னுடைய விமர்சனப் பார்வை மிகுந்த எதார்த்தமானதும் உயிர்ப்புள்ளதும் விழிப்புள்ளதும் என்பதில் எனக்கு எப்போதும் நம்பிக்கையுண்டு. இன்றைக்கு ஐம்பத்தெட்டு ஆண்டுகளுக்கு முன் அந்த நூலை அறிமுகம் செய்துகொண்டபோது எனக்கேற்பட்ட சிற்சில ஐயங்களை அண்மையில்தான் பேராசிரியர் வீ. அரசு அவர்களிடம் பகிர்ந்து கொண்டு தெளிவு பெறத் தோன்றியது. அவ்வய்யங்கள் மேலதிகத் தகவல்களுக்கும் புரிதல்களைச் சரிபார்த்துக்கொள்ளவுமானவை. ஆனால் அந்த முதல் வாசிப்பில் என்னுள் விரிந்த காட்சிப் படிமங்கள் இன்றும் நிறம் மாறாமல் அப்படியே இருக்கின்றன. இடையில் என் களமும் மொழியும் ஒத்த சிந்தனைகளோடு கனம் பெற்றிருக்கின்றன என்பதுதான் கூடுதல் அம்சம்.

அன்றைய தொல்காப்பிய வாசிப்பு பிற படைப்பாக்கங்களைப் போல எனக்குள் புதிய காட்சிப் படிமங்களை ஈனுவதற்கு மாறாக, ஏற்கனவே என் நினைவுப் புலனில் சேமிக்கப்பட்ட இரண்டு காட்சி யனுபவங்களையே மீட்டுருவாக்கியது எதிர்பாராத ஒன்று. திராவிடப் புரிந்துணர்வின் பின்புலத்தில் அக்காட்சிகளுக்கான பொருள் திரட்சிகளை எதிர்கொண்ட போது எனக்கு மட்டுமீறிய திகைப்பும் அவநம்பிக்கையுமே மேலிட்டன. என் அறிதலின் பரிமாணங்கள் ஒரு கோரக் கொலைக் கனவைப்போலப் பொய்த்து விடாதா, பொய்ப்பித்து விடுவதற்குத் தமிழின் எல்லையற்ற மொழியடுக்குகள் ஏதேனும் ஒரு வகையில் கை கொடுக்காவா என்னும் பரிதவிப்பு இன்னும் என்னுள் தளும்பிக்கொண்டிருக்கிறது.

என் முதல் காட்சி அனுபவம் தற்செயலாக எனக்கு வாய்த்த உதகை மலைப் பயணத்தில் பெற்றதாகும். தொல்காப்பிய வாசிப்புக்கு இரண்டாண்டுகளுக்குமுன் அது நிகழ்ந்தது. பேருந்து குன்னூரைக் கடந்து மலையேறிக்கொண்டிருந்தது. ஓரிடத்தில் நான் வெளியே பார்த்தபோது சாலையை ஒட்டினாற்போல் 200, 300 அடி பள்ளத்திலிருந்து மேலேறி வந்த ஒரு தைலமரம் என்னைப் பார்த்து இன்னும் எட்டிப் பார் என்றது. ஏற்கனவே குளிரில் சிலிர்த்திருந்த நான் மேலும் சிலிர்ப்புற்று எட்டியவரை பார்வையைச் செலுத்தினேன். சாலையின் திருப்பத்தில் கீழே பெரும் பள்ளத்தாக்கு விரிந்துகிடந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை செழும் பச்சை நிரத்தில் தேயிலைத் தோட்டம் பரந்து கிடக்க, அதனூடாக ஆங்காங்கே கண்காணிப்புக் கோபுரங்கள் போலத் தைல மரங்கள் ஓங்கி நின்றன. சில இடங்களில் இரண்டொரு மரங்கள் பட்டுப்போய் மொட்டையாகவும் காட்சியளித்தன. அந்தக் காட்சி ஒரு கச்சிதமான சித்திரமாக என்னைக் கட்டிப்போட்டது.

மற்றொரு காட்சியனுபவம் நான் துவக்கப்பள்ளியில் சேர்ந்த சில நாட்களிலேயே கிடைத்தது. பள்ளிக்குப் பின்புறம் ஒரு குளம் இருந்தது. கசிவு நீர்க் குளம். ஆனால் அப்போது பாசி மூடிக் கிடந்தது. அதன் கரையில் கிளுவை மரங்கள் சிலுப்பிக்கொண்டு நின்றன. இடைவேளை யின்போது சிறுவர்கள் அங்குச்சென்று குளத்தில் தெற்றுக்கல் எறிந்து, பாசி சிதறி நீர்க்கோடு தோன்றுவதைக் கண்டு மகிழ்வார்கள். தெற்றுக்கல் எறியத் தெரியாதவர்கள் கரைமீது நின்றுகொண்டு வேடிக்கை பார்ப்பார்கள். அப்போது ஒரு சிறுவன் காய்ந்துபோன கிளுவை முள்ளை ஒடித்து அடிமரத்தில் குத்தினான். குத்துவாயில் பால் கசிந்தது. அதில் முள்முனையை நன்றாகத் தோய்த்து, கல்பட்டுப் பாசி விலகித் தெரிந்த நீரில் வீசினான். வீசிய வேகத்தில் முள் நீந்திச் சென்றது. திரும்ப மூடிக்கொள்ள நெருங்கிய பாசிப்படலம் அதைக் கண்டு விலகிப் பின்வாங்கியது. சடுகுடு விளையாட்டில் எதிராளியை எட்டி எட்டித் தொடப் பாயும் சிறுவனைப்போல் முள்ளானது பாசியை நெருங்கி நெருங்கி ஓடியது. சிறுவர்கள் கைதட்டி ஆரவாரித்தார்கள். ஆயினும் அதன் வீரியம் மெல்லமெல்லக் குறைவதைக் கண்டு, சிறிது நேரத்தில் அந்தப் பாசிப்படலம் திரும்பிவந்து அந்த முள்ளையும் சேர்த்து மூடிக் கொள்ளும் என்று தோன்றியது. இடைவேளை முடிந்து மணியடித்ததால் அதைப் பார்க்காமலே வகுப்புக்குத் திரும்பிவிட்டேன். அன்று இரவு, கனவா மீள்நினைவா என்று தெரியவில்லை, அந்த முள் நீரிலும் நான் கரையிலுமாகப் பாசிப்படலத்தை ஓடஓட விரட்டிக்கொண்டிருந்தோம்.

தொல்காப்பிய வாசிப்பு எனக்களித்த மிகக் குறைந்த புரிதலில் இவ்விரு காட்சிகளும் மனத்தைப் பிசையும்படியான அர்த்த வெளிப்பாடுகளைத் தோற்றுவித்தன. எளிமையும் செழிப்பும் மிக்க தமிழ்ச் சமூகத்தின் நுட்ப வெளியைக் கண்காணித்துக்கொண்டும் கட்டுப்படுத்திக்கொண்டும் கோபுரக் கலசங்களில் பார்ப்பனர்கள் ரெட்டணைக்கால் போட்டு அமர்ந்திருப்பதாக அந்தக் காட்சி விரிந்தது. தமிழ் வாழ்வு என்னும் நன்னீர்க் குளத்தை மூடிக்கொண்டு அடர்ந்தழுகும் பச்சைப் பாசியாய் பார்ப்பனக் கலாச்சாரம் சூழ்ந்து கிடந்தது. பாசியின் பச்சை நிறம் அழுக்காற்றின் ஒட்டுமொத்த தற்குறிப்பேற்றமாய் அடையாளப்பட்டது. தமிழ் வாழ்வு, தமிழ்ச் சமூகம் என்பனவெல்லாம் திராவிடம் பேசிய இதழ்கள் எனக்களித்த வளமார்ந்த காட்சிப் படிமங்கள்தாம். செல்லப்போனால் அது ஒன்றுதான் அவை வளர்த்தெடுத்த பொய்க்கலப்பில்லாத அறிவுநெறி என்று தோன்றுகிறது. என்னையொத்த சமகாலத் தமிழர்களையும் எங்களது புதுக்கணுக்களாய் மேலெழுகின்ற - புனிதங்களைக் கட்டுடைத்துச் சரிபார்ப்புகளை மறுவாசிப்புச் செய்கின்ற இளந்தமிழ் அறிவுப்புலமைகளையும் சுயமரியாதையோடு வாழவைப்பதும் அது ஒன்றுதான்.

தொல்காப்பியத்தில் உள்ள சொல்லச் சொல்லப் பெருகும் செந்தமிழ்ச் செழுமைகள் நம்மைப் பெருமிதங்கொள்ள வைப்பவை என்பதில் ஐயமில்லை. அதே சமயம் கன்னங்கரிய கட்டுடலில் பூத்த அம்மைக் கொப்புளங்கள் போலத் தூவிக் கிடக்கும் பார்ப்பனக் குறியீடுகளைக் கண்டு நாம் பரவசம் கொள்ள முடியாது. ஒரு மாணவனாக அப்போது தோன்றிய கருத்தை இன்றைய மொழியில் சொல்வதானால், பார்ப்பனர்களையும் பார்ப்பனப் பொருண்மைகளையும் அப்படியே தாங்கி ஏற்றுக்கொண்டு, அவர்களை மதித்தும் அவர்களூடாகவும் வாழச் சம்மதித்த தமிழ் வாழ்வின் வரைவிலக்கணம்தான் தொல்காப்பியம். இப்போது இன்னும் பல துணையம்சங்கள் கூடிவந்து என்னைத் தெளிவு படுத்தியிருந்தாலும் அடிப்படையான அம்சம் அப்படியேதான் உள்ளது.

இந்தக் கணத்தில், 'பார்ப்பான் மேன்மையானவன்” என்னும் ஒரு அம்சத்தை - ஒற்றை அம்சத்தை மட்டும்- கை கழுவிட முடியும் என்றால், பார்ப்பனர் களோடும் பார்ப்பன மொழியோடும் நமக்கென்ன பகை? ஆனால் அது இருக்கும் வரை என் தன்மானம் என்பது தமிழனாய் இருப்பதுதான். என் உடன்பிறந்த கன்னடன், தெலுங்கன், மலையாளி யாவரும் முற்றாகத் தின்று செறிக்கப்பட்ட பின்னும் இன்னும் நான் அடையாளம் காக்கிறேனே, அதுதான் என் தமிழ் மானம். இந்தப் பேச்சுகளெல்லாம் அந்த என் இருப்பின் நீட்சிதான்.

பனம்பாரனார் தொல்காப்பியருடன் பயின்ற மாணவராம். அவர்தான் தொல்காப்பியத்துக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார். அதுவே நமக்குச் சில நுட்பமான அதிர்ச்சி மதிப்பீடுகளை அறிமுகம் செய்துவைத்து விடுகிறது. தொல்காப்பிய நூலாசிரியர் மிகப்பெரும் புலமையாளர்; அறிஞர்; தமிழ் முன்னோடிகளின் படைப்புகளைக் கற்றறிந்தவர். இவை யாவும் அவருக்கு இயல்பாய்ப் பொருந்தும் திறமைகள். கூடுதலாக, அவர் ஐந்திரம் கற்றவர் என்று சொல்லப்படுகிறது. ஐந்திரம் என்பது இன்று வரை கண்டெடுக்கப்படாத வடமொழி இலக்கண நூல். பாணினியின் இலக்கணத்துக்கு முற்பட்டதாயிருக்கலாம். அதைக் கற்றவர் என்று கூட அல்ல, ஐந்திரமாகவே தன்னை நிறைத்துக்கொண்டவர் என்பது அவர் பெற்ற சிறப்புத் தகுதி. தொல்காப்பியம் கடைச்சங்க கால நூலெனின் சங்கப் பலகையில் வைத்து அரங்கேற்றப்பட்டிருக்கும்.

மாறாக, மன்னன் நிலந்தரு திருவின் பாண்டியன் கூட்டிய புலவர் பேரவையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. அந்த அவைக்குத் தலைமை ஏற்றவர் அதங்கோட்டு ஆசான் என்பவர். அறம் போதித்து நாத்தழும்பேறியவர். அதற்கும் மேலாக அவர் பார்ப்பன வேதங்கள் நான்கையும் முற்றக் கற்றவர் என்றும் சொல்லப்படுகிறது. அதுதான் அவரது தனிப்பெருஞ்சிறப்பு. வேறு விதமாகச் சொல்வதெனில் அவர் "வேதங்களின் சாரத்தையே அறமாகப் போதித்த பெருமகன்” என்றாகிறது. அது அவருக்கான அரும்பெருஞ்சிறப்பு. இவ்வாறாக நூலாசிரியர் வடமொழி இலக்கண விற்பன்னர் என்றும், நூல் தகுதியை உறுதிப்படுத்தத் தலைமை ஏற்றவர் நான்மறைகளால் முற்றி நெற்றானவர் என்றும், ஆகவே இத்தகுதிகளே நூலின் தகுதிக்குச் சிறப்பு சேர்ப்பவை என்பது போலவும் ஒரு கற்பிதம் ஊதிக்காட்டப்படுகிறது.

நூலாசிரியர் வடமொழி இலக்கண வல்லுநர் அல்லவா? எடுத்த எடுப்பிலேயே அதை நமக்குத் துலக்கிக் காட்டி விடுகிறார். தமிழில் ஒருமை, பன்மை என்று வகைப்படுத்துவது மரபு. வடமொழியிலோ ஒருமை, இருமை, பன்மை என்பது வழக்கு. அந்த வழக்கைத் தமிழுக்குக் கொண்டு சேர்த்து, 'ஓர் எழுத்துச் சொல், ஈரெழுத்துச் சொல், இரண்டுக்கு மேற்பட்ட பல எழுத்துச் சொல்” எனச் சொற்கள் மூவகைப்படும் எனச் சுட்டிச் செல்கிறார். இது அப்படியல்ல என்று யாரேனும் விளக்க முற்பட்டாலும் வேறு எப்படியிருப்பதற்கும் அவருக்கு உதவியது ஐந்திரம் என்பதுதான் பொருத்தமாயிருக்கும். மிகுந்த தன்னடக்கமுள்ள பார்ப்பனப் போற்றிபோலத் தென்படும் தொல்காப்பியரைப் 'பிறப்பால்” ஒரு பார்ப்பனராகவே அடையாளங் காண்கிறார் கனகசபை(ப்பிள்ளை)! தமிழ்ச் சமூகத்தை நான்கு வகையாகப் பகுத்து அதில் முதல் பகுப்பாகப் பார்ப்பனரைக் குறிப்பிட்டது பற்றிய கோபம் அவருக்கு.

தொல்காப்பியர் முன்வைக்கும் பகுப்புமுறை: பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர் என்பது. போதாததற்கு வேளாளர் 'இழிந்தோர்” என்னும் குறிப்பும் நூலில் வருகிறது. கனகசபை வேறொரு முக்கியமான செய்தியையும் முன்வைக்கிறார். நானும் அதற்கு விடை தேடித் தொல்காப்பியத்தைத் துழாவியதுண்டு. அதாவது அரசரும் வணிகரும் பூணூல் அணிந்திருந்தார்களா என்பதைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தாமல் விட்டுவிட்டார் என்கிறார். இந்த ஒன்றைக் கொண்டே தொல்காப்பிய ஆசிரியன் பார்ப்பனன் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பூணூலை மறந்தவன்- தான் இரு பிறப்பாளன் என்பதை மறந்து தொலைத்தவன் பார்ப்பனனாயிருக்க முடியாது.

தொல்காப்பியரின் வகைப்படுத்தல் பார்ப்பன வகைப்படுத்தலான பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் பெயர்களின் மொழிபெயர்ப்பாகவே தோன்றுகிறது. வடஇந்தியாவில் முதல் மூன்று பிரிவினரும் பூணூல் பேர் வழிகள். இந்தியாவில், வரலாறு எழுதப்படத் தொடங்கிய காலத்திலிருந்து பார்ப்பன மதிப்பீடு களிலேயே அது பதிவு செய்யப்படுகிறது. அரசியல் ரீதியாக இந்தியா முழுமையும் ஒரு குடைக்குள் வந்தபோதும் தமிழ்நாடு மட்டும் தனித்தீவாய் ஒதுங்கிக் கிடந்தது. இப்படி ஒதுக்கப் பட்டுக்கிடப்பதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாகவோ என்னவோ, இலக்கிய ரீதியிலான தமிழக வரலாற்றெழுதியலைப் பார்ப்பன மதிப்பீடுகளுக்குக் கைமாற்றி, ஒட்டு மொத்த இந்தியாவின் கலாச்சார ஒருமைப்பாட்டைத் தொல்காப்பியர் இலக்கணப்படுத்தினார் என்பதாக இதை வரையறை செய்யலாம். சங்க இலக்கியங்கள் ஏதொன்றிலும் இல்லாத அளவுக்கு தொல்காப் பியத்தில் வடசொற்கள் மிதமிஞ்சி ஊடாடுவதையும் நாம் இவ்வாறே மதிப்பிடலாம்.

உலகத் தொன்மை இலக்கியங்கள் ஏதொன்றிலும் காணக் கிடைக்காத அளவுக்கு 'உலகு” என்னும் சுட்டலை அதிகம் பெற்றவை பழந்தமிழ் இலக்கியங்கள். புலவன் சுட்டும் 'உலகம்” ஒரு நாடாக, அல்லது ஓர் ஊராகக்கூட இருக்கலாம். ஆனால் அந்தச் சொல் மூலம் அவன் இயங்கு வெளியை உலகளாவியதாக விரித்துப் பார்த்த பரந்த மனத்தைப் பெற்றிருந்தான் என்பது இங்கு முக்கியமாகிறது. காரணம், அப்போது அவன் மனத்தில் நாகரிக நுட்பங்கள் என்னும் பெயரில் தன்னை ஊதிக்காட்டிக்கொள்ளும் அறிவுமைய அடைசல்கள் வந்து சேரவில்லை. சிறிய அறையே எனினும் அடைசலற்றிருந்தால் விசாலமாகத் தெரிவதில்லையா? அது போன்றதொரு விரிவை உருவகிக்கும் மனம் அவனுக் கிருந்தது. அந்த மனம்தான் பகிர்ந்துண்டு வாழ்வதை இருத்தலின் அடிப்படையாகப் போற்றிக்கொண்டது.

பிற்காலத்தில் தோன்றிய சாதிச் சழக்குகளுக்கும் பார்ப்பனத் தாக்கங்களுக்கும் மௌனமாகவே முகங்கொடுத்த - "மூதுரை” எழுதிய ஒளவைகூட, ஒரு கட்டத்தில் சாதி வேற்றுமையின் கோரப் பிணவாடையைச் சகித்துக்கொள்ள முடியாதவராய், தன்னுள் உயிர்ச் சரடாக இழையோடித் தொடர்ந்து வந்த பகிர்ந்துண்ணலின் அடுத்தகட்ட வளர்ச்சியாக உடைமைச் சமுதாயம் கடைபிடித்த 'ஈகை” என்னும் அலகைத் தூக்கிவைத்துக் கொண்டாடும் முகமாக, ''சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்... இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர் பட்டாங்கில் உள்ளபடி” என்று ஓங்கிக் குரல் கொடுக்கிறார். 'இடுதல்-ஈகை” என்பது பெறுகிறவர்களைப் பிச்சைக்காரர்களாகக் கொச்சைப்படுத்திக் கொடுத்தல் அல்ல. தனக்கு நல்லறம் செய்ய வாய்ப்பளித்தார்களே என்று நன்றி பாராட்டும் விதமாகக் கொடுப்பதாம். இந்தத் தொடர் இழைதான் இல்லாதாரிடத்தில் என்ன மலினப்பட்டுப் போனாலும் உயிர் வாழ்தலை இன்னும் இனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பண்பு. இந்த எதார்த்தத்தின் ஊடாகவே நாகரிகத்தின் உயர்ந்தபட்சத் தேடலாகத் தொல்காப்பியம் தமிழ் வாழ்வை இந்திய ஒருமைப்பாட்டுக்குள் புதைக்கிறது.

'அந்தணர், அரசர்...” என்று தொடரும் இந்த நாற்பால் பகுப்புமுறை தமிழுக்கே உரியது என்று காப்புரிமை கோரும் தீவிரத் தமிழ்க் குரல்கள் அதிகமுண்டு. தமிழ்ப் பகுப்புமுறை அச்சு அசலானது; ஐந்தினை வாழ்வைச் சிறப்பிக்கும் தரம் சார்ந்தது. அதைப் "போல”ச் செய்துதான் வடமொழியில் சேர்த்துக்கொண்டார்கள் என்பது அவர்கள் வாதம். அதற்குப் பாவாணரும் விதிவிலக்கில்லை. அடிப்படையில் அவரும் ஒரு வேளாளர்தான் அல்லவா? உழுதுண்ணும் வேளாளர் அவர். மற்றவர்கள் வரப்பில் ஏறிக்கொண்ட உழுவித்துண்ணும் வேளாளர்கள். உழைப்பை இழிவுபடுத்துவதில் எவன் தீவிரம் காட்டுகிறானோ அவன்தான் சமூக மதிப்பீட்டில் உயர்ந்தவனாகப் போற்றப்படுகிறான். அதுதான் பார்ப்பனியத்தின் இன்னொரு பெயர்.

பகுப்புமுறை விஷயத்தில் மறைமலையடிகள் இன்னும் ஒருபடி மேலே சென்று, 'இவ்வாறு பார்ப்பானுக்கு உயர்வு கற்பித்து ரிக் வேதத்தில் நுழைத்தவர்கள் வடநாட்டுப் பார்ப்பனர்களாயிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் நுட்பமாக வேற்றுமை பார்க்கிறவர்கள் அல்லர். ஆகவே இதைச் செய்தவர்கள் தென்னாட்டுக்கு வந்து தமிழர்களோடு இனக்கலப்புற்ற திராவிட ஆரியப் பார்ப்பனர்கள்தாம்” என்று அடித்துச் சொல்கிறார். அவருடைய கூர் நோக்கிலும் ஒரு நியாயம் இருக்கிறது. பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள். நுட்பமாக வேற்றுமைப் படுத்துவதில் திராவிட ஆரியப் பார்ப்பனர்களுக்குச் சற்றும் சளைத்தவர்களல்லர் வெள்ளாளச் சூத்திரச் சாதியினர். இதிலுள்ள புறம்போக்குத்தனம் என்னவென்றால் பிறர் தன்னைக் கீழ்மைப் படுத்துவதுதான் பூதாகாரமாகத் தெரியுமே தவிர பிறரைத் தான் கீழ்மைப்படுத்துவது தன் சுரணைக்கே எட்டுவதில்லை என்பதுதான்.

வடநாட்டுப் பார்ப்பனர்கள் புலால் உண்பவர்கள்; பிறர் பார்த்திருக்க உணவு கொள்வதில் வேற்றுமை பாராட்டாதவர்கள்; பிறரை இழிவுபடுத்த முனைப்பு காட்டாதவர்கள் என்பதை மறைமலையடிகளே நேரில் கண்டறிந்ததாகச் சொல்கிறார். ஆனால் தென்னாட்டுப் பார்ப்பனர்களோ பிறரை இழிவுபடுத்துவதிலும் தங்களைப் பூசுரர்களாக உயர்த்திப் பேசுவதிலும் தங்களுக்கான மறைவிடத்தில் தனித்து உண்பதிலும் பெருமையடைகிறவர்கள் என்று மனம் வெதும்புகிறார்.

மனிதனை மனிதன் அவமதிக்கும் சாதி நுட்பங் களைப் பேணுவதில் ஆச்சாரத் தமிழுக்கும் தமிழ்ச் சமூக வெளிக்கும் தனித்த இடமுண்டு. மனித உடம்பிலேயே இடுப்புக்கு மேலே உயர்ந்ததாகவும் கீழே இழிந்ததாகவும், இடப்பக்கம் தாழ்ந்ததாகவும் வலப்பக்கம் சிறந்ததாகவும் பாகுபடுத்துவது ஒட்டுமொத்த 'இந்தி”யர்களுக்குமான மேட்டிமைக் கலாச்சாரம் எனினும், அது தமிழ் மண்ணில்போல பிற பகுதிகளில் அவ்வளவு நுட்பமாகப் பேணப் படுவதில்லை.

இங்கே வெள்ளாளனும் பார்ப்பானும் ஏற்றத்தாழ்வை அனுசரிப்பதில் தனித்தனியாகவும் பொதுவாகவும் மூன்றுமுறை கூர் தீட்டுகிறார்கள். அதுதான் சாதி ஆச்சாரத்தின் நுட்ப வெளிப்பாடாகிறது. பார்ப்பனர்கள் சூத்திரர்களை அவமதித்ததை ஒப்பிடும்போது சூத்திரர்கள் தலித்துகளை அவமதிப்பது குருதி ஒழுகும் பச்சைப் புண்ணாய்த் தொடர்கிறது. சூத்திரன் பார்ப்பானிடம் இழந்த மரியாதையை வட்டியும் முதலுமாகத் திருப்பிப் பெறுவதற்குத் தலித்துகளைப் பலி கொள்கிறான்.

இந்தப் போட்டிமிக்க சாதி வெளியில் கொழுத்த விளைச்சல் தரும் ஊடுபயிர் ஒன்று வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது. அதுதான் தலித்துகள் தலித்துகளையே அவமதித்து இழிவுபடுத்திக்கொள்ளும் சாதி மூர்க்கம். முதல் பயிரின் விளைச்சல்கூட ஒருநாள் சாவியாகப் போகலாம். ஆனால் இந்த ஊடுபயிரின் விளைச்சல் ஒருபோதும் பொய்க்காது என்பது சூத்திரர்களின் திடமான நம்பிக்கை. ''பறையன் எவ்வளவு கல்வியும் ஒழுக்கமும் உள்ளோனாயினும் எத்தனை செல்வனாயினும் ராசாதி ராசனாகிவிடினும் (அவன்) பள்ளனாகவும்கூட முடியாது,” என்பது அந்த நம்பிக்கையின் வெளிப்பாடு. (இந்த மேற்கோளை இன்னொரு முறையும் பயன்படுத்துவேன்.)

சாதி ஏற்றத்தாழ்வை இந்தியாவின் வேறு எந்த மொழிக்கும் இல்லாத சொல்திறனோடு தமிழ் வெகு நுணுக்கமாகச் சேமித்துக் கொள்கிறது. உதாரணமாக, தலித் சாதியினரை பறையன், பள்ளன், சக்கிலியன் என்று 'அன்” விகுதி போட்டு அழைப்பதே பொதுவாகப் பிற சாதியாட்களின் இயல்பாயிருக்கிறது. தலித் எழுச்சி பற்றிய தீவிரப் பேச்சுகளின் காரணமாக பறையர், பள்ளர், சக்கிலியர் என்று 'அர்” விகுதி போட்டு அழைப்பது சாத்தியப்பட்டிருப்பினும் வெகுமக்களில் பெரும்பாலோருக்கு அப்படி அழைப்பது நக்கல் தொனியாகவே ஒலிக்கிறது. ஆனால் அதையே வெள்ளாளன், செட்டியான், முதலியான், நாடான், வன்னியன், மறவன் என்று சொல்லிப் பாருங்கள். (கோபம் கொண்ட தலித்துகள் தவிர மற்றவர்களுக்கு) எவ்வளவு அந்நியமாய், அவமதிப்பாய், அருவருப்பாய் ஒலிக்கிறது! இது எப்படி? சுட்டுப் பெயர்களில்கூட ஏற்றத்தாழ்வுகளைக் காலங்காலமாய் அவர்கள் பழக்கிவைத்துக் கொண்டுள்ள நுட்பம் அப்படி. இழிவை ஒரு சொல்லின் விகுதியைக் கொண்டே எளிதில் நிறுவிவிடும் நுட்பம். வடக்கே உள்ளவர்கள் இழிவைப் பேச முழுதாகச் சொற்களை உருவாக்கிக் கொள்வார்களே தவிர சொல்லின் விகுதிக்குள் சேமித்துக்கொள்வதை மொழியில் தவிர்த்துவிட்டார்கள். தமிழில் வயதில் மூத்தோரை 'அவர்” என்றும் இளையவரை 'அவன்” என்றும் குறிக்கும் பொதுச் சுட்டலைக்கூட, சாதிப்பாகுபாட்டைக் குறிக்கும் சிறப்புச் சுட்டலாக மாற்றிக்கொண்டு விட்டார்கள். 'மேல்”சாதியைச் சேர்ந்த சிறுவன் 'கீழ்”ச்சாதியைச் சேர்ந்த கிழவரைக்கூட 'டே...” போட்டு அழைக்கிறான்.

ஆனால் அந்தக் கிழவர் மறுமொழியாக ''என்ன சாமி?” என்றுதான் அழைக்கவேண்டும். பார்ப்பன அவமதிப்பை விட இது எந்த வகையில் குறைந்ததாம்? குடிகாரத் தெருப்பொறுக்கி அப்பனைக்கூட 'அவர்” என்று சுட்டுகிற மகன், குடும்பத்தையே காத்துக் கரையேற்றும் தாயை 'அவள்” என்றுதான் சுட்டுகிறான். பெற்றவளேயானாலும் அவள் பெண்தானல்லவா? இவற்றையெல்லாம் மறுபரிசீலனைக்கு உட்படுத்தாமல், பார்ப்பனக் கலாச்சாரத்திலிருந்து விடுபட முயலாமல் தொடர்ந்து கொண்டிருப் பதுதான் அப்பழுக்கற்ற தமிழ்க்கலாச்சாரமாக இன்றும் பேணப்படுகிறது. இவற்றைப் பற்றியெல்லாம் மறைமலை அடிகளாரைப் போன்றவர்கள் மறையவர்களைக் குறைகூறும் வாயாலேயே பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பேசுவதில்லை என்பதால் நாம் பேசும்படியாகிறது.

சூத்திர-தலித் சாதிகளுக்கூடாக நிலவும் சாதிப் பாகுபாட்டு நுட்பங்களையும் விஞ்சும்படியான சாதியாச்சாரத்தைத் திராவிட ஆரியப் பார்ப்பனர்கள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. காரணம், அவர்கள் திராவிட ஆரியப் பார்ப்பனர்களாகத் தரம் தாழ்ந்து போனதுதான். பார்ப்பனர்களே புனைவுகளால் தங்களைத் தூக்கி நிறுத்திக் கொண்டவர்கள் என்னும்போது தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்குத் தமிழ்ப் பின்புலத்தில் இருமடங்கு புனைவுகள் தேவைப்பட்டன. அதனால்தான் தொட்டால் மட்டும் அல்ல, பார்த்தாலே தீட்டு என்னும் எல்லைக்கும் சென்று தங்களை மேலேற்றிக்கொள்ள முயன்றார்கள்.

தென்னாட்டில்போல பார்ப்பனர் வாழும் சேரிகளை - அதாவது அக்ரஹாரங்களை நீங்கள் வேறெங்கும் காணமுடியாது என்பதுகூட இந்த உளவியலின் வரலாற்று வெளிப்பாடுதான். ஒதுக்குவதும் ஒதுங்குவதும் தென்னாட்டுப் பார்ப்பனர்களுக்கு மூச்சுக்காற்றுப்போல. நாம் ஒன்றைத் தெளிவாக மனத்திலிருத்த வேண்டும். நாற்பால் பகுப்புக்கு யார் சொந்தக்காரராயிருப்பினும் பார்ப்பானின் மேலேற்றத்தை ஏற்றுக்கொண்டு தமிழன் தாழ்வுற்றுப் போனவன்தானே? பார்ப்பனர்கள் தங்களுக்குத் தேவையான எதையும் எங்கிருந்தும் தங்களுடையதாக அபகரித்துக்கொள்வார்கள்; "போலி” செய்து கொள்வார்கள். காலப்போக்கில் அதைத் தங்களுடைய சரக்காகவே நிறுவிக் கொள்வார்கள். அவர்கள் பெயரிலான அறிவுச் சொத்துகள் பலவும் இப்படித்தான் அவர்களால் சேகரம் செய்யப்பட்டன. அவர்களுடைய திறமை எல்லாம் தங்களுக்கு உகந்ததை அடையாளம் கண்டு அபகரிப்பதில்தான் இருக்கிறது.

தொல்காப்பியத்தையும் அதை எழுதியவரையும் புனிதப்படுத்துவதில் இன்னொரு வீரியம் மிக்க குழுவும் உண்டு. அவர்களுடைய பலம், தமிழின் அழகுகளையெல்லாம் துருவித் துருவித் திரட்டி எடுப்பது. பலவீனம், அறிவியல்வாதிகளாய்க் கடக்க முடியாத தூரத்தை அரசியல்வாதிகளாய்க் கடந்து சென்றுவிடுவது. ஆயினும் ஆய்வுத் துணிபுகளோடு தமிழ்மானம் காக்க வந்த அறிவார்ந்த புலமைக் குழுவாகவே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள். அந்தக் குழுவின் முடிந்த முடிவு என்னவெனில் தொல்காப்பியத்தில் தென்படும் பார்ப்பனச் சார்புநிலையைப் பேசும் பாடல்கள் அனைத்தும் பிற்கால இடைச்செருகல்களே என்பதாகும். அந்த முடிவை அவ்வளவு எளிதாக, போகிற போக்கில் யாராலும் புறந்தள்ளிவிட முடியாது என்பது உண்மையிலும் உண்மை. ஆனால் அதை முழுமையாக ஏற்பதிலுள்ள சிக்கல்களையும் நாம் எதிர்கொள்ள வேண்டும். இதற்கொரு தீர்வு காண எளிய வழி, அவர்கள் எங்கெங்கெல்லாம் தங்களை அரசியல்வாதி களாகச் சுருக்கிக் கொண்டார்கள் என்பதை ஆராய்வதுதான்.

பழந்தமிழ்ப் படைப்பாக்கங்களில் ஏறக்குறைய எல்லாமே தமிழர்களால் எழுதப்பட்டவை - அதாவது பார்ப்பனர்களுக்காகக் காத்திருந்து பெறப்பட்டவையல்ல - என்பது தமிழுக்குக் கிடைத்த பேறு. தொகை நூல்களில் பல பாடல்கள் பார்ப்பனர்களால் எழுதப் பட்டவையாக அறியப்படுகின்றன. இந்தக் கண்டடைதலில் கறார் தன்மை இருக்க முடியாது. காரணம் புலவர்களின் பெயர்த் தன்மைகளைக் கொண்டும் வெகுசில பாடல்களின் உள்ளுறை பொருள்களைக் கொண்டுமே அவை அவ்வாறு பட்டியலிடப் படுகின்றன. பார்ப்பனர்கள் எழுதிய பல பாடல்கள் தமிழர்கள் முன்னெடுத்த மைய நீரோட்டப் போக்கிலேயே படிமானப் பட்டிருப்பதால் ஆசிரியன் பற்றிய நம் முடிவுகள் வெறும் யூக அடிப்படையிலேயே அமைந்திருக்க வாய்ப்புகளுண்டு. தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பன ஊடாட்டம் தொடங்கி 3000 ஆண்டுகளைக் கடந்திருக்கலாம். ஆனால், அதற்கு முன்பாகவே பார்ப்பனர்களால் மொழிப்புலத்தையும் படைப்புலகத்தையும் வென்றெடுக்க முடியாதபடி தமிழ் உலகம் தன் செழுமையின் எல்லைகளை விரிவு செய்திருந்தது.

ஒரு நீரோட்டம் புதிதாக வெட்டித் திசை திருப்பிவிட முடியாத அளவுக்கு ஆழக் காலூன்றிப் பாயும் ஆற்றோட்டமாகத் தமிழ்ப் புலமை உலகம் தன் வாழ்வியல் பதிவுகளை நிறுவிக்கொண்டு விட்டது. சங்கத் தொகை நூல்களின் பாடல்கள் ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டவையல்ல என்பதை மறந்துவிடக் கூடாது. 500 முதல் 1000 ஆண்டுகால இடைவெளியில் எழுதப்பட்டவைதான் பின்னர் ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன. அதாவது, பார்ப்பன வருகையின் போதே தமிழ் இலக்கியத் தோட்டம் பூத்துச் செழித்திருந்தது என்பதே உண்மை. ஆகவே, பிற திராவிட மொழிப்புலங்களைப் பார்ப்பனர்கள் மிக எளிதாகக் கைப்பற்றிக்கொண்டதைப்போல் தமிழில் முடியாது போயிற்று. அதற்காக அவர்கள் ஒன்றும் சும்மா இருந்துவிடவில்லை. தங்கள் கலாச்சார வலையை எல்லாச் சுருக்கு முடிச்சுகளோடும் பரவலாக விரித்து வைப்பதிலும், உரையாடல் மூலம் பொதுவாழ்வில் பல உடைப்புகளை நிகழ்த்துவதிலும், தங்கள் மேலாதிக்கத்தை மெல்ல மெல்ல ஆனால் உறுதியோடு வென்றெடுப்பதிலும் அவர்கள் படிப்படியாகக் காலூன்றவே செய்தனர்.

இதிலுள்ள ஒரே குறைபாடு, அவர்களது வெற்றியானது எந்தக் காலத்திலும் ஒட்டுமொத்தமாகக் கேள்விக்கப்பாற்பட்டதாய் இருக்க வில்லை என்பதுதான். எத்தனைமுறை உழுதுப்போட்டு அருகம்புல்லைக் களைந்தெடுத்தாலும் அதன் ஏதோ ஒரு கணு எங்கோ மண்ணுக்குள் தப்பி நின்று முளைத்துவிடுவதில்லையா? பார்ப்பன எதிர்ப்பும் அவ்வாறே ஒற்றையாய், பலவாய், இயக்கமாய், சிதறலாய், முணுமுணுப்பாய், கூக்குரலாய் கேட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் பார்ப்பன முயற்சி அதனினும் தீவிரமாய், வஞ்சகமாய், நைச்சியமாய் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அவர்கள் சந்தித்த எதிர்ப்புகள் பிறருக்கு நேர்ந்திருக்கு மெனில் அவர்களைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். ஆனால், பார்ப்பனர்கள் காற்றுப் புகமுடியாத இடத்திலேயும் கலக உணர்வாய்ப் புகுந்து, பறவை எச்சத்தில் விழுந்து பாறையைப் பிளக்கும் விதையைப்போல முளைத்தெழுகிறவர்கள்.

எதிர்ப்புகள் மூர்க்கம் பெறும்போது பின்வாங்கவும் அடங்கியிருக்கவும் கற்றவர்கள். எதிர்ப்பவர்கள் அசரும்போது புதுவியூகத்தோடும் புதுவேகத்தோடும் தாக்குதல் தொடுத்துத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளக் கூடியவர்கள். ஒரு 350 ஆண்டுகால களப்பிரர் ஆட்சியும், தொடர்ந்து நிகழ்ந்த ஜைன, பௌத்தத் தாக்கங்களும் தமிழ்ச் சமூகத்தைப் பார்ப்பனத் தாக்கங்களின் கோரப் பிடிக்குள் வீழ்ந்துவிடாமல் காக்கப் போராடிக் கொண்டிருந்தபோதுதான் பக்தி இயக்கம் தலைதூக்குகிறது. பார்ப்பனனும் வெள்ளாளனும் கூட்டுச் சேர்ந்த இயக்கம் அது. இது நடந்தது எட்டாம் நூற்றாண்டில்.

இருபதாம் நூற்றாண்டில் இதே வரலாறு திருப்பி எழுதப்படுகிறது ராஜகோபாலாச்சாரி - அண்ணாதுரை கூட்டுச் சேர்க்கையில். அந்தக் கூட்டு வென்றதும் ஆச்சாரி சொன்னார்: ''இராமன் சொன்னான் - 'சீதா, நான் உன்னை மீட்பதற்காகப் போரிடவில்லை; இராவணனை அவமானப்படுத்தவே போரிட்டேன்,” என்று. அதுபோல, நான் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தப் பாடுபடவில்லை; காங்கிரசை ஒழித்து அவமானப்படுத்தவே பாடுபட்டேன். அதில் ஜெயித்தேன்.”

ஆக, அப்போது காமராசர் தோற்றதும் அண்ணாதுரை ஜெயித்ததாகக் கருதிக்கொண்டதும் பார்ப்பன இருப்பின் கொண்டாட்டத்தைத்தான். இதே கதைதான் பக்தி இயக்கத்திலும் நிகழ்ந்தேறியது.

ஜைனமும் பௌத்தமும் 'கடின உழைப்புக்கு மாற்று ஏதுமில்லை” என்னும் உண்மையைப் போதித்த மதங்கள். வாழும்போது துன்பப்பட்டாலும் செத்த பிறகு சொர்க்கம் புகலாம் என்று கவர்ச்சி காட்டாத மதங்கள். உன் சுமையைக் கடவுள் கைமாற்றிக் கொள்வார் என்று பொய்யைப் புனையைத் தெரியாதவை. இவற்றுக்கு நேர் எதிரானதுதான் பக்தி இயக்கம். 'இந்தச் சீட்டை வாங்கு. நீதான் இலட்சாதிபதி” என்று விற்பவன் சொன்னால் அதையே நல்வாக்காக நம்பி மந்தைமந்தையாக மக்கள் பரிசுச் சீட்டு வாங்கவில்லையா? பக்தி இயக்கத்துக்கும் அதுதான் சூத்திரம்.

'பக்தி செய், கடவுள் உன் பக்கம். கடவுளைத் துதி, சொர்க்கம் நிச்சயம்” என்று மோசடித்தனமான எளிய சூத்திரத்தை பக்தி இயக்கம் மக்களிடம் நீட்டியது. அவ்வளவுதான். சரசரவென, சடசடவெனத் தமிழ்ச் சமூகம் சூறைக்காற்றில் சிக்கிய வெற்றிப் பதாகைகள் போல நாரும் தோலுமாய்க் கிழிசலுற்று, அந்தக் கிழிசலையே புதிய ஒப்பனையாக்கிக்கொண்டு கேள்விகளற்றுக் கொண்டாடிக் களித்தது. ஏற்கனவே பார்ப்பன அலையேற்றத்தின் பதிவிறக்கமாய்த் தொல்காப்பியம் தொட்டுக்காட்டிய ஊற்றுக் கண்ணிலிருந்து அதன் தொடர்ச்சியாக வடமொழிச் சாரத்தை வடித்துவைத்த இலக்கண நூல்கள் பெருவாரியாக அரங்கேற்றப்பட்டன.

இத்தனைக்கும் பிறகு சங்க காலத்துக்கு முன்னும் பின்னுமான தமிழ்வாழ்வும் அறமும் இலக்கியச் சுவடிகளில் அழுக்குப்படாத பூத்திரட்சியாகவே தனித்துத் தெரிந்தன. அவற்றை அவ்வாறு விட்டு வைப்பது பார்ப்பன வரலாற்றுப் புனைவைத் தகர்க்கும் சான்றாக நின்றது. அங்கேதான் இடைச்செருகல் படைப்பாளிகளும் உரையாசிரியர்களும் தோன்றுகிறார்கள். அவர்கள் அனைவருமே பார்ப்பனர்கள், அல்லது பார்ப்பன அறங்களுக்குத் தங்களைத் தத்தம் செய்தவர்கள் என்பது சொல்லாமலே விளங்கிக்கொள்ள வேண்டிய ஒன்று. அவர்களால் பழந்தமிழ் நூல்கள் யாவும் பார்ப்பனச் சார்புப் பிரதிகளாக உருமாற்றப் படுகின்றன. போதாக்குறைக்கு நூற்றுக்கணக்கான ஜைன-பௌத்த இலக்கியச் சுவடிகள் நீரிலும் நெருப்பிலும் போட்டு அழிக்கப்பட்டன. இந்த அழி வேலையில் பார்ப்பனர்களுக்கு இணையாக அல்லது அதிகமாகவே பங்காற்றிய 'பெருமை” சைவர்களையும் சைவ மடங்களையும் சாரும். ஆக, எஞ்சிய பிரதிகள் யாவும் வலிந்து புகுத்திய இடைச் செருகல்களோடோ, உரை விளக்கங்களோடோ அழுக்கேற்றப்பட்டே உயிர்வாழ அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழுக்கும் தமிழ் வாழ்வுக்கும் வடமொழியையும் பார்ப்பனக் கலாச்சாரத்தையும் மூலப் பொருள்களாக்கும் வலுக்கட்டாய முயற்சி இது.

இங்கே நாம் ஒன்றைச் சொல்லியாக வேண்டும். ஜைன-பௌத்தப் பிரதிகள் என்றால் அவை ஏதோ அந்நியர்களால் எழுதப்பட்டவை போன்ற ஒரு பாமர எண்ணம் தன்னிச்சையாகப் பலருக்கும் தோன்று கிறது. இன்னும் சொல்லப்போனால் சைவம் தவிர (இதில் வைணவம்கூட ஒரு எல்லைக்குள் கட்டுப்படுத்தப்பட்டதுதான்.) மற்ற அனைத்து மதங்களும் தமிழுக்கு அந்நியம்போல் ஒரு தோற்றம் கட்டமைக்கப் பட்டுள்ளது. இது சைவர்களால் வெற்றிகரமாகக் கட்டமைக்கப்பட்ட கன்னங்கரிய பொய்த் தோற்றம். இதற்குக் காரணம் ஒருவேளை, தமிழுக்கும் தமிழ் வாழ்வுக்கும் மூல மதங்களாயிருந்து பணியாற்றிய ஜைனத்தையும் பௌத்தத் தையும் முற்றாகத் துடைத்து அழித்ததில் பெரும் கொலைப்பழியைத் தன்னகங்காரத்தோடு ஏற்றுக்கொண்டவர்கள் சைவர்கள் என்பதாயிருக்கலாம். எப்படியிருப்பினும் தமிழைப் பொறுத்தவரை சைவத்தை விடவும் வைணவம் ஒரு கணு சாரம் கூடியதென்றே சொல்லலாம். கன்னலும் தேனும் கலந்துருகி வாயொழுகும் இன்னறுங்கனிகளென்ன இனித்த செழும் தமிழ்ச் சொற்களை வைணவப் பாடல்களிலும் பெருமாள் சேவையிலும்போல வேறெங்கும் கண்டதில்லை.

தொல்காப்பியத்தையே சான்றாதாரமாகக் கொண்டாலும் மாயோனும் சேயோனுமே (திருமாலும் முருகனும்) தமிழின் பழம்பெருந் தெய்வங்கள். சைவம் தமிழ்நாட்டில் மிகப் பிற்காலத்தில்தான் உரம் பெற்றது என்பதாகக் கால்டுவெல் கட்டுரை எழுதியதும் சைவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தந்திருக்கிறது. (அந்தக் கட்டுரையையும் சேர்த்துத்தான் நீக்கிவிட்டார்கள்.) உண்மையில் தமிழில் எழுதிய பிற மதங்களைச் சேர்ந்த மிகப் பெரும்பாலோரும் தமிழ் மண்ணில் பிறந்த தமிழர்களே. பௌத்தம் தழுவிய அத்தகைய தமிழ்ப் பெருமக்களே சீனம், ஜப்பான், தென்கிழக்காசிய நாடுகள் எங்கும் சென்று பௌத்தத்தோடு தமிழ்க் கலைகளையும் பரப்பிய பேரறிவாளர்கள். தமிழில் முதல் சிறுகதைகளை எழுதியவர்கள் மலேயாவையும் இலங்கையையும் சேர்ந்த இஸ்லாமியத் தமிழர்கள்தாம் என்பது போன்ற உண்மைகளை நாம் இனியாவது தேடித் தொகுத்து மனத்தடைகளற்ற தமிழர்களாய் வளரவேண்டிய தேவையை உணரும் நேரம் இது.

பழந்தமிழ் நூல்களுக்குப் பார்ப்பனர்கள் எவ்வாறு உரை எழுதினார்கள் என்பதற்குத் தொல்காப்பியத்திலிருந்தே ஒரு சான்று:

''பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப”

என்பது தொல்காப்பியத்தில் வரும் பாடல். திருமணம் பற்றிச் சொல்லும் பாடல். களவொழுக்கத்தில் பரிமாறிக்கொள்ளப்படும் உறுதிமொழிகள் காப்பாற்றப்படாமல் பொய்யும் ஏமாற்றும் மேலெழுந்தபோது மூத்தோர் கற்பொழுக்கத்தை மேற்கொள்வதற்கான கரணத்தை உண்டாக்கினர் என்பது அது சொல்லும் செய்தி. கரணம் என்னும் வடசொல்லுக்கு சடங்கு என்பது பொருள். அதை நாம் இன்றைய வழமைப்படி திருமணச் சடங்கு என்று நீட்டித்துக்கொள்கிறோம். களவொழுக்கம் நசிவுக்குள்ளாகி வந்த நிலையில் கற்பொழுக்கம் மேற்கொள்வதை ஊர்கூடி உறுதி செய்ய வேண்டிய கட்டத்தை எய்திய காலமாய் அதைப் புரிந்து கொள்ளலாம். ஏறக்குறைய சிலப்பதிகாரத்திற்கு முற்பட்ட காலகட்டமாய் இருக்க வேண்டும். இப்பாடலில் வரும் 'என்ப” என்னும் சொல்லுக்கு 'என்று கூறுவர்” என்பதாகப் பொருள். அதற்கடுத்த பாடல்,

''கரணத்தின் அமைந்து முடிந்த காலை
நெஞ்சுதனை அவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும்...”

என்று நீள்கிறது. அதாவது, “மணம் முடிந்த கையோடு நெஞ்சம் மலர்ந்து புணர்ந்தனர்,” என்று நேர்பட விவரிக்கப்படுகிறது. இந்த இருபாடல்களுக்கிடையே உரையாசிரியர் நச்சினார்க்கினியர் (எவ்வளவு அழகான பெயர்! விரும்பி அணுகுகிறவர்களுக்கு இனியராம்.) மேலும் சில விவரங்களை நுழைக்கிறார். இது வரம்பு மீறிய செயல். இதை முன்பாடலில் உள்ள 'என்ப” என்னும் சொல்லை வைத்துக்கொண்டு செய்கிறார். அவர் புகுத்தும் விவரம் மிகவும் வினோதமானது மட்டுமல்ல, அதிர்ச்சியும் அருவருப்பும் தரக்கூடியது. அதாவது திருமணம் முடிந்து மூன்று இரவுகள் விட்டு நான்காம் இரவுதான் தலைவன் தலைவியைப் புணர்கிறான் என்கிறார். மூன்று இரவுகள் ஏன் வீணடிக்கப்படுகின்றன? தலைவனுக்கு ஏதேனும் நீர்சுளுக்கா என்ன? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. சந்திரன், கந்தர்வர், அக்னி என்னும் மூன்று கடவுளர்களும் ஆளுக்கு ஓர் இரவாக அவளைப் புணரவிட்டு (மானசீகமாகத்தான்) அதன் பின் நாலாம் இரவு தலைவன் புணர்கிறானாம்!

இதுதான் பார்ப்பனர்கள் 'வேலை மெனக்கிட்டு” உரையெழுதிய அழகு. இப்படியோர் விளக்கம் தர அவர் துணிந்ததற்குக் காரணம் ஒருவகையில் தொல்காப்பியர்தான். களவொழுக்கத்தை விளக்க வந்த தொல்காப்பியர்,

''மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”

என்று பார்ப்பனரின் எண்வகை மணமுறையைச் சுட்டுகிறார். அந்த எண்வகை மன்றல் பற்றி நச்சினார்க்கினியர்தான் நன்றாக விளக்குவார் எனில், அந்த மூன்று இரவுகள் விவகாரத்தையும் தமிழ் வாழ்வில் ஏற்றிச் சொல்ல அவருக்கு வாய்க்கும்தானே?

தொல்காப்பியரும் இலேசுப்பட்டவரில்லை. ஆணும் பெண்ணும் காதல் புரிய பத்துப் பொருத்தங்கள் இருந்தால் நல்லது என்கிறார். இருப்பது நல்லதுதான். ஆனால் இந்தப் 'பொருத்தம் பார்த்தல்” என்பது ஒரு வழக்கமாக, வழக்காக மாறுவது அல்லது மாற்றுவது தமிழின் களவியல் - கற்பியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது என்பதையும், தொல்காப்பியரின் ஐந்திர அறிவு அதற்கு இழையெடுத்துக் கொடுக்கிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். “ யாயும் ஞாயும் யாரா கியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்... அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே,” என்னும் பாடல் காட்டும் தமிழ் வாழ்வுக்குத் தொல்காப்பியர் எந்த அளவு அறம் சேர்த்தார் என்னும் கேள்வியும் கூடவே எழ வேண்டும்.

ஒன்று செய்தால் நன்று. வடமொழி இலக்கணத்தையும் தமிழ் வாழ்வையும் வகைபிரித்துக் கற்றுணர்ந்த, தமிழ்ப் பார்வையுள்ள தொல்காப்பியப் புலமையாளர் ஒருவர் 'தொல்காப்பியம் காட்டும் ஐந்திரத்தின் அழகுகளும் அத்துமீறல்களும்” என்றொரு ஆய்வை மேற்கொள்ளலாம். ஐந்திரம் கிடைக்காவிட்டால் என்ன? பாணினி அதிலிருந்து பெரிதாக வேறுபட்டிருக்கமாட்டான். ஏனெனில், தமிழர்களின் நாகரிகப் பற்றாக்குறையை ஈடுகட்ட தொல்காப்பியர் பிறந்தது போல் வடமொழிக்கு வாய்ப்பில்லை. காரணம், அதுதான் கனவுகளையும் கற்பிதங்களையும் தவிர எதார்த்தத்தை எப்போதும் பேசியதில்லையே. மக்களும் மொழியும் ஒன்றுக்குள் ஒன்றாய் வாழும் போதுதான் எதார்த்தம் பற்றிய பேச்செழும். புனிதப்படுத்தப்பட்டு பெட்டிக்குள் வைத்துப் பூட்டப்பட்ட மொழிக்கு மனவுணர்வே ஒரு கனவுதானல்லவா. புனைவுகளை மாற்றிமாற்றி எழுதத் தேவையில்லை. வேண்டுமானால் புதுப்புனைவுகளை அவர்கள் பெருக்கிக்கொள்ளலாம்.

அண்மையில் 'வாழும் கவிஞர்கள்” பற்றிய ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத் தொடர் சொற்பொழிவில் எனது 'கவிதை மலர்கள்” தொகுப்பைப் பற்றி வியந்து பேசி நெகிழ்ந்து பாராட்டிய பேராசிரியர் மறைமலை அவர்கள் தமது தந்தையார் பேராசிரியர் சி. இலக்குவனார் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தொல்காப்பியப் பிரதியொன்றை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார். ''நான் இதை ஏற்கனவே படித்திருக்கிறேன்,” என்று சொல்லி வாங்கிக்கொண்டேன். உண்மையில் அந்த நூலினை இலக்குவனாரின் வாழ்நாள் சாதனையாகக் கொள்ளலாம். அது வெறும் தொல்காப்பிய மொழிபெயர்ப்பு மட்டுமல்ல. அரிதின் முயன்று கண்டடைந்த நுட்பங்கள் நிறைந்த ஆய்வுத்திரட்டையும் உள்ளடக்கிய நூல்.

தொல்காப்பியத்தை அவர் நுணுகி நுணுகிக் கற்றறிந்தவர் என்பதை நூலை மேலோட்டமாகப் புரட்டும்போதே புரிந்துகொள்ளலாம். நீண்ட காலம் அவர் தொல்காப்பியத்தை மாணவர்களுக்குப் பயிற்றுவித்திருப்பார் என்பதை பிசிறில்லாத அவரது ஒருகோட்டுத் தன்மையிலான மொழி யாடல் மூலமும் உறுதி செய்யலாம். ஆயினும் அவர் தொல்காப்பியரை இவ்வளவு தீவிரமாக நேசித்திருக்க வேண்டாமோ என்று தோன்றுகிறது. விழிகளில் படரும் வியன்நீர்ப்படலம் ஆய்வாளனின் சுழன்று துருவும் பார்வையை மட்டுப்படுத்திவிடுகிறது. அறிவியல் பார்வை அந்த மட்டுப் படுத்தப்பட்ட எல்லையைத் தாண்ட முயலும்போது அரசியல்சார் பார்வையாகத் தன்னை அணி செய்துகொள்கிறது.

அவருடன் நான் பெரிதும் உடன்படுவது ஒரு குறுக்கு வெட்டுப் பார்வையில் முரண்படுவதன் மூலமாகத்தான் என்று படுகிறது. அவருடைய ஆய்வுகள் பல புள்ளிகளில் எனக்குப் புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சியமைகூட இந்த என் முரண்படும் உடன்பாட்டுக்குக் காரணமாயிருந்திருக்கும். இலக்குவனார் தொல்காப்பியரைப் பார்ப்பனத் தாக்கங்களுக்கு அப்பாற்பட்டவராகக் கட்டமைக்கிறார். அவை சார்ந்த குற்றங் குறைகளுக்காட்படாத செழுந்தமிழ்ச் சிற்பத் திரட்சியாக அவரை அண்ணாந்து பார்க்கிறார். இலக்குவனாரின் அகன்றறியாத் தமிழ்ப் பற்றுக்கு இதை ஓர் அரிய உரைகல்லாகக் கொள்வதே பொருத்தம். அன்றைய திராவிட அரசியற் புலமையாளர்களுக்கு இலக்குவனாரின் ஆக்கம் எத்தனை பெரிய கிளர்ச்சியை அளித்தது என்பதற்கு நூலுக்கு அண்ணாதுரை எழுதிய அணிந்துரையின் முதல் வாக்கியமே சான்று: “Stupendous is the word that arises spontaneously as one goes through this work an achievement worthy of the erudite scholar, Dr.Ilakkuvanar”

நாம் இந்த அரசியல் எழுச்சியுரைகளுக்கப்பால் சென்று சில அடிப்படைகளை ஆய்வோம். பார்ப்பார், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நாற்பால் வேற்றுமையை அசல் தமிழ்ப் பகுப்புமுறையாக அடித்துச் சொல்லும் புலமைக் குழுவைச் சேர்ந்தவர்தாம் இலக்குவனார் அவர்கள். அதைத் தாண்டியும் இரண்டு மேல் எல்லைகளைத் தொட்டுப் பேசுகிறார். அதில் ஒன்று, தொல்காப்பியம் பார்ப்பன அம்சங்களுக்கு முற்றும் முகங் கொடுக்காதது, அப்பாற்பட்டது என்பது. மற்றொன்று, 'அந்தணர், பார்ப்பார், உயர்ந்தோர், மேலோர்” போன்ற ஏதொரு சொல்லும் ஆரியப் பார்ப்பனரைக் குறிப்பதாகாது என்பது. மீள் எல்லையைத் தாண்டிவிட்ட மேல் எல்லைகள் இவை. ''மாமூது பார்ப்பான் மறைவழி காட்ட...” என்பது சிலப்பதிகார வரி. பார்ப்பனர் வாழுமிடம் 'பார்ப்பனர் சேரி” என்னும் சுட்டலும் உண்டு. இவற்றில் ஆரியப் பார்ப்பனர்களே சுட்டப்படுகின்றனர். இது தொல்காப்பியர் காலத்துக்குப் பின் வந்த சுட்டல்கள் என்று சொல்லிவிடக்கூடும். எனில், இலக்குவனார் கூற்றை நாம் ஏற்றுக்கொண்டே அப்போது நிலவி வந்த எதார்த்தத்தையும் சற்று நிதானமாகப் பரிசீலிப்போம்.

தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர்களும் பறையர்களும் ஏதோ ஒரு விதத்தில் காலங்காலமாக இணைத்துப் பேசப்பட்டு வந்துள்ளனர். பார்ப்பனர்களை மேல் எல்லையாகவும் பறையர்களைக் கீழ் எல்லையாகவும் வரையறை செய்து கட்டமைப்புச் செய்யப்பட்ட காலத்திலிருந்து இந்தப் பேச்சு கைகூடி வந்திருக்கலாம். இதில் தோற்றப்படும் காலத்திலிருந்தே தங்களை மேலானவர்களாக அடையாளப்படுத்திக்கொள்வதை வாழ்வியல் கோட்பாடாகக் கொண்டவர்கள் பார்ப்பனர்கள். வடமொழியில் 'பிராமணன்” என்பது (இந்தப் பெயரே பிரஹ்மன் என்பதன் தமிழ் வடிவமைதிதான்.) படைப்புக் கடவுளாகப் புனையப்பட்ட பிரம்மனின் அம்சமாக மீள்புனைவு செய்யப்பட்ட பெயர்தான். தமிழில் அப்படி அழைப்பதை அல்லது குறிப்பதைத் தொல்காப்பியமே ஊக்குவிக்கவில்லை. ஆகவே, அதனை ஈடுசெய்யும் முகமாகத் தமிழில் 'உயர்வான”, "மேன்மையான” என்னும் பொருளில் வரும் எல்லாப் பண்புப் பெயர் களையும் தங்களைக் குறிப்பதற்கெனவே அவர்கள் உரிமைப்படுத்திக் கொள்கிறார்கள்.

அடுத்த கட்டமாகத் தங்களைக் குறித்தே அப்பெயர்கள் படைக்கப்பட்டன என்று காப்புரிமையும் பெற்று விடுகிறார்கள். 'ஐயர்” என்றால் மூத்தோர், மதிப்புக்குரியோர் என்று பொருள். நல்ல தமிழ்ச் சொல். அதைத் தங்கள் சாதிப் பெயராகவே மாற்றிக்கொண்டு விட்டார்கள். (ஐயர்களுக்கு இளைத்தவர்களா நாங்கள் என்று அதனினும் தூக்கலான பெயர்த்தோற்றம் கொண்டவர்கள்தாம் ஐயங்கார்கள்.) கிறித்தவப் பாதிரிமார்கள் 'ஐயர்” என்று அழைக்கப்பட்டதும் பார்ப்பனர் களுக்கு இணையாகச் சிறப்பிக்கப்படுவதற்கான இந்தப் பொருளில்தான். இந்துமதத்தில் வேதங்களும் ஆகமங்களும் ஒன்றல்ல. கிறித்தவத்தில் அவை வேறல்ல என்பதாகத் தங்கள் விவிலியத்தை 'வேதாகமம்” என்று மொழிபெயர்த்துக்கொண்டார்கள். சில கிறுக்குப் பாதிரிகள், சமஸ்கிருதம், சந்தனம், கட்டுக்குடுமி, பூணூலோடு பார்ப்பன வேடமிட்டே கிறித்தவம் பரப்ப முயன்றதும் உண்டு. இந்தியாவில் ஏதொன்றும் பார்ப்பனத் தாக்கத்தைப் புறந்தள்ளி நிலைத்துவிட முடியாது என்னும் புரிதலின் வெளிப்பாடு இது.

பார்ப்பனர்களின் மேல்நிலையாக்க முயற்சி இத்தோடு முற்றுப்பெற்று விடவில்லை. அதற்கு இன்னொரு பரிமாணமும் இருந்தது. தொழில் முறையில் யாருக்குப் பங்காளிகளானார்களோ அவர்களை மீண்டெழ முடியாமல் கீழ்மைப்படுத்தும் முயற்சியாகவும் அது ஆழப்பட்டது. பார்ப்பார் என்பது தமிழர்கள் அவர்களுக்கிட்ட பெயர். பார்ப்பனச் சேரி என்பது அவர்கள் சேர்ந்து வாழுமிடம். இது போலவே பறையர்கள் சேர்ந்து வாழும் இடம் பறைச்சேரியாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழ் இலக்கியத்தில் பல சேரிகள் குறிக்கப்பட்டிருந்தாலும் இவ்விரு சேரிகளுமே ஒத்திசைவாகச் சிறப்புக் கவனத்தைப் பெற்றவை. ஏனெனில் பார்ப்பனர்கள் முதன்முதலில் பறையர்களின் சடங்கு முறைப்பணிகளைப் பகிர்ந்து கொண்டதன் மூலமாகத்தான் தமிழ் வாழ்வின் ஓர் அங்கமாக மாறுகின்றனர். தொழில் முறையில் இவ்வாறாகத்தான் "பார்ப்பானுக்கு மூத்த பறையன்” என்ற சொல்வழக்கு தோன்றும்படியாக இருவரும் பங்காளிச் சாதிகளாகின்றனர். தங்களை ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்களாக உயர்த்திக் காட்டிக்கொள்வதையே வாழ்தலின் ஒற்றை வேலைத் திட்டமாகக் கொண்ட பார்ப்பனர்கள் இந்த நிகர்நிலையை ஏற்பார்களா? வெகு நுட்பமாக இந்தச் சிக்கலிலிருந்து தங்களை மீட்டேற்றிக் கொள்கின்றனர்.

மனிதன் சடங்குகளால் தன்னை அலங்கரித்துக் கொள்கிறவன்; உயிரும் உடலும் சேர்ந்த கூட்டுப்பொருள். அவனது மரணத்தில் அவை இரண்டும் ஒன்றையொன்று பிரிகின்றன. இதில் உயிரை (சொர்க்கத்தில்) அடக்கம் செய்யும் பணியைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டு, உடலை (மண்ணில்) அடக்கம் செய்யும் பணியைப் பறையர்களுக்குத் தள்ளிவிட்டார்கள். அடுத்த கட்டமாக, பிணத்தை அடக்கம் செய்யும் பணியை இழி தொழிலாக்கி அதைச் செய்யும் பறையர்களை இழிந்தவர்களாகக் கட்டம் கட்டும் சமூகக் கருத்தியல்வாதிகளாகத் தங்களை உயர்த்திக்கொண்டனர். 'பறையன்” என்றால் துப்புரவற்ற பணியைச் செய்கிறவன் என்பதையும் கடந்து மனித குலத்திலேயே ஆகக் கீழானவன், கீழ்மையின் ஒட்டுமொத்த சின்னம் என்பதாகத் தாழ்த்திவிட்டனர். இப்படியாகப் பார்ப்பனர்கள் இரண்டு மடங்கு உயரத்தை எட்டிப் பிடித்துவிட்டனர் - ஒன்று, தாங்களே கட்டமைத்த பீடத்தில் ஏறிக்கொண்டும் மற்றொன்று தரைக்கும் கீழாகப் பாதாளம் வெட்டி அங்கே பறையர்களை இறக்கி வைத்தும்.

உண்மையில் அவர்களின் உயரத்தை அளக்கும் அடிப்படை அலகாகப் பறையர்களே இருக்கிறார்கள் என்பது தமிழினம் சார்ந்த மறுகட்டமைப்பு. அந்தக் கோபம்தானோ என்னவோ பறையர்கள் மேலேறிவருவதில் இன்னமும் மூர்க்கம் காட்டவில்லை. ஏறிவந்து இந்தப் பார்ப்பனர்களோடு சமமாக நிற்கவா என்னும் அருவருப்போ என்னவோ. இன்னமும் தொலைதூரச் சிற்றூர்களில் பறைத்தெருவில் பார்ப்பான் நுழைந்து விட்டால், தெருவை சாணி தெளித்துப் பெருக்கித் தீட்டு கழிக்கும் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பறையர்களோடு 'சேரி” என்னும் சொல்லும் சிறுமைப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்டதால் பார்ப்பனச் சேரி என்னும் வழக்கே முற்றாகக் கைவிடப்பட்டுவிட்டது. அவர்கள் தங்கள் இருப்பிடத்தை 'அக்ரஹாரம்” என்று பெயர்மாற்றம் செய்துகொண்டு விட்டனர்.(ஆயினும் சேரி என்னும் அந்தப் பொருள் மிகுந்த தமிழ்ச்சொல் அவ்வளவு எளிதாகப் பிற துறைகளில் புறக்கணிக்கப்படவில்லை என்பது ஆறுதலான அம்சம்.)

தமிழ் மண்ணில் பெருங்கோயில் வழிபாடு தோன்றியபோது கோயிலைச் சுற்றியும் அருகிலேயும் இந்த அக்ரஹாரங்கள் இடம் பெயர்ந்தன. பறைச்சேரியோ ஊரின் (பெரும்பாலும்) தென் கிழக்குத் திசையில் ஊன்றப்பட்டுவிட்டது. தமிழ் நாட்டில் தெற்குத் திசையும் கிழக்குத் திசையும் தாழ்நிலப் பகுதிகள். தென்கிழக்குத் திசை தாழ்மைகளின் சங்கமம். சாதிக் குடியமர்த்தலில் நிலவும் இத்தகைய நுட்பங்கள் நினைக்க நினைக்க மலைப்பையும் அருவருப்பையும் தரக்கூடியவை.

நாம் ஒன்றை நேர்மையாகப் பதிவு செய்ய வேண்டும். அன்றைய சமகாலத் தேவையை நிறைவு செய்துகொள்ளும் பொருட்டு தமிழும் சமஸ்கிருதமும் நீரும் நீரும் கலந்தாற்போல் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக்கொண்டன. சமகாலத் தேவை என்பது மிகுதியும் பார்ப்பன மேலாதிக்கத்தின் விரிவாக்கம்தான். அதன் ஒரு கூறாகவே பார்ப்பனர்கள் தங்களைச் சுட்டுவனவாக அந்தணர், மறையோர், மேலோர், நூலோர், உயர்ந்தோர் போலும் பெயர்களையெல்லாம் (ஆன்றோர், சான்றோர், அறிவர், அறவோர் என்னும் பெயர்கள் தவிர்க்கப்பட்டதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்) தங்களுடையதாக்கிக்கொண்டுவிட்டதற்கு சங்கப் பனுவல்களே சாட்சியங்களாகின்றன. தொல்காப்பியம் அவற்றுக்கெல்லாம் முற்பட்ட நூலா என்பது தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டிய கேள்வி. மேலும் தொல்காப்பியரின் ஐந்திர அறிவு பாயிரத்திலேயே சிறப்பிக்கப் பட்டது எதற்காக என்பதும் விளக்கப்பட வேண்டும்.

பார்ப்பனப் பகுப்புமுறை பிறப்பை அடிப்படையாகக் கொண்டது, தமிழ்ப் பகுப்புமுறையோ தொழிலை அடிப்படையாகக் கொண்டது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்தத் தொழில் முறைப் பகுப்பினூடாகவே மேற்பிறப்பு ஷ் கீழ்ப்பிறப்பு, உயர்ந்தகுடி ஷ் தாழ்ந்தகுடி, மேல்குலம் ஷ் இழிகுலம், மேற்பால் ஷ் கீழ்ப்பால் போன்ற தமிழ்ச் சமூக ஏற்றத்தாழ்வுகளையெல்லாம் நிர்ணயித்தது தொழிலா, பண்பா, பிறப்பா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றினூடாக பார்ப்பனப் பகுப்பும் தமிழ்ப் பகுப்பும் ஒன்றையொன்று நிறைவுசெய்து கொண்டனவா, அல்லது ஒன்றையொன்று மொழிபெயர்த்துக் கொண்டனவா என்பதையும் நாம் அறுதியிட வேண்டும். தமிழில் 'அறம், பொருள், இன்பம்” என்றால் வடமொழியில் 'வீடு” என்னும் நான்காவது கூறு கூடியிருக்கிறது. தொல்காப்பியம் மொழியை 'எழுத்து, சொல், பொருள்” என்று வகைப்படுத்தினால், தொல்காப்பியத்தைத் தொடர்ந்துவந்த அடுத்தகட்டத் தமிழ் இலக்கணவாதிகள் 'அணி” என்னும் கூறை வடமொழியின் ஆதரவோடே செழிக்க வைத்துள்ளனர். இவை போன்ற பலவும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்வதாகவே ஊடாடியுள்ளன. இதில் வடமொழிக்கு எந்த இழப்பும் இல்லை.

காரணம், அது எதனையும் தன்னுடையதாக்கிக்கொண்டு தன் ஆளுமையை மேல் கையாகவே நிறுவிக்கொள்கிறது. குறைந்தபட்சம் பிற மொழிச் சொற்களை எவ்விதம் ஏற்பது என்பதற்கு இலக்கண வரம்புகூட வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் தமிழ் அப்படியல்ல. அது இழந்தது தன் எளிமையை, அறிவுக்கும் உழைப்புக்கும் உள்ள சமநிலையை, கடவுளையும் மதத்தையும் குறுக்கீடுகளாக்கிக் கொள்ளாத சமூக மனவெளியை, நிகழ் பற்றிய அரிதான தன்னாளுமையை. தொல்காப்பியம் இந்த இழப்புகளை பின் தேதியிட்டு நிறைவு செய்துகொள்வதற்கான அதிகாரபூர்வமான ஒப்பாவணம். இதை ஒப்புக்கொள்ளாமை என்பது ஒருவகையில் பின்னால் சேர்ந்த சமூக அழுக்குகளை வலுத்த கைகள் தங்கள் சுயமைதுனத்துக்காகத் தக்க வைத்துக்கொள்ளும் சறுக்கல்களாகவே நிலைபெற்றுப் போகும்.

இலக்குவனார் தம் நிலைப்பாட்டை உறுதிசெய்யும் ஆய்வுத் தீர்வாகத் தொல்காப்பியத்தில் விரவிக் கிடக்கும் பார்ப்பனத் தாக்கங்களையும் நலன்களையும் அப்பட்டமாக எதிரொலிக்கும் 40 பாடல்களை இடைச்செருகல் என்று கட்டம் கட்டுகிறார். உண்மையில் அவை இடைச் செருகல்களாய் இருக்க முற்றும் தகுதியுள்ள பாடல்கள். அவற்றை நீக்கிவிட்டுப் படித்தால் மனத்துக்கு இதமாயிருப்பதென்னவோ உண்மை. ஆனால் முழுமையாகத் தொல்காப்பியரை மீட்டெடுத்துவிட முடியும் என்று தோன்றவில்லை. மேலும் சில முட்கூறுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றைத் தம் விளக்கத்தால் சரிசெய்து கொள்கிறார். அவர் கட்டம் கட்டும் பாடல்கள் இடைச்செருகல் என்பதற்கான காரணங்களையும் சொல்கிறார். ஓரிடத்தில் தொல்காப்பியர் மரங்கள், விலங்குகள் பற்றிய வழக்குச் சொற்களைக் கூறிக்கொண்டு வரும்போது குறுக்கே 'சாதிகள், தொழில்கள்” பற்றிப் பேசும் 15 பாடல்கள் வருகின்றன. அவற்றைப் பேசுவது தொல்காப்பியரின் நோக்கமெனில் 'புறத்திணையியலில்” வைத்துப் பேசியிருக்கலாமே என்கிறார். நியாயமான கேள்வி. இதுபோலும் கேள்வியில்லாமல் அவர் ஏதொன்றையும் நிர்ணயம் செய்யவில்லை என்பது முக்கியம்.

ஓரிடத்தில் வணிகரை 'வைசியர்” என்று வடமொழிப் பகுப்புப் பெயரால் குறிப்பிடும் பாடல் ஒன்று வருகிறது. ('வைசியன் பெறுமே வாணிக வாழ்க்கை” - பொருள் - மரபியல்.) தமிழில் வணிகம் - வாணிகம் - வாணிபம் - வாணியம் என்றும், அதைச் செய்பவர்கள் வாணியச் செட்டியார் - வைசியக் குலம் என்றும் வெகு இயல்பாகத் திரிந்து கொள்வதையும் நாம் பார்க்கிறோம். பார்ப்பன மேலாதிக்கம் என்னும் அம்சம் குறுக்கிடாவிட்டால் இவ்வகையான மொழிகளின் நெகிழ்வும் நீட்சியும் மகிழ்ச்சிதரக்கூடிய அம்சமாகவே இருந்திருக்கும். தொல்காப்பியம் வேளாளனைச் 'சூத்திரன்” என்று அழைக்காவிட்டாலும் 'இழிந்தோர்” என சூத்திரப்பதத்தின் பொருளில் சுட்டுகிறது. இதனை இடைச்செருகல் என்று நீக்கிவிட்டால் மேலும் சில இடங்களில் வரும் 'இழிந்தோர்”, 'கீழோர்” என்னும் பதங்கள் நாற்பால் பகுப்பில் கடைசி வகையினரைச் சுட்டாமல் வேறு யாரைச் சுட்டுவதாக நிலைப்படுத்துவது என்னும் கேள்வி எழுகிறது.

''பள்ளு பறை பதினெட்டு சாதிகள்...” என்று தமிழில் சாதித் தொகுப்பைக் குறிக்கும் சொல்வழக்கு ஒன்று உண்டு. தாழ்த்தப்பட்ட சாதிகள் வலுவாக அடையாளப்பட்ட பத்து- பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு தோன்றிய தொழில்முறை வழக்காகக்கூட இருக்கலாம். இச்சாதிகள் அனைத்தும் தாழ்த்தப்பட்டவர்களைக் குறிப்பன அல்ல. மாறாக, சமூகத்துக்கு இன்றியமையாத பதினெட்டுத் தொழில்களைச் செய்வோரின் பெயர்ப் பட்டியல். சமூக வாழ்க்கை தோன்றிய காலத்திலிருந்து, அல்லது நாகரிகம் பெற்ற காலத்திலிருந்து தொழிற்படுபவர்கள் இந்தப் பெருந்திரள் மக்கள். இவர்கள் - ஏன் நாற்பால் பகுப்பில் இடம் பெறவில்லை? இடம் பெறவில்லை எனில் அந்தப் பகுப்புமுறை எதார்த்தத்தைப் பிரதிபலிக்காத வெறும் அதிகாரத் தேவைக்கான கருத்தியல் பகுப்புதானே? சமஸ்கிருதப் பகுப்பும் இதே அளவுகோலையே பின்பற்றுகிறது. மாறாக, எதார்த்தத்துக்கு நெருக்கமான பௌத்தப் பகுப்புமுறைப் பெயர்கள் அரசர், பார்ப்பார், ககபதிகள் என்பதாகின்றன.

மேலும் பார்ப்பனப் பிரிவுகளான வர்ணம், சாதிக்கு மாறாக சாதி, குலம், கம்மா, சிப்பா என்னும் பிரிவுகளின்கீழ் உயர்ந்தவை, தாழ்ந்தவை எனப் பகுக்கப்படுகின்றன. தொல்காப்பியர் 'சாதி” என்னும் சொல்லை இருமுறை பயன்படுத்துகிறார். (1. ''நீர் வாழ் சாதியுள் அறுபிறப்புரிய,” 2. ''நீர் வாழ் சாதியுள் நந்தும் நாகே” - பொருள், மரபியல்.) இவ்விரு இடங்களிலும் பார்ப்பனப் பகுப்பில் உள்ள சாதியின் பொருளில் அல்லாது, பாலி மொழிக்குரிய 'கூட்டம், அணி” என்னும் பொருளிலேயே பயன்படுத்துகிறார். இவற்றை தொல்காப்பியர் அறியாமல் செய்யவில்லை. பௌத்தப் பகுப்பில் பார்ப்பார் முதன்மை பெறவில்லை என்பது முக்கியம். பார்ப்பனர்களும் பார்ப்பன அரசியலும் மலிந்து கிடந்த நிலத்தில் இந்தப் பகுப்பு. ஆனால் தமிழில் 'பார்ப்பார்” என்பதற்கு 'மேற்பார்வையிடுகிறவர்கள்”, 'கண்காணிக்கிறவர்கள்”, 'அறிவுப் பரம்பரையினர்” எனத் தமிழர்களாக்கிப் பொருள் கொண்டாலும் அதிகாரப் படிநிலையில் அரசர்களைவிட மேலானவர்களா அவர்கள்? எப்படி அவர்கள் முதல் இடத்தைப் பிடித்துக்கொண்டார்கள்?

ஒரு தொல்காப்பியப் பாடல் ''அந்தணாளர்க்கு அரசுவரைவின்றே” (பொருள், மரபியல்) என்று சொல்கிறது. அதாவது "அந்தணர்கள் அரசராவது விலக்கப்படவில்லை” என்பது பொருள். உண்மையிலேயே மிகுந்த மனச்சோர்வைக் கொடுக்கும் வரி. முனைவர் ச.வே. சுப்பிரமணியன் அவர்களது உரையுடன் தொகுத்து மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்ட ''தொல்காப்பியம் தெளிவுரை” என்னும் நூலில் இந்த வரிக்கு ''அந்தணர் அரசராக முடியாது” என்று பொருள் தரப்பட்டிருக்கிறது. பாடலில் "அந்தணாளர்” என்பது 'அந்தணர்” என்று பிழைபட அச்சிடப்பட்டதோடு, பொருள் விளக்கமும் தவறாகத் தரப்பட்டுள்ளது என்றாலும், அது அப்படித்தான் இருந்திருக்கவேண்டும் அல்லது தொல்காப்பியர் அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இது ஒன்றும் நமது ஆசையல்ல; மாறாக, மெய்மையின் எதிரொலிப்பு. அரச பதவியானது வழிவழியாக வரும் வாரிசுரிமைப் பதவி.

நமக்குத் தெரிந்த 2000 ஆண்டுகால வரலாற்றில் எந்த அந்தணனும் அது வடமொழிப் பொருளிலாயினும் தமிழ்ப் பொருளிலாயினும் தமிழ்நாட்டை ஆண்டதில்லை. அதாவது இறந்த காலத்தில் தமிழர்கள் பார்ப்பனரை மேன்மக்களாக ஏற்றுக்கொண்டாலும் அவர்களை ஆள அனுமதித்ததில்லை. 20ஆம் நூற்றாண்டில் முதல் அமைச்சர்களாக மாநில ஆட்சியை வழிநடத்திய ராஜாஜி, ஜெயலலிதா என்னும் பார்ப்பனர்கள்கூட முதலமைச்சர்கள்தாமே தவிர அரசர்கள் அல்லர். 'என்ப”, "என்மனார்”, "என்மனார் புலவர்” என்று 287 முறை (இதை எண்ணிச் சொல்லியுள்ளவர் இலக்குவனாரே) சொல்லித் தனக்கு முற்பட்டவர்களின் கருத்தைப் பதிவு செய்யும் தொல்காப்பியர் இந்தப் பாடல் வரியை என்ன ஆதாரம் கொண்டு பதிவு செய்திருக்க முடியும்? எனவே, இது போன்ற பாடல்கள் இடைச்செருகலாயிருப்பதே பொருத்தம்.

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை தொல்காப்பியத்தில் 78 வட சொற்கள் 94 முறை பயன்பட்டுள்ளன என்று பட்டியலிடுகிறார். அந்தப் பட்டியலை அப்படியே வெளியிட்டு இலக்குவனார் ஆய்கிறார். கால்டுவெல் வழிகாட்டலையும் பயன்படுத்தியதாகச் சொல்லித் தன் தீர்ப்பை வழங்குகிறார். அதாவது, ஒன்றிரண்டு ஐயத்திற்கிடமான சொற்களைத் தவிர அனைத்தும் தமிழ்ச் சொற்களே என்பது அவரது தீர்ப்பு. இதை வாசக நண்பர்கள் ஒன்றும் குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் தீவிரத் தமிழ்ப் பற்றாளர் எனில் இலக்குவனாரை அப்படியே வழிமொழிவீர்கள். எதார்த்தத் தமிழர் என்றால் பல வடசொற்கள் இருக்க வாய்ப்பிருக்கலாம் என்பீர்கள். அல்லாமல், நீங்கள் தீவிர இந்து ஒருமைப்பாட்டாளராய் இருப்பின், இன்னும் சில நூறு வடசொற்களேனும் தேறும்; வையாபுரிப்பிள்ளை 'பார்ப்பான் தமிழன் இல்லை” என்று நம்புகிற அழுக்கு வெள்ளாளன் என்பதால் அச்சொற்களை முழுமையாகப் பட்டியலிடாமல் கொஞ்சமாகக் காட்டி நழுவிவிட்டார் என்று சொல்வீர்கள். தமிழ்-சமஸ்கிருதக் கூட்டில் எல்லாருக்கும் பொருத்தமான உண்மைகள் பெரும்பாலும் அபூர்வமாகத்தான் காணக் கிடைக்கும்.

மற்றோரிடத்தில் 'சூத்திரம்” 'உத்தி” என்னும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டு, இவை தொல்காப்பியர் காலத்துக்குப் பொருத்தமற்றவை என்று அப்பாடல்களை விலக்குகிறார். இதன் மூலம் அவரது உள்ளக்கிடக்கை ஒருவாறு விளங்குகிறது. இடைச்செருகலை அடையாளம் காண ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் இருப்பினும் இலக்குவனாருக்கு அடிப்படைக் காரணமாகத் தொல்காப்பியரின் காலத்தை கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டு செல்வதாகவே அமைகிறது. இடைச்செருகல்களை மூலப்பிரதியின் அங்கமாக ஏற்றுக் கொள்வதெனில் அவரது காலம் கி.பி. 5ஆம் நூற்றாண்டு என முடிவு செய்ய வேண்டி வரும்.

வையாபுரிப் பிள்ளை தொல்காப்பியத்தின் காலத்தை கி.பி.5ஆம் நூற்றாண்டு என நிர்ணயிக்கிறார். சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களின் காலத்தையும் அவ்வாறே பின் நகர்த்துகிறார். ஆனால் சங்க இலக்கியங்கள் பற்றிய காலக்கணக்கில் அவருக்குப் பெரிதாகத் தர்க்கமுரண்கள் எழவில்லை என்பதைப் பலரும் கவனம் கொள்வதில்லை. அதனால் கால ஆராய்ச்சியில் அவர் ஏறக்குறைய தீவிரத் தமிழினப் பகைவராகவே இன்றுவரை புறக்கணிக்கப்படுகிறார் என்பது தமிழுக்குக் கிடைத்த வரமா, சாபமா என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில், ஒரு நூற்றைம்பது ஆண்டுகாலக் காஞ்சி சங்கர மடத்தை 2500 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகவும், 8ஆம் நூற்றாண்டில் பிறந்த ஆதிசங்கரனை 25 நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த, அதாவது புத்தனுக்கு முன் பிறந்தவ னாகவும் பழமை ஏற்றி, காலஞ்சென்ற சந்திரசேகரேந்திர சரஸ்வதி உலகளாவிய தன் பக்தர்களைக்கொண்டு நம்ப வைத்ததொன்றும் அர்த்த மற்றதல்ல என்பதாகத்தான் தமிழ்ப் பற்றாளர்கள் அவரை முன்னுதாரண மாகப் பின்பற்றுகிறார்கள் என்று படுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்களில் இடைச்செருகல்களையும் அத்துமீறிய உரைவிளக்கங்களையும் புகுத்தி, அவற்றுக்குப் பிற்காலத் தமிழினத்தையே சாட்சியமாக்கிய பரம்பரையைச் சேர்ந்தவர் அவர். சொன்னால் செல்லுபடியாகும். ஆனால் அடிமைத் தமிழ்ச் சமூகமும் அந்த ஏணி வழியாகவே மேலேற எத்தனிக்கிறது. இலக்குவனாரின் நூலுக்கு அணிந்துரை வழங்கிய கருமுத்து தியாகராஜன் அவர்கள், "சட்டப் பட்டதாரியான பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் கால ஆராய்ச்சியை மறுப்பதற்கு இலக்குவனார் இத்தனை சிரமம் எடுத்துக்கொண்டிருக்க வேண்டாம். ஒதுக்கித் தள்ளிவிட்டுப் போயிருக்கலாம். அதற்குள்ள தகுதி அவ்வளவுதான்” என்கிறார். உலகின் நக்கீர விஞ்ஞானிகள் சிலரைத் தவிர மற்ற அத்தனை கோடி மக்கள் திரளும் சேர்ந்து "உலகம் தட்டையானதே” என்று சொல்லியும் நம்பியுமே அப்படி ஆக்கிவிட முடிந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!

வையாபுரிப் பிள்ளை, தெ.பொ.மீ. போன்றவர்கள் கால ஆய்வில் தவறே செய்யாத அறிவியல் மேதாவிகள் என்பதல்ல உண்மை. பிறவியிலேயே அவர்களுக்குத் தமிழ் பற்றிய சில சுயாபிமானமற்ற தடித்தனங்கள் கூட வாய்த்திருக்கலாம். ஆயினும் காது கொடுத்துக் கேட்கவே அவர்கள் தகுதியற்றவர்கள் என்று ஒட்டுமொத்தமாகப் புறக்கணிப்ப தெனில் எம்மவர்களது அறியாமையின் சிம்மாசனம் எத்தனை வைரம் பாய்ந்ததாகவும் வன்மம் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும்! முதல்முறையாகத் தான் திரட்டிய தகவல்களைக் கொண்டு கால்டுவெல்லும் இப்படித்தான் கால நிர்ணயம் செய்தார். திருக்குறளைப் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நூல் என்று வரையறுத்தாலும் அதுபோன்றதொரு நூலை ஈன்றெடுப்பதற்கு இந்தத் தமிழ்மொழி எத்துணை தொன்மையும் செழுமையும் மிக்க வரலாற்றைக் கொண்டிருக்க வேண்டும் என்று பூரிக்கிறாரே, அந்தப் பூரிப்புதான் அவருக்கான அறிவியல் நேர்மை. ஆனால் அவரை முறைப்படி எதிர்கொள்வதை விடுத்து இந்தத் தமிழ் மேனாமினுக்கிகள்தாம் இருட்டடிப்புச் செய்தவர்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டால் பூலோகம் அதற்கு மாத்திரமே இருட்டாயிருக்கும் என்பதை அறியாத மேதாவிகள் அவர்கள்.

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல் என்னும் முறையில், நமக்குக் கிடைத்த நூல்களிலெல்லாம் அதுவே மூத்ததாகவும் முதன்மை யானதாகவும் இருக்க வேண்டுமென்று இயல்பு மீறிய ஆசையால் முன்முடிவு செய்து கொண்டது எதற்காக? நமக்குக் கிடைத்துள்ள சங்ககாலம் தழுவிய பாடல்களின் அதிக பட்சத் தொன்மை என்பது ஒரு மூவாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டதாய் இருக்கக் கூடும். தொகை நூல்களின் பாடல்கள் ஒன்றுக்கொன்று மிக நீண்ட இடைவெளியிலானவை என்பதை அவை முன்வைக்கும் வாழ்வியல் பதிவுகளைக்கொண்டே உய்த்தறியக்கூடும். அப்பாடல்களில் கடவுள் பற்றியோ மதம் பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை. மனித வாழ்வின் அச்சாணி கடவுள்நம்பிக்கை என்பதாக ஒரு பாடலும் நமக்கு வலியுறுத்தவில்லை.

மரஞ்செடிகொடிகளைத் தங்கள் உடன் பிறப்புகளாகவும், மக்களைக் காக்கும் பணியில் மரணமுற்றவர்களை நடுகல்களாகவும் பெருமைப்படுத்திய வாழ்வு அது. கடவுள்பற்றிப் பேசாமை அல்லது மறுதலித்தமைதான் தமிழ்வாழ்வில் ஜைன, பௌத்த மதங்கள் உடன்இருப்பாய்ப் பொருந்திப் பரவத் தன்னெழுச்சியான காரணங்களாய் இருந்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட நிலையில் அடிமேல் அடி அடித்தாற்போன்ற நெடுங்காலப் பார்ப்பனத் தாக்கமும் அவைதிக மதங்களுக்கு மறுப்பான, நிரூபணங்களற்ற விஷயங்களைத் தகவமைத்துக் கொள்ளப் போதுமான மனப்படிமானமும் கூடிவந்த ஒரு காலகட்டத்தில் தான் இறைக் கருத்தியலும் அதுபற்றிய உணர்வும் எழுந்திருக்கும்.

தொல்காப்பியம் அப்படியொரு கால கட்டத்தை முன்வைக்கும் நூல். அகத்திணையியலில் முதற்பொருளுக்கப்பால் கருப்பொருள் கூறவந்த தொல்காப்பியர், “தெய்வம், உணாவே, மா, மரம் புள், பறை,...” என்று தெய்வத்தை முதல் இடத்தில் வைக்கிறார். இதனை இலக்குவனார் அவர்கள் மிகவும் சிலாகித்து "உணவைக்கூடத் தவிர்த்துவிடலாம். ஆனால், இறையுணர்வைத் தவிர்க்கவே முடியாது என்பதால் அதைத் தொல்காப்பியர் முதன்மைப்படுத்தினார்” என்று அழுத்தம் தருகிறார். நமக்கென்ன தோன்றுகிறதெனில், "என்மனார் புலவர்” என்று புலவர்கள் இதுவரை என்ன சொன்னார்கள் என்பதை மட்டும் தொல்காப்பியர் தொகுக்கவில்லை; இனி என்ன சொல்ல வேண்டும் என்பதையும் சேர்த்தே தொகுத்தார் என்பதுதான் பொருத்தம்.

தெய்வம் என்பது தூய தமிழ்ச் சொல்தான் என்பது இலக்குவனாரின் பொருள்கோள் ஆய்வு. ஆனால், தெய்வம் என்றால் பாரசீக மொழியில் "திருடர்கள், முரடர்கள்” என்று பொருள். அது வேறொன்றுமில்லை. ஒருகாலத்தில் தங்கள் விளைபொருள்களைத் திருடித் தின்றவர்களும் பின்னர் கீழ்த்திசை நோக்கிச் சென்றவர்களுமான ஆரியர்களுக்கு அவர்கள் வைத்த பெயர். ஆரிய மொழியில் அதே சொல்லுக்கு "தேவர்கள், மேற்கிலிருந்து- மேல்உலகிலிருந்து வந்த தங்கள் மூதாதையர்கள்” என்று பொருள். அந்தச் சொல்தான் கடவுளைக் குறிக்கும் தூய தமிழ்ச்சொல்லாக உள்வாங்கப்படுகிறது.

என்னுள் ஒரு விந்தையான உருவெளித்தோற்றம் ஒளிர்ந்தாடுகிறது: சைவம், சிவன், லிங்கம், ஐந்தெழுத்து யாவும் என் மனவெளியின் புழங்குபொருள்களாகி, நானோ தமிழன் என்னும் பிறவிப் பிணியிலிருந்து விடுபட முடியாது கிடந்துழலும் பட்சத்தில், அவை யாவும் தமிழ் எனக்கு வழங்கிய மூலமந்திரப் பொருள்களாகி விடத்தானே வேண்டும்? இந்தச் சுதந்திரம்கூட மறுக்கப்படும் எனில், மதத்தினால் எனக்கு ஆகப்போவ தென்ன? இப்பொய்மைகளை மெய்மையாக்குவதற்கான காப்புக்கடனாகத்தான் சைவ மடத் தலைமைகள் ஸ்மார்த்த பார்ப்பனத் தலைமைகளோடு வீற்றிருக்க நேரும்போது ஒரு படி தாழ்வாக அமர்வதும், குடமுழுக்கு போன்ற சமய வழக்காறுகளை நிகழ்த்தும்போது தமிழை மேடையேற்ற மறுப்பதும், ஒப்பீட்டளவில் சமஸ்கிருதத்துக்கு இரண்டாம் பட்சமாகவே தமிழைத் தழையப் பிடிப்பதும் இழிவென்னும் உணர்வில்லாத செயல்பாடுகளாகின்றன.
கால்டுவெல் சரியாகத்தான் சொன்னார்: "சமஸ்கிருதத்தை முற்றாக நீக்கிவிட்டால் தமிழ் தனித்து நிற்கும்; கூடவே செழித்தும் வளரும்” என்று. அதைப்போலவே சைவத்திலிருந்து சமஸ்கிருதத்தை முற்றாக நீக்கிவிட்டால் என்னாகும்? நான் முற்றாக மதமற்ற மனிதனாக, தொல்காப் பியத்திற்கு முற்பட்ட தமிழனாகக் கடைந்தெடுக்கப்படுவேனோ?

அது ஒருவேளை மனித நாகரிகத்தை முன்னெடுத்துச் செல்லாத ஒருவகை காட்டுமிராண்டித்தனமாகக்கூடக் கணிக்கப்படலாம். இருக்கட்டுமே? மதக் காட்டுமிராண்டித்தனத்தைவிட அந்த வகை மதமற்ற காட்டுமிராண்டித்தனத்தில் மானுட மீட்சி இருக்கும். ஆனாலும் நீறு பூசிகள் அதை ஏற்க மாட்டார்கள். நீருக்குள் நூறுவகை சுவையும் வண்ணமும் நோய்க்குத்தான் எனினும் அறிவின் மெய்யியல் நாகரிகமும் அதில்தான் எதிரலையாய்ச் சிதறி வழிகிறது.

நமக்கு இன்னும் ஒரேயொரு கேள்விதான் எஞ்சுகிறது. தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவர், அதங்கோட்டாசான் நான்மறையில் கரைகண்டவர் என்றெல்லாம் பெருமைப்பட்டுக் கொண்டார்களே; வடபுலத்து சமஸ்கிருதப் புலமையாளன் எவனாவது தன்னைத் தமிழறிந்தவன், திராவிடமொழி விற்பன்னன் என்று பெருமை பேசிக் கொண்டதுண்டா? குறைந்தபட்சம் தகவலுக்காக வேனும் பொருட்படுத்திக் கூறிக்கொண்டதுண்டா? இந்த அம்மணமான உண்மை ஒன்றே பார்ப்பானைக் கண்டதும் தன்வயமிழந்து தாசியாகிவிட்டான் தமிழன் என்று காட்டவில்லையா? (தாசி= தாய்+சி, அகமுடையானுக்கு அன்னையாயிருந்து அருள் சுரக்கிறவள்.) தாசி என்னும் சொல் தொந்தரவு தருகிறதெனில் பெண்டாட்டி என்று வைத்துக்கொள்வோம். இந்திய வைதிக சமூகத்தில் பெண்களைப் பொறுத்தவரை திருமணத்திற்குப் பிறகுதான் வாழ்க்கையே தொடங்குகிறது; வரலாறே எழுதப்படுகிறது.

ராஜீவ் காந்தி ஒருமுறை சொன்னார்: “இந்தியக் கலாச்சாரத்தையும் சம்பிரதாயங்களையும் எனக்குக் கற்றுக்கொடுப்பவர் சோனியா காந்திதான்,” என்று. பெண்டாட்டி யாயிருப்பதன் வைதிக லட்சணம் இதுதான். இதை வேறுவிதமாகச் சொன்னால் பார்ப்பன மதத்தையும் பார்ப்பன மேலாதிக்கத்தையும் பேணிப் பாதுகாக்கும் பெட்டகமாய்ச் செயல்பட்டவர்கள் தமிழகத்தின் ஆளும் பரம்பரையினர். அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பது முடியாட்சியின் சமூகத் தத்துவம். இதிலுள்ள சேவக தர்மம் என்னவெனில் பெண்ணுக்கென்று தனித்த அலகு ஒன்றும் கிடையாது. அப்படியே இருக்குமெனில் அது அகமுடையானை முன் வைத்துத்தான் வெளிப்பட வேண்டும். (இந்த விஷயத்தில் பார்ப்பனப் பெண்களும் இன்றுவரை சூத்திரச்சிகளாகத்தான் பாவிக்கப்படுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.)

பிறக்கும்போதே ஜைனனாகப் பிறந்து, அப்பர் என்று பெயர் சூட்டிக்கொண்டு, நிகரற்ற ஆளுமைத் திறத்தோடு வெளிப்பட்ட ஒரு அமைச்சன் பாடுகிறான்: “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்,” என்று. ஆனால் அதை எப்போது பாடுகிறான்? நாவுக்கரசன் என்று பெயர் மாற்றம் செய்துகொண்டு சைவனாகத் தொண்டூழியம் செய்யத் தன்னைத் தத்தம் செய்துகொண்ட பின்னர். இவன் சைவனானது என்னத்துக்கு? சம்பந்தனைத் தூக்கிச் சுமக்கத்தானே? தூக்கலாம், சுமக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் பெருமிதத்தோடல்ல. மாறாக, ஒரு தொழும்பனின் அடிவருடித்தனத்தோடு. சிறுவனே என்றாலும் சம்பந்தன் வணக்கத் துக்குரிய பார்ப்பாரப் பிள்ளையல்லவா? ஐயோ, அவன் தமிழ்ப் பார்ப்பான் என்கிறீர்களா? பார்ப்பானில் தமிழன் என்ன, வடவன் என்ன ஐயா. இருவரும் சமஸ்கிருதத்தின் பேரால் பூசுர அந்தஸ்தைத் தேடிக்கொண்டு பிறரைத் தொழும்பர்களாக்கியவர்கள்தாமே?

திருமணத்துக்கு முன் பெண்ணானவள் எத்தனை சீரும் சிறப்புமாய் வளர்ந்தென்ன? சுதந்திரமாய்த் திரிந்தென்ன? அத்தனை சிறப்புகளும், அவளைக் கட்டியவன் கழிசடையாய் இருப்பினும் அவனுக்குப் பின்னால் அடங்கி நிற்கத்தானே? பெண்களைப் பிற்படுத்துவதில் முத்திறக் கற்பு பேசும் தமிழ்ச்சமூகம் யாருக்கும் பிற்பட்டதில்லை. கம்பன் இராவணனை வெகு உச்சத்திற்குத் தூக்கிச் செல்வான். மத யானைகளோடு பொருத மார்பு, மலையைச் சுமந்த தோள்கள், வெற்றிமாலை சூடிய பத்துச் சிரங்கள், இடையில் சங்கரனே உவந்தளித்த வீரவாள், இசையில் நாரதனை வென்ற நாவண்ணம், இவ்வளவையும் கவசங்களாகத் தாங்கி மகிழும் வீரம்- அத்தனையும் இராமன் விட்ட ஒரு கணையில் வீழ்ந்துபட்டனவாம். இதில் யார் வல்லவன்? அம்பெய்தவன்தானே? அதுபோலத்தான் பார்ப்பனத் தாக்கத்திற்கு முன் சேமித்த தமிழ்ச் சிறப்புகள் யாவும் பார்ப்பனக் கண்காணிப்பின் கீழ் கைகட்டி நிற்பதாயின. இந்த மறுகட்டமைப்பை வரைவிலக்கணமாக்கித் தமிழ் வரலாற்றை அமைதிப்படுத்திய நூல்தான் தொல்காப்பியம்.


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com