Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru Kavithacharan
Kavithaasaran Logo
அக்டோபர் 2008 - மார்ச் 2009


கயர்லாஞ்சி - நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை
அரசமுருகு பாண்டியன்

“பாபுராவ் லட்சுமன் என்பவரும் அவருடைய சகோதரர் கவுராவ் என்பவரும் அகமதாபாத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக வாழ்ந்து வந்தனர். மகர் சமூகத்தைச் சேர்ந்த இவர்களோடு தக்காணப் பகுதியிலிருந்து வந்த மராத்தா சாதியைச் சேர்ந்த சிலர் பழகி வந்தனர். பாபுராவ்- கவுராவ் இருவரும் மராத்தர்களுடைய விருந்தில் கலந்துகொள்வது வழக்கம். சமீபத்தில் அவர்கள் சாதி மகர் என்பது தெரியவந்தது. தங்கள் இடத்தைத் தீட்டுப்படுத்திவிட்டார்கள் என மராத்தா சாதியினர் மகர் சகோதரர்களைச் சகட்டுமேனிக்குத் திட்டி அடித்துத் துன்புறுத்தி பாபுராவ் அணிந்திருந்த தங்க மோதிரத்தைப் பிடுங்கி ரூ. 11க்கு விற்று, இவர்களை மகர் என்று அடையாளம் காட்டியவனுக்கு ரூ. 6 கொடுத்துவிட்டு, ரூ.500 தண்டம் கட்டினால்தான் இருவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று சிறை வைத்தனர்.

தங்கள் சாதியை மறைத்ததற்காக அவர்களுக்குக் கூடுதலான தண்டனை வழங்க வேண்டும் என்று காட்டு மிராண்டித்தனமான செயல்களைச் செய்யத் துணிந்தனர் மராத்தா சாதி வெறியர்கள். இருவரது இடதுபுற மீசையையும் வலதுபுற கண்இமையையும் சிரைத்தனர். அவர்கள் உடம்பு முழுவதையும் எண்ணெயையும் அழுக்கையும் பூசிக் கரியாக்கினர். கழுத்தில் பழைய செருப்பு மாலையை அணிவித்தனர். கையில் விளக்குமாறு கொடுக்கப்பட்டது. "உயர்சாதியினரைத் தொட முயன்ற திருடர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது” என எழுதப்பட்ட அட்டையை கையில் கொடுத்து, முன்னால் முரசு முழங்க 75 பேர் அடங்கிய ஊர்வல மாக மகர் சகோதரர்களை இட்டுச் சென்றனர்.” அண்ணல் அம்பேத்கர்-நாகரிகமா நயவஞ்சகமா, பக்.35-36

தலித்துகள் மீதான வன்கொடுமைகள் இன்றுநேற்றல்ல, பார்ப்பனியம் இந்த மண்ணில் நிலைநிறுத்தப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. குடிசையோடு தலித்துகளை வைத்துக் கொளுத்துதல் (வெண்மணி), ஊரையே சூரையாடுதல் (கொடியங்குளம்), தூங்கும்போது கழுத்தை அறுத்துக் கொல்லுதல் (புளியங்குடி), வாயில் மலம் திணித்தல் (திண்ணியம்), பட்டப்பகலில் ஓடும் பேருந்திலிருந்தவர்களைப் படுகொலை செய்தல் (மேலவளவு), இப்படியாகப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். விடுதலை பெற்றதாகச் சொல்லப்படும் இந்த 60 ஆண்டுகளில் தலித்துகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்திருக்கின்றனவேயொழிய குறைந்தபாடில்லை. அதன் சான்றாதாரங்களில் ஒன்றுதான் கயர்லாஞ்சி.

மகாரஷ்ட்ரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொகாலி வட்டத்தில் உள்ள சிறிய கிராமம் கயர்லாஞ்சி. இந்தக் கிராமத்தின் பெரும்பான்மை மக்கள் ஜாட் எனப்படும் பிற்படுத்தப்பட்ட இந்துச் சாதியினர். அந்தக் கிராமமும் அதன் நிலங்களும் நிர்வாகமும் காலங்காலமாய் இவர்கள் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன. அக்கிராமத்தில் சுய மரியாதைக்கான வாழ்வு தேடி அண்ணல் அம்பேத்கர் வழியில் பௌத்தத்தைத் தழுவிய மகர் குடும்பங்கள் மூன்று. அவற்றுள் ஒன்றுதான் பையாலால் போட்மாங்கே குடும்பம். பையாலால் மனைவி சுரேகா(44), மூத்த மகன் ரோஷன்(23), பார்வையற்ற இளைய மகன் சுதிர்(21), மகள் பிரியங்கா(19) ஆகியோர் குடும்ப அங்கத்தினர்கள். ரோஷனும் பிரியங்காவும் அந்தக் கிராமத்தில் அதிகம் படித்தவர்கள். இது படிக்காத அந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தின் கண்களை உறுத்தியது. மேலும், அவர்கள் ஐந்து ஏக்கர் நிலத்துக்குச் சொந்தக் காரர்களாய் இருந்ததும் அவர்களுக்குப் பொறுக்கவில்லை.

எப்படியாவது நிலத்தை அபகரிக்க எண்ணி கிராமத் தலைவரின் வயலுக்குச் செல்ல பாதை கேட்டு இரண்டு ஏக்கர் நிலத்தை அபகரித்தனர் சாதி இந்துக்கள். எஞ்சிய நிலத்தையாவது பாதுகாக்க வேண்டுமென்று பக்கத்துக் கிராமத்தில் வசிக்கும் சித்தார்த்திடம் முறையிட்டனர். சித்தார்த் அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அவர் இவர்களுக்காக 03-09-2006ஆம் நாள் கயர்லாஞ்சிக்கு வந்து கிராமத் தலைவரிடம் நியாயம் கேட்டார். இது அங்குக் கூடியிருந்த சாதிவெறியர்களுக்கு ஆத்திரமூட்டியது. இந்த வழக்கைத் திசை திருப்பும் நோக்கில் சுரேகாவிற்கும் சித்தார்த்துக்கும் பாலியல் தொடர்பு உண்டு என்றும் சுரேகா கள்ளச் சாராயம் விற்பவர் என்றும் கதை கட்டிவிட்டனர். இனி சித்தார்த் கயர்லாஞ்சிக்குள் நுழையக்கூடாது என்று தடை விதித்தனர். தடையை மீறிய சித்தார்தை அடித்துத் துரத்தினர் கயர்லாஞ்சி சாதி வெறியர்கள்.

இச்செய்தி அவரது சகோதரர் ராஜேந்திராவுக்குத் தெரிவிக்கப்பட, அவர் காயம் பட்ட சித்தார்த்தை ராய் மருத்துவமனையில் சேர்த்துவிட்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். நேரில் கண்ட சாட்சியாக பையாலால் குடும்பத்தினர் இருந்தனர். இது தொடர்பாக 29-9-2006ஆம் நாள் கயர்லாஞ்சியைச் சேர்ந்த 12 பேர் மகாதி வட்ட நீதிமன்றத் திற்குக் கொண்டுவரப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். பிணையில் வெளிவந்த அவர்கள் ஆத்திரமடைந்து பையாலால் குடும்பத்தைப் பழி தீர்க்க முடிவெடுத்தனர். அவர்களோடு ஆண்களும் பெண்களுமாக அணி திரண்டு ஆயுதங்களுடன் பையாலால் குடிசையை நோக்கித் திரண்டனர்.

குடிசையில் சுரேகா சமைத்துக்கொண்டிருந்தார், குழந்தைகள் படித்துக்கொண்டிருந்தனர். அனைவரையும் அந்தச் சாதிவெறி பிடித்த மிருகங்கள் வெளியே இழுந்துவந்து ஆடைகளைக் கிழித்தெறிந்து நிர்வாணப் படுத்தினர். அடித்துத் துன்புறுத்தி ஊரின் மையப்பகுதிக்கு இழுத்துவந்தனர். சாதி வெறியும் காமவெறியும் ஏற சுரேகாவையும் பிரியங்காவையும் பாலியல் வல்லுறவு செய்யத் தொடங்கினர். வெறியின் உச்சநிலையேறி ரோஷனையும் சுதிரையும் தன் தாயுடனும் தங்கையுடனும் உறவுகொள்ள வற்புறுத்தினர். இதைக் கடுமையாக எதிர்த்த ரோஷன், சுதிரின் ஆண்குறிகள் வெட்டியெறியப்பட்டன. ஒட்டுமொத்த கிராமமே அந்தத் தாயையும் மகளையும் வன்புணர்ச்சிக்குட்படுத்தியது. ஆதிக்க சாதி வெறியர்களின் வீட்டுப் பெண்களும் இந்தக் காட்சியைக் கண்டு ரசித்தார்களேயொழிய எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பின் நான்கு பேரையும் தரையில் தூக்கி எறிந்து விளையாடினார்கள்.

பிரியங்கா மற்றும் சுரேகாவின் பெண்குறிக்குள் மூங்கில்கழி, இரும்புக் கம்பி என்று கிடைத்த வற்றையெல்லாம் சொருகினர். இந்தக் கொடுமை மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடந்தேறியது. உயிர் பிரிந்த போதும்கூட பிணத்தின்மீது பாலியல் வன்முறை செய்தனர். பின்னர் நான்கு உடல்களையும் ஒரு மாட்டு வண்டியில் ஏற்றி ஊருக்கு வெளியே புதர்களில் திசைக்கொரு பிணமாக வீசியெறிந்தனர். பின்னர் ஊரைக்கூட்டி இந்தச் சம்பவம் பற்றி யாரும் வாய் திறக்கக்கூடாது, மீறினால் ஊர்விலக்குச் செய்யப்படுவார்கள் என்று மிரட்டிவிட்டுக் கலைந்தனர். இந்தக் கொடூரம் நடந்து கொண்டிருக்கும்போதே ஊருக்குள் நுழைய முயன்ற பய்யாலாலை அவர்களின் உறவினர்கள் தடுத்து நிறுத்திவிடுகின்றனர்.

இல்லாவிடில் அவரையும் அந்தச் சாதிவெறி மிருகங்கள் கொலை செய்திருப்பார்கள். பின்னர் பய்யாலால் சித்தார்த்தை அழைத்துக் கொண்டு அண்டால்கவான் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இரவு வந்து கயர்லாஞ்சியில் விசாரித்த காவலர்கள் அப்படியொரு சம்பவம் ஏதும் நடைபெறவில்லை என்று தெரிவித்த ஊர்க்காரர்களை நம்பி திரும்பி விட்டனர். பய்யாலால் குடிசையைக்கூட அவர்கள் எட்டிப் பார்க்கவில்லை. மறுநாள் காலை மகராஜ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில் நான்கு பிணங்களும் கைப்பற்றப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல் துறையால் ஏராளமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் சுரேகா, பிரியங்கா பிறப்புறுப்பில் செருகப்பட்டிருந்த கம்பிகள், குச்சிகள் எனப் பல பொருட்கள் பதிவாகியிருந்தன. ஆனால், பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவர்கள் உடல்கள் உருக்குலைந்து போனதால் பாலியல் வன்முறைக் குட்படுத்தியதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று மருத்துவர்கள் குழு அறிவித்தது.

ஒரு வாரம் கழித்து காவல் துறையால் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 147இ 148இ 149 மற்றும் 324இன் கீழ் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது சட்டத்திற்குப் புறம்பாக ஒன்றுகூடுவது, ஆயுதங்களை வைத்திருந்தது, வன்செயலில் ஈடுபட்டது, கொலை செய்தது மற்றும் சாட்சியங்களை அழித்தது என்பதாகும். திட்டமிட்டு கொலை செய்தல், பாலியல் வன்முறை மற்றும் தாழ்த்தப் பட்டோர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் என்ற எந்தப் பிரிவிலும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு அதன் நடைமுறை விதிகள் 1995ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டன. இதன் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோர் மீதான வன்முறை வழக்குகள் அனைத்தையும் இதில் பதிவு செய்ய இச்சட்டம் வழிவகை செய்கிறது. குற்றவாளிகள் தப்பித்துவிடாமல், தடயங்களை அழிக்காமலிருக்க பிணைமறுப்பு, பாதிக்கப்பட்ட தாழ்த்தப் பட்டோருக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவது, அவரது பாதுகாப்பு கருதி ஆயுதம் வைத்துக்கொள்ளும் உரிமை, வழக்கை அரசே ஏற்று நடத்துவதற்கான உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை வழங்க இச்சட்டம் வழிவகை செய்தாலும், கயர்லாஞ்சி சம்பவத்தில் காவல்துறை இவ்வழக்கை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதிவு செய்யாமல் பொதுவான தண்டனைச் சட்டத்தில் பதிவு செய்தது அதன் சாதி உணர்வையே வெளிப்படுத்துகிறது.

அரசு அதிகாரிகளோ, ஊடகங்களோ, அரசியல்வாதிகளோ இது குறித்து ஏதும் பேசாமல் கள்ள மௌனம் காத்தனர். கயல்லாஞ்சி பக்கம்கூட யாரும் எட்டிப்பார்க்கவில்லை. அண்ணல் அம்பேத்கர் பௌத்தம் தழுவிய 50ஆவது ஆண்டைக் கொண்டாட நாக்பூரில் தீக்ஷா பூமியில் திரண்ட 15 லட்சம் தலித்துகள் மத்தியில் இச்செய்தி தீயாய்ப் பரவியது. தலித் இயக்கத்தினர், பெண்கள் நாக்பூரிலுள்ள சட்டமன்றம் நோக்கி முழக்கமிட்டுச் சென்றனர். காவல் துறை தடுத்து நிறுத்தியது. ஆனாலும் தலித்துகளின் எழுச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. தடியடி, கண்ணீர்ப் புகையில் பலர் காயமடைந்தனர். சாலை மறியல் நடந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் உள்ள தலித் போராளிகள் மற்றும் மனித உரிமைப் போராளிகளின் கவனத்தை ஈர்த்தது. பம்பாயில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள் திரண்டெழுந்து கயல்லாஞ்சிக் கொடுமைக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதன் பிறகே உண்மையறியும் குழு, மனித உரிமை அமைப்புகள் கயல்லாஞ்சி சென்று உண்மைகளைக் கண்டறிந்து ஊடகங்களுக்கு செய்தியளித்தனர். ஆனாலும் எந்தப் பயன்பாடும் ஏற்படவில்லை. மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதிலும் எந்தப் புதிய தகவலும் கிட்டவில்லை. மருத்துவர்கள் குழு பாலியல் வன்முறை நடந்ததாக எந்த சான்றும் இல்லை என பகவத்கீதையின் மீதும் அரசியலமைப்புச் சட்டத்தின்மீதும் சத்தியம் செய்தனர்.

ஒன்றரை ஆண்டுகள் கழிந்த பின்னர் கடந்த செப்டம்பர் 15இல் நீதிபதி எஸ்.தாஸ் என்பவர் ஒரு தீர்ப்பை அழுது கொண்டே வழங்கினார். அதன்படி இது முன்விரோதத்தின் காரணமாக செய்யப்பட்ட படுகொலைதானேயொழிய இதற்கு வேறு நோக்கமில்லை (அதாவது சாதிவெறி காரணமல்ல, பாலியல் வெறியும் காரணமல்ல) என்று ஆறு பேருக்கு மரண தண்டணையும் இருவருக்கு ஆயுள் தண்டணையும் அளித்தார்.

இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று ஊடகங்களில் கதையளந்தாலும் இதை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பிருக்கிறதா என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும். மேல் முறையீட்டில் குற்றவாளிகள் தப்பித்துவிட வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்குள் மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனைக்கெதிராக குரல்கொடுக்கத் துவங்கிவிட்டனர். தலித்துகளின் மீதான ஒவ்வொரு வன்கொடுமையின்போதும் குற்றவாளிகள் தப்பித்துப்போவதையே இது காறும் பார்த்து வந்திருக்கிறோம். காரணம் நீதித்துறையின் சாதியச் சார்புதான். அதற்கு உதாரணம் வெண்மணி குறித்த தீர்ப்பு. அமெரிக்க அய்க்கியக் குடியரசில் ஒரு நீக்ரோ மீதான வழக்கு வருகிறபோது அதை நீக்ரோ நீதிபதிதான் விசாரிக்க வேண்டும் என்று அந்நாட்டுச் சட்டம் வலியுறுத்துகிறது. இந்தியாவில் தலித்துகளின் வழக்குகளுக்கு நீதி வழங்க தலித் நீதிபதிகள் நியமிக்கப்படுவார்களா? அவ்வாறு நியமிக்கப்படுகிற நீதிபதிகளும் தலித்துகளுக்கு ஆதரவாக தீர்ப்பு எழுதுவார்களா? இதைக் காலம்தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வளவு பெரிய வன்கொடுமை நிகழ்ந்தும் அதனை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் பதிவுசெய்ய இயலாத நிலைதான் இந்தியா முழுவதும் உள்ளது. ஆனால் சாதி வெறியர்களோ இந்தச் சட்டத்தை நீக்கக்கோரி முழக்க மிடுகின்றனர்.

இந்திய வரலாற்றில் தலித்துகளுக்கெதிரான வன்கொடுமையில் இப்போதுதான் முதன்முதலாக மரண தண்டனை அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாதி வெறியர்களுக்கு பாடம் புகட்ட இது ஒரு சரியான வாய்ப்பு. இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டால்தான் இந்தியாவிலிருக்கிற நாற்பது கோடி தலித்துக்களின் மனமும் ஆறுதலடையும். இது போன்ற வன்கொடுமைகள் மேலும் நிகழாமலிருக்க இது ஒரு பாடமாக அமையும். இல்லாவிட்டால் தலித்துகள் நீண்ட காலம் பொறுமை காக்கமாட்டார்கள்.

நன்றி: விடியல் சம்புகன் மாத இதழ், இந்து நாளிதழ்


நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com