வன்கொடுமை தடுப்புச் சட்டமானது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் மீது ஆதிக்க சாதியினரால் இழைக்கப்படும் அநீதிகளை தடுப்பதற்காகவும், அநீதி இழைக்கப்படும் தருணங்களின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு துரித நிவாரணம் வழங்கவும், துரித நீதி வழங்கும் நோக்கத்தோடும் இயற்றப்பட்டதாகும். ஆனால் அத்தகைய சட்டமானது முறையாக நடைமுறைபடுத்தப்படவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது. இச்சட்டத்தின் பல்வேறு அம்சங்கள் காவல்துறை மற்றும் இதர அரசு இயந்திரங்களின் அலட்சியத்தின் காரணத்தால் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வன்கொடுமைக்கு ஆளாகும் நிகழ்வுகள் அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. இதில் வேதனை அளிக்கக்கூடிய விசயம் என்னவென்றால் நிலம் சார்ந்த வன்கொடுமை சம்பவங்கள் குறித்த புகார்களை தமிழக காவல்துறையினர் வன்கொடுமைச் சட்டத்தின் படி அணுகாமல் அலட்சியப்படுத்துவதன் காரணமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி நிதி நெருக்கடியை சந்திப்பதனால், அவர்கள் இந்த சமூகத்தின் சாதி ரீதியான பாகுபாடுகளை சகித்துக் கொண்டே உணவுக்கும் உடைக்கும் மட்டுமே போராட வேண்டிய நிலை நிலவி வருகிறது.

நில உரிமைகளைப் பாதுகாக்கும் பிரிவுகள்

பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு 3(1)(f) & 3(1)(g) ஆகியவை உருவாக்கப்பட்டது.

பிரிவு 3(1)(f)-ன்படி பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஒருவருக்கு சொந்தமான அல்லது அவரது அனுபவத்தில் உள்ள அல்லது நில ஒதுக்கீட்டுக்கான அதிகாரம் உள்ள எந்த ஒரு அதிகாரியினாலும் அவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அல்லது அவ்வாறு அறிவிப்பு செய்யப்பட்ட நிலத்தை தவறான முறையில் வேறு சாதியினர் ஆக்கிரமிப்பு செய்தால் அல்லது அந்நிலத்தில் சாகுபடி செய்தாலோ அல்லது வேறொருவருக்கு மாற்றம் செய்தாலோ அத்தகைய செயல் தண்டனைக்குரிய வன்கொடுமையாகும்.

எடுத்துக்காட்டாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களுக்காக தமிழக அரசு ஒப்படை செய்த (டி கண்டிசன் பட்டா மூலம்) நிலங்களை வேறு சாதியினர் எவரேனும் அபகரித்துக் கொண்டால் அத்தகைய செயல் வன்கொடுமையாகக் கருதப்படும். எனவே இது சம்மந்தமான வரும் புகார்களின் அடிப்படையில் போலிசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து, சம்மந்தப்பட்ட நபர்கள் மற்றும் வருவாய் துறையிடமும் முறையான விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய சம்பவங்கள் உரிமையியல் பிரச்சனையாகக் கருதப்படாது என்பதை காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

அதே போன்று பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்கள் அனுபவித்து வரும் நிலத்தை அவர்களின் அனுமதியின்றி வேறு சாதியினரைச் சேர்ந்த எவரேனும் ஆக்கிரமித்து அதில் சாகுபடி செய்து வந்தாலும் அது வன்கொடுமையாகக் கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரிவு 3(1)(g)–ன்படி பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் ஒருவரிடமுள்ள நிலத்திலிருந்தோ அல்லது இருப்பிடத்திலிருந்தோ தவறான முறையில் வெளியேற்றினால் அல்லது வன உரிமைகள் உள்ளிட்ட நிலம், இருப்பிடம், அல்லது நீர், பாசன வசதி ஆகியவற்றில் அவருக்கு உள்ள உரிமைகளை அனுபவிப்பதில் குறுக்கிட்டாலோ அல்லது அதில் விளையும் பொருட்களை அழித்தாலோ அல்லது அபகரித்தாலோ அத்தகைய செயல் தண்டனைக்குரிய வன்கொடுமையாகும்.

எடுத்துக்காட்டாக பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் பயன்படுத்தும் பாசனக் கால்வாயை வேறு சாதியினர் ஒருவர் சேதப்படுத்தி அவர்களின் நிலத்திற்கு போகவேண்டிய பாசன நீரைத் தடுக்கும் செயல் வன்கொடுமையாகக் கருதப்படும்.

கடமையிலிருந்து விலகும் காவல் துறையினர்

இத்தகைய வன்கொடுமை நிகழ்வுகளை காவல் துறையினர் சாதாரணமான நிகழ்வுகள் என்றும் உரிமையியல் பிரச்சனை என்றும் குறிப்பிட்டு தனது கடமையிலிருந்து விலகுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். காவல்துறையின் இது போன்ற அலட்சியப் போக்கான செயல்பாட்டால் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு நில்லாமல், சாதாரணமாகக் கடந்து செல்லும் போக்கால் நாளடைவில் அது வன்முறை சார்ந்த வன்கொடுமை சம்பவமாக மாறி பல உயிர்களை காவு வாங்கும் அளவிற்கும், சொத்துக்களை சேதப்படுத்தும் அளவிற்கும் விஸ்வரூபம் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படும் அவலம் ஏற்படவும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் வன்கொடுமை சட்டத்தின் நோக்கமான தடுப்பு நடவடிக்கைக்கு பங்கம் விளைவிக்கப்படுகிறது. எனவே வன்கொடுமைச் சட்டத்தினை அமல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை உயர் அதிகாரிகளும் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியின மக்களின் நிலம் சார்ந்த உரிமைகளைப் பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட பிரிவுகளான 3(1)(f) & 3(1)(g) ஆகியவை குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி வன்கொடுமை சம்பவங்களைத் தடுத்து தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

சி.பிரபு, வழக்கறிஞர், மெட்ராஸ் உயர்நீதிமன்றம், சென்னை

Pin It

மாண்பு உச்ச நீதிமன்றம், புது டில்லி

நீதிபதிகள்: மார்கண்டேய கட்ஜு & கியான் சுதா மிஸ்ரா

மேற்கோள்: 2011 -1- L.W. (Crl) 677 : (2011) 3 MLJ (Crl) 551(SC) தீர்ப்பு நாள்: 19.04.2011

ஆறுமுகம் சேர்வை & அஜித் குமார் ........ மேல்முறையீட்டாளர்கள்
 எதிர்
தமிழ்நாடு அரசு ......... எதிர் மனுதாரர்

தீர்ப்புரை

“ஒவ்வொரு அணுவிலும் ஒரு பகுதி இருளே; ஒரு யுகத்தின் கோப்பையை ஏந்துபவனே, இது குற்றங்களின் காலம்”. – - ஃபிராக் கோரக்புரி

“அனைத்து மனிதர்களும் சமமாகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள்; மனிதர்கள் வாழ்வு, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியாக இருக்க விழைவது போன்றவைகளை உள்ளடக்கிய, விட்டுக்கொடுக்க முடியாத உரிமைகளுடன் படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் வெளிப்படையான உண்மைகளாகக் கொள்கிறோம். - அமெரிக்க சுதந்திர பிரகடனம், 1776

1.தாமஸ் ஜெஃபர்சன் என்பார் எழுதிய நினைவில் கொள்ளத்தக்க மேற்கண்ட வரிகள், இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்த பிறகும், இன்றளவும் வரலாற்றில் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இந்திய சமூகத்தின் ஒரு பெரும் பிரிவினர், தங்களின் சொந்த நாட்டு மக்களின் ஒரு பிரிவினரை இன்றளவும் தாழ்வாகக் கருதும் நிலையே நீடிக்கிறது. மேற்கண்ட மனநிலையானது இந்த நவீன யுகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும் நாட்டின் வளர்ச்சியில் மந்த நிலையை ஏற்படுத்தும் காரணங்களில் இதுவும் முக்கியமான ஒன்றாகும்.

2.அனுமதி அளிக்கப்பட்டது.

3.மதுரை 4ஆவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தால் பகரப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, குற்றவியல் மேல்முறையீடு (எண்.536&537/2001) செய்தபோது, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 25.01.2008அன்று அத்தீர்ப்பை உறுதி செய்து அளித்த தீர்ப்புக்கு எதிராக, இந்த மேல்முறையீடுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

4. கடந்த, 01.07.1999அன்று, கோவில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு நிகழ்வின் போது, மாடுகட்டும் முறை குறித்து, முதல் சாட்சி பன்னீர்செல்வம் மற்றும் இரண்டாம் சாட்சி மகாமணி ஆகிய இருவருக்கும் மேல்முறையீட்டாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டாளரான ஆறுமுகம் சேர்வை, முதல் சாட்சியை, “நீ பள்ளப்பயல், செத்த மாட்டுக்கறியைத் தின்பவன்” என்று திட்டி அவமதிப்பு செய்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து, குற்றவாளிகள் 1, 7 மற்றும் 9 ஆகியோர், முதல் சாட்சியின் இடது தோளில் கம்பால் அடித்து காயப்படுத்தியிருக்கிறார்கள். அப்போது இரண்டாம் சாட்சியான, மகாமணி இப்பிரச்சனையில் குறுக்கீடு செய்தபோது அவரையும் கம்பால் தாக்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக அவருக்குத் தலையில் முறிவும், கொடுங்காயமும் ஏற்பட்டுள்ளது.

5. காயமுற்ற நேரடி சாட்சிகளான மேற்கண்ட இருவரையும் தவிர, அந்த நிகழ்வில் மேலும் மூன்று நேரடி சாட்சிகளும் இருக்கின்றார்கள். காயமுற்றவர்களை மருத்துவர் பரிசோதனை செய்திருக்கிறார். மகாமணியின் தலையில் ஏற்பட்ட முறிவு, குற்றவாளிகளின் கொலை செய்யும் நோக்கத்தை உணர்த்துகிறது.

6. அரசு தரப்பின் வழக்கை இரண்டு நீதிமன்றங்களும் நம்புகின்றன. நிகழ்வு தொடர்பாக சாட்சிகளின் விவரிப்புகளை நாங்கள் மிகவும் கவனமுடன் பரிசீலனை செய்தபோதும், நிகழ்வை நம்பாமலிருக்க ஒரு காரணமும் தென்படவில்லை.

7. குற்றவாளி பிற்படுத்தப்பட்ட “சேர்வை” ஜாதியைச் சேர்ந்தவர். புகார்தாரர்களோ பட்டியலின “பள்ளன்” ஜாதியைச் சேர்ந்தவர்கள்.

8. “பள்ளன்” என்ற வார்த்தை ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் இதே வார்த்தை, ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் உபயோகபடுத்தப்பட்டு வருகிறது. (வட இந்தியாவில் “சமார்” என்ற வார்த்தை குறிப்பிட்ட ஒரு ஜாதியைக் குறிக்கும் அதேவேளையில், ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் அதே வார்த்தை பயன்படுத்தப்படுவதைப்போல). பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் ஒருவரை “பள்ளன்” என்று சொல்வது, எங்களது கருத்துப்படி, பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமாகும். தமிழ்நாட்டில், “பள்ளப்பயல்” என்று ஒருவரைச் சொல்வது இன்னும் கூடுதலாக அவமதிப்பு செய்வதாகும்; அது மேலும் பெரிய குற்றமாகும்.

9. அதேபோல, தமிழ்நாட்டில் “பறையன்” என்றொரு ஜாதி உள்ளது. ஆனால் அதே “பறையன்” என்ற வார்த்தை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையிலும் பயன்படுத்தப்படுகிறது. “பறப்பறையன்” என்ற வார்த்தை மேலும் பெரிய அவமதிப்பாகும்.

10. பள்ளன், பள்ளப்பயல், பறையன், பறப்பறையன் போன்ற வார்த்தைகளை ஒருவரை அவமதிப்பு செய்யும் வகையில் பயன்படுத்துவது, எங்களது கருத்துப்படி மிகவும் கடுமையான கண்டனத்திற்குரியது. மேலும் பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். (50ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த போதும்) தற்போது, “நிக்கர்” அல்லது “நீக்ரோ” என்று ஆப்பிரிக்க-அமெரிக்கர்களை அழைப்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றோ அது போலவே, நவீன யுகத்தில் இதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

11. இந்த வழக்கைப் பொருத்த வரையில், பன்னீர்செல்வத்தை அவமதிப்பு செய்யும் நோக்கத்தில் “பள்ளப்பயல்” என்ற வார்த்தை, முதல் குற்றவாளியால் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆகவே, இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் தெளிவான குற்றமாகும்.

12. இந்த நவீன யுகத்தில், எவரது உணர்வுகளும் நோகடிக்கப்படக்கூடாது. குறிப்பாக, பல வேற்றுமைகளை உடைய இந்தியா போன்ற நாட்டில், ஜாதி, மதம், இனம் மற்றும் மொழி போன்றவைகளால் எவரொருவரது உணர்வுகளும் அவமதிப்பு செய்யப்பட்டு விடாதவாறு, நாம் கண்டிப்பாக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான், நாம் நமது நாட்டை ஒற்றுமையுடையதாகவும், வலிமையானதாகவும் வைத்திருக்க முடியும்.

13. ஸ்வரன்சிங் மற்றும் பலர் -எதிர்- அரசு ((2008) 12 SCR 132) என்ற தீர்ப்பில் (பத்தி 21 முதல் 24 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"21.பிற்படுத்தப்பட்ட ஜாதிகளைச் சார்ந்தவர்களாலும், உயர்ஜாதி என்று அழைக்கப்படும் மக்களாலும் அவமதிப்பு, கீழ்தரமாக நடத்துதல் மற்றும் கேலி செய்யும் நோக்கத்தில், தற்காலத்தில், ‘சமார்’ என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. நிகழ்காலத்தில் 'சமார்’ என்று ஒருவரை அழைப்பது கீழ்த்தரமான வார்த்தை மற்றும் கடுமையான குற்றமுமாகும். மேலும் இன்று ‘சமார்’ என்று சாதரணமாக அழைப்பது, ஒரு ஜாதியைக் குறித்து குறிப்பிட அல்ல, மாறாக திட்டமிட்டு ஒருவரின் மாண்புக்கு இழிவு ஏற்படுத்தவும், அவமதிப்பு செய்யவுமே.

22. பிரிவு 3 (1) (x) க்கு சட்ட பொருள் விளக்கம் தரும்போது, இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதற்கான நோக்கத்தை பார்க்கவேண்டும். பட்டியலின பிரிவினரின் மாண்புக்கும், மனிததன்மைக்கும் இழுக்கு ஏற்படுத்துவதையும், அவர்களைத் தொந்தரவு செய்வதிலிருந்து தடை செய்வதற்காகவுமே இச்சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்பது, இச்சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் காரணங்கள் குறித்த அறிக்கையிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் 3 (1) (x) பிரிவிற்கு பொருள் விளக்கம் கொள்ளும் போது, 'சமார்' என்ற வார்த்தையின் மூலத்தை கணக்கில் எடுத்துக்கொள்வதை விட பயன்பாட்டினால் அந்த வார்த்தை பெற்றுள்ள பரவலான அர்த்தத்தை பார்க்க வேண்டியதுள்ளது. அந்த வார்த்தையின் மூலப்பொருளை கண்டறிய முயல்வோமானால், அது இந்த சட்டத்தின் முக்கியமான குறிக்கோளை அடையவிடாது.

23. இது சமத்துவத்திற்க்கும், மக்களாட்சிக்குமான காலமாகும். எவருடைய உணர்வுகளும் காயப்படுத்தப்படக் கூடாது. மேலும் எந்த மனிதனும், சமூகமும் அவமதிப்பு செய்யப்படவோ அல்லது கீழ்த்தரமாக பார்க்கப்படவோ கூடாது. அரசியல் சாசனத்தின்ஆன்மா என்பதுடன்,அதன் அடிப்படை அம்சங்களின் பாகமும் ஆக்கப்பட்டுள்ளது. ஆகவே, எங்களது கருத்துப்படி, ஒருவர், “சமார்” இனத்தை சேர்ந்தவராகவே இருந்தாலும், ஒருவரை அடையாளப்படுத்தும் போது, 'சமார்' என்ற வார்த்தையை உயர் ஜாதியினரும், பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் உபயோகிக்கக்கூடாது. ஏனெனில் அந்த வார்த்தையை உபயோகிக்கும்போது ஒருவருடைய உணர்வுகள் காயப்படுத்தப்படுகின்றன. மதம், ஜாதி, இனம், மொழி போன்ற பல்வேறு வேற்றுமைகளை உடைய குழுவினர் இருக்கும் நம் போன்ற நாட்டில் அனைத்து தரப்பு மக்களும், குழுக்களும் கண்டிப்பாக மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். மேலும், எவரொருவரும் தாழ்வாகப் பார்க்கப்படக்கூடாது. நமது நாட்டை ஒற்றுமையுள்ள நாடாக வைத்திட இது ஒன்றே வழியாகும்.

24. எங்களது கருத்துப்படி, பொது இடத்தில், பொது மக்கள் முன்னிலையில் வைத்து ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு நபரை அவமதிப்பு மற்றும் கீழ்த்தரமாக நடத்தும் நோக்கத்துடன், 'சமார்' என்று அழைப்பது, நிச்சயமாய் பிரிவு 3 (1) (x) ன் கீழ் குற்றமாகும். அப்படியாக, கீழ்த்தரமாக அல்லது அவமதிக்கும் நோக்கத்தில்தான் ‘சமார்' என்று ஒருவர் அழைக்கப்பட்டார் என்பது, அது உபயோகிக்கப்பட்ட சூழலைச் சார்ந்தது."

14. மேலும் நாங்கள், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் மிகவும் ஆட்சேபணைக்குரிய இரட்டை குவளை முறை குறித்தும் குறிப்பிட விரும்புகிறோம். இந்த முறைப்படி, அனேக தேநீர் கடைகளிலும், உணவகங்களிலும் பட்டியலின மக்களுக்கும், பிற மக்களுக்கும் தேநீர் அல்லது பிற பானங்கள் வழங்கும்போது, தனித்தனி குவளைகள் பயன்படுத்தப்படுகிறது. எங்களது கருத்துப்படி, இது கடுமையான கண்டனத்திற்குரிய செயலாகும். மேலும், இது பட்டியலினம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம்,1989ன் கீழ் குற்றமுமாகும். ஆகவே இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டிப்பாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், குற்றம் புரிந்தது உறுதிபடுத்தப்படும்போது கடுமையான தண்டனைகள் வழங்கப்படவும் வேண்டும். மேலும், தங்களது அதிகார வரம்புகளுக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்ற நடைமுறைகள் குறித்த செய்திகள் தெரிந்தும், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, நிர்வாகம் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப்பட வேண்டும். மேலும் அவர்கள் மீது துறைவாரியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

15. லதா சிங் –எதிர்- உத்திரபிரதேச மாநில அரசு ((2006)5 scc 475) என்ற தீர்ப்பில் (பத்தி 14 முதல் 18 வரையிலான) கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

"14. இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டு பண்ணுகிறது. தற்போது மட்டுமின்றி நிகழ்வு தொடர்புடைய காலத்திலும், மனுதாரர் வயது வந்தவர் என்பதில் எவ்வித குழப்பமுமில்லை. ஆகவே அந்த பெண், தான் விரும்பும் எவருடனும் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம் அல்லது தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்து கொள்ளலாம். ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வதற்கு, இந்து திருமண சட்டத்திலோ அல்லது வேறு எந்த சட்டத்திலோ, எவ்விதமான தடைகளுமில்லை. ஆகவே மனுதாரரோ, அவரது கணவரோ, கணவரின் உறவினர்களோ என்ன குற்றம் செய்தார்கள் என்று எங்களால் கண்ணுற முடியவில்லை.

15. எங்களது கருத்துப்படி, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளான இந்த வழக்கின் குற்றவாளிகள் எவ்விதமான குற்றமும் செய்யவில்லை. மனுதாரர், வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்டார் என்பதால், அவரது சகோதரர்கள் உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தொடரப்பட்டஇவ்வழக்கு நிகழ்வுகளில் நீதிமன்றம் மற்றும் நிர்வாக எந்திரமானது தவறாகக் கையாளப்பட்டுள்ளது. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது போல மனுதாரரின் சகோதரர்கள் புரிந்த சட்டத்திற்குப் புறம்பான அடாவடி செயல்களுக்கு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறையினர், அதற்கு நேரெதிராக மனுதாரரின் கணவர் மீதும் அவரது உறவினர்கள் மீதும் தவறாக நடவடிக்கை எடுத்துள்ளதை இங்கே நாங்கள் வருத்தத்துடன் கவனத்தில் கொள்கிறோம்.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண்களுக்கெதிராக வன்முறைகளும், மிரட்டல்களும், தொந்தரவுகளும் செய்யப்படுவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் எங்களது கவனத்துக்கு வந்தவண்ணம் உள்ளன. எனவே அது தொடர்பான சில பொதுவான அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டியது அத்தியாவசியமானதென்று நாங்கள் உணர்கிறோம். தற்போது நமது நாடு அதன் வரலாற்றில் ஒரு மாற்றத்தின் காலகட்டத்தைக் கடந்து செல்கிறது. எனவே, இந்த நீதிமன்றமானது இது போன்றதொரு பொது பிரச்சனையில் இனியும் மௌனம் சாதிக்க முடியாது.

17. நமது நாட்டுக்கு ஜாதிய முறையானது பெரிய சாபமாகும். எனவே, எவ்வளவு விரைவாக இது ஒழிக்கப்படுகிறதோ அவ்வளவு நல்லது. சரியாகச் சொல்லப்போனால், நமது நாட்டிற்கு எதிராகவுள்ள சவால்களை ஒற்றுமையாக எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் ஜாதிய முறையானது நாட்டை பிளவுபடுத்துகிறது. ஆகவே, ஜாதி மறுப்புத் திருமணமானது, நாட்டின் எதிர்பார்ப்பாகும். ஏனெனில் இதன் விளைவாகவே ஜாதிய முறைகள் ஒழிக்கப்படும். ஆனபோதிலும், ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் ஆண்கள் மற்றும் பெண்கள் மிரட்டலுக்கும், வன்முறைக்கும் உள்ளாக்கப்படுவது தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருத்தமளிக்கும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. எங்களது கருத்துப்படி, இதுபோன்ற வன்முறைகளோ, மிரட்டல்களோ அல்லது துன்புறுத்தல்களோ முற்றிலுமாக சட்டத்திற்குப் புறம்பானவைகள் என்பதால் அவைகளைப் புரிந்தவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இது ஒரு சுதந்திரமான மக்களாட்சி நாடு என்பதால், உரிய வயதை அடைந்துவிட்ட ஒருவர், தான் விரும்பும் எவரையும் திருமணம் செய்துகொள்ளலாம். ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தங்களது மகன் அல்லது மகளுடனான சமூக உறவுகளை வேண்டுமானால் அதிகபட்சமாக அவர்களது பெற்றோர்கள் துண்டித்துக்கொள்ள முடியுமே தவிர, அவர்களை மிரட்டவோ, துன்புறுத்தவோ அல்லது அவர்களுக்கு எதிராக வன்முறையை தூண்டிவிடவோ முடியாது. எனவே, நாடு முழுவதும் உரிய வயதையடைந்த ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் அல்லது அந்த தம்பதிகள் இருவரும் மிரட்டப்படுதல் அல்லது அவர்கள் மீது வன்முறைகள் ஏவிவிடப்படுதல் குறித்து கண்காணிக்க வேண்டுமென்று காவல்துறை மற்றும் நிர்வாகத்துறை அதிகாரிகளை அறிவுறுத்துகிறோம். அப்படியாக வன்முறை, மிரட்டல் அல்லது துன்புறுத்தல் செய்யும் நபரையோ அல்லது எவரது அறிவுறுத்தலின் பேரில் செய்யப்படுகிறதோ, அவர்கள்மீது குற்றவியல் நடைமுறைகளை எடுப்பதை இலக்காகக்கொண்டு செயல்படுவதுடன், அது போன்ற நபர்கள் மீது சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

 18. தங்களது சொந்த விருப்பத்தில், ஜாதி மறுப்பு அல்லது மத மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களை, கௌரவக் கொலைகள் செய்வதாக நாங்கள் சில நேரங்களில் கேள்விப்படுகிறோம். அது போன்ற கொலைகளில் கௌரவமானதாக எதுவும் இல்லை என்பதோடு, அப்படிப்பட்டவர்கள் செய்யும் அதுபோன்ற கொலைகள் காட்டுமிராண்டித்தனமான, அவமானப்படத்தக்க, கொடூரமான, நிலப்பிரபுத்துவ மனநிலையுடன் கூடிய படுகொலைகளேயன்றி வேறில்லை. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவதன் வாயிலாக மட்டுமே, இது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும்”.

16. ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட அல்லது திருமணம் செய்து கொள்ள விரும்பும் வேறுவேறு ஜாதியைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கௌரவக் கொலைகள் அல்லது இதர வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதையும், நிறுவனமாக்கப்பப்பட்ட வழியில் ஊக்கப்படுத்திவரும், தனி மனிதர்களுடைய வாழ்வில் தலையீடு செய்யும் “காப் பஞ்சாயத்துகள்” (தமிழ்நாட்டில் கட்டப் பஞ்சாயத்துகள் என அறியப்படுகின்றன) தொடர்பாக சமீப காலங்களாக கேள்விப்படுகிறோம். எங்களது கருத்துப்படி, இது முழுவதுமாக சட்டப்புறம்பானதும், வேறோடு களைந்தெறியப்பட வேண்டியதுமாகும். மேலே சொல்லப்பட்ட லதா சிங் வழக்கில் கூறப்பட்டுள்ளது போல், கௌரவக் கொலைகளிலும் இதர வன்கொடுமைகளிலும் கௌரவமானதாக ஏதும் இல்லை. மேலும், அவை காட்டுமிராண்டித்தனமான மற்றும் அவமானமான கொலைகளேயன்றி வேறேதுமில்லை. சகமனிதர்களின் தனிமனித வாழ்வில் வன்கொடுமைகளை நிகழ்த்தும் முரட்டுத்தனமான, நிலபிரபுத்துவ சிந்தனைகளைக் கொண்ட நபர்கள், கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். இந்த வழியில் மட்டுமே காட்டுமிராண்டித்தனமான மற்றும் நிலப்பிரபுத்துவ சிந்தனைகளுடன்கூடிய மனநிலை உடையோரை நாம் வேறோடு பிடுங்கி எறிய முடியும். மேலும் தங்களது கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ளும் இது போன்ற செயல்கள், முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான கட்டப் பஞ்சாயத்துகளுக்குச் சமமாகும்.

17. ஆகவே, இது போன்ற வன்கொடுமைகளைத் தடுத்து நிறுத்திட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி, நிர்வாக மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவுத்துகிறோம். இது போன்ற வன்கொடுமைகள் நிகழின், அது நிகழக் காரணமானோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் தொடர்வது மட்டுமன்றி, (1)சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முன்கூட்டியே தகவல் கிடைக்கப்பெற்று, அச்சம்பவம் அதுவரையில் நடந்தேராமல் இருக்கும்பட்சத்திலும், அதனைத் தடுத்திட முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை அல்லது (2)சம்பவம் நடந்து முடிந்திருப்பின், குற்றம் புரிந்தவர்களையும், ஏனைய சம்மந்தப்பட்ட நபர்களையும் கைதுசெய்து, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பின், மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஏனைய பொறுப்புடைய அதிகாரிகள் போன்றவர்களை மாநில அரசு உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்துகிறோம். ஏனெனில் எங்களது கருத்தில் அவர்களே நேரடியாகவோ, மறைமுகமாகவோ பொறுப்புடையவர்களாகக் கருதப்படுவார்கள்.

18. இந்த வழக்கில், நாகரீகமற்ற காட்டுமிராண்டிகள் போல மேல்முறையீட்டாளர்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்கள் கருணைக்கு தகுதியுடையோர்கள் அல்ல. ஆகவே, இவற்றைக் கருத்தில்கொண்டு இந்த இரு மேல்முறையீடுகளும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

19. இந்த தீர்ப்பின் நகல், மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மூத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்/மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பதவிகளுக்குக் குறையாத அனைத்து அதிகாரிகளுக்கும், இதனை கண்டிப்பான முறையில் முறையில் அமல்படுத்த வேண்டும் என்ற அறிவுரையுடன், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள், உள்துறை செயலாளர்கள் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படவேண்டும். மேலும் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பரப்புரை செய்திட வேண்டி, அனைத்து பொது மற்றும் இதர உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கும் இதன் நகல் அனுப்பப்படும்.

தமிழாக்கம்: இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) & சபிதா

Pin It

       நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங் களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு நான் இரவு சுமார் 8.30 மணியளவில் போனேன். அந்த இடத்தை விட்டு மீண்டும் இரவு சுமார் 2.30 மணியளவில் திரும்பினோம். அங்கே சுமார் 5, 6 பிணங்கள் கிடந்தன. மூக்கன் என்பவருடைய பிரேத விசாரணை எனக்கு தெரிய நடந்தது. அந்த பிரேத விசாரணை செய்தது ஆய்வாளர் நாராயணசாமி ஆகும். உமச்சங்குளம் ஆய்வாளர் நாராயணசாமி டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணையை செய்தார். பிரேத விசாரணை அறிக்கையை பஞ்சாயத்தார்கள் முன்பாக மேற்படி ஆய்வாளர் நாராயணசாமி சொல்லச் சொல்ல காவலர் எழுதினார். டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணை செய்தார். எந்தெந்த இடத்தில் பிரேதங்கள் கிடந்தனவோ, அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை நடந்தது. மூக்கன் பிரேதம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் 5 பேர் இருந்தார்கள். மூக்கனின் விசாரணை அறிக்கை 1.30 மணி முதல் சுமார் 2 மணி நேரம் நடந்திருக்கும். பிரேத விசாரணையின் போது 5 சாட்சிகளிடம் கையெழுத்து வாங்கினார்கள். பிணங்களை போலிஸ் வேனில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மூக்கனின் பிரேதத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை தனி அறிக்கை தயாரித்து, டி.எஸ்.பி.யிடம் நான் ஒப்படைத்தேன்.

நான் அவ்வாறு ஒப்படைத்து, சடலக் கூராய்வு முடிந்தது மாலை நேரமாகும். டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் மேலூர் காவல் நிலையத்தில் இருந்தார். அவரிடம் துணிகளை நான் ஒப்படைத்தேன். அதற்குப் பிறகு மேலூரில் நான் பந்தோபஸ்து பணியிலிருந்தேன். நான் துணிமணிகளை ஒப்படைத்தபோது, டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் என்னை விசாரித்தார். பிறகு அவர் என்னை விசாரிக்கவில்லை. அப்போது என்னுடைய எண்.795. நான் சொல்கின்ற நிலையிலும், இடத்திலும், நேரத்திலும், விதத்திலும் பிரேத விசாரணை நடைபெறவில்லையென்றும் பிரேத விசாரணை அறிக்கை தயாரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.29 : பி. கடோர்கஜன் (முதல் நிலைக் காவலர், ஏழுமலை காவல் நிலையம்) ராஜாவின் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

நான் தற்போது ஏழுமலை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருக்கிறேன். இவ்வழக்கு சம்பவ காலத்தில் மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இவ்வழக்கின் சம்பவ இடத்திலிருந்து ராஜா என்பவருடைய பிரேதத்தை சடலக்கூராய்விற்காக வேண்டுகோளுடன் என்னிடம் ஒப்படைத்ததை, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தேன். சடலக் கூராய்வு முடிந்த பிறகு பிரேதத்திலிருந்து ஒரு சர்ட், ஒரு வேட்டி ஆகியவற்றை கைப்பற்றி டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். வேட்டி ச.பொ.22, சர்ட் சா.பொ.23 பிரேதத்தை உறவினர் வசம் ஒப்படைத்தேன்.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு சுமார் இரவு 8.30 மணியளவில் சென்றேன். அன்று பிரேத விசாரணை முடியும் வரை நான் இருந்தேன். ராஜா பிரேதத்தின் மீது பிரேத விசாரணையை டி.எஸ்.பி. செய்தார். அந்த பிரேத விசாணை அறிக்கையை ரைட்டர் கைப்பட எழுதினார். பிரேத விசாரணையின்போது பஞ்சாயத்தார்களும் இருந்தார்கள். பஞ்சாயத்தார்களை மட்டும் விசாரித்தார்கள். பிரேதங்கள் கிடந்த அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை செய்யப்பட்டது. ராஜாவின் பிரேதத்தின் மீது பிரேத விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பிரேத விசாரணை அறிக்கையை என்னிடம் ஒரு கவரில் போட்டு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்ததை நான் மருத்துவமனையில் டாக்டரிடம் கொடுத்தேன். அதை அவர்கள் பார்த்து சடலக்கூராய்வு செய்தார்கள். பிரேத விசாரணை முடிந்ததும் என்னை டி.எஸ்.பி. விசாரித்து எழுதிக் கொண்டார். ராஜா பிரேதத்தின் மீது நடந்த பிரேத விசாரணை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் தனி அறிக்கையுடன் டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். நான் சொல்கின்ற முறையிலும், நேரத்திலும் இடத்திலும், பிரேத விசாரணை நடக்கவில்லை என்றாலும், பிரேத விசாரணை அறிக்கை தயரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.30 : க. முருகன் (காவலர், மேலூர் காவல் நிலையம்) முருகேசன் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

30.6.97 ஆம் தேதி மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இந்த வழக்கில் சம்பவ இடத்திலிருந்த இறந்து போன முருகேசனின் தலை மற்றும் முண்டம் ஆகியவற்றை சடலக்கூரõய்விற்காக என்னிடம் ஒப்படைத்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்த வேண்டுகோளுடன் ஒப்படைத்தேன். பிரேத மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தேன். பிரேதத்திலிருந்து வெள்ளை நிற முழுக்கை சர்ட் ஒன்று, கிழிந்த சிவப்பு டவுசர் ஒன்று, மஞ்சள் நிற பனியன் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றினேன். டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். சா.பொ.24, முழுக்கை சர்ட், சா.பொ.25 டவுசர் சா.பொ.26 பணியன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனுடைய பிரேதத்தை சடலக் கூராய்வு செய்ய வேண்டி ஆய்வாளர் என்னிடம் கடிதம் கொடுத்தார் என்று நான் பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல.

2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனின் பாடியையும், முண்டத்தையும் நான் எடுத்துச் சென்றேன். 30.6.97 தேதியன்று 7 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கண்மேடு என்ற ஊரில் நான் இருந்தேன். 30.6.97 ஆம் தேதியன்று பிணம் கிடந்த இடத்திற்கு எத்தனை மணிக்கு நான் புறப்பட்டேன் என்பது எனக்கு தெரியாது. பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனேன். அப்போது எங்கள் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் எங்களுடன் வந்தார்.

நானும் மற்ற அதிகாரிகளும் போலிஸ் லாரியில் போனோம். பிணம் எடுத்துக்கொண்டு சென்றபோது, திருமங்கலம் டி.எஸ்.பி.யும் மற்றும் சில காவலர்களும் உடன் வந்தார்கள். 1.7.97 ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்தில் நான் ஆஜர் ஆனேன். டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் நான் ஆஜர் ஆனேன். 1.7.97 ஆம் தேதி இரவு டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் பிணத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை நான் ஆஜர் செய்தேன். துணிகளைக் கைப்பற்றி ஒப்படைத்ததற்கு நான் தனி அறிக்கை எழுதி, அத்துடன் துணிகளை துணைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன். பிணத்தை ஒப்படைத்த நேரத்தை தவிர மற்ற எந்த விவரத்தையும் நேரம் குறித்து என்னால் சொல்ல முடியாது. 2.7.97 ஆம் தேதி துணை கண்காணிப்பாளர் என்னை விசாரிக்கவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. நான் பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனதாகவும் பிணத்தை கொண்டு போய் மருத்துவரிடம் ஒப்படைத்ததும் பொய் என்று சொன்னால் அது சரியல்ல.  

       நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங்களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங் களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த சில இதழ்களின் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு நான் இரவு சுமார் 8.30 மணியளவில் போனேன். அந்த இடத்தை விட்டு மீண்டும் இரவு சுமார் 2.30 மணியளவில் திரும்பினோம். அங்கே சுமார் 5, 6 பிணங்கள் கிடந்தன. மூக்கன் என்பவருடைய பிரேத விசாரணை எனக்கு தெரிய நடந்தது. அந்த பிரேத விசாரணை செய்தது ஆய்வாளர் நாராயணசாமி ஆகும். உமச்சங்குளம் ஆய்வாளர் நாராயணசாமி டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணையை செய்தார். பிரேத விசாரணை அறிக்கையை பஞ்சாயத்தார்கள் முன்பாக மேற்படி ஆய்வாளர் நாராயணசாமி சொல்லச் சொல்ல காவலர் எழுதினார். டி.எஸ்.பி. மேற்பார்வையில் பிரேத விசாரணை செய்தார். எந்தெந்த இடத்தில் பிரேதங்கள் கிடந்தனவோ, அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை நடந்தது. மூக்கன் பிரேதம் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் 5 பேர் இருந்தார்கள். மூக்கனின் விசாரணை அறிக்கை 1.30 மணி முதல் சுமார் 2 மணி நேரம் நடந்திருக்கும். பிரேத விசாரணையின் போது 5 சாட்சிகளிடம் கையெழுத்து வாங்கினார்கள். பிணங்களை போலிஸ் வேனில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். மூக்கனின் பிரேதத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை தனி அறிக்கை தயாரித்து, டி.எஸ்.பி.யிடம் நான் ஒப்படைத்தேன்.

நான் அவ்வாறு ஒப்படைத்து, சடலக் கூராய்வு முடிந்தது மாலை நேரமாகும். டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் மேலூர் காவல் நிலையத்தில் இருந்தார். அவரிடம் துணிகளை நான் ஒப்படைத்தேன். அதற்குப் பிறகு மேலூரில் நான் பந்தோபஸ்து பணியிலிருந்தேன். நான் துணிமணிகளை ஒப்படைத்தபோது, டி.சி.பி. துணைக் கண்காணிப்பாளர் என்னை விசாரித்தார். பிறகு அவர் என்னை விசாரிக்கவில்லை. அப்போது என்னுடைய எண்.795. நான் சொல்கின்ற நிலையிலும், இடத்திலும், நேரத்திலும், விதத்திலும் பிரேத விசாரணை நடைபெறவில்லையென்றும் பிரேத விசாரணை அறிக்கை தயாரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.29 : பி. கடோர்கஜன் (முதல் நிலைக் காவலர், ஏழுமலை காவல் நிலையம்) ராஜாவின் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

நான் தற்போது ஏழுமலை காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக இருக்கிறேன். இவ்வழக்கு சம்பவ காலத்தில் மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இவ்வழக்கின் சம்பவ இடத்திலிருந்து ராஜா என்பவருடைய பிரேதத்தை சடலக்கூராய்விற்காக வேண்டுகோளுடன் என்னிடம் ஒப்படைத்ததை, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்தேன். சடலக் கூராய்வு முடிந்த பிறகு பிரேதத்திலிருந்து ஒரு சர்ட், ஒரு வேட்டி ஆகியவற்றை கைப்பற்றி டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். வேட்டி ச.பொ.22, சர்ட் சா.பொ.23 பிரேதத்தை உறவினர் வசம் ஒப்படைத்தேன்.

17.5.2001 – 2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

பிரேதங்கள் கிடந்த இடத்திற்கு சுமார் இரவு 8.30 மணியளவில் சென்றேன். அன்று பிரேத விசாரணை முடியும் வரை நான் இருந்தேன். ராஜா பிரேதத்தின் மீது பிரேத விசாரணையை டி.எஸ்.பி. செய்தார். அந்த பிரேத விசாணை அறிக்கையை ரைட்டர் கைப்பட எழுதினார். பிரேத விசாரணையின்போது பஞ்சாயத்தார்களும் இருந்தார்கள். பஞ்சாயத்தார்களை மட்டும் விசாரித்தார்கள். பிரேதங்கள் கிடந்த அந்த அந்த இடத்தில் பிரேத விசாரணை செய்யப்பட்டது. ராஜாவின் பிரேதத்தின் மீது பிரேத விசாரணை சுமார் ஒரு மணி நேரம் நடந்தது. பிரேத விசாரணை அறிக்கையை என்னிடம் ஒரு கவரில் போட்டு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்ததை நான் மருத்துவமனையில் டாக்டரிடம் கொடுத்தேன். அதை அவர்கள் பார்த்து சடலக்கூராய்வு செய்தார்கள். பிரேத விசாரணை முடிந்ததும் என்னை டி.எஸ்.பி. விசாரித்து எழுதிக் கொண்டார். ராஜா பிரேதத்தின் மீது நடந்த பிரேத விசாரணை சம்பந்தப்பட்ட பஞ்சாயத்தார்கள் தனி அறிக்கையுடன் டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். நான் சொல்கின்ற முறையிலும், நேரத்திலும் இடத்திலும், பிரேத விசாரணை நடக்கவில்லை என்றாலும், பிரேத விசாரணை அறிக்கை தயரிக்கப்படவில்லையென்றும் நான் பொய் சாட்சி சொல்கிறேன் என்றால் சரியல்ல.

அ.சா.30 : க. முருகன் (காவலர், மேலூர் காவல் நிலையம்) முருகேசன் உடலை கூராய்வு செய்ய அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தது பற்றி கூறும் சாட்சி முதல் விசாரணை :

30.6.97 ஆம் தேதி மேலூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்தேன். இந்த வழக்கில் சம்பவ இடத்திலிருந்த இறந்து போன முருகேசனின் தலை மற்றும் முண்டம் ஆகியவற்றை சடலக்கூரõய்விற்காக என்னிடம் ஒப்படைத்தனர். மதுரை அரசு மருத்துவமனைக்கு டி.எஸ்.பி. என்னிடம் கொடுத்த வேண்டுகோளுடன் ஒப்படைத்தேன். பிரேத மருத்துவப் பரிசோதனை முடிந்த பிறகு பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தேன். பிரேதத்திலிருந்து வெள்ளை நிற முழுக்கை சர்ட் ஒன்று, கிழிந்த சிவப்பு டவுசர் ஒன்று, மஞ்சள் நிற பனியன் ஒன்று ஆகியவற்றை கைப்பற்றினேன். டி.எஸ்.பி.யிடம் ஒப்படைத்தேன். சா.பொ.24, முழுக்கை சர்ட், சா.பொ.25 டவுசர் சா.பொ.26 பணியன்.

1, 4, 5, 6, 10, 19 மற்றும் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனுடைய பிரேதத்தை சடலக் கூராய்வு செய்ய வேண்டி ஆய்வாளர் என்னிடம் கடிதம் கொடுத்தார் என்று நான் பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல.

2, 3, 8, 11, 16, 18, 20 முதல் 23 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

முருகேசனின் பாடியையும், முண்டத்தையும் நான் எடுத்துச் சென்றேன். 30.6.97 தேதியன்று 7 கி.மீட்டர் தூரத்தில் உள்ள கண்மேடு என்ற ஊரில் நான் இருந்தேன். 30.6.97 ஆம் தேதியன்று பிணம் கிடந்த இடத்திற்கு எத்தனை மணிக்கு நான் புறப்பட்டேன் என்பது எனக்கு தெரியாது. பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனேன். அப்போது எங்கள் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் எங்களுடன் வந்தார்.

நானும் மற்ற அதிகாரிகளும் போலிஸ் லாரியில் போனோம். பிணம் எடுத்துக்கொண்டு சென்றபோது, திருமங்கலம் டி.எஸ்.பி.யும் மற்றும் சில காவலர்களும் உடன் வந்தார்கள். 1.7.97 ஆம் தேதி மீண்டும் காவல் நிலையத்தில் நான் ஆஜர் ஆனேன். டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் நான் ஆஜர் ஆனேன். 1.7.97 ஆம் தேதி இரவு டி.சி.பி. டி.எஸ்.பி.இடம் பிணத்திலிருந்து கைப்பற்றிய துணிகளை நான் ஆஜர் செய்தேன். துணிகளைக் கைப்பற்றி ஒப்படைத்ததற்கு நான் தனி அறிக்கை எழுதி, அத்துடன் துணிகளை துணைக் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தேன். பிணத்தை ஒப்படைத்த நேரத்தை தவிர மற்ற எந்த விவரத்தையும் நேரம் குறித்து என்னால் சொல்ல முடியாது. 2.7.97 ஆம் தேதி துணை கண்காணிப்பாளர் என்னை விசாரிக்கவில்லை என்று சொன்னால் அது சரியல்ல. நான் பிணம் கிடந்த இடத்திற்கு அதிகாரிகளுடன் போனதாகவும் பிணத்தை கொண்டு போய் மருத்துவரிடம் ஒப்படைத்ததும் பொய் என்று சொன்னால் அது சரியல்ல.

(தலித் முரசு ஜனவரி 2011 இதழில் வெளியானது)

Pin It

 

நீதிமன்ற விசாரணை குறித்த அம்சங்களைப் புரிந்து கொள்ள ஏதுவாக, ஒரு வழக்கில் பல்வேறு வகைப்பட்ட சாட்சிகளின், சாட்சியங் களின் பதிவுகளை ஓர் எடுத்துக்காட்டாக ஆய்வு செய்யும்போதுதான் – அவற்றின் முழுமையான பரிமாணங்களை உணர முடியும். இந்த அடிப்படையில் மேலவளவு வழக்கின் சாட்சிகளின், சாட்சியங்கள் கடந்த ஓராண்டாக வந்ததன் தொடர்ச்சியாக, இந்த இதழிலும் வெளியிடப்படுகிறது.

அ.சா.31 : கருப்பன் (குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றுக்கான சாட்சி) (இவர் பிறழ்சாட்சியாகக் கருதப்பட்டு பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்) முதல் விசாரணை :

நான் கீழவளவு கிராமத்தில் வசிக்கிறேன். எனக்கு விவசாயத் தொழில். இந்த வழக்கு சம்பந்தமாக எனக்கு எதுவும் தெரியாது. எதுவும் நான் பார்க்கவில்லை. போலிசார் என்னை விசாரிக்கவில்லை. (இத்தருணத்தில் இந்த சாட்சியை பிறழ்சாட்சியாகக் கருதி குறுக்கு விசாரணை செய்ய அரசு வழக்குரைஞர் அனுமதி கோர அனுமதி வழங்கப்பட்டது.)

அரசுத் தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை :

12.7.94 காலை 10.30 மணியளவில் கீழையூருக்கு வட மேற்கே உள்ள சுந்தரி அம்மன் கோயில் பக்கம் நானும் வாழமலை என்பவரும் இருந்தபோது ஆண்டிச்சாமி, 7ஆவது எதிரி, ஆண்டிக்காளை, பாஸ்கரன், அசோகன் ஆகியோரை மதுரை டி.எஸ்.பி. கைது செய்ததாகவும், அப்போது அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அதில் சம்பவத்திற்கு பயன்படுத்திய அறுவாளை பஞ்சபாண்டவர் மலை அடிவாரம் பக்கமுள்ள ஆலமரத்தடியில் மறைத்து வைத்திருப்பதாகவும் அதை எடுத்து தருவதாக சொன்னதாகவும், போலிசார் விசாரணையில் கூறியுள்ளார் என்றால் சரியல்ல.

அ.சா.32 : வாழமலை (குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றுக்கான சாட்சி)

(இவர் பிறழ்சாட்சியாகக் கருதப்பட்டு, பின்னர் அரசுத் தரப்பு வழக்குரைஞரால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டார்)

முதல் விசாரணை :

என் சொந்த ஊர் கீழவளவு. இந்த வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. போலிசார் என்னை விசாரிக்கவில்லை. (இத்தருணத்தில் இந்த சாட்சியை பிறழ்சாட்சியாகக் கருதி குறுக்கு விசாரணை செய்ய, அரசு வழக்குரைஞர் அனுமதி கோர அனுமதி வழங்கப்பட்டது.)

அரசு தரப்பு வழக்குரைஞர் குறுக்கு விசாரணை : அனுமதியின் பேரில்

12.7.94ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கீழையூர் வடமேற்கே உள்ள சுந்தரி அம்மன் கோவில் பக்கம் நானும் கருப்பனும் இருந்தபோது மேலவளவை சேர்ந்த எதிரிகள் ஆண்டிச்சாமி, பாஸ்கரன், அசோகன் ஆகியோரை மதுரை மாவட்ட குற்றப்பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி. கைது செய்ததாகவும், அப்போது மேற்கண்ட 3 பேர்களும் தனித்தனியாக ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததாகவும், அவர்கள் இவ்வழக்கு சம்பவத்தின் போது உபயோகப்படுத்திய ஆயுதங்களை கூட்டிக்கொண்டு போனால் எடுத்து தருவதாக சொன்னதாகவும் அந்த வாக்குமூலங்களில் தானும் கருப்பனும் சாட்சி கையெழுத்துகள் போட்டதாகவும், பிற்பாடு அந்த ஒப்புதல் வாக்குமூலங்களின் படி, அவர்கள் டி.எஸ்.பியை அழைத்து சென்று கீழவளவு பக்கமுள்ள பஞ்சபாண்டவர் மலை அடிவாரத்தில் ஆலமரத்துக்கு பக்கத்தில் உள்ள பாறைக்குள் இருந்த கத்தி ஆலமரத்திற்கு புதருக்குள் இருந்த பாறை இடுக்கிலிருந்த அருவாள் ஆகியவற்றை எடுத்து ஆஜர் செய்ததாகவும், அவைகளை மேற்படி டி.எஸ்.பி. அத்தாட்சி தயாரித்து கைப்பற்றிக் கொண்டதாகவும், அந்த அத்தாட்சிகளில் தானும் கருப்பனும் சாட்சி கையெழுத்தும் போட்டு உள்ளதாகவும் போலிசார் விசாரணையில் நான் கூறியுள்ளேன் என்றால் சரியல்ல.

அ.சா.35 : பி. ஆண்டி (குற்றவாளிகளின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றுதல் மகஜர் ஆகியவற்றுக்கான சாட்சி) முதல் விசாரணை :

நான், தெற்கு தெருவில் கக்கன் காலனியில் குடியிருக்கிறேன். எங்கள் ஊர் காளமேக பெருமாள் எனக்கு தெரியும். சுமார் 3 வருடங்களுக்கு முன்பு நானும் காளமேக பெருமாளும் சுக்காம்பட்டியில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தோம். அப்போது டி.எஸ்.பி. கூப்பிட்டதின் பேரில் மேலூர் காவல் நிலையம் போனோம். காவல் நிலையத்தில் எதிரிகள் கணேசன், ஜெயராமன், கதிர்வேல் ஆகியோர் இருந்தார்கள். அவர்களை டி.எஸ்.பி. விசாரித்தார்கள். அவர்கள் சொன்னதை டி.எஸ்.பி. எழுதிக் கொண்டார். அதில் நான் காளமேக பெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். எதிரி கதிர்வேல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதி அச.சா.ஆ.66..... எதிரி கணேசன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில் அனுமதிக்கப்பட்ட பகுதி அ.சா.ஆ.68. அதன் பிறகு மலம்பட்டி பாலத்திற்கு அருகில் உள்ள இடத்தில் கதிர்வேல் எடுத்துக் கொடுத்த கத்தியை டி.எஸ்.பி. கைப்பற்றி மகஜர் தயாரித்தார். அந்த மகஜர் அ.சா.ஆ.69. அதில் நானும் காளமேகபெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். எதிரி ஜெயராமன் ஒரு கத்தியை எடுத்து டி.எஸ்.பி.யிடம் ஆஜர் செய்தார். அதையும் மகஜர் தயாரித்து டி.எஸ்.பி. கைப்பற்றினார். அந்த மகஜ ர் அ.சா.ஆ.70. அதில் நானும் காளமேகபெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். எதிரி கண்ணனும் ஒரு அரிவாளை எடுத்து டி.எஸ்.பி.யிடம் ஆஜர் செய்தார். அதையும் மகஜர் தயாரித்து டி.எஸ்.பி. கைப்பற்றினார். அந்த மகசர் அ.சா.ஆ.71. அதில் நானும் காளமேகபெருமாளும் சாட்சி கையொப்பம் செய்தோம். டி.எஸ்.பி. என்னை இது சம்பந்தமாக விசாரித்தார்.

1 முதல் 40 ஆவது எதிரிகளின் தரப்பில் குறுக்கு விசாரணை :

 என்னை டி.எஸ்.பி. விசாரித்த போது மதியம் 2.00 மணி இருக்கும். அப்போது தான் மேற்படி கையெழுத்துகளை நான் போட்டேன். மேற்படி எதிரிகள் சொல்லச் சொல்ல டி.எஸ்.பி. கைப்பட எழுதிக் கொண்டார். ஒப்புதல் வாக்குமூலம் எழுதிய பிறகு டி.எஸ்.பி. கேட்டுக் கொண்டதன் பேரில் கையெழுத்து போட்டோம். பிற்பாடு டி.எஸ்.பி. 3 மகஜர்களையும் மேலூர் காவல் நிலையத்தில் எழுதினார். அந்த மகஜர்களிலும் நான் கையெழுத்து போட்டேன். மொத்தம் 6 கையெழுத்துகள் மேலூர் காவல் நிலையத்தில் போட்டேன். அதற்கு முன்பும் பின்பும் எதிரிகள் கண்ணன், ஜெயராமன், கதிர்வேல் ஆகியோரைப் பார்க்கவில்லை. தற்போதும் அவர்களை என்னால் அடையாளம் காட்ட முடியாது. இறந்தவர்களை எனக்கு உறவினர்கள் என்பதால் போலிசார் கேட்டுக் கொண்டதன் பேரில் கையெழுத்து போட்டதாக பொய் சொல்கிறேன் என்றால் சரியல்ல.

(தலித் முரசு ஜூன் 2011 இதழில் வெளியானது)

Pin It

 

குடும்ப கௌரவம் என்ற பெயரில் இந்தியாவில் ஆண்டுக்கு 1,000 பேர் கொலை செய்யப்படுவதாக அண்மையில் வெளியான புள்ளிவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

       பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆண்டுக்கு 900 பேரும், இதர மாநிலங்களில் 100 முதல் 300 பேரும் கொலை செய்யப்படுவதாக புள்ளி விவரம் கூறுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணையில் மத்திய அரசு மற்றும் எட்டு மாநில அரசுகள் விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

       இதனிடையே, கௌரவக் கொலைகளைத் தடுக்க குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் 1872, சிறப்புத் திருமணங்கள் சட்டம் 1954 ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. சட்ட நிபுணர்கள் குழுவின் ஆலோசனையுடன் தயாரிக்கப்பட்ட வரைவு சட்ட திருத்தங்கள் அமைச்சர்கள் குழுவின் பரிசீலனையில் உள்ளன.

       தில்லி வட்டாரங்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, பிரிவு 300, 354-ல் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

       பிரிவு 300-ல் குடும்ப கௌரவக் கொலையை 5-வது பகுதியாகக் சேர்க்கப்பட உள்ளது. கௌரவக் கொலைகளில் ஈடுபடும் நபர் அல்லது நபர்கள், குடும்பம், ஜாதிவாரி அமைப்பு, சமுதாய அமைப்பு, ஜாதி பஞ்சாயத்து என யாராக இருந்தாலும் இந்தச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். குடும்பத்தினரின் விருப்பத்துக்கு எதிராக ஜாதி, சமுதாயம் மாறி திருமணம் செய்துக் கொள்பவர்களை கொலை செய்வது, குடும்பம், சமுதாயம், பஞ்சாயத்து அமைப்புகள் ஏற்றுக் கொள்ளாத திருமணத்துக்காக ஒருவரைக் கொலை செய்வது ஆகியவையும் சட்டப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.

       புதிய சட்டத் திருத்தத்தின்படி, கௌரவக் கொலைகளில் குற்றம் சாட்டப்படும் ஜாதிவாரி, சமுதாய அமைப்புகளில் உறுப்பினர்களாக உள்ள அனைவரும் கொலை வழக்கில் எதிரிகளாகச் சேர்க்கப்படுவர்.

       மேலும், சாட்சி சட்டம் பிரிவு 105-ல் புதிய பகுதி சேர்க்கப்பட உள்ளது. இதே போல், சிறப்புத் திருமண சட்டத்தில் நீதிமன்ற நோட்டீஸ்க்கு எதிரிகளுக்கு அளிக்கப்படும் 30 நாள்கள் அவகாசத்தை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

       இந்திய தண்டனைச் சட்டத்தில் கௌரவக் கொலையை சேர்ப்பதில் மத்திய அமைச்சர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகக் கூறப்படுகிறது.

       பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கடந்த 8-ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கௌரவக் கொலைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வெவ்வேறு விதமான கருத்துகள் தெரிவிக்கப்பட்டதால் சட்ட திருத்தம் மேற்கொள்வது தொடர்பாக மூத்த அமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

(மாற்று மருத்துவம் அக்டோபர் 2010 இதழில் வெளியானது)

Pin It