ஒரு புதிய நூல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனக்குப் படிக்கக் கிடைத்த நூல்களில் “விளிம்புநிலை மார்க்ஸ்: தேசியம், இனம், மேற்கல்லாத சமூகங்கள் குறித்து” என்ற நூல் (Kevin Societies, The University of Chicago Press, 2010) மிக அற்புதமான நூல் என்ற வரிசையில் இடம்பெறும் நூலாகும். இந்நூலின் ஆசிரியரான கெவின் ஆன்றர்சன், கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் சமூகவியல் மற்றும் அரசியல் விஞ்ஞானத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஏற்கனவே இவர் எழுதிய நூல்களில் “லெனின், ஹெகல் மற்றும் மேற்கத்திய மார்க்சியம்” என்ற நூல் முக்கியமானது. இது தவிர, ஜானே அஃபாரி என்ற பெண்மணியாருடன் இணைந்து ஈரானியப் புரட்சி பற்றியும் இஸ்லாமியச் சூழலில் பெண்ணியம் குறித்தும் தலா ஒரு நூல் எழுதியுள்ளார்.

marx_at_the_marginஇவை எல்லாவற்றையும் விட முக்கியமான தகவல் என்னவென்றால், 114 பகுதிகளைக் கொண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ் முழுத் தொகுப்பு நூல்களை வெளிக்கொணரும் ஒரு பிரும்மாண்டமான ஆய்வுத் திட்டத்தில் (Marx-Engels Gesamtausgabe - MEGA) இவர் பணிபுரிகிறார். 50 பகுதிகளைக் கொண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ் தொகுப்பு நூல்கள் 1980களில் வெளிவந்தன. அது மார்க்ஸ் ஏங்கெல்சின் முழுத் தொகுப்பாக அப்போது சொல்லப்பட்டது. இருப்பினும், இன்னும் ஏராளமாக மார்க்ஸ் ஏங்கெல்சின் கையெழுத்துப் பிரதிகள் வெளியிடப்படாமல் உள்ளன என்பதால், அவை தொகுக்கப்பட்டு, இப்போது இப்புது வெளியீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் தான் கெவின் ஆன்றர்சன் பணிபுரிந்து வருகிறார். தனது பதிப்புப் பணிகளுக்கிடையில், பதிப்பு வேலையின் ஊடாகக் கிடைத்த வாசிப்பு அனுபவங்களைக் கொண்டு, கீழை நாடுகள் பற்றி மார்க்ஸ், ஏங்கெல்ஸ் எழுதியுள்ள எழுத்துக்களை அறிமுகப்படுத்தி இந் நூலைத் தயார் செய்துள்ளார். தெளிவான ஆங்கில மொழியில் அழகாக எழுதப்பட்டுள்ள நூல் இது. 319 பக்கங்களைக் கொண்ட நூல்.

கீழை நாடுகள் பற்றிய நூல் இது என்று மேலே குறிப்பிட்டேன். இருப்பினும், விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களைப் பற்றிய மார்க்சின் (ஏங்கெல்சின்) எழுத்துக்கள் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. எப்படி? இந்தியா, இந்தோனேசியா, அல்ஜீரியா, சீனா, ரஷ்யா, போலந்து, அயர்லாந்து ஆகிய நாடு களின் சமூக அமைப்புகள், அந்நாடுகளில் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எழுந்த காலனிய எதிர்ப்பு இயக்கங்கள், தேசிய, இன விடுதலை எழுச்சிகள் ஆகியவற்றைப்பற்றிய மார்க்ஸ் - ஏங்கெல்சின் எழுத்துக்கள் இந்நூலில் பேசப் படுகின்றன. 1860களில் தொடங்கிய, அமெரிக்க உள்நாட்டுப் போர் என அழைக்கப்படும் . கறுப்பர் போராட்டங்கள் பற்றிய மார்க்சின் மதிப்பீடுகளும் இந்நூலில் பேசப்படுகின்றன. இவ்வாறாக, மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டிருந்த முதலாளிய சமூகம் பற்றிய மார்க்சின் முதன்மை யான அரசியல் பொருளாதார எழுத்துக்களுக்கு வெளியே, ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்க நாட்டிலும் வேர் கொண்டிருந்த காலனிய எதிர்ப்பு, தேசிய எழுச்சிகள், கறுப்பர்கள் போராட்டம் ஆகியவை குறித்த மார்க்சின் எழுத்துக்கள் இந் நூலில் கவனம் பெறுகின்றன. இப்பிரச்சினைகள் தாம் இந்நூலுக்கு விளிம்புநிலை மார்க்சியம் என்ற பெயரை வழங்குகின்றன. அதாவது அரசியல் பொருளா தாரத்திற்கான விமர்சன முன்னுரை, மூலதனம் போன்ற நூல்களின் வழியாக அறியப்பட்ட மார்க்சி யத்திலிருந்து வேறுபட்ட ஆசிய ஆப்பிரிக்க லத்தின் அமெரிக்க நாடுகளின் சூழல்களுக்குப் பொருந்தக் கூடிய சில கருத்துருக்கள் மார்க்சிடம் அவரது காலத்திலேயே தோன்றியிருக்கின்றன என்பதை முன்வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்திய சமூகத்தின் தனித்த பண்புகள், வர்க்க அரசியலும் அடையாள அரசியலும், பொருளாதார அரசியலும், பண்பாட்டு அரசியலும், வர்க்கமும் சாதியும், இவற்றை ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளடக்குவதா, தொகுத் திணைப்பதா? எதற்கு முன்னுரிமை கொடுப்பது? என்றெல்லாம் விவாதங்கள் நடத்திவரும் நம் போன் றோருக்கு இந்நூலும் இந்நூல் சுட்டிக்காட்டும் மார்க்சின் எழுத்துக்களும் மிக முக்கியமானவை. இந்நூலைப் படிக்கும்போது, மார்க்ஸ் என்ற புரட்சிக் காரரின் மேதைமை, மார்க்சியத்தின் செழுமை ஆகியவை குறித்த மலைப்பு மீண்டும் ஒருமுறை மேலிடுகிறது. உலகமயமாக்கம், பின்னைக் காலனியம் ஆகிய சூழல்களில், உலக முதலாளியத்தின் தலை விதி இனி ஆசிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் தாம் முடிவாகும் என்ற கருதுகோள் கெவின் ஆன்றர்சனின் நூலில் இடம் பெற்றிருப்ப தாகத் தோன்றுகிறது.

நூலின் இரண்டு பிரச்சினைகள்

மிகப் பெரிய இரண்டு பிரச்சினைகளை இந் நூல் விவாதிப்பதாக கெவின் ஆன்றர்சன் நூலின் முன்னுரையில் தெரிவிக்கிறார். அவை:

1. இந்தியா, ரஷ்யா, சீனா, அல்ஜீரியா, இந்தோ னேசியா ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவிலிருந்து வேறுபட்ட சமூக அமைப்புகளைக் கொண்டிருக் கின்றன என்பதை மார்க்ஸ் விரைவில் புரிந்து கொண்டார். இருப்பினும், அந்நாடுகளின் பழமைத் தன்மை கொண்ட சமூகங்கள் முதலாளியம், காலனியம் ஆகியவற்றின் வழியாக உலகச் சந்தையினுள் உள்ளிழுக்கப்பட்டு அடிப்படையான மாற்றங் களுக்கு உள்ளாகும் என்று மார்க்ஸ் முதலில் கருதினார். எனவே காலனிய முதலாளியத்தை அவர் வரலாற்றின் கருவி என்று கூறினார். இதன் படி, மேற்கு ஐரோப்பிய முதலாளியத்தின் முரட்டுத் தலையீடுகளின்றி இந்நாடுகளின் நவீனமயமாக்கம் அமைய முடியாது என மார்க்ஸ் கருதினார். ஆனால் காலப்போக்கில் மார்க்சின் இக்கருத்து நிலையில் மாற்றம் ஏற்பட்டது என்பது இந்நூலின் வாதம். மேலே குறிப்பிட்ட நாடுகளின் தனித்தன்மைகளை மார்க்ஸ் ஆழமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கிய போது, மேற்கு ஐரோப்பாவைச் சாராத தனித்த வளர்ச்சிப் பாதை இந்நாடுகளில் சாத்தியம் என மார்க்ஸ் புரிந்துகொண்டார். எனவே, ஐரோப்பாவை மையமாகக் கொண்ட மார்க்சின் வரலாற்றுக் கோட்பாடு ஒருபுறமிருக்க, மேற்கல்லாத நாடு களுக்கான மற்றொரு வரலாற்றுப் பாதை அவரில் உருவாகியது.

2. மேற்கல்லாத நாடுகளின் வரலாற்றுப் பாதையில் காலனிய எதிர்ப்பு, தேசியம், இன உணர்வு சார்ந்த இயக்கங்களுக்கும், நிறவெறி எதிர்ப்பியக்கங் களுக்கும் முக்கிய பாத்திரம் இருக்குமென மார்க்ஸ் கருதினார். போலந்து, அயர்லாந்து, அமெரிக்காவில் கறுப்பினப் பிரச்சினை ஆகியவை பற்றிய மார்க்சின் கவனம் கூர்மையடைந்தபோது, அவர் ஒடுக்கப் பட்ட தேசியங்கள், இனங்கள் ஆகியோரின் சனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னிலைப் படுத்தினார். வளர்ச்சியடைந்த முதலாளிய நாடு களின் தொழிலாளர் வர்க்கம் தேசிய, இன, நிற வெறி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங் களை ஆதரிக்கத் தவறியதை மார்க்ஸ் கண்டிக் கிறார். இப்பிரச்சினைகளின் பிரத்தியேகப் பண்பு களைப் புரிந்து தொழிலாளர் வர்க்க இயக்கங்கள் அவற்றை எதிர்கொள்ளத் தவறினால், புரட்சிகள் வெற்றியடைவதில் சுணக்கம் ஏற்படும் என்று மார்க்ஸ் கருதினார்.

நூலில் பேசப்படும் இந்த இரண்டு பிரச்சினை களும் மார்க்சியம் குறித்த புதிய வெளிச்சங்களைப் பாய்ச்சுகின்றன என்று கெவின் ஆன்றர்சன் கூறு கிறார். உலகின் எல்லா நாடுகளுக்கும் எல்லாச் சூழல் களுக்கும் பொருந்தக்கூடிய ஒற்றையான முன்மாதிரி ஒன்றை மார்க்ஸ் முன்வைத்தார் என்ற கருத்தை இந்நூல் மறுக்கிறது. மற்றொருபுறம், உலக மூல தனத்திற்கு எதிரான போராட்டங்களில் பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளிகளைப் பற்றிய தேடல் மார்க்சிடம் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது என்று இந்நூல் வாதிடுகிறது. முதலாளியம், காலனியம் ஆகியவற்றின் ஊடுருவலால் ரஷ்யா, இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பழஞ்சமூக அமைப்புகள் சிதைவுறும்போது, அச்சிதைவுகளின் ஊடாகப் புரட்சிகர அரசியலுக்கான புதிய வாசல்கள் திறந்துகொள்ளும் என்பதை மார்க்சால் கண்டறிய முடிந்தது. ரஷ்யா, இந்தியா, அயர்லாந்து போன்ற நாடுகளில் கிராமப்புற விவசாயிகளின் கூட்டு அடையாள வடிவங்கள் முதலாளிய எதிர்ப்பின் வேர்களாக முடியும் என்று மார்க்ஸ் கருதியிருக் கிறார். நீக்ரோ மக்களின் நிறவெறி எதிர்ப்பியக்கங் களும் உலக முதலாளியத்தை மிக அடிப்படையாக அச்சுறுத்தும் என மார்க்ஸ் கணக்கிட்டுள்ளார். இதுபோன்ற கருத்துக்களுக்காகவே இந்நூல் நமக்கு முக்கியப்படுகிறது. இந்நூலாசிரியர் முன்வைக்கும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில்கூட, இந்நூலின் கருத்துக்கள் நம் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. மார்க்சின் மூல நூல்களை மீண்டும் நம்மை வாசிக்கத் தூண்டு கின்றன.

1853-இல் இந்தியா குறித்து

1848லிருந்து மார்க்சின் எழுத்துக்களை கெவின் ஆன்றர்சன் பரிசீலனை செய்கிறார். இந்தியா, இந்தோனேசியா, சீனா ஆகிய நாடுகளைப் பற்றிய குறிப்பான கட்டுரைகள் எதுவும் மார்க்ஸ் இக்காலத்தில் எழுதவில்லை. ஆயின் “நாகரிகமடைந்த” மேற்கு ஐரோப்பிய முதலாளியச் சந்தை “நாகரிகமடையாத” பல உலக நாடுகளைத் தன்னை நோக்கி உள்ளிழுக்கிறது என்பது மார்க்சின் பொது நிலைப்பாடாக அக் காலத்தில் விளங்கியது. இங்கு மார்க்ஸ் பயன் படுத்தும் “நாகரிகமடைந்த / நாகரிகமடையாத” என்ற சொல்லாட்சிகள் ஹெகல் போன்ற சிந்தனை யாளர்களிடம் நிலவிய ஐரோப்பிய மையவாதத்தின் தொடர்ச்சி என எட்வர்ட் சையத் போன்றோர் மார்க்சை விமர்சித்துள்ளனர். முதலாளியம் உலகின் எல்லா நாடுகளையும் தனது உருவத்திலேயே படைக்க விரும்புகிறது. முதலாளியத்திற்கு முந்திய படிநிலையிலுள்ள சமூகங்களையெல்லாம் அது தன்னுள் வருமாறு வற்புறுத்துகிறது என்றெல்லாம் மார்க்ஸ் அக்காலத்தில் எழுதினார். இந்த அர்த்தத்தில் காலனியம் என்பது வரலாற்றின் ஒரு கருவி என்றுகூட மார்க்ஸ் கூறினார். உலக வரலாற்றின் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களுக்குச் சொந்தமான சமூக முரண்பாடுகளெல்லாம் கூட தொழிலாளி / முதலாளி என்ற ஒற்றை முரண்பாடாகத் துருவப் பட்டே சோசலிசம் நோக்கி நகரும் என்று மார்க்ஸ் அப்போது கருதினார்.

1849-இல் மார்க்ஸ் லண்டனில் குடியேறினார். 1883-இல் அவரது மறைவுக் காலம் வரை மார்க்ஸ் லண்டனில் தான் வாழ்ந்தார். மார்க்ஸ் அவரது வாழ்க்கை முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர் என்று தெரிதா குறிப்பிடுகிறார். மார்க்சின் லண்டன் வாழ்க்கை மிக வளர்ச்சியடைந்த ஒரு முதலாளிய நாட்டில் அவரது வாழ்க்கை என்றே இதுவரை புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இப்போது கூடுதலாக அது ஒரு புலம்பெயர் வாழ்க்கை என்றும், ஒரு காலனிய சாம்ராஜ்யத்தின் மையத்திலான வாழ்க்கை என்றும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. லண்டனில் வாழ்ந்த காலத்தில் தான் மார்க்ஸ் பிரிட்டிஷ் காலனிய சாம்ராஜ்யத்தில் உள்ளடங்கிய நாடுகளைப் பற்றி விரிவாக வாசிக்கத் தொடங்கினார். பிரிட்டிஷ் முதலாளியத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் காலனி நாடுகளின் பங்கு குறித்த ஆர்வம் என அதனைக் கூறலாம். எப்படியோ மேற்கல்லாத நாடுகளையும் சமூகங்களையும் பற்றிய புரிதல்களுக் கான வாய்ப்புகளை லண்டன் வாழ்க்கை அவருக்கு வழங்கியது. பிரிட்டிஷ் காலனிய (முதலாளிய) சாம் ராஜ்யத்தைப் பலவீனப்படுத்தும் அம்சங்களைக் கூடுதலாகத் தேடி அடைவதற்கான முயற்சிகளாக அப்புரிதல்கள் அமைந்தன என்று கூறலாம். மார்க்சைப் பொறுத்தமட்டில் அறிதல் என்பதே புரட்சிக்கான (கூடுதல்) வாய்ப்புகளை அறிதல் என்பதேயாகும். அறிதல் என்பதே சமூக மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் சமூக முரண்களை அறிதல், அங்கீகரித்தல் என்பதே மார்க்சியம்.

லண்டனில் இருக்கும்போது மார்க்ஸ் நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிகையின் நிருபராகப் பொறுப் பேற்றார். இப்பொறுப்பினை அவர் 1851லிருந்து 1862 வரை ஏற்றிருந்தார். அப்பத்திரிகை பிரிட்டிஷ் காலனி ஆட்சி பற்றியும் காலனி நாடுகள் தொடர்பான அரசியல் திருப்பங்கள் பற்றியும் எழுதுமாறு மார்க்சைக் கேட்டிருந்தது. கிட்டத்தட்ட வாரம் ஒரு கட்டுரை என்ற அளவில் மார்க்ஸ் ட்ரிப்யூனுக் காக எழுதினார். 50 பகுதிகளாக வெளிவந்துள்ள மார்க்சின் தொகுப்பில் 12 முதல் 17 வரையிலான நூல்களில் நியூயார்க் ட்ரிப்யூனில் மார்க்ஸ் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தொகுதியும் சுமார் 500 பக்கங்களுக்கு மேல் எனக் கொண்டால் சுமார் 3500 பக்கங்கள் வரை ட்ரிப்யூன் கட்டுரைகளாகும். இக்கட்டுரைகளில் பல ஐரோப்பிய நாடுகள் பற்றியவை என கழித்துக் கொண்டாலும் எஞ்சியவை இந்தியா, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகளைப் பற்றியவையாகும். இதே காலத்தில் மார்க்ஸ் லண்டன் நூலகத்தில் இரவும் பகலும் அடைந்து கிடந்து “மூலதனம்” நூலுக்கான ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதும் உண்மை. எனவே மார்க்சின் ட்ரிப்யூன் கட்டுரைகள் அவரது “மூலதனம்” நூலுக்கான தயாரிப்பிலிருந்து விலகி யவை என்றும் அவை அவரது மைய நீரோட்டத் திற்குள் வராதவை என்றும் பல ஆய்வாளர்களால் புறக்கணிக்கப்படுகின்றன. இக்கருத்தை இந்நூல் மறுதலிக்கிறது. மிகப் பிரத்தியட்சமான மார்க்சின் புரிதலில் மேற்கல்லாத சமூகங்கள் பற்றிய தேடல்கள் அடிப்படையான இடம்பெறுகின்றன என்று இந்நூல் வாதிடுகிறது. “மூலதனம்” நூலுக்கான கையெழுத்துப் பிரதிகளிலும் மூலதனம் நூலிலும் மேற்கல்லாத சமூகங்கள் பற்றிய அவரது கருத்துக்கள் முக்கிய இடம் வகிக்கின்றன என்பதை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.

ட்ரிப்யூன் கட்டுரைகளுக்காக மார்க்ஸ் ஏராளமாக வாசித்துள்ளார். இந்தியாவைப் பற்றி பிரான்கோ பெர்னியர், இந்தோனேசியாவைப் பற்றி தாமஸ் ஸ்டாம்ஃபோர்ட் ரஃப்பில்ஸ் ஆகியோரின் நூல் களை வாசித்தார். ஆம்ஸ்டர்டாமிலிருந்த சர்வதேச சமூக வரலாற்று நிறுவனத்தின் நூலகத்திலிருந்து பல நூல்களைப் பெற்று வாசித்துள்ளார். பிரிட்டிஷ் பார்லிமெண்டில் இந்தியா, பிற காலனி நாடுகள் பற்றி நடந்த விவாதங்களும் அவரது ஆர்வத்தைத் தூண்டியிருக்கின்றன. ட்ரிப்யூன் கட்டுரைகளை எழுதத் தொடங்கியபோது, மேற்கு ஐரோப்பாவின் புரட்சிகளுக்கு காலனிய நாடுகளின் பங்களிப்பு என்ற நோக்கிலேயே முதலில் மார்க்ஸ் யோசித் திருக்கிறார். ஆயின் இந்தியாவில் சிப்பாய்க் கலகம் (1857) எனப்பட்ட விடுதலை எழுச்சிகள், சீன விவசாயிகளின் தைப்பிங் கிளர்ச்சிகள் (1850-1864) ஆகியவை பற்றி மார்க்ஸ் அறிய ஆரம்பித்த போது, மேற்கல்லாத நாடுகளில் புரட்சி என்ற நோக்கி லிருந்தும் அவர் சிந்திக்கத் தொடங்கிவிட்டார். மேற்கல்லாத நாடுகளில் புரட்சி எனச் சிந்திக்கும் போது, அந்தச் சமூகங்களின் தனித்தன்மைகளைப் பிரத்தியேகமாகப் பயில வேண்டும் என்ற அவசியமும் அவருக்கு எழுந்தது. எனவே மார்க்சிடம் தொடர்ந்து இந்த ஆர்வம் அவரது இறுதிக்காலம் வரையில் இருந்து வந்தது என்பதே இந்நூலின் கருத்து நிலையாகும்.

1853-இல் மார்க்ஸ் எழுதிய ட்ரிப்யூன் கட்டுரை களில் “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி”, “கிழக் கிந்தியக் கம்பெனி: அதன் வரலாறும் விளைவு களும்”, “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர்கால விளைவுகள்” ஆகிய மூன்று கட்டுரைகள் முக்கியமானவை. ஹெகல் போன்றோர் இந்தியாவைப் பற்றி எழுதிய போது, இந்தியாவில் சமயச் சிந்தனை பற்றிய கவனமே அவர்களிடம் முனைப்பாக இருந்தது. மத இலக்கியங்கள் பற்றிய வாசிப்பே அவர்களை அதிகம் கவர்ந்தது. ஐரோப்பியத் தத்துவங்களும் கிறித்தவமும் ஹெகலின் பின்புலமாக இருந்ததால், இந்தியச் சமயச் சிந்தனைகள் அவருக்கு வளர்ச்சி யடையாததாகக் காட்சியளித்தது. ஆயின் மார்க்சின் துவக்கமே வேறானதாக இருந்தது. இந்தியாவின் கிராமப்புற சமூக அமைப்பிலிருந்து மார்க்ஸ் தொடங்குகிறார். கிராமப்புற சமூகத்தின் மூடிய பண்பு, தேக்கநிலை, சாதி அமைப்பு, இந்தியச் சமூகத்தில் தனி உடைமை வளர்ச்சியடையாத நிலை ஆகியவை மார்க்சால் சுட்டிக்காட்டப்படு கின்றன. அதுவரையில் நிலஉடைமையை அறியா திருந்த இந்தியர்களிடையில் கிழக்கிந்தியக் கம்பெனி ஜமீன்தாரி தனி உடைமை முறையை அறிமுகப் படுத்தியதை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

அரசர்களின் ஆதரவோடு நில உரிமை மற்றும் வரிவசூல் உரிமையை மட்டும் அனுபவித்து வந்த ஜமீன் தார்கள் திடீரென்று உடைமைதாரர்களாக மாற்றப் பட்ட போது, அதனால் கிராமப்புற அடித்தள மக்கள் கொடூரமாகச் சுரண்டப்படும் நிலை உருவாகியதை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். கிழக்கிந்தியக் கம்பெனி குளங்கள், கால்வாய்கள் ஆகியவற்றைப் பேணாமல் அழிய விட்ட கதையையும் புதிதாகக் கிடைத்த நில உடைமையின் வழியாக ஜமீன்தார்கள் விவசாயிகளிடையில் ஏழ்மையையும் பஞ்சங்களையும் நோய்களையும் பெருக்கியதையும் சுட்டிக்காட்டுகிறார். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில் கிராமப்புற உழைப்பாளிகள் அழிவுக்குள்ளானதைப் பற்றிய அண்ணல் அம் பேத்கரின் ஆய்வுகள் இங்கு நினைவு கூரத்தக்கன. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ரயில் பாதை, அச்சு எந்திரம், நவீன கல்வி, நிலத்தில் சொத்துடைமை, பணப்பயிர் விவசாயம், விவசாயத்தின் அழிவு ஆகியவற்றை அறிமுகப்படுத்தினார்கள் என்று எழுதும் மார்க்ஸ், காலனிய முதலாளியத்தின் இரட்டைத் தன்மையை, முரண்பட்ட பண்புகளை வெளிக்கொணர்கிறார்.

“இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் எதிர் கால விளைவுகள்” என்ற கட்டுரையில் இந்தியாவில் சமூகப் புரட்சி பற்றி மார்க்ஸ் தீர்மானகரமாகப் பேசத் தொடங்கினார் என்று கெவின் ஆன்றர்சன் கருதுகிறார். அந்த மாபெரும் நாட்டில் மிக விரைவில் ஆங்கிலேயர் ஆட்சியைத் தூக்கியெறியும் அடிப் படையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும் என்று இக்கட்டுரையில் மார்க்ஸ் எழுதுகிறார். இந்தியாவை நாகரிகமடையாத நாடு என்று குறிப்பிட்ட பழைய எழுத்துமுறை மாறி, பூர்ஷ்வா நாகரிகத்தின் உள்ளீடான காட்டுமிராண்டித்தனம் இந்தியாவை அழித்து வருகிறது என மார்க்ஸ எழுதுகிறார். இக்கட்டுரையின் எழுத்துமுறை அதிக இயங்கியல் தன்மை கொண்டது என்று கெவின் மதிப்பிடுகிறார். மேற்கு ஐரோப்பாவில் நடைபெறும் சோசலிசப் புரட்சிகளே இந்தியரை விடுவிக்கும் என்ற நிலையிலிருந்து மார்க்ஸ் மாறி வந்து இந்திய மக்கள் அவர்களாகவே தமது நாட்டு விடுதலையைச் சாதிப்பர் என்ற எதிர்பார்ப்பினை இங்குக் குறிப்பிட்டுள்ளார் என இர்ஃபான் ஹபீப் மதிப்பிடுகிறார். இவ்வாறாக, 1853-இன் இறுதியில் மார்க்ஸ் இரண்டு புரட்சிகரப் போக்குகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார்: ஒன்று, மேற்கு ஐரோப்பாவின் தொழிலாளர் வர்க்கம். மற்றொன்று, காலனி ஆட்சியைத் தூக்கியெறியத் திரளும் இந்திய மக்கள். அதாவது, மேற்கல்லாத சமூகங்களின் சொந்த மக்கள் சக்திகளை மார்க்ஸ் அக்காலத்தில் நம்பத் தயாராகியிருந்தார் என்பதைக் கெவின் எடுத்துக்காட்டுகிறார்.

இந்தோனேசியா குறித்து மார்க்ஸ்

இதே நாட்களில் மார்க்ஸ் இந்தோனேசிய சமூக அமைப்பைப் பற்றியும் சுருக்கமாக எழுதியுள்ளார். இந்திய சமூக அமைப்பை ஒத்த பண்புகள் இந்தோ னேசியாவிலும் உள்ளதை எடுத்துக்காட்டும் மார்க்ஸ், இந்தோனேசியக் கிராமங்களில் காணக் கிடைக்கும் சுயாட்சி முறைகள், காலனி ஆதிக்கத்திற்கு ஆட் படாத கிராமங்களின் சுயநிர்வாகப் பரப்பு, இந்தோ னேசியச் சாதிகளுக்கிடையில் நிலவும் பரஸ்பரப் பண்பு ஆகியவை குறித்து எழுதுகிறார். கிராமங்களின் சுயாட்சிப் பண்பு என்னும் விசயத்தை எச்சரிக் கையாக அணுகவேண்டும். அது ஒருபுறம் அரசின் செயல்பாடுகளை மீறி சாதியத்தைத் தக்க வைக்கும் பண்பாகவும் இன்னொருபுறம் காலனியத்திற்கான எதிர்ப்பை உருவாக்கும் ஆதாரமாகவும் இரட்டைப் பண்பு கொண்டுள்ளது. இந்தோனேசியக் கிராமங் களில் ஒடுக்கப்பட்ட சாதியினர் ஊர் எல்லைக்கு வெளியில் குடியமர்த்தப்பட்டுள்ள நிலைமையை மார்க்ஸ் எடுத்துக்காட்டுகிறார். பாசனத்திற்கு உட்படாத புறம்போக்கு நிலங்களும் மேய்ச்சல் காடுகளும் கிராமத்தவரின் பொதுச் சொத்தாக நிலவியதையும் எடுத்துக்காட்டுகிறார். இந்தோ னேசிய வாழ்வும் பண்பாடும் காலனியத்திற்கு முந்திய, ஆசிய நாடுகளுக்கிடையிலேயான (ஐவேநச - ஹளயைn) கடல்வழி மற்றும் நிலவழித் தொடர்புகளா லேயே பெருமளவில் உருவாகி வந்துள்ளன என்றும் மார்க்ஸ் தெரிவிக்கிறார். சமீப நாட்களில் ஆசிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை ஒரு பிரத்தியேகக் களமாகக் கொண்டு அணுக வேண்டும் என்பது குறித்த சிந்தனைகள் பின்னைக் காலனியவாதிகளால் சொல்லப்படுவதை இங்கு நினைவு கூர்வோம்.

தைபிங் எழுச்சிகள்: கிழக்கில் ஒரு பிரான்ஸ்

1850லிருந்தே மார்க்ஸ் சீனாவை உற்றுக் கவனிக்கத் தொடங்கிவிட்டார். 1850-இல் தொடங்கி 1864 வரை சீனாவை உலுக்கிய தைபிங் விவசாயிகள் எழுச்சிகளே இதற்குக் காரணம். தெற்கு சீனாவில் தொடங்கிய இவ்வெழுச்சி 10 லட்சத்திற்கும் மேற் பட்ட விவசாயிகளை ஆயுத பாணிகளாக்கி மஞ்சூரிய ஆட்சிக்கு எதிராகப் போராட வைத்தது. சுமார் 14 ஆண்டுகள் ஒரு மிகப்பெரும் உள்நாட்டு யுத்தத்தின் வடிவில் இப்போராட்டம் நிகழ்ந்தது. சீனாவில் நிலவிய மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டிக் காட்டி சீன விவசாயிகள் நிலங்களை மறுபகிர்வு செய்தலை அப்போராட்டங்களில் கோரினார்கள். அவர்கள் நிலத்தில் தனிஉடைமையை ஒழிக்க வேண்டும் எனக் கோரினார்கள் என்றும் தைபிங் எழுச்சிகளில் கம்யூனிஸ்ட் சிந்தனைப் போக்குகள் தென்பட்டன என்றும் சில மேற்கத்திய அறிஞர்கள் எழுதினார்கள். பிரிட்டிஷ், பிரெஞ்சு ராணுவங் களின் உதவியோடு சுமார் 3 லட்சம் மக்களைக் கொன்றழித்து இப்போராட்டங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டன.

கிழக்கில் ஒரு பிரான்ஸ் என்று மார்க்ஸ் சீனாவை அப்போது வர்ணித்தார். ஐரோப்பாவின் புரட்சிகரப் போராட்டங்களுக்குப் பயந்து கிழக்கு நோக்கித் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடும் ஐரோப்பியப் பிற்போக்குவாதிகள், கிழக்கில் சீனப் பெருஞ்சுவரைச் சென்று சேரும்போது அச்சுவரில் “சீனக் குடியரசு: சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம்” எனப் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண் பார்கள் என்று மார்க்ஸ் எழுதினார். ஐரோப்பியப் பிற்போக்காளர்கள் அவர்களது நாட்டில் தவிர்க்க விரும்பும் சமூக மாற்றத்தை சீனா நிகழ்த்திக் கொண்டிருக்கிறது என்ற தொனி மார்க்சின் எழுத்துக்களில் உள்ளது. ஐரோப்பியர்கள் தாம் புரட்சியைக் கீழை நாடுகளுக்கு இறக்குமதி செய்வர் என்ற தொனி மார்க்சின் எழுத்துக்களில் இல்லை. மரபுரீதியான சீனாவின் உள்நாட்டு சக்திகள் திரட்சி பெற்று மஞ்சூரியப் பேரரசையும் பிரிட்டிஷ், பிரெஞ்சுப் படைகளையும் திணற அடித்துக் கொண்டிருக்கின்றன என்று மார்க்ஸ் எழுதினார்.

kevin_anderson1853-இல் மார்க்ஸ் “சீனாவிலும் ஐரோப்பாவிலும் புரட்சி” என்றொரு கட்டுரை எழுதினார். இக் கட்டுரையில் ‘எதிரெதிர் போக்குகள் சந்தித்துக் கொள்ளும்’ என்ற முதுமொழிக்கிணங்க, புரட்சி கரப் பண்புகளே இல்லாததாகக் கருதப்பட்ட சீனாவில் இப்போது நடக்கும் மாற்றங்கள் மிகப் புரட்சிகரமானதாகக் கருதப்படும் ஐரோப்பா விற்குப் பாடம் படித்துக் கொடுக்கும் நிலைக்குச் சென்றுகொண்டிருப்பதாக மார்க்ஸ் எழுதுகிறார். ஐரோப்பாவில் அடுத்து எழும் சுதந்திரத்திற்கான புரட்சி இனி சீனாவில் நிகழ்ந்துவரும் புரட்சிகர மாற்றங்களைச் சார்ந்தே அமையும். சீனா ஐரோப்பா விற்கு வழிகாட்டும் என்று மார்க்ஸ் மிக உற்சாக மாக எழுதினார். ஒரு நாட்டின் வளர்ச்சி நிலையை அந்நாட்டின் தொழில் வளர்ச்சி என்ற ஒற்றை அளவுகோலால் மார்க்ஸ் அளக்கவில்லை, அந் நாட்டின் புரட்சிகர சக்திகள், புரட்சிக்கான தயாரிப்பு நிலை, சமூக விழிப்புணர்வு ஆகியவற்றினூடாகவும் மார்க்ஸ் அளந்தார் என்பதைக் காணுகிறோம்.

தைபிங் எழுச்சிகள் ஒரு தேசிய யுத்தமாக நடந்து கொண்டிருக்கிறது என்று மார்க்ஸ் மதிப்பிட்டார். தைபிங் எழுச்சிகளில் விவசாயிகள் பயன்படுத்திய வன்முறை பற்றி மார்க்ஸ் எழுதுகிறார். விவசாயிகள் இப்போது பயன்படுத்தும் வன்முறை உண்மையில் அமைதியாக வாழ்ந்துகொண்டிருந்த ஒரு பெரிய நாட்டினுள் ஐரோப்பியர்களால் இறக்குமதி செய்யப் பட்ட வன்முறை என்கிறார் மார்க்ஸ். இந்தியாவில் 1857 சிப்பாய் எழுச்சிகளின் போதும் மார்க்ஸ் இதுபோலவே எழுதினார் என்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைக்காக விவசாயிகள் பயன்படுத்தும் வன்முறை பிரிட்டிஷ் படைகள் அந்த மக்களைக் கொள்ளையடிப்பதற்காகப் பயன்படுத்திய கொடூரங் களுடன் ஒப்பிட மிகக் குறைவானதே என்கிறார் மார்க்ஸ். பிரான்ஸ் பனோனின் நூலுக்கு ஷான் பால் சார்த்தர் எழுதிய முன்னுரை மிகத் தீவிரமாக இப்பிரச்சினையைப் பேசும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கைத் தன்னில் கொண்டுள்ள அந்தப் பழைய நாட்டை முதலாளிய, காலனிய நலன்களுக்காக பிரிட்டிஷார் சுரண்டிக் கொள்ளை யடிப்பது அறநோக்கில் எவ்வகையில் நியாயம்? என்ற கேள்வியையும் மார்க்ஸ் எழுப்புகிறார்.

புராதன இனக்குழு சமூகங்கள் அறநோக்கில் வர்க்க சமூகத்தை விட உயர்ந்தவை என்ற கருத்து ஜியார்ஜ் லுக்காச் போன்ற அறிஞர்களால் பேசப்பட்ட ஒன்று. இன்று பின்னைக்காலனிய சிந்தனையாளர்கள் காலனியத்தின் அறம் பற்றிய விவாதங்களை மீண்டும் துவக்கியுள்ளனர். சமூக “வளர்ச்சி”யின் ஒவ்வொரு கட்டத்திலும் மிக அபூர்வமான சில சமூகத் தகவு களை நாம் இழக்கவும் செய்கிறோம் என்ற விவாதம் வளர்ச்சியின் முரண்பட்ட தன்மையைச் சுட்டிக் காட்டுகிறது. இந்த விவாதத்தில் மார்க்ஸ் அவரது காலத்தில் பங்கேற்றிருக்கிறார் என்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு வளர்ச்சிப் படியின் கருவி னுள்ளும் அதற்கு எதிரானதும் பிறப்பெடுக்கிறது என்று மார்க்ஸ் எழுதுகிறார். தைபிங் எழுச்சி களினூடாக மறைஞான நாடாக அறியப் பட்டிருந்த சீனா அறிவுபூர்வமான சமூக மாற்றச் செயல்பாட்டில் இறங்கியிருப்பதாகவும் அறிவு பூர்வமானதாக அறியப்பட்டிருந்த ஐரோப்பா மறைஞான மௌடியத்தினுள் சிக்கிக்கொண்டு சமூக மாற்றச் செயல்பாட்டில் இறங்கியிருப்ப தாகவும் அறிவுபூர்வமானதாக அறியப்பட்டிருந்த ஐரோப்பா மறைஞான மௌடியத்தினுள் சிக்கிக் கொண்டு சமூக மாற்றங்களைத் தவிர்க்க முயற்சிப்ப தாகவும் மார்க்ஸ் வர்ணிக்கிறார். புரட்சிகரமான மக்கள் எழுச்சிகள் பூமிப் பரப்பின் எந்தப் பகுதியில் எழுந்தாலும் அவற்றை உடனடியாக அடையாளம் கண்டு அமோகமாகப் பாராட்டி அரவணைத்துக் கொள்ளும் மார்க்சின் பண்பு வியப்படையச் செய்கிறது. மார்க்ஸ் அவரது சீனா பற்றிய கட்டுரை களில் மேற்குலகம் கீழை நாடுகளை விடுதலை செய்ய உதவுகிறது. வளர்ச்சியடைய உதவுகிறது என்ற கருத்திலிருந்து பெரிதும் விலகிச் செல்கிறார் என்பதைக் காணுகிறோம்.

1857: இப்போது இந்தியாவே நமது மிகச் சிறந்த கூட்டாளி

மார்க்சின் அடுத்த கட்ட நகர்வு 1857 இந்தியப் புரட்சிகர எழுச்சிகளை ஒட்டி நிகழுகிறது. சிப்பாய்க் கலகம் என அழைக்கப்பட்ட இந்திய எழுச்சிகளின் செய்திகள் லண்டனை எட்டியபோது, மார்க்ஸ் அவற்றைப் பற்றி 1857-58 ஆண்டுகளில் ட்ரிப்யூன் இதழ்களில் தொடர்ச்சியாகப் பல கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இவற்றில் 21 கட்டுரைகள் மார்க்சால் எழுதப்பட்டவை : 10 கட்டுரைகள் ஏங்கெல்சால் எழுதப்பட்டவை. மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தொகுப்பில் 15ஆவது தொகுதியில் சுமார் 150 பக்கங்களில் இக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. காலனியப்பட்டிருந்த மக்களின் சுயமான புரட்சிகரச் செயல்பாடுகளைப் பற்றிய மார்க்சின் கோட் பாட்டு உருவாக்கம் இக்கட்டுரைகளில் பதிவாகி யுள்ளது என ஓர் அறிஞர் எழுதியதை கெவின் ஆன்றர்சன் சுட்டிக்காட்டுகிறார்.

சிப்பாய்கள் எழுச்சியின் பலம், பலவீனம் பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன. மரபுரீதியான சொல்லாடல்களின் ஊடாகத் திரண்ட அவ்வெழுச்சி களின் புரட்சிகரத் தன்மையை மார்க்ஸ் இக்கட்டுரை களில் முன்னிலைப்படுத்துகிறார். முதலாளியம் அதற்குக் குழி தோண்டுபவர்களை தவிர்க்கயியலாத படி உற்பத்தி செய்கிறது என்று மார்க்ஸ் முன்பு மேற்கு ஐரோப்பிய சூழல்களில் எழுதினார். அதே முரண்பாட்டுத் தருக்கத்தை இப்போது மார்க்ஸ் காலனிய எதார்த்தத்திற்கும் பயன்படுத்துகிறார். காலனிய ஆட்சியினரால் மக்களை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட ராணுவத்தின் சிப்பாய்களே ஆட்சியாளருக்கு எதிராக ஆயுதங்களைத் திருப்பிப் பிடித்து விட்டனர் என்று மார்க்ஸ் எழுதுகிறார். பிரிட்டிஷ் காலனியம் தனது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு இனக்குழுவை மற்றொன்றுக்கு எதிராக, ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராக, ஒரு மதத்தை இன்னொன்றுக்கு எதிராக நிறுத்தும் அரசியலை இந்தியாவில் செய்து வந்துள்ளது என்று கூறும் மார்க்ஸ், இருப்பினும் ஒடுக்கப்பட்டஅம்மக்களிடையே ஒரு தேசிய தன்னுணர்வு தோற்றம் பெற்றுவிட்டது என்று எழுதுகிறார். இப்போதைக்கு ஆட்சியாளர்கள் இவ்வெழுச்சியை அடக்கிவிட்டாலும், இன்னும் பல காலத்திற்கு இவ்வெழுச்சியின் வேர்கள் படர்ந்து செல்லும் என்று மார்க்ஸ் முன்னறிவிக்கிறார்.

கலகக் காரர்கள் ஆங்கிலேய அதிகாரிகள் மீது தொடுத்த வன்முறையான தாக்குதல்கள், உண்மையில் பிரிட்டிஷார் இந்திய மக்கள் மீது முன்பு தொடுத்த வன்முறைகளின் எதிரொலிகளே என்று மார்க்ஸ் மதிப்பிடுகிறார். ஐரோப்பியர்கள் அவர்களது வரலாற்றில் செய்யாத கொடூரங்கள், சித்திரவதைகள், அழிமானங்கள் எதையும் இந்தியச் சிப்பாய்கள் செய்துவிட்டார்களா, என்ன? என்று மார்க்ஸ் கேட்கிறார். இத்தனை வெறுப்புகளை விதைத்தவர்கள் நீங்கள் தாம், என்ற மார்க்ஸ் ஐரோப்பியர்களை நோக்கிச் சொல்லுகிறார். இவை, நீங்கள் உருவாக்கிய வரலாற்றின் எதிர்விளைவுகள் தாம், என்கிறார். ஐரோப்பியர்கள் ரோமாபுரி சாம்ராஜ்யத்தில், பைசாண்டியப் பேரரசில், அரபு நாடுகளில், ஆப்பிரிக்க நாடுகளில், இதே இந்திய நாட்டில் நிகழ்த்திய வன்முறைகளின் எதிர்விளைவுகள் தாம் இவை என்று மார்க்ஸ் கூறுகிறார். காலனிகளாக்கப்பட்டு அவமதிக்கப்பட்ட மக்கள் எதிர்த்துப் போராடுவதில், அப்போராட்டங்களில் வெளிப்படும் வன்முறையில் வரலாற்றுரீதியான நியாயம் உள்ளது என்று மார்க்ஸ் எழுதுகிறார். மார்க்சின் எழுத்துக்களில் காலனியச் சூழல்களே காலனிய எதிர்ப்புக்கான சூழல்களை உருவாக்குகின்றன என்ற கோட்பாடு வேலை செய்கிறது.

1858, ஜனவரி 16-இல் மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு எழுதிய கடிதத்தில் சொல்லுகிறார்: “இப்போது இந்தியாவே நமது மிகச் சிறந்த கூட்டாளி” (India is now our best ally).

ரஷ்ய கம்யூன்கள் புரட்சிக்கான ஆதாரங்களாக முடியும்

ஐரோப்பாவில் அன்று நிலவிய பொதுவான சூழல்களில் மார்க்ஸ், ஏங்கெல்சுக்கு ரஷ்யாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் கிடையாது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சனநாயக மாற்றங்கள் கொஞ்சமாகவோ அதிகமாகவோ நடந்து கொண் டிருந்த அன்றைய சூழல்களில் சனநாயகத்திற்கு எதிரான பழமைச் சக்தியாக ரஷ்யா விளங்கி வந்ததே இதற்குக் காரணம். ரஷ்ய நிலஉடைமை முடியாட்சி அரசு மேற்கு ஐரோப்பிய நாடுகளில் 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் சனநாயக எழுச்சிகள் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் பிரான்ஸ், பிரஷ்யா, ஆஸ்த்ரியா போன்ற நாடுகளின் ஆட்சி யாளர்களுக்கு ஆதரவாகத் தனது முரட்டு ராணு வத்தை அனுப்பி உதவிகள் செய்து வந்தது. மேற்கு ஐரோப்பாவில் சனநாயகத்தைத் தாமதப்படுத்து வதன் மூலம் கிழக்கில் தனது முடியாட்சிக்கு எதிரான சக்திகளைப் பலவீனப்படுத்த முடியும் என ரஷ்யா கருதி வந்தது. எனவே அது ஓர் எதிர்ப் புரட்சி சக்தி என்ற கருத்தே மார்க்சின் ஆரம்பகால எழுத்துக்களில் காணப்படுகிறது. ரஷ்ய கம்யூன்கள் என்ற மூடிய கிராமப்புறப் பொருளுற்பத்தி முறை பழமையின் ஆதார சக்தியாகவும் கீழை எதேச்சாதி காரம் என்ற அரசியல் வடிவத்தின் பின்புலமாகவும் மார்க்சால் அப்போது அணுகப் பட்டது. மிகயில் பகூனின் என்ற புலம்பெயர்ந்த ரஷ்யரின் அராஜக சிந்தனைகளின் வழியாக ரஷ்ய கம்யூன்கள் பற்றிய செய்திகள் ஐரோப்பிய புரட்சி யாளர்களுக்கிடையில் அக்காலத்தில் பரவிவந்தன. ரஷ்ய கம்யூன்கள் கம்யூனிசத்தின் முன்னோடி அமைப்புகள் என்றும் ரஷ்ய விவசாயிகள் பிறப் பிலேயே கம்யூனிஸ்டுகள் என்றும் பகூனின் பேசித் திரிவதாக ஏங்கெல்ஸ் கேலியாகக் கூட எழுதிய துண்டு.

இருப்பினும், 1858-இல் ஜார் இரண்டாம் அலெக்சாண்டர் ஆட்சிக்கு வந்து ரஷ்யாவில் விவசாய சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்திய காலத்தில், ரஷ்யா குறித்த மார்க்சின் அபிப்பிராயங் களும் மாறுதல்களுக்கு உள்ளாயின. ரஷ்ய அரசு உள்நாட்டில் நிலச்சீர்திருத்தங்களைச் செய்ய முன் வந்திருப்பதாகவும் அது ரஷ்யாவின் வெளிநாட்டுக் கொள்கையிலும் மாறுதலை ஏற்படுத்தும் என்றும் மார்க்ஸ் 1858-இல் ஏங்கெல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். அதே ஆண்டில் மார்க்ஸ் ட்ரிப்யூன் பத்திரிகைக்கு எழுதிய ஒரு கட்டுரையில், ரஷ்யாவில் புரட்சிக்கான சக்திகள் திரண்டு வருவதாக எழுதுகிறார். நீண்ட காலமாக ஏமாற்றப்பட்டுள்ள ரஷ்ய விவசாயிகள் திடீரென வெடிக்கத் தயாராக உள்ள வெடிமருந்தைப் போல ரஷ்ய மண்ணில் கூடி வருவதாக மார்க்ஸ் எழுதுகிறார். அரசின் தவறான வெளிநாட்டுக் கொள்கையால் கிரீமிய யுத்தத்தில் தோல்வியடைந்துள்ள ரஷ்யப் போர் வீரர்கள் அரசு குறித்து தீவிரமாக அதிருப்தி அடைந் துள்ளார்கள், அவர்களது ஆற்றாமைகள் உள் நாட்டில் உடனடியான விவசாய சீர்திருத்தங்களைக் கோருகின்றன என்று மார்க்ஸ் மதிப்பிட்டார்.

na_muthumohan_300ரஷ்ய ஆளும் வர்க்கமும் பிரபுக்களும் விவசாயிகளின் பார்வையில் மதிப்பிழந்து போய்விட்டதைக் குறிப்பிடும் மார்க்ஸ், ரஷ்யா ஒரு விவசாயிகள் எழுச்சிக்குத் தயாராகிக் கொண்டிருப்பதாகக் கணக்கிடுகிறார். 1859 வாக்கில் மட்டும் சுமார் நூறு இலக்கியப் பத்திரிகைகள் புதிதாகத் தொடங்கப் பட்டிருக்கின்றன என்ற தகவலை அவர் கவனத்திற்குக் கொண்டு வருகிறார். ரஷ்ய அரசு அப்போது அறிமுகப் படுத்திய சில சீர்திருத்தங்கள் முதலாளியத் தன்மை கொண்டவை. கிராமப்புற ரஷ்யாவில் சுயநிர்வாக உரிமைகள் பலவற்றைக் கொண்டிருந்த ரஷ்ய கம்யூன்களின் அதிகாரங்களை அரசு அச்சீர்திருத்தங் களின் மூலம் பறித்துக் கொண்டது. இது குறித்து மார்க்ஸ் எழுதும்போது, இத்தகைய சூழல்களில் கிராமப்புற ரஷ்யக் கம்யூன்கள் அரசுக்கு எதிராக விவசாயிகளைத் திரட்ட இச்சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக் கொள்ளும் என எழுதினார்.

அரசியல் சட்ட பூர்வமான அதிகாரத்தை நிலைநாட்ட ரஷ்ய பிரபுக்கள் முயற்சி செய்யும்போது மரபுரீதியான கம்யூன் உரிமைகளைத் தக்க வைக்க விவசாயிகள் போராட்டங்களைத் துவக்கியுள்ளனர் என்று மார்க்ஸ் எழுதுகிறார். முன்பு, கீழை எதேச்சாதி காரத்தின் ஆதாரமாகச் செயல்பட்டதாக மார்க்ஸ் மதிப்பிட்ட கிராமப்புற கம்யூன்கள், இப்போது அவராலேயே புரட்சிகர சக்தியாக மதிப்பிடப் பட்டுள்ளது. மார்க்ஸ் கணக்கிட்டபடியே 1860-70களில் ரஷ்ய விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைந்தன. ரஷ்ய விவசாயிகளும் எழுத்தாளர் களும் இக்காலத்தில் ரஷ்யாவில் வேகமாகப் பரவிவந்த முதலாளிய சமூக உறவுகளைத் தீவிரமாக விமர்சிப்பவர்களாக உருப்பெற்றார்கள். மார்க்ஸ் 1870களில் ரஷ்ய கம்யூன்கள் அந்நாட்டில் சோசலிசத் திற்கான ஆதாரமாக ஆகமுடியும் என்று எழுதினார்.

போலந்து: எரிமலைக் குழம்பு கிழக்கிலிருந்து மேற்காக ஓடும்

போலந்து மார்க்சின் கவனத்தைப் பெரிதும் பெற்றிருந்த ஒரு நாடு. இதற்குக் காரணம் அந் நாட்டின் தேசிய உணர்வுகள் 18-19ஆம் நூற்றாண்டு களில் பலமுறை அவமதிக்கப்பட்டிருந்தமையே ஆகும். இரண்டு நூற்றாண்டுகளாக போலந்து நாடு ஜெர்மன், ரஷ்ய, ஆஸ்திரியப் பேரரசுகளால் மாற்றி மாற்றி அடிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதுவே போலந்து மக்களின் தேசிய உணர்வுகளை வளர்த்தெடுத்த காரணமாகவும் அமைந்தது. ஜெர் மனியர், ரஷ்யர், பிரெஞ்சுக்காரர் ஆகிய தேசிய இனங்களைப் போலவே, அவற்றிற்கு எந்த வகையிலும் குறையாத பழமையும், செழுமையும் கொண்டது போலந்து தேசியம். இருப்பினும் பல்வேறு அரசியல் காரணங்களால் போலந்து மக்கள் நீண்ட காலமாக சுதந்திரமான தேசிய உரிமைகளை அனுபவிக்க முடியாமல் போயிற்று. மார்க்ஸ் போலந்து மக்களின் தேசிய விடுதலையைப் பலமாக ஆதரித்தார். போலந்தின் தேசிய விடுதலை பல ஐரோப்பிய நாடுகளின் சன நாயகத் தன்மையை அளக்கும் தெர்மாமீட்டராக உள்ளது என்று மார்க்ஸ் ஏங்கெல்சுக்கு எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடுவார். 1794, 1830, 1846 ஆகிய ஆண்டுகளில் போலந்து மக்கள் அடுத்தடுத்த தேசிய எழுச்சிகளில் ஈடுபட்ட போதும் அவ்வெழுச்சிகள் போலந்தின் அண்டை நாடுகளில் அடக்கி ஒடுக்கப் பட்டன.

போலந்தின் தேசிய விடுதலையை வெகுவாக ஆதரித்தபோதும் அப்போராட்டங்கள் தோல்வி யடைந்து வருவதை மார்க்ஸ் விமர்சன நோக்கிலும் அணுகினார். போலந்து தேசியம் நிலஉடைமைப் பண்பு கொண்டதாக அமைந்திருப்பதை மார்க்ஸ் சுட்டிக்காட்டுகிறார். மாறாக போலந்து நாட்டின் சனநாயக சக்திகள் போலந்து தேசியத்தைத் தீவிர விவசாய சீர்திருத்தங்களோடு ஒன்றிணைக்க முயன்றன. போலந்து தேசியம், விவசாயப் புரட்சி, சனநாயகம் ஆகிய மூன்றும் ஒன்றுபடுகின்றன என்று மார்க்ஸ் எழுதினார். 1846 போலந்து எழுச்சியில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, மார்க்ஸ் அதனை மறுத்தார். தேசிய உணர்வு, சமூக வர்க்கங்களுக்கிடையில் சமமான அரசியல் உரிமைகள், நிலங்கள் சிறு விவசாயிகளிடம் பகிர்ந்தளிக்கப்படுவது ஆகிய வற்றை முன்வைத்தே 1846 எழுச்சி நடந்ததாக மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார். தீவிர விவசாய சீர்திருத்தங்களின் மூலமாக விவசாய மக்கள் சார்ந்த சனநாயகத்தைச் சாதிக்க விழைவது போலந்து தேசியத்தின் சிறப்பு என்று மார்க்ஸ் பாராட்டினார். ஆனால் போலந்தின் உள்ளிலும் வெளியிலும் பிரபுத்துவ சக்திகள் அத்தகைய விவசாயச் சார்பை போலந்து தேசியத் திலிருந்து அப்புறப்படுத்த விழைந்தார்கள். எனவே போலந்தின் எழுச்சியை அழித்தார்கள்.

1861-இல் மீண்டும் போலந்தில் மக்கள் எழுச்சிகள் வெடித்தன. அவை 1863-இல் மேலும் தீவிரமடைந்தன. போலந்தின் மக்கள் எழுச்சிகளை மார்க்ஸ் ஐரோப்பாவில் மீண்டும் ஒரு புரட்சிகர அலை தோற்றம் பெறுவதாக மதிப்பிட்டார். “இந்த முறை எரிமலைக் குழம்பு கிழக்கிலிருந்து மேற்காக ஓடும்” என்று மார்க்ஸ் எழுதினார். மௌரில் பர்பியர் என்ற ஒரு பிரெஞ்சுக்காரர் சொல்லுகிறார்: 1848-இல் மார்க்ஸ் மேற்கு நாடுகளில் பாட்டாளி வர்க்கப் புரட்சிகளின் விளைவாகப் போலந்திற்கு விடுதலை கிட்டும் எனக் கருதினார்; ஆனால் 1860 களில் மேற்கு நாடுகளில் தொழிலாளர் புரட்சிகள் வெற்றிபெற போலந்தின் விடுதலை ஒரு முன் நிபந்தனை என்று கருதினார். சனநாயகப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டங்களும் ஒடுக்கப்பட்ட தேசிய இனப் பிரச்சினைகளோடு அணிசேரத் தவறினால் அவை முழு வெற்றி பெறாது என்ற முடிவுக்கு மார்க்ஸ் இக்காலகட்டத்தில் வந்து சேர்ந்ததாக கெவின் ஆன்றர்சன் எழுகிறார்.

(இக்கட்டுரையின் இரண்டாம் பகுதி அடுத்த இதழில் வெளிவரும்)

Pin It