டி.செல்வராஜ் எழுதிய ‘தோல்’ நாவல் வெளியீட்டு விழா

எல்லாப் புத்தகங்களோடு இதுவும் ஒரு புத்தகமல்ல; எல்லா நாவல்களோடு இதுவும் ஒரு நாவலல்ல. இதைப் படித்தால் வரலாறு புரியும், புதிய வரலாறு படைக்கிற பாதை புலப்படும். தணியாத இலக்கியப் படைப் பார்வம், மக்கள் மீது நேசம், அவர்களுக்காகப் பணியாற்றும் தோழமை, வரலாற்று அறிவு, அரசியல் தெளிவு இவற்றோடு ‘தோல்’ நாவலைப் படைத்தளித்திருக்கிறார் தமுஎகச அமைப்பை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவரான டி. செல்வராஜ்.

கிட்டத்தட்ட ஒரு இருபத்தைந்து ஆண்டுகளாக இவரிடமிருந்து புதிய படைப்பு எதுவும் வரவில்லையே என்ற கேள்வி பலருக்கு இருந்திருக்கக்கூடும். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பா. ஆனந்த குமார் கூறியது போல், “கால்நூற்றாண்டு கால எழுத்து தவத்தில், அடைகாத்துப் பிரசவமாகியிருக்கிறது” இந்த நாவல். கடந்த நவம்பர் 13 அன்று சென்னையில், தேவநேயப் பாவாணர் நூலக அரங்கில், பங்கேற்றவர்களின் தோலில் உணர்ச்சித் துடிப்பை ஏற்படுத்துவதாக நடந்தது ‘தோல்’ வெளியீடு. அதில் வரவேற்றுப் பேசியதோடு நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கவும் செய்தார் ஆனந்தகுமார்.

தோல் பதனிடும் தொழிலோடு இணைந்த தலித் மக்களின் வாழ்க்கை, அவர்ளைக் கசக்கிப் பிழிந்த முதலாளி களின் அரசியல், தட்டிக் கேட்கப் புறப்பட்ட செங்கொடி இயக்கத்தின் தத்துவம் என திண்டுக்கல் வட்டாரம் சார்ந்து எழுதப்பட்டிருந்தாலும் தமிழக உழைக்கும் வர்க்க இயக்க வரலாற்றின் ஒரு கூறாகவே இந்த நாவல் உருவாகியிருக்கிறது. இந்த 600 பக்கப் புத்தகத்தைத் தயாரித்து வெளியிட்டிருப்பது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம். அதன் இயக்குநரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவருமான ஆர். நல்லகண்ணு புத்தகத்தை வெளியிட, முதல் படியைப் பெற்றுக்கொண்டவர் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) பொதுச்செயலாளரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான அ. சவுந்தரராசன். இலக்கியத்தில் மட்டுமல்ல, இந்திய சமுதாயத்திலும் வர்க்கம், வர்ணம் ஆகிய நுட்பமான சிக்கல்களை மார்க்சிய இயக்கத்தினர் எவ்வளவு தெளிவாகவும் கூர்மையாகவும் ஆழ்ந்த ஈடுபாட்டோடும் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதன் வெளியீடாகவும் அமைந்தது நிகழ்ச்சி.

தலைமை தாங்கிய வழக்கறிஞர், தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், இந்த உறவின் முற்காலத் தொடக்கம் ஒன்றை வெளிப்படுத்தினார். “சென்னையில் அக்காலத்தில் தி.க.சிவசங்கரன் தங்கியிருந்த அறையில்தான் நாங்கள் சந்தித்துக்கொள்வோம். அவர் சிபிஐ, செல்வராஜ் சிபிஎம். இருவரையும் பார்க்க வருகிறவர்களோ சிபிஐ-எம்எல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அப்போது நான் மக்கள் எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கி நடத்திக்கொண்டிருந்தேன். அதன் பணிகளுக்கு எவ்வித தயக்கமும் இல்லா மல் ஆலோசனைகளை வழங்கியவர்களாக, வெளியே தெரியாத தூண்களாகச் செயல்பட்டார்கள் தி.க.சி., டி.செல்வராஜ் இருவரும்,” என்றார் அவர்.

படைப்பாளியின் களப்போரை விவரித்த செந்தில்நாதன், “பல தலித்திய எழுத்துகள் மனித நேயக் கண்ணோட்டத்துடன் வருகின்றன என்பது உண்மை. சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளான தலித் மக்களை வர்க்க உணர்வு பெற்ற போராளிகளாகவும் மாற்றுவதில் செல்வராஜ் வெற்றிபெற்றிருக்கிறார். வர்க்கப்போராட்டத்துடன் இணைந்ததே தலித் விடுதலைப் போராட்டம் என்று இவர் சொன்னதை அன்று அவர்கள் ஏற்கவில்லை. இந்தப் போராட்டங்கள் இணையாவிட்டால் சோர்வும் விரக்தியுமே மிஞ்சும். அடங்க மறு, அத்துமீறு என்றெல்லாம் வீர முழக்கமிட்டவர்கள் இறுதியில் எப்படி வர்க்க சமரசத்தில் போய் முடிந்தார்கள் என்பதைப் பார்க்கவே செய்கி றோம். செல்வராஜின் சிந்தனையிலும் எழுத்திலும் அப்படிப்பட்ட சமரசங்கள் எதுவும் கிடையாது. ஒரு நாவல், தொழிற்சங்க இயக்க வரலாறு, பொதுவுடைமை இயக்க வரலாறு மூன்றும் பின்னிப் பிணைந்த முக்கனி இந்தப் புத்தகம்,” என்றார்.

தமிழ் நாவல் படைப்பில் ஒரு புதிய போக்கை உருவாக்கியவர்களில் ஒருவரான செல்வராஜ், சரியான முறையில் அங்கீகரிக்கப்படவில்லையோ என்ற ஆதங்கம் தமக்கு இருப்பதையும் பதிவு செய்த செந்தில்நாதன், “படைப்பாளிகளை வாழும் காலத்திலேயே அங்கீகரிக்கிற பண்பு வளர வேண்டும்,” என்று கூறியது, அவரவர் குழுக் களாகப் பிரிந்து நிற்பவர்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளாகவும் ஒலித்தது.

“படைப்பின் வெற்றி அது எந்த மக்களின் பக்கம் நின்று வாதாடுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கிறது,” என்றார் கருத்துரை வழங்கிய கவிஞர் இரா.தெ. முத்து. தமுஎகச மாநிலப் பொருளாளருமான அவர், “யதார்த்தவாத இலக்கியம் காலாவதியாகிவிட்டது, சோசலிச யதார்த்த வாதம் முடிந்துவிட்டது என்று பேசியவர்களெல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. மனிதரின் வாழ்க்கைப் போராட்டம் தொடர்கிற வரையில் அதை வெளிப்படுத்துகிற சோசலிச யதார்த்தவாதம் தொடரும்” என்றார்.

தலித் இயக்கத் தலைவர்களின் நிலை வருத்தம் தருகிறது என்று கூறியவர், “கக்கனுக்கு மாநில அளவில் விழா எடுக்க காங்கிரஸ் கட்சி தயாராக இல்லையே,” என்ற அரசியல் விமர்சனத்தையும் முன்வைத்தார். அரசியலை இலக்கியமாக்குவதில் ‘தோல்’ பெரிய வெற்றியை ஈட்டியிருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

“இதற்கு ‘தோல்’ என்று பெயரிட்டிருப்பதை விட, முற்போக்கு இலக்கியத்துக்கும் சமுதாயப் போராட்ட இயக்கத்திற்கும் தோள் கொடுத்திருக்கிற படைப்புக்கு ‘தோள்’ என்றே தலைப்புக் கொடுத்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றியது.” -புத்தகத்தில் மூழ்கி எழுந்து வந்த உணர்வை இப்படி வெளிப்படுத்தினார் தொலைக்காட்சி அரசியல் விமர்சகர் திரு. வீரபாண்டியன்.

“எழுதிக்கொண்டே இருக்கிறாரே, இவர் வழக்கறிஞர் தொழிலைச் செய்கிறாரா இல்லையா என்று நான் நினைத்துக்கொள்வது உண்டு. நாவலைப் படிக்கப்படிக்க, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீதிக்களத்தில் மட்டுமல்ல படைப்புக் களத்திலும் வாதாடுகிற வழக்கறிஞர்தான் இவர் என்பது தெளிவானது,” என்றார் அவர். வழக்கறிஞரைப் பற்றிப் பேசியதால், தனது இந்த முடிவுக்கான ஆதாரம் ஒன்றையும் மன்றத்தில் முன்வைத்தார்: “ஒரு தலித் பெண் தொழிலாளி, ஏசுநாதர் படத்தைப் பார்க்கிறாள். உடலெல் லாம் சாட்டையடித் தழும்போடும் ரத்தத்தோடும் சிலுவை யில் தொங்குகிறவரைப் பார்க்கிற அவள், ‘ஏசுவும் பறப்பயலா இருந்திருப்பாரோ, இப்படி அடிவாங்கி யிருக்காரே’ என்று எண்ணுவதாக நாவலில் வருகிறது.”

அ. சவுந்தரராசன் தமது வாழ்த்துரையில், “அன்னா கரீனா, போரும் அமைதியும் போல தமிழ் நாவல் உலகில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்தப்போகிற படைப்பு,” என்று கூறினார். அது வெறும் சம்பிரதாயப் பாராட்டு அல்ல என்பதற்குச் சான்றாக, நாவலில் வருகிற பல முக்கிய கதாபாத்திரங்களையும் அவற்றின் அனுபவங்களையும் எடுத்துக்காட்டினார். “நூற்றுக்கணக்கான கதாபாத்திரங் கள் வருகின்றன. யாரையுமே மறக்க முடியாது. அந்த அளவுக்கு ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வாழ்க்கையையும் மனநிலையையும் நுட்பமாக உணர்த்தியிருக்கிறார் செல்வராஜ்.”

ராஜராஜ சோழனுக்கு விழா எடுக்கிறது அரசு. அந்த ராஜராஜ சோழன் பலி கொடுப்பதற்காக ஆயிரம் பஞ்சமர்களை விரட்டி வேட்டையாடிய வரலாறும் புத்தகத் தில் பதிவாகியிருக்கிறது. விடுதலைப் போராட்ட வரலாறு, குற்றப்பரம்பரை என ஒரு பகுதியினருக்கு முத்திரையிடப் பட்ட வரலாறு, தலித் வரலாறு, தொழிற்சங்க இயக்க வரலாறு, மார்க்சிய இயக்க வரலாறு என ஒரு பரிணாமத் தொடர்ச்சியோடு முழுமையானதொரு வரலாற்றுப் பதிவாகவும் ‘தோல்’ சிலிர்க்கச் சொன்னார் சவுந்தரராசன்.

“திண்டுக்கல்லில் அன்று தோல் தொழிலாளர் கள் தொழிற்சங்க உரிமைக் காகப் போராடினார்கள். இன்று, சிறப்புப் பொருளா தார மண்டலங்களில் பன்னாட்டு நிறுவனங் களின் தொழிலாளர்கள் அதே போராட்டத்தை நடத்திக் கொண்டிருக் கிறார்கள்,” என்றார் அவர். இப்படிப்பட்ட நாவலைப் படிக்கிற இன்றைய இளம் தொழிலாளர்கள் அன்றைய போராட்ட வரலாற்றிலிருந்து நம்பிக்கையும் சரியான வழிகாட்டலையும் பெறுவார்கள் என்பதை சொல்லாமலே உணர்த்துவது போலிருந்தது இந்தப் பதிவு.

தொழிற்சங்கத் தலைவர் என்பதால், தொழிற்சங்க இயக்கம் பற்றி எழுதியிருப்பதாலேயே பாராட்டுகிறாரோ என்று சிலர் நினைக்கக்கூடும். ஆனால், இலக்கிய நேர்மைக்கான புரிதலோடு அவர் இப்படிச்சொன்னார்: “தொழிற்சங்க இயக்கம் பற்றி கதை எழுதுகிறபோது செயற்கையான வில்லன், காக்க வந்த கர்த்தனாக கதாநாயகன் என்றெல்லாம் ஒரு செயற்கைத்தனம் வந்துவிடும். இதில் ஒவ்வொரு மனிதரின் பரிணாம வளர்ச்சி வெகு இயல்பாக, உண்மையாக இருக்கிறது.”

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு “கெட்டவார்த்தைகள்” ஒரு ஆயுதமாகப் பயன்படுவதை நாவல் காட்டுகிறது என்று அவர் குறிப்பிட்டது, சமுதாயம் பற்றிய உள்வாங்கலாகவும் இருந்தது.

வீரபாண்டியன் பேசியபோது, “கதையில் வருகிற வேலாயுதம் என்ற தொழிலாளர் தலைவர் கைதுசெய்யப் படுகிறார், அவருக்குக் கைவிலங்கு போடப்படுகிறது. இப் போது, சவுந்தரராசன் கைது செய்யப்பட்டபோது அவருக்கு விலங்கு போடப்பட்டதா இல்லையா என்பதே சர்ச்சை யாகியிருக்கிறது. இதற்கு அவர் பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கிறேன்,” என்று ‘இழுத்துவிட்டிருந்தார்’. அதற்கு இப்படி பதிலளித்தார் சிஐடியு பொதுச்செயலாளர்: “தொழி லாளிகளைப் போராடத் தூண்டியதற்காக வேலாயுதம் கைது செய்யப்பட்டு கையில் விலங்குடனும் காலில் சங்கிலியுடனும் கொண்டுசெல்லப்படுகிறான். நீதிமன்றத் திற்குள் நுழைவதற்கு முன் அவற்றை அகற்ற முயல் கிறார்கள் காவலர்கள். அவனோ கழற்ற விடமாட்டேன் என்று பிடிவாதமாக மறுக்கிறான். விலங்குடனேயே அவனை நீதிமன்றத்தில் காவலர்கள் நிறுத்த, “வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்” என்று அவர்களைப் பார்த்துக் கடுமை யாகக் கேட்கிறார் நீதிபதி. இந்த நாவலை நான் முதலிலேயே படித்திருந்தால், எனக்கு விலங்கு போடப்பட்ட பிரச்சனையை வேறுமாதிரியாகத் தீர்த்திருப்பேன்.” அப் போது எழுந்த சிரிப்பும் கைதட்டல் ஒலியும் குளிரரங்கச் சுவரைத் தாண்டி அண்ணாசாலையில் கேட்டிருக்கும்.

 நாவலில் கற்பனைப் பெயர்களோடு வருகிற பல உண்மை மனிதர்களோடு தாம் நெருங்கிப் பழகியிருப்பது பற்றிய சிந்தனையில் மூழ்கினார் நல்லகண்ணு. முதன் முதலாக சிறை சென்ற கம்யூனிஸ்ட் பெண் அக்னிஸ் மேரி உள்ளிட்டவர்கள் நாவலில் நடமாடுவதை நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.

“தத்துவார்த்த அரசியல் கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்காமல் படைப்பாக பதிலளித்திருக்கிற பாங்கு சிறப்பானது. வர்க்கப் போராட்டம் என்பது முடிவெடுத்து நடப்பதல்ல. ஆளும் வர்க்கத்தினரின் கொடுமைகளை இனியும் பொறுக்க முடியாது என உழைக்கும் மக்கள் கொந்தளிப்பதில் தொடங்கி, படிப்படியாகவே வர்க்க உணர்வு வளரும். இந்தப் பரிணாம வளர்ச்சியை அற்புத மான இலக்கிய நடையில் கதையாகச் சொல்கிறது புத்தகம். சங்கமாகச் சேர்ந்தபோது தலித் பெண்களுக்கு முதலில் ஏற்பட்ட உணர்வு, இனி முதலாளியின் ஆட்கள் அடிக்க மாட்டார்கள், பெண்களைச் சூறையாட மாட்டார்கள் என்பதுதான். பெண் விடுதலையை இணைத்துக்கொண்டே வருவதுதான் கம்யூனிஸ்ட் இயக்கம்,” என்று அங்கே ஒரு சமூகவியல் பாடமே நடத்தினார் நல்லகண்ணு.

“கற்பு பற்றி அடிக்கடி பேசப்படுவதுண்டு. இதில், ஒரு தொழிற்சங்கத் தலைவனைக் காவலர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காகத் தனது பாயிலேயே படுக்கவைக் கிறாள் ஒரு பெண் தொழிலாளி. காவலர்கள் கேட்கிறபோது, அவன் தன் கணவன் என்று தயங்காமல் சொல்கிறாள். அப்பழுக்கற்ற பாலினத் தோழமை உறவு உழைக்கும் வர்க்க இயக்கத்தில்தான் சாத்தியம்,” என்று அவர் கூறியதும் அப்படியொரு பாடமாகவே இருந்தது.

“அரிசனப் பிரச்சனை, அக்ரஹாரப் பிரச்சனை, ஆணாதிக்கப் பிரச்சனை, பெண்விடுதலைப் பிரச்சனை, இந்து-முஸ்லிம்-கிறிஸ்துவப் பிரச்சனை என்று சமுதாயத் தில் முட்டிக்கொண்டிருக்கிற முரண்பாடுகளையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு படைக்கப்பட்டிருப்பதால் இந்தத் தோல் உணர்ச்சி யோடு இருக்கிறது,” என்று தேர்ந்த இலக்கிய-சமூக-அரசியல் ஆய்வாளராகச் சொன்னார் அவர்,

“சமுதாய யதார்த் தத்தை எழுதுவது அதை மாற்றுவது எப்படி என்பதற் காகத்தான்,” என்று தம் ஏற்புரையைத் தொடங் கினார் படைப்பாளி. சுத்த இலக்கியவாதிகளின் புறக்கணிப்புகள் பற்றிய கவலை கொஞ்சமும் இல்லாதவராக, “வர்க்க உணர்வூட்டுவது முக்கி யம். என்னைப் பொறுத்த வரையில் ஏற்றுக் கொண்ட லட்சியத்திற்காகப் போராட வேண்டும் என்பதற் காகவே வழக்கறிஞராகக் கறுப்பு அங்கி அணியத் தொடங்கினேன். இலக்கியத்திலும் அதையே செய்கிறேன்,” என்றார்.

“அங்கீகாரங்கள் பற்றி நான் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அங்கீகாரத்திற்காக நான் சங்கர மடங்களின் காலில் விழத் தயாராக இல்லை,” என்று அவர் சொன்ன போது அப்படிக் காலில் விழத்தயாராக இருப்போர் பற்றிய எண்ணம் ஏற்படவே செய்ததது.

“தொழிலாளி வர்க்கத்திற்கு விடுதலை கிடைக்கிற போதுதான் சமுதாயத்துக்கு முழு விடுதலை கிடைக்கும். இந்தச் செய்தியின் பிரதிநிதிகளாகவே இந்த நாவலில் சங்கரன், வடிவாம்பாள் கதாபாத்திரங்கள் வருகின்றன,” என்று தன் படைப்பு பற்றிய ஒரு திறனாய்வையும் முன் வைத்தார் செல்வராஜ்.

“முன்பு என் நாவலில் ஒரு தலித் சாதியைப் பெயர் குறிப்பிட்டு எழுதியபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்கள். சாதி இழிவு இங்கே இருக்கிறவரையில் சாதியைப் பெயர் சொல்லித்தான் எழுதுவேன் என்று நான் சொன்னேன். இன்றைக்கு அவர்களே தங்களுடைய சாதிப்பெயரை இலக்கியத்தில் மட்டுமல்லாமல் சமூகப் போராட்டத்திலும் குறிப்பிடுகிற நிலை வந்திருக்கிறது. ஆனால் அவர்கள் அவலங்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறார்கள். தலித்துகள் மற்ற மக்களோடு இணைந்து போராடியாக வேண்டும். மற்றவர்களும் தலித்துகளோடு இணைந்து போராடியாக வேண்டும். வீரமும் தன்மானமும் கொண்ட, வர்க்க உணர்வோடு சமுதாயத்தை வழிநடத்துகிறவர்களாக தலித் தொழிலாளிகளை சித்தரித்திருக்கிறேன்.” நாவலாசிரியர் இப்படிக் கூறியதன் மூலம் ஒரு ஆரோக்கியமான, அவசியமான வர்க்க-வர்ண-இலக்கிய விவாதத்திற்கு வழிவகுத்திருப்பதாகவே எனக்குப் பட்டது.

வாழ்த்துரை வழங்கிய தமுஎகச தென் சென்னை மாவட்டச் செயலாளர் கி. அன்பரசன், வட சென்னை மாவட்டச் செயலாளர் நா.வே. அருள், நன்றி நவின்ற புத்தக நிறுவன செயல் இயக்குநர் ஜி. துரைராஜ், நிகழ்ச்சி முடிந்த பின்னும் நெடுநேரம் படைப்பாளியோடு கைகுலுக்கிப் பேசிக்கொண்டிருந்த பார்வையாளர்கள் அனைவரது சொற் களிலும் இதே போன்ற சிந்தனை வெளிப்பட்டது.

Pin It