காதம்பரி......!

அவள் பெயரில் மட்டும் வசீகரமில்லை, தோற்றத்திலும், குணத்திலும், ரசனையிலும்.... இப்படி என்னென்னவோ சொல்லலாம்... அவள் தோழமைக்கு ஏங்குபவர்கள் ஆயிரக்கணக்கைத் தாண்டலாம்.... சே...! ஏன் என் புத்தி இப்படிப் போகிறது?

அவள் எல்லோருடனும் நன்கு பழகுபவள். அன்பு மிக்கவள். அவள் எப்போதும் எல்லை மீறியவள் அல்லள். சாதாரணமாக தும்மினால்கூட காற்றைவிட வேகமாக வதந்தி பரவிவிடும் இக்காலத்தில் அவளைப் பற்றித் தவறுதலாக ஒரு 'கிசு கிசு'வோ வதந்தியோ பரவியதில்லை. இத்தனைக்கும் அவள் செல்லும் கூட்டங்களுக்கெல்லாம் முடிந்தவரை நானும் போய்விடுவேன். அவளோடு தோழமையோடு இதுவரை பழகிவருகிற எத்தனையோ இலக்கிய வட்ட நண்பர்கள் எனக்கும் நண்பர்களே. நண்பர்களும் அப்படித்தான். எல்லோர்க்கும் அவளிடம் ஒரு ஈர்ப்பு இருந்ததாய் என்னால் உணர முடிந்தது. அதில் எனக்கு கொஞ்சம் பொறாமையும் உண்டு.

ஆனால் அவளுக்கும் எனக்கும் குடும்பம் என்ற ஒரு கட்டமைப்பு இருக்கிறது. எந்தவொரு பெண்ணையும் தவறான நோக்கில் காணும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு நானே பலமுறை அறிவுரை சொல்லிக் கொண்டதுண்டு. ஆனால் வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதைதான். அவளைக் காணும் சந்தர்ப்பங்களில் எல்லாம் என்னையும் மீறி எண்ணங்களை ஆக்ரமித்துக்கொள்ள இவள் போன்ற பெண்ணால் எப்படி சாத்தியப்படுகிறது என்று வியந்திருக்கிறேன்.

indian lady 565"டேய் ராகவா! டவுன் ஹாலில் இன்னைக்கு ஒரு இலக்கியக் கூட்டம் இருக்குது. பத்திரிக்கை உனக்கு வந்ததா?"

காதம்பரி அதில் பாரதியார் பாடலைப் பாடுகிறாளாம். அவள் கணவர் பெயரோடு 'காதம்பரி விஸ்வநாதன்'ன்னு போட்டிருந்தது.

"நீ வர்றியா?" என்றான் என் கல்லூரித் தோழன் வைத்தி என்னும் வைத்தியநாதன்.

"போகலாம்னு இருக்கேன். வீட்ல ஒரு வேலை. பார்க்கலாம். முடிஞ்சா வரேண்டா". என்றேன்.

படுபாவி! இவனுக்கும் பத்திரிக்கை வந்துவிடுகிறது. நான் எங்கே பாடலை பார்க்கப் போகிறேன். காதம்பரி என்ற பெயரை மேடையில் உச்சரிக்கும்போதே எங்கிருந்தோ அரங்கத்தின் மூலையில் இருந்து தேவதைபோல் எழுந்து காற்றில் மணம்பரப்ப, அவள் விரைவாக மேடையை நோக்கி நடப்பதிலிருந்து, அவள் கைகளும் உதடுகளும் தருகின்ற அசைவினில் என்னை மறந்து லயித்துப் போவேன். இவன் என்னைத் தேடிப் பிடித்து பக்கத்தில் வந்து என்னிடமே காதம்பரியின் பாடலை ஆஹா, ஓஹோ என்று புகழுவதோடு அவள் என்னவோ இவனிடம் மட்டுமே மிகவும் நெருக்கமாக இருப்பதுபோல் பேச ஆரம்பித்து விடுவான்.

தோற்றமும் சரி, தேனினும் சுசீலாம்மாவின் குரலும், ஜானகி அம்மாவின் குரலும் கலந்த கலவையாகத் தோன்றும்.

என் மனைவியிடம் காதம்பரியைப் பற்றி நிறைய கூறியிருக்கிறேன். அவள் அரங்கேற்றம் செய்த வயலின் கச்சேரிக்கும் அழைத்துச் சென்றிருக்கிறேன். அவள் எழுதிய சிறுகதைகள் எந்தப் பத்திரிக்கையில் வந்தாலும் என் மனைவி காவேரியிடம் காட்டிப் படிக்கச் சொல்லுவேன். காதம்பரிக்கு நான் ஒரு பிரபல எழுத்தாளன் என்ற வகையில் என்னிடம் மிகவும் மரியாதை கலந்த அன்புண்டு. அவள் என் விமர்சனங்களைக் கேட்பதிலும், பதிலுக்கு அவள் எழுத்துக்களை நான் விமர்சிக்கும் ரீதியிலும் பரஸ்பர ஆர்வம் கொண்டிருந்தோம் என்ற ஒரு விஷயமே எங்களுக்குள் பழகவும் பேசவும் எளிதான வாய்ப்புகளைத் தந்து கொண்டிருந்தன.

ஓரு முறை நானே காதம்பரியிடம் பேசும்போது

"ஒரு நிமிஷம் காதம்பரி. உங்களோட என் மனைவி காவேரி பேசணுமாம்" என்று அலைபேசியைக் கொடுத்துவிட்டேன். அன்றைய பொழுதெல்லாம் அவள் எனக்கு மட்டுமல்ல. என் மனைவிக்கும் நெருங்கிய தோழி ஆகி விட்டாள் என்ற மகிழ்ச்சியில் திளைத்தேன்.

என் மகிழ்ச்சிக்குச் சிகரம் வைத்ததுபோல காவேரியே,

"என்னங்க, இந்த நவராத்திரிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு நாள் காதம்பரியைக் கூப்பிடலாமேன்னு நெனைக்கிறேன்" என்றபோது, நான் ஏதோ மூன்றாம் மனிதன் போல அவள் சொல்கிறாளே என்கிறமாதிரி எனக்குள் பொங்கிய ஆவலை மறைத்துக் கொண்டு,

"ம்..ம்..ம்... இது பெண்கள் விழா. நான் சொல்ல என்ன இருக்கு.. கூப்பிடேன்.. " என்று முகத்தை மிகச் சாதாரணமாய் வைத்துக் கொண்டேன்.

என் குடும்பத்தில் எனக்கும் காவேரிக்கும் பலமுறை சச்சரவுகள் வந்து போகும். உறவுகளை, சூழ்நிலைகளை என் சுபாவத்தை அனுசரித்துப் போவதில்தான் இந்தக் குளறுபடிகள் நடக்கும். இது எல்லோர் குடும்பங்களிலும் வருவதுதான் என்றாலும், சிலநேரங்களில் வாக்குவாதம் உச்சகட்டத்திற்குப் போய் விடுகையில் உண்ணாவிரதம், பேசா விரதம் என்பதில்போய் முடியும். மனம் ஒரு சலிப்பு வெறுப்பில் இருக்கும்போதெல்லாம் காதம்பரியிடமிருந்து அவ்வப்போது வரும் நகைச்சுவைத் துணுக்குகள், வாழ்த்துகள், சுவையான இலக்கியச் செய்திகள் என் மனதுக்கு மிகவும் ஆறுதலைத் தருவதாய் உணருவேன். அதிலும் அவள் என் மனைவிக்கென பிரத்தியேகமான சமையல் குறிப்புகள், ஆன்மீகச் செய்திகள் என்று அவள் விருப்பம் அறிந்து பொதுவில் அனுப்புவாள்.

"காதம்பரி, காய்கறி மார்க்கெட்டுக்கு வந்தேன். காவேரி கூப்பிட்டா போல. அவசியம் கொலுவுக்கு வந்துடுங்க, நானும் ஆவலோடிருக்கேன்" என்று சொல்லிவிட்டு அதற்குமேல் பேச முடியாமல் வைத்துவிட்டேன். என்னையறியாமல் கண்ணில் நீர் நிறைய, உதட்டை அழுத்தி அடக்கிக் கொண்டேன். பொது இடத்தில் என் நடவடிக்கை எனக்கே புதிராகவும் வெட்கமாகவும் இருந்தது.

சாருகேசி ராகத்தில் "நீயே கதி ஈஸ்வரி......" என்று தொடங்கிய காதம்பரியைக் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த காவேரியை அவ்வப்போது நோக்கினேன். ஊதுபத்தி மணமும் அந்த அடுக்கு மாடியின் மூன்றாவது தளத்தில் இருந்த என் வீடும் அந்தக் கணங்களில் எனக்கு சொர்க்கபுரியாகப்பட்டது.

"பாட்டு ரொம்ப நல்லா இருந்தது. நல்ல குரல்வளம் உங்களுக்கு. வெத்திலை பாக்கு வாங்கிக்கோங்க" என்றபடி தட்டில் ஒரு பட்டு ரவிக்கையோடு நிறைதாம்பூலம் பூக்களைக் கொடுத்துவிட்டு,

"அடிக்கடி வாங்க, உங்க வீட்டுக்காரரையும் அழைச்சிட்டு வாங்க" என்று புன்னகையோடு கூறினாலும், அது சுருதி பிசகிய வீணை இசைபோல் சூழ்நிலைக்குப் பொருந்தாத சொற்களாய்ப்பட்டது. காவேரியின் சுபாவமே அப்படித்தான். யாரிடம் எப்போது எப்படிப் பேசவேண்டும் என்றே தெரியாமல் உளறி எதிரிலிருப்பவர்களை சங்கடத்தில் ஆழ்த்துவாள். மெல்ல காதம்பரியின் முகத்தைப் பார்த்தேன்.

"ஆகட்டும் மாமி, அவசியம் குடும்பத்தோடு வருகிறேன்" என்று கூறினாலும், சட்டென்று அந்த நிலவு முகத்தில் மேகங்கள் கடந்துபோன இருட்டாய் ஒரு சோகமும் வந்து போனதைக் காவேரி கவனித்தாளா என்று தெரியவில்லை. நான் கண்டுகொண்டேன்.

"லிப்ட்'ல கொண்டு விட்டுட்டு, அப்படியே ஆட்டோ கிடைச்சா ஏத்தி அனுப்பிட்டு வரேன் இவங்களை” என்றபடி காதம்பரியோடு கீழிறங்கி வந்து ஆட்டோவுக்காகக் காத்திருந்த அந்த நொடிகளில் அவள் ஏதோ சொல்ல நினைத்ததுபோல் தோன்றியது.

அவள் என் வீட்டுக்கு வந்துபோனபின், குடும்பத்திற்கும் அறிமுகம் ஆனபின், இன்னும் அவள் தோழமையை நெருக்கமாய் உணர்ந்தேன். அவளும் அப்படி நினைத்திருக்கலாம் என்பதை அதன்பின்னர் அவள் என்னிடம் நேரிலும் அலைபேசியிலும் பேசும்போதெல்லாம் உணர்ந்தேன்.

அவள் சில வருடங்களுக்கு முன் எனக்குப் பரிசளித்த அவளின் கைவண்ணத்தில் வெளியான இரண்டு கவிதைத்தொகுப்புகளை அடிக்கடி எடுத்து மீண்டும் மீண்டும் படிக்கத் துவங்கினேன். அவளுக்கு கவிஞர் என்ற அங்கீகாரத்தையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்த படைப்புகள் அல்லவா அவை? சில தலைப்புகளில் அவள் பேசும் கூட்டத்திற்கு நல்ல வரவேற்பிருக்கும். கூட்டம் முடியும் சமயம் இரவு 9 மணியைத் தாண்டிவிட்டால் அவள் முகத்தில் கலவரம் கூடிவிடும். நான் அவளை என்னுடைய காரிலோ அல்லது பேருந்திலோ பத்திரமாக வழியனுப்பிவிட்டு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தேன். வீடு சேர்ந்ததை மிகப் பொறுப்புடன் குறுஞ்செய்தியாக அனுப்பும் பொறுப்பு என்னைக் கவர்ந்தது.

நாட்கள் மாதங்கள் உருண்டோடின. என் நண்பர்கள் வட்டத்தில் முரளியும் கோவிந்தும்தான் என்னை மிகவும் கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

"இப்பல்லாம் அந்தக் காதம்பரி கலந்துக்குற கூட்டத்துல அவளை பத்திரமா உன் கார்ல வீடு வரைக்கும் கொண்டு விடறியாமே”

“சே! நீங்கல்லாம் நினைக்கிறபடியில்லடா. அவள் கொஞ்ச தூரத்துலயே இறக்கிவிடச் சொல்லி பத்தடி இருக்கிற அவ வீட்டுக்கு நடந்தே போய்டுறா. வீட்டுக்கு வந்துட்டுப் போங்கன்னு" ஒரு வார்த்தை கூடச் சொன்னதில்லை. அவள் கூப்பிடாம போறது அவ்வளவு நல்லதில்லைனு எனக்கும் தெரியும். ஏண்டா, உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது விவஸ்தை இருக்கா? அவளுக்கு என் பையன் வயசுல ஒரு பொண்ணும், அவளுக்கு அடுத்து ஒரு பையனும், ரொம்பப் "பொசசிவ்"வான ஒரு புருஷனும் இருக்கான்ற நெனப்பே இல்லாம பேசறீங்களேடா" உங்களையெல்லாம் திருத்தவே முடியாது" உள்ளுக்குள் ரசித்தாலும் மேலுக்கு இயல்பாய் பேசுவான் ராகவன்.

இந்த வருடம் நவராத்திரிக்குச் சரியாக மூன்று நாட்கள் முன்பே என் பெற்றோரின் சதாபிஷேகம். நாள் குறிக்கப்பட்டது. காவேரியிடம்,

"நம்ம உறவுகளுக்கு மட்டும் 50 பத்திரிக்கைகள் போதும், அப்புறம் நண்பர்கள் வட்டத்துக்கு மட்டும் முகநூல், கட்செவினும் ஒரு குறுஞ்செய்தி மட்டும் அனுப்பிடுறேன். என்ன சொல்ற?" என்றான் ராகவன்.

"நான் என்ன சொல்றது? எப்ப பாரு முகநூல். பத்தாததுக்கு ஆம்பள நட்பு இருக்கோ இல்லையோ, பொம்பளைங்க உங்க கதை, ரசிகைன்னு சொல்லி நாள் பூரா அலைபேசில 'கடல' போட்டுக்கிட்டு, கெக்க பிக்கன்னு பேசிக்கிட்டு ரொம்ப இளவட்டம் கணக்கா நாளை ஒட்டிக்கிட்ருக்கீங்க. நம்ம புள்ளைக்கு பொண்ணு பாக்குறேன் பேர்வழின்னு அவனுக்கு வர்ற பொண்ணுங்க போட்டோ ஒன்னு விடாம அவனுக்கு முன்னாடியே பாத்து, என்னமோ உங்களுக்கு பாக்குற மாதிரி மொறச்சிப் பாத்துட்டு, விசாரிக்கிறேன்ற சாக்குல ஏதாச்சும் ஒரு மாமிக்கிட்ட ஜொள்ளு விட்டுக்கிட்டிருப்பீங்க. இப்போ பெருசா நல்ல புள்ள மாதிரி என்கிட்டே பணிவா அபிப்ராயம் கேக்குறீங்க. வழக்கம்போல உங்க இஷ்டம்" உதட்டை அலட்சியமாய்ச் சுளித்து கேலியும் கிண்டலுமாய்(?) நகர்ந்தாள் காவேரி.

"ஏய்.. திம்சு!" (மிக நெருக்கமான தருணங்களில் மனைவியை இப்படித்தான் கொஞ்சுவான். அவளை எட்டிப் பிடித்து பின்னாலிருந்து காதில் கிசுகிசுத்தான்.

"ஆயிரம் ரசிகையிருந்தாலும் என் திம்சுக்கு நிகராகுமா?" இங்க பாரு. உள்ளூர்ல காதம்பரி மட்டும்தான் இருக்கா. அவளை நவராத்திரிக்கும், சதாபிஷேகத்துக்கும் சேர்த்தே போன்ல அழைப்பு குடுத்துரு. மத்தவங்களுக்கு நான் பார்த்துக்கிறேன்."

"அதானே பார்த்தேன். காதம்பரிய விடமாட்டீங்களே." உள்ளங்கைகளை விரித்து அழகு காட்டினாள்.

"நிச்சயம் கூப்பிடுறேன் போதுமா. ஆகுற வேலையைப் பாருங்க".

சதாபிஷேகம் விமரிசையாக நடந்தேறியது. காதம்பரி மட்டும் வரவே இல்லை. வைபவத்தில் ராகவனுக்கும், காவேரிக்கும் இடுப்பொடிய வேலை. தேடித் தேடி மிக நெருங்கிய உறவுகளுக்கு நேரில் சென்று பத்திரிக்கை வைப்பதிலும், பூஜைக்கு சாமான்களை வாங்குவதிலும், வரவேற்பதிலும், சமையலுக்கு ஆட்களை நியமித்து வேலை வாங்குவதிலும், இலைக்கொருவராக தனித் தனியாக உபசரிப்பதிலுமாய்ப் பொழுது பறந்தது. கூட்டத்திலும், வாசலிலும், காதம்பரியைக் கண்கள் தேடிச் சோர்வுற்றன. அதைக் கண்டும் காணாததுபோல் வேலைகளில் மும்முரமாய் இருந்தாள் காவேரி. விழா முடிந்த இரவே அடக்க மாட்டாமல் காவேரியைக் கேட்டேவிட்டான்.

"ஏன் காதம்பரி வரவில்லை?"

"அவளுக்கு என்ன அவசர வேலையோ, விடுங்க, நவராத்திரிக்கு வருவா பேசிக்கலாம்."

இவனின் தவிப்பறியாது களைப்பில் தூங்கிவிட்டாள். அவனும் கேள்விகளோடும், ஏமாற்றத்தோடும் தூங்கிப்போனான்.

நவராத்திரி பொழுதுகள் ஓடிவிட்டன. இன்னும் நான்கு நாட்களே மிச்சமிருந்தது நவராத்திரி முடிய. எத்தனையோ அக்கம்பக்கத்து பெண்கள் வந்து சுண்டலும் தாம்பூலமும் வாங்கிச் சென்றார்கள். ஒரு சிலர் பாடும்போது இவன் காதுகள் செவிடாய் எங்கோ நினைவில் மிதந்தபடி சொல்லிக்கொண்டு விடைபெறுபவர்களிடம் அசட்டுச் சிரிப்பைத் தவழ விட்டுக்கொண்டு போலியாய் நடந்து கொண்டவிதம் அவனுக்கே எரிச்சலை உண்டு பண்ணியது. காவேரி கூப்பிட்டும் ஏன் வரவில்லை? ஒரு போனாவது பண்ணியிருக்கலாமே, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா......பாடலை சோகமாய் இதயம் ஒரு மூலையில் பாடிக்கொண்டிருந்தது.

அவளின் தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ள மனம் ஏனோ சம்மதிக்கவில்லை. நவராத்திரியும் முடிந்தது. இவன் ராத்திரிதான் விடியவில்லை!

அடுத்த இரு நாளும் தலைவலியும் உடல் சோர்வும் லேசான காய்ச்சலோடும் உறங்கியவன், காலாற நடக்கலாமென்று கடைவீதியிலிருந்து தஞ்சை செல்லும் பொது வழிச்சாலைக்கு வந்து, கையில் வைத்திருந்த மஞ்சள் பையில் அங்கு தள்ளுவண்டியில் புத்தம் புதிய காய்கறிகளை வாங்கிக் கொண்டிருக்கையில், அவனைக் கடந்து சென்ற ஒரு சிவப்பு மாருதி கார் சற்றுப் பின்வாங்கி ஓரம் கட்டி நின்றது.

"ராகவன்! எங்க இந்தப் பக்கம்?"

காரின் முன்கதவைத் திறந்துகொண்டு சிவப்புப் பட்டுப் புடவை, தலை நிறைய பூவுடன் முகமெங்கும் புன்னகை பரவ காதம்பரி! அவள் கணவரையும் பிள்ளைகளையும் அறிமுகப் படுத்தினாள். கொடுத்துவைத்தவள் காதம்பரி என்று மனம் கூற, கை குலுக்கிய கணவரையும் புன்னகைத்த அவள் வாரிசுகளையும் கண்களால் அளந்தான்.

"சும்மா வாக்கிங் வந்தேன். எதிர்பார்க்கல.... ஏன் வரல அப்பா சதாபிஷேகத்துக்கும், நவராத்திரிக்கும். ஒரு போனாச்சும் பண்ணி இருக்கலாமே...." வாய் குளறி தொண்டை அடைப்பதுபோல் தோன்ற நல்லவேளையாக நிறுத்தினான்.

அவளோ வெகு இயல்பாக,

"அடடா, எனக்குத் தெரியாதே, தவறவிட்டுட்டேனே," என்றபடி,

"நாளைக்கு உறையூர்ல ஒரு இலக்கிய கூட்டத்துல பேசறேன். உங்களோட கதை குங்குமத்தில் சமீபத்துல பத்தாயிரம் பரிசு வாங்கிச்சுன்னு சொன்னீங்களே போனமாதம், அதை எடுத்துட்டு வாங்க முடிஞ்சா. அந்தப் புத்தகம் எனக்கு கிடைக்கல. இப்போ தஞ்சாவூர்ல இவரோட நண்பர் வீட்டு விசேஷத்துக்குப் போறேன். நாளைக்குப் பாப்போம், உங்க வீட்டுக்கு ஒரு நாளைக்கு எங்க குடும்பத்தோடு வந்து உங்கப்பா அம்மாட்ட ஆசீர்வாதம் வாங்கிக்கறேன்" என்றபடி சென்றுவிட்டாள்.

"என்ன இது? காவேரி அவளை அழைக்கவில்லையா? மறந்து போனாளா? அல்லது வேண்டுமென்றே... சே, சே அப்படி இருக்காது." ஏன் காதம்பரி வரவில்லை என்று கேட்டபோதுகூட, அவள் மறந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லையே. குழம்பியவாறே வீடு சேர்ந்தவன், முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமலே, அவளைக் கேட்கலாமா வேண்டாமா என்று நினைத்தவன், மிகவும் நிதானத்தோடு சட்டையைக் கழற்றியபடியே,

"காவேரி.. வழியில காதம்பரியைப் பாத்தேன். குடும்பத்தோட ஏதோ ஒரு விசேசத்துக்குப் போறதா காரை நிறுத்தி சொல்லிட்டுப் போனா. அவ புள்ளைங்க ரெண்டும் ரொம்ப அழகு. வீட்டுக்காரரையும் அறிமுகப்படுத்தி வச்சா" சொல்லிவிட்டு அவள் முகத்தை உற்று நோக்கினான்.

அவளோ, "ஓஹோ!" என்றபடி கொல்லைப்புறத்துக்கு சென்று அங்கிருந்த வாழை இலையைச் சதுரமாக வெட்டிக்கொண்டு வந்து அடுக்களைக்குள் நுழைந்து வடையைத் தட்ட ஆரம்பித்தாள்.

இவனும் அவளிடமிருந்து ஏதேனும் பதில் வருகிறதா என்று எதிர்பார்த்தபடி அங்கிருந்த பானையின் குளிர்ந்த நீரை எடுத்துக் பருகினான் எரிச்சல் தணிய.

அந்த ஒரு நிமிடம் அவள் பதிலுக்காக காத்திருந்தவன் பொறுமையிழந்து,

“காதம்பரியைக் கூப்பிடலையா நீ நம்ம விசேஷத்துக்கு?“

"ஆமா! கூப்பிடலை. அதுக்கென்ன..... இப்........"

அவள் எதிர்பார்க்கவில்லை முடிப்பதற்குள் 'பொளேர்' என்று அறைந்துவிட்டு வெளியேறியவனை குற்ற உணர்வோடு மிரட்சியும் அதிர்ச்சியுமாய்க் கன்னத்தைப் பிடித்தபடி கண்களில் கண்ணீர் வழியப் பார்த்தாள். அடுப்பை அணைத்துவிட்டு கையிலிருந்த மாவையும் எண்ணையையும் வழித்துக் கழுவிவிட்டு படுக்கையில் சரிந்து தேம்பினாள்.

சரியாக மணி காலை பத்து. மதிய சாப்பாடை வெளியில் முடித்துக் கொள்ளலாம் என்று தோன்றியது. அந்தச் சூழலில் இருந்து விடுபடவே விரும்பி காரை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பினான் பெற்றோரிடமும் காவேரியிடமும் சொல்லிக் கொள்ளாமலே.

அவனுக்குப் பிடித்த காவேரிப் படித்துறையில் தென்னை மரங்களிடையே ஒரு ஓரமாய்க் காரை நிறுத்திவிட்டு அமர்கையில், அப்பாவிடமிருந்தும் காதம்பரியிடமும் அழைப்புகள் வந்திருந்ததைக் கவனித்தான். முதலில் அப்பாவை அழைத்தான்.

"டேய், ராகவா.. எங்கடா இருக்க? காவேரிக்கும் உனக்கும் இன்னைக்கி என்ன பிரச்சனை? அழுது முகம் வீங்கிப் போச்சு. உங்கம்மா அவளுக்கு ஏதோ சமாதானம் சொல்லி அவளை ஓய்வெடுக்கச் சொல்லிட்டு, சமைச்சிக்கிட்டிருக்கா. எதுவாயிருந்தாலும் வீட்டுக்கு சாப்பிட வந்துடுறா" கெஞ்சியது மனதை என்னவோ செய்தது.

"சரிப்பா, அதெல்லாம் ஒண்ணுமில்லை. நீங்க அலட்டிக்க வேணாம். நான் சாப்பிட வந்துடுவேன். என்னோட பழைய நண்பனுக்கு உடம்பு சரியில்ல. அவனைப் பார்த்து விசாரிக்கத்தான் வந்தேன்." பொய் தேவைப்பட்டது அவனுக்கு.

அடுத்து காதம்பரியிடம் பேசினான். நடந்ததை எல்லாம் கூற பொறுமையாகக் கேட்டவள்,

"சொன்னாப் புரிஞ்சுக்குவீங்க. காவேரி ரொம்ப நல்லவங்க. வீட்டுக்குப் போயிச் சாப்பிட்டு அவங்களைச் சமாதானப் படுத்துங்க."

கலகலவென்று சிரித்து,

"இவ்வளவுதானா ராகவ்?... ஒரு விதத்துல என் கணவரைப் போன்ற ஆண்களும், காவேரி மாதிரி ஒரு பெண்ணையும் எனக்கு ஒரே நேர்கோட்ல வெச்சுதான் பார்க்கத் தோணுது . இவங்க மேல ஒரு குற்றமும் கிடையாது. இவங்கல்லாம் நம் அன்புக்காகவும் அருகாமைக்காகவும் ஏங்குறவங்கதான்." எல்லாப் படைப்பாளிகளுக்கும் சரி, கலைஞர்களுக்கும் சரி. தம்பதிகளுக்கிடையே வர்ற "ஈகோ" தான் இது. நீங்க மட்டுமில்ல, என்னை மாதிரி தேடல் உள்ள பெண்களுக்கெல்லாம் ஏற்படும் அனுபவம் இது. சாதிக்கட்டமைப்புகளால் மட்டுமல்ல, அதை எதிர்த்து நின்று சாதித்திருந்தால் நம் காதல் என்றோ நிறைவேறி இருக்கும். பெண்ணாயிருந்தாலும் என்னிடம் இருந்த துணிவு உன்னிடம் இல்லாது போயிருந்ததில் அன்று பெருத்த அவமானமும் ஏமாற்றமும் என்னைச் சூழ்ந்திருந்தது உண்மைதான். காரணம் திருமணமாகாத இரு தங்கைகளின் பொறுப்பான அண்ணன் நீ. வேதனை மறக்க, என் குடும்பத்தினர் எனக்குக் கொடுத்த நெருக்கடியில்தான் விசுவை மணந்தேன் என்பதை இன்றுவரை ரகசியமாய் வைத்திருக்கிறேன். நம்மோடு போகட்டும். பின் பல வருடங்கள் தொடர்பற்றுப் போயிருந்ததில் காயங்கள் ஆறியிருந்தன தழும்புகளுடன்.

"அது சரி காதம்பரி. அவளுக்கு நம் நட்பைப் பற்றின விஷயத்தையெல்லாம் பேச்சுவாக்கில் சொல்லி இருக்கிறேன் கனிவான பொழுதுகளில்."

“இல்ல ராகவ்! அங்கதான் தப்பு பண்றீங்க, அவங்கவங்களுக்கு அந்தரங்க மனசுன்னு ஒன்னு இருக்கும். ஆனா நியாய தர்மங்களுக்கு உட்பட்டுதான் நிச்சயம் நாம் நடந்துக்குவோம். என்னைப் பத்தி நீங்க அதிகமா ஒரு படி மேல போயி அப்படியே வெளிப்படுத்தினா ஒரு பெண் மனசு இயல்பாய் இப்படித்தானே நினைக்கும்? அவளோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க. மண்ணுக்குள்ளே மறையும்போது நிறைவேறாத, சொல்லமுடியாத, விஷயங்கள் எல்லாருக்கும் கண்டிப்பா ஒன்னு இருக்கும். அது எந்த ஒருவரின் மனசையோ வாழ்க்கையையே பாதிக்காம பாத்துக்கிறதுலதான் அவரவருடைய மகிழ்ச்சி இருக்கும். ஒரு குடும்பம் அமைந்துவிட்டால் கிடைத்த உறவுகளைப் பேணுவதில், கடந்தகால ஏமாற்றங்களை, சோகங்களை மறந்து சொந்தங்களுக்காகவே தன்னை தாரை வார்த்துக்கொள்வாள். அப்படிப்பட்டவங்க வாழ்க்கைல மீண்டும் புயல் வீச, குழப்பத்தை, மனக்கசப்பை ஏற்படுத்த யாருக்கும் உரிமை இல்லை. பழைய நட்பை ஒரு நல்ல நோக்கத்தோட புதுப்பிச்சுக்கறதுல தவறில்லை. அந்த நட்பு எதிர்பார்ப்பைக் கடந்ததாக, வரம்புக்குட்பட்டதாக இருந்தால் இருவருக்குமே நல்லது. அதுதான் நியாயமும் கூட. அது முடியாதுன்ற பட்சத்தில விலகி நிக்கறது தான் மரியாதை. இது இருபாலினருக்கும் பொது".

“நீ சொல்றது புரியுது காதம்பரி. ஆனா...."

"போதும் ராகவ். இனி இதைப் பற்றி பேசவேணாம். உண்மையிலேயே உங்களுக்கு என்மேல் பிரியமும் மதிப்பும் இருந்தா நீங்க நிச்சயம் நான் என்ன சொல்லவரேன்னு புரிஞ்சுக்குவீங்க."

அடுத்தநாள் மாலை ராகவை அழைத்தபோது,

"இப்போதான் வீட்டுக்குள்ள நுழையறேன். கிருஷ்ணபவன் அல்வாவும் முல்லைப்பூவுமாய்..." கடகடவெனச் சிரித்தான் ராகவன்.

"ராகவ்! விசு காவேரிகிட்டப் பேசணுமாம். அவகிட்ட போனைக் கொடு." என்றாள்.

காவேரியிடம் "நல்லா இருக்கீங்களா? காதம்பரியும் நானும் அப்பா சதாபிஷேகத்துக்கு வரலாம்னு திட்டம் போட்டிருந்தோம். பரிசு கூட வாங்கி வச்சிருந்தோம். பத்திரிகை அனுப்பாட்டியும் பரவால்ல. பரபரப்புல மறந்துட்டிங்க போல. இதோ இப்போ வரோம். நல்ல டிகிரி காப்பியும் உங்க சாத்தூரு கார சேவையும் தயாரா வைங்க" என்றான் விசு ஏதோ நெடுநாள் பழகியவன் போல் உரிமையாக.

"இதோ அண்ணா, எதையும் மனசுல வச்சுக்காதிங்க. காதம்பரியோட தாராளமா இப்போ வரலாம்" என்று சிரித்தவளாய் ராகவை நெருங்கி அவன் கையிலிருந்த முல்லையைச் சூடிக்கொண்டாள் காவேரி.

கருமேகங்கள் விலகிட சந்தேகச் சூரியன் இளஞ்சிவப்போடு மறையத் தொடங்கியிருந்தான்.

- தனலெட்சுமி