நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியைக் குறைப்போம் என்று முழக்கமிடாத எந்த அரசியல் கட்சியும் இல்லை. 60 ஆண்டுகளுக்கு மேலாக நம் காது கிழிய இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டுதான் வருகின்றோம். ஆனால் விலைவாசிதான் குறைந்தபாடில்லை. விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டைப் போல் பெட்ரோல் விலை மேலும்மேலும் உயர்ந்துகொண்டு தான் வருகிறது.

கடந்த மன்மோகன் சிங் அரசு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு அனைத்தின் விலை நிர்ணய அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களுக்கே ஒப்படைத்தது. அதன்பிறகு எரிபொருட்களின் விலை என்பது சர்வதேச விலைகளுக்கு ஏற்றாற்போல் நிர்ணயிப்பதாக மக்கள் காதில் இன்றுவரை மத்திய மாநில அரசுகள் பூ சுற்றி வருகின்றனர். ஆனால், உண்மை நிலை வேறாக இருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் 1 டாலர் உயர்ந்தால் இங்கு 2 டாலருக்கு சமமாக விலையேற்றப்படுகிறது. ஆனால், பலமுறை விலை குறைந்தாலும் ஒரு சிலமுறை மட்டுமே விலை குறைக்கப்படுகிறது. அதுவும் சர்வதேச சந்தையின் விலை இறக்கத்திற்கு நிகரான அளவுக்கு குறைக்கப்படுவதில்லை. பெயரளவுக்கு 1 ரூபாய் அல்லது 2 ரூபாய் மட்டுமே குறைக்கப்படுகிறது. அந்த வகையில் நமது அரசு மக்களை ஏமாற்றும் மிகப்பெரிய முதலாளியாக நடந்துகொள்கிறது. இன்றைக்கு இருக்கின்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் மொத்த நிதி மூலதனமும் மக்கள் வரிப்பணம் மூலம் பெறப்பட்டது என்பதை இவர்கள் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர்.

விலை உயர்வும் காரணங்களும்

· சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை தினந்தோறும் ஏறுவதும் இறங்குவதும் என்ற நிலையில் உள்ளதால் ஒரே நிலையில் விலையைப் பராமரிக்க முடியாது.

· டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.

· தொடர் செலவினங்கள், விரிவாக்கப் பணிகள், கச்சா எண்ணெய் விலை உயர்வுப் போன்ற காரணத்தினால் எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகின்றன.

மேற்கண்டக் காரணங்களால் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறுவழியில்லை என்று சொல்லப்படுகிறது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் ((IOC)), இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேன் போன்ற எல்லா நிறுவனங்களின் நிதி நிலையும் இலாபமும் புதிய விரிவாக்கப் பணிகளும் சொத்துக் களின் மதிப்பும் உயர்ந்துகொண்டுதான் வருகிறது. ஆனால், அரசோ எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக திட்டமிட்டுப் பொய்க்காரணங்களைக் கூறி வருகிறது. எடுத்துக்காட்டாக ஒரு சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் மற்றும் ஓ.என்.ஜி.சி. இன் எண்ணெய் மற்றும் எரிவாயு துரப்பனப் பணிகள் பிரேசில், பிலிப்பைன்ஸ், வெனிசுலா, சில ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமல்லாது சீனாவுடன் கூட்டு ஒப்பந்தங்களிலும் இலட்சக்கணக்கானக் கோடி நிதி மூலதனத்தை முதலீடு செய்து வருகின்றன. நட்டத்தில் இயங்கும் எண்ணெய் நிறுவனங்கள் எப்படி இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியும்.

மேலும் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த எரிவாயு பயன்பாட்டில் சராசரியாக 30 விழுக்காடு உள்நாட்டில் எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது உள்நாட்டு உற்பத்தியைக் கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுக்கு 20 விழுக்காடு அதிகரித்து வருகிறது. அதே வேளையில் வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை ஒவ்வொரு ஆண்டும் குறைத்துக் கொண்டு வருகிறது. அப்படி இருக்க எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகிறது என்ற வாதம் திட்டமிட்டப் பொய் என்று தெரிகிறதுதானே.

மேற்படி அட்டவணை நமது கற்பனை அல்ல, எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ நிதிநிலை அறிக்கையில் இருந்து பெறப்பட்டவை. இந்த மூன்று நிறுவனங்கள் மூலம் மட்டும் 2010 - 2011 ஆண்டின் நான்கே மாதங்களில் அரசுக்கு கிடைத்த இலாபம் 10,699.01 கோடிகளாகும். ஓராண்டு காலத்திற்கு இந்த இலாபத்தைக் கூட்டினோம் என்றால் மூன்று நிறுவனங்களால் பெறப்படும் மொத்த இலாபம் சுமார் 50,000 கோடிகளைத் தொட்டுவிடும். இப்போதைய நிலைவரை இதை ஆண்டுக்கு 20% கூட்டினோம் என்றால் இலாபம் கூடிக் கொண்டேதான் போகின்றது. இவ்வளவு உண்மைக்குப் பிறகும் அரசு, எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாகச் சொல்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வைக் காரணம்காட்டி விலை உயர்த்தப்படுவது திட்டமிட்ட மோசடியாகும். உள்நாட்டில் உற்பத்தியாகும் 30% எண்ணெய் எரிவாயுவிற்கும் சேர்த்து சர்வதேச விலையை நிர்ணயிக்கின்றனர். இது செய்யாத செலவிற்கு கணக்கு காட்டுவது போன்றதாகும்.

இது குறித்துச் சில விவரங்களைக் காண்போம்

இப்போது 1 பீப்பாய் 60 டாலர் ஆகும். இன்று பெட்ரோல் விலை லிட்டர் 70 ரூபாய் ஆகும். ஆனால், 2008 ஆம் ஆண்டு 132 டாலருக்கு மேல் பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை இருந்தது. அப்போது பெட்ரோலின் விலை 54 ரூபாய் மட்டும்தான். 2008 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கச்சா எண்ணெய்யின் விலை இப்போது சுமார் 40% குறைந்துள்ளது. அப்படியானால், பெட்ரோலின் விலையும் மற்ற எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலையும் 40% அளவிற்கு குறைந்திருக்க வேண்டும்.

ஆனால், அரசு கலால் வரியை உயர்த்தி மொத்த விலையையும் சுமார் 60% மேல் உயர்த்தியுள்ளனர். இது மிகப்பெரிய அநியாயம் மட்டுமல்லாது கொடூரமான மோசடியாகும். உண்மையில் கச்சா எண்ணெய்யின் விலையோடு ஒப்பிடும்போது பெட்ரோலின் விலையானது லிட்டர் 25 ரூபாய் என்றிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு வரிகளைப் போட்டு எண்ணெய் மற்றும் எரிபொருளின் உண்மையான மதிப்பைவிட கொள்ளை இலாபம் வைத்து அரசு விற்பனை செய்கிறது.

 மோடி அரசு வந்த பிறகு சுங்கம் மற்றும் கலால் வரியை 7% மேல் உயர்த்தி எண்ணெய் நிறுவனங்களின் இலாபத்தைக் கூட்டியுள்ளனர். ஆனாலும் எண்ணெய் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குகின்றனவாம்! அதிகபட்சம் 25 ரூபாய்க்கு விற்க வேண்டிய 1 லிட்டர் பெட்ரோலை 70 ரூபாய்க்கு விற்கின்றனர். இவர்கள்தான் மக்களுக்காக ஆட்சிப் புரிவதாகப் பீற்றிக் கொள்கின்றனர்.

ஒரு சிறு கணக்கைப் பார்ப்போம்

மோட்டார் பைக் வைத்திருக்கும் ஒருவர் மாதத்திற்கு 15 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்துவதாக வைத்துக் கொண்டால் இவர் மாதம் 1050 ரூபாய் செலவு செய்கிறார். இதில் வரியாக மட்டும் 700 ரூபாயைக் கட்டுகிறார். இதையே ஒரு ஆண்டிற்கு கணக்குப் போட்டால் பெட்ரோலுக்கான மொத்த தொகை ரூபாய் 12,600. இதில் அவர் வரியாக மட்டும் 8400 ரூபாய் அரசுக்கு செலுத்துகிறார். அவர் பயன்படுத்தியப் பெட்ரோலின் மதிப்பைவிட அரசுக்குச் செலுத்திய வரிப்பணம்தான் அதிகமாக இருக்கிறது. இதில் 4,200 ரூபாய் தமிழக அரசுக்கும் 4,200 ரூபாய் மத்திய அரசுக்கும் செலுத்துகிறார். இந்தியாவில் வாகனம் வைத்திருக்கும் பெட்ரோல், டீசலைப் பயன்படுத்தும் அனைவரும் இந்தக் கணக்கைப் போட்டுப் பார்த்தால் ஒட்டுமொத்த குடிமக்களையும் இந்த அரசு எப்படி ஏமாற்றுகிறது என்பது பட்டவர்த்தனமாகத் தெரியும்.

தனியார் நிறுவனங்களைக் காப்பாற்ற முயற்சி

இந்தியாவில் ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் போன்ற தனியார் எண்ணெய் எரிவாயு நிறுவனங்களும் செயல்பட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காகவும் இந்த விலை நிர்ணய முறைப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிறுவனங்களுக்கு இந்தியாவில் பல இடங்களில் எண்ணெய் எரிவாயு வயல்களும் சொந்தமாக உள்ளன. உள்நாட்டில் பெறப்படும் எண்ணெய் எரிவாயுவையும் இந்நிறுவனங்களில் சர்வதேச கச்சா எண்ணெயின் விலை ஏற்றங்களுக்கு ஏற்ப இங்கு விற்பனை செய்கின்றனர்.

மேலும் வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்டப் பல ஆசிய மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் எரிவாயுக்களை ஏற்றுமதி செய்கின்றன. ரிலையன்ஸ் எண்ணெய் நிறுவனத்தின் 2010--2011 இரண்டாம் காலாண்டின் நான்கு மாத இலாபம் 4,973 கோடியாகும். இது அரசு நிறுவனங்களான பாரத் பெட்ரோல் கார்ப்பரேசன், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய இரண்டு நிறுவனத்தின் இலாபத்தைவிட இருமடங்கு அதிகமாகும். இந்திய மக்களுக்குப் பயன்பட வேண்டிய எண்ணெய் வளங்கள் ரிலையன்ஸ் நிறுவனத்தால் கொள்ளை இலாபத்தில் சர்வதேச சந்தையில் விற்கப்படுகிறது.

வட்டி என்ற பெரும் செலவு

1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த வெளிநாட்டு கடன் தொகை 85,000 கோடி. இது 2015 ஆம் ஆண்டு 30 இலட்சம் கோடிக்கும் மேல் உள்ளது. இந்த கடனுக்கான வட்டியும் கூடிக்கொண்டே போகிறது. கடன் திருப்பி செலுத்துவதற்கானக் காலக்கெடு முடிந்தபிறகு அக்கடனை அடைக்கவும் அதற்கான மொத்த வட்டிக்காகவும் புதிய கடன் வாங்கப்படுகிறது.

இந்தப் பொருளாதார சுழற்சியில் வட்டி என்பது அரசின் மிகப்பெரிய செலவினமாக உள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), உலக வங்கி ஆகியவற்றிடம் பெற்றக் கடன்கள், ஏகாதிபத்திய நாடுகளிடம் திட்டப்பணிகள் மற்றும் உள்கட்டமைப்புக்காக வாங்கிய கடன்கள் ஆகியவற்றிற்காக அரசுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கானக் கோடி ரூபாய் வட்டியைக் கட்டுவதற்கு மட்டுமே தேவைப்படுகிறது.

இந்த பணத்திற்கான அட்சயப் பாத்திரமாகவும் ஆர்டிஷியன் ஊற்றாகவும் எண்ணெய் எரிவாயு நிறுவனங்கள்தான் உள்ளன. தனியார் மூலதனத் தொழில் வளர்ச்சிக்கும் வல்லரசு கனவிற்கும் அமெரிக்காவை முன்னுதாரணம் காட்டும் நமது அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் ஒன்றை மறந்துவிடுகிறார்கள். அமெரிக்காவில் பெட்ரோலியப் பொருட்களின் மீதான மொத்தவரி வெறும் 18% மட்டுமே.

விலைக் குறைப்பு சாத்தியமா?

மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரியை உயர்த்தினால் உடனே மாநில அரசுகளும் உயர்த்துகின்றன. இந்த போட்டி விலை உயர்வை இருதரப்பும் கட்டாயம் கைவிட வேண்டும். எண்ணெய் எரிவாயு பயன்பாட்டிற்கு நிகரான மாற்று எரிபொருளைப் பயன்படுத்துவது மரபுசாரா எரிசக்தியைச் சுயசார்பு தன்மையுடன் வளர்த்தெடுப்பதன் மூலம் அரசின் செலவினத்தை நிச்சயம கட்டுப்படுத்த முடியும்.

மேலும் ஈடுசெய்யத் தக்க உயிர் எரிபொருள்(bio diesel), எத்தனால் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரித்து வாகனங்களின் பொறிமுறையை உரிய வகையில் மாற்றி அமைப்பதன் மூலம் பெட்ரோல், டீசலின் தேவையைக் கணிசமாகக் குறைக்க முடியும். இதை அமெரிக்காப் போன்ற நாடுகள் வேகமாகப் பயன்படுத்தி வருகின்றன.

இப்போதுள்ள அரசுகளின் இந்த விலை உயர்வு கொள்கை இந்தியாவை ஆண்ட ஆங்கில ஏகாதிபத்தியவாதிகளின் கொள்ளையை விடக் கொடூரமாக உள்ளது.