சுளுந்தீ ஒரு இலக்கியமாக்கப்பட்ட ஆவணம். ஆவணமாக்கப்பட்ட இலக்கியம். ஒரு ஆவணம் இலக்கியமாக்கப் பட்டிருக்கிறது. ஏனெனில் இது புனைவுகளாக்கப்பட்ட வரலாறல்ல. வரலாற்றை அதன் போக்கில் காலம், இடம், நிகழ்வு என இணைக்கப்பட்ட நிகழ்வுகளின் தொகுப்பு. இரத்தமும், சதையுமாக கடந்தகாலங்களில் இதே நிலத்தில் உலவிய உயிர்களின் கடந்த காலங்களின் இதய துடிப்பு.

ஒரு காலக்கட்டத்தின் வரலாற்றை சொல்வது என்பது அந்த காலக் கட்டத்திற்குச் செய்யும் நீதி மட்டுமல்ல. வரலாற்றை நேர்மையாகப் அணுகுவற்கான ஒரு ஒழுங்கும் கூட. வரலாற்றை யாருடைய பார்வையிலிருந்து பார்ப்பது என்பதற்கு சுளுந்தீ ஒரு எடுத்துக்காட்டு.

அதிகார நடுவத்தை மக்களின் பார்வையிலிருந்து சொல்வதுதான் ஒரு வரலாற்று களத்தின் நீதியாக இருக்க முடியும். அந்த வகையில் சுளுந்தீ ஒரு மக்கள் இலக்கியம். ஒரு மக்கள் ஆவணம். ஆம் மக்களைப் பற்றி பேசும் ஆவணங்கள் அரிது அதைக் கண்டறிதல் அதனினும் அரிது.

மக்களைப் பற்றி பேசாத காலத்தில் மக்கள் பற்றி பேசுவது அதன் சிறப்பு. வரலாற்றின் மிக முக்கியமான சமூக அரசியல், கலாசார திருப்பங்களின், சரிவுகளின், வீழ்சிகளின், எழுச்சிகளின் காலத்தில் சுளுந்தீ நடுவம் கொள்கிறது. தமிழ் நிலத்தின் அறியப்படாதக் கதைக்களனை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது சுளுந்தீ.

அதிகாரம் காலந்தோறும் நிலத்தையும், அந்த நிலத்தின் எளிய மக்களையும் எவ்வாறு சூறையாடிச் செல்கிறது என்பதை சுளுந்தீ புதிய பார்வையில் வெளிச்சம் பாய்ச்சுகிறது.

பாண்டியர்கள் வாரிசுரிமைப் போரில் நுழைந்த வியஜயநகர ஆட்சியாளர்கள் அவர்களை வீழ்த்தி, தமிழகத்தில் நுழைகிறார்கள். பண்டிய பேரரசுகளின் கீழிருந்த சிற்றரசுகள் விஜயநகரத்திற்கு கப்பம் கட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. கதைக்களம் அவர்களின் நுழைவாயிலான பன்றிமலை(கொடைக்கானல்) வேடசந்தூர் பகுதிகளைக் கொண்டிருக்கிறது.

வேட்டுவக்குல சிற்றரசு வீழ்ந்தைத் தொடர்ந்து அந்த பகுதிகளை முழுமையாகக் கைப்பற்றிக் கொண்டு சுல்தான்களிடம் பின்பு ஆங்கிலேயரிடம் அவ்வாட்சியின் எஞ்சிய அதிகாரம் வீழும் வரையிலான காலம் கவிச்சியுடன் பதிவாகிறது.

விஜயநகர அரசு சுல்தானிடம் வீழவும், அவ்வரசின் தமிழக ஆட்சியாளர்கள் தமக்கென ஒரு ஆட்சியை அமைத்துக் கொள்கின்றனர். மண்டலங்களாகப் பிரிக்கப்பட்ட பகுதிகளின் கீழ் தளபதிகளே குறு மன்னர்களாகிறார்கள். அவர்கள் அரண்மனையார் என்று அழைக்கப்படுகிறார்கள்.

தமிழ் நிலமானது, பாண்டியர் காலத்தில் இருந்த குல, பண்பாட்டு வழக்கங்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தின் எஞ்சிய பகுதியில் மேலும் இறுக்கமடைகிறது. மேலிருந்து கட்டமைக்கப்பட்ட அதிகாரம் மக்களின் அன்றாட வாழ்வை தீர்மானிப்பதாக இருக்கிறது. தொழிலுக்கமய வாழும் குலங்கள் தமது எல்லைகள் மீறாமல் தக்கவைத்துக் கொண்டே சுரண்டும் அரசியலை வெறும் கடந்த காலம் என்றோ நாயக்கர் ஆட்சியென்றோ சுருக்கிவிட முடியாது.

அதிகாரத்திற்கும், சுரண்டலுக்குமான தொடர்பும் இயல்பும் கால எல்லைகளுக்கு அப்பாலானதாகும். குலங்கள். அவற்றின் கலாசாரா, தொழில் வேற்றுமைகள் ஒரு பக்கம் இருக்க இக்குலங்களை இணைக்கும் பீடம் ஒன்று இருக்கிறது. அதற்கென குல குரு ஒருவர் இருக்கிறார். அவர் குலங்கள் தமக்குள் கொண்டிருக்கும் எல்லைகள் மீறாமல் பார்த்துக் கொள்கிறார்.

பீடங்கள் இயல்பாகவே ஆன்மிகத் தன்மை கொண்டிருக்கின்றன. மக்கள் செல்வாக்கை, சொல்வாக்கைக் கொண்டிருக்கின்றன. குலகுரு சமூக மன்னராக இருக்கிறார். அரசியல் அதிகாரம் படையணிகள் கொண்ட மன்னருக்கு இணையானவராக இருக்கிறார்.

மன்னருக்கு சமதையாக பல்லக்கில் செல்பவராக இருக்கிறார். எனவே மன்னர்களுக்கும், குருபீடங்களுக்குமானத் தொடர்பும், இணைவும் வெறும் சமூக சிக்கல் சார்ந்ததல்ல அது அதிகாரத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. அது அரசியலுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

குலங்கள் தமக்கென விதிக்கப்பட்ட எல்லைகளுக்குள்ளாக வாழ்வதை குலகுரு உறுதி செய்பவராக இருக்கிறார். குலங்கள் தமது தொழில் அல்லது சமூக எல்லைகளை மீறும் போது அதுபற்றிய முறைபாடுகளைச் சட்டம் ஒழுங்காக மன்னர் முன் கொண்டு செல்பவராக இருக்கிறார். மன்னரோ மக்கள் குலங்களில் இருக்கவும், நீக்கவுமான இறுதி அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார். குல நீக்கம் என்பது நில நீக்கமாக இருக்கிறது.

நில நீக்கம் என்பது சமூக நீக்கமாகவும், இருப்புக் குறித்து சதா கேள்வியெழுப்பும் ஒன்றாக இருக்கிறது. குல நீக்கம் ஒருவகையில் பொருளாதார நீக்கமாகும். சமூக தகுதியிழப்பாகும். நீக்கும் அதிகாரம் குல குருவிற்கு அல்லாமல் மன்னருக்கு தரப்பட்டிருக்கும் அரசியலானது, சமூக படிநிலையை உறுதி செய்வதாக இருக்கிறது.

பாண்டியர் காலத்தில் குல நீக்கம் என்பது சமூகத்திலிருந்து தள்ளி வைப்பதாக இருக்க, அது நாயக்கர் காலத்தில் சமூக குற்றமாக மாறுகிறது. தண்டனை தரும் ஒன்றாக மாறுகிறது.

குல நீக்கம் என்பது குல ஒழுக்கம் என்பதைக் கடந்து சமூக ஒழுக்கம், சட்ட, ஒழுங்கு என்பதாக நீட்சி பெறுகிறது. குல ஒழுங்கை மீறுதல் என்பது அரசதிகார ஒழுங்கை மீறுவதாகிறது.

அதற்கேற்றார்போல மனு தர்மம் சமூக ஒழுங்குக்கான ஓர் நீதி முறையாக இருக்கிறது. சுளுந்தீ காலத்தில் பார்ப்பனர்கள் அவ்வதிகாரத்தை முழுமையாகப் பெற்றிருக்கவில்லையாயினும் அதற்கான தொடக்கத்தை கொண்டிருக்கிருக்கிறது. மனு நீதியை நடைமுறை படுத்தும் சகல அதிகாரங்களையும் பின்னாளில்தான் பார் ப்பனர்கள் பெறுகிறார்கள்.

குல நீக்க குற்றங்களுக்குள்ளானவர்களின் நிலங்கள், கோவில்களுக்கும் பிறகு அது அரண்மனைகளுக்கும் பின்னர் அவை பார்ப்பனர்களிடமும் சென்று சேரும் மனுநீதியால் புதிய அதிகார நடுவங்களாகப் பிற்காலங்களில் பார்ப்பனர்கள் உருவாகிறார்கள் என்பதை அதற்கு முன்னரான காலங்களைக் கொண்டு சுளுந்தீ உறுதிபடுத்துகிறது.

பாண்டியர் காலத்தில் நிலங்கள் கோயிலுக்குரியதாக இருக்கிறது. கோவிலிருந்து நிலங்களை குத்தகையாகப் பெறுவோர் உழவு செய்பவர்களாக வரி செலுத்துபவர்களாக இருக்கிறார்கள்.

நாயக்கர் காலத்தில் நிலம் அரண்மனைகளுக்குரியதாக மாறுகிறது. குல நீக்கம் செய்யப்பட்டவர் நிலங்கள் அரண்மனைக்கு செல்லும் அரசியல் முக்கியமானது. நிலபறிப்பின் பிறிதொரு வடிவமாக குலநீக்கம் இருப்பதை மறுக்க முடியாது.

தமிழ் குலங்களை நீக்கியும், விலக்கியும், சேர்த்தும், பிரித்தும், கலைப்பதுமான அரசியலில் நாயக்க சிற்றரசுகள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள முயல்வதே அவர்களது இறுதிகாலம் வரையிலான அதிகார அரசியல் வரலாறாக இருக்கிறது.

தமிழ் குடிகளின் குல நீக்கம் என்பது விசயநகர வீழ்சியின் பின்னணியில் மேலும் தீவிரமடைகிறது. தில்லி சுல்தான்களிடம் அவ்வாட்சி வீழவும் விசயநகரக் குடிகள் தமிழ் எல்லைகளுக்குள் நுழையவும் இங்குள்ள அவர்களது பிரதேச மன்னர்களும், அரண்மனைகளும் மண்ணின் மைந்தர்களைக் குல நீக்கம் செய்து அந்த நிலங்களை விசயநகர மக்களுக்கு கொடுக்கிறார்கள் .

குலநீக்கமானவர்கள் விசய நகர மன்னர்களை எதிர்க்கும் எஞ்சியப் பாண்டிய குறுநில வாரிசுகளுடனோ அல்லது தில்லியின் பிரதேச அரசான செஞ்சி சுல்தான் படைகளிலோ போய் தஞ்சமடைவதன் வழி தமது எதிர்ப்பினைச் சொல்பவர்களாக இருக்கிறார்கள்.

அந்த எதிர்ப்பில் மருத முத்து ஆசாரி இன்றய அரசபயங்கரவாத எதிர்ப்பின் எதிர்புரட்சியின் சுளுந்தீ கங்காக சுடர் விடுகிறான். கரந்தடிப்படை கொண்டு அரசபடைகளை வெருட்டுவதில் மருத முத்து ஆசாரி ஒரு செகுவராவாக, பிடலாக, பிரபாகரனாக வரலாற்றின் முன் சென்று பாக்கிறோம்.

""எங்கள எல்லாம் குலநீக்கம் செஞ்சதாச் சொல்லி, நஞ்சை நெலத்த கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலுக்குத் தானம் செய்த்தாகச் சொன்னார்கள். ஆனால் அந்த நெலத்த பூராவும் புதுசா இங்க குடிவைச்ச வடுக சனங்க உழவடை செய்யிறாங்க(பக்.173)

"மழ குறைவாப் பேஞ்சுது, அரண்மனை விதித்த வரியோ அதிகம். நாங்க கொடுக்குறத வாங்கிட்டுப் போங்கண்ணு திட்டவட்டமா சொல்லிருக்கான் இடமலக்குடி கட்டகாமன் குடும்பன். இதனால அவன குல நீக்கம் செஞ்சு, நஞ்ச நெலங்கள சாஸ்திரி கோட்டையில் இருக்கிற பிராமணர்களுக்கு மானியமாகக் கொடுத்தாங்க'. (பக்103)

காலந்தோறும் நிலங்கள் பார் ப்பனர்களிடமும், நாயக்கர்களிடமும் போய் சேருவதும், அவர்களை அண்டி பிழைக்கும் ஏனைய மேல்சாதிகள் புதிய தனக்காரர்காக உருவாவதுமான அதிகார அரசியல், இன்றைய அதிகார அரசியலுடன் மட்டுமல்ல, சமூக அரசியலுடனும் வைத்துப் பேசப்பட வேண்டிய ஒன்றாகும்.

"முறை தவறி கலியாணம் முடிப்பதைத் தடுக்க, ஒவ்வொரு குலமும் அவங்க முன்னோர்கள முன்நிறுத்தி முறை பிரிப்பது நடைமுறையில இருக்கு, பலரும் முன்னோர்கள நெனச்சுப் பார்த்துச் சொல்லத் தெரியல. இதனால நாடெங்கும் முறைப் பிரச்சன பெரும் பிரச்சனயா இருக்கு.

இதுக்குத் தீர்வாக, மாசிக்களரி அன்னைக்கு அவங்க அவங்க பங்காளிக ஒன்னாக்கூடி உறவு பார்த்து முறை பிரிச்சுக்க மன்னர் உத்தரவிட்டுள்ளாரு. குலசாமி தெரியலேனா அரண்மனையாரின் குலதெய்வமான காமாட்சி அம்மனையும், அங்காள ப் பரமேஸ்வரியையும் கும்பிட்டு, உறவு முறை பாத்து முறை பிரிக்க மன்னர் குடிசபையைக் கூட்டி கேடாங்கி நாயக்கர், பூப்பண்டாரம் மூலமாகச் சனங்களுக்கு சொல்லி அனுப்புறாங்க.

அரண்மனையார் வணங்கும் தெய்வத்த கும்பிட்டா அவங்களுக்கு உடனடியாக உழவடை நெலம் கிடைக்குது.(பக்159)

குல நீக்கத்தைப்போல குலதெய்வத்தை அறிதல் குல முன்னோர்களை அறிதல் என்பது தனது தொழிலை தனது சமூக இடத்தை அறிதல். சமூக இடத்தை அறிதல் என்பது தன்னை அறிதல் தனது குல, சாதி எல்லையை அறிதல் என்பதாகும். தற்போது நடைமுறைபடுத்தப்பட்டிருக்கும் குடிசன உரிமைக்கு, குடிசனச் சட்டத்திருத்தம் என்பனவற்றுக்குச் சற்றும் குறைந்ததல்ல அன்றைக்குக் குலச்சான்று அளித்தலாகும்.

இன்றைக்கு குடிசன உரிமை திருத்தம், சில குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் என்று வரையறுக்கும் குடியுரிமை சட்டத்தின் நேற்றய வடிவமே குலமறிதல் சட்டம் என்று சொல்ல முடியும். குலங்களை பிரித்தல், நீக்குதல் வரையறுத்தல் என்ப அதிகாரவர்க்கத்தின் பழைய உத்திகளில் ஒன்றேயாகும் என்பதை இன்றைய அரசியலுடன் சேர்த்துப் புரிந்து கொள்ள முடியும்.

"சிவன் சொத்துக் குல நாசம்' என்பார்கள். கீழத் தஞ்சை வட்டாரத்தில். உழவடை நெல்லை கோயிலுக்கு கொடுக்காமல், வரி செலுத்தாமல் ஏமாற்றினால் அக்குடும்பம், அல்லது அக்குலம் தழைக்காது என்பது ஒரு நம்பிக்கை. ஆனால் மெய்யாகவே கோயிலுக்கானப் பங்கை கொடுக்காது போனால் நிலம் பறிக்கப்பட்டு, குல நீக்கம் செய்யப்படுவதையே இது குறிக்கிறது என்பதை சுளுந்தீ உறுதிபடுத்துகிறது.

குல நீக்கம் என்பது ஒரு சமுக அரசியல், சமூக இழிவு. அது குலங்களின் கீழாகக்கூட அவர்களை வைத்திருக்கவில்லை. ஊர் விலக்கம், சாதி விலக்கம் போல அது ஒரு சமூக விலக்கமாக இருக்கிறது.

இன்னும் சொல்லப் போனால் மனித விலக்கமாக, மனுகுல விலக்கமாக இருக்கிறது. குல விலக்கமானர்வகளைக் கொல்லும் அதிகாரத்தை அரண்மனைகள் கொண்டிருக்கின்றன. சமூகத்தின் எந்த நீதியும் அவர்களுக்கு கிடையாது. பகலில் நடமாடவும் இரவில் சுளுந்தீ வெளிச்சத்தில் கூட அவர்கள் தம்மை இனம் காட்டக்கூடாத தண்டனைக்குறியவர்களாக இருக்கிறார்கள்.

மனிதர்களாக இருப்பதே தண்டனைக்குறியதாகிறது. மிக எளிதில் சமூகத்தின் விளிம்பில் அல்லது அதற்கு அப்பால் அவர்களைத் தள்ளி வைக்கிறது குல விலக்கம்.

குடியானவர்களிடம் கற்றாளைப் புதருக்கு அப்பால் நின்று "சாமி!!' என்றழைத்துக் குரல் வழி உரையாடுவது மட்டுமே அவர்களுக்கான ஒரே வெளி தொடர்பாக அனுமதிக்கப்படுகிறது. நிலமற்றவர்கள் புவியற்றவர்கள். புவியற்றவர்கள் எதுவுமற்றவர்கள். அவர்களது இருப்பிற்கு எந்த பொருளுமிருப்பதில்லை.

இழப்பதற்கு எதுவுமற்றவர்கள் காலந்தோறும் எதிர்புரட்சியாளர்களாக இருப்பதன் அரசியலைச் சொல்கிறது சுளுந்தீ.

குல நீக்கம் எளிதானதாக இருப்பது போல குல சேர்ப்பு அத்தனை எளிதானல்ல என்ற அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது. குல சேர்ப்பு என்பது மீண்டும் நீக்கப்பட்டக் குலத்திலேயே இணைவதாகும். இணைக்கப்படுவதாகும்.

"இடுப்பளவு வெட்டப்பட்டக் ஒன்பது குழிகளில் நிறைந்திருக்கும் சாணிக் கரைசலில் முங்கி எழ வேண்டும். அதில் பாதி பேர் இறந்துவிடுவதுண்டு. தப்பித்தவர்கள் குளித்துவிட்டு வந்து வரிசையாக நிற்க, பட்டக்காரங்க ஒவ்வொருத்தர் காலுல விழுந்து வணங்க வேண்டும். பட்டக்காரங்க கையில் வச்சிருக்கும் செருப்பாலக் காலில் வீழுந்தவன் தலையில் அடிப்பாங்க அதன் பிறகே அந்த நபர் குலத்தில் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார். (பக்72)

குல சேர்ப்பு எளிமையாக இருக்க முடியாது, கூடாது என்பதைத்தான் குலத்தில் மீண்டும் சேர்க்கும் நாயக்கர் கால சடங்குகள் உறுதிபடுத்துகின்றன. அரண்மனைக்கு எதிராக சதி செய்தவர்கள் கரட்டின் உச்சியில் எல்லோரும் பார்க்கச் சங்கிலியால் தொங்க விடுவார்கள் இவர்களை காக்கா, கழுகு கொத்தி திண்ணும். பிறகு யாதொருவரும் அரண்மனைக்கு எதிராக மூச்சுவிடமாட்டார்க்கள்.

மிக கொடிய இந்த தண்டனையானது அக்காலத்தில் குல நீக்கமானவர்களில், குறிப்பாக அய்ம்பது வயதுக்கு கீழானவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இது அவர்களது புரட்சியை ஒடுக்கவும், சுல்தான் படைகளில் சேர்வதையும் ஒரு சேர தடைசெய்தது.

குல நீக்கமானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த செஞ்சி சுல்தான்கள் குல நீக்கமானவர்களுடன் சரிக்குச் சமமாக அமர்ந்து உணவருந்துவது. தோளில் கைபோட்டு பழகுவது என்பன குல நீக்கமானவர்களிடையே புதி உள்ளொளியை பாய்ச்சுகின்றன.

முகமதியர்களின் பேதமற்ற நட்பு அவர்களை குல நீக்கத்திலிருந்து ஆசுவாசப்படுத்துவதாக இருக்கிறது. இதன் மறுதலையாக கன்னிவாடி அரண்மனையிலுள்ள அரபிய வெடிப்படையினர் குல நீக்கமானவர்களில் பெண் எடுக்கும் போக்கு பிற்கால முகமதியர் குலம் தோன்றுதையும், அவர்கள் குல நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் வைத்துக் கொண்ட உறவு இசுலாமியர் குறித்த இன்றைய பார்வையுடன் வைத்து ஒப்பு நோக்க வேண்டிய ஒன்றாகும்.

ஆனால் இவையெல்லாம் குடிகளுக்குதான். அரண்மனைகளுக்கல்ல என்பதைதான் விருப்பாச்சியார் அரண்மனையார் அரபு பெண்ணை அரசியாக ஏற்றதும் பேகம் அரசியாக மாறியதுமாகும். குடிகளுக்கான எந்த சட்டங்களும் அரண்மனைகளுக்குப் பொருந்துவதில்லை என்பது காலந் தோறுமான நீதியாகவே இருக்கிறது.

நிலம் சமூக இருப்பை உறுதி படுத்துவது போல சுளுந்தீ அவ்விருப்பைக் கேள்விக்குள்ளாக்குவதாக இருக்கிறது. சுளுந்தீ என்பது தன்னுள் எரிக்கப் பயன்படும் எண்ணெய் சுரப்பைக் கொண்டுள்ள மரவகை என்றாலும் அது புரட்சியின் அணையா கங்குகளைக் கொண்டதாக இருக்கிறது. பண்டுவத்தில் அதை நிலத்தில் வைத்துப் பதப்படுத்தும் போது இரும்புக் கடப்பாரைப் போன்று பாறையைப் பிளக்கும் கருவியாகிறது.

அது பறையை மட்டுமல்ல அதிகாரத்தையும் அசைத்துப் பார்க்குமென்பதால் அது தடை செய்யப்பட்ட ஒன்றாகிறது. குடிசனப்படைகள் கூட தடி மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டக் காலத்தில் குடியானவர்கள் அடுப்பு மூட்டுவதற்கு கூட சுளூந்தியின் அரண்மனைத் தடையின் அரசியல் மிகத் தெளிவானதாகும்.

கோயிலில் எரிந்து கொண்டிருந்த சுளுந்தீ அரண்மனைக்குள்ளும், அரண்மைனை நியமித்த தீ கொளுத்தியிடமும் அடக்கி வைக்கப்பட்ட அரசியலின் கதையைத்தான் சுளுந்தீ ஆவணப்படுத்துகிறது. தீக்கொளுத்திகள் புதிய அதிகார நடுவங்களாக உருவாகிறார்கள்.

பண்டுவம் என்ற மருத்துவத்திற்குப் பயன்படும் செந்தூரம், குங்குலியம் போன்றவை வெடி பொருளாகவும் பயன்படுவதை அறியும் அரண்மனை அதிகாரவர்க்கம் அவற்றிற்கு தடைவிதிக்கிறது. வெடி என்பது வெடிதான் அது யாரிடம் இருக்கிறது என்பதான் முக்கியம் அந்த வகையில் அய்யப்படும் யாதொருவரையும் கொல்லும் நீதியை உருவாக்குகிறது வெடி பற்றியப், புரட்சி பற்றிய அச்சம். கன்னிவாடி அரண்மனை அதிகாரத்தால் சிரச் சேதங்களுக்கு ஆளாகினர் அரண்மனைக்கு எதிராகக் கலகம் செய்யக்கூடும் என்ற ஒற்றை அனுமானத்தில் குல நீக்கமானவர்கள், செந்தூரம் என்ற மருந்து, வெடிமருந்தாகும் என்பதால் அதைப் பயன்படுத்தும் பண்டுவர்கள், அவர்களுடன் குடியானவர்களும், கொல்லி மலையில் வாழ்ந்த பல சித்தர்களும் படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த அச்சத்தின் விளைவால் பண்டுவத்தில் செந்தூர மரபு அழிபடுகிறது. அதிகாரவர்க்கத்தின்முன் செந்தூரம் மட்டுமல்ல குங்குலியம் மட்டுமல்ல பண்டுவம் அறிந்த நாவிதர்களும் அழிபடுகிறார்கள் என்பதைத்தான் சுளுந்தீ தமது ஆதாரச் சரித்திரமாக ஆவணப்படுத்துகிறது.

நாவிதர்கள் அரசியல் முக்கியத்துவத்தை சமூக முக்கியத்துவமாக மாறுவதை மிக கவனமாக அரண்மனைகள் கட்டுப்படுத்துகின்றன. நாவிதர்கள், நாவிதர்களின் சவரக்கத்திகள் எதிரிகளிடமும் உண்டு என்ற அரண்மனை அரசியல் தத்துவமே அவர்களைக் கூட்டம் கூட்டமாகக் கொல்வதற்கான அதிகாரவர்க்கத்தின் நீதியைக் கொண்டிருக்கிறது.

அனல்வாத, புனல்வாதமில்லாமலே கழுவேற்றபடும் நாவிதர்களின் படுகொலைகள் சுளுந்தீ ஆவணக் களமெங்கும் குருதிக் கவிச்சியுடன் இரைந்துகிடக்கின்றன. பாண்டிய அரசில் நாவிதர்கள், ஏகாலி, செம்மான், தச்சன் உள்ளிட்டோர் தகுதி திறமைக்கேற்ப படையணிகள் இருந்தனர். ஆனால் விசயநகர ஆட்சியல் குல தொழில் கட்டாயமாகிறது.

நாவிதர்கள் அரண்மனை சேவர்களாக இருப்பதால் அவர்கள் அரசியல், அதிகார முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்கள் வெறும் நாவிதம் செய்வதால் மட்டும் அந்த முக்கியத்துவத்தைப் பெற்றுவிடவில்லை என்பதைத்தான் சுளுந்தீ பதிவு செய்கிறது. ஓர் ஆவணம் இலக்கியமாகும் என்பதை அல்லது இலக்கியம் ஆவணமாகும் என்பதை இப்படித்தான் சுளுந்தீ நமக்குச் சொல்கிறது.

சவரக்கத்தியுடன் பண்டுவம் அறிந்த நாவிதன் பண்டிதனாவதும், அவன் அரண்மனை முக்கியத்துவம் பெறுவதுடன், குதிரையில் வலம் வரும் அனுமதியைப் அதிகாரவர்க்கத்திடம் பெறுவதும் அக்காலச் சமூக சூழலில் எளிதானதல்ல. அவ்வாறே போர் படைகளில் சேர்வதும், போர்க் கலைகளைக் கற்பதும் அரண்மனைக்
குற்றமாகும். அவர்களுக்கு சமூக மரியாதை என்ற ஒன்றே கிடையாது.

சவரக் கத்தி, மழிப்பதைப் போலவே உயிரைக் காப்பாற்றும் மருத்துவக் கத்தியாக, மகத்துவக் கத்தியாக இருப்பது சமூகக் குற்றம் என்பது சுளுந்தீ காலத்தில் மட்டுமல்ல இன்றைக்குமான சமூக, அதிகாரவர்க்க நீதியாகும். நேற்றைக்கு சுளுந்தீ இன்றைக்குத் தீப்பெட்டியாக மாறியிருக்கிறது. சமூகம் அப்படியேதான் இருக்கிறது.

குதிரை இன்றைக்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்களாக மாறியிருக்கிறது. அவை குதிரைச் சக்தியாக மதிப்பேற்றப்பட்டிருக்கிறது. மாறியிருக்கிறது. யார் மருத்துவராகலாம், யார் ஆகாக்கூடாது. என்பதன் சமூக அரசியல் அதிகார நீட்சியை நேற்றய சுளுந்தீ கொண்டிருக்கிறது.

குல நீக்கத்தையும், சவரக்கத்திகளையும் இன்றைக்கும் அதிகாரவர்க்கமே தீர்மானிக்கின்றன. யார் எதை செய்ய வேண்டும் என்ற குலப்பண்பாடு இன்றுமிருக்கிறது. பண்டுவம் அறிந்தவர்கள் கொல்லப்படும் நீதி இன்றைக்குமிருக்கிறது. பண்டுவ அறிவை கைப்பற்றியவர்களின் வாரிசுகள் இன்றுமிருக்கிறார்கள்.

கல்வி சுளுந்தீ இன்றைக்கும் சுடும் ஒரு கால மெய். நாயக்கர் கால பண்பாடு சமர்கிருதமயமாகிய அதே வேளை பார்ப்பனர்கள் முக்கியத்துவம் பெறுகிறார்கள் என்ற அரிதலுடன் இந்த ஆவணத்திற்குள் பயணிக்க வேண்டியிருக்கிறது. பாண்டியர் கால நாவிதர்கள் குலங்களின் ஆண்,பெண்களுக்கு திருமணத்தை முன்நின்று நடத்துபவர்களாக இருக்கிறார்கள்.

பின்னர் அந்த இடங்கள் யாரால் கைப்பற்றபட்டன என்பதை சுளுந்தீ நமது அறிவுக்கு விட்டுவிடுகிறது. சொல்லப்படாத இணைக்க ப்படாத, கால நிகழ்வின் மவுனத்திற்கிடையே குல குருக்களின் இடத்தையும், மடங்களின் இடத்தையும் ஏன் அரண்மனைகளின் இடத்தையுமே பார்ப்பனியம் கைப்பற்றிக் கொண்ட வரலற்றை சுளுந்தீ வெளிச்சம் போட்டுக் காட்டத்தான் வேண்டும் என்பதில்லை. அதன் வரலாறு நம் கண்முன்னேயுள்ளது.

குலத்தை மீறுதல் என்பது ஆகப்பெரியக் குற்றமாக கருதப்படுவதுடன், அந்த குற்றத்தின் ஆகப்பெரிய தண்டனையைப் பெண்களே சுமக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். சுளுந்தீ பெண்கள் பக்கந்தோறும் தூக்கிச் சுமக்க முடியாத துயரத்துடன், கண்ணீருடன் அலையுறுவதை கனத்த மனதுடனே கடக்க வேண்டியிருக்கிறது.

பெண் நிலத்துடன் பிணைக்கப்படுவதற்கு முன் அவள் குலத்துடன் பிணைக்கப்பட்டவளாக இருக்கிறாள். அவளது சூல் பை குலபிறப்பை உறுதிபடுத்தும் உறுப்பாக அதிகாரத்துடன் இணைக்கப்பட்டதாக இருக்கிறது. இது எல்லா குலத்துப் பெண்களுக்கும் பொதுவான நீதியாகும்.

குலங்கள் தளர்ச்சியுற்ற காலத்தில் அது நிலத்துடன் தொடர்படுகிறது. குலத்தின் இடத்தை நிலம் பெறுகிறது. பெண்ணுடல் நிலத்தில் வேர் கொள்கிறது. சூல்பையும், நிலமும் வேறு வேறல்ல நிலத்தின் மீதான உரிமை பெண்ணின் மீதான உரிமை என்பன ஒன்றே. குலத்துடன் முன்பு நிலம் தொடர்புடையதாக இருந்தது போலவே அவை இரண்டுடனும் பெண் என்றைக்கும் விலங்கிடப்பட்டவளாகவே இருக்கிறாள்.

சுளுந்தீ பெண்கள் காலத்தால் வேறுபட்டவர்கள், பெண்கள் என்ற வகையில் இன்றைக்குமானவர்கள். நாவிதப் பெண்கள் பண்டுவம் அறிந்த மருத்துவச்சியாக இருக்கிறார்கள். அந்தப்புறப் பெண்களின் பாலியல் நோய்களுக்கும் குழந்தைப் பேற்றுக்கும் மருத்துவம் பார்ப்பவர்களாக இருக்கிறார்கள். பெண்களுக்கு இடைச்சவரம் செய்கிறார்கள். ராமபண்டுவனின் பெண்டாட்டி வல்லத்தாரை அப்படியானவளாக இருக்கிறாள்.

அரண்மனையும், ஆணாதிக்கமும் அவளை மென்று துப்புகின்றன. அவ்வாறே அந்தப்புரங்களின் கதையும், சதிராட்டப் பெண்களின் கதையும் சுளுந்தீயை அனைக்க முடியாமல் ஆவியாகிப் போய்விடுகின்றன.

பெண்கள் தம்மை மீட்டுக் கொண்டு வந்த சரித்திரம் சுளுந்தீயிலும் சுள்ளென்று சுடுகிறது. வாடன், செங்குலத்து மாடன் என இரு எளிய மனிதர்களை தமது சதியால் மோதவிட்டு அரண்மனை தனது அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்வதை தொடக்கத்திலும். நூலின் இறுதியிலும் பதைபதைப்புடன் முன்நிறுத்துகிறது. அதிகாரம் என்பது தொடர்ந்து எளிய மனிதர்களை மோதவிட்டு அவர்களது உயிர்களைக் குடித்து மேலும் முன்னநகர்கிறது.

நகரும் என்பதற்கு காலம் ஒரு தடையல்ல என்பதை சுளுந்தீ கால வெளிச்சத்தில் முன் வைக்கிறது.

சுளுந்தீ ஆவணமெங்கும் குல நீக்கமானவர்கள் அலைவுறுகிறார்கள். அல்லல் படுகிறார்கள் அவர்களது ஆற்றா அழு கண்ணீர் கொதிநீராகிவீழுகிறது. சுளுந்தீயின் பெரு நெருப்பில் அவர்கள் ஒளிந்து வாழ்வதும் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதுமான வாழ்வு பொற்காலங்கள் என்று சொல்லப்பட்டவற்றின் மீது தீ அள்ளி கொட்டுக்கிறது. நாயக்கர் கால குல நீக்கம் அதனை எதிர்த்த குலங்களின் மீது மதங்களின் ஆற்றுபடுத்துதல்கள் ஏசுசபையின் வரவு மேலும் குலநீக்கத்தினையும், சனங்கள் வரி செலுத்துவதையும் நீதிபடுத்துகிறது என்றால் பின்னாளில் ஆங்கிலேயர் வரவுவும் சுரண்டலுக்குமான நீதியை ஏசு சபை பெற்றுத் தருகிறது.

குல நீக்கம் குற்றபரம்பரைச் சட்டமாகத் தொடர்கிறது. ஆளுபவர் மாறுகிறார்கள் அதிகாரம் ஒன்றுதான் என்பதையே சுளுந்தீயின் வரலாறு பேசுகிறது. மக்களின் ஆற்றாது அழுத கண்ணீர் தேய்க்கும் படை என்ற அறவுரைக்கு அப்பால் மதம் அந்த இடத்தை கைப்பற்றிக் கொண்டு நிறுவனமாகும் போது இறுகத் தொடங்குகிறது. அது அதிகாரத்தின் பிறிதொரு கிளையாகிறது. கடவுள் என்பதும் ஆள்பவரும் வேறு

வேறல்ல என்ற மதங்களின் கதையாடல், அரசியல் ஆன்மிகம், ஆன்மிக அரசியல் புரட்சியின் கங்குகளை நீர்த்துப்போகச் செய்கிறது. மதத்திற்கும், அதிகாரத்திற்கமான தொடர்பு சுளுந்தீக்களை பரவவிடாமல் தடுக்கிறது.

பன்றிமலை சித்தர் எஞ்சிய சமண மருத்துவத்தின் அல்லது சமண குருவின் வழி தோன்றலாகவே தோன்றுகிறது. எனினும் சைவ சமயத்தவராகவே அறியப்படுகிறார். அரண்மனையார்களும், அரண்மணை யாரின் பெண்டு பிள்ளைகளும் அவர் முன் வீழ்ந்து வணங்குகிறார்கள். அவர் ஒரு தேசாந்தரி.

அதிகாரம், குலம் எல்லாவற்றையும் புறந்தள்ளி மனிதர்களை அடையாளம் காட்டும், மனிதத்தை அடையாளம் காட்டும் சுளுந்தீயின் மையச்சுடராக ஒளிர்கிறார். சுளுந்தீயின் மக்கள் ஆன்மிகமாக பன்றிமலை சித்தர் இருக்கிறார்

சுளுந்தீ ஒரு மெய் புனைவா, அல்லது புனைவு போன்ற மெய்யா என்றால் இரண்டுமில்லை அது ஒரு மெய். கால மெய் என்று சொல்லத் தோன்றுகிறது. கல்வெட்டுக்களையும், கால மெய்களையும், செம்புபட்டயங்களையும், ஆவணங்களையும் இணைத்துச் செல்லும் ஒரு கோட்டுச் சித்திரம்.

சித்திரம் மெய். கோடு மெய்யை, சித்திரத்தை இணைத்துச் செல்லும் வடிவம் கொடுக்க முயற்சிக்கும் ஒரு ஏற்பாடு. வரலாற்று மெய்யை அதன் காலத்தின் நீதியில் நின்று பேசியிருக்கிறார் முத்துநாகு . கடும் உழை ப்பும், அர் ப்பணி ப்பும் அதை சாத்தியப் படுத்தியிருக்கிறது. சுளுந்தீ என்பது நெருப்பின் நேற்றய வடிவம். இன்றைக்கும் சுடும் பெரு நெருப்பு.

நூல்: சுளுந்தீ, ஆசிரியர் இரா. முத்துநாகு
வெளியீடு: ஆதி பதிப்பகம், விலை 480/15,
மாரியம்கோவில் தெரு, பவித்திரம்,
திருவண்ணாமலை 606806
அலைபேசி 99948 80005

- இரா. மோகன்ராஜன்