கவி இளவல் தம்பி
பிரிவு: சஞ்சிகை - நவம்பர் 2017

எஸ்.ஸ்ரீதேவி என்றுதான் 
எழுதுவாள் பெயரை
அவளை அவளே பெற்றெடுத்ததாய்
அடிக்கடி சொல்லிக்கொள்வாள்
அப்படியென்றால்
நீ கடவுளா என்பேன் 
இல்லை நான் நாத்திக’ள்’ என்பாள் 
பெரியாரும் பேசாத 
பெண்பால் அது

சுயம்பு ஆதலால் 
சொல்லி ஜெபிக்க ஆளாருமற்ற
மதங்கள் சொல்லும் எந்தக் கடவுளும்
நாத்திகனே என்றேன்
”டிஃபைன் கடவுள்” என்றாள் 
“டிவினிட்டி இஸ் கடவுள்”
என்றேன்

வீட்டு நாய்களைப் 
பிடிக்காது அவளுக்கு 
உடன்பாடில்லை 
கட்டுக்குள் இருக்கும் எதன்மீதும் 
வீடென்ற கட்டமைப்புமே
அதற்குள் அடங்கும்தான்

அழுதலும் பிடிக்காது
அழுதாலும் பிடிக்காது 
கண்ணீர் விடாதே
கலகம் செய் என்பாள்
நடந்ததைக் கேட்டால்,
”செத்த பிள்ளைக்கு பெயரிடாதே..” 
வருவதைக் கேட்டால், 
”வந்தால் பார்க்கலாம்,
வரட்டும் பார்க்கலாம்..”
என்று முடிப்பாள்

ஓரிடத்தில் தங்குவதில்லை
ஒருவருக்காகவும் 
தயங்குவதில்லை
தனக்கென்று எதையும் 
சேர்ப்பதுமில்லை
பிறரிடம் எதையும் 
கேட்பதும் இல்லை

இந்த நாளில், இந்த நொடியில் 
மட்டுமே கவனம் மற்றவை மாயை
அடிமைக்கு அநாதையே மேல் 
அவளுக்கிதுவே அடிப்படைக் கொள்கை
பிழைக்கத் திரியும் லட்சோபலட்சப் 
பிணங்களில் மத்தியில் அவள் மட்டுமே 
வாழ்ந்துகொண்டிருக்கிறாள்!