இடஒதுக்கீடு இன்றைய நிலையும், எதிர்காலத் தேவையும்' என்ற தலைப்பில், வேலூரில் இயங்கிவரும் கல்வி மற்றும் சமூகப் பகுப்பாய்வுக்கான அம்பேத்கர் மய்யத்தில் 27.8.2005 அன்று, கருத்தரங்கு நடைபெற்றது. இக்கருத்தரங்கில், ராணிப்பேட்டை பாரதமிகுமின் நிறுவனத்தின் துணை மேலாளர் கில் சிறப்புரையாற்றினார். அம்பேத்கர் மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் அய். கதிர்வேலு, எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் அறிமுக உரையாற்றினர். தலைமை உரை ஆற்றிய வேலூர் தலைமை அஞ்சலகத்தின் துணை அலுவலர் கதிரேசன், ஒரு காலத்தில் மிக எளிதாகப் பெற்ற அஞ்சல்துறை பணியிடங்களை, இன்று எளிய மக்கள் எவரும் பெற முடியாதபடி ஊழல் புரையோடி இருக்கிறது; இன்னும் 17 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன'' என்றார்.

சிறப்புரையாற்றிய கில், மிக விரிவான பின்னணியோடு இடஒதுக்கீடு தொடர்பான வரலாற்றுப்பூர்வ செய்திகளைப் பட்டியலிட்டார். முதல் சட்டத்திருத்தமே இடஒதுக்கீட்டுக்காக செய்யப்பட்டது என்ற அவர், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இடஒதுக்கீடு இன்னும் முழுமையாக கடைப் பிடிக்காத நிலைமை உள்ளது என்றார். நிரப்பப்படாத பணியிடங்களை நிரப்பும் முறை அடியோடு நிறுத்தப்பட்டு விட்டது. சமூகச் சுழற்சிறை என்றிருந்த பணிநியமன முறையும் மிகத் தந்திரமாக பணி சுழற்சி முறை என்று மாற்றப்பட்டுவிட்டதால் தாழ்த்தப்பட்டோருக்கு அதிகப் பணியிடங்கள் கிடைப்பதில்லை. இன்னும் பல துறைகளில் இடஒதுக்கீட்டின்படி பணி நியமனம் செய்ய வேண்டிய தாழ்த்தப்பட்டோருக்கான இடங்கள் நிரப்பப்படாமலேயே உள்ளன. மூன்று ஆண்டுகள் இப்பணியிடங்களை நிரப்பாமலேயே வைத்திருந்து தகுதி வாய்ந்த ஆட்கள் இல்லை என்றுகூறி, பொதுப் பணியிடங்களாக அவைகளை மாற்றி நிரப்பிக் கொள்ளும் தந்திரம் பல துறைகளில் இருக்கிறது என்றார். தன் கருத்துக்கு ஆதாரமாக அவர் பல்வேறு புள்ளி விவரங்களை வழங்கினார்.

சிறப்புரைக்குப் பிறகு, விவாதத்தைத் தொடங்கி வைத்த பேராசிரியர் இளங்கோவன், தனியார் கல்லூரிகளில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படாத நிலையை சுட்டிக்காட்டினார். விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பாபு மாசிலாமணி, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் ஒற்றுமை கலைந்ததால், இடஒதுக்கீடு பறிபோகும் நிலை வந்துள்ளது. பெரியாரை விமர்சிப்பதை விட்டு விட்டு, அவரை வழிகாட்டியாகக் கொள்வதின் மூலமே இரு சமூகம் இணையும். எனவே, உடனடியாக சமூக நீதி பாதுகாப்பு இயக்கம் ஒன்று தேவை என்றார் அவர்.

அரசு மற்றும் தனியார், பொதுத் துறை நிறுவன ஊழியர்களை ஒன்றிணைத்து, இடஒதுக்கீட்டைப் பறிப்பதற்கெதிராக போராட்டம் ஒன்றை வேலூரில் நடத்துவது என்ற தீர்மானத்துடன் கூட்டம் முடிந்தது.