இன்றைக்குச் சரியாக 26 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு இந்திய நடுவணரசால் ஒப்புதலளிக்கப்பட்டது. மக்களின் உயிருக்கும் உடமைக்கும் ஊறு விளைவிக்கும் இந்த நச்சு ஆலை, மக்கள் அதிகமாய் புழங்கும் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு அருகேதான் அமைந்தது. பேட்டரிகளுக்குப்  பயன்படுத்தப்படும் பல்வேறு வேதிப் பொருட்கள் இங்கு தயாராயின. இந்தத் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களின் கவனக்குறைவால், ஆலையிலிருந்து நச்சு வாயுக்கள் வெளியேறி, கடந்த 1984ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள், ஒரே இரவில் அம்பத்தூரைச் சுற்றியுள்ள 15 ஆயிரம் பேர் மூச்சு முட்ட இறந்து போயினர். அதற்குப் பிறகும் பல இலட்சக்கணக்கானோர் கடுமையான உடற்பாதிப்பிற்கும்,  மனநல பாதிப்பிற்கும் ஆளாகி நாள்தோறும் இறந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஊரில் பிறக்கும் குழந்தைகளும் ஏதேனும் ஒரு வகையான பாதிப்பிற்குள்ளாகியே பிறக்கின்றன.

bhopalஎன்ன சென்னை அம்பத்தூரிலா..? 26 ஆண்டுகளுக்கு முன்பா..? இது எப்போது நடந்தது? என்று வியப்போடும், பரிதவிப்போடும் நீங்கள் கேட்கின்ற கேள்வியின் பொருள் விளங்குகிறது. மேற்காணும் நிகழ்விலும், அது நடைபெற்ற நாளிலும், விளைவித்த இழப்பிலும் யாதொரு மாற்றமுமில்லை. ஆனால் நேர்ந்த இடம்தான் வேறு. எழுத்தில் அதன் தாக்கத்தை உணர்ந்து பார்ப்போமே என்பதற்காக இடத்தை மாற்றிப் பார்த்தோம், அவ்வளவுதான். விச வாயு விபத்து சென்னையில் நடந்ததாக போலியாய் எழுத்தில் வடித்ததற்கே நம் மனது கிடந்து பதைக்கிறதே. ஆனால் அவ்விடத்தில் வாழ்ந்து துடிக்கத் துடிக்க மாண்டு போன மக்களையும், பாதிக்கப்பட்டோரின் அவலக்குரலையும் நாம் ஒரு கணமாவது செவி மடுத்திருப்போமா?
 
மத்தியப்பிரதேசத்தின் தலைநகர் போபால், மக்கள் அடர்த்தியாக வாழும் நகர்ப்புறம். கி.பி.11ஆம் நூற்றாண்டில் ராஜாபோஜ் என்ற மன்னரால் உருவாக்கப்பட்ட பூல்தலா, படாதலா என்ற இரு ஏரிகள் போபால் நகரத்தைச் சுற்றி அமைந்துள்ளன. நெருக்கமாய் வீடுகள், ஆங்காங்கே சோலைகள் என நகரத்தின் அழகு விரிந்து கிடக்கிறது. சற்றே கடினமான மணற்பாறைகளால் ஆன இந்நகரின் நிலப்பகுதி, கடல்மட்டத்திலிருந்து 1652 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சற்றேறக்குறைய 9 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர் (விபத்து நடந்த காலகட்டத்தில்). இங்குதான் 1969ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டைச் சேர்ந்த யூனியன் கார்பைடு என்ற நிறுவனம், தனது பூச்சிக் கொல்லி தயாரிக்கும் வேதிக்கூடத்திற்காக, இந்திய அரசுடன் ஒப்பந்தம் போட்டு அதற்கான உற்பத்தி நிலையத்தை போபாலில்  தொடங்கியது. இந்திய ஒன்றிய அரசின் பங்காக 26 விழுக்காடும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பங்காக 51 விழுக்காடும், மீதமுள்ளவை இந்தியாவிலுள்ள தனிநபர்களின் பங்காகவும் கொண்டு நிறுவனத்தின் நிர்வாக மற்றும் இலாப உரிமைகள் வரையறுக்கப்பட்டன.

பூச்சிக்கொல்லி மருந்து உருவாக்கத்திற்கு மூலமாகத் திகழும் 'மீதைல் ஐசோசயனைடு' என்ற வேதிப்பொருள் மிகக் கொடிய நச்சுத்தன்மை கொண்டதாகும். இதனுடன் தண்ணீர் கலக்குமானால், மிக வீரியமான நஞ்சு உருவாகி காற்றுடன் கலந்து சுற்றிலுமுள்ள உயிர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கி, கொன்று குவித்துவிடும் ஆற்றல் படைத்தது. உலகின் நச்சு வாயு விபத்தில் முதன்மை இடத்தைப்  பெற்றுள்ள போபால் பெருந்துயரம், அண்மையில் மிகுந்த பரபரப்பிற்கு உள்ளாகியிருக்கிறது. இக்கொடிய விபத்தில் தங்களின் இன்னுயிரைப் பறிகொடுத்தோரின் குடும்பத்தினருக்கும், ஊனத்தைப் பரிசாகப் பெற்ற இலட்சக்கணக்கான மக்களுக்கும் முறையான நீதி கிடைக்கவில்லை என்ற கொதிப்பு இந்திய நாடு முழுவதும் பற்றிப் பரவி எரிந்து கொண்டிருக்கிறது.

தற்போது இந்தியாவை ஆளும்  காங்கிரசுக் கட்சி போபால் சிக்கலால் கலகலத்துப் போயிருக்கிறது. போபால் நச்சுக் கசிவு நேர்ந்த காலத்தில், மத்தியப்பிரதேசத்தை ஆண்டு கொண்டிருந்த கட்சி காங்கிரசு. நடுவணிலும் அந்தக் கட்சியே பொறுப்பிலிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள தற்போதைய சூழலிலும் காங்கிரசே நடுவணாட்சியில் உள்ளது. போபால் நச்சு வாயு ஏற்படுத்திய கொடூரங்களைத்  தாங்கிக் கொண்டு, தங்களுக்கு நீதி கிடைக்கப் போராடிய மக்களுக்கு, ஏறக்குறைய 26 ஆண்டுகளைக் கடந்து (அ)நீதி வழங்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாய் மக்களை உயிர்க்கொலை மற்றும் உயிர்வதை செய்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் பொறுப்பாளர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை என்ற 'மிகக் கடுமையான' தண்டனை வழங்கி தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது (!?). (அதற்குள் குற்றவாளிகள் அனைவரும்  நீதிமன்றத்திலிருந்து விடுப்பாணை (ஜாமீன்) பெற்று வீட்டிற்குச் சென்றுவிட்டார்கள். என்னே நீதி..! என்னே தீர்ப்பு..!)

எதற்காகச் சாகிறோம் என்பது குறித்து எதுவுமே தெரியாமல், ஓரிரவில் நடந்து முடிந்த போபால் பெரு விபத்து, உலகச் சூழலியல் வரலாற்றில் எந்தக் காலத்திலும் அழிக்க, மறக்க இயலாத ஒன்றாகும். நச்சு ஆலைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் மீறப்பட்டு, சட்டத்திற்கும், தார்மீகத்திற்கும், மனித அறத்திற்கும் புறம்பாய் அன்று நடைபெற்ற ஒரு வன்செயல், இன்று நாடு முழுவதும் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அன்றோடு முடிந்துபோன விசயமாக இருந்திருப்பின், என்றைக்கோ இதனைக் கை கழுவி, மக்களின் மனத்திரையிலிருந்து நம் அரசியல்வாதிகள் அகற்றியிருப்பர். யூனியன் கார்பைடு நச்சுக்கூடம் அமைக்கப்பட்ட அவ்விடத்தைச் சுற்றிலுமுள்ள குடியிருப்புகள், புரங்கள், சிற்றூர்கள் இன்னமும் அந்த சோக வடுக்களைச் சுமந்து கொண்டிருப்பதுதான் காலத்தின்  கோலம். அமெரிக்கத்தீவு ஒன்றில் உல்லாசமாக வாழ்ந்து கொண்டிருக்கும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவராக இருந்த, கொலைக்குற்றவாளி வாரன் ஆண்டர்சன், இந்தியாவில் தலைவிரித்தாடும் ஊழல் அரசியலால், இன்றைக்கும் தப்பிப் பிழைத்துக் கொண்டிருக்கிறான். அந்தக் கொடியவனை, அமெரிக்க அரசோடு இணைந்து இந்திய நடுவணரசும் (காங்கிரசு மற்றும் பாசக உள்பட) தந்திரமாய்ப்  பாதுகாத்து வருகின்றன என்பது தான் வரலாற்றில் மறைக்க முடியாத உண்மை.

பணியாளர் ஒருவரின் தவறான செயலால், கலன்களைக் கழுவும் நீர், மீதைல் ஐசோசயனைடு என்ற வேதிப்பொருளின் மீது விழுந்து எதிர்பாராதவிதமாக நச்சுவாயுவை உற்பத்தி செய்துவிட்டது. ஆனால் இப்படியொரு தவறு நடக்கிறது என்பது தெரிந்தும், அந்தக் கூடத்தை நிர்வகிக்கும் பணிப் பொறுப்பில் இருந்த அலுவலர்கள் 'என்ன நேர்ந்து விடப்போகிறது?' என்ற மெத்தனத்தில் இருந்து விட்டனர். நேரம்  ஆக, ஆக வெப்பம் அதிகரித்துக் கொண்டிருந்த நிலையில், கொஞ்சமும் அதற்குரிய முன்னேற்பாட்டுப் பணிகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்டவில்லை. ஒரு கட்டத்திற்குப் பிறகே ஆபத்தைக் குறிக்கும் ஆலைச் சங்கொலியை எழுப்பி, ஊர் மக்களை எச்சரித்தனர். அந்த எச்சரிக்கையை மக்கள் வழக்கமான ஒலியாகக் கருதி ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். அதற்குப் பிறகு வெப்ப அளவு மேலும் அதிகரித்து  மீதைல் ஐசோசயனைடு என்ற அந்நச்சு வாயு, வெண்புகையாய் ஊருக்குள் பரவி, மக்களை மீளாத் துயரத்தில் ஆழ்த்திச் சென்றுவிட்டது.

நகரம் முழுவதும் ஒரே கூச்சல், எங்கு பார்த்தாலும் மரண ஓலங்கள், செத்து விழும் மக்கள் என்று ஒரே இரவில் போபால் நகரம், சுடுகாடாய் மாறி, ஆங்காங்கே குவியல் குவியலாய் உடல்கள் எரிக்கப்பட்டன. மனிதர்கள் மட்டுமன்றி, கால்நடைகளும் கொத்துக் கொத்தாய்  செத்து விழுந்தன. வேதிக்கூடத்தைச் சுற்றியிருந்த சிற்றூர்களில் வாழ்ந்த மக்களுள் பெரும்பாலானோர் நச்சு வாயுவின் கோரத்தாக்குதலுக்கு ஆளாகி, தங்களின் இன்னுயிரை இழந்தனர். இவர்களில் பெரும்பான்மையோர் அடித்தட்டு கூலித் தொழிலாளர்களாவர்.

இந்த நிகழ்விற்குப் பிறகு அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பல்லாயிரக்கணக்கானோர் இறக்கத் தொடங்கினர். மேலும் இலட்சக்கணக்கான மக்கள், தங்களின் உடலில் ஊனத்தைப் பரிசாகப் பெற்றனர். அண்மையில் புதுதில்லியிலுள்ள சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் மையம் நடத்திய ஆய்வில், யூனியன் கார்பைடு நிறுவனம் அமைந்த இடத்திற்கு மூன்று கி.மீ. சுற்றளவில் நிலத்திலும், தண்ணீரிலும்  அதிகளவு நச்சு வேதிப்பொருட்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த நச்சு இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் ஏறக்குறைய 561 மடங்கு கூடுதலாகும்.

'செவின்' என்ற பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பிற்காகவே இந்த மீதைல் ஐசோசயனைடு வேதி பயன்படுத்தப்பட்டது. பூச்சிக்கொல்லியான செவின், மனித உயிர்க்கொல்லியும் கூட. இதனைச் சுவாசித்தால் நெஞ்சுவலி, நுரையீரல் திரவக்கசிவு, உடனடிச்சாவு என கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது, யூதர்களைக் கொல்வதற்காக இட்லர் பயன்படுத்திய 'ஹைட்ரசன் சயனைடு' எனும் கொடிய நச்சைவிட 500 மடங்கு கடுமையானது (நன்றி: 'போபால்: விச வாயு படுகொலை நினைவுகளும், எளிய மக்களின் போராட்ட வரலாறும்', பாமயன்). 'நமது தொழில் வல்லுநர்களும், அரசுகளும், தொழிலதிபர்களும் திரும்பத் திரும்ப  சூழலுக்குக் கேடு பயக்கும் திட்டங்களுக்கே முன்னுரிமை தருகின்றனர். காற்று ஆற்றல், கதிர் ஆற்றல் போன்ற தீங்கிழைக்காத எரிசக்தியைப் புறந்தள்ளுகின்றனர். ஏனெனில் காற்றுக்கும், வெயிலுக்கும் எந்த எசமானும் சொந்தம் கொள்ள முடியாதல்லவா' என்று சூழலியல் சிந்தனையாளர் டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ராவின் கூற்றை நமது அரசியல்வாதிகளுக்குப் பொருத்திப் பார்ப்பது நல்லது. (நன்றி: பசுமைச் சிந்தனை, சு.பாரதிதாசன்).

ஒட்டுமொத்த ஊரையே பதம் பார்த்து, அவர்களில் பெரும்பாலானோரை பிணக்குழியில் தள்ளியது மீதைல் ஐசோசயனைடு என்ற அக் கொடிய நஞ்சே. இதனை முறையாகக் கையாளத் தெரியாத, பாமரத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தியது மாபெரும் குற்றம். மனித உயிர்களுக்குத் தீங்கினை விளைவிக்கும், இந்த வேதிப்பொருள் குறித்து அறிந்திருந்த மேல் நிலை அலுவலர்கள், பணியில் மெத்தனம் காட்டிய  நிகழ்வானது கொலைக்குற்றத்திற்கு நிகரானதாகும். இப்படியொரு கொடிய விபத்து நிகழ்ந்த பின்னர் போபால் நகராட்சி ஏறக்குறைய 15 ஆயிரம் உடல்களைக் கண்டெடுத்ததாகத் தகவல் கூறியது. யூனியன் கார்பைடு நிறுவனமோ இதனை மறுத்து, வெறும் 3 ஆயிரத்து 800 பேர் என்று உயிரிழப்பைக் குறைத்துக் கூறியது. ஆனால் இதை விடக் கொடிய உண்மை யாதெனில், ஆயிரக்கணக்கான உயிர்களைக் குடித்த அக் கொடிய  நஞ்சின் பெயரை கடைசி வரை அந்நிறுவனம் கூறாமல் மறைத்துவிட்டது. அதுமட்டுமல்ல, உயிருக்காக போபால் பொதுமக்கள் போராடிக் கொண்டிருந்த அந்தக் கடைசி மணித்துளிகளிலும், அக்கொடிய நஞ்சை முறிக்கும் மருந்தின் பெயரை 'அமெரிக்க இராணுவ இரகசியம்' என்று கூறி அதனைத் தெரிவிக்க மறுத்துவிட்டது.

இந்திய நடுவணரசாலும், அமெரிக்க வல்லாதிக்கத்தாலும் மிகத் திட்டமிட்டு  நடத்தப்பட்ட 'வேதிக்கூட' ஆய்வு முயற்சிதான், அந்த எளிய மக்களின் படுகொலை. வாரன் ஆண்டர்சனைத் தப்பிக்க வைத்துவிட்டு, உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதில் இதுவரை முனைப்புக் காட்டாது, அக்குறிப்பிட்ட வழக்கினை துரிதப்படுத்த எந்தவித முயற்சியும் மேற்கொள்ளாது தற்போது வரை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படுகின்ற  இரண்டகத்தின் முடிச்சுகளை அவிழ்த்துக் கொண்டே வந்தால், இறுதியில் முடிகின்ற இடத்தில் இந்திய அரசியல்வாதிகளே, அதிலும் குறிப்பாக காங்கிரசுக் கட்சியின் தலைவர்களே குற்றவாளிகளாக நிற்கிறார்கள், இராஜீவ்காந்தி உட்பட.

இந்திய நடுவணரசின் முன்னாள் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையமைச்சர் வசந்த் சாத்தே, 'வாரன் ஆண்டர்சன் அமெரிக்காவுக்கு தப்பியோடியதில், அப்போது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த அர்ஜீன்சிங் அரசும், நடுவணில் ஆட்சி செய்த நரசிம்மராவ் அரசில் உள்ள ஒரு சிலரும்தான், முக்கியமாக அப்போது உள்துறை அமைச்சகத்தில் இருந்தவர்கள்தான் உதவியுள்ளனர்' என்று  குற்றம்சாட்டியுள்ளார். அதேபோன்று 'போபாலில் நடைபெற்ற அனைத்து விவகாரங்கள் குறித்தும் அர்ஜீன்சிங்கிற்குத்தான் தெரியும். ஆகவே, அவர் மௌனம் கலைத்துப் பேச முன் வரவேண்டும்' என்று மத்தியப்பிரதேசத்தின் பேரவை விவகாரத்துறை அமைச்சராகத் தற்போது பொறுப்பிலிருக்கும் நரோத்தம் மிஸ்ரா கூறுகிறார்.

இதையெல்லாம் விட மிக முக்கியமானது, இராஜீவ்காந்தியின் முதன்மைச்  செயலராகப் பொறுப்பு வகித்த பி.சி.அலெக்சாண்டர், 'போபால் விச வாயு விபத்து நடந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைக்காக இராஜீவ்காந்தி தலைமையில், அதிகாலை 3 மணியளவில் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் அவசரமாகக் கூடியது. இக்கூட்டத்தில் இராஜீவ்காந்தி அழைப்பின் பேரில் மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த அர்ஜீன்சிங் கலந்து கொண்டார். கூட்டத்திற்குப் பிறகு  இராஜீவ்காந்தியும், அர்ஜீன்சிங்கும் தனியே சந்தித்துப் பேசினர். அப்போது அர்ஜீன்சிங்கின் ஆலோசனையின் பேரில் ஆண்டர்சனை வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்வதற்கு இராஜீவ்காந்தி சம்மதம் தெரிவித்திருக்கலாம்' என்று ஐயம் தெரிவித்திருக்கிறார். வாரன் ஆண்டர்சனை வீட்டுக் காவலிலிருந்து விடுதலை செய்வதில் இராஜீவ்காந்தி அரசு வேகம் காட்டியதாக அமெரிக்க  புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. (நன்றி: தினமணி, சூன் 12, 2010)

அர்ஜீன்சிங்கிற்கு போபால் விச வாயு நிகழ்வின் அனைத்து உண்மைகள் மட்டுமன்றி, அச்சமயத்தில் இராஜீவ்காந்தியின் நிலைப்பாடு குறித்த மிக முக்கியமான விசயங்களும் தெரியும் என்று காங்கிரசாரும், எதிர்க்கட்சிகளின் பேராளர்களும் குற்றம் சாட்டி வரும் நிலையில், சோனியாகாந்தியும், அர்ஜீன்சிங்கும் தற்போது தனியாகச் சந்தித்துப் பேசியுள்ளனர். ஆனால், இவ்வளவிற்குப்  பிறகும் கூட அர்ஜீன்சிங், இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 'சோதனைக் கூட எலிகளாய்' இந்திய மக்களைப் பயன்படுத்த நடந்த சதியில், இந்திய மற்றும் மத்தியப்பிரதேச மாநில அரசியல்வாதிகள் அனைவருக்குமே ஏதோ ஒரு வகையில் பங்கிருக்கிறது.

போபால் விச வாயு நேர்ச்சி குறித்தும், அதற்காக 26 ஆண்டுகள் கழித்து வழங்கப்பட்ட நீதி குறித்தும் விமர்சனம் செய்த தென் தமிழக கிராமத்துப் பெரியவர் ஒருவர் அழகாய் ஒரு வரியில் இரத்தினச் சுருக்கமாய் தெரிவித்த கருத்து பின்வருமாறு, 'எல்லாருமா சேந்து அந்த மக்கள கொன்னு போட்டதோட மட்டுமில்லாம, அமெரிக்காக்காரன் தர்ற எலும்புத் துண்டுக்காக கூட்டுக் களவாணித்தனம்  பண்ணியிருக்காங்கே! இதுல, நீதியாவது... புண்ணாக்காவது... அட போப்பா...' என்றார். இந்தக் கட்டுரை முழுவதிலும் நாம் நீட்டி முழக்குகின்ற விசயத்தை வெறும் ஒற்றை வரியில் விமர்சனம் செய்த அந்தப் பெரியவர் பார்வையில், இந்திய அரசியல்வாதிகளை நாம் விமர்சனம் செய்தால், 'அட..., த்தூ... வெட்கங்கெட்டவர்களே!'.

யூனியன் கார்பைடு 'டோவ்' என்று ஆனது!

பாரதிய ஜனதா கட்சி ஆட்சியிலிருந்தபோது யூனியன் கார்பைடு நிறுவனத்தை, உலகின் மிகப் பெரிய வேதிப்பொருள் தயாரிப்பு நிறுவனமான 'டோவ்', 11.6 பில்லியன் டாலர்கள் கொடுத்து விலைக்கு வாங்கியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் விச வாயு நேர்ச்சி ஒரு போதும் தங்களைப் பாதிக்காது என்றும், அதற்குரிய இழப்பீட்டை நாங்கள் தரவும் மாட்டோம் என்றே அறிவித்தது. இதற்கு அப்போதைய  ஆட்சியாளர்களும் மறைமுகமாக ஒப்புதலளித்தனர்.

இடைக்கால இழப்பீடு வழங்கக்கூட முன்வராத யூனியன் கார்பைடு!

நியூயார்க்கில் நடைபெற்ற வழக்கில் அதன் மாவட்ட நீதிபதி, இடைக்கால இழப்பீடாக 270 மில்லியன் டாலர்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதனைக் கூட யூனியன் கார்பைடு நிறுவனம் மறுத்துவிட்டது. அதற்கு முன்பாக 1986ஆம் ஆண்டு போபால் மாவட்ட நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மூவாயிரம் மில்லியன் டாலர்களை வழங்க உத்தரவிட்டது. ஆனால்  உச்சநீதிமன்றமோ இரு தரப்பாரும் பேசித் தீர்த்துக் கொள்ள ஆலோசனை வழங்கியதோடு மட்டுமன்றி, யூனியன் கார்பைடு நிறுவனம் 470 மில்லியன் டாலர்களைக் கொடுக்க வேண்டும் என்று மிகவும் கீழிறங்கித் தீர்ப்பளித்ததுதான் மிகக் கொடுமை.

போபால் விச வாயு நிகழ்வின் தற்போதைய குற்றவாளிகள்!

மகிந்திரா & மகிந்திரா நிறுவனத்தின் தற்போதைய தலைவராக உள்ள கேசப் மகிந்திரா, யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய் கோகலே, துணைத் தலைவர் கிஷோர் காம்தார், பணி மேலாளர் ஜே.முகுந்த், உதவிப் பணி மேலாளர் ராய் சவுத்திரி (இவர் வழக்கு நடைபெறும்போதே இறந்து விட்டார்), உற்பத்தி மேலாளர் எஸ்.பி.சவுத்திரி, உற்பத்திக் கலன் கண்காணிப்பாளர் கே.வி.செட்டி,  உற்பத்தி உதவியாளர் சகீல் குரேசி ஆகியோர் நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாவர். இத்தீர்ப்பில் எவ்விடத்திலும் வாரன் ஆண்டர்சனின் பெயர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வழக்கிற்காக அரசு சாட்சிகள் 178 பேரிடமும், எதிர் சாட்சிகள் 8 பேரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக 3008 ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு  வழங்கப்பட்டிருந்தன. அலட்சியப் போக்கால் மரணம் விளைவித்தல், கொலை அல்லாத மரணத்திற்குக் காரணமாக இருத்தல், ஒட்டுமொத்த கவனக் குறைவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டோர் 8 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி மோகன் திவாரியால் தீர்ப்பு வழங்கப்பட்டது.

அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம் எனுமொரு மோசடி!

யூனியன் கார்பைடு என்ற நிறுவனத்திலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால் ஏற்பட்ட பாதிப்பே, மிகக் கொடூரமானதாக இருக்கும்போது, அணுக்கதிர் வீச்சால் ஏற்படும் விளைவுகளை கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை. ஆனால் இதில் விபத்து நேர்ந்தால் வழங்கக்கூடிய இழப்பீடு குறித்த சட்ட வரைவு ஒன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அணு விபத்தால்  பாதிக்கப்படுவோர் பத்தாண்டுகளுக்குள் தங்களது இழப்பீட்டைக் கோர வேண்டும் என்று இதிலுள்ள ஒரு பிரிவு கூறுகிறது. ஆனால் தலைமுறை தலைமுறையாகப் பாதிக்கப்படும் அணுக்கதிர் விபத்தில் பத்தாண்டு வரையறை என்பதே கேலிக்குரியதாக உள்ளது. அதுமட்டுமன்றி, இந்தியாவிலுள்ள அணு உலைகள் அனைத்தும் பாதுகாப்பானவை என்றால், எதற்காக அணு விபத்து இழப்பீட்டுச் சட்டம்?

தேடப்படும் குற்றாவளிகளும் இந்தியாவும்!

யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை கைது செய்ய வேண்டும் என்று போபால் முதன்மை நீதிபதி, கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வுத்துறைக்கு ஆணையிட்டார். பலமுறை வாரன் ஆண்டர்சனுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டும், அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லாததால், கடந்த 1992ஆம் ஆண்டு, தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதேபோன்று ஈழ  விடுதலைப் போராட்ட காலத்தில், தமிழகத்தில் தங்கியிருந்தபோது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருந்த டக்ளஸ் தேவானந்தாவை, தமிழக உயர்நீதிமன்றம் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்திருந்தது. ஆனால் அண்மையில் புதுதில்லிக்கு வந்திருந்த இலங்கை அதிபர் இராஜபட்சே, தன்னோடு டக்ளஸ் தேவானந்தாவையும் அழைத்து வந்திருந்தார். அவரிடம் இந்திய தலைமை  அமைச்சர் மன்மோகன் சிங்கும், அவரது அமைச்சரவைத் தோழர்களும் கைகுலுக்கி, இன்முகம் காட்டி அளவளாவி மகிழ்ந்தனர். தேடப்படும் குற்றவாளிகளுக்கும், இந்திய அரசியல்வாதிகளுக்கும் எப்போதுமே நெருக்கமான தொடர்பு உண்டு போலும்!

சென்னையிலும், மராட்டியத்திலும் நடந்த விஷ வாயுக் கசிவுகள்!

ஹுண்டாய் மகிழுந்து தயாரிப்பு நிறுவனத்தில் கடந்த 2007ஆம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்த விஷ வாயுக் கசிவால் மக்கள் பெரும் பீதிக்கும், அவதிக்கும் ஆளாயினர். உயிருக்கு சேதம் விளைவிக்கக்கூடிய வாயு அல்ல. கண் எரிச்சல், மூச்சு விடுதலில் அவதி ஆகியவற்றைத் தாண்டி பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தாது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்திய பிறகே மக்கள் இயல்பு  நிலைக்குத் திரும்பினர். அதே போன்று, மராட்டிய மாநிலம் காந்திபார் என்ற இடத்திலும் பழைய வேதி ஆலையில் கடந்த 2009ஆம் ஆண்டு சூலை மாதம் 23ஆம் நாள் நிகழ்ந்த விச வாயுக் கசிவில் நூற்றுக்கணக்கானோர் மயக்கமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அதனை சுவாசம் செய்த பலருக்கும் மூக்கிலிருந்து குருதி வழிந்ததால், மீதியுள்ள மக்கள் அனைவரும் ஊரைவிட்டு வெளியேறினர்.

நடுவண் அமைச்சர்களைக் கொண்ட ஆய்வுக்குழு!

இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன்சிங்கால் அமைக்கப்பட்ட நடுவண் அமைச்சர்களைக் கொண்ட ஆய்வுக்குழு 60 பக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது. நடுவண் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தலைவராகக் கொண்ட இக்குழுவில் குலாம் நபி ஆசாத், வீரப்ப மொய்லி, ஜெயபால்ரெட்டி, கமல்நாத், குமாரி செல்ஜா, மு.க.அழகிரி, பிரிதிவிராஜ் சவாண், ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் உள்ளனர். சிறப்பு உறுப்பினராக  மத்தியப்பிரதேசத்தைச் சார்ந்த மாநில அமைச்சர் ஒருவரும் உள்ளார். இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே போபால் விச வாயு விபத்துக் குறித்தும், மக்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்தும் கலந்துரையாடப்படும் எனத் தெரிகிறது.

'போபால்: மனித உயிரின் விலை பத்து இலட்சம்'
அமைச்சரவைக் குழுவின் பரிந்துரை!

போபால் நச்சு வாயு விபத்து தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பின்னர், நாடு முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்பின் காரணமாய், நடுவணரசு, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் குழுவொன்றை அமைத்தது. பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்து அறிக்கையை அளித்தது. அதனடிப்படையில் மூன்று நாட்கள் நடைபெற்ற கலந்தாலோசனைக்குப் பிறகு இந்திய தலைமை  அமைச்சருக்கு, அமைச்சரவைக்குழுவின் சார்பாகப் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. விபத்தில் இறந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 இலட்சமும், நிரந்தர ஊனம் மற்றும் மோசமான நோய்த்தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு தலா ரூ.5 இலட்சமும், சிறிதளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா ரூ.3 இலட்சமும் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் யூனியன் கார்பைடு நிறுவனத்தின்  தலைவர் வாரன் ஆண்டர்சனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை நடுவணரசு விரைவில் மேற்கொள்ள வேண்டுமென்றும் (அமெரிக்கா போய் அக்குற்றவாளியைக் கைது செய்து, இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இவர்கள் தொடங்குவதற்குள் சில ஆண்டுகள் ஆகிவிடும்.

அதற்குப் பிறகு அமெரிக்கா பல்வேறு காரணங்களைச் சொல்லி, நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்தி இந்தியா அனுப்புவதற்குள் வாரன்  ஆண்டர்சன் உயிரோடு இருந்தால் வியப்பிற்குரிய செய்தியே! ஏனென்றால் அவனுக்கு இப்போதே வயது 89! அப்படியே கொண்டு வந்தாலும் இந்தக் கிழவனைப் பிடித்து வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறார்கள் இவர்கள்? ஆக, நடைபெற்ற மாபெரும் மனிதப் படுகொலை, வாரன் ஆண்டர்சன் கைது எனும் கண்ணாமூச்சி விளையாட்டால் தொடர்ந்து திசை திருப்பப்படுகிறது என்பதே உண்மை), தொழிற்சாலை இருந்த  இடத்தில் தற்போதுள்ள 350 மெட்ரிக் டன் எடையுள்ள நச்சு வாயுக் கழிவுகள் அகற்றப்படுவதற்கும், அதற்குரிய தொழில் நுட்ப உதவிகளை மாநில அரசுக்கு, நடுவணரசு வழங்க வேண்டும் எனவும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் குழுவால் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரைகள் அனைத்தையும் ஆய்ந்து பார்த்தால், தவறு செய்த யூனியன் கார்பைடு நிறுவனமோ அல்லது அந்த நிறுவனத்தை வாங்கிய டவ் நிறுவனமோ எந்தவிதத்திலும் பொறுப்பாளியாக்கப்படவில்லை என்பதை தெளிவாக அறிய முடிகிறது. ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் பொறுப்பற்ற செயலுக்கு, இழப்பீடாக இந்திய மக்களின் வரிப்பணம் முழுவதுமாகத்  தாரை வா£க்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், உரிய நியாயம் கிட்ட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், 'ஊரான் வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கையே' என்ற கதையாக, பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டிற்கு இந்திய ஒன்றிய அரசு மட்டுமே பொறுப்பேற்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான  இழப்பீட்டில் யூனியன் கார்பைடு மற்றும் டவ் நிறுவனங்களின் பங்களிப்பு என்ன என்பது பெரும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, நடுணவரசால் அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழு பத்து நாட்களுக்குள் தர வேண்டிய அறிக்கையை ஒரு நாள் முன்னதாகவே வழங்க வேண்டிய அவசரம் என்ன? விபத்து நேர்ந்த காலத்தில் இந்திய தலைமை அமைச்சராக இருந்த இராஜீவ்காந்தியின் பொறுப்பற்ற  செயலை மறைப்பதற்காகக் கூட இந்த 'அவசரம்' இருக்கலாம் என்றே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் அர்ஜீன்சிங்கும் தன் மீது எறியப்பட்ட போபால் விச வாயு விபத்து எனும் பந்தை (குற்றச்சாட்டை), அன்றைய நடுவணரசின் மீதே திருப்பியிருக்கிறார் என்பதை கவனத்திற் கொள்க.

போபால் விபத்து குறித்து கடந்த 1982ஆம் ஆண்டே மத்தியப் பிரதேச மாநில அரசால் அமைக்கப்பட்ட ஆணையம், தொழிற்சாலையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையென்றும், எந்த நேரத்திலும் விபத்து நிகழலாம் என்றும் எச்சரித்த பிறகும் கூட நடுவண், மாநில அரசுகள் மெத்தனமாய் இருந்துவிட்டன. இந்நிலையில் இது போன்ற தொழிற்சாலை வாயு விபத்துக்களுக்கும், அணுக்கூட  ஆபத்துகளுக்கும் எதிர்காலத்தில் என்னவிதமான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கப் போகிறது? அதற்குரிய செயல்பாடுகள் என்ன? அது போன்ற ஆலைகளுக்கும், கூடங்களுக்கும் அரசு இனி வருங்காலங்களில் என்ன விதமான ஒத்துழைப்பினை நல்கப் போகிறது? என்பது போன்ற கேள்விகளுக்கு அந்தப் பரிந்துரையில் பதிலில்லை. குறைந்தபட்சம் ஆலோசனை கூட வழங்கப்படவில்லை. வழங்கப்படுகின்ற  இழப்பீட்டில் கூட, இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்ட தொகையைக் கழித்துக் கொண்டே வழங்கப்போகிறார்களாம் (அடடா... என்ன ஒரு சிக்கன நடவடிக்கை பாருங்கள்..!). பல்வேறு எச்சரிக்கைகளையும் மீறி நடத்தப்பட்ட இந்த ஆலை விபத்து, வெளிப்படையான மனிதப் படுகொலை என்பதை மாற்றி, கவனக்குறைவால் ஏற்படுத்தப்பட்ட மரணம் என்பதாக வழக்குப் பதிவு செய்த நடுவணரசின்  அயோக்கியத்தனம், இனி வருங்காலத்தில் உலக நாடுகளால் காறி உமிழப்படும்.

ஒரு தலைமுறையைக் கடந்து விட்ட பின்னரும் கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயத்தை வழங்குவதற்கு இந்திய அரசியல்வாதிகள் தவறிவிட்டனர். இவர்களின் வழியைப் பின்பற்றி இந்திய நீதிமான்களும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை நசுக்க நினைத்தால், 'படித்தவன் சூதும் வாதும் பண்ணினால், போவான், போவான், அய்யோவென்று போவான்' என்ற பாரதியின் கவிதை வரிகள்தான் தக்க  பதிலடியைத் தரும்.

- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It