உலகமயமாக்கல்' என்னும் சொல் இன்று பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. எனினும், அது எல்லாருக்குமே ஒரே அர்த்தத்தைத் தருவதில்லை. ஹூண்டாய் காரைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அது "உலகமயமாக்கலால்' கிடைத்த சொகுசாகத் தெரியலாம். ஆனால், நிர்வாகத்தினரின் ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் எதிராகப் போராடி 25.7.2005 அன்று, டெல்லிக்கு அருகில் உள்ள குர்கவோன் நகரில் ஹரியானா காவல் துறையினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட "ஹோண்டா' இரு சக்கர வண்டிகள் உற்பத்தித் தொழிற்சாலைத் தொழிலாளிகள் சிந்திய ரத்தம் "உலகமயமாக்கல்' என்பது, உலக முதலாளியத்தின் ஒடுக்குமுறையின், சுரண்டலின் மற்றொரு வடிவம் என்பதை இந்தியாவிலுள்ள அனைத்து உழைக்கும் மக்களுக்கும் எடுத்துக்காட்டியுள்ளது.

குர்கவோன் நகரம், உலக முதலாளியம் நடைமுறைப்படுத்தும் தாராளவாதப் பொருளாதாரக் கொள்கையின், இந்தியப் பெருமுதலாளி வர்க்கத்தின் மீதும், இந்திய அரசின் மீதும் தரகுத்தன்மையின் தீய விளைவுகளுக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த நகரில் அமைந்துள்ள சிறப்புப் பொருளாதார வளையத்தில் உள்ளடங்கியவையும், பெரிதும் வெளிநாட்டு முதலீட்டுடன் இயங்கி வருபவையுமான பல்வேறு தொழிற்சாலைகள் தொழிலாளர் உரிமைகளையும் பாதுகாப்பையும் உத்திரவாதம் செய்யும் இந்தியச் சட்டங்களிலிருந்து விதிவிலக்குப் பெற்றுள்ளன.

அமெரிக்க அய்ரோப்பியப் பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து, உலக மக்களைச் சுரண்டிவரும் ஜப்பானியப் பன்னாட்டு நிறுவனமான ஹோண்டா நகரத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையில், இங்குள்ள பிற தொழிற்சாலைகளைப் போலவே, தொழிற் சங்கம் அமைக்கும் உரிமை தொழிலாளர்களுக்குக் கிடையாது.

வேலை நேரத்தில் சிறுநீர் கழிக்க கழிப்பறைக்குச் செல்வதற்குக்கூட, எழுத்து மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். வெளிநாட்டு மூலதனத்தைக் "கவர்வதற்கான' இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, உழைக்கும் மக்கள் எதிர்ப்பேதுமின்றி சுரண்டலுக்கு சம்மதிக்க வேண்டுமென்பதற்காகச் செய்துள்ள இந்த ஏற்பாட்டை ஒப்புக் கொள்ள மறுத்து போராடத் தொடங்கிய ஹோண்டா தொழிற்சாலைத் தொழிலாளிகள் அனைவரையும் 26.6.2005 அன்று ஆலை நிர்வாகம் தொழிற்சாலைக்குள் நுழைய விடாமல் ஆலைக் கதவுகளைப் பூட்டிவைத்தது. சரியான நாளைத்தான் முதலாளிகள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்! அது, இந்திரா காந்தி பிறப்பித்த அவசர நிலையின் 30 ஆம் ஆண்டு நிறைவு நாள். போராடிய தொழிலாளர்களில் நால்வரை நிரந்தர வேலை நீக்கம் செய்ததுடன், 50 தொழிலாளர்களைப் பணி இடை நீக்கம் செய்தது ஆலை நிர்வாகம்.

இவர்கள் அனைவரையும் திரும்பவும் வேலைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்; தமது தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஹரியானா மாநிலத்தின் குட்டித் தலைமையகம் என்றழைக்கப்படும் இடத்தில் போராடக் குவிந்த தொழிலாளர்கள் மீது “மதச்சார்பற்ற” காங்கிரஸ் ஆட்சி நடத்தும் ஹரியானா மாநிலக் காவல் துறை, கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானோரைப் படுகாயப்படுத்தியது. மேலும், நூற்றுக்கணக்கானோரைக் கைது செய்துள்ளது.

தாக்குதலில் மரணமடைந்த தொழிலாளியொருவர் அந்த சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாகவே இயற்கை மரணமடைந்து விட்டதாக அறிவித்தார், அந்த மாநிலத் தலைமைச் செயலாளர். இந்தக் கொடிய ஒடுக்குமுறைக்கு அஞ்சாத தொழிலாளிகளும் அவர்கள் குடும்பத்தினரும் குறிப்பாகப் பெண்கள் வெளிப்படுத்தி வரும் போர்க்குணம், சுரண்டும் வர்க்கங்களுக்கும் அவர்களின் காப்பரண்களான மத்திய, மாநில அரசாங்கங்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

வழக்கம் போலவே பா.ஜ.க. முதல் தி.மு.க. வரை, எல்லா எதிர்க்கட்சிகளும் தமது ஓநாய், முதலைக் கண்ணீர் மடைகளை சில நிமிடங்கள் திறந்து விட்டன. அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேவையற்ற இந்த வேலையைத் தவிர்த்துக் கொண்டு "மன்னரைவிட அதிக விசுவாசிகளாகக்' காட்டிக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு சோனியா காந்தியும் மன்மோகன் சிங்கும் "வருத்தம்' தெரிவிப்பதாகக் கூற, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டிலோ காவல் துறையினரின் நடவடிக்கையை முற்றாக நியாயப்படுத்தினார்.

ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் வெளிநாட்டுத் தூதர்கள் தலையிடக் கூடாது என்னும் மரபை மீறி டெல்லியிலுள்ள ஜப்பானியத் தூதர், ஹோண்டா தொழிற்சாலைத் தொழிலாளர்களின் போராட்டம், வெளிநாட்டு மூலதனம் இந்தியாவிற்குத் தாராளமாக வருவதற்கு உகந்த சூழலைப் பாதிக்கும் என்றும், அது இந்தியாவின் "இமேஜை'க் கெடுக்கும் என்றும் கூறினார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் விரைந்து வந்து, "வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கவலைப்படவோ அஞ்சவோ தேவையில்லை, அவர்களுடைய சட்டரீதியான நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும் வாக்குறுதியளித்தனர்.

மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியும், நாடாளுமன்றக் கூட்டத்திலிருந்து வெளியேறியும் 26.7.2005 அன்று ஹரியானா மாநிலம் தழுவிய "பந்த்' நடத்தியும், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ள நாடாளுமன்ற இடதுசாரிகள், ஹரியானா முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என்னும் கோரிக்கையையும் விடுத்துள்ளனர். அவரோ ஒரு நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுவிட்டு, வழக்கமான அலுவல்களை நிம்மதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இடதுசாரிகளின் ஆட்சியிலுள்ள மேற்கு வங்க சட்டமன்றம் ஹரியானா அரசாங்கத்தின் "அரசு பயங்கரவாதத்தை' (இந்த சொற் பிரயோகங்களை அது பயன்டுத்தவில்லைதான்) கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ஆனால், மேற்கு வங்கத் தொழிற்துறை அமைச்சர் நிருபம் சென், “தொழில் உறவுகளில் ஜப்பானியர் கடைப்பிடித்து வந்துள்ள "மரபினை' பாராட்டியுள்ளதுடன், ஜப்பானியர்கள் கவலைப்படத் தேவையில்லை; குர்கவோனில் நடந்தது மேற்கு வங்கத்தில் ஒருபோதும் நடைபெறாது'' என்றும் கூறியிருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகளுக்குக் குந்தகம் எதும் ஏற்படா வண்ணம் தொழில் அமைதியை உத்திரவாதம் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் இடதுசாரிகளின் ஆட்சியிலுள்ள மேற்கு வங்கம்தான் ஜப்பானிய மூலதனத்திற்கான தன்மையான இலக்காக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.