ஆதிக்க சாதிக் குடிகள், இயக்கம் வளர்க்க கோடிகளைக் கொட்டியிருக்கலாம்; அதற்கென உழைத்திருக்கலாம். ஆனால் வேளாளர் கல்வி கற்க, அரசுத் துறைகளில் கோலோச்ச, அரசியல் பொறுப்புகள் வகிக்க, நாடாள, தமிழறிஞராக, தகை சான்றோராய் உலகு உய்ய, இனத் துவேசம் வளர்ந்தபோது ஏதிலிகள் என அயலகம் புக, அங்கிருந்து மண்ணை மீட்கப் பிறப்பித்த கட்டளைகளை முன்னெடுக்க, யுத்த மேட்டில் அழுகிய பிணங்களாக நாற, தடுப்பு முகாம்களில் வதைபட, கூட்டு வன்புணர்ச்சியில் மயங்கிச் சரிய, சவமான பிறகும் பேரின வெறியால் குதறப்பட... இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிக் குடியினருக்கென, தம் குருதியும் நிணமும் தந்து உருக்குலைந்து கொண்டேயிருக்கும் போது, எம் மக்களுக்காக வேறு யார் பேசுவது?

தமிழீழ விடுதலைப் புலிகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, தமது அரசியல் தலைநகரமாகத் திகழ்ந்த கிளிநொச்சியையே முதன்மையான ராணுவ முகாமாக அமைத்துக் கொண்டனர். ஆனையிறவு ராணுவத் தளத்தை வெற்றி கொண்டமை, முல்லைத் தீவில் பாரிய ராணுவ முகாமொன்றைத் தகர்த்தமை போன்றவை, புலிகள் கிளிநொச்சிக்குள் நுழைந்த பின்னர் அவர்களுக்கு ராணுவ ரீதியாகக் கிடைத்த முக்கிய வெற்றிகள். இந்த வெற்றிகளின் பின்னணியில் பலமடைந்த நிலையிலேயே – அரசியல் பேச்சுகளுக்கும், 2002ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ளவும் புலிகள் முன்வந்திருந்தனர். இலங்கைத் தீவில் கொழும்புக்கு அடுத்த பெரிய நகரமான யாழ்ப்பாணத்தின் புகழ் பின்னுக்குத் தள்ளப்பட்டு, "கிளிநொச்சி' உலக நாடுகள் பலவும் உச்சரிக்கும் ஒரு சொல்லாக மாறியிருந்தது. இவ்விடத்தில் தமிழ்த் தேசியக் கருத்துருவின் அடையாளமாக யாழ்ப்பாணமும், தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாக கிளிநொச்சியும் இருப்பதாகவே குறியீட்டளவில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Eelam Tamilsஒரு புறம் பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டே, இலங்கை அரசு தனது ராணுவ வலிமையைப் பெருக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. இந்தியாவில் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ் அரசின் உதவிகளும், கருணாவின் ஆலோசனைகளும் – கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை ராணுவத்தின் வெற்றிகளுக்கு மிகவும் துணை புரிந்துள்ளன. கிளிநொச்சியைக் கைப்பற்றும் முயற்சியில் பூநகரியில் நுழைந்த இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நிகழ்ந்த கடுமையான போரே – இரு படைப்பிரிவினரும் மோதிக் கொண்ட கடைசிக் களமாக இருக்கிறது. பூநகரியிலிருந்து பின்வாங்கிய விடுதலைப்புலிகள் கிளிநொச்சியை அரண் போலக் காப்பர் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு, இலங்கை ராணுவம் 2.1.09 அன்று இலங்கையின் தேசியக் கொடியை கிளிநொச்சியில் பறக்க விட்டபோது, அடுத்த பேரிடியாக இருந்தது. பூநகரியில் கடுமையான போரை எதிர்கொண்ட இலங்கை ராணுவம் கிளிநொச்சியில் நுழைந்தபோது, தமிழீழத்தின் அந்த அரசியல் தலைநகரம் – பொதுமக்களோ, புலிகளின் படைப் பிரிவினரோ எவருமற்று வெறிச்சோடிப் போயிருந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் "தேசியக் கனவை' வெறுமை சூழ்ந்துவிட்டதாகவே நாம் உணர முடிந்தது. இதனாலேயே சனவரி 5 அன்று கிளிநொச்சி வீழ்ந்ததை, இலங்கை அரசும் சிங்கள இனவாதிகளும் வெற்றி விழாவாகக் கொண்டாடினர்.

முல்லைத்தீவு இலங்கை ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட கணத்திலேயே, இரண்டரை லட்சம் மக்கள் வடக்கு வன்னிப் பகுதியில் சிக்கியிருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்தது. விடுதலைப்புலிகள் சரணடைய வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ராஜபக்சே அரசு, புலிகளின் மன உறுதியைக் குலைக்கும் வகையிலும், புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து ஈழ மக்களை அந்நியப்படுத்தும் நோக்கத்திலும் – "விடுதலைப் புலிகள் மக்களைக் கேடயமாகப் பயன்படுத்துகின்றனர்' என்ற குற்றச்சாட்டை சுமத்தி, போர் என்ற பெயரில் மக்களையே கொன்றழித்தது. கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் சுமார் 3 லட்சம் தமிழர்களை உள்நாட்டிற்குள்ளேயே அகதிகளாக்கி விட்டது. 2009 சனவரியிலிருந்து இன்று வரை 9,500 பேர் இலங்கை ராணுவத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். கை, கால்களை இழந்து ஏறத்தாழ 30,000 பேர் நிரந்தர ஊனமாக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சரிபாதியினர் குழந்தைகள்.

பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ் நகரில் இயங்கும் "உலக வன்முறைகள் கண்காணிப்பு மய்யம்', “பொதுமக்களுக்கு எதிரான போர் வன்முறையில், உலகத்திலேயே இலங்கை அரசுதான் முதலிடம் வகிக்கிறது'' என அறிக்கை வெளியிட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழகத்தின் ஹார்வார்ட் மருத்துவப் பள்ளியின் ஆய்வறிக்கை ஒன்று, ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து வரும் கடந்த முப்பது ஆண்டுகளில் தமிழர் – சிங்களர் இரு தரப்பிலும் ஏறத்தாழ 2,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அதில் புலிகள் மற்றும் இலங்கை ராணுவத் தரப்பில் மட்டும் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும் கூறுகிறது.

1995இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய இலங்கைப் படைக்குத் தலைமையேற்றிருந்த இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை துன்புறுத்தி, இறுதியில் கொன்று ஒரே இடத்தில் புதைத்து விட்டான். ஈழ வரலாற்றில் "செம்மணி' படுகொலைகள் என அழைக்கப்படும் இக்கொடுமை குறித்து இதுவரை எவ்வித நீதி விசாரணையும் இலங்கை அரசால் நடத்தப்படவில்லை. ஆனால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்களான பசில் ராஜபக்சே, இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா ஆகிய இருவர் மீதும் அமெரிக்க அரசின் முன்னாள் துணை அட்டார்னி ஜெனரல் புரூஸ் பெயின், 3,700 தமிழர்களைக் கொன்றது, 10,000க்கும் மேற்பட்டோரைக் காயமடையச் செய்தது, 13 லட்சம் மக்களை இடம் பெயரச் செய்தது'' உள்ளிட்ட 9 குற்றச்சாட்டுகளுடன் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இன்றைக்கு வன்னியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வவுனியா கொண்டு வரப்பட்டு, நிரந்தரத் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு வரப்படும் வழியில், இடைத்தங்கல் முகாம்களில் விசாரணை என்ற பெயரில், இளம் பெண்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கும், கர்ப்பிணிப் பெண்களை கருவழிப்பிற்கும், இளைஞர்களைக் கடும் துன்புறுத்தல்களுக்கும் உட்படுத்தி, சிங்கள ராணுவத்தினர் பழி தீர்த்து வருகின்றனர். யூத இனப்படுகொலைகளின் மரண முகாம்களைப் போலவே, இலங்கையின் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அய்.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் மில்லிபேன்ட், அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் பிரான்ஸ், மெக்சிகோ, ஜப்பான் ஆகிய நாடுகள் இலங்கை பேரினவாத அரசின் வரைமுறையற்ற படுகொலைக்குக் கண்டனம் தெரிவித்திருந்தும் கூட, இன வெறியாடும் வார்த்தைகளில் ராஜபக்சே "விடுதலைப் புலிகளை முற்றாக அழிக்கும் வரை, போர் நிறுத்தம் செய்ய முடியாது' என ஆணவத்துடன் மறுத்து விட்டார்.

இலங்கை பிரித்தானிய அரசின் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட போது, 75 லட்சமாக இருந்த சிங்கள மக்கள் தொகை இன்று இரு மடங்காகிவிட்டது. ஆனால் 26 லட்சமாக இருந்த தமிழர்களின் மக்கள் தொகை அதே அளவில்தான் இருக்கிறது. அரை நூற்றாண்டுக் காலமாக உள்நாட்டிலேயே தொடரும் இடப்பெயர்வுகள், படுகொலைகள், நிரந்தரமற்ற வாழ்க்கை ஆகியவற்றால் தமிழ் மக்களின் பிறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, சிறுபான்மைச் சமூகமாக அதிகாரமோ, உரிமைகளோ கோர முடியாத எண்ணிக்கையில் பலவீனப்படுத்தும் கொடூர நடவடிக்கையாகவே கர்ப்பிணிப் பெண்களின் மீதான கருவழிப்பு வரை, சிங்களப் பேரினவாத வெறியை இலங்கை அரசுகள் வளர்த்தெடுத்தன. கிழக்கு மாகாணத்தில் மட்டும் 38,000 இளம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டு, புனர் வாழ்வுக்கான வழியற்று இருக்கின்றனர்.

“ஒரு வேளை கிளிநொச்சியை மட்டுமல்ல, முல்லைத் தீவையும் சேர்த்தே ராணுவம் பிடித்தாலும், ஈழ விடுதலைப் போராட்டம் ஒரு போதும் ஓயாது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். காரணம், அது மக்களின் போராட்டம். தொடர் போரால் இலங்கையின் பொருளாதாரம் வீழ்ந்து, சோமாலியாவைப் போன்ற நிலைமை அங்கு உருவாகும். ஆனாலும், வியட்நாம் விடுதலைப் போராட்டம் போல எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழப் பழகியிருக்கின்ற ஈழத்தமிழர்களுக்கு இறுதியில் வெற்றி கிடைத்தே தீரும்'' என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ("குமுதம் ரிப்போர்ட்டர்' 4.11.2008) நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் இயக்கம், வரலாற்றில் இதுவரை சந்தித்திராத பின்னடைவைச் சந்தித்திருக்கிறது என்ற போதும், கடந்த காலத்தைப் போலான நம்பிக்கைகளையே, வெறுமை சூழ்ந்திருக்கும் இத்தருணத்திலும் விதைத்துக் கொண்டிருக்க முடியாது. "வியட்நாம் விடுதலைப் போராட்டம் போல' என மீளவும் ஒரு சகாப்தம் முன்னெடுக்கப்படுமாயின் இயக்கம் – அரசியல் ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இழைத்த தவறுகளும் வரலாற்றுப் பிழைகளும் கூட – முதன்மையாகக் கணக்கிலெடுக்கப்பட வேண்டும். "சோமாலியாவைப் போன்ற நிலைமை' அங்கு இப்போதே தொடங்கிவிட்டது. ஆனால், அந்நிலைமை "மீளவும் ஒரு சகாப்தம்' உருவாவதற்கான மனித ஆற்றலையும் அரசியல் உறவையும் இழந்திருக்கும்.

ஆயினும் போர் ஏதோவொரு வகையில் முடிவுக்கு வரப்போகிறது என "முடிவு' செய்து கொண்டு, தமிழகத்திலும் புலம்பெயர் சூழலிலும் ஆளுக்கு ஓர் அரசியல் தீர்வையும் ஆரூடத்தையும் தத்தமது சார்பு நிலைகளுக்கொப்ப வெளிப்படுத்தி வருகின்றனர். "ஆயுத வழிப் போராட்டமா? மக்கள் திரள் அறப்போராட்டங்களா?' எனத் தொடங்கிய ஈழ விடுதலைப் போராட்ட விவாதம், "விடுதலைப் புலிகளா? ஏனைய அமைப்புகளா?' என வளர்ந்து, "விடுதலைப் புலிகள் ஆதரவா? எதிர்ப்பா?' என கடந்த இருபது ஆண்டுகளாக நிலை கொண்டிருந்தது. "புலி இளைத்தால்...' என்ற வழக்குமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. "புலிகளுக்கு முன், புலிகளுக்குப் பின்' என்ற கருத்தமைவுகளை பலர் இப்போதே அரசியல் தளத்திலும் இலக்கியத் தளத்திலும் கட்டமைக்கத் தொடங்கிவிட்டனர்.

"எதுவரை?' என்ற லண்டனிலிருந்து வெளிவரும் இலக்கிய இதழில் (ஏப்ரல் – மே 2009) அ. மார்க்ஸ், "புலிகளுக்குப் பிறகு' எனத் தலைப்பிட்டே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில், “முல்லைத்தீவில் மேலும் மேலும் புலிகளின் ஆடற்களம் சுருங்கிக் கொண்டே போகிறது. வெகு விரைவில் அவர்களின் கதை முடிக்கப்படலாம் எனப் பத்திரிகைகள் ஆருடங்கள் எழுதுகின்றன. கொரில்லாப் போர் முறைக்குத் தாவலம் அல்லது வேறு நாடுகளுக்குத் தப்பி ஓடலாம் என்கிற ஊகங்களும் சொல்லப்படுகின்றன.... புலிகள் ஒழிக்கப்படுவதோடு பிரச்சனை முடிந்துவிடப் போவதில்லை'' என ஒரு வெகுஜன தமிழ் சினிமாவின் இறுதிக் காட்சிகளை முன் அனுமானிப்பது போல லகுவாக, கொச்சையாக எழுதிச் செல்கிறார். எவ்வளவுதான் கடுமையான விமர்சனங்கள் இருந்த போதிலும், ஒரு விடுதலை இயக்கத்தை இவ்வளவு தூரம் எளிமைப்படுத்துவது அறமன்று.

கடந்த அய்ந்து ஆண்டுகளுக்கு முன், இலங்கையிலிருந்து "கள்ளத் தோணி'யில் தமிழகம் தப்பி வர ஒரு நபருக்கு குறைந்தது 25,000 ரூபாய் வேண்டும். ஒரு குடும்பம் தப்பி வர ஒரு லட்சம் ரூபாயாவது வேண்டும். ஆனால், அதே காலத்தில் "அகதி' எனப் பெயர் தாங்கி அய்ரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புக, 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும். இக்குறிப்பை கவனத்தில் இருத்தி, “மட்டக்களப்புப் பகுதியில் படைபலம் அதிகம்; யாழ்ப்பாணப் பகுதியில் பணபலம் அதிகம். வடக்குப் பகுதியில் இருந்து தமிழர்கள் ஒரு ஆளை போராளியாக்க வேண்டும் எனக் கேட்டால், பணம் தந்து சமாளித்து விடுவார்கள் அல்லது புறவாசல் வழியாக வெளிநாட்டுக்கு அனுப்பி விடுவார்கள். போரில் மடிந்த, 8,000 பேர் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். வடக்கில் மக்கள் தொகை அதிகம். கிழக்கில் குறைவு. ஆனால் படைப்பிரிவில் கிழக்கு மாகாணப் போராளிகள்தான் அதிகம். முஸ்லிம்கள் இதில் அடக்கமில்லை'' என்ற கருணாவின் விமர்சனம் ("தினமலர்' 14.1.09) ஒன்றை அவதானித்தால், கடந்த 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டக் காலத்தில், வேளாளர்கள் மற்றும் பிற சாதியினரின் பங்களிப்பைப் புரிந்து கொள்ளலாம்.

கருணாவின் வார்த்தைகளைப் பயன்படுத்திக் கொள்வதாலேயே, துரோகத்தின் பக்கம் நிற்பதாகப் பொருளல்ல. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் ஆதரவுத் தளத்தில் நின்றும், அதே வேளையில் தமிழ்த் தேசியக் கருத்துருவாக்கத்தின் வரலாற்றுப் பின்புலத்தில் – ஓர் ஒடுக்கப்பட்ட தன்னிலையாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்துமே, இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கிறோம். அடிப்படையில் நிலமற்றவர்களாக, குறைவான வருவாய்ப் பிரிவினராக இருக்கும் ஒடுக்கப்பட்ட சாதியினர், பல லட்சங்கள் கொடுத்து அகதியாகக் கூட அந்நிய நாடுகளுக்குச் செல்ல இயலாதவர்களாக, யுத்தக் களங்களில் இடம் பெயர்ந்து கொண்டு, போராட்டமே வாழ்க்கையென மடிந்தும், ஊனமுற்றும் உருக்குலைந்தும் போகிறார்கள். கடந்த காலங்களில் போருக்குப் புறமுதுகிட்டு, புது வாழ்க்கை தேடிப் போனவர்கள் மிகுதியும் வேளாளர்களே.

“ஈழத்தில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவருக்குமே இழப்புக்குப் பஞ்சம் இல்லை. இதில் உனது இழப்பு சிறிது, எனது இழப்பு பெரிது என்று அடிபட்டுக் கொள்ள முடியாது, இதில் புலம் பெயர்ந்த மக்களும் அடக்கம். போராட்டத்திலிருந்தும் நாட்டிலிருந்தும் வெளியேறிவிட்டு, மனம் குமுறுபவர்கள் புலம் பெயர் நாடுகளிலும் இருக்கிறார்கள். அதன் வடிவமாகத்தான் லட்சங்களைக் கொட்டி வெளிநாடு வந்த முருகதாசன், அய்.நா. வாசலில் தீயிட்டுச் செத்துப் போனான்'' என "ஆனந்த விகடன்' இதழுக்கு (1.4.2009) கனடாவிலிருந்து எழுதிய பெயர் தெரியாத ஒரு தமிழ்ச் சகோதரியின் கடித வரிகள் எம்மை ஆற்றுப்படுத்த முடியாது. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தை "சாதிக் கண்' கொண்டு பார்ப்பதாகக் குற்றம் சுமத்தி விடவும் இயலாது.

யாழ்ப்பாணத்திலிருந்து சவுதி அரேபியாவுக்குப் பிழைக்கச் சென்ற ஈழத் தமிழர் ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்த தமது உறவினருக்கு 1983இல் எழுதிய கடிதம் ஒன்றில், “அவ்விடம் இருந்து வரும் நளம், பள், பறை (நளவர், பள்ளர், பறையர்) ஆகியதுகளுடன் இங்கு கலந்து அவமானப்படும் தலையெழுத்தைத் தவிர, மற்றபடி வாழ்க்கை எல்லா விதத்திலும் பரவாயில்லை'' (மனோன்மணி சண்முகதாஸ் – மேற்கோள் : சாதியும் துடக்கும்) என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஈழத்தில் வெளிவந்த ஒரு பத்திரிகை செய்தியாக வெளியிட்டது. 1983இல் இருந்த சாதி மேலாதிக்க மனநிலையில், தேசிய இன விடுதலைப் போராட்டச் சூழல் மாற்றங்களைத் தந்திருப்பதாக ஏற்றுக் கொண்டாலும், பாரிய அளவில் சாதிய உளவியல் தகர்க்கப்பட்டதற்கான வாய்ப்புகள் ஈழத்தைப் போல, புலம் பெயர்ந்திருக்கும் தமிழகத்திலோ, அயல் நாடுகளிலோ உருவாக்கப்படவில்லை. நேர்மையோடு பரிசீலனை செய்யும் எவராலும் இதை மறுதலிக்க முடியாது.

Mukilan painting on Eelamதமிழகத்தின் அகதி முகாம்களில் அடிப்படைத் தேவைகளுக்கே அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் ஏதிலிகளைப் பற்றிய உணர்வு ஏதுமற்று, கனடா, பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா இன்னும் பல நாடுகளிலிருந்து தமிழகத்துக்கு "ஆன்மீகச் சுற்றுலா' வரும் ஆதிக்கச் சாதி ஈழத் தமிழரின் உணர்வை – "போகிறான் போ மூட நம்பிக்கை' என ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனென்றால் அரை நூற்றாண்டுக்கு முன்பு வரை "வெள்ளாள நயினார்'களால் "அடிமைக் குட்டிகள்' என அழைக்கப்பட்டு, வேளாளப் பரம்பரையின் சிறைக் குடிகளாக அடிமை ஊழியம் செய்து வந்த கோவிலர், நளவர், பள்ளர், பறையர், அம்பட்டர், வண்ணார் மட்டுமல்ல, தேச வழமைச் சட்டப்படி கீழ் சாதியினராகவே மதிப்பிடப்பட்ட கரையாளர் உட்பட ஒடுக்கப்பட்ட இனக் குழுக்களே – இன்றைக்கும் போர்க் களத்தில் பொடியன்களாக, கரும்புலிகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆதிக்க சாதிக் குடிகள், இயக்கம் வளர்க்க கோடிகளைக் கொட்டியிருக்கலாம்; அதற்கென உழைத்திருக்கலாம். ஆனால் வேளாளர் கல்வி கற்க, அரசுத் துறைகளில் கோலோச்ச, அரசியல் பொறுப்புகள் வகிக்க, நாடாள, தமிழறிஞராக, தகை சான்றோராய் உலகு உய்ய, இனத் துவேசம் வளர்ந்த போது ஏதிலிகள் என அயலகம் புக, அங்கிருந்து மண்ணை மீட்கப் பிறப்பித்த கட்டளைகளை முன்னெடுக்க, யுத்த மேட்டில் அழுகிய பிணங்களாக நாற, தடுப்பு முகாம்களில் வதைபட, கூட்டு வன்புணர்ச்சியில் மயங்கிச் சரிய, சவமான பிறகும் பேரின வெறியால் குதறப்பட... இன்னும் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்கள் ஆதிக்க சாதிக் குடியினருக்கென, தம் குருதியும் நிணமும் தந்து உருக்குலைந்து கொண்டேயிருக்கும்போது, எம் மக்களுக்காக வேறு யார் பேசுவது? சாவு வீட்டில் யாம் சாதி பாராட்டுவதாகக் குற்றம் சுமத்த முயன்றால், இழவு சொல்லி, சடலம் காவி, மாரடித்து அழுது, வெள்ளை கட்டி – மாற்றுக் கொடுத்து, மயிர் நீக்கி, தீச்சட்டி காவி, பொரி எறிந்து, சவம் எரிக்க விறகு வெட்டி, தென்னை மேய்ந்து, பறை மேளம் கொட்டி, பிணத்தை எரிப்பது வரை, எம் மக்களுக்கு சாவு வீட்டிலும் பணிகளைப் பிரித்துத் தந்து ஊழியம் செய்ய வைத்த உங்கள் கொடுமைகளைச் சொல்லி அழுவதைத் தவிர, எமக்கு வேறு நாதியில்லை.

“தன்னை ஏற்றுக் கொள்ளாத தலைவர்களையெல்லாம் கொன்றவர் பிரபாகரன். தமிழ் ஈழம் உருவானால் அங்கு சர்வாதிகார ஆட்சியை நடத்தவே விரும்புவதாக பிரபாகரன் தெரிவித்தார். பிரபாகரனையோ, வேறு எந்தத் தனிப்பட்ட நபரையோ தி.மு.க. ஆதரிக்கவில்லை. ஈழத்தில் மட்டுமல்ல, வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரின் பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தகுதி, பற்று, பாசம், தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு. மற்றவர்களுக்கு அதற்கான உரிமை சிறிதும் இல்லை'' (3.2.09, தி.மு.க. பொதுக்குழுவில்) என பார்ப்பன அதிகார வர்க்கத்திற்குக் காட்டித் தரும் வேளாள சாதி இந்துக் கட்சியின் தலைவரான மு. கருணாநிதி உரிமை கொண்டாடும் போது, அனைத்தையும் இழந்து, வரலாற்றின் கொடும் கரங்களில் வாழ்வை ஒப்புவித்திருக்கும் எம் மக்கள் பேசக்கூடாதா? ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, இந்திய மண்ணில் நிகழ்ந்து வரும் அனைத்து விடுதலைப் போராட்டங்களுக்கும் தலைமை தாங்கவும், தீர்வு காணவுமான தகுதி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை, மு.க. உள்ளிட்ட எவருக்கும் நாம் முரசறைந்து சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

“விடுதலைப் புலிகள்தான் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தலைமை ஏற்க வேண்டும் என்று நான்கு கட்சிக் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையிலேயே சொல்லி இருக்கிறோம். அந்தக் கூட்டமைப்பின் 22 எம்.பி.க்களும் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் புலிகள்தான் என்ற முடிவில் இருக்கிறார்கள்'' என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிடுவதை நாமும் ஏற்றுக் கொள்கிறோம். குருதி கொப்பளிக்கும் இயக்க வரலாற்றின் ஊடாகத்தான், ஈழ மக்களின் கனவும் எதிர்காலமும் தளும்பி நிற்கிறது. தேர்தல் வாக்குறுதி, கூட்டணி தர்மம் என எல்லாவற்றையும் நன்கு அறிந்த கருணாநிதியும், ஈழத் துயரத்தின் "முடிவை' எதிர்நோக்கியிருக்கும் மனித உரிமைக் காவலர்களும், ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் என்ற வகையில் ஈழ மக்களுடனான உரையாடலிலிருந்து – விடுதலைப் புலிகளைப் பிரிக்கவோ, தவிர்க்கவோ இயலாது என்பதை உணர வேண்டும்.

சென்னையில் 26.12.2008 அன்று தமிழீழ அங்கீகார மாநாடு, 15.1.2009 அன்று மறைமலை நகரில் ஈழத் தமிழரின் துயர் நீக்க உண்ணா நோன்பு, 2.4.2009 முதல் தமிழர் நடைபயணம் என உணர்வுப் பூர்வமாகச் செயல்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகளையும் தொல். திருமாவளவனையும் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே' எனத் தலைப்பிட்ட நாளிதழ்களின் (6.2.2009) விளம்பரம் வழியே, “இரு பிரிவாக நமது ஆதரவு அணிகள் இயங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளையும் உயிர்களையும் பாதுகாப்பதில் ஒன்றாக இருப்போம் வாரீர்'' என நைச்சியம் பேசி, "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்'திலிருந்து "இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவை'க்குள் உட்செரித்துக் கொண்டதைப் போல, எம் மக்களின் குருதிச் சேறாகிப் போன வரலாற்றை – கலைஞரால் உண்ணவோ, விழுங்கவோ அல்ல; முகரவோ கூட முடியாது.

“தன்னாட்சி உடைய தமிழ் மாநிலம், சிங்கள மாநிலம், பொதுவான மய்ய அரசு, கூட்டாட்சி அரசியலமைப்பு'' என 1949லேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் செல்வநாயகம் முன் வைத்த அரசியல் தீர்வு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் – ஆயுதவழிப் போராட்டமோ, இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் பாரிய மனித இனப் படுகொலையோ நிகழ்ந்திருக்க முடியாது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும், அய்க்கிய தேசியக் கட்சியும் சிங்கள தேசிய இன அரசியலைப் பாசிச வரலாற்றோடும், சிங்கள உழைக்கும் மக்களை மீள முடியாத குற்ற உணர்ச்சியிலும் புதைத்து விட்டன. ஆனால், இதை உணர்ந்திருப்பவர்கள் மிகச் சிலரே.

இலங்கைத் தீவில் வாழ்ந்து வரும் பல்லின மக்களின் அடிப்படைத் தேவைகள், சிறப்புரிமைகள், அரசியல் போராட்டங்களில் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டிய கோரிக்கைகள் இவற்றை கவனத்தில் கொண்டு, விடுதலை வரலாறு நகர்ந்து சென்றிருக்க வேண்டிய பாதைகளையும் நம்பிக்கையையும் மீளாய்வது என்ற அக்கறையின் பொருட்டே, நாம் விவாதிக்கத் தளைப்படுகிறோம். அடிப்படையில் "தனித் தமிழீழம்' அதன் கருத்தியல் பின் புலத்தில், நிலப்பிரபுத்துவ எச்சங்களைக் கைகழுவாத, ஒரு முதலாளித்துவக் கோரிக்கையாகவே இருந்து வந்தது. தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்தும், விடுதலைப் புலிகளின் ராணுவக் கட்டுமானம் குறித்தும் மிகை மதிப்பீடுகளையே எப்பொழுதும் முன்வைத்து வந்த தமிழ்த் தேசியவாதிகள், “தெற்காசியாவில் அமையப் போகும் முதல் சோசலிசக் குடியரசு – தமிழீழம்'' என்றெல்லாம் மிகையுச்சமாய் (தியாகு, சுப.வீரபாண்டியன், பெ. மணியரசன் போன்றோர்) எழுதியும் பேசியும் வந்தனர். மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட சூத்திரமாக, சோசலிசம் தமிழ்த் தேசியவாதிகளின் நாவில் சுழன்று கொண்டிருக்கிறது.

உலகில் சோசலிசக் குடியரசுகளை உருவாக்க முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டங்கள் யாவும், எந்தவொரு நாட்டிலும் மக்கள் திரள் போராட்ட வடிவங்களோடு இணைந்தே நின்றன. ஆனால் திலீபனின் உண்ணா நோன்பு தியாகத்திற்குப் பிறகு, தமிழீழ விடுதலையின் ஏகபோக பாத்திரத்தை விடுதலைப் புலிகள் கைக்கொண்டு, மக்கள்திரள் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதை மழுங்கடித்து விட்டனர். புகலிடங்களில் வாழ்ந்து வருபவர்கள் தேவைப்படும் காலங்களில் மட்டும் ஆர்ப்பாட்டங்களையோ, பேரணிகளையோ நடத்தி வந்தனர். ஈழத்தில் புலிகளின் அரசியல் துறை ஒரு நிர்வாக எந்திரம் போல மட்டுமே செயல்பட்டு வந்தது. அனைத்து மக்களின் விருப்பங்களும் பங்கேற்பும் ராணுவத் துறையிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டது.

பலவீனமான மக்கள் போராட்டத்தினின்று அந்நியப்பட்டு, நம்பிக்கைகளிலேயே காலம் கழித்து வந்தனர். இத்தகைய நம்பிக்கைகளின் ஊடாகத்தான் இந்து மதமும், சாதி அணிகளும் தம்மைத் தக்க வைத்துக் கொண்டிருந்தன. எப்பொழுதும் குப்பி கடிக்கத் தயாராக இருந்த இயக்க உணர்வில் சாதி பாராமுகத்துடனேயே இருந்தது. ஆனால் தேங்கிக் கிடந்த வாழ்வு தழைக்குமென்ற கனவிலும், சமூகக் கட்டுமானத்திலும் சாதியம் குடிகொண்டேயிருந்தது. புகலிடங்களிலோ காதலிலும், மண நிகழ்வுகளிலும், சடங்கு – சம்பிரதாயங்களிலும், தோழமையிலும் கூட சாதி கொடிகட்டிப் பறந்தது; பறக்கிறது. நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்திலும் அபின் மயக்கத்திலும் வீழ்ந்து கிடந்த மங்கோலியப் பேரினத்தை நெடும் பயணங்களில் கடந்து, உணர்வெழுப்பி, அறிவூட்டி, செம்படையாக்கிய பிறகே மாவோவின் "சீன மக்கள் குடியரசு' மலர்ந்தது. சீனத்தில் மத நம்பிக்கைகளின் இடத்தை "விடுதலைக் கனவு' பதிலீடு செய்தது. ஈழத்திலோ விடுதலைக் கனவை மத – சாதி விருப்பங்கள் ஊடறுத்தன.

தமிழர்களின் "இந்து மத அடையாளமே' மக்களின் நான்கில் ஒரு பகுதியினரான முஸ்லிம்களை விடுதலைப் போராட்டத்தினின்றும் அந்நியப்படுத்தியது. கூடுதலாக, முஸ்லிம்களும் மொழியை விட மத உணர்வுகளையே முதன்மைப்படுத்தினர். மலையக மக்கள் தமிழீழத்துடன் இணைய நிலம் தடையாகிப் போனது எனில், முஸ்லிம்களுக்கு மதம்.

"சோசலிசத் தமிழீழம்' என 80களில் இயக்கங்களில் விவாதிக்கப்பட்ட சொற்றொடர், செயல்திட்டமாக வளர்த்தெடுக்கப்படவில்லை. தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தத்துவ அடித்தளம் குறைந்த அளவேனும் மதச் சார்பற்றதாகக் கூட முன்மொழியப்படவில்லை. துரோக முத்திரை குத்தப்பட்ட – தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய – சில கொலைகள், சகோதர உயிரழிப்புகள், முன்னணிகளும் மக்களும் அரசியல் கல்வியால் பயிற்றுவிக்கப்படாதது போன்ற உலகின் பார்வைக்கு வந்த செயல்கள் – இயக்கத்தை ராணுவ வாதம், பாசிசம் என விமர்சித்து, இறுதியில் "பயங்கரவாதம்' என்ற முத்திரை குத்தி சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தின.

சுற்றி வளைப்புகள், தேடுதல்கள், சித்திரவதைகள், வன்புணர்ச்சிகள், கருவழிப்புகள், கடத்தல்கள், காணாமல் போகச் செய்தல், கிளஸ்டர் குண்டுகள், பதுங்கு குழிகள், நெருப்புக் (பாஸ்பரஸ்) குண்டுகள், எறிகணைகள், பட்டினிச் சாவுகள் எனப் பேரின கொலை வெறியின் யுத்த பயங்கரத்தையும் மரண வாழ்வின் உச்ச நிலையையும் தமிழீழ சமூகம் மலையை விழுங்குவது போல கடந்து வந்திருக்கிறது. தடை செய்யப்பட்ட நாடுகளிலெல்லாம் இயக்கத்தின் கொடியேந்தி, ஈழமக்கள் கடந்த சில மாதங்களாக வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். விடுதலைப் புலிகள் ராணுவ ரீதியாக வீழ்ந்து விட்டதாக, இலங்கை அரசும் இந்திய சூழ்ச்சியும் இறுமாந்திருக்கின்றன. ஆனால், இயக்கம் அரசியல் ரீதியாக வென்று விட்டதாக நாம் உறுதி கொள்ளலாம். விடுதலைப் போராட்டத்தின் ஆயுதங்களாக உலகெங்கும் வாழும் ஈழ மக்கள் மாறியிருக்கின்றனர். அவ்வகையில் இது ஆயுதப் போராட்டத்தின் வெற்றியும் கூட. "வாளெடுத்தவன் வாளால் வீழ்வான்' என முதலாளித்துவ ஜனநாயகம், போராடும் மக்களை எப்பொழுதும் எச்சரித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஆயுதப் போராட்டத்தின் அவசியத்தைப் போராடும் மக்களின் "எதிரிகளே' தீர்மானிக்கின்றனர்.

ஈழ விடுதலைப் போராட்டம் வேறெப்போதும் இல்லாத வகையில் உலகின் கவனத்திற்கு வந்திருக்கும் காலகட்டம் இது. "தனி ஈழமே தீர்வு' எனும் முக்கியத்துவம் உலக நாடுகளால் உணரப்பட வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வை நோக்கி நகர்ந்தால், பவுத்தம் மட்டுமே அரச மதம் என்ற மேலாதிக்கம் நீக்கப்பட்டு, இலங்கை மதச்சார்பற்ற நாடாக அறிவிக்கப்படவேண்டும். தமிழ், சிங்களம் இரண்டும் தேசிய ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப்பட வேண்டும். தமிழர் ஆட்சிப்பகுதிக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். மத – இன அடிப்படையிலான மேலாதிக்கத்திற்கு வழிவகுக்கும் அமைப்புகளைத் தடை செய்து, மத உரிமைகளை தனி மனித உரிமையாக்கி, அனைத்து மக்களுக்குமான அரசியல் உரிமைகளை உள்ளடக்கிய, புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட வேண்டும். மலையக மக்களை மொழிவழி குடிமக்களாக அங்கீகரித்து, அனைத்து உரிமைகளும் வழங்கப்படவேண்டும். வடக்கு – கிழக்குப் பகுதிகளை இணைத்து பூர்வீகக் குடிமக்களின் தாயகமாகப் பிரகடனப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, ஈழ மக்களின் விருப்பங்களை நிறைவு செய்யும் வகையில் அய்.நா. தலைமையிலான முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

தேவைப்படின், வடக்குப் பகுதி, கிழக்கு மாகாணம், இசுலாமிய சமூகம் மற்றம் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் கருத்துக்களை அறிய கிழக்கு திமோர், கொசோவா ஆகிய நாடுகளில் நடந்ததைப் போன்ற வாக்கெடுப்புகளை அய்.நா. மேற்கொள்ள வேண்டும். போர்க் குற்றங்கள் குறித்து உலக நீதி மன்றம் முழுமையான விசாரணை ஒன்றையும் நடத்த முன் வரவேண்டும். அமைதி திரும்புவதற்கான இந்நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படுமாயின், "விடுதலைப் போராட்டம்' இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதாகவே பொருள் கொள்ளப்படும். சிங்கள அரசு பெற்றிருப்பது ராணுவ ரீதியிலான வெற்றியாக இருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக அது கடும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. "வெற்றிக் களிப்பு' சிங்களப் பேரினவாதத்தை மீண்டும் நிலைநாட்டுமெனில், “இலங்கை நிம்மதியாக இருக்க முடியாது'' என்ற விடுதலைப்புலிகளின் எச்சரிக்கையை சிங்கள சமூகமும், உலக நாடுகளும் அலட்சியப்படுத்தக் கூடாது.

அனைத்து மனித விழுமியங்களும் ஜனõயகக் கோட்பாடுகளும் தழைக்கும் நாடாக, இலங்கையை மாற்றியமைக்கும் வரலாற்றுக் கடமை – இன்று சர்வதேச சமூகத்தின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இதற்கென தார்மீக ரீதியாகப் போராட வேண்டிய பொறுப்புணர்வு தாய்த் தமிழர்கள் ஒவ்வொருவருக்குமானது. "அண்டை வீட்டுக்காரன் பசியோடிருக்க, நீ மட்டும் உண்ணலாமா?' எனும் (திருக்)குர்ஆனின் வலியுறுத்தலை, மதம் கடந்த குற்றவுணர்ச்சியாக ஒவ்வொரு தமிழனும் அல்லது மனிதனும் உணர வேண்டும். ஈழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்குத் துணை நிற்க வேண்டும்.