மென்மையான உள்ளம். உலர்ந்துவிடாத புன்னகை. எப்போதும் அன்பு கசியும் கண்கள். இவை டி.எல். சிவகுமாரின் அடையாளங்கள். 1989 ஆம் ஆண்டு கையெழுத்து இதழாகத் தொடங்கப்பட்ட "பூங்குயில்' இலக்கிய இதழை, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் நடத்தி வரும் அவருடைய ஆர்வம் பாராட்டுக்குரியது. அவருடைய முதல் கவிதைத் தொகுப்பு, "முகத்துக்கு தெரியாத முதுகெலும்புகள்.' இரண்டாவது தொகுப்பு "குட்டி ஆலீசும் கோடி நட்சத்திரங்களும்.' இது மட்டுமின்றி, பல்வேறு இலக்கிய ஆளுமைகளை உருவாக்கிய பல தளங்களும் மேடைகளும் அவருடைய அரிய உழைப்பால் விளைந்தவை.

"பூங்குயில்' சிவகுமார் என்று இலக்கிய ஆர்வலர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர் வந்தவாசியில் வசிக்கிறார். தேசூரில் தன்னுடைய பள்ளிப் படிப்பையும், சென்னையில் தொழிலாளர் சட்டப் படிப்பையும் படித்த சிவகுமார், எட்டாம் வகுப்பு படிக்கும்போதே எழுதத் தொடங்கி விட்டார். துணுக்குகள், நகைச்சுவை என்று எழுதி, அதன் தொடர்ச்சியான அனுபவத்தாலும், தனக்குள்ளே பொதிந்து கிடக்கும் கவிதை ஊற்றாலும் கவிதை எழுத வந்தவர். அவருடைய நெடிய வாசிப்பனுபவம் பற்றி அவர் சிலாகித்துக் கூறும் செய்திகள் கவனிக்கத்தக்கன. அம்பேத்கரின் "புத்தரும் அவர் தம்மமும்“' தனக்கு புதிய வெளிச்சத்தை அளித்ததாக அவர் கூறுகிறார்.

நவீன அறிவியல் மனிதன் தனக்கான நெறி ஒன்றைத் தேடிக்கொள்ள நேரும் போது, பவுத்தம்தான் சரியானது என்பது அம்பேத்கருடைய தெளிவான முடிவு. இதைப் படிக்கையில் தான் புதிய உலகில் விடப்பட்டதாக உணர்ச்சி வயப்படுகிறார். அயோத்திதாசரும் அத்தகைய தாக்கத்தினை சிவகுமாருக்கு ஏற்படுத்தியுள்ளார். நாம் யாராக இருந்தோம் என்பதை அறிய வைக்கிறது என்கிறார் அவர்.

சிவகுமாரின் எழுத்து அழகியலின் உச்சபட்சம் நிறைந்த எழுத்து. ஒவ்வொரு கவிதையும் ஓர் அழகியல் கூறுடன் இருக்கும். வாசித்து முடிக்கும்போது நமக்குள் அது நிகழ்த்தும் மாற்றங்கள் கவிதையின் மாயம் எனலாம். முதிர்ந்த மாலைக்குப் பிறகு/வெயிலின் மிச்சங்கள்/நட்சத்திரத் துகள்களாய்/ஒளிர்ந்த போது/ஆலீஸ்/இரவாகியிருந்தாள் / சிவகுமாரின் இன்னொரு ஆளுமை, அழகியல் கவிதைகளினூடே வெப்பம் நிறைந்த தலித் சொல்லாடலை வைப்பதுதான்.

யானையைப் பற்றிய கவிதை ஒன்று. கடைத்தெருவில் பிச்சையெடுக்க விடப்பட்ட அதன் துயரம், காட்டுவாசனை அடிக்காத வீதி, தன் தோழமைகள் இல்லாத அதன் அகதிச் சோகம் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டே வரும்போது, இறுதியில் அந்த யானை கோபம் மிகக் கொண்டு தன் சூழலை எதிர்கொள்கிறது. அப்போது கவிதை இவ்வாறு முடியும் : புதைந்து புதைந்து/திமிர்ந்தெழுந்து ஆதிக்கம் செய்தவனை/ஒரு தலித்தைப் போல/எதிர்த்தெழுந்தபோது/மொத்தப் பார்வையாளர்களும்/அதிர்ந்து போனார்கள்/மதம் கொண்டதாக/ அவருடைய இந்த கோபம், பல கவிதைகளில் குறியீடாக வருகிறது. கிளியைப் பற்றிய கவிதை அப்படியானதுதான். மழை பற்றி நிறைய கவிதைகளை சிவகுமார் எழுதியுள்ளார்.

ஆனால், அவருடைய கவிதை சுழன்றாடும் களம் தலித் விடுதலைக்கானது. பூர்வகுடிகளின்/பஞ்சமி நிலங்களில்/இழந்தவனின் துயரக்கண்ணீராய் வழிந்து/துரோகத்தின் சாயத்தைக் கரைத்திட/தன்நிறம் கொண்டு மறித்திடும் தன் பாதைகளை/நீர்க்கத்தியால் ஊடறுத்து/ஒளிபுகா வனங்களை அகழ்ந்து/ஆதிக்க வேர்களைப் புரட்டுகையில்/இலைகள் எழுப்பும் அதிரும் பறையொலியில்/திமிர்ந்த பாம்பென நெளிந்து வீதியில்/திரள்கையில்/பதைபதைத்து பாம்பாட்டிகள்/இடியாகையில்/ஆதியில் சமைந்தவளின் அடிவயிற்று அச்சமென/பள்ளக்கிடங்கில் சேர்கின்றன/நீர்ச்சொற்களாலான மழை பதுங்குபுலியாக / இப்படி பதிவாக்கும் கோபம் அரூபமானது எனினும் உண்மையானது. சிவாவின் சினத்திற்கு காரணம், இந்த சாதிய சமூக அமைப்புதான்.

தன்னுடைய தந்தை ஓர் அரசு ஊழியராக இருந்ததால், சாதியின் கூர்நகங்கள் கீறாத வாழ்வு சிவகுமாருடையது. ஆனால், காலம் அவருக்கு சாதியின் கொடூரத்தைக் காட்டியிருக்கிறது. தேசூரில் வசிக்கும்போது அவர்கள் குடியிருந்தது என்னவோ சாதி இந்துக்களின் வீதியில்தான். குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, அவருடைய அம்மா பிடித்துவிட்ட பிறகு அந்த குழாயை சுத்தம் செய்து அதன் மேல் துணியைப் போட்டு மற்றவர்கள் தண்ணீர் பிடிப்பார்களாம். இது, அப்போது ஏதோ சுத்தத்திற்காகத்தான் என எண்ணியவருக்கு, பிற்காலங்களில்தான் புரிந்திருக்கிறது அதுதான் தீண்டாமை என்பது.

அதேபோல் தன் குடும்பத்தில் ஒரு வரலாற்றுப் பாரம்பரியத்திற்கு சொந்தமானவர் சிவா. அவருடைய பெரியப்பா டி. தசரதன், வந்தவாசி தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். "செட்யூல்டு காஸ்ட் பெடரேஷன்' கட்சியின் முதல் உறுப்பினர் அவர். இரட்டைத் தொகுதியில் தலித்துகளின் பிரதிநிதியாக இருந்திருக்கிறார். அவருடைய திருமணத்திற்கு காமராஜ் போன்ற தலைவர்கள் வந்திருக்கிறார்கள். தலித் அல்லாதார் உணவருந்துவதற்காக ஊரில் உள்ள சுற்றுலா மாளிகையில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், யாருமே அந்த உணவை சாப்பிடவில்லையாம்! சமைத்த உணவெல்லாம் அப்படியே இருந்திருக்கிறது. இத்தகைய சாதியக் கொடூரத்திற்கு ஆட்பட்ட அவருடைய ரத்தம்தான் அவருடைய பேனாவில் மையாக இறங்கியிருக்கிறது.

தற்போதைய தலித் இலக்கியம் மிகச் சரியாக இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். ஆகச் சிறந்த ஆக்கங்களை இலக்கியத்தின் ஒவ்வொரு வகைமையிலும் நாம் தேர்ந்தெடுத்தால், எல்லாவற்றிலும் தலித் ஆக்கங்களே வரும் என்கிறார் உறுதியாக. அது மட்டுமல்ல, நவீன சிந்தனைகளோடும் ஊடகங்களோடும் நாம் நம்மை பொருத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எதிர்காலத்தில் தலித் இலக்கியம்தான் உண்மையான தமிழ் இலக்கியம் ஆகும் ஏனென்றால், அது உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்பது அவர் கூற்று.

சிற்றிதழுக்கான இலக்கணங்களோடு, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் "பூங்குயில்' இதழை எவரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லையே என்ற கேள்விக்கு புதிய எழுத்தாளர்களை உருவாக்குவதற்கும், ஆக்கங்களை வெளியிடுவதற்கும்தான் நான் சிற்றிதழை நடத்துகிறேன்; அதற்காக நான் யாரிடமும் என்னை விலை பேசியதில்லை. மேலும், இத்தகைய வேலைகளை நாம் செய்யும்போது, அதை யாரும் கொண்டாடுவதில்லை. ஆனால் அதையே வேறு யாராவது செய்தால் கொண்டாடுவார்கள். இப்படிப்பட்ட கொண்டாட்ட மனநிலையேகூட, சாதிய மனநிலையõக இருக்கலாம் என்கிறார்.

தன்னை அடிப்படையில் ஒரு மார்க்சியவாதி என்றுஅடையாளப்படுத்திக் கொள்ளும் சிவகுமார், பல பிரச்சினைகளைக் கையில் எடுக்கும் மார்க்சியவாதிகள் சாதிய விஷயங்களை மட்டும் தவற விட்டுவிடுகின்றனர். இது, முரண்பாடாகவே இருக்கிறது. ஆனால் ஒரு மார்க்சியவாதி சிறந்த தலித் எழுத்தாளராகவும் மாறலாம்; அதற்கான ஆளுமை அவரிடம் இருக்க வேண்டும் என்றும், மார்க்சியம் ஒரு சாட்டை. அதை தலித்துகள் கையிலெடுக்க வேண்டும். ஆனால், அது இப்போது யார் யார் கைகளிலோ இருக்கிறது என்று கூறும் அவருடைய சித்தாந்தத் தெளிவு நமக்குப் புலப்படுகிறது.

சிவகுமாரின் இன்னொரு ஆளுமை அவர் ஒரு குறும்படக்காரர். அவருடைய முதல் குறும்படம் "கண்ணாடி மீன்'. சுகிர்தராணியின் ஒரு கவிதையை அடிப்படையாக வைத்து அவர் அந்தப் படத்தை எடுத்திருந்தார். அவருடைய இரண்டாவது குறும்படம் முக்கிய கருவைக் கொண்டது. அயோத்திதாசரின் "கார்த்திகை தீப விவரம்' என்னும் சிந்தனைப் பகுதியை எடுத்துக் கொண்டு, வந்தவாசியில் நடைபெறும் கார்த்திகை தீப திருவிழாவை படம் பிடித்து, காட்சிகளை அடுக்கிக் கொண்டே அப்படத்தை எடுத்திருப்பார் சிவகுமார். இது ஒரு பண்பாட்டுப் பணி.

இதுவரை கார்த்திகை தீபம் மீது நிலவும் நம்பிக்கைகளை உடைத்து, மாற்றுக் கருத்தியலை முன்வைக்கும் படம். அது திரையிடப்பட்ட இடங்களிலெல்லாம் அயோத்திதாசரின் மாற்றுச் சிந்தனையை விதைத்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி எவரும் பேசவில்லை. ஏன், தலித் அறிவுலகமும் கூட பேசவில்லை. ஆனால், அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத சிவகுமார், அயோத்திதாசரின் எழுத்துகள் பரவலாக்கப்பட வேண்டும் என்னும் எண்ணத்தையே முன்வைக்கிறார்.

சிவகுமாரின் இன்னொரு பரிமாணம் அவர் ஒரு பதிப்பாளர். அவருடைய "பூங்குயில் பதிப்பகம்' சார்பில் முக்கிய நூல்களை வெளியிட்டிருக்கிறார். பல முக்கிய எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

அம்பேத்கரின் "புத்தரும் அவர் தம்மமும்' அவருடைய மனநிலையில் ஏற்படுத்திய மாற்றத்தின் விளைவாக, ஒரு பவுத்த பண்பாட்டு மய்யத்தை உருவாக்கி, அதன் மூலம் சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்பது சிவகுமாரின் லட்சியம். பன்முகங்களைக் கொண்ட சிவா, அதையும் சாதிப்பார் என்பதில் எவ்வித அய்யமும் நமக்கில்லை. அவர் கவிதை சொல்லுகிறது : பெருத்த மழையில் / ஏரிகள் / உடையும்போதும் குளங்கள் / வழியும்போதும் / நீரின் போக்கினை எதிர்த்து நிற்கும் மீன்களெல்லாம் / செத்தாலும் வாழ்கின்றன.

டி.எல். சிவகுமாரை தொடர்பு கொள்ள : 93826 47849

- யாழன் ஆதி

Pin It