1947க்குப் பிந்தைய தொழிற் கொள்கை தீர்மானத்தின்படி (1956), நிலக்கரி, லிக்னைட், இரும்புத் தாது, தாமிரம், துத்தநாகம், பெட்ரோலியம் மற்றும் அணுத் தாதுக்கள் ஆகியன இந்திய பொதுத் துறையின் பயன்பாட்டுக்கென சுரங்கங்களின் மூலம் தோண்டி எடுக்கப்பட்டன. காலப் போக்கில், பொதுத் துறையின் அல்லது உள்நாட்டு உற்பத்தித் துறையின் தேவைக்கென சுரங்கத் துறையில் உள்ளூர் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன. பொதுத் துறை சுரங்கங்கள் மட்டும் இயங்கிய காலகட்டத்திலும்கூட, மக்களின் இடப்பெயர்வும், சுற்றுச் சூழல் பாதிப்பும், பாரம்பரிய வாழிட அழிப்பும் நடந்து கொண்டுதான் இருந்தன.

ஆனால், பொதுத் துறையினால் விளைந்த சமூக இழப்புகள் பொருட்படுத்தத்தக்க அளவிலும் மேலாண்மையோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் கண்காணிப்பிற்கு உட்பட்டதாகவும், இருந்தன. ஆனால், தாராளமயமாக்கலுக்குப் பிறகான புதிய தொழிற்கொள்கை, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் உற்பத்திக்கான திருத்தப்பட்ட சட்ட விதிகள், அதிகார வர்க்கம் மற்றும் தொழிற் கழகங்களுக்கு இடையேயான சட்ட விரோத உறவுகள் ஆகியவற்றின் விளைவாக, இடப்பெயர்வு, சுற்றுச் சூழல் மாசுபாடு, பாரம்பரிய வாழ்விடச் சிதைவு போன்றன கணக்கிடப்பட இயலாத அளவில் பெருகி வருகின்றன. மேலும், நாட்டின் இயற்கை வள கையிருப்பு, வாழ்வாதார எதிர்காலம் மற்றும் பொருளாதார உபரி மதிப்பு ஆகியன சூன்யத்தை நோக்கி இறங்குகின்றன.

santhosh_hegdeமார்ச் 1993 இல் கொண்டு வரப்பட்ட, தேசிய கனிமங்கள் கொள்கை, சுரங்கங்களில் வரைமுறையற்ற தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்தியது. தொடக்கத்தில் இரும்பு, தங்கம், வைரம், பிளாட்டினம், டங்ஸ்டன் உள்ளிட்ட மிக முக்கிய கனிமச் சுரங்கங்களுக்கான கதவுகள் தனியார் முதலீடுகளுக்குத் திறந்து விடப்பட்டன. காலப் போக்கில், இத்துறையில் வெளிநாட்டு தொழிற்நுட்பமும் மேலாண்மையும் கொண்டு வரப்பட்டன. 1997இல் ‘அந்நிய மூலதன வளர்ச்சி வாரியம்' இத்துறையில் 50 சதவிகிதம் அளவுக்கு நேரடிப் பங்கு முதலீட்டை அனுமதித்திருந்தது. கடந்த 2006 பிப்ரவரி முதல் இப்பங்கு முதலீடு 100 சதவிகிதம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்திய உலோகங்கள் நிறுவனம் (Indian Metals Institute) 2009 இல் வெளியிட்ட ஒரு மதிப்பீட்டு அறிக்கையின்படி, அடுத்த அய்ந்து ஆண்டுகளில் இந்தியாவின் கிழக்குப் பகுதியில் (மேற்கு வங்கம், ஒரிசா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகியன) வெளிநாட்டு நிறுவனங்களால் கொட்டப்படவிருக்கும் அந்நிய முதலீடு ஏறத்தாழ 30 ஆயிரம் கோடி டாலர்கள். அதாவது, 13 லட்சத்து 50 ஆயிரம் கோடி இந்திய ரூபாய். இது, சுதந்திரத்திற்குப் பிறகான இத்தனை ஆண்டுகளில் செய்யப்பட்டிருக்கும் முதலீட்டைப் போல, ஆறு மடங்கு நிதி மூலதனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைக் கொள்ளையிட இருநூறு ஆண்டுகட்கு முன்பு ‘கிழக்கிந்திய கம்பெனி' நுழைந்தது. இன்று இந்தியாவின் கிழக்குப் பகுதிகளைச் சூறையாட, பல்வேறு ‘மேற்கத்திய' கம்பெனிகள் நுழைந்து கொண்டிருக்கின்றன.

சுரங்கத் துறையில் கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அளவீடுகளால்தான் இந்த வரைமுறையற்ற முதலீடு சாத்தியமாகிறது என அரசாங்கம் பெருமைப்பட்டுக் கொள்கிறது. ஆனால், தளர்த்தப்பட்ட சட்டப் பாதுகாப்புகளால் நாட்டிற்கு நேரப்போகும் ஆபத்து குறித்து அதிகார வர்க்கத்திற்கு அக்கறையில்லை. ‘எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி' (மே 15, 2010) இதழில் சுரங்கங்கள் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரை ஒன்றில், பணிகந்த மிஸ்ரா என்பவர், 1993இலிருந்து 2004 வரையான காலகட்டங்களில் தோண்டியெடுக்கப்பட்ட கனிமங்களின் அளவைக் கணக்கிட்டால், ஆண்டுக்கு 10.3 சதவிகிதம் வரை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்றும், ஏற்றுமதி செய்யப்படும் கனிமங்களின் அளவு ஆண்டுக்கு 15.7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது என்றும் குறிப்பிடுகிறார். ஆனால், சுரங்கத்துறையில் வேலைவாய்ப்பு பெற்றிருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கையோ, ஆண்டுக்கு 4 சதவிகிதம் அளவுக்கு இறங்கு முகத்திலேயே இருக்கிறது என்றும் தனது ஆய்வில் தெரிவிக்கிறார்.

சுரங்கத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ குறிப்பின்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் 86 கனிமங்களில். இவற்றில் சில மட்டுமே இந்தியத் தொழிற்துறைக்கு குறிப்பாக, எரி பொருள்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் நிலக்கரி, லிக்னைட் மற்றும் பாக்சைட் ஆகியவற்றின் உற்பத்தியில் 2007 – 2008 ஆம் ஆண்டு, இந்தியா உலகின் மூன்றாவது இடத்தை வகித்தது. மேலும், இரும்புத் தாது உற்பத்தியில் நான்காவது மற்றும் மாங்கனீசு உற்பத்தியில் அய்ந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆனால், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு 2 சதவிகிதம் அளவே சுரங்கங்கள் மற்றும் குவாரித் தொழில் உதவுகிறது. நாட்டின் எரிபொருள் தேவைக்குப் போக, எஞ்சும் கனிமங்களும், எரிபொருள் அல்லாத கனிமங்களும் உபரியாக எதற்காகத் தோண்டியெடுக்கப்பட வேண்டும்? மறுபடியும் விளைச்சல் காண முடியாத, சர்வதேசச் சந்தையில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விலையேற்றம் கண்டு கொண்டிருக்கும் இக்கனிமங்கள், அற்ப அந்நியச் செலாவணியை இந்நாட்டிற்குத் தந்து விட்டு, கொள்ளை போகின்றன என்பதைச் சொல்லத் தேவையில்லை.

சுரங்கங்களை நிர்மாணிப்பது என்பது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்கு) விதிகள் 1957இன் கீழ் மூன்று கட்டங்களை உள்ளடக்கியது. முதலில் கனிமங்கள் கிடைக்கப் பெறும் பகுதிகளைக் கண்டறிவது. அடுத்து முழுமையான ஆய்வின் அடிப்படையில் எந்தெந்தப் பகுதிகளில் எந்தெந்த கனிம வளங்கள் இருக்கின்றன என்பதான விரிவான திட்ட மதிப்பீடு செய்வது. இறுதியாக, சுரங்கத் திட்டங்களை மேற்கொள்வது. புதிய பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டுக் கொண்டிருந்த 90களிலேயே கனிமங்களைக் கண்டறியும் ஆய்வுகள் தொடங்கப்பட்டு விட்டன. ஆனால், கனிமங்களின் இருப்பை உள்ளடக்கிய திட்ட மதிப்பீடுகள் இந்திய மண்ணியல் ஆய்வுக் கழகத்தின் வழிகாட்டுதலில் முழுமையாக செய்யப்படவில்லை; அல்லது ஊழல் முறைகேட்டில் ஈடுபட வசதியாக, இம்மதிப்பீடுகள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. கடந்த 2005–க்குப் பிறகு, சர்வதேசச் சந்தையில் உலோகங்களுக்கும் கனிமங்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அளப்பரிய தேவைகளையும், 2005 – 2010 வரையான அய்ந்தாண்டுகளில் ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் கனிமங்கள் மற்றும் உலோகத் தாதுக்களின் மதிப்பையும் கணக்கிட்டால், கொள்ளையிடப்பட்டிருக்கும் கனிம வளங்களின் அளவும், கைமாறியிருக்கும் ஊழல் பண மதிப்பும் நம் அறிவுக்கு எட்டும். உலகின் பல்வேறு நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் இந்திய கரும்புள்ளிகளின் கருப்புப் பணத்தில் கணிசமானவை – இக்கனிம வளங்களின் மூலம் கிடைத்த லாபக் கணக்கும், பெற்ற கையூட்டுக் கணக்கும் என உறுதியாகக் கூறலாம்.

இந்திய சுரங்கக் கழகம், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகிய முக்கிய அரசுத் துறைகளிடமிருந்து முறையான, படிப்படியான ஒப்புதல்களைப் பெற்று இயங்க வேண்டிய சுரங்க நிறுவனங்கள், குறுகிய காலத்திலேயே திட்ட வரைபடத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அளவைவிட, பல மடங்கு கனிம வளங்களைச் சூறையாடி விடுகின்றனர். எப்படியெனில், அனுமதி பெற்ற இடங்களில் தோண்டப்படும் சுரங்கங்களை ஒட்டியே சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இத்தகைய சட்டவிரோத சுரங்கங்களையும் தோண்டிக் கொள்கின்றன. இவற்றை முறையாகக் கண்காணிக்க நடுவண் அரசோ, மாநில அரசுகளோ கவனம் செலுத்துவதில்லை. மாறாக, இத்தகைய சட்ட விரோத சுரங்கங்களைத் தோண்டிக் கொள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினரின் ஒத்துழைப்பைப் பெற்று விடுகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத அனுமதியை வழங்கியதன் மூலமாகத்தான் ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா 4,300 கோடி ரூபாய் கையூட்டு பெற்றிருக்கிறார் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார்.

மூத்த பத்திரிகையாளரும் ‘ஒடிசா ஜன சம்மிலானி' அமைப்பின் தலைவருமான ரபிதாஸ், 2009இல் உச்ச நீதிமன்றத்தில் செய்த முறையீட்டு மனுவின் அடிப்படையில், சட்ட விரோத சுரங்கங்களைப் பற்றி ஆய்வு செய்ய, 2009 டிசம்பரில் ஒரு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழு 2009 டிசம்பர் 16, 2010 பிப்ரவரி 22 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய நாட்களில் மூன்று கட்ட விசாரணையை முடித்து அறிக்கை தந்தது. இவ்வறிக்கை, “வனப் பாதுகாப்புச் சட்டம் – 1980, சுற்றுச் சூழல் அனுமதி, காற்று மற்றும் நீராதார சட்டங்கள் ஆகியவற்றை மீறி ஏறத்தாழ 155 சுரங்க ஒப்பந்தங்கள் ஒரிசாவில் செய்யப்பட்டுள்ளன எனவும், குத்தகைக் காலம் முடிந்தும் சில பெரிய சுரங்கங்கள் நீட்டிப்பு அனுமதி பெறாமல் இயங்கி வருகின்றன'' எனவும் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் விசாரணையில் இக்குழுவிடம், “596 சுரங்கக் குத்தகைகளில் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 351 குத்தகைகளின் காலம் முடிந்து விட்டது எனவும், 163 சுரங்கங்களின் இயக்கம் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது'' எனவும் ஒரிசா மாநில அரசு தெரிவித்தது.

அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும் சட்டவிரோத சுரங்கங்களையும், கனிமங்களின் கொள்ளையையும் மூடி மறைக்க, சட்டத்தின் துணையோடு மாறி மாறி வெளியிட்டுக் கொள்ளும் இந்த அறிக்கைகளும் அவற்றில் குறிப்பிடப்படும் எண் விளையாட்டுகளும் அவர்களுக்கு வெறும் பொழுது போக்கு. வளங்களைச் சூறையாட விட்டுவிட்டு, வேடிக்கை பார்க்கும் நமக்கோ இது உயிர்ப் போக்கு என்பதை நாம் உணர வேண்டும்.

2005 இல் நாடாளுமன்றக் குழு ஒன்று, நாட்டில் சட்டவிரோதமாக 14,504 சுரங்கங்கள் செயல்படுவதாக அறிவித்தது. சுரங்கத்துறை அமைச்சகம்கூட தனது சமீபத்திய அறிவிப்பு ஒன்றில், 2,496 பெரிய சுரங்கங்களும் 28,055 சிறிய சுரங்கங்களும் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. புதிய சுரங்கச் சட்டத்தின்படி, சிறிய சுரங்கம் ஒன்றின் குத்தகைப் பரப்பு 100 சதுர கி.மீ. எனவும், பெரிய சுரங்கம் ஒன்றின் குத்தகைப் பரப்பு 2000 ஹெக்டேர் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இவ்வளவீட்டின்படி கணக்கிட்டால், சட்டவிரோதமாக வளைக்கப்பட்டிருக்கும் இயற்கை வனப் பகுதிகளின் பரப்பளவை நாம் அறிந்து கொள்ள முடியும். தேசிய கனிமங்கள் கொள்கை (1993)யைச் சுட்டிக்காட்டி, “முறைப்படியாகவும், அறிவியல் ரீதியாகவும் இயங்கும் சுரங்கங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுகின்றன என்றும், அறிவியல் முறைகளற்றும் சட்ட விதிகளை மீறியும் இயங்கும் சுரங்கங்கள் நாட்டின் இயற்கை சூழலைப் பாதிக்கின்றன'' என்றும் அயோக் கியத்தனமான அறிக்கையை அரசு வெளியிடுகிறது. சட்டப்பூர்வ அனுமதி பெற்றாலும், சட்டவிரோதமாக இயங்கினாலும் புவியியல் மற்றும் சூழலியலில் சுரங்கங்கள் ஏற்படுத்தும் பேராபத்து ஒன்றுதானே என்பதை, தனது நயவஞ்சக அறிக்கையில் அரசாங்கமே மூடிமறைக்க முயல்கிறது.

கர்நாடகாவின் பெல்லாரியில் மட்டும் 100 கோடி டன் இரும்புத் தாது இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் 2000 ஆம் ஆண்டு வரை குத்தகை உரிமை வழங்கப்பட்ட சுரங்கங்கள் 196. சட்டவிரோதமாக இயங்கி வருபவையோ 500 க்கும் மேற்பட்டவை. 2000 – 2001 ஆம் ஆண்டில் 1 கோடியே 20 லட்சம் டன்கள் என்ற அளவில் செய்யப்பட்டுக் கொண்டிருந்த இரும்புத் தாது உற்பத்தி, 2005 – 2006 ஆம் ஆண்டில் 18 கோடியே 40 லட்சம் டன்கள் என உயர்ந்திருக்கிறது. இதில் சரிபாதியளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2001இல் டன் ஒன்று ரூபாய் 275 ஆக இருந்த இரும்புத் தாதுவின் விலை மதிப்பு, இன்று டன் ஒன்றுக்கு ரூபாய் 1060 என உயர்ந்திருக்கிறது. ஏற்றுமதி செய்யப்படும் இரும்புத் தாதுக்களின் மொத்த மதிப்பு 2001இல் 900 கோடி ரூபாயிலிருந்து இன்று 23 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை பசுமைக்கும் வன உயிரினங்களுக்கும் பெயர் பெற்றிருந்த பெல்லாரியின் காடுகள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மலைகள் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டு தரைமட்டமாகிக் கொண்டிருக்கின்றன. இவ்வனங்களின் வளங்களைச் சூறையாடி வரும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எட்டமுடியாத செல்வந்தர்களாக வளர்ந்துள்ளனர். இச்சூறையாடலின் வன்முறையில் கொத்தடிமைக் கூலிகளாக, உழைப்புச் சுரண்டலுக்கும் உயிரிழப்புகளுக்கும் ஆளான தொழிலாளர்கள் எண்ணற்றோர். இவர்களில் கணிசமானோர் குழந்தைத் தொழிலாளர்கள். பல்வேறு அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக, 2007 மார்ச்சில் அப்போதைய கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி ராஜா, பெல்லாரி சுரங்கங்களில் நடைபெறும் சட்ட விரோத கொள்ளை மற்றும் அதிகார வர்க்க ஊழல்கள் குறித்து விசாரணை செய்ய, ‘கர்டநாடக லோகா யுக்தா' என்ற நீதிபரிபாலன அமைப்பைக் கேட்டுக் கொண்டார்.

1982 இல் கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞராகவும் பின்னர் உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்த என். சந்தோஷ் ஹெக்டே, இவ்வமைப்பின் தலைமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அவர் 2008 டிசம்பரில் 274 பக்க விசாரணை அறிக்கையை அரசிடம் அளித்தார். சுரங்கத் துறைக்கும் பொறுப்பு வகித்த முன்னாள் முதல்வர் தரம்சிங் மீதும் இவ்வறிக்கை குற்றம் சாட்டியிருந்தது.

கர்நாடக வனத்துறையும் சுரங்கத் துறை மற்றும் மண்ணியல் துறையும் பெயரளவிற்கு 11 சுரங்கங்களின் மீது மட்டும் வழக்குப் பதிந்து, நடவடிக்கை எடுத்தன. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், உயர் நீதிமன்றத்தில் இந்நடவடிக்கையின் மீது தடையாணை பெற்றுவிட்டனர். டிசம்பர் 2009 முதல் மே 2010 வரை, இந்திய சுரங்கங்கள் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு அதிரடியாக ஆய்வுகள் செய்து 30 சுரங்கங்களின் மீது நடவடிக்கை எடுத்தது. தனது விசாரணைக் காலத்தில், சந்தோஷ் ஹெக்டே, பெல்லாரியிலிருந்து சட்டவிரோதமாக கார்வார் துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்த இரும்புத் தாது ஏற்றிய 99 லாரிகளைப் பறிமுதல் செய்ய, வனத்துறை அதிகாரிக்கு ஆணையிட்டிருந்தார்.

முறையான ஆவணங்களின்றி கடத்தப்படவிருந்த 8 லட்சம் டன்கள் இரும்புத் தாதுவை பறிமுதல் செய்து தொடர்புடைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தார். ஆனால் இந்நிறுவனங்களுக்கு ஆதரவாக, நடவடிக்கை எடுத்த அதிகாரியே இடைநீக்கம் செய்யப்பட்டார். தற்போதைய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, லோகாயுக்தாவின் அறிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் ரூபாய் 2500 கோடி மதிப்புள்ள 50 லட்சம் டன்கள் இரும்புத் தாது, எவ்வித ஆவணங்களும் இன்றி சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டிருப்பதாகவும் ஹெக்டே தெரிவிக்கிறார்.

கர்நாடக லோகா யுக்தா மற்றும் இந்திய சுரங்கங்கள் புலனாய்வுப் பிரிவு ஆகிய அரசு அமைப்புகள் அளித்த விசாரணை அறிக்கைகளையும் நடவடிக்கைகளையும் புறந்தள்ளி, கர்நாடக மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் சட்டவிரோத சுரங்கங்களுக்கு ஆதரவாகவே ஆணைகள் பிறப்பித்துள்ளன. அரசாங்கங்களின் இத்தகைய ஊழல் போக்கினால் மனம் வெதும்பி, கடந்த ஆகஸ்டு 10 அன்று, தனது பதவியிலிருந்து சந்தோஷ் ஹெக்டே விலகுவதாக கடிதம் கொடுத்திருக்கிறார். அரசுத் துறைகளும் நீதிமன்றங்களும்கூட முடமாக்கப்படும் அளவிற்கு சுரங்கங்களின் பின்னே செயல்படும் அரசியல் செல்வாக்கும் அதிகார வர்க்க ஊழலும் கோலோச்சுகின்றன. மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய நீதிபரிபாலன அமைப்புகள் மட்டுமல்ல, இந்திய அரசியலமைப்பே முடமாக்கப்பட்டுள்ளது என்பதே துயரம் மிகுந்த உண்மை.

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டத்திலும் ஆந்திரத்திலும் இத்தகைய சட்டவிரோத சுரங்கங்களை நடத்தி வருபவர்கள் ‘ரெட்டி சகோதரர்கள்' என ஊடகங்களால் வர்ணிக்கப்படும் கருணாகர (ரெட்டி), ஜனார்த்தன (ரெட்டி) மற்றும் சோமசேகர (ரெட்டி) ஆகிய சுரங்கத் திருடர்களே. இவர்கள் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இவர்கள் சாதி அடிப்படையில், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ராஜசேகர (ரெட்டி) யுடன் இணக்கமான உறவு வைத்திருந்தனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜசேகர (ரெட்டி)யின் சொந்த மாவட்டமான கடப்பாவில், ரூ.4,500 கோடி மதிப்பீட்டில் இரும்பு உருக்காலையை நிறுவ, இவர்கள் அனுமதி பெற்று விட்டனர்.

இந்த உருக்காலைக்காக அப்போதைய ராஜசேகர (ரெட்டி)யின் அரசு கையகப்படுத்தித் தந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு 10,675 ஏக்கர். இவர்களின் ஓபுலபுரம் சுரங்க நிறுவனம் சட்டவிரோத சுரங்கங்களை நடத்தி வருவதாக, ராஜசேகர (ரெட்டி)க்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த ஆந்திர முதல்வர் அச்சுரங்கங்களின் இயக்கத்தைத் தடை செய்தார். ஆனால், ஆந்திர உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஆந்திர அரசின் நடவடிக்கை மீது தடையாணையை இவர்கள் பெற்றுவிட்டனர். ஆந்திரத்திலும் கர்நாடகாவிலும் ரெட்டி சாதியினரின் மேலாதிக்கத்தை நிறுவுவது, இவர்களின் அரசியல் திட்டங்களில் ஒன்று. ராஜசேகர (ரெட்டி)யின் குடும்பம் காங்கிரஸ் கட்சியில் பிளவை ஏற்படுத்தியிருப்பதும், கர்நாடகாவில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க ரெட்டி சகோதரர்கள் முயல்வதும், இப்பின்னணியில் நிகழும் அரசியல் திட்டம்தான். ஆக, சாதிவெறி அரசியலுக்கான நிதி மூலதனத்தையும் சுரங்கங்களில் வெட்டி எடுக்கப்படும் கனிம வளங்களே பெருகச் செய்கின்றன.

tribes_270சாதிவெறி அரசியலோடும் ஆதிக்க சாதி வன்முறையோடும் பின்னிப் பிணைந்திருப்பவை குண்டர் படைகள் என்பதை நாமறிவோம். அவ்வகையில் சட்டவிரோத சுரங்கங்களை நடத்தும் உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், அவ்வப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களை பலவந்தமாக வெளியேற்ற, தனியார் குண்டர் படைகளைப் பயன்படுத்துகின்றனர். அனுமதி பெற்ற சுரங்கப் பகுதிகளிலிருந்து பாரம்பரிய மக்களை வெளியேற்றவோ, குண்டர் படைகளின் வேலையை உள்ளூர் காவல் துறையோ, துணை ராணுவப் படையோ செய்து விடுகின்றனர். ஈவிரக்கமோ, மனித உயிர்களென்ற நினைவோ, குற்ற மனப்பாங்கோ எதுவுமின்றி ஏவல் நாய்களைப் போல் செயல்படப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள்தான், குண்டர் படைகளும் துணை ராணுவப் படையினரும். இவர்களுக்கிடையிலான ஒரே வேறுபாடு – தரப்பட்டிருக்கும் சீருடை மட்டுமே.

இக்கொடுங்கோலர்களிடமிருந்து நிராயுதபாணியான பழங்குடி மக்களைக் காக்க சமூகப் பொறுப்புணர்வும், உயிர்களின் மதிப்பறிந்த நாகரிகமும், வாழ்வின் அடிப்படைப் பண்பாடுகளைப் பேண விழையும் எண்ணமும் கொண்ட எவரொருவரும் முன்வரவே விரும்புவர். அத்தகைய உயரிய மனித நேயத்தில், அம்மக்களுக்காக ஆயுதம் ஏந்தியிருப்பவர்கள்தான் மாவோயிஸ்டுகள். நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக ‘உள்நாட்டுத் தீவிரவாத'மாக இருப்பவர்களென, இவர்களை அடையாளப்படுத்தும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்றவாத கட்சிகளும், இவர்களின் எண்ணங்களையே தமது கருத்துகளாகவும் பிரதிபலிக்கும் ஊடகங்களும், லாபவெறி கொண்டலையும் உள்ளூர் சுரங்கக் குண்டர்கள் மற்றும் பன்னாட்டுக் கொள்ளையர்களின் பல்லக்குத் தூக்கிகள் என்றே குற்றம் சுமத்த வேண்டும்.

இவர்களின் நாட்டுப் பற்று தன்னல நுகர்வு வெறிக்கானது. தத்தமது சாதி ஆதிக்க நலனுக்கானது. ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்களின் வாழ்வுக்கு எதிரானது. ஆதிக்க சாதி அரசியலும் பன்னாட்டு ஏகாதிபத்தியமும், நம்மை ஒடுக்கவும் சுரண்டவும் இணையும் இடங்களில் முதன்மையான ஒன்றாக சுரங்கங்கள் இருக்கின்றன என்றால், அது மிகையல்ல.

ராஞ்சியில் இயங்கும் ‘பிந்த்ராய் ஆய்வுக் கல்வி மற்றும் செயல்பாட்டு நிறுவனம்' மற்றும் ஜார்கண்ட் சுரங்கங்கள் பகுதியின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சஞ்சய் போசு முல்லிக் என்பவர், நாட்டின் பெரும் பகுதிகளில் இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதால், எதிர் வினையாகவே மாவோயிஸ்டுகள் வளர்ந்து வருகின்றனர் என்றும், நாட்டில் கனிமங்கள் நிறைந்திருக்கும் மாவட்டங்களின் 60 சதவிகிதப் பகுதிகள் இதன் காரணமாகவே, மாவோயிஸ்டுகளின் நடவடிக்கைகளின் கீழ் வந்துள்ளன என்றும் தனது ஆய்வு அறிக்கையில் சுட்டிக் காட்டுகிறார். நாட்டின் பெரும்பாலான முதலாளித்துவ அறிவாளிகளும் சில அரசாங்க நிறுவனங்களும்கூட, இக்கருத்தை ஏற்றுக் கொள்கின்றனர். மாவோயிஸ்டுகளை முற்றிலும் ஒடுக்கினால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சி உறுதிப்படும் என்று மீண்டுமொரு முறை உரத்துக் கூவும், இந்தியப் பிரதமரும் பன்னாட்டு நிறுவனங்களின் காவலருமான, மன்மோகன் சிங்கின் கூற்று, இயற்கை வளங்கள் மற்றும் கனிமங்கள் நிறைந்த நிலங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவதற்குப் பெரும் அச்சுறுத்தலாக, மாவோயிஸ்டுகள் இருப்பதையே மறைமுகமாகச் சுட்டுகிறது.

‘வளமான நிலங்கள், ஏழ்மையான மக்கள்' எனச் சுட்டிக்காட்டும் ‘அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான நடுவம்' என்ற அமைப்பின் 2008 ஆம் ஆண்டின் அறிக்கை, பல மாநிலங்களில் சுரங்கங்களால் பாதிப்புக்குள்ளான மக்களைப் பற்றியும், சுற்றுச் சூழல் சீர்கேடுகளைப் பற்றியும் விரிவாக அறியத் தருகிறது. இவ்வறிக்கையின்படி, இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான 45 ஆண்டுகளில் சுரங்கங்களின் பொருட்டு, ஏறத்தாழ 2.5 கோடி மக்கள் தங்கள் வாழ்விடங்களிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கின்றனர் என்றும், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பழங்குடி இனத்தவர் என்றும், இவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் சமூக அநாதைகளாக சிதறடிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் பல உண்மைகளை நாம் அறிய நேரும்போது மனம் பதைபதைக்கிறது. சுரங்கங்கள் அதிகரித்துள்ள சமீப ஆண்டுகளில், வன நிலங்கள் அழிக்கப்படுவதும் உயர்ந்து கொண்டே செல்கிறது. ஒரு மதிப்பீட்டின்படி, 1.64 லட்சம் ஹெக்டேர் வனநிலங்கள் (காடுகள்) சுரங்கங்களுக்காக அழிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2006 ஆம் ஆண்டில் மட்டும் அனுமதி பெற்ற சுரங்கங்களின் மூலம், சேகரமாயுள்ள கழிவுகள் 200 கோடி டன்கள். இவை முறையாக அகற்றப்படாமலும் சுத்திகரிக்கப்படாமலும் சுற்றுச் சூழலை மென்மேலும் நாசமாக்கி வருகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு டன் நிலக்கரி உற்பத்தி செய்து முடிக்கும்போது, அதிலிருந்து பெறப்படும் கழிவுகள் நான்கு மடங்காக இருக்கும். அனுமதி பெற்ற சுரங்கங்களைவிட, சட்டவிரோத சுரங்கங்கள் மூன்று மடங்கு என்ற அளவில் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் வெளியேற்றப்படும் கழிவுகள் அரசாங்க நிறுவனங்களின் கணக்கில் வராதவை. உயிரைப் பிழிந்து குடித்துவிட்டு உடலைச் சக்கையாகத் துப்பி விடுவதைப் போலத்தான், கனிமங்கள் செறிந்த இந்நிலத்திற்கும் நேர்ந்த அவலம் என்பது எத்தனை துயரம்.

சுரங்கங்களின் புவியியல் மற்றும் சூழலியல் அமைவிடத்தைக் கணக்கில் கொண்டால், அவை சுற்றுச் சூழல் மீது ஏற்படுத்தும் பாதிப்புகளை நாம் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும். உயிரி இயற்பியல் மற்றும் பண்பாட்டு உளவியல் என்ற கருப்பொருள்களில் இப்பாதிப்புகளை அறிவியலாளர்கள் வகைப்படுத்துகின்றனர். விளங்கக் கூறின், நீராதாரம் என்பதை எடுத்துக் கொள்வோம். நீர்நிலைகளின் இருப்பு மற்றும் தரம் ஆகியவற்றின் மீது பாதிப்பை ஏற்படுத்தும் மிகப் பெரிய தொழிற்துறையாக சுரங்கங்கள் இருக்கின்றன. சிறிய கல்குவாரியிலிருந்து ஆழமான சுரங்கங்கள் வரை இப்பாதிப்புகளை உணர முடியும். நிலத்தின் மேற்பரப்பில் சுரண்டியெடுக்கப்படும்போதும், வெடிப் பொருள்களால் தகர்க்கப்படும்போதும் அவ்விடத்தின் நீர்ப் படுகைகள் இயல்புத் தன்மையை இழந்து விடுகின்றன. லிக்னைட் போன்ற கனிமங்கள் நீண்ட படிமங்களாக நிலத்தின் மீது இறைக்கப்படும்போது, நீர்ப் படுகைகளின் சுனைகள் அழிந்து விடுகின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழகத்தில் நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள நிலப் பகுதியில், நீர்ப் படுகைகள் அழிந்து தூர்ந்து போய்விட்டன. ஆழமான சுரங்கங்கள் தோண்ட நிலத்தில் துளையிடப்படும்போதும், அவை விரிவுபடுத்தப்படும்போதும் நிலத்தின் அடியாழத்திலுள்ள நீரோட்டமும் அவற்றின் சுனைகளும் வற்றி விடுகின்றன. இரும்புத் தாது சுரங்கங்களின் பயன்பாட்டுக்கென, இந்தியாவில் 2005 – 2006 க்கு இடைப்பட்ட ஓராண்டில் மட்டும், 7 கோடியே 70 லட்சம் டன் கொள்ளளவு நீர் செலவழிக்கப்பட்டுள்ளது. இது, 30 லட்சம் பேரின் ஒரு நாள் பயன்பாட்டிற்கான அளவு என, அறிவியல் மற்றும் சுற்றுச் சூழலுக்கான நடுவத்தின் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. மேலும், சுரங்கங்கள் மற்றும் அதைச் சார்ந்த தொழிற் சாலைகளிலிருந்து எழும் கனமான தூசி, கனிமத் தாதுக்களைக் கொண்ட புகை, வெளியேற்றப்படும் தாதுக் கழிவுகள் ஆகியன பெரும்பாலும் சுரங்கங்கள் அமைக்கப்படும் வனப் பகுதிகளின் நீர் வீழ்ச்சிகள், வற்றாத சுனைகள், நீர்ப் படுகைகள் மற்றும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் ஆகியவற்றின் மீது படிந்து, சமகாலப் பயன்பாட்டிற்கே கேடு விளைவிக்கின்றன.

2009 இல் ஆட்சிக்கு வந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, புதிய சுரங்கங்கள் கொள்கை (Nஞுதீ Mடிணடிணஞ் கணிடூடிஞிதூ – 2008)யின் கீழ், தரம், பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு அடிப்படையில் கனிமங்களை வகைப்படுத்தி அட்டவணைப்படுத்தியுள்ளது. நிலக்கரி, லிக்னைட்; ஆகிய எரிபொருள் கனிமங்கள் பகுதி – அ எனவும், அணுத் தாது கனிமங்கள் பகுதி – ஆ எனவும், 74 முக்கிய கனிமங்கள் பகுதி – இ எனவும் அட்டவணையிடப்பட்டுள்ளன. இவற்றில் பகுதி – அ பெரும்பாலும் பொதுத் துறையின் பயன்பாட்டில் உள்ளது. பகுதி – இ பன்னாட்டு மூலதனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் பேரழிவு அபாயத்தைக் கருத்தில் கொண்டு, பகுதி – ஆ அரசின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2010 டிசம்பரில் சுனாமி நினைவலைகளில் நாடு மூழ்கிக் கிடந்த தினத்தில், இந்த அணுத் தாதுக் கனிமங்களுக்கான சுரங்க ஒப்பந்தங்களையும் தனியார்மயப்படுத்த வேண்டுமென, சொந்த நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் அரசிடம் கோரிக்கையே, எழுப்பியுள்ளது. இக்கோரிக்கை பேரபாய முன்னறிவிப்பு என நம்மைத் தட்டியெழுப்ப வேண்டாமா?

அமெரிக்க ஏகாதிபத்தியத்தோடு அணு ஆயுத ஒப்பந்தங்களையும், ரஷ்யாவிலிருந்து காலாவதியான அணு உலைகளுக்கான ஒப்பந்தங்களையும் கையெழுத்திட்டுக் கொண்டிருக்கும் இந்திய அரசு, ரிலையன்ஸ் நிறுவனத்தோடு அணுத் தாதுக் கனிமங்களுக்கான சுரங்க ஒப்பந்தங்களை செய்து கொள்ளுமெனில், அது வியப்புக்குரிய ஒன்றாக இருக்கப் போவதில்லை. யூனியன் கார்பைடு போன்ற நிறுவனங்களின் நச்சு வாயுக் கசிவு பரவும் எல்லையை நாம் வரையறுக்க முடியும். ஆனால் அணுக்கதிர்வீச்சின் எல்லையை நாம் அனுமானிக்க முடியாது.

நாகசாகி, ஹிரோஷிமா இரண்டும் ஜப்பானின் நினைவு நகரங்கள். (வல்லரசு) ஏகாதிபத்தியக் கனவிலிருக்கும் இந்தியாவே, ஒரு மாபெரும் ஹிரோஷிமா நகரமாகக் காட்சியளிக்கும் நாளும் வரலாம். ஆனால், 21 ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியத்தின் நவீன தொழிற்நுட்பம் உங்களை உடனடியாகக் கொன்று அழிக்காது. மாறாக, அணு அணுவாகச் சிதைக்கும். சக மனிதனின் மரணம் ரசனைக்குரியதா என, மனசாட்சி உள்ளவர்கள் தங்களைக் கேட்டுக் கொள்ளட்டும். அதுவரை நம் ஆட்சியாளர்களின் அனுமதி பெற்றோ அல்லது அவர்களோடு இணைந்து சட்டவிரோதமாகவோ, நமது வாழ்வாதாரங்கள் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் விறுவிறுப்புக்கு ஈடாகக் கொள்ளையிடப்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் ரசித்துக் கொண்டிருக்கலாம்; அல்லது வேறு என்ன செய்யலாம் என்பதைக் கோண்டு பழங்குடி மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்.

– அடுத்த இதழில்