"இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' (Tamils Against Genocide) என்ற அமைப்பு, அமெரிக்காவை அடிப்படை இயங்கு தளமாகக் கொண்டுள்ள ஒரு மனித உரிமை அமைப்பு. "இனப்படுகொலை, மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள் உள்ளிட்ட போர்க் குற்றங்களை, இலங்கையில் உள்ள தமிழர்கள் மீது நடத்திய, தற்பொழுது இலங்கை அரசில் பணியாற்றும் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற மூவரின் மீதும் – அமெரிக்க மற்றும் பன்னாட்டுச் சட்டங்களின்படி விசாரணை நடத்த வைப்பதை' தனது முதன்மை நோக்கமாக வெளிப்படையாக அறிவித்து விட்டு இயங்கும் ஓர் அமைப்பு இது (அவர்கள் குறிப்பிடும் மூவர், கோத்தபாய ராஜபக்சே, பசில் ராஜபக்சே மற்றும் சரத் பொன்சேகா என புரிந்து கொள்ளப்படுகிறது).

தனது பணிகளின் தொடர்ச்சியாக, டப்ளினில் நடைபெற்ற இலங்கைக்கான மக்கள் தீர்ப்பாயத்தில், இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பான வாதங்களையும், நேரடி சாட்சிகள் உட்பட, அதற்கான சான்றுகளையும் இவ்வமைப்பு திரட்டி அளித்தது. "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பின் சார்பாக – அதன் பொறுப்பாளர்களில் ஒருவரும், அமெரிக்காவின் முன்னணி செயற்கைக் கோள் பட சட்ட ஆய்வாளருமான ராஜீவ் சிறீதரன் – தங்கள் அமைப்பின் பணிகள் குறித்தும், எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் "தலித் முரசு'க்கு அளித்த பேட்டி. பேட்டி : பூங்குழலி

da_41'இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' என்ற அமைப்பு குறித்தும், அது ஆற்றி வரும் பணிகள் குறித்தும் சொல்ல முடியுமா?

"இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு அமெரிக்காவில் இயங்கி வருகிறது. இலங்கையின் வடக்கு – கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்களை குறிவைத்து இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் உள்ளிட்ட பன்னாட்டுச் சட்ட மீறல்களுக்குப் போதுமான மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய வகையிலான சட்டத் தீர்வுகளை உருவாக்குவதை, அது நோக்கமாகக் கொண்டிருக்கிறது. பொதுவாக, சனவரி 2009 தொடங்கி மே 2009 வரையிலான காலகட்டத்தில் குறிப்பாக வன்னியில், இலங்கை ராணுவத்தின் அட்டூழியங்கள், பன்னாட்டு மனித உரிமை வரையறைகளை மீறியது என்பதை ஏற்றுக் கொண்ட மற்றும் போருக்குப் பின்னான அல்லது இனப்படுகொலைக்குப் பின்னான தீர்வுத் திட்டங்களில் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நீதியை ஒரு முக்கியக் கூராகக் கருதி, ஆதரவளிக்கக் கூடிய அனைத்துத் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுடனும் எங்களுடைய அமைப்பு இணைந்து பணியாற்றுகிறது.

இலங்கை அரசுக்கு எதிராகவும், இலங்கை அரசில் அதிகாரத்தில் இருந்து குற்றம் புரிந்த தனி நபர்களுக்கு எதிராகவும் போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை வழக்குகளை கட்டியெழுப்ப "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ப்ரூஸ் பெயின், பிரான்சிஸ் பாய்ல் போன்ற பன்னாட்டு வழக்குரைஞர்கள், தடயவியல் அறிஞர்கள் ஆகியோருடன் மின்னணு முறையில் பாதுகாக்கப்பட்ட சான்றுகளை (நிழற்படங்கள், ஒளிப்படங்கள், செயற்கைக்கோள் படங்கள், ஒலிப்பதிவுகள்) பயன்படுத்துவது குறித்து கலந்து ஆலோசித்தது. நாங்கள் புலம் பெயர்ந்த மக்களுடனும் இணைந்து பணியாற்றுகிறோம். அத்துடன், இனப்படுகொலைக்குப் பின் தப்பிப் பிழைத்து, இலங்கைக்கு உள்ளே பாதுகாப்பான இடங்களிலோ, முகாம்களுக்கு வெளியிலோ, இலங்கைக்கு வெளியிலேõ பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் சென்றிருக்கக்கூடிய இனப்படுகொலையின் நேரடி சாட்சிகளுடனும் பணியாற்றுகிறோம். இதன் மூலம் அனுமதிக்கப்பட்ட சான்றுகளை சேகரிப்பதில் ஈடுபட்டுள்ளோம்.

"இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின்' பார்வை யில், போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள், துன்புறுத்தல் மற்றும் தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆகியவற்றிற்கான நீதி என்பது, விடுதலைப் புலிகளுக்குப் பின்னான இலங்கை அரசியலில், எவ் வித சமரசத்திற்கும் இடம் கொடாத முன் நிபந்தனை ஆகும். பெரிய பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் இதனை கையில் எடுக்கும் வரையில், பிற அமைப்புகளுடன் இணைந்து இந்தப் பணியை நாங்கள் தொடர இருக்கிறோம்.

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தை இதில் தலையிட வைப்பதும், விசாரணை நடத்த வைப்பதும் எப்படி சாத்தியப்பட்டது?

இலங்கை ராணுவம் போர்க் குற்றங் களையும் மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்தது எனவும், தமிழ் இனப்படுகொலை நடந்திருக்கலாம் எனவும் தீர்ப்பு வழங்கிய இலங்கை மீதான பெட்ரன்ட் ரஸ்ஸல் மக்கள் தீர்ப்பாயத்தினை, ஜுட் பெர்னான்டோ தலைமையில் செயல்படும் "இலங்கையில் அமைதிக்கான அயர்லாந்து கருத்து மன்றம்' ஏற்பாடு செய்தது.

"இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்களின்' பணிகளை, குறிப்பாக, அமெரிக்க நீதித் துறைக்கும், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கும் நாங்கள் அளித்த இனப்படுகொலை அறிக்கை குறித்தும், தமிழர்களைப் படுகொலை செய்வதைக் காட்டிய "சானல் 4' ஒளிப்படத்தின் மீதான எங்களின் தடயவியல் ஆய்வறிக்கையும் (இதைப் பின்னர் போர்க் குற்றங்களுக்கான அய்.நா.வின் சிறப்பு அறிக்கையாளரான பிலிப் ஆல்ட்ஸன் மேற்கோளிட்டார்) புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது நடந்த குண்டு வீச்சுத் தாக்குதலை உறுதிப்படுத்திய செயற்கைக்கோள் படங்கள் மீதான எங்களின் ஆய்வையும் பற்றி அறிந்திருந்த நேரடி சாட்சிகளும், மனித உரிமை செயல்பாட்டாளர்களும் "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பினை, இந்த தீர்ப்பாயத்தின் விசாரணையில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்தனர்.

கடந்த 60 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வரும் வேதனைகளை முடிவுக்குக் கொண்டு வரும் நீளமான நடை பாதையின் முதல் கல்லாகவே – டப்ளின் தீர்ப்பாயத்தை "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு பார்க்கிறது.

கடந்த சில ஆண்டுகளில், தனது கண்மூடித்தனமான குண்டு வீச்சுகள், வான் தாக்குதல்கள், உணவு மற்றும் மருந்து தடை, கூட்டு தடுப்புக் காவல், பாலியல் வன்கொடுமை, தமிழ்ப் பெண்கள் மீது கும்பல் வன்புணர்வு நடத்தும் நடைமுறை, மருத்துவமனைகள் மீதான குண்டுவீச்சுகள், பள்ளிகள், கோயில்கள், தேவாலயங்கள் ஆகியவற்றை அழிப்பது, தமிழ்ப் போராளிகள் மற்றும் போராளி அல்லாதவர்கள் ஆகியோரை கால வரையறை இன்றி தன்னிச்சையாகத் தடுத்து வைக்கும் கொள்கை, நாகரிகமடைந்த நாடுகள் அங்கீகரித்துள்ள அடிப்படை சுதந்திரத்திற்கு மறுப்பு போன்றவற்றின் மூலம் – சிங்கள பவுத்த அரசு தமிழர்களின் இருப்பையே முற்றிலுமாக அழித்துள்ளது.

தீர்ப்பாயத்தின் தீர்ப்பை "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' வரவேற்கிறது. இந்த கொடூரமான குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள், தங்கள் உடலின் பகுதிகளை இழந்தவர்கள், தீவெங்கும் ரகசிய இருப்பிடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் ஆகிய அனைவருக்கும் – நீதி வழங்கும் வழியைத் தேடவும் அதற்கான சூழலை தகவமைக்கவும் "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' தொடர்ந்து போராடும்.

இலங்கை அரசு மீதான போர்க் குற்றங்களை உலக நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கும், அதன் வழியாக தமிழர்களின் நலன்கள் காக்கப்படுவதற்குமான தங்களின் வருங்காலத் திட்டம் என்ன?

தமிழ் மக்களை இனப்படுகொலை யிலிருந்து காக்க வேண்டிய பொறுப்பில் 2009 இல் பெரும் தோல்வி ஏற்பட்டது. விடுதலைக்குப் பின்னான 60 ஆண்டு காலத்தில் சிங்கள பவுத்த அரசால் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட மிக மோசமான, பாரிய கொடூரக் குற்றங்களுக்குப் பின்னான வரலாற்றுத் தருணத்தில் நாம் நிற்கிறோம். உலகெங்கும் உள்ள புலம் பெயர்ந்த தமிழ் மக்களை சரியாக ஒருங்கிணைக்க முடியுமானால், தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்தி வரும் வன்கொடுமைகள் மற்றும் அநீதியின் வரலாற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் திறனும் ஆற்றலும் அவர்களுக்கு உண்டு.

பாதிப்புக்குள்ளான உலகத் தமிழ்ச் சமூகம், உண்மையும் நீதியும் கிடைக் கத் தகுதியுடையது. அது அவர்களின் மதிப்பை மீட்டெடுப்பதாகும். செப்டம்பர் 11–க்குப் பிறகான காலத்தில் டர்பர், சூடான் இனப்படுகொலைக்குப் பின் இரண்டாவது இனப்படுகொலையை புரிந்ததற்காக, ராஜபக்சே நிர்வாகத்தை பொறுப்பாக்கும் சட்டப்பூர்வமான முயற்சிகளுக்கு ஆதரவாக புலம் பெயர்ந்த தமிழ் மக்களை அணி திரட்டுவதில் "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு கவனம் செலுத்தும்.

இலங்கை ராணுவத்தின் சில தாக்குதல்கள், புரட்சிக்கு எதிரான போரில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் இருந்தன என்பதை "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு ஒப்புக் கொண்டாலும், பொதுவான நிலையில், புரட்சிக்கு எதிரான பாதுகாப்பு மாதிரிகள் வழக்கமான பன்னாட்டு மானுடச் சட்டங்களின் வரையறைக்குள் இருக்க வேண்டும். அதன்படி, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான தமிழர்களை விலங்குகள் போல 3 பாதுகாப்பு வலையங்களுக்கு ஓட்டிச் சென்று, அவர்கள் மீது குண்டு வீசிக் கொல்வதும், மருந்துகள் அளிக்க மறுப்பதும், பின்னர் அதிலும் தப்பியவர்களை மீண்டும் முள் வேலி போடப்பட்ட போர் முகாம்களுக்குள் ஓட்டிச் சென்று அடைப்பதும், நிச்சயமாக மனிதாபிமானத்தின் அடிப்படையிலும் சட்டப்படியும் நியாயப்படுத்தவே முடியாதது.

மனித உரிமைகள் மற்றும் மனித நேய உரிமைகள் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து பணியாற்றுவது மற்றும் அய்.நா.வின் பாகுபாடான அணுகுமுறை மேலாக வும் இலங்கை அரசு கீழாகவும் உள்ளதற்கு இடைப்பட்ட வெளியில் பணியாற்றுவது ஆகிய நிலைகளில் நின்று, ராஜபக்சே நிர்வாகம் மற்றும் இலங்கை அரசுக்கு எதிரான போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை வாதங்களை திட்டமிட்டு கட்டியெழுப்புவதில் "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு தொடர்ந்து பணியாற்றும்.

வன்னியில் என்ன நடந் தது என்பதையும், அங்கு நடந்த சாவுகளும் துயரங்களும் வரலாற்றில் இதற்கு முன் நடந்த இனப்படுகொலைகளான நாஜி ஜெர்மனி, கம்போடியா, ருவாண்டா, ஸ்ரெப்ரெனிகா மற்றும் டர்பர் ஆகியவற்றிற்கு இணை யானவை என்பதையும் – வருங்கால தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் – உலக மற்றும் தமிழ் வரலாற்றினை தமிழ் மக்கள் எழுதி தங்களுக்கு நியாயம் செய்ய வேண்டும்.

தற்பொழுது விடுதலைப் புலிகளுக்குப் பின்னானதாக இருக்கும் இலங்கையில், இனப்படுகொலை மற்றும் திட்டமிட்ட மனித உரிமை மீறல்கள் இல்லை என்ற அளவிற்கும் மேலான ஒரு நிலையைத் தருவதாகவும், உறுதி அளிப்பதாகவும் இருக்க வேண்டும். தற்பொழுது சிறையிலோ, முகாமிலோ உள்ள அல்லது கொலை செய்யப்பட்ட அல்லது துன்புறுத்தலுக்குள்ளான போராளிகள் மற்றும் போராளிகள் அல்லாதவர்கள் ஆகியோருக்கும் உரிமைகள் உண்டு. அவர்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டதான அனைத்து வழக்குகளையும் வெளிக் கொணர்வதற்கான வழிகளை "இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள்' அமைப்பு தொடர்ந்து ஆராயும். 