சனவரி இதழில் வெளிவந்த டாக்டர் உமாகாந்த் அவர்களின் பேட்டி, இந்த இதழுடன் நிறைவடைகிறது

நீங்கள் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவர் செயல்வீரராகப் பணியாற்றிய அனுபவங்கள், மற்றவர்களுக்கும் ஓர் உந்துசக்தியாக இருக்கிறது. ஆனால், தேசிய அளவில் தலித் இயக்கங்களைப் பார்த்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஒரு தலித் இயக்கம் தேசிய அளவில் ஆற்றல் கொண்ட, அனைத்து தலித்துகளின் பிரச்சனைகளையும் தீர்க்கின்ற அளவுக்கு உருவாகவில்லை. இந்த சவாலை எப்படி எதிர்கொள்வது?

இது இயல்பானது தான். இந்திய சமூகம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்திருப்பதைப் போலவே, தலித்துகளும் பல்வேறு குழுக்களாகப் பிளவுண்டு நிற்கின்றனர். ஒரு நாடு தழுவிய தலித் இயக்கம் உருவாக வேண்டும் என்று உங்களைப் போலவே நானும் விரும்பினேன். அவ்வாறு இல்லாததற்காகப் பெரிதும் கவலைப்படுகிறேன். தலித் பிரச்சினைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டுள்ள பேராசிரியர் எலினார் ஜெலியட் அவர்களிடம், ஏன் ஒரு நாடு தழுவிய அளவிலான தலித் அமைப்போ, இயக்கமோ உருவாகவில்லை என்று கேட்டேன். அவர் எனக்கு சொன்ன பதிலை அப்படியே தருகிறேன்: ‘‘இந்தியா அய்ரோப்பாவைப் போன்றது. ஒவ்வொரு பகுதியிலும் வாழும் மக்களுக்கென சொந்தமான பண்பாடும் மொழியும் உள்ளன. பெரும்பாலான இப்பகுதிகளில், மிகவும் வலுவான தலித் இயக்கங்கள் உள்ளன. ஆனால் பிரச்சினை என்னவென்றால், இந்த இயக்கங்களால் உள்ளூர் மற்றும் வட்டாரத் தடைகளைக் கடக்க முடியாமல் போய்விடுகிறது. தமிழ்நாட்டில் வலுவான இயக்கம் இருக்கிறது. ஆனால், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவில் வசிப்பவர்களுக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அந்தந்த மாநிலங்களில் இயங்கக்கூடிய அடித்தட்டு அல்லது மாநில அளவிலான இயக்கங்களிடையே கூட எவ்விதத் தொடர்பும் இருப்பதில்லை. இப்படித்தான் வட்டார, மொழி ரீதியான எல்லைகளைக் கடக்க முடியாமல், தலித் இயக்கங்கள் சிறு சிறு குழுக்களாகப் பிளவுபட்டு நிற்கின்றன. எல்லா தடைகளையும் கடந்து, இவை அனைத்தையும் தேசிய அளவில் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது மிகவும் சிரமமாக இருக்கிறது.''

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகான 60 ஆண்டுகளில், நம்முடைய மக்கள் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்க வேண்டும். நமது பிரச்சினைகளை ஒருமுகப்படுத்தி, மய்ய நீரோட்டத்திற்கு நம்முடைய அறிவுஜீவிகள் கொண்டு சென்றிருக்க வேண்டும். அரசியல் தலைமையும் மிகப் பெரிய ஏமாற்றத்தை அளித்துவிட்டது. ஒரு வலுவான அரசியல் தளத்திற்குப் பதிலாக, கடும் வேறுபாடுகளைக் கொண்ட பல்வேறு அமைப்புகள்தான் நம்மிடையே உள்ளன. சமூக அமைப்புகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும்கூட, ஒத்த பிரச்சினைகளில் ஒரு கூட்டு இயக்கமோ, அமைப்போ உருவாகவில்லை. ஆனால் 60 ஆண்டுகள் என்பது, ஒரு தேசிய அளவிலான இயக்கம் உருவாவதற்குப் போதுமானதுதானே?

ஒருவேளை இந்தியா போன்ற ஒரு நாட்டில், 20, 30 அல்லது 40 ஆண்டுகள் கடந்தாலும், ஒரு தேசிய அளவிலான மாற்றத்தையோ, ஒரு தேசிய அளவிலான அடையாளத்தையோ உருவாக்கிவிட முடியாது. ஒரே குடையின் கீழ் அனைத்து அமைப்புகளும் வர இயலாது. இதற்கு பல மொழிகள் மற்றும் பண்பாடுகள் இருப்பதும் ஒரு முக்கியக் காரணமாகும். மேலும், தலித்துகள் ஒற்றை இயல்பு கொண்ட குழுவினராகவும் இல்லை. அவர்களும் நூற்றுக்கணக்கான சாதிகளாகப் பிரிந்திருக்கிறார்கள். இது, பிரச்சினையை மேலும் சிக்கலானதாக ஆக்குகிறது.

இந்தக் கோணத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் இல்லை. உண்மையில், கடந்த 30 ஆண்டுகளாக ஒரு நாடு தழுவிய தலித் அமைப்பை உருவாக்குவதற்காகப் பல்வேறு முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தலித்துகளையும், ஒருங்கிணைத்து, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பிற தரப்பு மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவந்த கான்ஷிராமின் பங்கு மிகுந்த உத்வேகத்தை அளித்தது. இன்று பகுஜன் சமாஜ் கட்சிக்கு பல மாநிலங்களில் கிளைகள் இருக்கின்றன. அது மட்டுமல்ல, இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் அது அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியும் புரிகிறது. ஆனால், இதற்காக கான்ஷிராம் அவர்கள் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாடு தழுவிய தலித் இயக்கத்தை கட்டமைப்பதில், தலித் மாணவர்களின் பங்கு என்ன?

ஒரு தேசிய அளவிலான தலித் இயக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை இருப்பதால், சில நேர்மையான முன் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இது, தன்னளவில் நடைபெறாது. இந்த சூழலில்தான் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் அமைப்புகளைப் போன்ற அமைப்புகள், முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். அப்பொழுதுதான் மாநில எல்லைகளைக் கடக்க முடியும். இருப்பினும், ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாக மாணவர்களின் வாழ்க்கை, கிராமத்தில் நிலவும் எதார்த்தங்களை வெளிப்படுத்தாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தங்கள் கற்பனையில் தோன்றும் கொள்கையும் உணர்வும் எதார்த்த நிலையிலிருந்து மாறுபடும் என்பதை, ஒரு தலித் மாணவர் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

நீங்கள் எடுத்துக் கொண்ட கொள்கைக்கு உண்மையாக இருந்தால், நீங்கள் மிகப்பெரும் மாற்றங்களை செய்யலாம். ஆனால் நீங்கள் முன்முயற்சி எடுக்க வேண்டும். உங்கள் வழியில் நீங்கள் பிரச்சினைகளை கையாளுங்கள் அல்லது முழு நேர ஆர்வலராக மாறுங்கள்; அல்லது சமூக, அரசியல் அல்லாத தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொண்டு, உங்களால் இயன்ற சிறப்பான பங்களிப்பைச் செலுத்துங்கள். நீங்கள் அதிகளவு தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும்; ஏனெனில், தலித் உரிமைகளை வென்றெடுப்பது என்பது எளிதான பணி அல்ல. அப்பணி மூலம் நீங்கள் அரசியல் ரீதியாகவோ, சமூக, பொருளாதார ரீதியாகவோ எந்தப் பயனையும் எதிர்பார்க்க முடியாது. உங்களுடைய மக்களுக்காக உழைக்க உறுதி கொண்டீர்கள் என்றால், நீதியைப் பெற்றுத்தரும்வரை, நீங்கள் பணியாற்றுவதை எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது. எது தேவை என்றால், நல்ல தொழில் நுட்பத் திறனுடன் சிறந்த பயிற்சியும் கொண்ட அர்ப்பணிப்புகளுடன் கூடிய இளைஞர்கள்தான். வெறும் பேச்சுத் திறமையால் வெகுதூரம் செல்ல முடியாது.

உங்கள் படிப்பை முடித்த பிறகு, நம்முடைய கொள்கைக்காகப் பணியாற்றும் அமைப்புகளுடன் நீங்கள் இணைந்து பணியாற்றி - தேசிய, உலக அளவில் தலித் உரிமைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட பரப்புரைகளில் தீவிரமாகப் பங்கேற்றீர்கள். அதில் ஒன்று 2001இல் நடைபெற்ற டர்பன் மாநாடு. இந்தியாவில் நிலவும் சாதிய பாகுபாடு குறித்து முதன்முதலில் உலக அரங்கை ஈர்த்தது இந்த மாநாடுதான் என்ற பெருமை அதற்கு உண்டு. பல்வேறு தலித் அமைப்புகளுடன் நீங்களும் இம்மாநாட்டில் பங்கேற்றீர்கள். உங்களுடைய அனுபவத்தைச் சொல்லுங்கள்.

டர்பனில் நடைபெற்ற இனவெறிக்கு எதிரான இம்மாநாடுதான் என்னைப் பொருத்தவரை, முதன் முறையாக தலித் ஆர்வலர்கள் வெற்றிகரமாகப் பங்கேற்று, சாதியப்பாகுபாட்டின்பால் உலகத்தை ஈர்த்தனர். இப்பிரச்சினையை உலகத்தின் பார்வைக்கு கொண்டு வருவதுதான் எங்களின் ஒரே இலக்காக இருந்தது. அதில் நாங்கள் வெற்றியும் பெற்று விட்டோம். தலித் ஆர்வலர்கள் பெருமளவில்பங்கேற்காமல் போயிருந்தால், நம்முடைய பிரச்சினை, உலக அளவில் இந்த அளவுக்கு முதன்மை பெற்றிருக்க முடியாது.

தலித் மனித உரிமைகளுக்கான தேசிய பிரச்சார இயக்கம், இதில் முக்கியப் பங்கு வகித்தது. அது நாடு முழுவதிலுமிருந்து தலித் ஆர்வலர்களை ஒருங்கிணைத்ததோடு மட்டுமின்றி, ஒரே நேரத்தில் பல மட்ட அளவில் குறிப்பாக அடித்தட்டு அளவிலிருந்து பன்னாட்டு வரை ஒருங்கிணைத்திருந்தது. நாங்கள் டர்பனில் அறிவார்ந்த பணியில் ஈடுபட்டிருந்தோம். அதே நேரத்தில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் ஆகியவற்றை நம் நாட்டின் பல மாநிலங்களில் ஒருங்கிணைத்து, தலித் மனித உரிமைகளுக்கான கோரிக்கைகளை இடையறாது எழுப்பி வந்தோம்.

டர்பனில் நாங்கள் ஏறக்குறைய ஆப்பிரிக்க, பாலஸ்தீன குழுக்களுக்கு நிகராக, பிரச்சினைகளை முன்வைப்பதிலும், ஒருங்கிணைப்பதிலும் செயல்பட்டோம். எங்கள் தலித் குழுவின் தலைவர், 12 நாடுகளின் தலைமைகள் பங்கேற்ற ஓர் அமர்வில் தலைமை வகிக்க அழைக்கப்பட்டார். அதில் யாசர் அராபத், பிடல் காஸ்ட்ரோ மற்றும் தபோ மெபெக்கி போன்ற முக்கிய அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சாதிய பாகுபாட்டின் மீது உலகத்தின் கவனத்தை ஈர்த்தது, தலித் இயக்க வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். தற்பொழுது நம்மால் அய்க்கிய நாடுகள் அவையின் பல்வேறு துறைகளிலும் நுழைந்து செயலாற்ற முடிகிறது. டர்பனுக்கு முன்னால் அய்க்கிய நாடுகள் அவை, நம் பிரச்சினைகளின் பால் கவனம் செலுத்தியதே இல்லை. டர்பனுக்குப் பிறகுதான் இனப்பாகுபாட்டை ஒழிக்கும் குழு, பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு விவாதத்தை ஒருங்கிணைத்தது. முதன் முறையாக, அய்.நா. அவை ‘ஜாதி' என்ற சொல்லைப் பயன்படுத்தியது.

சாதியப் பாகுபாட்டை உலகறியச் செய்வதில் நீங்கள் வெற்றி பெற்றிருப்பது மிகப்பெரிய விஷயம். ஆனால், ‘எந்தவொரு உலகளாவிய கருத்து மன்றமும் இப்பிரச்சினையில் நேரடியாகத் தலையிட முடியாது. ஏனெனில் சாதி என்பது உள்நாட்டுப் பிரச்சினை' என்று இந்திய அரசு கூறுகிறது. இந்நிலையில் உலகளாவிய அழுத்தம், இந்நாட்டில் வாழும் தலித்துகளுக்கு எந்த வகையில் பயனளிப்பதாக இருக்கும்?

மேலோட்டமாகப் பார்த்தால், இத்தகைய முயற்சிகள் எல்லாம் வீணாகத்தான் தோன்றும். அதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கிறது. டர்பன் மாநாட்டில் பங்கேற்பது மட்டுமே அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என்று நாங்கள் எங்கேயும் சொல்லவில்லை. ஆனால், கண்டிப்பாக, இந்திய அரசிடம் சில கோரிக்கைகளை வைப்பதற்கு ஏதுவான சூழலை உருவாக்க முடியும். தேசிய தலித் மனித உரிமைப் பிரச்சார இயக்கத்தின் கொள்கையே - ‘கிராமப் பஞ்சாயத்து முதல் அய்.நா. வரை பணியாற்ற வேண்டும்' என்பதே.

நாடு முழுவதிலும் இருந்து 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் இளைஞர்களுக்கு, சாதி வன்கொடுமைகளுக்கு எதிராகப் போரட பயிற்சி அளிக்கப்படுகிறது. வன்கொடுமை வழக்குகளை கண்காணிக்கவும், புள்ளிவிவரங்களைத் திரட்டவும், உண்மை அறியும் குழுக்களை உருவாக்கி அறிக்கைகளை தயாரிக்கவும், சட்டரீதியாக தலையிட்டு, பாதிக்கப்பட்ட தலித்துகளுக்கு ஆதரவாக இருக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகைய ஆர்வலர்களின் செயல்பாடுகள் மூலம் தலித்துகள் மீது நடைபெறும் வன்கொடுமைகள் குறித்த விரிவான தகவல்கள் பெறப்பட்டு, அதன் மூலம் தலித் உரிமைகள் குறித்து மாநில அளவிலும், தேசிய அளவிலும், உலக அளவிலும் விழிப்புணர்வை உருவாக்க முடியும்.

டர்பன் மாநாட்டின் போது, உலகளாவிய ஆதரவு தேடல்களில் வேறு என்ன வகையான சாதனைகளை அடைந்தீர்கள்?

சாதியப் பாகுபாடுகள் பற்றி ஆய்வு செய்து, சில நெறிமுறைகளை வகுக்க அய்க்கிய நாடுகள் அவை, 2005இல் இரண்டு சிறப்புப் பிரதிநிதிகளை நியமித்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எதிர்பாராத விதமாக, அய்.நா. அவை நியமித்த அந்த இரு பதவிகளும் - அய்.நா. அவையை மறுசீரமைத்தபோது - ரத்து செய்யப்பட்டு விட்டன. அந்த இரு சிறப்புப் பிரதிநிதிகளும் தங்கள் அறிக்கையை இன்னும் அளிக்கவில்லை. அவ்வறிக்கை ஜெனிவாவில் உள்ள அய்.நா. கட்டடத்தில் எங்கோ முடங்கிக் கிடக்கிறது. அதை வெளியில் கொண்டுவர நாங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். ஏனெனில், நம்முடைய பிரச்சினைகளை வெளிப்படுத்த, அவ்வறிக்கை ஒரு முக்கியக் கருவியாகப் பயன்படும்.

மேலும், ஏப்ரல் 10, 2004 அன்று மனித உரிமைகள் குழு ஜெனிவாவில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. அம்மாநாட்டில் இந்திய அரசு சாதிய பாகுபாட்டை சரியான முறையில் கையாளாததற்காக கடும் எதிர்ப்புகளை சந்தித்தது. இம்மாநாட்டில் நாங்கள் சாதிய பாகுபாடு குறித்த எங்களின் அறிக்கையை அளித்து, அது குறித்து குரல் எழுப்ப ஆதரவு தேடினோம். பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளை சந்தித்து, இம்மாநாட்டில் தலித் பிரச்சினைகள் மீதான கேள்விகளை எழுப்புவதற்கு தூண்டுகோலாக இருந்தோம். இரண்டே நாட்களில் 20 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவினரை சந்தித்து, தலித் பிரச்சினைகள் பற்றிய புரிதலை அவர்களிடையே ஏற்படுத்தினோம். எத்தனைப் பேர் இப்பிரச்சினைக்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்கள் தெரியுமா? பதினொரு பேர். இந்திய அரசு இதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. மேலும், தலித் உரிமைகளைப் பாதுகாப்பதில் தான் அர்ப்பணிப்போடு இருப்பதாகவும் இந்திய அரசு அம்மாநாட்டில் கூறியது. இவையெல்லாம் ஏதோ இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆதரவு தேடல்களால் மட்டும் நடந்துவிடவில்லை. பன்னாட்டு அளவில் நாங்கள் தொடர்ந்து செய்து வந்த இடையீடுகளால்தான் இது சாத்தியமானது.

டர்பன் மாநாட்டுக்குப் பிறகு, எங்களுக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் - உலக மன்றங்களில் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமைகள், தீண்டாமை, கையால் மலமள்ளும் பிரச்சினை, சம வாய்ப்பின்மை, வறுமை, இயற்கைப் பேரிடர் மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் பாகுபாடு போன்ற பல்வேறு பிரச்சினைகளையும் முன்வைத்து விவாதித்தோம். இந்த வகையில், மனித உரிமைகளை மதிக்கும் பெரும்பாலான நாடுகள், சாதியப் பிரச்சினையை குறித்து தெளிவான புரிதல்களைப் பெற்றன. மேலும், தலித்துகளை அதிகாரப்படுத்தும் முயற்சியில் இந்திய அரசுக்கு அதிகளவு அழுத்தத்தை தரவும், தலித் பிரச்சினைக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கவும் வெளிப்படையாக அறிவித்தன.

டர்பன் மாநாட்டுக்கு முன்பு, தலித் பிரச்சினைகளின் பால் இது போன்ற முயற்சிகள் உலக கவனத்தை ஈர்க்கும் அளவில் மேற்கொள்ளப்பட்டனவா?

பாபாசாகேப் அம்பேத்கர் 1945 ஆம் ஆண்டு, சாதிப் பிரச்சினையை உலகளவில் முன்னிறுத்த முயன்றிருக்கிறார். பாபாசாகேப்பின் எழுத்துகளில் (ஆங்கிலத் தொகுப்பு 17) இதற்கான குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் நமக்கு இது குறித்து தெரியவில்லை. பாபாசாகேப் அய்க்கிய நாடுகள் அவைக்குச் சென்று நீதி கேட்பதைத் தடுக்கும் ஒரு சதி முயற்சி நடந்திருக்கிறது.

1945 இல் சில உறுப்பு நாடுகள் அய்.நா. அவையை அதிகாரப்பூர்வமாக உருவாக்க முனைந்தபோது, உலகின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளிம்பு நிலை குழுக்கள், பல்வேறு கோரிக்கை மனுக்களை அளிக்க முனைந்தனர். அதன் மூலம் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்திலும், வேறு பல பன்னாட்டு ஒப்பந்தங்களிலும் தங்கள் பிரச்சினைகள் குறித்த பார்வையை அதில் செலுத்த முயன்றன. டர்பனில், பாபாசாகேப் அம்பேத்கருக்கும், முக்கிய ஆப்பிரிக்க - அமெரிக்கத் தலைவரான டபிள்யு.ஈ.பி. டுபேவுக்கும் இடையில் கடிதப் பரிமாற்றங்கள் இருந்தது தெரிய வந்தது. இக்கருப்புத் தலைவர் தன்னுடைய சுயசரிதையில், ‘‘இந்தியாவில் இருக்கும் தீண்டத்தகாத மக்களின் தலைவரான டாக்டர் அம்பேத்கரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஒரு கோரிக்கை மனுவை அளிக்க ஒத்துழைப்பு தாருங்கள்'' என குறிப்பிடப்பட்டிருந்ததாகப் பதிவு செய்திருக்கிறார்.

பாபாசாகேப் அம்பேத்கரின் மறைவுக்குப் பிறகு, நாட்டில் நிலவும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக செயல்பட, சில துணிச்சலான முயற்சிகள் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டன. டாக்டர் லட்சுமி பெர்வா (அமெரிக்கா), வழக்குரைஞர் பகவான்தாஸ் (தில்லி), என்றி தியாகராஜ் (சென்னை) ஆகியோர் எடுத்த முயற்சிகளை நாம் அனைவரும் வெகுவாகப் பாராட்ட வேண்டும். எனினும், இவையெல்லாம் தனி மனிதர்கள் எடுத்த முயற்சிகள். முதன் முதலில் டர்பன் மாநாட்டில்தான் சாதியப் பிரச்சினை, அய்க்கிய நாடுகள் அவையில் முறையாக முன்னெடுக்கப்பட்டது.

டர்பன் மாநாட்டுக்குப் பிறகு, உலக அரங்கில் சாதி பிரச்சினையில் அம்பலமாகிப் போன இந்திய அரசின் நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?

இந்திய அரசு தற்பொழுதுதான் சாதியப் பாகுபாடு என்று ஒரு பிரச்சினை இருப்பதாக ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பெல்லாம் இதைக்கூட ஒப்புக் கொள்ள அவர்கள் முன்வரவில்லை. சாதி என்பது எப்போதோ இருந்த ஒன்று என்ற பழைய பல்லவியையே அவர்கள் பாடி வந்தனர். தற்பொழுது அதை கவனத்துடன் பரிசீலிப்பதாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். ஆனால், உள்நாட்டு அளவிலேயே அதை நாங்கள் தீர்த்துக் கொள்வோம் என்கிறார்கள்.இத்தகையதொரு தீர்மானம் கூட, செயல்வடிவம் பெறுகிறதா என்றால் இல்லை. எங்களைப் பொருத்தவரை, இது ஒரு நீண்ட போராட்டம். எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகளுக்கெல்லாம் அரசே பொறுப்பேற்க வேண்டும். அதுவரை எமது போராட்டம் ஓயாது.

சமத்துவமான ஒரு சட்டத்தையும், பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்களையும் வைத்திருக்கக்கூடிய ஒரு நாடு, அதை ஏன் செயல்படுத்த மறுக்கிறது?

அரசாங்க எந்திரத்தின் மந்த நிலையே சட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது. இந்த நாட்டில் இன்றளவும் மநு உயிர் வாழ்வதாக பாபாசாகேப் சொல்வார். பிரச்சினையை தீர்க்கும் இடத்தில் இருப்பவர்கள் இன்னும் மநுவாதிகளாகவே இருக்கிறார்கள். அதனால்தான் நம் மக்கள், அறுபதாண்டு காலசுதந்திரத்திற்குப் பிறகும் மிக மோசமான நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாகுபாட்டுக்கு எதிரான சட்டங்களும் முற்போக்கான அரசமைப்புச் சட்டத்தின் பிரிவுகளும் வெற்றிடத்தில் இயங்குவதில்லை. இவை எல்லாம் சாதிய சமூகத்திற்குள்ளேயே இயங்குகின்றன. சாதிய சமூக அமைப்பு, இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதிப்பதில்லையே! பார்ப்பனிய சமூக அமைப்பு, அரசமைப்புச் சட்டத்தை அங்கீகரிப்பதில்லை. இச்சமூக அமைப்பு - நாட்டில் உள்ள ஆதிக்க சாதி குழுக்களின் தன்மைக்கேற்றபடியே தீர்மானிக்கிறது: ஜாதி இந்துக்கள், ஜாதி முஸ்லிம்கள், ஜாதி கிறித்துவர்கள்.

நாட்டை வழிநடத்திச் செல்வதில் பெரும்பான்மை பங்கு வகிக்கும் இத்தகைய ஆதிக்க சாதிகள் இவ்வாறு இயங்கும்போது, சமூக, பொருளாதார மாற்றங்கள் எப்படி ஏற்படும்? அதனால்தான் நாட்டை நிர்வகிக்கும் இடத்தில் / முக்கிய கொள்கை தீர்மானங்களை நிறைவேற்றும் இடத்தில் உரிய பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவது முக்கியமானதாகிறது. ஒன்று அல்லது இரண்டு தலித்துகளால் ஒருபோதும் மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆட்சி நிர்வாகத்தில் ஒரு தலைமைப் பதவியோ, திட்டக்குழுவில் ஒரு உறுப்பினரோ அல்லது அமைச்சரவையில் ஓரிரு பதவிகளோ - எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிடாது. தலித் உரிமைகளையும் பிரதிநிதித்துவத்தையும் - எல்லா இடங்களிலும், ஒவ்வொரு துறையிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது.

உங்களுடைய மாணவர் பருவத்திலிருந்து இன்று வரை, நீங்கள் தலித் பிரச்சினையை முன்னெடுப்பதில் 20 ஆண்டு காலம் தீவிரமாகப் பணியாற்றி வந்திருக்கிறீர்கள். தலித் மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

நம் சமூகத்தை விடுதலை செய்வதற்காக செயலாற்ற விழையும் மக்களே நமக்குத் தேவை. தங்களை ‘தலித்' என்று அடையாளப்படுத்திக் கொள்வதற்கு தயங்குகின்ற மக்கள் நமக்குத் தேவையில்லை. இடஒதுக்கீட்டு கொள்கையால் பயன் பெற்ற ஒவ்வொருவருக்கும் சமூகத்திற்கு திருப்பிச் செலுத்தும் கடமை இருக்கிறது. உங்களால் திரும்பச் செலுத்த முடியாது எனில், இடஒதுக்கீட்டை அனுபவிக்காதீர்கள். இல்லை எனில், நீங்கள் ஒழுக்க நெறி தவறியவர்களாவீர்கள். இடஒதுக்கீடு இல்லை எனில், நாம் இப்படி ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்க மாட்டோம். இடஒதுக்கீட்டு கொள்கையை நியாயப்படுத்த முடியாதவர்கள், அதன் பயனை அனுபவிக்கவும் உரிமை இல்லை. நாம் தெளிவாகவும் நேர்மையாகவும் நடந்து கொள்வோம். நான் இடஒதுக்கீட்டுக் கொள்கையால் உருவாக்கப்பட்டவன் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறேன். இடஒதுக்கீடு இல்லாமல் எனக்கு நல்ல கல்வி கிடைக்க வாய்ப்பே இல்லை. நல்ல கல்வி இல்லாமல், தலித் உரிமைகளுக்காக என்னால் குரல் கொடுக்க முடியாது. எனது தந்தை இடஒதுக்கீட்டு கொள்கையின் முதல் தலைமுறை பயனாளிகளில் ஒருவர். அதனால்தான் அவர் கடினமாக உழைத்து, தனது குழந்தைகளுக்கு மட்டுமின்றி, உறவினர்களுக்கும் சேர்த்து கல்வியைக் கொடுத்தார். முதல் தலைமுறைப் பயனாளிகள் ஒவ்வொருவரும் இதைத்தான் செய்திருக்கின்றனர்.

நீங்கள் உங்களைச் சுற்றி கவனமாகப் பார்த்தீர்கள் என்றால், நம்முடைய பெற்றோர் தலைமுறையை சார்ந்த பெரும்பாலான படித்த தலித்துகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களைக் கடந்து பெரும்பாலான மக்களுக்கு உதவி செய்திருக்கின்றனர். ஒவ்வொரு பயனாளியும் தாங்கள் பயன்பெற்றதைவிட அதிகமாகவே சமூகத்திற்கு செலுத்தி இருக்கிறார்கள். அவர்கள் தங்களால் அதிகளவு என்ன முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். ஆம், சமூகத்திற்கு திரும்பச் செலுத்தியிருக்கிறார்கள். தற்பொழுது திரும்பச் செலுத்துவது நம்முடைய கடமை. 

சந்திப்பு : கோமதி குமார், சஞ்சய் கபீர்