தலித் என்பது ஒரு ஜாதி அல்ல. மாறாக, ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பது குறித்த ஒரு கூட்டு விழிப்புணர்வு; சீரழிக்கப்பட்ட தலித்துகளின் விருப்பங்கள், கனவுகளுக்கு ஏற்றவாறு புரட்சிகர மாற்றங்களை அடைவதற்கானப் புரிந்துணர்வு.ஓர் இனத்தின் சுயமரியாதை, அவர்களின் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தோடு தொடர்புடையது. அதுவே மனிதர்களுக்கிடையேயான உறவையும், இயற்கையான உலகத்துடனான தொடர்பையும் நிர்ணயிக்கிறது. அன்றாட பழக்க வழக்கங்கள், இயற்கை வளங்களுடனான தொடர்புகள், சமூக அமைப்புகளுடனான தொடர்புகள், அடிப்படை சுதந்திரம் இவற்றிலிருந்து விடுபட்டு விலகியதாக அது ஒருபோதும் இருக்க இயலாது.

கடந்த சில பத்தாண்டுகளாக தலித் பண்பாட்டு பழக்க வழக்கங்களும், அடையாளங்களும் அதிகமான தாக்குதல்களை சந்திக்கின்றன. அவர்களது பண்பாட்டிற்கான இடம் மேலதிகமாக நிராகரிக்கப்படுகிறது. மேல் தட்டு மக்களின் நாகரிகப்படுத்தும் நடவடிக்கைகளும், தலித் உலகத்தின் மீதான ஒட்டுமொத்த அக்கறையின்மையும், தலித் மக்களை பண்பாட்டு ஒதுக்குதலுக்கும், அடையாளச் சிக்கலுக்குள்ளும் தள்ளிவிட்டிருக்கின்றன.

பொருளாதார உலகமயமாக்கல்வாதிகளால் புதுப்பிக்கப்பட்ட தாக்குதல்களுக்கு அவர்கள் ஆட்படுகின்றனர். அது அனைத்தையும் ஒருமுகப்படுத்துதல் என்ற பெயரில் தலித் மக்களின் வாழ்வியல் முறைகளை, பண்பாட்டுக் கூறுகளை அழிக்கிறது.
கேரளாவில் நடைபெற்ற தலித் மற்றும் பழங்குடி ஓவியர்களுக்கான 6 நாள் பயிற்சிப் பட்டறையில், ஏறத்தாழ 30 ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஓவியங்கள் மூலம் மாற்று வாழ்வியலை மீட்டெடுப்பதற்கான பண்பாட்டியல் கூறுகளை ஆராய்வதும், அதன் மூலம் பொதுப் பார்வையில் அதற்கு ஒரு புதிய பொருளை உருவாக்குவதுமே இந்தப் பயிற்சிப் பட்டறையின் நோக்கம். சமூக சமநிலைகள், அதிகாரம், படிநிலைகள் ஆகியவற்றிற்குப் புதிய விளக்கங்கள் அளிப்பதிலும், ஒரு மாற்றுப் பண்பாட்டை வளர்த்தெடுப்பதிலும், பண்பாட்டு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான திறனை மீட்டெடுத்து வளர்த்தெடுப்பதிலும் ஓவியங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன.

சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில், நாட்காட்டிகளில் வெளியிடப்பட்ட ஓவியங்கள் தேசிய உணர்வை ஊட்டுவதற்கும், மக்களை அணி திரள வைப்பதற்கும் பெரும் பங்காற்றின. மூழ்கடிக்கப்பட்ட தலித் வாழ்வியல் உண்மைகளை, வலி மற்றும் வேதனை மிகுந்த அவர்களின் அனுபவங்களை, அவர்களின் நம்பிக்கை மற்றும் கனவுகளை வெளிப்படுத்தும் புதிய தலைமுறை தலித் ஓவியர்களின் இந்த ஓவியங்கள், சுரண்டல் மற்றும் ஒடுக்குமுறைகள் அற்ற சுதந்திர உலகம் குறித்த ஒரு புதிய உணர்வை உறுதியாக எழுப்பும்.உளவியல் ரீதியான விடுதலையே உண்மையான விடுதலை. ஒரு மனிதனின் மனது சுதந்திரமாக இல்லையெனில், அவன் சங்கிலியால் கட்டப்படவில்லை எனினும், அவன் ஓர் அடிமையே; சுதந்திர மனிதன் அல்ல. அவன் சிறையில் இல்லையெனினும், அவன் ஒரு கைதியே. அவன் உயிரோடு இருந்தபோதும், இறந்ததற்கு ஒப்பானவனே. மனதின் விடுதலையே ஒரு மனிதனின் இருப்பிற்கு சான்று.
- டாக்டர் அம்பேத்கர்

தீண்டத்தகாதவர்களின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கான அனைத்து கதவுகளையும் தீண்டாமை அடைத்து விடுகிறது. சமூகத்தில் சுதந்திரமாக நடமாடுவதற்கான எந்த வாய்ப்பையும், அது ஒரு தீண்டத்தகாதவனுக்கு தருவதில்லை. ஒதுக்கப்பட்டு தனிமையில் வாழ அது அவனை வற்புறுத்துகிறது. கல்வி பயின்று தான் விரும்பும் தொழிலை மேற்கொள்வதை அது தடுக்கிறது.
- டாக்டர் அம்பேத்கர்
நீங்கள் எதை இழந்தீர்களோ அதைப் பிறர் பெற்றனர். உங்களுடைய அவமானங்கள் பிறரின் பெருமையாக இருக்கின்றன. உங்களுடைய தேவைகளுக்காக நீங்கள் துன்புறுத்தப்படுவதும், ஒதுக்கப்படுவதும், அவமானப்படுத்தப்படுவதும் - நீங்கள் போன பிறவியில் செய்த பாவங்களின் பயனாக முன்பே தீர்மானிக்கப்பட்டதல்ல. மாறாக, உங்களுக்கு மேல் இருப்பவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் வெறி கொண்டு செய்யும் கீழ்த்தரமான சதியின் விளைவே. உங்களிடம் நிலங்கள் இல்லை. ஏனெனில் மற்றவர்கள் அதைப் பறித்துக் கொண்டனர். உங்களுக்கு எந்தப் பதவியும் இல்லை. ஏனெனில் மற்றவர்கள் அதை தங்களுக்கு மட்டுமே உரியதாக ஆக்கிக் கொண்டு விட்டனர். எனவே, தலைவிதியை நம்பாதீர்கள். உங்கள் ஆற்றலை நம்புங்கள்.
- டாக்டர் அம்பேத்கர்
ஒருவருடைய சுயமரியாதையை விலையாகக் கொடுத்து வாழ்வது இழிவானது. சுயமரியாதையே வாழ்வில் மிக முக்கிய கூறாகும். அது இன்றி மனிதன் ஏதும் இல்லாதவனாகிறான். சுயமரியாதையோடு தரமான வாழ்க்கை வாழ்வதற்குப் பலவித இடர்ப் பாடுகளை கடக்க வேண்டியிருக்கும். கடினமான, இடையறாத போராட்டத்தின் மூலம் மட்டுமே, ஆற்றலையும், தன்னம்பிக்கையையும் அங்கீகாரத்தையும் ஒருவர் பெற இயலும்.
- டாக்டர் அம்பேத்கர்
வேலைப் பகிர்வு என்பது அனைத்து நாகரிக சமூகங்களுக்கும் தேவையான கூறு எனில், சாதிய அமைப்பில் எந்தத் தவறும் இல்லையென வாதிடப்படுகிறது. இந்தப் பார்வைக்கு எதிராக முதன்மைப்படுத்தப்பட வேண்டிய செய்தி எதுவெனில், சாதிய அமைப்பு என்பது வேலைப் பகிர்வு மட்டுமல்ல; வேலைப்பாகுபாடு, பணியாளர்களிடையே பாகுபாடு என்பதையும் அது உள்ளடக்கியதாகும்.
- டாக்டர் அம்பேத்கர்
உங்கள் அடிமைத்தனத்தை நீங்களேதான் ஒழிக்க வேண்டும். அது ஒழிக்கப்படுவதற்கு நீங்கள் கடவுளையோ அல்லது யாரேனும் சர்வ வல்லமையுடைய மனிதர் வருவாரெனவோ நம்பியிராதீர்கள். எண்ணிக்கையில் பெரும்பான்மையினராக இருப்பது மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். வெற்றியை எட்டவும், தக்கவைத்துக் கொள்ளவும், எப்போதும் விழிப்போடும், பலம் பொருந்தியவராகவும், சுயமரியாதையுடையவர்களாகவும் இருப்பது அவசியம். நம்முடைய பாதையை நமக்காக நாமேதான் வகுத்துக் கொள்ள வேண்டும்.
- டாக்டர் அம்பேத்கர்

நான் நமது இந்து நண்பர்களிடம் கேட்டேன் : "நீங்கள் பசுக்களிடமிருந்தும், எருமைகளிடமிருந்தும் பாலை எடுத்துக் கொள்கிறீர்கள். அவை இறந்தால் மட்டும் அவற்றின் உடல்களை நாங்கள்தான் அப்புறப்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள். அது ஏன்? உங்களுடைய "தாய் மாதா'வின் உடலை எரிக்க நீங்களே எடுத்துச் செல்லும்போது, ஏன் உங்கள் "கோ-மாதா'க்களின் உடல்களையும் நீங்கள் எடுத்துச் செல்லக் கூடாது?''
- டாக்டர் அம்பேத்கர்

ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை, பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை வைத்தே நான் கணக்கிடுகின்றேன்.
- டாக்டர் அம்பேத்கர்
இப்பயிற்சிப் பட்டறையை "விகாஸ் அத்யாயன் கேந்திரா' (Vikas Adhyayan Kendra) என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஓவியங்களை நாட்காட்டியாக (ஆங்கிலம்) டாக்டர் அம்பேத்கரின் மேற்கோள்களோடு வெளியிட்டுள்ளனர்.நாட்காட்டியின் விலை ரூ. 50.

கிடைக்குமிடம் : ஒயாசிஸ் புக்ஸ், 29/17, கச்சேரி சாலை, மயிலாப்பூர்,
சென்னை 600004 .பேசி : 98405 - 48257