துன்பத்திலிருந்து மனிதர்களைக் காப்பாற்ற முதன் முதலில் சிந்தித்தவர் புத்தர். நம்பிக்கையை விடவும் அறிவை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியவர் இவர். பகுத்தறிவுக்கு முதன்மையான இடத்தை அளித்தவர். கி.மு.563இல் கபிலவஸ்து என்னும் இடத்தில் புத்தர் பிறந்தார். கபிலவஸ்து நேபாளத்தில் இருக்கிறது.

அவர் பிறந்த ஊருக்கு ரோகிணி ஆற்று தண்ணீரை பிரித்துக் கொடுப்பதில் ஏற்பட்ட சண்டையால் துறவு பூண்டார். தனிமையில் அமர்ந்து மனிதர்கள் அனைவரும் சாதி, இன, மத வேறுபாடுகளின்றி ஒற்றுமையாய் வாழ்வது எப்படி என்பதை ஆழ்ந்து சிந்தித்தார்.

புத்தரின் ஆழ்ந்த சிந்தனையில் உதித்த எண்ணமே இன்று புத்தரின் அறிவுரையாக அறியப்படுகின்றன. அதிருப்திக்கும் துன்பத்திற்கும் காரணம் ஆசையும், பாசமும் ஆகும். துன்பத்திலிருந்து விடுபட வேண்டும் எனில் சிறப்பான எட்டு வழிகளில் முயற்சி செய்யலாம் என்றார்.

புத்தர் தாம் உருவாக்கிய சங்கங்களில் பெண்களையும், சமூகத்தில் கீழானவர்களாக கருதப்பட்ட மனிதர்களையும் சேர்த்துக் கொண்டு தமது கருத்துகளைப் பரப்பினார். சங்கத்தில் சேர்ந்தவர்களை கல்வி கற்கும்படி செய்தார். மூட நம்பிக்கைகளுக்கு எதிராக அறிவுக்கு உகந்த கருத்துகளை கற்பித்தார்.

இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கூட, சமத்துவத்தை வலியுறுத்திய முதல் அறிஞர் புத்தர் தான். புத்தர் கடவுள் அல்ல, அவர் கற்பித்ததது மதமும் அல்ல. அது ஒரு சிறந்த வழி.

புத்தர் சொன்ன உன்னதமான 8 வழிகள்

சரியான புரிதல்
சரியான எண்ணம்
சரியான சொல்
சரியான செயல்
சரியான வாழ்க்கை முறை
சரியான முயற்சி
சரியான நினைவு
சரியான உணர்வு நிலை