.
Meeting
சமணர்களையும் பவுத்தர்களையும் அழித்தொழித்து, இந்துத்துவத்தை வளர்த்தெடுத்த மதுரை மண்ணில் கள்ளர்களின் கொட்டத்தை அடக்கி, சாதி மறுப்புத் திருமணம் செய்து சாதி ஒழிப்புப் போராளியாக விளங்கும் மதுரை வீரன் மாநகரில் - தங்கள் மீது திணிக்கப்பட்ட இழிவுகளுக்கு எதிராக ஆர்த்தெழுந்து - ஆயிரக்கணக்கான அருந்ததியர்கள் வீர முழக்கமிட்டது, வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒரு பதிவு. அதே மதுரை மண்ணில், திசம்பர் 17 அன்று அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழு நடத்திய எழுச்சி மாநாடு, தமிழகத்தையே திசை திரும்ப வைத்துள்ளது. மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் மாநகரங்களில் எல்லாம் மாநாட்டின் சுவர் விளம்பரங்கள், விளம்பரத் தட்டிகள், சுவரொட்டிகள் என மிளிரத் தொடங்கின.

‘அருந்ததியர்களின் எழுச்சி, ஆரியத்தின் வீழ்ச்சி' என்ற முழக்கத்தோடு, காலை 11 மணியளவில் துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகள் மாநாடு தொடங்கியது. இம்மாநாட்டில் கோவை, மதுரை, நெல்லை, கோட்டைப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் பங்கேற்றனர். இம்மாநாட்டில் எழுத்தாளர் அன்பு செல்வம், வனராஜ், வேலுச்சாமி, மைக்கேல் ராஜ், செபமலை ராஜா, அமர், எஸ்தர் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

துப்புரவுத் தொழிலாளர் குழந்தைகளின் கல்வியை உத்திரவாதப்படுத்தி, அவர்களின் கல்விக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "ஆண்டாண்டு காலமாக எம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டு வரும் இழிவை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம்'' என்றும், "கல்வி கற்று வாழ்வில் உயர்வோம்'' என்றும் குழந்தைகள் உறுதிமொழி எடுத்தனர்.

மாலை 3.30 மணிக்கு தமுக்கம் மைதானம் களை கட்டத் தொடங்கியது. ஓவியர் கவிக்குடந்தையின் கலை நுணுக்கத்தில் உருவாக்கப்பட்ட நுழைவு வாயிலில் உள் அரங்கின் இருபுறமும் வைக்கப்பட்ட புத்தரின் உருவப்படங்களும் அம்பேத்கர் ஓவியமும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன. நாதஸ்வர கலைஞர் குணசாலி அய்யாவின் நையாண்டி மேள இசையுடன் அருந்ததியர் எழுச்சி மாநாடு தொடங்கியது.

மாநாட்டில் புரட்சிப் புலிகளின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆ. நாகராசன் வரவேற்புரை நிகழ்த்திய பிறகு, இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில், "நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த சமூகம் மட்டுமே மல வாடையை சுவாசித்து, மலம் அள்ளும் இழிவை சுமந்து கொண்டிருப்பதை எண்ணி, இந்த வெட்கங்கெட்ட இந்தியா தலைகுனிய வேண்டும். தென் மாவட்டங்களில் சாதி இந்துக்களின் அடக்குமுறைகளுக்கும், வன்கொடுமைகளுக்கும், பாலியல் வல்லுறவுகளுக்கும் தொடர்ந்து பலியாகக் கூடிய சமூகமாகவே அருந்ததியர்கள் இருந்து வருகின்றனர். நீண்ட நெடுங்காலமாக பாதிப்புக்குள்ளாகும் அருந்ததியர்களின் பிரச்சனையை சாதி ரீதியான பிரச்சனையாக மட்டுமின்றி, வர்க்க ரீதியான பிரச்சனையாக, அதிலும் அடிமட்ட வர்க்கத்தினரின் பிரச்சனையாக நாம் அணுக வேண்டும். அருந்ததியர்கள் சாதி ஒழிப்பிற்கு மட்டுமின்றி, ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும் தயாராக இருத்தல் வேண்டும். அருந்ததியர்களின் உரிமைகளுக்காகவும், சாதி ஒழிப்பிற்காகவும் மார்க்சிஸ்ட் கட்சி இம்மக்களோடு தொடர்ந்து போராடும்'' என்று உறுதியளித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் மூக்கையா பேசுகையில், இடஒதுக்கீட்டினால் இன்று எத்தனையோ சமூகங்கள் முன்னேறிக் கொண்டிருந்தாலும், இந்த சமூகம் மட்டுமே இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அருந்ததியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும், இடஒதுக்கீட்டினால்தான் கல்வி, சமூக மற்றும் பொருளாதாரத் தளங்களில் மேன்மையடைய முடியும் என்றார்.

தமிழ் நாடு அருந்ததியர் சனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் எம். கவுதமன் பேசுகையில், "ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்பார்கள். ஆனால், எந்த ஆட்சி வந்தாலும் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கும் அருந்ததியர்கள் உயிருக்கு உத்திரவாதமின்றி, வாழ்ந்து வருகின்றனர்'' என்றார். மேலும், மாநாட்டின் கோரிக்கைகளை விளக்கி கோவை ரவிக்குமார், எஸ்.கே. பழனிச்சாமி, அரு. சி. நாகலிங்கம், செ. கலை முருகன், ஆ. தயாளன், கே.ஆர். நாகராசன், ச. நிக்கோலஸ் ஆகியோர் பேசினர். எம். மரியதாஸ் பேசுகையில், சுதந்திரப் போராட்டத் தியாகி தளபதி ஒண்டிவீரனுக்கு மணி மண்டபம் அமைக்க அரசு தவறினால், வருகிற ஏப்ரல் 14இல் நெல்லை மண்ணில் ஒண்டிவீரன் சிலை நிறுவப்படும் என்று உறுதியளித்தார்.

கூட்டுச் சிந்தனை, கூட்டுத் தலைமை, கூட்டுச் செயல்பாடு ஆகியவையே சமூக விடுதலைக்கான தீர்வாக இருக்கும் என்றும், அப்போதுதான் ஒருவருக்கொருவர் வழிகாட்டியாகவும், ஒருவர் சிந்தனையை மற்றவர் பங்கிட்டுக் கொள்ளும் வாய்ப்புக்கு இடமிருக்கும் என்ற புத்தரின் கருத்துக்கிணங்க, அருந்ததியர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கு. ஜக்கையனின் தலைமையுரை, புரட்சியாளர் அம்பேத்கர் அரங்கில் ஒலிக்கத் தொடங்கியது: "எத்தனையோ பொதுக்கூட்டங்களை, அரசியல் கட்சிகளின் மாநாடுகளை, பல்வேறு அமைப்புகளின் கருத்தரங்குகளைக் கண்ட மதுரை மாநகர், இன்று ஆயிரக்கணக்கான அருந்ததியர்கள் ஒன்று கூடுவதைக் கண்டு மதுரை வீரன் மாநகரமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. ஒரு மனிதன் தன் வயிற்றை சுத்தப்படுத்த மலம் கழிக்க வேண்டியிருக்கிறது. ஆனால், மலத்தை சுத்தப்படுத்தி வயிற்றை நிரப்ப வேண்டிய கொடுமை - இந்த ஜனநாயக நாட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

தன் மலத்தைத் தானே சுத்தம் செய்த காரணத்திற்காக காந்திக்கு ‘மகாத்மா' என்ற பெயர் சூட்டிய இந்நாடு, மனிதனின் மலத்தை ஒரு சமூகம் மட்டுமே தலையில் சுமக்கும் இழிவை திணித்திருப்பதை நினைத்து வெட்கப்பட வேண்டும். துப்புரவுத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தும் மற்றும் உலர் கழிப்பிடங்கள் கட்டுமானத் தடைச் சட்டம் - 1993 கொண்டுவரப்பட்டு 13 ஆண்டுகள் ஆகியும் அரசு அதில் அக்கறை செலுத்தவில்லை. காரணம், இந்த இந்துத்துவ அரசு இந்நிலையே நீடிக்க வேண்டுமென விரும்புகிறது. மனிதன் மலத்தை மனிதன் அள்ளுவதை முற்றிலுமாக ஒழித்து, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்து, அவர்களின் மறுவாழ்வுக்கு உறுதியளிக்க அரசு முன்வர வேண்டும்.

சாதிய கட்டமைப்பில் கீழ்மட்ட நிலையில் இருக்கும் அருந்ததியர்கள் - சக்கிலியர், மாதாரி, பகடை, தோட்டி, ஆதிஆந்திரா, ஆதிகர்நாடகா, செம்மான் என்று பல்வேறு உட்பிரிவுகளாக இந்த மக்களை மேலும் பிளவுபடுத்தி வைத்திருக்கிறது இந்து மதம். இந்தப் பெயர்களை அழித்து அருந்ததியர் என்ற பெயரில் அட்டவணைப்படுத்த வேண்டும். எந்த சாதி காரணமாக இந்த மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டனவோ, அதையே கருவியாகப் பயன்படுத்தி, இவர்களை முன்னேற்றுவது - முள்ளை முள்ளால் எடுக்கும் முறையை ஒக்கும் என்று மண்டல் தனது அறிக்கையில் கூறியது போன்று, சமூக மற்றும் பொருளா தாரத்தில் பின்தங்கியுள்ள தலித் மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும், ஒரு தாய்க்கு மூன்று குழந்தைகள் என்றால், அதில் இரண்டு குழந்தைகள் திடகாத்திரமாக இருக்கிறது. ஒரு குழந்தை மட்டும் நோஞ்சானாக இருக்கும்போது தாயின் கவனம் நோஞ்சான் குழந்தை மீதே இருக்க வேண்டும் என்பதே நியாயமான கருத்து. கல்வியின் வாசனையை நுகராமல் மலம் அள்ளுவதையே ‘தலைவிதி' என்று எண்ணியிருக்கும் அருந்ததியர்களுக்கு, மக்கள் தொகை விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும்.

இந்த சமூகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள மலம் அள்ளும் பணியாளர்கள், அதிகாலையிலேயே துப்புரவுப் பணியை மேற்கொள்ளச் சென்று விடுவதால், தங்கள் குழந்தைகளின் நிலையையும், கல்வியையும் கவனிக்க முடியவில்லை. கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவதால், மீண்டும் துப்புரவுத் தொழிலுக்கே ஈடுபடுத்தக் கூடிய சூழல் உருவாகி வருகிறது. எனவே, இந்த அரசு அருந்ததியர் குழந்தைகளின் கல்வியை உத்திரவாதப்படுத்தி, அவர்கள் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும். நம்முடைய உரிமைகளைப் பெறுவதற்கும், நாமும் சக மனிதனாக நடத்தப்பட வேண்டுமெனில்,ஓரணியில் திரண்டு புரட்சியாளர் அம்பேத்கர் வழியில் நின்று போராட வேண்டும்.''