Ambedkar

 

ஆங்கிலேயர்களுக்கு ஒரு பேரரசு உள்ளது; இந்துக்களுக்கும்தான்! என்ன? இந்துயிசமும் ஒருவகை ஏகாதிபத்தியம்தானே! தீண்டத்தகாதவர்கள் இந்துக்களால் அடிமைப்படுத்தப்பட்ட இனம்தானே! இந்து எஜமானர்களுக்கு விசுவாசமாகவும், அடிமைப்பட்டிருக்கவும்தானே அவர்கள் இருக்கிறார்கள்?’ -அம்பேத்கரின் இந்தக் கேள்விகள் அன்றைய காங்கிரசாரின் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்திருக்கும்! அவர்கள் அவரின் நேர்மையை கேள்வி கேட்கத் துணிகிறபோது, காங்கிரசின் அடிப்படையையே காலி செய்யத் துணிகிறார் அம்பேத்கர். ‘யாருடைய சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறது?’ என்ற வினா, எதிர் வினாவாக அவரிடமிருந்து எழுகிறது. அவர் மிகத் தெளிவாக காங்கிரசின் விடுதலைப் போராட்டத்தின் ஏகபோகத்தை வரையறை செய்கிறார் :

‘காங்கிரஸ் சனநாயகத்துக்குத் திட்டமிடுவதற்குப் பதிலாக தலைமுறை தலைமுறையாக ஓர் ஆளும் வகுப்பு, தலைமுறை தலைமுறையாக ஒரு கீழ்ப்பட்ட வகுப்பை ஆளும் பண்டைய இந்து ஆட்சிமுறையை உயிர்ப்பிப்பதற்கே திட்டமிட்டு வருகிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன’ (அம்பேத்கர் பேச்சும், எழுத்தும், தொ. 17, பக். 69). சட்டமன்றங்களில் தங்களுக்கு தனிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று பார்ப்பனரல்லாதாரும், பிற்படுத்தப்பட்டவர்களும் கோரியபோது (1918) திலகர், எண்ணெய் எடுக்கும் செட்டியார்களும், புகையிலைக் கடைக்காரர்களும், சலவையாளர்களும், அவர்களைப் போன்ற பிறரும் சட்டமன்றத்துக்குச் செல்ல ஏன் ஆசைப்படுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை என்று கூறியதையும்; படேல், வைசிராய் இந்து மகாசபை தலைவர்களை அழைத்ததுடன், முஸ்லிம் லீக் தலைவர்கள், காஞ்சிகள் (எண்ணெய் எடுப்போர்), மோச்சிகள் (செருப்பு செப்பனிடும் பணி) போன்றோரையும்கூட அழைத்தார் என்று குறிப்பிட்டதையும் சுட்டிக்காட்டுகிறார் அம்பேத்கர்.

தேர்தலில் சட்டமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தினை மேற்கொண்ட காங்கிரஸ், பிற இந்து வேட்பாளர்கள் போட்டியிடும் இடத்தில் தமது எதிர்ப்பைக் காட்டுவதற்கு ‘சட்டமன்றங்களுக்கு யார் செல்வார்கள்? சவரம் செய்பவர்களும், செருப்புத் தைப்பவர்களும், குயவர்களும், தோட்டிகளும்தான் அங்கு செல்வார்கள்’ என்ற வாசகங்களை எழுதிய அட்டைகளைத் தாங்கி முழக்கமிட்டதையும் அவர் குறிப்பிடுகிறார். அடிப்படையில் பார்ப்பன ஆதரவையும், சனாதன தர்மத்தையும் கொண்டிருக்கும் காங்கிரசின் நிலைப்பாட்டை கடுமையான கேள்விகளுக்கு உள்ளாக்குவதன் மூலம் -அதன் விடுதலைப் போராட்டத்தின் நோக்கத்தையும் உள்ளீடையும் வரையறுத்து விடுகிறார் அம்பேத்கர். அந்த வரையறை, அவர்களின் சுயநலமிக்க, போலி நிலைப்பாட்டினை நமக்கு தெளிவாகக் காட்டிவிடுகிறது.

இந்தியாவில் இன்று அடித்தட்டு வகுப்புகளைச் சேர்ந்த சாமானிய மனிதன் இந்த அளவுக்கு வீழ்ந்தவனாக, தாழ்ந்தவனாக, இழிந்தவனாக, சுயமரியாதை இழந்தவனாக, நம்பிக்கையற்றவனாக, ஆதர்சமில்லாதவனாக, உயிரற்ற நடை பிணமாக இருக்கிறான் என்றால், அதற்கு பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமே முற்றிலும் காரணம் என்பதை உறுதியாக விளக்கும் அம்பேத்கர், இந்தத் பார்ப்பனர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களின் கூடாரமான காங்கிரசை முற்றிலும் அய்யப்படவும், நிராகரிக்கவும் துணிகிறார்.

காங்கிரஸ்தான் இந்திய மக்கள் அனைவருக்குமான ஒரே பிரதிநிதி என்று வெள்ளையர் கருதுவதை விமர்சனம் செய்யும் அம்பேத்கர், இந்த கருதுகோள் முற்றிலும் தவறானது என்று வாதிடுகிறார். காங்கிரஸ், பத்திரிகைகளின் துணையுடன் இடைவிடாமல் அப்படியானதொரு பிம்பத்தை உருவாக்கி வைத்திருந்தது அன்று. ஆனால், எதிர்ப்பிரச்சாரத்தை செய்ய தீண்டத்தகாதவர்களுக்கோ, பிறருக்கோ போதிய ஊடக பலம் அன்று இல்லை. அம்பேத்கரின் வார்த்தையில் சொல்வதெனில் பத்திரிகைகளும், காங்கிரசும் தீண்டத்தகாதவர்களுக்கான கதவுகளை மூடிவிட்டன. அது மட்டுமின்றி, காங்கிரசின் பின்னால் நின்ற தலித்துகளின் உழைப்பையும், காங்கிரசின் தலித் விரோத போக்கிற்கு எதிராக மவுனம் காத்த சகிப்புணர்வையும் காங்கிரஸ் ஒப்புக் கொள்ளவில்லை.

மிகுந்த கூர் உணர்வுடன் இந்தியாவின் அரசியல் சிக்கலை ஆராயும் அம்பேத்கர், அவற்றை இருவேறு சிக்கல்களாக வகைப்படுத்துகிறார் : 1. அயல் நாட்டு அரசியல் (ஏகாதிபத்திய அரசியல் மற்றும் அதன் அணுகுமுறை) 2. அரசியலமைப்புச் சட்ட அரசியல் (விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல்). முதலாவது விடுதலையைப் பற்றியது. இரண்டாவது, விடுதலைக்குப் பிறகான அமைப்பைப் பற்றியது. இரண்டும் வேறு வேறாகத் தோன்றினாலும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையாகும்.

தலித்துகள் ஆண்டாண்டு காலமாக இங்கே அனுபவித்து வரும் சாதிய ஒடுக்குமுறைகளின் அனுபவத்தின் ஊடாக, விடுதலை பெற்ற இந்தியாவில் எமது நிலை என்ன என்று கேள்வி எழுப்பியபோது, அக்கேள்வி விடுதலையே வேண்டாம் என்பதாக இங்கே புரிந்து கொள்ளப்பட்டது. இந்தப் புரிதல் அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, தலித்துகள் அமைதி காத்தனர். காங்கிரசின் கருத்துப் பரப்பல் தடையின்றி நடைபெறவும் அவர்கள் வழி விட்டனர். இந்த மவுனம் மற்றும் இடையூறு செய்யாத ஒத்துழைப்பு ஆகியவை தலித்துகளின் தேசபக்தியின் விளைவு. ஆனால், அதை காங்கிரஸ் அப்போது சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

இதை மிகத் தெளிவாகச் சுட்டும் அம்பேத்கர், ‘தங்களுக்கு எதிராக நடைபெறும் காங்கிரஸ் பிரச்சாரம் குறித்து தீண்டத்தகாதவர்கள் மவுனம் சாதிப்பதற்குப் பின்னாலுள்ள அவர்களுடைய தேச பக்த நோக்கங்களை காங்கிரஸ்காரர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்’ என்கிறார் (டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பே. எ. தொகுதி 17, 65). அம்பேத்கர் அவர்களுக்கு நாடு என்பதைப் பற்றிய மிகத் தெளிவான பார்வை இருந்தது. அப்பார்வை, இந்து சனாதனிகளின் புண்ணிய தேசம், புனித மண் என்ற கருத்தாக்கங்களுக்கு முற்றிலும் மாறானது.

Dalit Woman
அம்பேத்கரின் பார்வையில் நாடு என்பது, பல மக்களின் தொகுப்பினை கொண்டதோர் பகுதி. அங்கே நிச்சயமாக சம உரிமை நிலைத்திருக்க வேண்டும். ‘ஏனென்றால் சமுதாயம், தேசம், நாடு போன்ற சொற்கள் திட்டவட்டமான, தெளிவான அர்த்தத்தைக் கொடுக்காத சொற்கள். ‘தேசம்' என்பது ஒரே சொல்லானாலும் அது பல வகுப்பினர்களை அர்த்தப்படுத்துகிறது. தத்துவார்த்த ரீதியில் பார்த்தால், ஒரு தேசத்தை ஒரே அலகாகக் கருதலாம்; ஆனால் சமூக ரீதியில் பார்க்கும்போது, பல வகுப்பினர்கள் கொண்டதாக அதனைக் கருத முடியும்.

ஒரு தேசத்தின் சுதந்திரம் என்று கூறும்போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், அதில் அடங்கியுள்ள பல்வேறு வகுப்பினர்களின் சுதந்திரத்தையும், அதிலும் குறிப்பாக அடிமைகளைப் போல நடத்தப்படும் வகுப்பினர்களின் சுதந்திரத்தையும் அது உத்தரவாதம் செய்வதாக இருக்க வேண்டும்’ (மேற்குறிப்பிட்ட நூல்) என்பதே அவருடைய கருத்து. ஆனால், இப்படியான குறிக்கோளுடன் காங்கிரஸ் போராடி வருகிறதா? என்பது அம்பேத்கரின் கேள்வி. எனவேதான் ‘யாருடைய சுதந்திரத்திற்காக காங்கிரஸ் போராடி வருகிறது?’ என்றார் அம்பேத்கர்.

தலைமுறை தலைமுறையாக ஓர் ஆளும் வகுப்பு, தலைமுறை தலைமுறையாக ஓர் அடிமை வகுப்பை ஆளும் பண்டைய இந்து ஆட்சி முறையை உயிர்ப்பிக்கவே காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது என்று அவர் சொன்னார். அம்பேத்கரின் பார்வையில் விடுதலைப் போரை வரையறுத்தால், அது சமத்துவத்திற்கானதும், ஜனநாயகத்திற்கானதுமான போராக அமையும். எனவேதான் வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான போராட்டங்கள் ஒருபுறம் நடைபெறும் அதே வேளையில், அவர்கள் வெளியேறும் வரையான ஆட்சியிலும் சமத்துவ நடைமுறைகளை அவர் எதிர்நோக்கினார்.

1942 தொடங்கி 46 வரை அம்பேத்கருக்கும் வெள்ளை அரசுக்கும் நடைபெற்ற கடிதப் போக்குவரத்து மற்றும் கோரிக்கை மனுக்களை நாம் படிக்கும்போது இது தெளிவாகும். அவர் அக்கடிதங்களிலும், மனுக்களிலும் ஒன்றையும் தனக்காக எழுதிக் கொண்டிருக்கவில்லை. மாறாக, தலித் மக்களின் பல்வேறு வகையான சிக்கல்களுக்கு தீர்வினைக் கோரும் கடிதங்களாகவும், மனுக்களாகவுமே அவை இருந்தன. அவ்வாறான கடிதங்களில் பல இடங்களில் வெள்ளையரின் தலித் விரோதப் போக்குகளை அவர் கண்டிக்காமல் விடவில்லை.

அக்கடிதங்களுள் ஒன்றில், ‘தாழ்த்தப்பட்ட சாதியினர் பால் ஆங்கிலேய அரசின் கொள்கை, அவர்களை முற்றிலும் புறக்கணிக்கும் கொள்கையாகவே தொடர்ந்து இருந்து வந்துள்ளது' என்று குறிப்பிடுவதோடு, 1856 இல் ஒரு மகர் சாதியைச் சேர்ந்த மாணவன் கல்வி உதவி வேண்டி மனு செய்தபோது -‘காலம் காலமாக உள்ள குரோதங்களுக்கு எதிராக திடீர் தீர்வு முறையில் ஒரு தனி நபருக்காக அல்லது சில தனி நபர்களுக்காகத் தலையிடுவது, கல்வி லட்சியத்துக்கே பெரும் தீங்கை ஏற்படுத்தலாம்' என்று தலித் மக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு கைகழுவிக் கொண்டதையும் சான்றுகளுடன் குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.

இந்த வகையான சமூக, அரசியல் பார்வையிலிருந்துதான் அம்பேத்கரின் சுதந்திரப் போராட்டத்துக்கான நிலைப்பாடு உருவாகிறது. அவர் காங்கிரசை மட்டுமே குற்றம் சாட்டுபவராக எப்போதும் இல்லை. அதனுடன் இணைந்து ஏகாதிபத்தியத்தையும் விமர்சிப்பவராக, அவர்களின் நிலைப்பாடுகளை விமர்சிப்பவராக, தலித் மக்களின் அணுகுமுறைக்கு ஆலோசனை வழங்குபவராகதான் இருந்திருக்கிறார்.

அவருக்கு சாதி ஒழிப்பும் அதன் பணிகளும்தான் முதன்மையானது. அவருடைய அழுத்தமும் இலக்கும் அதை நோக்கியவைகளே. ‘சூத்திரர்கள் என்போர் யார்?' நூலின் சமர்ப்பணத்தில் ‘... இந்தியாவுக்கு சமூக ஜனநாயகம் என்பது, அன்னிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை விடவும் முதன்மையானது என்று உணர்த்திய புலேவுக்கு’ என்று அம்பேத்கர் அழுத்தமாக எழுதுவதிலிருந்தே இதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஆதவன் தீட்சண்யா கதைகளை முன்னிறுத்தி

அடையாளம் பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘இறக்கை முளைத்த விதி' மொழிபெயர்ப்புச் சிறுகதை நூலைப் படித்தபோது, தமிழில் அவை போன்ற கதைகளைத் தேடியது மனம். சிறுகதைக்கே உரிய அழகியல் கூறுகளும், புதிய சிந்தனைகளும் கொண்டு, அடக்குமுறைகளுக்கும், அதிகாரத்துக்கும், சுரண்டலுக்கும் எதிரான கதையமைப்பும் சொல்முறையும் உடைய சிறுகதைகள் அத்தொகுப்பில் இருக்கின்றன. வ. கீதாவும், எஸ்.வி. ராஜதுரையும் மிகவும் கவனமாக தெரிவு செய்த பன்னாட்டுக் கதைகளை மொழியாக்கம் செய்து தொகுத்திருக்கிறார்கள். அரபு மொழிச் சிறுகதைகளுக்கு அதிக இடம் அளித்திருப்பது சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

Aadhavan Dheetchanya
இத்தொகுப்பில் இருக்கின்ற கதைகளைப் போன்ற அனுபவத்தை அளித்த சிறுகதைகள் இரண்டை அண்மையில் படித்தேன். இவ்விரு கதைகளுமே ஆதவன் தீட்சண்யா எழுதியது 1. கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும் -‘விசை', சூலை -செப். 2007; 2. காலத்தைத் தைப்பவனின் கிழிசல் -‘உயிர் எழுத்து', சூலை 2007.

இவ்விரு கதைகளும் தந்த அனுபவம், மொழிபெயர்ப்பு கதைகளின் ஊடே நமக்கு கிட்டாமல் போகக் கூடிய சில நுண்ணிய இடங்களைப் போல் அல்லாது -முழுமையானதும் அசலானதுமானவை. ஆதவன் தீட்சண்யாவின் மொழியும், சொல்முறையும் விசேடமானவை. எழுதப்படும் பொருளுக்கு ஏற்ப அங்கதமாகவும், இறுக்கமாகவும், நெகிழ்ச்சியுடனும் முகம் மாற்றிக் கொள்வது அவருடைய மொழிக்குரிய பலம். அவருடைய சொல்முறை கிண்டலும் கேலியும், கூரிய விமர்சனங்களும் மிக்கது மட்டுமல்ல; தன்முனைப்பு கொண்ட ஒரு மனிதனின் உழைப்பைப் போன்றது அது. ஆதவன் தீட்சண்யாவின் கதைகள் தமிழ்ச் சூழலில் முற்றிலும் வேறு தளத்தில் நின்று இயக்கம் கொள்வதை, அவரை தொடர்ச்சியாக வாசிப்பவர்கள் புரிந்து கொள்ளக்கூடும்.

வரலாற்றைக் கேள்வி கேட்டல். அதன் இடைவெளிகளுக்குள் நுழைதல். அதன் மவுனங்களை உலுக்குதல். அதன் தரவுகளைக் கொண்டு புதிய வரலாற்றுப் புனைவை கட்டுதல் என்பதே அவருடைய அண்மைக்கால சிறுகதைகளின் தளமாக இருக்கின்றன. வரலாற்றை மறுவாசிப்பு செய்வது, இன்றைய நவீன அறிவுத் துறையின் செயல்பாடுகளில் ஒன்று. அது தன் விருப்பம் சார்ந்து வாசிக்கப்படுகையில் தப்பர்த்தங்களை தந்துவிடுகிறது. புனைக் கதைகளிலோ மறுவாசிப்பு என்பதும், மீளாக்கம் என்பதும் இன்னொரு புனைவாகவே நின்று விடுகின்றன. ஆதவன் தீட்சண்யாவின் கதைகளில் வரலாற்றுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள கோடு அழிக்கப்பட்டு, புதிய வரலாறாக உருமாறும் செயல் நடக்கிறது.

வாசகன் முற்றிலுமாக ஒரு புனைக் கதையினை படிக்கிறோம் என்ற உணர்விலிருந்து பிரிக்கப்பட்டு, திருத்தி எழுதப்பட்டிருக்கும் வரலாற்றைப் படிக்கிறோம் என்ற உணர்வுக்கு ஆட்படுத்தப்படுகிறான். ‘கடவுளுக்குத் தெரியாதவர்கள்' ‘காலத்தைத் தைப்பவனின் கிழிசல்' ஆகிய கதைகளை இந்த அம்சத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். அவருடைய மற்றோர் அம்சமான வரலாற்றைப் பகடி செய்தல் மெச்சத்தகுந்தது. சமகால வரலாற்றையும், கடந்த கால வரலாற்றையும் அவர் தன்னுடைய கதைகளில் இவ்விதமான நையாண்டிக்கு உள்ளாக்குகிறார். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ‘விசை'யில் வெளிவந்த ‘கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக்கூடும்'... என்ற கதையைச் சொல்லலாம். இக்கதை மிகச் சிறப்பான தலித் எள்ளல் தன்மையுடைய கதை.

நவீனம், வல்லரசு, உலகமயம் என்று அழகழகான சொற்களில் இந்திய அரசும், அதன் பணியாளர்களும் பேசிக் கொண்டிருக்கும் அதே தருணத்தில், அவர்களுடைய மலத்தை மனிதர்கள் அள்ளிச் சுமப்பதும் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த மனித இழிவைக்கூட தீர்க்க முடியாத நிலையில்தான் இந்தியா தலையை நிமிர்த்தியபடி வெட்கமின்றி நிற்கிறது. ஆதவன், தன் சிறுகதையில் அருந்ததியர்களின் சிக்கல்களையும், நாட்டின் சாதிய மேலாதிக்கப் போக்கையும் பொருத்தமாகப் பிணைத்துப் பயன்படுத்துகிறார்.

துப்புரவுப் பணி செய்கிறவர்களுக்கு ஒரு நாட்டின் குடியரசுத் தலைவரைக் காட்டிலும் அதிகமாக ஊதியம் வழங்கப்படுமானால், நிலைமை என்னவாக இருக்கும் என்ற கேள்வியை எழுப்பி எள்ளலுடன் அதை விவரித்துப் போகிறது கதை. துப்புரவுப் பணியாளர்களுக்கு உயர்ந்த மதிப்பும், ஊதியமும் வழங்கப்படுவதால் குடியரசுத் தலைவராக வருபவர்கள்கூட, தமது பதவியை துறந்துவிட்டு துப்புரவுப் பணிக்குப் போக விரும்புகிறார்கள். இந்த சூழல் நிலவும் ‘கக்கா' நாட்டில் இருக்கின்ற அய்.அய்.டி., அய்.எம்.எஸ். போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் கூட, துப்புரவுப் பணிகளுக்கான உயர் கல்வி பிரிவுகளை உருவாக்கி நடத்துகின்றன. அரசுப் பணி தேர்வுகள், இன்ன பிற எல்லாமே துப்புரவுப் பணியினை மய்யமாக வைத்தே நடத்தப்படுகின்றன.

துப்புரவுப் பணியாளர்கள் நட்சத்திரங்களுக்கு இணையாக மதிக்கப்பட்டு விழாக்களுக்கும், கடை திறப்புகளுக்கும் அழைக்கப்படுகின்றனர். நிலைமை தொடர்ந்து, துப்புரவுப் பணி செய்யும் ‘கிருந்ததியர்' ‘கிருந்ததியர் அல்லாதார்' என்று தலைகீழ் மாற்றமாக சமூகம் மாறும் நிலை உருவாவதாக கதை முடிகிறது. சாதிய சமூகத்தின் ஆதிக்கக் கூறுகளைப் பகடி செய்யும் நோக்கில் அருந்ததியர்களின் அவல நிலைமைகளைப் பொருத்திச் சொல்வதன் மூலம் தலித் மனதின் ஆற்றாமையை தணித்துக் கொள்வதாக இருக்கிறது இக்கதை. கூடவே தவங்கிச் சோர்ந்து நின்றிருக்கும் தலித் சிறுகதைகளுக்கு புதிய சாளரங்களை திறந்தும் விட்டிருக்கிறது.

ஆதவன் தீட்சண்யாவின் ‘காலத்தை தைப்பவனின் கிழிசல்' வரலாற்றைத் தோண்டிப் பார்க்கும் ஒரு கதையாகும். மனோகர் ராவ் என்கிற தையல்காரனின் வாழ்க்கையை தஞ்சை மராட்டிய மன்னர்களின் காலத்தின் ஊடாகப் பொருத்தி, சில புதிய புள்ளிகளை அவர் அடைந்திருக்கிறார். தஞ்சையின் கடைசி மன்னனான 2 ஆம் சிவாஜியின் காலத்தைத் தொட்டு நீளும் இச்சிறுகதையில், அழகிய பெண்களை சிறையெடுத்து பாலியல் அடிமைகளாக ஆக்கிக் கொண்ட அவலமும், வெள்ளையர் ராணுவப் படையில் இருந்த தையல்காரர்கள் நிலையும் ஆழமாகப் பதிவாகியுள்ளன.

பார்ப்பனர்களுக்கு எதிராக பூணூல் போடுபவர்கள் மனோகர் ராவ் வம்சத்தினர். பரம்பரை தையல்காரர்களான அவர்களின் நிலை, நவீன காலத்தில் தைக்க முடியாமல் கிழிந்து போகிறது. மொத்த விலையில் துணி எடுத்துவர சூரத் போகும் மனோகர் ராவை பணத்தைப் பிடுங்கிக் கொண்டு ‘சுன்னத்' செய்தவனா என நிர்வாணப்படுத்திப் பார்க்கிறார்கள் இந்து வெறியர்கள். ஆடையில் நிர்வாணத்தை மூடியவனை, ஆதிக்க வெறி கொண்ட உலகம் நிர்வாணப்படுத்திப் பார்க்கிறது. ஆதிக்கத்தின் வரலாறு பதுங்கிப் பதுங்கிப் பாய்வதை சொல்கிறது இக்கதை.

 

.
-அழகிய பெரியவன்