டாக்டர் அம்பேத்கரால் உயர்வு

sukhadev thorat
பிறந்த மண் அறக்கட்டளை மற்றும் ‘அம்பு' -எஸ்.சி., எஸ்.டி. பணியாளர்கள் சங்கம் சார்பில், பல்கலைக்கழக மானியக்குழு தலைவர் சுகதேவ் தோரட் அவர்களுக்கு சென்னையில் 9.12.07 அன்று பாராட்டு விழா நடைபெற்றது. இதில் டாக்டர் கிருஷ்ணசாமி, ஜெயக்குமார், கிருத்துதாசு காந்தி, செ.கு. தமிழரசன் உள்ளிட்ட பலர் சிறப்புரை நல்கினர். பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் இவ்விழாவுக்கு வந்து வாழ்த்துரை வழங்கினார்கள். தோரட் தமது உரையில், “நான் அம்பேத்கர் உருவாக்கிய கல்லூரியில் படித்ததால்தான், இந்த அளவுக்குப் பெரிய பதவியைப் பெற முடிந்தது. வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தொண்டு செய்பவர்களையே அம்பேத்கர் மாமனிதர் என்றார். அந்த வகையில் நாம் சமூகத்திற்குத் தொண்டாற்ற முன்வர வேண்டும். உயர் கல்வி படிப்பவர்களில் தலித் பழங்குடியினர், பெண்கள் மற்றும் கிராமத்தைச் சார்ந்த ஏழை, எளியவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இவர்களுக்கு உயர் கல்வி அளிக்கும் வகையில் பாகுபாடற்ற திட்டம் வகுக்கப்படும்” என்றார்.

இந்திய இனவெறிக்கு எதிராக

தலித் மனித உரிமைப் பிரச்சாரத்திற்கான தேசிய இயக்கத்திற்கு 2007 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய ‘ரேப்டோ' மனித உரிமை விருது கிடைத்திருக்கிறது. இவ்வியக்கம் 16 கோடியே 70 ஆயிரம் தலித் மக்களின் உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த இடையறாது போராடி வருகிறது. அண்மைக் காலங்களில் தலித் பிரச்சினையை உலகளவில் கொண்டு சென்ற பெருமை இவ்வியக்கத்தையே சேரும். உலகளாவிய இவ்விருதை தலித் உரிமைக்காகப் போராடும் ஓர் இயக் கத்திற்கு அளித்ததன் மூலம் -இத்தகைய மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான குறியீடாகவே இதைக் கருதலாம். ‘ராப்டோ' விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவ்விருது நவம்பர் 4.11.07 அன்று நார்வேயில் வழங்கப்பட்டது. உலகம் முழுவதும் 26 கோடி மக்கள் சாதி ரீதியான பாகுபாட்டால் துன்புறுகின்றனர்; நாள்தோறும் அவமானப்படுத்தப்படுகின்றனர். வீடு, கல்வி, நீர் போன்ற அடிப்படை உரிமைகளில்கூட அவர்களுக்கு பாகுபாடுகள் இழைக்கப்படுகின்றன. 1998 முதல் தேசிய தலித் மனித உரிமைப் பிரச்சார இயக்கம், தேசிய அளவில் இனப்பாகுபாட்டுக்கு எதிராக, பல கோடி கையெழுத்துகளைப் பெற்று உலக அரங்கிற்கு அனுப்பியது குறிப்பிடத்தகுந்தது. இவ்விருதை தேசிய அமைப்பாளர்கள் பால் திவாகர், விமல் தோரட் மற்றும் அதன் பொதுச் செயலாளர் வின்சென்ட் பெற்றுக் கொண்டனர்.

துரும்பர் உரிமை மாநாடு

துரும்பர் விடுதலை இயக்கம் சார்பில் 10.11.07 அன்று, விழுப்புரத்தில் உரிமை கோரும் மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் "சாதனைப் பெண்' விருது பெற்ற சகோதரி அல்போன்ஸ் அவர்களுக்குப் பாராட்டும் அளிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் உள்ள துரும்பர்களை மறைமாவட்ட ரீதியாக, புள்ளி விவரக் கணக்கெடுக்க தேவையான திட்டத்தை திருச்சபை வகுத்து செயலாக்கம் செய்ய வேண்டும் என்றும்; ஊருக்கு ஒரு குடியாய் இருக்கும் துரும்பர்களுக்கு, 50 குடும்பங்களை உள்ளடக்கிய இலவச குடியிருப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்றும்; தமிழ் நாட்டிலே இரண்டு விதமாக வழங்கப்படும் சாதி சான்றிதழை அரசிடம் பரிந்துரை செய்து தமிழகம் முழுவதும் ஒரே விதமான ‘துரும்பர்' என்ற சாதி சான்றிதழ் கிடைக்க ஏற்பாடு செய்யும்படி கோரியும், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் சிந்தனைச் செல்வன், தலித் சுப்பையா, ரமேஷ் நாதன் மற்றும் அருள்வளன் பங்கேற்று துரும்பர் உரிமை குறித்தும், சகோதரி அல்போன்ஸ் பணிகள் குறித்தும் பாராட்டிப் பேசினர்.