ஆதிசங்கரனின் தீங்கு, மரபு வழி தொடர்ச்சியானதுதான் சங்கர மடங்கள். இதன் மடத் தலைவர்களாக கேரளத்தில் நியமிக்கப்பட்டவர்கள்தான் – ஆதிசங்கரனின் சீடர்கள் திரோதகர், சுரேசுவரர், ஹஸ்தமாலகர் மற்றும் பத்மபாதர் ஆவர். இந்த நம்பூதிரிப் பார்ப்பனர்களின் மதமும், பண்பாடும் அதன் படிநிலைப் பாய்ச்சல்களும் தம் ஆக்டோபஸ் கொடும் விரிப்புகளுடன் முழுமையடைந்து ஆதிக்கம் பெற்றவுடன்தான் - கேரள வெகுமக்கள் வாழ்வியல், வர்ணக் கீழ்மை பேசும் நச்சுப் பிரதேசமாகி விட்டது. இதில், ஈழவ மக்களை கடுமையான தருணங்களிலிருந்து மீட்கத் தோற்றுவிக்கப்பட்டதே சிறீநாராயண தர்ம பரிபாலன யோகமாகும்.

குமாரன் ஆசானுக்கு கிடைத்த வலி, மகிழ்ச்சி, துயரம், கேளிக்கை எனும் மனித அனுபவங்களின் தொகுப்பு - தன்னை ஒரு மனிதப் பிறவியாக உணர வைத்ததைவிட, ஒரு தாழ்த்தப்பட்ட கீழ்மகனாக உணர வைத்ததுதான் மேலதிகமானது. இருப்பினும், சாதி ஆதிக்கம் என அதிகாரத்திற்குட்பட்ட தன் மனக் கொந்தளிப்புகளையும், கலகப் பண்புகளையும் தன்னுள் அடையாளம் கண்ட குமாரன் ஆசான், தன் மனிதத் திமிரில் தன்னை சம மனிதனாக்கிக் கொண்டார். அவர் உள்ளுணர்வின் வழிகாட்டுதலில் சமூக மனிதராக ஏற்றம் பெற்றார். புத்தெழுச்சியான அவர், திருவிதாங்கூர் இந்துத்துவ சமூகத்தின் சிக்கல்களையும் சிடுக்குகளை யும் உணர்ந்தார். ஒரு புதிய சமூக அமைப்பின் தீர்ப்புக்கானப் புரிந்துணர்வையும், காணறிவையும் வழங்கக்கூடிய மதிநுட்பத்தில் உயர்ந்து நின்றார். தன் சுயத்தை இழக்காமல், காக்கத் தொடங்கியிருந்த காலத்தில் அவருக்காகவே காத்திருப்பதாய் நாராயண குரு அமைந்தார்.

நாராயண குரு இயற்கையான சமுதாய உறவுமுறைகளை வைத்துக் கொள்வதற்கு, சாதி முழு தடையாக இருக்கிறது என்றார். ஆணவம், அகந்தை, ஏக்கம், தாழ்வு மனப்பான்மை ஆகிய மோசமான இயல்புகளை வர்ணாசிரம அமைப்புதான் தூண்டுகிறது என்றார். மேலும், சாதியை உருவாக்கியவர்களின், அதனால் பலன் அடைகிறவர்களின் மகிழ்ச்சி மற்றவர்களின் மீது கட்டப்பட்டிருக்கிறது என்றார். மனிதர் சாதிக்காகவோ, உலகிற்காகவோ, சாதி போன்ற மற்ற எதற்காகவோ உருவாக்கப்படவில்லை. சாதி மனிதர்களைத் தாழ்த்துகிறது. ஆகையால் சாதி நமக்கு வேண்டாம் என்றார். சாதி என்பதில் எந்தவொரு உண்மையும் இல்லை. எனவே, எவரிடமும் சாதியை கேட்காதீர்கள்; சாதியைப் பற்றி சிந்தனை செய்யாதீர்கள்; சாதியைப் பற்றிப் பேசாதீர்கள் என்று முன்மொழிந்தார்.

கேரளத்தில் பிறவி முதலாளிகளாகிப் போன பார்ப்பனர்களும், மக்களை காப்பதென பார்ப்பனியக் காப்புக் கட்டிக் கொண்டிருந்த சத்ரியர்களும், நறுவிசான சாதியாள்களாகிப்போன "சற் (வெகுநல்ல) சூத்திரர்'களõன நாயர்களும் வெள்ளா ளர்களும் பார்ப்பனிய மூலத்தின் குவிமய்யத்திலிருந்து வெளித் திரண்ட சாதி மூர்க்கர்களாகவே இருந்தனர். இந்து சவர்ணர்களுக்கு அறைகூவல் விட்ட குமாரன் ஆசான், உங்கள் உடலில் சாதி உறுப்பொன்று புதியதாய் ஏதும் முளைத் துள்ளதா? என்ற வினாவை எழுப்பினார்.

"சிறீநாராயண தர்ம பரிபாலன யோக'த்தின் பொதுச் செயலாளரான குமாரன் ஆசான், அடிமைப்பட்டு ஊழியச் சாதிகளாக அழுந்தியிருப்பதே தங்கள் விதியெனக் கொண்டு வாழ்ந்த ஊமை மக்களுக்கு, உணர்வூட்ட வந்த உந்து சக்திகளில் முதன்மையானவர் ஆனார். அறவழியோடும், நேர்மறை மதிப்பீடுகளோடும் தான் ஏற்றுக் கொண்ட பொறுப்பினைத் தகவமைத்துக் கொண்டார். ஆழமாக ஊடுருவிப் பரவிப் பதிந்து கிடந்த மூடநம்பிக்கைகளையும், பழமைப் போக்குகளையும், சமுதாயச் சீர்கேடுகளையும் களைந்தெறியும் இமாலயப் பணிக்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். கல்வியின்மை, அறிவுத் தெளிவின்மை, மூடநம்பிக்கை, இந்துமத ஆதிக்கம், தீண்டாமைக் கொடுமைகள், கொடிய பழக்கவழக்கங்கள், பொருளற்ற சமூக ஏற்பாடுகள் முதலிய வீண் பூண்டுகளையும், நச்சுச் செடிகளையும் களைந்து – சமுதாயத் தோட்டத்தின் வளர்ச்சியைப் பேண தன் வாழ்வை அர்ப்பணித்தார்.

குமாரன் ஆசானை சமநீதி என்ற கொள்கையும், பார்ப்பனியச் சமூக அமைப்பால் வீழ்த்தப்பட்டோரை உயர்த்த வேண்டும் என்ற குறிக்கோளும், அன்போடமைந்த அறநெறிக்குத்தக ஈழவர் இயக்கம் தொடர்கின்றது என்ற நம்பிக்கையும் வழிநடத்தியது. "சிறீநாராயண தர்ம பரிபாலன யோகம்' காட்டிய முன்னெடுப்புகள், இதுவரையில் தங்களை இழுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிற எதிர்மறைகள் எல்லாவற்றையும் உதறித் தள்ளிவிட்டு, தங்களைத் தாங்களே கட்டமைத்துக் கொள்கிற புதிய மனிதர்களின் உண்மையானது. இந்த முயற்சிகளுக்குள்ளே மக்களை முன்னகர்த்திச் சென்ற குமாரன் ஆசான், மிகமிக உயிர்த்துடிப்புள்ளவையான தூண்டுதல்களை மீட்டுத் தந்தார். ஆசானால் சிறீநாராயண தர்ம பரிபாலன யோகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் வலிமையும் – ஈழவர்களின் முன்னேற்றத்தை உரசிப் பார்க்கும் தேர்ச்சிக்களமானது. மக்கள் தங்களை நிமிர்த்திக் கொள்ளும், நிலை நிறுத்திக் கொள்ளும் ஆயுதமாக யோகத்தை பாவிக்கத் தொடங்கினர். ஆசான் மக்களுக்கான வாழ்க்கைக்கு தற்காப்புக் கவசமாக ஆனார். முன்னேற்றப் பாதைக்கு தடை நீக்கியாக விளைந்தார்.

பிறருக்காக உழைப்பது, பிறரையே சார்ந்து வாழ்வது என்று பழகிவிட்ட ஈழவ மக்கள் திரளைத் தனித்தியங்க முடியு மென்ற நம்பிக்கையை ஊட்டினார். ஒரே மக்கள் திரள் – பார்ப்பனிய பாவனையால் சில பிரிவுகளாகப் பிரிந்து, பிணங்கி, அற்ப கருத்துகளுக்காகவும், காரியங்களுக்காகவும் பூசலிட்டு வாழ்ந்த நிலைமையில், ஆசான் ஈழவ மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். சிதறிக்கிடந்த அறியா மக்களை ஒன்றுதிரட்டி, ஆக்கப் பாதையில் செலுத்தும் பொறுப்புமிக்க கடினமான பணியை – பொறுமையாகவும், திறமையாகவும், நிறைவாகவும் ஆற்றிய பெருமை, யோகத்தின் முதல் பொதுச் செயலாளரான குமாரன் ஆசானையே சாரும்.

வர்ணாசிரம வட்டத்திற்கு வெளியே ஒதுக்கப்பட்டு வந்த அவர்ணர்களான ஈழவர்கள் மத்தியிலும் ஏற்றத்தாழ்வுகள் இருந்த நிலைமையில், அவர்கள் திய்யாக்களாக, சோவன்களாக, ஈழவர்களாகப் பிளவுபட்டு இருந்ததை ஆசான் மாற்றியமைத்தார். ஈழவர்களிடையே நிலவிய, இடையீடான உறவுகளை சிதைத்த உட்குழுக்களை ஒட்ட வைத்ததன் மூலம் – ஒட்டுமொத்த ஈழவர்களின் சமூக முன்னேற்றத்திற்கான, சமூக ஒற்றுமைக்கான பங்களிப்புகளை, சாத்தியங்களை அளவிட முடியாததாக்கினார். மனிதரின் முழு வளர்ச்சிக்கும் வாய்ப்பளிக்கிற, மானுடத்தின் அடிப்படை அலகாக ஈழவர்களை முன்னெடுத்தார்.

சமநிலை நாட்டத்தை இயல்பான போக்காக்கிய ஆசான், ஏற்றத்தாழ்வற்ற முழுமையையே சமநிலையென உறுதி எடுத்துக் கொண்டார். அந்த முழுமையை இலக்கை நோக்கி மனித சமுதாயம் தொடர் பயணம் செய்கிறது என்பது ஆசானின் முழு நம்பிக்கை. தொடர்ச்சி, மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மாற்றம் தவிர்க்க முடியாததோர் இயற்கை என்பது ஆசானின் பிரகடனம். மாற்றம் முழுமையை நோக்கி நிகழ்வதால் ஒவ்வொரு கட்டத்திலும் குறைகள் நீங்கி, நிறைகள் சேர்கின்றன. நீக்கம் அழிவாகிறது; சேர்க்கை ஆக்கமாகிறது என்பது ஆசான் விரும்பிய இயங்கியலாகும்.
வளர்ச்சிப் போக்கில் அழிவும் ஆக்கமும் இணைந்து நிற்கின்றன. வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் ஏற்பாடுகளை அழித்தொழிப்பதைக் கட்டாயமானதென்று ஆசான் கருதினார். முழுமையை இலக்காகக் கொண்ட மாற்றம் நீதியை நிலை நாட்டும் புரட்சி தகாத அமைப்புகளைத் தூக்கியெறிவதால் கோரமானதாக கொடுமையுள்ளதாகத் தோன்றினாலும், அதை நாம் கருணையின் செயலெனக் கொள்ள வேண்டுமென்பது ஆசானின் கருத்து. ஆசான் எந்த ஒடுக்கப்பட்ட பிரிவில் பிறந்தாரோ, அந்த சமூகப் பாட்டாளி வர்க்கத்தினர் இனி எத்தகைய சுமையையும் இழிவையும் ஏற்கக் கூடாது என்பதே அவருடைய சூளுரையாகும்.

ஆசான் மக்களைச் சந்திப்பதை முதல் பணியாகக் கொண் டார். தனிக் கூட்டங்கள் கூட்டி, அதில் சமூக முரண்பாடுகளை விவாதித்தார். பொதுக் கூட்டங்களில் சமூக வளர்ச்சிக்கான உரைவீச்சினை நிகழ்த்தினார். மாநாடுகளில் கருத்துப் பொழிவினை நல்கினார். கணக்குகள் எழுதி வைத்து பொதுப் பணத்தைப் பாதுகாத்துப் பயனுடைய செயல்களுக்கு மட்டுமே செலவிடச் செய்தார். மாறிவரும் காலத்தின் போக்கைச் சுட்டிக்காட்டி, முன்னேறுவதற்கான செம்மையான பாதையை அமைத்தார். புதிய ஒன்றுபட்ட போக்கின் நன்மையை மக்களுக்கு உணர்த்து வதற்காக ஒல்லும் வகையெல்லாம் முயன்றார். மாநாடுகள் நடத்தும்பொழுது, அறிவியல் முறையில் வளர்ந்து வரும் தொழில் வளர்ச்சியைப் படிக்காதவர்களும் தெரிந்து கொள்ள வாய்ப்பாக, தொழில் கண்காட்சிகளை கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏற்படுத்தினார். 1904இல் கொல்லத்திலும், 1906இல் கண்ண னூரிலும் இத்தகைய தொழில் கண்காட்சிகள் ஆசானால் நடத்தப்பட்டன.

எதற்கெடுத்தாலும் புறச்சூழலையே காரணம் கற்பித்து, சுயமுயற்சியிலிருந்து தப்பித்துக் கொள்ளும் போக்கு, தாழ்த்தப்பட்ட மக்களிடம் நிரம்பி வழிந்த நிலைமைக்கு ஆசான் முற்றுப்புள்ளி வைத்தார். முதலில் உள்முகக் கோளாறுகள் தீர்க்கப்படுவது, சமூக வளர்ச்சிக்கு முதற்படி என்றார். சுய ஊக்கம், சுய ஆர்வம், சுய முன்னேற்றத்திற்கு முன்நிபந்தனை என்றார். ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்திலும் உள்ள பாழ்படுத்தும் பழக்கங்களை ஆசான் விட்டு விடச் செய்தார். உட்குழு சுய இன்பத்தில் திளைத்த மக்களை ஒரே அமைப்பாக்குவதில் ஆசான் வெற்றி பெற்றார்.

உள்சீர்திருத்தப் போக்கில் திருந்திய வழியில் மக்களைச் செலுத்தும் செயல் வீரரான ஆசான், ஈழவர்களிடமிருந்த பொருள் வாழ்வைப் பாழ்படுத்தின தாலிகெட்டு, திறந்துகுளி, புளிகுடி முதலிய பழக்கங்களை கை விடச் செய்தார். நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் நிகழ வேண்டுமென்றும், அதில் மாலை மாற்றிக் கொள்வது மட்டுமே முக்கிய நிகழ்வாக அமைய வேண்டுமென்றும், புதியதொரு சமுதாய வழி வகுக்கப்பட்டது. பல மனைவியர் முறை, பல கணவர் முறை, பால்ய திருமணம் போன்ற சமுதாயச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. திருமணச் செலவுகள் குறைக்கப்பட்டன. வீண் சண்டையிட்டு நீதிமன்றங்களுக்குப் போவது தவிர்க்கப்பட்டது. கூட்டுறவுச் சங்கங்களை நிறுவி வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வது துரிதப்படுத்தப்பட்டது. கோயில்களுக்கருகில் அறிவுரையாற்றும் மண்டபங்கள் எழுப்பப்பட்டன. தொழிற்பயிற்சிக் கூடங்கள் நிறுவப்பட்டன.

மதுவால் விளையும் நாசங்களைக் கூறி, அவற்றைக் கண்டிப்பாக ஒதுக்கிவிட அறிவுறுத்தப்பட்டது. மாற்றுத் தொழிலை நாடிச் செல்ல வேண்டும் என்றும், பரம்பரைத் தொழிலான கள்ளிறக்குதல், கழனியில் வேலை செய்தல், கயிறு திரித்தல் இவைகளிலேயே மூழ்கியிருப்பது வளர்ச்சிக்கு வழியல்ல எனக் காட்டப்பட்டது. விலங்கு நிலை நீங்கி, விலங்கறுபட்டு, வீறு நிறைந்த வாழ்க்கையைப் பெறுவதற்கான வினையூக்கியாக கல்வி முன்னிறுத்தப்பட்டது. ஒவ்வொருவரும் கல்வியைப் பெறுவதிலும், கல்வியைப் பரப்புவதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும், பெண் கல்வியை ஊக்குவிக்க வேண்டுமென்றும் உறுதியேற்கப்பட்டது. இலக்கிய மன்றங்களும், படிப்பகங்களும் தோற்றுவிக்கப்பட்டு, கல்வி மணத்தை அனைவரும் நுகர ஆயத்தப்படுத்தப்பட்டனர். நாராயண குருவின் முயற்சியால் சிவகிரியில் ஓர் ஆங்கில உயர்நிலைப் பள்ளி தோற்றுவிக்கப்பட்டது. இந்த வழிகாட்டலைப் பின்பற்றி, கல்வியின் அருமையை பாமரர்களுக்கு உணர்த்துவதிலும், அந்த வாய்ப்பை அவர்கள் அடைவதற்குக் குறுக்கே நிற்கும் தடைகளை நீக்குவதிலும் ஆசான் முன்னிலையில் திகழ்ந்தார்.

நாராயணகுருவுடன் இணை சேர்ந்து ஆசான் ஊன்றிய வித்து, முளைவிட்டு, வளர்ந்து பயன் தந்த காரணத்தால் – ஈழவர் பெரும்பான்மையோர் கருவியாக்கிக் கொண்டு, பார்ப்பனிய மரபால் ஏற்படுத்தப்பட்ட சிறுமையை விட்டு, புதிய பெருமையோடு வேகமாக முன்னேறினர். இதுகண்டு ஏனைய தாழ்த்தப்பட்ட சாதியினரும் கல்வியின் சிறப்பை உணர்ந்து அவ்வழியைப் பின்பற்றினர்.

சிறீநாராயண தர்ம பரிபாலன யோகத்தின் லட்சியமும், ஆசானின் பொதுச் செயலாளர் பணியேற்பும் – ஈழவர்களுக்குப் புத்தொளி காட்டிப் புதுப்பாதையில் இட்டுச் சென்றன. ஈழவர்களின் உள்முகமான சீர்திருத்தங்கள், பிற ஒடுக்கப்பட்ட மக்களையும் கவ்வியது. கிறித்துவம் ஏற்படுத்திய கல்வி நிறுவனங்களும், நாராயணகுரு குமாரன் ஆசான் ஆகியோர் தந்த உந்துதலும் சேர்ந்தே, இந்தியத் துணைக் கண்டத்திலேயே படித்தவர் தொகை மிக்க மாநிலமாக கேரளத்தை ஆக்கிவிட்டன.

தொடரும்