இந்திய அரசமைப்புச் சட்டத்தின் (முதல் திருத்த) சட்டவரைவு விவாதம் 18.5.1951 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றபோது அம்பேத்கர் ஆற்றிய உரை. "பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 15, பக் கம் : 331

சட்ட அமைச்சர் (டாக்டர் அம்பேத்கர்) : நேற்றைய விவாதத்தின்போது, இந்த சட்டவரைவின் பல்வேறு விதிகளின் அவசியம் பற்றி விளக்கிக் கூறாததால், அவைக்கு அரசு பெரிய அநீதி விளைவித்து விட்டது என்றும்; அரசுத் தரப்பில் யாராவது ஒருவர் – என்னைப் பற்றி குறிப்பாகச் சொன்னார் – எழுந்து உரையாற்றி, அவைக்கு அந்தக் கடமையை ஆற்றியிருக்க வேண்டும் என்றும் எனது நண்பர் பண்டிட் ஹிருதயநாத் குன்ஸ்ரு கூறினார். அறிவாற்றல் மிக்க மதிப்பிற்குரிய எனது நண்பர் பண்டிட் ஹிருதயநாத் குன்ஸ்ருவுக்கு, இந்தச் சட்டவரைவு பற்றிய விளக்கம் தேவைப்படும் என்று இந்த அவையின் எந்த உறுப்பினராவது நம்புவாரா என்று எனக்குத் தெரியவில்லை.

எனது நண்பர் டாக்டர் சியாமப்பிரசாத் முகர்ஜிக்கு இந்த சட்டவரைவு பற்றிய விளக்கம் எதுவும் தேவையில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் உரையாற்றி முடித்த உடனேயே, அவர் எழுந்து தமது தாக்குதலைத் தொடுத்தார். எனது நண்பர் டாக்டர் முகர்ஜியைவிட, எனது நண்பர் பண்டிட் குன்ஸ்ரு அறிவாற்றல் குறைந்தவர் என்று நான் கருதவில்லை. இருப்பினும், இந்த அவையின் பல உறுப்பினர்களின் விருப் பத்தை அவர் வெளிப்படுத்தியதால் இந்த விவாதத்தில் தலையிட்டு, விவாதத்தின்போது பயன்படுத்தப்பட்ட இரண்டு வாதங்களை உடைத்தெறிந்து, நிலைமையை விளக்கிக் கூறுவது எனது கடமை என்று எண்ணினேன்.

அந்த இரு வாதங்களில் அரசியல் சட்டத்திற்கு திருத்தம் எதுவும் தேவை யில்லை என்பது, என்னுடைய முதல் வாதம். அரசாங்கம் பொறுத்திருக்கலாம்; நாட்டுக்கும் பொது மக்களுக்கும் நீண்ட அவகாசம் அளித்திருக்கலாம். இந்த சட்டமியற்றலை அவசரமாகச் செய்ய வேண்டியது இல்லை என்பது என்னுடைய இரண்டாவது வாதம். நான் எனது உரையில் சட்டவரைவை ஒவ்வொரு பிரிவாக எடுத்துக் கொண்டு, இந்த சட்டவரைவில் செய்யவிருக்கும் மாற்றங்களின் அவசியம் பற்றி விளக்க முயல்கிறேன். நான் இந்த சட்டவரைவின் இரண்டாவது பிரிவிலிருந்து தொடங்குகிறேன். சட்டவரைவின் பகுதி 2, விதி 15அய் (மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவற்றில் எதன் அடிப்படையிலும் அரசு எந்தவித வேற்றுமையும் பாராட்டக் கூடாது) திருத்த உத்தேசித்துள்ளது.

சென்னை மாகாணத்திலிருந்து தன் முன்வந்த இரண்டு வழக்குகளில், உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்புகளே விதி 15க்கு திருத்தத்தை அவசியமாக்கியுள்ளன. ஒரு வழக்கு, மெட்ராஸ் அரசு எதிர் சண்பகம் துரைராஜன்; மற்றது, மெட்ராஸ் அரசு எதிர் வெங்கட்ராமன். வெங்கட்ராமன் வழக்கில் தொடர்புடையது விதி 16, பிரிவு (4) (அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என அரசு கருதும் எந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கும் வேலைவாய்ப்பிலும், பதவிகளிலும் இடஒதுக்கீடு வழங்குவதற்குத் தடையாக இந்தச் சட்டப்பிரிவின் எந்தப் பகுதியும் இருக்க முடியாது) சண்பகம் துரைராஜன் தொடர்புடைய விதி 29, பிரிவு (2) (மதம், இனம், சாதி, மொழி ஆகியவற்றின் அல்லது அவற்றில் ஏதாவது ஒன்றின் அடிப்படையில் மட்டும் அரசின் நிதி உதவியால் நிர்வகிக்கப்படும் எந்த கல்வி நிறுவனத்திலும் யாருக்கும் அனுமதி மறுக்கலாகாது).

ஒரு வழக்கில் உட்படுத்தப்பட்ட கேள்வி, பொதுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு செய்வது பற்றியது. மற்றொரு வழக்கில் உட்படுத்தப்படும் கேள்வி, கல்வி நிறுனவங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு செய்வது பற்றியது. அவர்கள் எழுப் பிய கேள்வி, சென்னை மாகாணத்திலும் மற்ற இடங்களிலும் அறியப்பட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் பற்றிய அரசாணை பற்றியது. மெட்ராஸ் அரசின் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ ஆணை, சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று அறிவிக்கப்பட்டதற்கான வாதம் இதுதான்.

விதி 29, பிரிவு (2)க்கு, விதி 16இன் பிரிவு (4) போல் விளக்க வாசகம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அவையின் கவனத்தில் இருப்பதுபோல், விதி 16, பிரிவு (4)இன் கீழ், அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குப் போதிய அளவு இடஒதுக்கீடு செய்வதற்கு விதி 16 (அரசின் எந்தப் பதவிக்கான நியமனத்திலும் அல்லது வேலைவாய்ப்பிலும் அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு இருத்தல் வேண்டும்).

குறுக்கே நிற்காது என்ற சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அத்தகைய வகை யுரையை விதி 29இல் காண முடியாது. விதி 16, பிரிவு (4)அய் பொறுத்தவரை, சாதி என்ற காரணத்தால் வேறுபாடு செய்யப்படுகிறது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்தது. எனவே, அது சட்டப்படி செல்லத்தக்கதல்ல. உச்ச நீதிமன்றத்தின் இரு தீர்ப்புகளையும் கவனமாகப் பரிசீலித்தேன். உச்ச நீதி மன்ற நீதிபதிகளுக்கு எல்லா மரியாதை யும் செலுத்தும் அதே நேரத்தில், தீர்ப்பு முற்றிலும் திருப்தியளிக்கவில்லை என்று நான் காண்பதைக் கூறாமல் இருக்க முடியவில்லை.

திரு. நசிருதீன் அகமது (மேற்கு வங்காளம்) : அய்யா, ஓர் உரிமைப் பிரச்சினை. நாட்டின் உச்சபட்ச நீதிமன்றம் பற்றி மரியாதைக் குறைவாக ஓர் உறுப்பினர் பேசுவது முறையாகுமா? நீதிமன்றங்கள் பற்றி இழிவாகப் பேசாமல் இருப்பது நாடாளுமன்றத்தின் மரபு.

டாக்டர் அம்பேத்கர் : கற்றறிந்த நீதிபதிகள் பற்றி அவதூறாகப் பேசுவது என்பது இதில் எதுவுமே இல்லையே!

திரு. அவைத் தலைவர் : அந்த சொல்லைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்று நானும் நினைத்தேன். ஆனால், மாண்புமிக்க சட்ட அமைச்சர் சொல்ல வந்தது, அரசாங்கம் என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்ற நோக்கில் தீர்ப்பு திருப்தியற்றது என்பதாகும் என நான் நினைக்கிறேன்.

டாக்டர் அம்பேத்கர் : தீர்ப்பு அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருப்பதாகத் தோன்றவில்லை. இது, என்னுடைய கருத்து.

திரு. அவைத் தலைவர் : உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட எந்தத் தீர்ப்பின் மீதும் மாண்புமிகு அமைச்சர், அத்தகைய எந்த விமர்சனமும் செய்வது முறையாகாது என நான் அஞ்சுகிறேன்.

டாக்டர் அம்பேத்கர் : நான் மிகவும் வருந்துகிறேன்.

திரு. அவைத் தலைவர் : அவர் வெளிப்படுத்தியது வேறு ஒரு மாறுபட்ட விவாதத்திற்கு இடமளிக்காதா என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்; அதõவது, அரசாங்கம் செய்ய உத்தேசித்துள்ளதன் கண்ணோட்டத்தில் தீர்ப்பு திருப்தியளிக்கவில்லை என்பது.

மாண்புமிகு உள்துறை அமைச்சர் (திரு. ராஜகோபாலாச்சாரி) : எனது தலையீட்டை மாண்புமிகு அவைத் தலைவர் மன்னிப்பாரா? நான் நினைக்கிறேன், மாண்புமிகு சட்ட அமைச்சர் கூறியதன் உண்மையான பொருள் என்னவெனில், இந்தத் தீர்ப்பால் சந்தேகம் எழுந்துள்ளது.

திரு. அவைத் தலைவர் : நாம் இப்பொழுது விவாதத்தைத் தொடரலாம்.

டாக்டர் அம்பேத்கர் : என் கருத்து என்னவெனில், விதி 29, பிரிவு 2இல், மிக முக்கியமான சொல் "மட்டும்' என்பதாகும். இனம், மதம் அல்லது பால் என்ற அடிப்படையில் மட்டுமே எந்தப் பாகுபாடும் காட்டப்பட மாட்டாது. "மட்டும்' என்ற சொல், மிக முக்கியமானது. இந்த விதியில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர, மற்ற அடிப்படையில் எந்த வேறுபாடும் செய்வதை இது தவிர்க்கவில்லை. நான் பணிவுடன் கூறிக் கொள்கிறேன். "மட்டும்' என்ற சொல் எந்த அளவுக்கு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு அது பரிசீலனைக்கு உட்படுத்தப்படவில்லை.

அடுத்து, விதி 16 பிரிவு (4)அய் பொறுத்தவரை, நான் பணிவுடன் கூறிக் கொள்வது என்னவெனில், ஒரு ஜாதியைச் சேர்ந்தவரை ஒதுக்கி வைக்காமல் – எந்த இடஒதுக்கீட்டையும் செய்வது உண்மையிலேயே சாத்தியமில்லை. முல்லாவின் கடைசிப் பதிப்பில் முதல் பக்கத்திலேயே, ஒரு ஜாதியைக் கொண்டிராத ஓர் இந்து இல்லை என்று கூறப்பட்டுள்ள அடிப்படைக் கோட்பாடுகளில், ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டுமென நான் நினைக்கிறேன். ஒவ்வொரு இந்துவுக்கும் ஒரு ஜாதி உள்ளது – அவன் ஒரு பார்ப்பனன் அல்லது ஒரு மகரட்டா அல்லது ஒரு குன்பி அல்லது ஒரு கும்பர் அல்லது ஒரு கார்பென்டர். சாதியில்லாத இந்து எவரும் இல்லை என்பது ஓர் அடிப்படைக் கருத்து. எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படுவோருக்கு இடஒதுக்கீட்டை நீங்கள் செய்தால், அது சில குறிப்பிட்ட ஜாதிகளின் தொகுப்பைத் தவிர வேறல்ல; இதில் உட்படுத்தப்படாதவர்கள், சில ஜாதிகளைச் சார்ந்தவர்கள்.

எனவே, இந்த நாட்டின் சூழ்நிலையில், ஒரு ஜாதியைக் கொண்டுள்ள சில நபர்களை விட்டு விடாமல் ஒதுக்கீட்டைத் தவிர்ப்பது சாத்தியமில்லை. இக்காரணங்களால், சொந்த முறையில் தீர்ப்பு மிகத் திருப்தியானது என்று நான் கருதவில்லை. இது தொடர்பாக, அவையும் சில உறுப்பினர்களும் என்ன கூறியபோதிலும், எனது வழக்கறிஞர் தொழிலை நடத்திய காலத்தில், தலைமை வகிக்கும் நீதிபதியிடம் – அவருடைய தீர்ப்புக்கு நான் கீழ்ப்படிவேன் என்றும், ஆனால் அதை மதிக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை என்றும் அடிக்கடி கூறியுள்ளேன் என்பதைக் கூற விரும்புகிறேன். நீதிபதியிடம் அவர் தீர்ப்பு தவறு என்று கூறும் உரிமை, ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் உண்டு. அந்த சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை. எந்த நீதிபதிகள் முன் நான் வழக்கு நடத்தினேனோ, அவர்களிடம் எப்பொழுதும் இது விஷயத்தில் என் கருத்தைக் கூறியிருக்கிறேன்.

இப்பொழுது கவனத்தில் இருத்திக் கொள்ள வேண்டிய விஷயம்; நெறிமுறைக் கோட்பாடுகளின் 46ஆவது விதியில், பொதுமக்களில் நலிவடைந்த பிரிவினர் என்று அழைக்கப்படுவோரின் நல்வாழ்க்கையையும் நலனையும் மேம்படுத்த, சாத்தியமான அனைத்தையும் செய்யும் கடமை அரசாங்கத்திற்கு உள்ளது. அதை நான் புரிந்து கொண்டுள்ளபடி, அவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அல்லது அதைப்போன்ற பிற வகுப்பினர்களான, தங்கள் சொந்தக் காலில் நிற்கமுடியாமல் உள்ள – பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் ஆவர்.
 
விதி 46அய் ங் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துதல் சி நிறைவேற்றுவதற்காகத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் கடமை, அரசாங்கத்திற்கு மட்டுமின்றி, நாடாளுமன்றத்திற்கும் உள்ளது. அது நிறைவேற்றப்பட வேண்டுமெனில் (கல்வி மற்றும் பொருளாதார நலன்களை மேம்படுத்துவது), நலிவடைந்த பிரிவினர் என்று கூறப்படும் மக்களின் முன்னேற்றத்தைத் தடை செய்யும் விதத்தில், விதி 29, பிரிவு (2) மற்றும் விதி16, பிரிவு (4) ஆகியவை விவாதம் செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த, ஒரு திருத்தத்திலிருந்து ஒருவர் தப்பித்துவிட முடி யும் என்று நான் நினைக்கவில்லை. விதி 15இன் திருத்தத்திற்கான அவசியம் இதுதான்.