“சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக இந்துக்கள் கூச்சநாச்சமின்றி மேற்கொள்ளும் வன்முறைகளால் பட்டியல் சாதியினரின் நிலை, தென்னாப்பிரிக்க இந்தியர்களின் நிலையைவிட மிக மோசமாக இருக்கிறது. பட்டியல் சாதியினரைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்யவும் ஆங்கிலேய அரசு தவறிவிட்டது. எனவே, தேவையான சர்வதேச நடவடிக்கைகளுக்காக அய்க்கிய நாடுகள் அவை தலையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களின் பிரச்சனையை விசாரிக்கும் சட்ட அதிகாரம், அய்க்கிய நாடுகள் அவைக்கு இருப்பதைப் போலவே - இந்தியாவில் உள்ள எட்டு கோடி பட்டியல் சாதியினர் சார்பாக அளிக்கப்படும் கோரிக்கையை விசாரிக்கும் அதிகார எல்லை, அய்க்கிய நாடுகள் அவைக்கு உண்டு.’
- டாக்டர் அம்பேத்கர், 17.1.1947

தலித் மக்களைப் பாதுகாக்க ஆங்கிலேய அரசு தவறிவிட்டது என்று கூறி, அறுபதாண்டுகளுக்கு முன்பே டாக்டர் அம்பேத்கர், அய்க்கிய நாடுகள் அவையின் உதவியை நாடியுள்ளார். இன்று ஆங்கிலேய அரசு இல்லை. சாதி இந்துக்கள்தான் அரை நூற்றாண்டுக்கும் மேலாக நாட்டை ஆள்கின்றனர். இருப்பினும், 20 கோடிக்கும் மேற்பட்ட தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. இன்றும் நாம் அய்க்கிய நாடுகள் அவையை நாடவேண்டிய தேவை உள்ளது.
அய்க்கிய நாடுகள் அவையின் ‘அனைத்து வகையான இனப்பாகுபாட்டையும் ஒழிக்கும் தீர்மான'த்தில் (Convention on the Elimination of All Forms of Racial Discrimination - CERD) இந்திய அரசு 1968 இல் கையெழுத்திட்டு, அதை முறைப்படி ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தீர்மானம் குறித்த ஆண்டறிக்கையை அய்.நா. வல்லுநர் குழு முன்பு 23, 26 பிப்ரவரி, 2007 ஆகிய நாட்களில் இந்தியா விவாதத்திற்கு வைத்தது. அதில், “தொழில் மற்றும் மரபு ரீதியான பாகுபாடுகள்தான் நிலவுகின்றன; சாதி ரீதியான பாகுபாடுகள் இல்லை. மேலும், தலித் மக்களைப் பாதுகாக்க பல ஆணையங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன; நாடாளுமன்ற குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதிப்பாகுபாடும், இனப்பாகுபாடும் ஒன்றல்ல’ என்று உண்மைக்கு மாறாக கருத்து தெரிவித்துள்ளது.

ஆனால், “இனம், நிறம், தொழில் அல்லது பிறப்பின் அடிப்படையில் கடைப்பிடிக்கப்படும் பாகுபாடுகள் அனைத்துமே - இத்தீர்மானம் விதி 1இன்படி எதிர்க்கப்பட வேண்டும். அந்த வகையில், சாதிப்பாகுபாடும் இனப்பாகுபாடும் ஒன்றல்ல என்ற இந்திய அரசின் கருத்து ஏற்கத்தக்கதல்ல’ என்று அய்க்கிய நாடுகள் அவை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இறுதியாக, அய்.நா. அவை வல்லுநர் குழுவின் பெண் பிரதிநிதி ஒருவர், “சமூகப் பாகுபாடுகளை ஒழிப்பதில் இந்தியா நேர்மையாக இருந்தால், அய்.நா. அவையின் தீர்மானத்தை அச்சுறுத்தலாகப் பார்க்காமல், இந்தியாவில் பாகுபாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் சாதி அமைப்பை ஒழிப்பதற்கு, இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்று இந்திய ஆட்சியாளர்களுக்கு உறைக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் (‘டெக்கான் க்ரானிக்கல்', 22.3.2007). இருப்பினும், ஜாதிய சிந்தனை கொண்ட ஆட்சியாளர்களுக்கு இது உறைக்காது!

இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கி 150 ஆண்டுகளாகிறது என்று காங்கிரஸ் மட்டும் கொண்டாடவில்லை; பொதுவுடைமைக் கட்சிகளும், புரட்சிகர, முற்போக்கு இயக்கங்களும்கூட, இக்காலகட்டத்தை - ஏகாதிபத்தியத்தை விரட்டியடித்த ஒரு முக்கிய நிகழ்வாகப் போற்றுகின்றன. ஆனால், ‘சுயாட்சி'யில் நடப்பது என்ன? மகாத்மா புலே தொடக்கம் பெரியார், அம்பேத்கர் வரை இந்தியாவில் ஏகாதிபத்தியத்தை விரட்டுவது என்பது, பார்ப்பனியத்தையும் சாதியத்தையும் அழித்தொழிப்பதே என்று இடையறாது வலியுறுத்தினார்கள். ஆனால், அவர்களுடைய கருத்துகளை ஏற்றுக் கொள்ள ஒரு சிலரே இருந்தனர்.

இன்றும்கூட, ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், ஜாதிய எதிர்ப்புக்கு அளிக்கப்படுவதில்லை. அதாவது, ஏகாதிபத்தியம் கூடாது; சுதேசி ஏகாதிபத்தியம் நீடிக்கலாம் என்பதுதான் அதன் உள்ளார்ந்த பொருள். உலகமயமாக்கலை முன்வைத்து இன்று நடத்தப்படும் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள், வழக்கம் போல பார்ப்பனியத்தை எதிர்க்கத் தவறுமெனில், இனிவரும் நூற்றாண்டுகளிலும் - பெரும்பான்மை மக்கள் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. ஏகாதிபத்திய எதிர்ப்பிலும் பார்ப்பனர்கள் முன்னணியில் இருப்பதை, குறிப்பாகப் பொதுவுடைமையாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

“ஏகாதிபத்தியம் ஒழிக என்ற விண்ணை முட்டும் முழக்கம், இயல்பாகவே பார்ப்பனியத்தை குறைத்து மதிப்பிடுவதாக அமைந்து விடுகிறது. பார்ப்பனியம் என்ற அடித்தளத்தின் மீதுதான் ஏகாதிபத்தியம் என்ற அமைப்பு கட்டப்பட்டிருக்கிறது. பார்ப்பனியத்தை வலுவிழக்கச் செய்துவிட்டால், அதன் மீது கட்டப்பட்டுள்ள ஏகாதிபத்தியத்தை அழித்தொழிப்பது மிகவும் எளிது’ - என்று அண்ணல் அம்பேத்கர் கூறிய அரிய கருத்தே அவருடைய 117ஆவது பிறந்த நாள் செய்தியாக இருக்க முடியும்.