போர் குதறிய ஈழ மண்ணில், அண்மையில் சிங்கள வெறியர்களின் மற்றுமொரு கொடூரப் படுகொலை. பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளின் பராமரிப்பு இல்லமான செஞ்சோலை மீது 14.8.2006 அன்று விமானத் தாக்குதல். 61 இளம் குருத்துகள் பலி. 150க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயம். பலாலி ராணுவ விமானத் தளத்தின் மீது விடுதலைப் புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தியிருந்த நிலையில், யாழ்ப்பாணம், திரிகோணமலை மற்றும் மட்டகளப்பு நகரங்களை விடுதலைப் புலிகள் சுற்றி வளைத்து நின்ற வேளையில், ராணுவ ரீதியாக அவர்களை சந்திக்க முடியாமல், உளவியல் ரீதியாக புலிகளைத் தாக்கவே, அந்த இளம் குருத்துகளைக் கொன்று, தன் ரத்த வெறியைத் தீர்த்துக் கொண்டிருக்கிறது சிங்களப் பேரினவாதம்.

Prabakaran

குண்டு வீச்சு நடந்த இடத்தைப் பார்வையிட்ட அய்.நா. பெருமன்றத்தின் பிரதிநிதிகள், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், ஊடகவியலாளர் என அனைத்துத் தரப்பினரும் அந்த இடம் ஒரு பாடசாலை என அறுதியிட்டுக் கூறுகின்றனர். ஆனால், சிங்கள அரசோ, "குண்டு வீச்சு நடந்தது அடையாளம் காணப்பட்ட ஒரு பயிற்சிப் பாசறை மீது" என்று புளுகுகிறது. சிங்கள அரசின் இந்தக் கொடூர முகம் கண்டு தமிழகமே கொந்தளித்து நிற்கிறது. தமிழக சட்டப்பேரவையில் இக்கொடூரத்தைக் கண்டித்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டது. 1980களின் முற்பகுதியில் இலங்கையில் இனக்கலவரம் பெரிதாக வெடித்தபோது, எவ்வாறு தமிழகமே ஓரணியில் திரண்டு நின்றதோ, அவ்வாறு இன்றும் தமிழகம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் பேரெழுச்சி கொள்கிறது! இந்த உணர்வுப் பெருக்கத்திற்கு நடுவே, செஞ்சோலை குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனதிற்கு மிகவும் பிடித்தமான இடம் என்றும், அவருடைய நேரடிக் கண்காணிப்பில் விடுதலைப் புலிகள் இயக்கமே செஞ்சோலையை நிர்வகிக்கிறது என்றும் பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன!

ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் ஓர் இயக்கத்திற்கும், சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கும் என்ன தொடர்பு? அப்படி ஒரு சிறுவர் பராமரிப்பு இல்லத்தை அவர்கள் நடத்துவார்களேயானால், அது கண்டிப்பாக அந்த சிறுவர்களை இயக்கத்திற்கு, போருக்குத் தயாரிக்கும் இல்லமாக மட்டும்தானே இருக்க முடியும் என்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை. இந்தப் பின்னணியில், உண்மையில் செஞ்சோலைக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இருக்கும் தொடர்புதான் என்ன? செஞ்சோலையில் என்னதான் நடக்கிறது? என்ற கேள்விகளோடு ஆராய முற்பட்டபோது, கிடைத்த தகவல்கள் நம்மைப் பெரும் வியப்பில் ஆழ்த்துகின்றன!

போரினால் இழப்புகளை சந்திக்காத குடும்பங்களே இல்லை என்ற நிலையில், குடும்பத்தையே இழந்த குழந்தைகளின் நிலை மிகவும் வேதனைக்குரியதாகும். உளவியல் சிக்கல்கள் உட்படப் பல்வேறு சிக்கல்களுக்கு ஆட்பட்டு, திசை மாறிப் போகும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகின்றனர். அதிலும் குறிப்பாகப் பெண் குழந்தைகளின் நிலை இன்னும் அதிக சிக்கலானது. இந்நிலையை மாற்றி, போரினால் பெற்றோரை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகளைப் பராமரிக்கவும், அவர்களது எதிர்காலத்திற்கு நல்வழி காட்டவும் உருவாக்கப்பட்ட அமைப்பே செஞ்சோலை.

இதைப் போன்றே ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்காக "காந்தரூபன் அறிவுச்சோலை' என்ற இல்லமும் உள்ளது. பெற்றோரை இழந்து யாரும் அற்ற நிலையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்ந்த காந்தரூபன் என்ற இளைஞர், தானே விரும்பி தலைவரிடம் கேட்டு கரும்புலியாய் சென்று வீரச்சாவை தழுவிக் கொண்டார். இம்மாவீரன், பிரபாகரனிடம் “யாரும் அற்றவனாக வாழ்ந்த என்னை விடுதலைப் புலிகள் என்னும் குடும்பத்தில் இணைத்து ஆளாக்கியதைப் போல், தமிழீழத்தில் அநாதைகளாக வாழும் பிள்ளைகளை இணைத்து அவர்களை அநாதைகள் என்ற நிலையில் இருந்து மீட்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். அந்த மாவீரனின் விருப்பத்தை நிறைவேற்றும் முகமாக 'காந்தரூபன் அறிவுச்சோலை' எனப் பெயரிடப்பட்டது.

தமிழீழமெங்கும் 8 செஞ்சோலைகளும், 6 காந்தரூபன் அறிவுச்சோலைகளும் உள்ளன. இந்த இரு இல்லங்களின் குழந்தைகளை, எந்தக் காரணத்தை முன்னிட்டும் இயக்கத்தில் சேர்ப்பதில்லை. அவர்களுக்கு போர்ச் சூழலில், அவசர காலங்களில் செயல்படுவதற்குரிய பயிற்சிகளும், மருத்துவப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அவ்வாறு அளிக்கப்படும் பயிற்சிகளில் ஒன்றான பேரிடர் மீட்புப் பயிற்சி பெறுவதற்காக, தமிழீழமெங்கும் உள்ள செஞ்சோலைகளிலிருந்து 400க்கும் மேற்பட்ட மாணவிகள் வள்ளிப்புனம் செஞ்சோலை மய்யத்தில் திரண்டிருந்தனர். இந்தத் தகவலை அறிந்த சிங்கள ராணுவம், திட்டமிட்டே வள்ளிப்புனம் செஞ்சோலை வளாகத்தில் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

சமாதான முகத்தோடு உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும் சிங்கள அரசின் உண்மை முகம் இத்தனைக் கொடூரமானது என்றால், மறுபுறம் இதே உலக நாடுகளால் இரக்கமற்ற பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கமோ செஞ்சோலை மட்டுமல்ல; போரினால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் எனப் பல தரப்பினரையும் பராமரிக்க, அவர்களின் எதிர்காலத்தைச் சிறந்த முறையில் உறுதி செய்ய அக்கறையோடும், மனிதாபிமானத்தோடும் பல்வேறு இல்லங்களை நடத்தி வருகின்றனர்.

முல்லைத் தீவில் செந்தளிர் சிறுவர் இல்லம், 2000 ஆவது ஆண்டு முதல் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டு வருகிறது. காந்தி நிலையம் என்ற பெயரில் சிறுவர் பராமரிப்பு இல்லம், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தால் நடத்தப்படுகிறது. கிளிநொச்சி, முல்லைத் தீவு மாவட்டங்களில் அய்ந்து இல்லங்கள் உட்பட, தமிழர்கள் வாழும் எட்டு மாவட்டங்களில் 45 சிறுவர் இல்லங்கள் உள்ளன. கைக்குழந்தை முதல் அய்ந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்காக குருகுலம் ஒன்றும் தமிழர் புனர் வாழ்வுக் கழகத்தால் நடத்தப்படுகிறது. போரில் உடல் குறை ஏற்பட்ட போராளிகளான ஆடவர், மகளிர் புனர்வாழ்விற்கான 'நவம் அறிவுக் கூடம்' செயல்பட்டு வருகிறது. இவர்களுக்கு பொதுக் கல்வி, கணினிப் பயிற்சி, தொழிற் கல்வி அளிக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்படுகிறது. மேலும், தாய் மண்ணிற்கான தமது பிள்ளைகளை ஈந்து தனித்து நிற்கும் பெற்றோரை பிரபாகரன் தனது நேரடிக் கண்காணிப்பில் பராமரிக்கின்றார். அதற்கு மூதாளர் இல்லம் என்று பெயர்.

ஆனால், இவை விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருக்கும் பல பணிகளில் சிலது மட்டுமே. ஏனெனில், விடுதலைப் புலிகள் தங்களின் 25 ஆண்டு காலத்திற்கும் மேலான போராட்டத்தின் விளைவாக மீட்டெடுத்த தமிழீழப் பகுதிகளில் ஒரு முழுமையான அரசு அதிகாரத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் முல்லைத் தீவு மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், யாழ் மாவட்டத்தில் முகமாலை ராணுவச் சாவடிக்கு இப்பால் உள்ள பகுதி; வவுனியா மாவட்டத்தில் ஓமந்தைக்கு வடக்கு புளியங்குளம் ஒட்டியுள்ள பகுதி, மன்னார் மாவட்டத்தில் உயிலங்குளத்திற்கு வடகிழக்கில் உள்ள பகுதிகள், அம்பாறை, மட்டக்களப்பு, திரிகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் ஒவ்வொரு பகுதி நிலப்பரப்பு ஆகியவை உள்ளன. இங்கு தமிழீழ அரசியல் துறையின் கீழ் இயங்கும் துறைகளின் வழியாக நிர்வாகம் செய்யப்படுகிறது.

உள்துறைக்கு நிகரான அரசியல் துறை, காவல் துறை, நீதி நிர்வாகத் துறை, பொருண்மியத் துறை (நிதி) ஆகிய முக்கிய நிர்வாகத் துறைகள் தவிர, தமிழீழச் சூழல் நல்லாட்சி ஆணையம், தமிழீழ அரசியல் துறை மகளிர் பிரிவு, தமிழீழக் கல்விக் கழகம், தமிழீழ மாணவர் அமைப்பு, தமிழீழ ஊரக வளர்ச்சிப் பணி, தமிழீழ வனவளப் பாதுகாப்பு, தமிழீழ விளையாட்டுத் துறை, தமிழீழ மாவீரர் போராளிகள் குடும்ப நலன், தமிழீழ வெளியீட்டுத் துறை என ஒவ்வொரு துறைக்கும் ஒரு செயலகம் இயங்குகிறது. தமிழீழ நிர்வாக சேவை, இலங்கை அரசு நிர்வாக எந்திரங்களுடன் தொடர்பு கொண்டு ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்கிறது.

தமிழீழப் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பொறுப்பு முழுவதும் தமிழீழ காவல் துறையின் ஆளுகையில் உள்ளது. காவல் துறையின் நடவடிக்கைகளுக்கு, மக்களின் சிக்கல்களை அவர்கள் தீர்த்து வைப்பதற்கு ஒரு வழிகாட்டு நெறி தேவைப்பட்டது. இலங்கை அரசின் சட்டங்களில் பெரும்பான்மையானவை, தமிழீழ அரசின் நோக்கங்களுக்கு முரணாக இருந்தன. எனவே, தமிழீழத்திற்கென, தமிழர் பண்பாட்டுச் சூழலின் பின்னணியில், தமிழர் வாழ்நலன்களை நோக்கிய சமூக விடுதலை, பெண் விடுதலையை உள்ளடக்கிய சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டிய அவசியம் எழுந்தது. அவ்வாறான சட்டங்களை வடிவமைப்பதற்கென, உலகளாவிய வகையில் சிறந்த சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்பட்டு, தமிழீழச் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

இந்தியாவில் மனுநீதி அடிப்படையில் இந்துக்களுக்கு 'உரிமை'களை வழங்குவதாக உள்ள இந்துச் சட்டத்தைப் போல் அல்லாமல், தேச வழமைச் சட்டம் இன்று வரை ஈழத்திலும் நடைமுறையில் உள்ள இந்து சட்டக் கூறுகள் பலவற்றை ஒதுக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. சட்டங்களுக்கு அமைவாகப் பின்வரும் நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 1. உச்ச நீதிமன்றம் 2. மேன்முறையீட்டு நீதிமன்றம் 3. விசேட நீதிமன்றங்கள் 4. மேன் நீதிமன்றம் 5. மாவட்ட நீதிமன்றம் (குடியியல்) 6. மாவட்ட நீதிமன்றம் (குற்றவியல்). தமிழீழ சட்டக் கல்லூரி 1992 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகின்றது. தமிழீழ மக்களுக்கு பொருந்தக் கூடியதான தனிமனிதச் சட்டம் மற்றும் சொத்துச் சட்டங்கள் ஆகியனவற்றிற்கு அப்பால் சட்டத் துறைக் கோட்பாடு மற்றும் சர்வதேச சட்டம் ஆகிய பாடநெறிகளைக் கொண்டுள்ளதுடன் குடியியல் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுடன் ஆதாரச் சட்டங்களையும் கொண்டுள்ளது. இங்கு படித்து வெற்றி பெறுபவர்கள், சட்டவாளர்களாகப் (வழக்கறிஞர்களாக) பதிவு செய்ய உரிமையுடையவர்களாவர்.

ஈழத் தமிழ் மக்கள் பொதுவாக கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவே இருந்து வந்திருக்கின்றனர். சிங்கள மக்களுக்கு தமிழர்கள் மீது பொறாமை உணர்வு ஏற்பட முதல் முக்கிய காரணமாக இருந்தது, தமிழர்களின் கல்வியறிவே. ஆனால், போர்ச் சூழலில் முதன்மையாக பாதிக்கப்பட்டது கல்வியாகும். இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களோ, பிற வசதிகளோ இருப்பதில்லை. அதோடு தமிழ்ப் பகுதிகளில் தேர்வுகளும் முறையாக நடத்தப்படுவதில்லை. தேர்வுக் காலங்களில் போர் ஏற்படுமானால், நிலைமை இன்னும் மோசமாகிறது. இதனால் ஒரு தலைமுறையே முறையான கல்வியின்றி அவதிப்படும் நிலை உருவாகியது.

இதை சரி செய்யும் பொருட்டு, தமிழீழக் கல்விக் கழகம் நிதி வழங்கி, கல்விப் பணியை மேம்படுத்தி வருகிறது. இதற்கான பாடத்திட்டங்களை உருவாக்குவதற்காக, வன்னி சமூகக் கல்வி மன்றம் என ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை முழுவதும் தொடக்கக் கல்வி முதல் ஒரே வகையான பாடத்திட்டம் இலங்கை அரசால் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழரின் தொன்மை வரலாறு மறைக்கப்பட்டு, சிங்களவர்களே இலங்கையின் ஆதி குடிகள் என வரலாறு திரிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழர் பகுதிகளில் உண்மையான வரலாற்றைக் கற்பிக்க, வன்னி சமூகக் கல்வி மன்றம் பாடத்திட்டங்களை உருவாக்குகிறது.

தமிழ் நாட்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையான முழுமையான தமிழ் வழிக் கல்வி, இங்கு இத்தனை ஆண்டுகளாகப் போராடியும் நிறைவேற்றப்படாமலேயே இருக்கிறது. இன்றும் தமிழை ஒரு மொழிப் பாடமாக கட்டாயப்படுத்துவதற்கே ஒரு சட்டம் இயற்றும் நிலையில் நாம் உள்ளோம். ஆனால், ஈழத்தில் கடுமையான நெருக்கடிகளுக்கு இடையில், தொடக்கக் கல்வி முதல் பள்ளி இறுதி வரை அனைத்துப் பாடங்களுமே தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன. ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமே கற்பிக்கப்படுகிறது. தமிழீழக் கல்விக் கழகத்தின் மற்றொரு முக்கிய பணியாக தொழில்நுட்ப நூல்களை தமிழில் கொண்டுவரும் பெரும் பணி நடைபெறுகிறது. தமிழில் கலைச் சொற்கள், தொழில்நுட்ப சொற்கள் ஆகியவற்றை உருவாக்கும் பணி, அனைத்து துறைகளுக்கும் சிறந்த தொழில்நுட்ப நூல்களை தமிழில் உருவாக்கும் பணி போன்றவை நடைபெறுகின்றன.

யாழ் மருத்துவமனையும் கல்லூரியும், தென் ஆசியாவில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக இருந்திருக்கிறது. ஆனால், தற்போது யாழ் மருத்துவக் கல்லூரி முற்றிலும் செயலிழந்து இருக்கிறது. மருத்துவமனை போதிய வசதிகள் இன்றி, இருப்பதை வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழீழத்தில் இயங்கும் மருத்துவமனைகள் அனைத்தும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இருந்தபோதும், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்கள், பணியாளர்கள், மருந்துகள், கருவிகள் போதவில்லை என்றால், தமிழீழ மருத்துவச் சங்கத்தின் உதவியுடன் அவை சரி செய்யப்படுகின்றன.

பால் பண்ணைகளைப் போன்று வேளாண் பண்ணைகளையும் இலங்கை அரசு உருவாக்கி நடத்தி வந்தது. தமிழீழப் பகுதிகளில் இருந்த அத்தகு பண்ணைகள் போர்க் காலத்தில் பராமரிப்பின்றி விடப்பட்டன. 1996க்குப் பிறகு விடுதலைப் புலிகள் தமிழீழப் பகுதிகளான தேராவில், திருவையாறு போன்ற வேளாண் பண்ணைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, அங்கு மீண்டும் வேளாண்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தமிழீழ மக்கள் பண வரவு செலவு செய்ய வசதியாக, ஒரு வணிக வங்கியாக 'தமிழீழ வைப்பகம்' தொடங்கப்பட்டது. ஏழு பேர் கொண்ட உயர் அதிகாரம் வாய்ந்த குழு, இவ்வைப்பகத்தை இயக்குகிறது. இதன் தலைமையிடம் கிளிநொச்சியில் உள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஆறு, முல்லைத் தீவு மாவட்டத்தில் அய்ந்து, மன்னார் மாவட்டத்தில் ஒன்று என மூன்று மாவட்டங்களில் 12 கிளைகள் நடத்தப்படுகின்றன.

இதைத் தவிர, தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கிராம அபிவிருத்தி வங்கி, வேளாண்மை மேம்பாட்டுத் திட்டங்கள், சுய சார்பு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்கள், தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற பொருளாதார மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழீழ வைப்பகமும், பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் கிராமிய அபிவிருத்தி வங்கியும், வணிகர்களுக்கும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு கடன்களை வழங்குகின்றன. பல சந்தர்ப்பங்களில் போர்ச் சூழலால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களிடம் கடன் திரும்பப் பெறப்படுவதில்லை.

பெண்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் நிலைக்கு அவர்களை வளர்த்தெடுக்கும் சமூகமாக ஈழச் சமூகம் திகழ்கிறது. தமிழீழ அரசியல் துறை - மகளிர் பிரிவு, தமிழீழ நிர்வாக அமைப்புகளிலேயே சிறப்பு வாய்ந்ததாகும். முழுமையாக பெண்களால் நிர்வகிக்கப்படும் இவ்வமைப்பு, பெண்கள் மேம்பாட்டிற்கு மட்டுமின்றி, சமூக விழிப்பூட்டல் பணிகளையும் செய்கிறது. சமூக விழிப்பூட்டல்களான, சாதி ஒழிப்பு, தற்சார்பு, பெண்களின் உளவியல் சிக்கல்கள், கணவனை இழந்த பெண்களின் மறுமணம் போன்ற பல சமூக விடுதலைக்கான கருத்துகளை தெரு நாடகங்கள், கருத்தரங்குகள், திரைப்படங்கள், பாடல்கள் போன்றவற்றின் வழியாக மக்களுக்கு எடுத்துச் செல்லும் பெரும் பணியையும் இப்பிரிவு மேற்கொள்கிறது.

பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு நிறுவனம் வள்ளிப்புனத்தில் இயங்குகிறது. குண்டு வீச்சு நிகழ்ந்த செஞ்சோலை வளாகத்திற்கு அருகில் இந்த அமைப்பு தொழிற்சாலைகளை இயக்கி, பெண்களுக்கான வேலைவாய்ப்பை ஏற்படுத்துகிறது. அத்துடன் பெண்களுக்கான கற்கை நெறிகளும் நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, படகுக் கட்டுமானம், எந்திரங்களை திருத்துதல், மின்னியல், கட்டட நிர்மாணத் தொழில், வேளாண்மை, கடற்தொழில் ஆகியவற்றில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. கணினியியல் போன்ற கற்கை நெறிகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவற்றைத் தவிர, சட்ட அடிப்படையிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஈழத்தில் மணக்கொடை மிக இயல்பான மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதைத் தடுக்க, மணக்கொடை தடைச் சட்டம் என்ற சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது, பெண்களுக்கு உரிமை அளிப்பதாக அமைந்துள்ளது. மணக்கொடை வேண்டுபவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் மிகக் கடுமையான தண்டனைகளை இச்சட்டம் வரையறுக்கிறது. இவற்றைத் தவிர பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் மிகக் கடுமையான தண்டனையை தேச வழமைச் சட்டம் வரையறுக்கிறது.

ஈழத் தமிழ்ச் சமூகமும், இந்திய சமூகத்தைப் போன்றே மிக இறுக்கமான சாதி அமைப்பினைக் கொண்டதாகவே இருக்கிறது. குறிப்பாக, அகமண முறை இன்றளவும் மிக வலியதாகவே இருக்கிறது. பிற சாதியில் திருமணம் செய்தவர்களை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் வழக்கம், அங்கு மிக இயல்பான ஒன்றாகவே இருந்திருக்கிறது. தங்களைவிட படிநிலையில் மேலிருக்கும் சாதியினரோடு திருமண உறவு வைத்துக் கொண்டாலும், அதுவும் மிக இழிவாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் சாதி அமைப்பு முறையை ஒழிக்கவும், அது சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கிற இழிவுகளை நீக்கவும், அங்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

Court

தொடக்கக் காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினரே நேரடியாக சாதி ஒழிப்புப் பணிகளை மேற்கொண்டனர். தற்பொழுது, அவற்றை தமிழீழ காவல் துறையினரும், நீதித் துறையினரும் மேற்கொள்கின்றனர். உண்மையில் சொல்லப் போனால், புலிகளின் பகுதிகளில் சாதி என்ற கருத்தியல் நசுக்கப்பட்டு விட்டது. அதனை மக்கள் அடிமனதில் வைத்துள்ள போதும், இடப்பெயர்வுகள் சாதி என்ற கோட்பாட்டை இல்லாதொழித்து விட்டன என்று கூறலாம். ஆலயங்களில் சாதிப் பாகுபாடு முற்றாக அழிந்து விட்டது. தொழிலிலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. எனவே, திருமணத்தின் போதுதான் சாதி என்ற பேச்சு எழுகின்றது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில், சாதிய அடிப்படையிலான எந்தவொரு செய்கைக்கும் கடுமையான தண்டனை உண்டு என்பது ஒருபுறம் இருக்க, தமிழீழ சட்ட அமைப்பிலும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வலுவான சட்டப் பிரிவுகள் இருப்பதோடு, அவை கடுமையாக நடைமுறைப்படுத்தவும் படுகிறது. சாதி மறுப்புத் திருமணத்திற்காக குடும்பத்தை விட்டு ஒதுக்கி வைத்தல், சட்டப்படி மிகுந்த தண்டனைக்குரிய குற்றமாகும். இவற்றைத் தவிர, தமிழீழ அரசு ஊடகங்களில் சமூக விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை மய்யப்படுத்திய கட்டுரைகள், நாடகங்கள் போன்றவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றன.

எந்த மொழியின் பெயரால் அவர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அவர்கள் எழுச்சியுற்றார்களோ, அந்த மொழியைக் காப்பதே இனத்தைக் காக்கும் செயல் என்பதை உணர்ந்த விடுதலைப் புலிகள், தங்கள் போராட்ட வாழ்க்கைக்கு நடுவிலும் மொழிகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகின்றனர். இயக்க முன்னோடிகள் பலரும் தங்களது பெயர்களை தூயத் தமிழ்ப் பெயர்களாக மாற்றிக் கொண்டுள்ளனர். பிறப்பு பதிவு செய்யும்போது, குழந்தையின் பெயர் தூய தமிழில் இருந்தால், அக்குழந்தையின் பெயரில் வைப்பகத்தில் தமிழீழ அரசு ரூ. 500 செலுத்துகிறது. அன்றாட பயன்பாட்டுச் சொற்களை தூயத் தமிழில் மாற்றி பழக்கத்திற்கு கொண்டு வருகின்றனர். சான்றாக, பேக்கரி "வெதுப்பமாக'வும், மோட்டார் சைக்கிள் "உந்துருளி'யாகவும், ராக்கெட் "உந்துகணை'யாகவும், இவ்வாறு அன்றாட பயன்பாட்டுச் சொற்கள் சூசகமாக தூய தமிழில் மாற்றப்படுகின்றன.

தமிழீழத்தின் ஒரு பகுதியில் கடந்த 2002 பிப்ரவரி முதல் நான்கரை ஆண்டுகளாக சட்ட ஏற்பில்லாத ஓர் அரசு ஓர் ஆட்சி (A De-facto Government) மிகச் செம்மையாக நடைபெறுகிறது என்பதே உண்மை. இதனை அங்கு சென்று வந்த வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், அய்.நா. அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர் என அனைத்துத் தரப்பினரும் உறுதி செய்கின்றனர்.

தங்களது போராட்ட வரலாற்றில் தொடக்கம் முதல் இன்று வரை, விடுதலைப் புலிகள், சிங்களப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவோ, அப்பாவி சிங்கள மக்களைக் கொன்றதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை. அவர்கள் நடத்துவது ஒரு தற்காப்புப் போர் மட்டுமே. தங்கள் பகுதிகளில் அத்துமீறி நுழைந்து, தங்கள் மக்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையிலேயே அவர்கள் ஈடுபடுகின்றனர். அவ்வாறான ஒரு போராட்டத்தின் விளைவாக, தங்கள் மண்ணின் பெரும் பகுதிகளை அவர்கள் மீட்டெடுத்து இருக்கின்றனர்.

போராடி, மண்ணை மீட்டு, ஓர் அரசு அமைத்து ஆட்சி செய்வது மட்டுமே முக்கியமல்ல. அந்த அரசின் செயல் திட்டங்கள் எவ்வாறு அந்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கப் போகின்றன; எவ்வாறு சமூக விடுதலைக்கும், புனரமைப்புப் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதை வைத்தே ஓர் அரசின் தரம் தீர்மானிக்கப்படுகிறது. என் நாடு என் மக்கள் என்ற உள்ளார்ந்த பாசத்தோடு செயல்படும் எந்த அரசுமே, எந்தவொரு சின்ன விசயத்தையும் விட்டுவிடாது கவனத்தில் கொண்டு அவற்றிற்குத் தீர்வு காண முயலும். அந்த வகையில், தமிழீழத் தனி அரசு அனைத்துத் தரப்பு மக்களுக்கான தேவைகளையும் உணர்ந்து, எதிர்காலத் தேவைகளையும் கணித்து, சரியான திட்டமிடுதலோடு செயலாற்றி வருகிறது என்பது கண்கூடு.

இடதுசாரி இயக்கங்களால் எப்படி கியூபா இன்று ஒரு முன் மாதிரி அரசாக முன்னிறுத்தப்படுகிறதோ, அந்த அளவிற்கு முன்னிறுத்தப்படுவதற்கான ஒரு முன் மாதிரி நாடாகவே ஈழம் வளர்ந்து கொண்டிருக்கிறது. மிக இறுக்கமான போர்ச் சூழல், பொருளாதாரத் தடைகள், மின்சாரம், போக்குவரத்து, தகவல் பரிமாற்றம் ஆகியவை செம்மையாக இல்லாத நிலை என அனைத்துத் தடைகளையும் கடந்து ஒரு முன் மாதிரி நாடாக, ஒரு புரட்சிகர சோசலிச குடியரசாக ஈழம் மலர்ந்து கொண்டிருக்கிறது. இந்த உண்மையை உலகம் உணரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

-பூங்குழலி