தமிழ்-சிங்கள உறவுக்கதை

கண்டி தேசத்து ராசாக்களுடைய வர்த்தமானங்கள் யென்னவென்றால், ஆதியில் மதுரையில் பாண்டியன் ராச்சிய பரிபாலனம் பண்ணையில் சிங்கள தேசத்திலிருந்து சமணர்கள் வந்து மதுரைத் தேசமெல்லாம் தங்களுடைய பவுத்த மதத்தில் வரும்படிக்குச் சிறுது சாஸ்திரங்களை ராசாவுக்குஞ் சனங்களுக்கும் போதித்து சிறுது அதிசெயமாகயிருக்கிற மகிமையளையும் காணபவிச்சு அவர்கள் மந்திர தந்திரத்தில் கெட்டிக்காரரானபடியினாலே ராசாவைத் தங்கள் மதத்துக்குள்ளாக மயக்கி வசப்படுத்திக் கொண்டுயிருக்கையில் அந்தப் பாண்டியராசா பெண்சாதி மட்டும் அந்த மதத்துக்குள் படாமல் மீனாட்சி சுந்தரேசுபராளைப் பிரார்த்திச்சுக் கொண்டு ராசாவும் தேசமும் சமணர்கள் மதமாகப் போச்சுதே. இதற்கு என்ன உபாயமென்று சுவாமியைப் பிரார்த்திச்சுக் கொண்டிருக்கையில் சுவாமி பாண்டியனுக்கு வயத்துவலி போலே உண்டு பண்ணிவச்சு அனேகம் வயித்தியாளெல்லாம் பாத்ததிலும் தீராமல் ராசாவுக்கு நிரம்பவும் உபத்திரங்கண்டு இருக்குற முன்னுக்கு அது நிமித்தியமாக சுப்பிரமணிய சுவாமி சம்மந்தமூர்த்தி அவதாரமாக எடுத்துக்கொண்டு சிறிது திருக்கூட்டங்களுடனே வந்தார்.

அப்போது சமணர்களுக்கும் சம்பந்த மூர்த்திக்கும் வாதுகள் வந்து சம்மந்த மூர்த்தி சொன்னது. பாண்டிய ராசாவுக்கு வயத்துவலி உபத்திரம். ஒருத்தராலும் தீராமலிருக்குதே. நீங்கள் தீர்த்தால் உங்கள் மதந்தான் பெரியது. நீங்களந்த வயத்து வலியைத் தீர்க்கமாட்டாதே போனால் நீங்க அவ்வளவு பேரும் களுவிலேறுகிறது. இல்லவென்றால் நம்மிட சிவ சமையத்துக்குள்ப்படுகிறது. நாமந்த வயத்துவலியைத் தீராதே போனால் நாமும் நம்மிட திருக்கூட்டங்களும் களுவிலேறுகிறது இந்தப் பிரகாரம் நீங்களும் நாமும் ராசா முன்னுக்கு உடன்படிக்கைச் சீட்டெளுதி குடுப்போமென்று உபயத்திராளும் ராசாவினிடத்தில்ப் போய்க் கரையேறி ராசா அவர்களிரு பேரிடத்திலும் கையெளுத்து வாங்கினதிலும் சமணர்கள் பேரில் பட்சத்துனாலே அவர்களைத் தானே முன்னே பாக்கச் சொல்லிச் சொன்னார். அவர்கள் மந்திரத்துனாலேயும் அவர்களுக்குத் தெரிந்த சாஸ்திரங்களினாலலேயும் பார்த்ததில் ராசாவுக்கு உபத்திரந் தீராமல் நிரம்பவும் அதிக உபத்திரங்கண்டுது.

அந்த முன்னுக்கு சம்மந்த மூர்த்தியைப் பார்க்கச் சொன்னார். சம்மந்த மூர்த்தி சுவாமியைத் தியானம் பண்ணி விபூதி கொடுத்தார். உடனே வயத்துவலி சொஸ்த்தமாச்சுது. சமணர்களவ்வளவு பேரும் சிவ மதத்துக்குள்ளாக நாங்கள் வருகுறதில்லையென்று அவ்வளவு பேருந்தானே களுவிலேறினார்கள். அந்தச் சமணர்கள் வகையில் ஒரு பெண்பிள்ளையும் அவள் மகளுமாகத் தப்பிக் கண்டி தேசத்துக்குப் போனார்கள். அப்போது கண்டி தேசம் தன்னரசு நாடாய் அவனவன் வீட்டுக்கு அவனவன் பெரியதனமாக யிருந்தார்கள். அப்போது அந்த அம்மாளுடைய பெண் நல்ல ரூபாவதியாக புத்தியறிகிற பக்குவமாகயிருந்தது. அப்போது அந்த சிங்கள தேசத்துத் தலவமார் பெண்மேலே யிச்சைப்பட்டு உனக்கெனக்கு என்பதாய் ஒன்றுக்கொன்று இசலி வாட்டமாகி அந்தப் பெண்ணும் ஒருத்தருக்கும் சரிப்படாமல் ஒரு அரைவீடு கல்வீடுக் கட்டி அவர்களுக்கு அன்னபனாதிகள் தேவையான பதார்த்தம் ஒரு வருசத்துக்கு நிதானம் பண்ணி அந்த வீட்டுக்குள்ளே வைத்து வாசலை அடைத்துப் பூட்டுப் போட்டு சுத்தியுங்காவல் வைத்துப் பத்திரப்படுத்தியிருந்தார்கள்.

அப்படி இருக்குமிடத்தில் சிறிது நாளைக்குப் பிறகு அந்தப் பெண் ருதுவாச்சு தென்று உள்ளாக இருந்த அந்த அம்மாள் பெண் கெர்ப்பமாக இருக்கிறாளென்று கூப்பிட்டுச் சொன்னாள். அப்போது சிங்களத் தலவமார் ஆச்சரியப்பட்டு நாம் அறைக்குள்ளே வைத்து இத்தனை பந்துபஸ்த்துப் பண்ணி இருக்க இந்தப் பெண் கெர்ப்பமான வயனம் யென்னவென்று கதவைத் திறந்து அந்தப் பெண்ணை வரவழைத்து கெர்ப்பமான வயனம் என்னவென்று கேட்டார்கள். சூரிய பகவானுடைய செயலே அல்லாமல் நானொன்றும் அறியேன். என்று அந்தப் பெண் சொன்னாள். இந்தப் பிரகாரம் நிர்ணயம் பண்ணிக்குடுப்பியவென்று கேட்டார்கள். நீங்கள் யென்ன பிறமானம் பண்ணிக் குடுக்கச் சொன்னியளோ அந்த பிறமானம் பண்ணிக் குடுக்குறோமென்று அந்தப் பெண் சொன்னாள். அப்போது இரும்புதாலே ஒரு பிள்ளைபண்ணி அதைத் தீயில் பளுக்கக்காச்சி இந்த இரும்புப் பிள்ளையை யெடுத்துக் கொண்டு ஒரு அடையாளம் சொல்லி அந்த மட்டுக்குப் போய்வரச் சொல்லிச் சொன்னார்கள். அந்தப்படிக்கி அந்தப்பிள்ளையை யெடுத்து மார்பில் தன் குழந்தையைப் போலே அணைத்துக் கொண்டு அவர்கள் சொன்ன லெக்குவரைக்கும் போய் திரும்பக் கொண்டுவந்து அவர்கள் முன்னே வைத்தாள்.

அப்போது சறுவத்திராளும் ஆச்சரியப்பட்டு இந்தப் பெண் தெய்வ சுரூபமே அல்லாமல் மனுடரென்று சொல்லப் போது தென்று சறுவத்திராளும் அந்த அம்மாள் காலிலே விளுந்து இனிமேலந்த அம்மாள் வயத்திலே பிறக்கிற பிள்ளையை நம்மிட தேசத்துக்கு ராசாவில்லாததினாலே ராசாவாக வைத்து அவர் ஆக்கினைக்குள்ளாக இருந்து நடந்துகொள்வோமென்று சிங்களதேசத்துத் தலவமார் நாட்டார் சறுவத்திராளும் கூடி தீர்மானம் பண்ணிக் கொண்டார்கள். பின்னையும் சிறிது நாளைக்குப் பிறகு அந்த அம்மாள் வயத்தில் ஆண்பிள்ளை பிறந்தது. அந்தப்பிள்ளை நாளுக்கு நாள் தீர்க்கவானாக புசபல பராக்கிரமத்துடனே இருந்தார். அப்போது ரத்தின ம்மாசனமும் கிரீட குண்டலமும் உண்டுபண்ணி அவரைச் சிங்கள தேசத்துக்கு ராசாவாக பட்டாபிஷேகம் பண்ணி வச்சார்கள். அந்த வம்முசம் பாரம்பரியமாக அனேக ராசாக்கள் பட்டமாண்டு வந்ததில் அந்த வங்கிசத்தில் ராசசிங்க மகாராசா வென்று ஒரு ராசாப் பிறந்தார். அவர் பராக்கிரமசாலியாக இருந்துராச்சிய பரிபாலனம் பண்ணிக் கொண்டு இருந்தார். அவர் கைக்கத்தி அவர் போட்டிருந்த கடையம் இப்போதும் இருக்குது. அந்தக் கத்தி ரெண்டு மூன்று பேர் கூடி யெடுத்தாலும் யெடுக்கப்படாது.

அவர் அந்தக் கத்தி கட்டத்தக்க ஆகிறிதியும் உன்னிதமாகவமிருப்பார். அவர்அந்தப்படி வெகுநாள் ராச்சியமாண்டும் அவருக்குப் பிற்காலம் அவர் குமாரன் விசைய தன்ம மகாராசா அவர் வெகுநாள் ராச்சியமாண்டும் அவருக்குப் பிற்காலம் அவர் குமாரன் விசைய பாகுராசா அவர் சிறுதுனாள் ராச்சியமாண்டு அவருக்குப்பிற்காலம் அவர் குமாரன் குமாரசிங்க மகாராசா துரைத்தனம் பண்ணினார். அதுவரைக்கும் மகன் பட்டமாக வந்தது. அந்த ராசாவுக்கு ராச வங்கிசத்தில் பெண்களில்லாமல் இருந்ததினாலே வெகுனாள் கலியாணமில்லாலிருந்து அந்த சிங்களத் தலவமாரும் கூடி யோசனை பண்ணி இந்த ராசாவுக்குப் பிற்காலம் பட்டத்துக்குப் பிள்ளையில்லாமல் இருந்தால் ராசரீகம் யெடுத்துப் போரதாக இருக்குதென்று மதுரை திருசிரபுரத்து ராசா வளியில் போய் பெண் கேட்டுக் கலியாணம் பண்ணவேணுமென்று சிறுது வஸ்திரபூசனாதிகள் அதிசயமான வஸ்துகளும் குடுத்துக் காரியஸ்தாளையும் அனுப்பி ராசா பேட்டி பண்ணி யெங்கள் ராசாவுக்குக் கலியாணமில்லாமல் இருக்கிறபடியினாலே இவடத்திலிருந்து பெண்போய்க் கலியாணமாகும் படியாய் உத்தரவு செய்யவேணுமென்றுகேட்டார்கள்.

அப்போது ராசா விசைய ரெங்க சொக்கநாகத நாயக்கர் அவர்கள் நிரம்பவும் கோபமாகி கண்டிராசா வகை மனுசாள் கொண்டுவந்த வஸ்திர பூசனாதிகளையும் ஒப்புக் கொள்ளாமல் உங்கள் ராசா நம்மிட சாதியா முன்னும் பின்னும் நமக்கும் அவர்களுக்குஞ் சம்மந்தம் உண்டா? பயமில்லாமல் நம்மிடத்தில் வந்து பெண் கேட்கப் போச்சாவென்று அவர்களை சோபதாமியாளை விட்டுக் கோட்டைக்கி வெளியே கொண்டுபோய் விட்டுவிடச் சொல்லி பந்து சனங்களுக்கெல்லாம் இவர்களுக்குப் பெண் கொடுக்க வேண்டாமென்று தாகீதை பண்ணிவிச்சார்கள். அப்படியிருக்குமிடத்தில் ஒருவர் நாட்டுப்பிறத்தில் நம்மிட சாதியில் ரொம்ப யெளியவராயிருந்தார். அவர் ஒருத்தரையுமறியாமல் கண்டியிலிருந்து வந்த மனுசரைக் கண்டு பேசி தம்மிட பெண்ணைக் குடுக்கிறோமென்று அவர்களிடத்தில் சிறிது விராகனும் வஸ்திர பூசனாதிகளும் வாங்கிக் கொண்டு வந்த மனுசரை முன்னுதாகப் போய் ராமேசுவரத்திலிருக்கச் சொல்லி இவர் ராத்திரியே ஒருத்தரும் தெரியாமல் தம்முட சமுசாரத்துடனே ராமீசுவரம் போய்ச் சேர்ந்து கண்டி மனுசாளுடனே தோணியேறிக் கண்டிக்கிப் போய் அந்த ராசாவுக்கு தம்மிட பெண்ணைக் கலியாணம் பண்ணிக் குடுத்து சிறிது நாளிருந்து அந்த ராசாவுக்கும் பிள்ளையில்லாமலிருந்து அந்த ராசாக்காலஞ்சென்று போனார்.

அந்த ராசாவுக்குக் கலியாணம் பண்ணின பெண்ணுடனே கூடப் பிறந்தவர் மச்சினனாகச்சே அவருக்குப் பட்டங்கட்டி அவர் ராச்சியமாண்டு இருந்தார். அவர் பேர் விசைய பால மகாராசா அவருக்குக் கலியாணம் பண்ண யிவடத்தில் பந்து சனங்களில் கலியாணம் பண்ண வேணுமென்று மனுடரை நேமுகம் பண்ணி அனுப்பிவிச்சார்கள். அப்போது ராசா விசைய ரெங்கச் சொக்கநாத நாயக்கர் காலஞ்சென்று அவருக்குப் பிற்காலம் ராணி மீனாட்சியம்மாள் திரிசிரபுரத்திலும் ராசா வங்காரு திருமலை நாயக்கர் அவர்கள் மதுரையும் திருநெல்வேலிச் சீர்மையும் அஞ்சு வருசம் துரைத்தனம் பண்ணி ராணியம்மாள் அவர்கள் தெய்வீகமாய்ப் போய் ராசா வங்காரு திருமலை நாயக்கரவர்களும் யெடுபட்டு வெள்ளிக் குறிச்சியில் வந்திருந்ததினாலே பந்து சனங்கள் அவர் வசவந்த்திக்குள்ளாக வில்லாமல் சிதறிப் போன படியினாலே இப்போது கண்டியில் துரைத்தனம் பண்ணுகிற ராசா நம்மிட சுய சாதியானபடியினாலே அவருக்குப் பெண் குடுக்கலாமென்று நம்மிட பந்துக்களில் ஒருவர் பெண் கொண்டு போய்க் குடுத்தார். அந்த ராசாவுக்கும் பிள்ளையில்லாமல் காலஞ்சென்று போய் அந்தப் பெண்ணுடனே கூடப் பிறந்தவர் ராசாவுக்கு மச்சினனானபடியினாலே அவருக்குப் பட்டங் கட்டினார்கள். அவர்பேர் அங்காரங்குதி மகாராசா.

அவருக்குக் கலியாணம் பண்ண வேணுமென்று யிவடத்து பந்து சனங்களில் பெண் கூட்டிப் போய்க் கலியாணம் பண்ணினார்கள். அவருக்கும் பிள்ளை யில்லாமல் அவர் மச்சினன் கொண்ட சால மகாராசா அவருக்குப் பட்டங்கட்டி அவருக்கும் கலியாணம் பண்ணுகிறதற்குப் பெண்ணுக்காக யிவடத்துக்கு மனுசர் வந்தார்கள். அப்போது ராமகிருஷ்ணப்ப நாயக்கர் நாரணப்ப நாயக்கர் ரெண்டு பேர் அண்ணன் தம்பிமார் ராசா வங்காரு திருமலைநாயக்கர் அவர்கள் கூடவே வெள்ளிக் குறிச்சியில் வந்திருந்து சிறிது நாளைக்கிப் பிறகு இராமநாதபுரம் லெட்சுமிபுரத்தில் வந்திருந்தார்கள். யிவர்களிடத்துக்குக் கண்ட மனுடர் வந்து பேசினதில் உபையத்திரளும் பெண் குடுக்கிறோமென்று சம்மதித்து சம்முசாரத்துடனே கண்டிக்கிப்போய் அந்த ராசாவுக்குப் பெண்ணைக் கலியாணம் பண்ணிக் குடுத்தார்கள். அந்த ராசாவுக்கும் பிள்ளையில்லாமல் சிறுதிநாள் ராச்சிய பரிபாலணம் பண்ணி அவரும் தெய்வீகமானார்.

அந்தப் பெண்ணுடனே கூடப் பிறந்தவர் ராசாவுக்கு மச்சினனானபடியினாலே அவருக்குப் பட்டம் கட்டினார்கள். அவருக்குப் பேர் கீர்த்தி சிம்மள மகாராசா அவரும் வெகுநாள் ராச்சிய பரிபாலனம் பண்ணி அவருக்கு முன் தஞ்சாவூர் துரைத்தனம் பண்ணின ராசா விசைய ராகுவ நாயக்கரவர் களுடைய பேரன் விசைய மன்னாரப்ப நாயக்கர் மக்கள் ரெண்டு பேர் கலியாணம் பண்ணிக் குடுத்தார்கள். பின்னும் பந்துக்களில் ரெண்டு பேரைக் கலியாணம் பண்ணினார்கள். அந்த நாலுபேருக்கும் பிள்ளை யில்லாமல் போச்சுது. அந்த கீர்த்தி சிம்மள மகாராசாவுக்கு தகப்பன்வளி நாலாம்பாட்டியான கனகவள்ளியம்மாளும் இப்போது வெள்ளிக் குறிச்சியிலிருக்குற மதுரை ராசா வங்காரு திருமலை நாயக்கரவர்களுடைய அஞ்சாம்பட்டியான அரியாசம்மாளும் கூடப் பிறந்தவர்கள். இந்தக் கீர்த்தி சிம்மள மகாராசாவும் தெய்வீகமாய்ப் போய் அவர் கலியாணம் பண்ணின நாலுபேர் பெண்களுக்கும் பிள்ளையில்லாததுனலே அவர் தம்பி ராசாதி ராசா ராசா சிம்மள மகாராசாவுக்கும் பட்டம் கட்டி அவருக்கும் வெங்கிட்ட பெருமாள் நாயக்கர் தங்கச்சியைக் கலியாணம் பண்ணி வெகு நாளிருந்து அவருக்கும் பிள்ளையில்லாமல் அவர் தெய்வீகமாய்ப் போய் அவர் மச்சினன் வெங்கிட்டப் பெருமாள் நாயக்கர் குமாரனுக்கு இப்போது பட்டம் கட்டி துரைத்தனம் பண்ணுகிறார்.

சிலகுறிப்புகள்:

விஜய ரங்க சொக்கநாயக்கன் காலத்தில் நடந்த நிகழ்வு இச்சுவடிக்கதையில் வெளிப்படுகிறது. மதுரைக்கு பௌத்தம் வந்தது பற்றிய மரபுக்கு மாறாக இலங்கையிலிருந்தே பௌத்தம் மதுரைக்கு வந்தது என்பது முக்கியக் குறிப்பு.

இலங்கை வரலாற்றில் மூன்றாம் கண்டி அரசர் பரம்பரை (1739-1796) மதுரைத் தமிழர்களுடன் இரத்த உறவுடைய தமிழ் பேசும் நாயக்கர்களாய் இருந்துள்ளனர். இக்காலப் பகுதியில்தான் தமிழ்நாட்டில் தெலுங்கர்கள் அதிகாரிகளானதால் பதவியிழந்த தமிழ் அதிகாரிகள் இந்தியாவை விட்டு வெளியேறி யாழ்ப்பாணத்தில் குடியேறினர்.

சிறீவிஜயராஜ சிங்க (1739-47) கீர்த்திசிறீ ராஜ சிங்க (1747-82) ராஜாதி ராஜ சிங்க (1782-98) சிறீவிக்ரம சிங்க (1798-1815) ஆகிய நான்கு அரசர்கள் மூன்றாம் கண்டி நாயக்க அரச பரம்பரையினர். இவர்கள் நால்வரும், இவர்களது இராணிகளும் தமிழ் பேசிய நாயக்கர்கள். பௌத்தத்தைத் தழுவியவர்கள்.

சமணத்தத்தையும் பௌத்தத்தையும் ஒன்றாகக் காணும் போக்கு இச்சுவடிக் கதையில் காணப்படுகிறது. இச்சுவடி எழுதப்பட்ட காலத்தின் போக்காகவோ, சுவடி எழுதப்பட்டவரின் தனிப்பட்ட கருத்தாகவோ இது இருக்கலாம். பல்லவர் காலத்திலிருந்து சமண பௌத்தங்கள் இந்துமதத்துக்குள் உள்வாங்கப்படுகின்றன. பெதிய புராணத்திலுள்ள திருஞானசம்பந்தரின் வரலாற்றையும் இச்சுவடிக்கதை நினைவூட்டுகிறது. சுப்பிரமணியக் கடவுள் சம்பந்தராக அவதாரமெடுத்த கதை நம்பியாண்டார் நம்பியால் (11ஆம் நூற்றாண்டு) முதன்முதலில் குறிப்பிடப்படுகிறது. பின்பு ஒட்டக்கூத்தர் (12ஆம் நூற்றாண்டு ) அருணகிரிநாதர் (15ஆம் நூற்றாண்டு) போன்றோர் இந்த அவதாரக்கதையைக் கூறுகின்றனர்.

சமணர்களைக் கழுவேற்றிய வரலாற்றை, திரு.வி.க.போன்ற சைவ அறிஞர்களே ஒப்புக் கொண்டுள்ளனர். அக்கதையை இச்சுவடியும் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவைவிட இலங்கையில்தான் பௌத்தம் ஆழமாக வேரூன்றியது. தமிழ்நாட்டைவிட யாழ்ப்பாணத்திலேயே சநாதன சைவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். பிற்காலத்து மோசமான இனக்கலவரத்துக்கு இவைதாம் வழிவகுத்தன என்பது வரலாறு. ஆர். சத்தியநாதையரின் மதுரை நாயக்கர் வரலாற்றில் இச்சுவடிக்கதையின் காலத்தை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.

Pin It