தனியார் துறை என்றாலே அங்கு ‘தரம்’ எப்போதும் தாண்டவமாடும் என்ற மூடநம்பிக்கை நம்மில் பலருக்கும் உண்டு. இதோ அந்த மாயையை தகர்த்தெறியும் நிகழ்வு ஒன்று.

திருச்சிக்கு அருகே உள்ளது கல்லக்குடி. இங்குள்ளது டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை என்ற தனியார் தொழிற்சாலை. இந்த ஆலையில் விரிவாக்கப்பணி நடந்து வந்தது. அதாவது, நிலக்கரியை கன்வேயர் பெல்ட்டில் கொண்டு செல்ல உதவியாக ஒரு உயரமான பாலம் ரூ.300 கோடியில் அமைக்கும் கட்டுமானப்பணி நடந்து வந்தது. பணி நடந்து கொண்டு இருக்கும் போதே 2005, மே 28 ஆம் நாள் அந்த உயரமான பாலம் அப்படியே பெயர்ந்து தரையில் விழுந்து 13 பேர் அந்த இடத்திலேயே பரிதாபமாகக் கொல்லப்பட்டனர்.

இந்தப் பாலம் அமைக்கும் வேலைக்கு ஒப்பந்த உரிமை பெற்று அதைச் செய்து வந்தது எல்.அண்ட்.டி. என்ற தனியார் நிறுவனம். எல்.அண்ட்.டி என்றாலே மிகத் தரமானது என்ற மூடநம்பிக்கையும், இவ்விபத்தின் மூலம் இடிந்து விழுந்த அந்த பாலத்தைப் போன்றே தரைமட்டமானது. அதுமட்டுமல்ல, டால்மியா சிமெண்ட் என்ற தனியார் சிமெண்ட்டை பயன்படுத்தித்தான் இப்பாலம் கட்டப்பட்டு வந்தது. ‘உழைப்பு-உறுதி-தரம்’ என்று டால்மியா சிமெண்ட்டைப் பற்றி விளம்பரச் சொற்கள் தொலைக்காட்சிகளில் கூறின. இதுவும் கடைந்தெடுத்த பொய் என்றாகியது. கட்டடம் கட்ட விரும்புபவர்கள் இனி டால்மியா சிமெண்ட்டை பயன்படுத்தத் தயங்குவர் என்பது திண்ணம்.

பாலம் கட்டுவதில் ஈடுபட்ட எவரின் தலையிலும் தலைக்கவசம் இல்லை. எவரும் இடுப்புக் கயிறும் அணிந்திருக்கவில்லை. இவைகளை அணிந்திருந்தால் விபத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கும். டால்மியா, எல்.அண்ட்.டி. ஆகிய இரு நிறுவனங்களும் ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழ் பெற்றிருப்பதாகச் சொல்கிறார்கள். (ஐ.எஸ்.ஐ. என்பது இந்தியத் தரமாம்; ஐ.எஸ்.ஓ. என்பது உலகத் தரமாம்)

கொஞ்சமும் பொறுப்பற்ற வகையில் தனிநபரின் பாதுகாப்பைப் புறக்கணித்த அந்த அந்த இரு நிறுவனங்களுக்கும் ஐ.எஸ்.ஓ. என்ற உலகத் தரச் சான்றிதழ் கொடுத்தது எப்படி சரியாகும்? எனவே ஐ.எஸ்.ஓ. சான்றிதழ் கொடுத்த நிறுவனத்தின் மேல் சந்தேகப்படவேண்டிய நிர்பந்தம் நமக்கு ஏற்பட்டுள்ளது.