அணுக்கழிவு சேமிப்பு வைப்பகத்தை தமிழ்நாட்டுக்குள் திணிக்காதே!

14.07.2019 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் கூடங்குளம் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை  மாநாடு காலை 11 மணி அளவில் தொடங்கியது. ஜப்பானில் புகுசிமாவில் ஏற்பட்ட விபத்தைப் பற்றியும் அணுக்கழிவு வைக்கப்பட்டிருக்கும் நான்காவது வளாகம் பற்றியும் விளக்கும் ஆவணப்  படமும் பிரான்சில் அணுக்கழிவு பாதுகாப்பு எவ்வளவு அபாயகர மானதாக இருக்கிறது என்பதை விளக்கும் ஆவணப்படமும் திரை யிடப்பட்டது.

பின்னர் அறிவியல் அமர்வு தொடங்கியது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் பியூசிஎல்-இன் தமிழ் மாநிலத் தலைவருமான தோழர் கண. குறிஞ்சி இவ்வமர்வுக்குத் தலைமை ஏற்றார். கூட்டமைப்பின் நீண்ட காலச் செயல்பாடு குறித்து விளக்கி அமர்வை ஒருங்கிணைத்தார். இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார்.

koodangulam 600தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தோழர் தி.வேல்முருகன் தொடக்கவுரை ஆற்றினார். அணுக் கழிவுப் புதைப்பதைத் தடுப்பதற்கு இதை வெகுமக்கள் இயக்கமாக வளர்த்தெடுக்க வேண்டும் என்றும் மோடி அரசு ஒவ்வொரு நாளும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றும் விளக்கிப்பேசினார்.

அறிவியல் அரங்கத்தில் உரையாற்ற விருந்த வி.டி.பத்மநாபன் அவர்கள் வரவியலாத நிலையில் அவரும் மருத்துவர்கள் ரமேசும் புகழேந்தியும் சேர்ந்து உருவாக்கிய விளக்க அறிக்கையை மருத்துவர் புகழேந்தி விளக்கிப் பேசினார். பின்னர் பூவுலகின் நண்பர்கள் தமிழ்நாடு-புதுச்சேரி அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் அருண் நெடுஞ்செழியன் பிபிடி மூலமாக அணுக்கழிவு பற்றிய அறிவியல் கருத்துகளைப் பேசினார். இந்தியாவின் முதல் அணுக்கழிவு மையம் இது தானா? மறுசுழற்சி செய்யும் திட்டம் அரசுக்கு உண்டா? ஆழ்நிலக் கிடங்கு (Deep Geological Repository) இந்தியாவில் எங்கு அமைக்கப் போகிறார்கள்? அணு உலைக்கு அப்பால் அணுக்கழிவைப் பாதுகாப்பதென்றால் அதற்குப் பின்னான திட்டம் என்ன? ஆகிய கேள்விகளுக்கு தெளிவு காணும் வகையில் மருத்துவர் புகழேந்தியும் பொறியாளர் அருண் நெடுஞ்செழி யனும் உரையாற்றினர். கூட்டத்தில் இருந்தோர் தமது அய்யங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

இடிந்தகரை, கூடங்குளம் போராட்டப் பகுதியில் இருந்து வந்திருந்த தோழர்கள் பங்கேற்ற போராளிகள் அமர்வு உணவு இடைவெளிக்குப் பின் தொடங்கியது. இவ்வமர்வுக்கு கூட்டமைப்பின் ஒருங் கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவருமான அரங்க. குணசேகரன் தலைமை ஏற்றார். இவ்வமர்வில் இடிந்தகரையைச் சேர்ந்த சேவியரம் மாள், சுனாமி  காலனியைச் சேர்ந்த புனிதா, கூடங்குளத்தைச் சேர்ந்த கணேசன், தமிழ்த் தேசிய மலைநாடு மக்கள் கட்சியின் தலைவர் இராம சாமி, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் அருள்மொழி ஆகியோர் உரை யாற்றினர்.

சுமார் 4 மணி அளவில் அரசியல் அமர்வு தொடங்கியது. இவ்வமர்வுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவரும் தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் தலைவருமான மீ.த.பாண்டியன் தலைமையேற்றார். இவ்வமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,  மதிமுகவின் துணைத்தலைவர் மல்லை சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், தமிழக மக்கள் சனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம்.செரீஃப், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, தமிழக மக்கள் முன்னணியின் தலைவர் பொழிலன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் செல்லத்துரை, நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் இராஜீவ் காந்தி, தமிழ்ப்புலிகள்  கட்சியின் பொதுச் செயலாளர் பேரறிவாளன், த.பெ.தி.க.வின் மாவட்டச் செயலாளர் ச. குமரன், மக்கள் அதிகாரத்தின் வெற்றிவேல் செழியன், ஆதித் தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலச் செயலாளர் நாகூர் மீரான், தமிழ்த்தேச மக்கள் கட்சியைச் சேர்ந்த தமிழரசன், காஞ்சி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த தஞ்சை தமிழன், தமிழ்த் தேச குடியரசு இயக்கத்தின் சிவ காளிதாசன், சுயாட்சி இந்தியாவின் துணைத் தலைவர் கிறிஸ்டினா சாமி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சம்சுதீன், வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியாவின் மாவட்டத் தலைவர் முகம்மது கவுஸ்,  உள்ளிட்டோர் உரை யாற்றினர். தமிழ்நாடு பொது வுடைமைக் கட்சியைச் சேர்ந்த செல்வமணி மாநாட்டுத் தீர்மானங் களை முன் வைத்தார். இடிந்தகரை போராட்டக்காரர் சேவியரம்மாள் நன்றியுரை வழங்கினார்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு அபாயம் – எச்சரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

1) “கூடங்குளத்தில் அணு உலையை மூடு” என மக்கள் போராடியும் வலியுறுத்தியும் வரும் நிலையில் ஆறு அணு உலைகள் கொண்ட அணு உலைப் பூங்கா அமைக்கும் முடிவை இந்திய அரசு கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2) பல்லாயிரம் ஆண்டுகாலம் அணுக் கதிர் வீச்சை உமிழக்கூடிய அணுக் கழிவை ஆபத்தின்றி பாதுகாத்து வைப்பதற்கான நம்பத்தகுந்த தொழில்நுட்பம் இன்றளவில் உலகில் எங்கும் இல்லாத நிலையில், கர்நாடகாவில் உள்ள கோலார் தங்கவயல் சுரங்கத்தில் அணுக் கழிவைப் புதைக்கும் முடிவை எதிர்த்துப் போராட்டங்கள் எழுந்ததால் அம்முடிவை இந்திய அரசு கைவிட்ட நிலையில், கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைப்பதென எடுக்கப்பட்டிருக்கும் முடிவை இந்திய அரசின் அணுசக்தி கழகம் கைவிட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

3) கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைப்பது பற்றிய கருத்துக்கேட்புக் கூட்டத்தை இராதாபுரத்தில் நடத்துவதாக அறிவித்துவிட்டு அதை பின்னர் ரத்து செய்திருக்கும் சூழலில், இது தொடர்பாக அப் பகுதிவாழ் மக்களிடம் மட்டுமின்றி இது குறித்து அக்கறை செலுத்தி வரும் விஞ்ஞானிகள் மற்றும் அமைப்புகளிடமும் வெளிப்படை யாகவும் நம்பகத்தன்மையோடும் கூடங்குளத்திலேயே கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

4) கூடங்குளத்திலோ அல்லது தமிழகத்தின் வேறெந்த பகுதியிலோ அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்கக் கூடாதென இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறை வேற்றப்பட வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கோருகிறது.

5) சூரிய ஒளி, கடலலை, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் களின் வழி மின்சார உற்பத்தி செய்யும் மாற்று எரிசக்தித் திட்டங்களை விரைவுப்படுத்தி அதிக செலவு பிடிக்கும் அதிக ஆபத்து கொண்ட அணுமின் உற்பத்தியில் இருந்து விலகிப் பிற நாடுகளைப் போல் படிப்படியாக அணு உலைகளை மூட வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

6) கூடங்குளத்தில் அணு உலைப் பூங்கா மற்றும் அணுக்கழிவு சேமிப்புக் கிடங்கு அமைக்கும் முடிவைக் கைவிடுமாறு இந்திய அரசை வலியுறுத்திப் போராட வேண்டும் என இம்மாநாடு தமிழக மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறது.

- என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

அணு சக்தி எதிர்ப்புக் கூட்டமைப் பின் தலைவராக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி செயல்பட்டு வருகிறார்.